Tuesday, November 26, 2013



தமிழரின் அடையாளச் சிக்கலும், தாழ்வு மனப்பான்மையும் (3)


          'தனி நாடு' உண்மையில் தனி நாடா?



ஒரு நாடு தனது முன்னேற்றத்திற்கு எந்த வெளி குறுக்கீடுமின்றி, தாமே முடிவெடுக்கும் அதிகாரம், இன்று தனிநாடுகளாக உள்ளவற்றிற்கு இருக்கிறதா? தமது நாட்டில் உற்பத்தியாகும் பொருட்களை, தமது நாட்டில் செயல்படுத்தும் திட்டங்களில் பயன்படுத்தாமல், வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யக் காரணம் என்ன? உள்நாட்டு உற்பத்தித் தொழில்கள் சிதையும் அளவுக்கு, சீனா போன்ற நாடுகளிலிருந்து, வெளிநாட்டு பொருட்களை, இறக்குமதி செய்ய வேண்டிய காரணம் என்ன? பொதுத் தேர்தல், போராட்டங்கள், அரசின் முக்கிய முடிவுகளில், உளவு/தொண்டு நிறுவனங்கள் மூலம், தீர்மானிக்கும் சக்திகளாக, அந்நிய சக்திகள் செயல்பட்டால், 'தனிநாட்டின் (‘sovereignty’) அதிகார ஆளுமை' என்பதற்கு, அர்த்தம் உண்டா? 

உலகமயமாக்கலுக்குப் பின்,  'தனிநாட்டின் அதிகார ஆளுமை' (‘sovereignty’) என்பது, பெற்று வரும் வேகமான மாற்றங்கள் குறித்து, பல ஆய்வுகள் வெளிவந்த வண்ணம் உள்ளன.

'உலகமயமாக்கலுக்குப் பின்சாவரினிட்டி (‘sovereignty’) என்பது கதையாகப் (fictional. ) போய்விட்டது', என்று ஜான் எச் ஜாக்சனும் (பக்கம் 784), கடந்த காலத் தடயமாக வரலாற்று நூலகத்திற்குச் செல்ல வேண்டியது என்று பேரா.என்கினும் (பக்கம் 789)சர்வ தேசச் சட்டங்கள் பற்றிய அமெரிக்க ஆய்வு நூலில் (The American Journal of International Law  ) கருத்துகள் தெரிவித்துள்ளனர்.

இப்போது தனிநாடுகளாக உள்ளவற்றின் 'சாவரினிட்டிக்கே', இந்த கதி என்பதை, பிரிவினை இயக்கங்கள் கருத்தில் கொண்டு செயல்படுகின்றனவா? 

உலக ஆதிக்க சக்திகளின் நலன்களுக்குக் கேடில்லாத வகையில் உருவான சர்வதேசச் சூழலில் கிழக்கு தைமூரிலும், தெற்கு சூடானிலும், ஐ.நா மேற்பார்வையில் 'கருத்து வாக்கெடுப்பு' மூலம், தனி நாடுகள் உருவானது. அதன் பின் அங்கு என்ன நடந்தது, நடக்கிறது, அவ்வப்போது அந்நிய துருப்புகள் உள்நுழைந்து அமைதி உருவாக்க வேண்டிய தேவை என்ன? தனிநாடு கோரிக்கையில்லாமலேயே, சீனர் பெரும்பான்மையாயுள்ள சிங்கப்பூரை, மலேசியா ஏன் தனிநாடாகத் துண்டித்தது? அப்போது மலேசிய நாணயத்தை விட, சிங்கப்பூர் டாலர் மதிப்பு குறைவாகவும், ஊழலில் மோசமாகவும் இருந்த சிங்கப்பூர், உலகே வியக்கும் அளவுக்கு எவ்வாறு முன்னேறியது? 

மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்கான பதில்களைத் தேடினால், கிடைக்கும் விடைகள் முக்கியமானவை. 

புறக்கணிப்பின் அடிப்படையில், துவக்கத்தில், நேர்மையான உரிமைப் போராட்டமாக துவங்கும் 'தனி நாடு' முயற்சிகள், ஆயுதப் போராட்ட வடிவமாக வளரும்போது, உலக ஆதிக்க சக்திகளின் சூழ்ச்சி வலையில் சிக்கும் ஆபத்தும் இருக்கிறது. தனிநாடு, மனித உரிமை, பெண்ணுரிமை, சுற்றுப்புற சூழல் பாதுகாப்பு உள்ளிட்டு உலகில் நடைபெறும் பலவகையான அமைப்புகளையும், போராட்டங்களையும், 'பொம்மலாட்டமாக' மாற்றி, தமது வலையில், உலக ஆதிக்க சக்திகள், எவ்வாறு சிக்க வைக்கின்றன, என்ற செயல்நுட்பத்தை, விளக்கும் நாவல் The Aquitaine Progression by Robert Ludlum ( 1984). 

குறிப்பாக சட்டபூர்வமாகவும், சட்டத்திற்குப் புறம்பாகவும் ஆயுத உற்பத்தி வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள சுயநல சக்திகளுக்கு, அவர்களுடைய வியாபார நலன்களுக்காக, உலகில் பல இடங்களில் போரும், ஆயுதப் போராட்டங்களும் நடைபெற்றுக் கொண்டிருக்க வேண்டும்.

குறிப்பாக கடும் பொருளாதார சிக்கலில் மாட்டியுள்ள அமெரிக்கா போன்ற நாடுகள் ஆயுத உற்பத்தி வியாபாரத்தையே பெரிதும் நம்பியுள்ளன. 1998 - 2003 காலக் கட்டத்தில், உலக ஆயுத வியாபாரத்தில் பாதி அமெரிக்கா வசம் இருந்தது. அதில் 2/3 பங்கு வியாபாரம் வளரும் நாடுகளுக்கான ஆயுத விற்பனையாக இருந்தது. அன்றைய ஐ.நா பொதுச் செயலாளர் கோபி அன்னன் சட்டவிரோதமான ஆயுத வியாபரத்தைத் தடுக்க, வளர்ந்த நாடுகள் கூட்டு முயற்சி மேற்கோள்ளும் யோச‌னையை முன் வைத்தபோது, அமெரிக்கா அதை நிராகரித்தது.  ( Pages 97-98,  Identity and Violence – The Illusion of Destiny by Amartya Sen - 2006)

அதே நேரத்தில் உலக ஆயுத உற்பத்தியாளர்களின் பிழைப்பிற்கே ஆபத்தாகும் வகையில், உலகப் பொருளாதாரம் சீர்குலையாமலும், பார்த்துக் கொள்ள வேண்டும். அந்த சமநிலைக்குக் கட்டுப்பட்ட வகையிலேயே போரும், ஆயுதப் போராட்டங்களும் நடைபெறுவதற்காகவே, அச்சக்திகள் அவ்வப்போது சமாதான முயற்சிகளிலும், ஒத்து வராத அரசுகளை கவிழ்ப்பதிலும், தாமே, தமது சுயநலனுக்கு வளர்த்த, ஆயுதக் குழுக்களை, 'பயங்கரவாத எதிர்ப்பு' என்ற போர்வையில், அழிப்பதுமான, செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். 

திறந்த மனதுடனான, அறிவுபூர்வமான விமர்சனங்களைத் துரோகமாகக் கருதி ஒழித்து, உணர்ச்சிபூர்வ போதையில் பயணிக்கும் ஆயுதப் போராட்டங்கள், இந்த சூழ்ச்சி வலையிலிருந்து தப்புவது கடினமே.

உணர்ச்சிபூர்வ போதையின் அடித்தளங்கள் பற்றி அடுத்து பார்ப்போம்.
-------------------

2 comments:

  1. //உலக ஆதிக்க சக்திகளின் நலன்களுக்குக் கேடில்லாத வகையில் உருவான சர்வதேசச் சூழலில் கிழக்கு தைமூரிலும், தெற்கு சூடானிலும், ஐ.நா மேற்பார்வையில் 'கருத்து வாக்கெடுப்பு' மூலம், தனி நாடுகள் உருவானது.// உரிமைப் போராட்டங்களைக் குறைத்து மதிப்பிடுவதுபோல் உள்ளதே. உலக ஆதிக்க சக்திகள் என்பது பன்னாட்டுக் கம்பெனிகளா, பிறநாட்டு அரசுகளா? விளக்கமாகக் கூறுங்கள்

    ReplyDelete
    Replies
    1. உள்ளதை உள்ளபடி குறிப்பிடுவதை எல்லாம், படிப்பவர்கள் 'குறைத்து மதிப்பிடுவது போலவும்', 'கூட்டி மதிப்பிடுவது போலவும்' கருதுவது, அவர்களுக்கு உள்ள கருத்துரிமை. அதை குறை சொல்லவும் முடியாது. பன்னாட்டுக் கம்பெனிகளாக இருந்தாலும், அரசுகளின் மீது செல்வாக்கு செலுத்தியே காரியம் சாதிக்க முடியும். கிழக்கு தைமூர், தெற்கு சூடான், உள்ளிட்டு இன்னும் பல தனி நாடுகளாக உருவானவை ஒவ்வொன்றின் மீதும்; அந்நாட்டில் கனி வளங்கள், சந்தை உள்ளிட்ட இன்னும் பல நலன்கள் ( 'விடுதலை' ஆனாலும் பாதிப்பில்லாத- உதாரணம் நேரு தலைமையிலான இந்திய விடுதலை) தொடர்பான செல்வாக்கு விசைகளை (Forces), நான் ஆராய்ந்ததால், வெளிப்பட்ட கருத்தினையே பதிவு செய்துள்ளேன். அது சரியா, தவறா என்ற ஆராய்ச்சியை ஆர்வமுள்ளவர்கள் மேற்கொள்வதை வரவேற்கிறேன்.

      Delete