Wednesday, September 24, 2014


பாடல் எழுத்தொலியின் சுருதி சுத்தம் (pitch accuracy of the letter’s sound in a song) வைர‌முத்துக்குத் தெரியாதா?




'சுதேசி செய்தி' (மே, 2014) இதழில், 'திறவுகோல்' என்ற தலைப்பில், திரு. என்.சொக்கன் எழுதியுள்ள 'வண்ண வண்ண பூக்கள்' என்ற புத்தகம் பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன. அதில் கீழ்வரும் பகுதி எனது கவனத்தை ஈர்த்தது.

" 'ஈரமான ரோஜாவே' பாட்டில் ஒரு வரி. 'தண்ணிரில் மூழ்காது காற்றுள்ள பந்து' என்று வரும்.யேசுதாஸ் ' தண்ணிரில் மூள்காது" என்று பாடினாராம்.
உடனே வைரமுத்து திருத்தியிருக்கிறார்." மூள்காது இல்லை, மூழ்காது"
யேசுதாஸ் பக்கா Professional. கவிஞர் சொன்னபடி திருத்திப் பாடினார்.

ஆனால் இப்போதும் "மூழ்காது" வரவில்லை.'மூள்காது"வுக்கும், மூழ்காது'வுக்கும் இடையே ஏதோ ஒரு சத்தம் தான் வருகிறது.

வைரமுத்து சும்மா இருந்திருக்கலாம். 'சீனியர் பாடகர், தேன் போலக் குரல், அதில் பிழைகள் தெரியாது, போகட்டும்' என்று விட்டிருக்கலாம். ஆனால் அவரோ விடாமல் திருத்துகிறார். 'மூழ்காது'ன்னு அழுத்திப் பாடுங்க'.

யேசுதாஸ் ஒருமுறை, இரண்டு முறை, மூன்று முறை திருத்திப் பாடி பார்த்தார்.முடியவில்லை.கடைசியில் அவருக்குக் கோபம், 'நான் சாகும் வரை திருத்துவீங்கள்களா?' என்று வைரமுத்து மேல் எரிந்து விழுந்தாராம்.
அதற்கு வைரமுத்து சொன்ன பதில், ' தமிழ் சாகாத வரைத் திருத்துவேன்' “
-'சுதேசி செய்தி' (பக்கம் 26: மே, 2014)

மேலேக் குறிப்பிட்ட பகுதி இன்றைய திரைப்பாடல்களில் உள்ள குறையை விளங்கிக் கொள்ள துணை புரியும். அதை அடுத்து பார்ப்போம்.

ஒரு பாடலில் வரும் எழுத்தின் ஒலி சுருதி சுத்தமாக (accurate pitch) பாடலுக்கான இசையுடன் பொருந்த வேண்டும். அதாவது எழுத்தின் ஒலியும் சுருதியும் ஒன்றுடன் ஒன்று முழுமையாகப் பொருந்த வேண்டும். அதை தொல்காப்பியம் ( எழுத்து: 1;33)

 'இசையொடு சிவணிய நரம்பின் மறைய‌
 என்மனார் புலவர்' என்று தொல்காப்பியத்திற்கு முன்னர் வழக்கில் இருந்த சூத்திரம் மூலம் விளக்கியுள்ளது.

'சிவணிய' என்றால் 'பொருந்துதல்' (Tamil Lexicon) என்று பொருள். ‘'இசையொடு சிவணிய நரம்பின்’ என்பது சரியாக சுருதி சேர்க்கப்பட்டு பொருந்திய நரம்பு என்று பொருளாகும். பாடலில் வரும் எழுத்தின் ஒலி அந்த 'சுத்தமான சுருதியில்'  (tuned accurate pitch) மறைந்து  -ஒன்றி -ஒலிக்க வேண்டும்.

அவ்வாறு பாடலின் எழுத்தின் ஒலி சரியாக சுருதி சேர்க்கப்பட்ட யாழின் நரம்போடு ஒன்றி ஒலிக்க வேண்டும் என்பதைக் கீழ்வரும் சான்று வலியுறுத்துகிறது.

' யாழெழுத்திற் பாவாற் புணர்க்க' பஞ்ச மரபு 89

திருக்குறள் (573) 'பண் என்னாம் பாடற்கு இயைபு இன்றேல்' என்ற குறள் மூலம் அதை விளக்கியுள்ளது.
(கூடுதல் சான்றுகளுடன் கூடிய விளக்கத்திற்கு; http://musicresearchlibrary.net/omeka/items/show/2445 )

குரலொலியில் 'ழ' உச்சரிப்பின் போது,  வாயினுள் நடைபெறும் செயல்நுணுக்கத்தை, தொல்காப்பியம் ( எழுத்து: 3;13) கீழ்வருமாறு விளக்குகிறது.

' நுனி நா அணரி அண்ணம் வருட,
  ர கார, ழ காரம், ஆயிரண்டும் பிறக்கும்.'

ஆக பாடலில் வரும் எழுத்தின் ஒலியானது கீழ்வரும் இரண்டு நிபந்தனைகளைப் பூர்த்தி செய்தால் தான், பாடகரால் சுருதி சுத்தமாக பாட முடியும்.

 1. பாடலில் வரும் எழுத்தின் ஒலி பாடலில் அந்த எழுத்துக்கான சுரத்தில் சுருதி சுத்தமாகப் (accurate pitch) பொருந்த வேண்டும்.

 2. பாடலில் அந்த எழுத்து ஒலிக்கும் நேரம் (பாடலுக்கான இசைக் குறியீட்டில் உள்ள அட்சர காலம் – beat duration of the musical note ) பாடகரின் வாயினுள் அந்த எழுத்தை ஒலிக்கத் தேவைப்படும் செயல்நுட்பத்திற்கு ஏற்றதாகவும்,  இருக்க வேண்டும்.

யேசுதாஸ் சிரமப்பட்ட "மூழ்காது" என்ற சொல்லில் 'மூ' வுக்கான சுரம்,'ழ்'க்கான சுரம், அடுத்துவரும் 'கா'வுக்கான சுரம், மேலேக்குறிப்பிட்ட நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யக் கூடியவையா என்பதை அந்த பாடலுக்கான சுரக்குறியிட்டில் கண்டுபிடிக்க முடியும். இவ்வாறு ஒரு பாடலில் உள்ள சுரங்களை இணைக்கப் பயன்பட்ட 'இழை' பற்றிய சான்றுகள் பழந்தமிழ் இலக்கியங்களில் நிறைய உள்ளன. இது தொடர்பான எனது ஆய்வுக்கட்டுரை  Sangeet Natak’ (Vol XLII, Number 3,2008) என்ற ஆய்விதழில் வெளிவந்துள்ளது.
('izai இழை'; http://tamilsdirection.blogspot.com/2015/08/normal-0-false-false-false-en-us-x-none.html )

மேலே குறிப்பிட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு சுருதி சுத்தமுள்ள எழுத்துக்கள் கொண்ட சொற்கள் உள்ள பாடல்களையே 'இழைத்துப்' பாட முடியும். அதனையே திருக்குறள் (573);

'பண் என்னாம் பாடற்கு இயைபின்றேல்' என்று சுட்டிக்காட்டியுள்ளது.

யேசுதாஸ் பாடிய பாடலின் ஒலிப்பதிவில் கணினி துணையுடன், அந்த சொல்லுக்கு அவர் பயன்படுத்தியுள்ள சுரங்களைக் கண்டுபிடிக்க முடியும். மேற்குறிப்பிட்ட இரண்டு நிபந்தனைகளுமே பூர்த்தியாகாத வகையில் "மூழ்காது" என்ற சொல் இருப்பது,  அந்த ஆய்வில் வெளிப்பட்டால் வியப்பில்லை.” 'மூழ்காது' என்ற சொல்லில்,  'ழ்'-ஐ ஏன் வைரமுத்து விரும்பிய‌து போல் 'அழுத்திப் பாட' முடியாது என்பதற்கான காரணமும் அந்த ஆய்வில் வெளிப்படலாம். .  யேசுதாஸ் பாடலில், “ 'மூள்காது"வுக்கும், மூழ்காது'வுக்கும் இடையே ஏதோ ஒரு சத்தம் தான் வருகிறது.” என்பதற்கான காரணம் அதுவே என்று ஆய்வில் வெளிப்பட்டாலும் வியப்பில்லை.

பழைய திரைப்படப் பாடல்களில் உள்ள சொற்கள் தெளிவாக கேட்பது போல், இன்றுள்ள பாடல்களில் கேட்க முடியாமல், சிரமப்பட்டே அச்சொற்களைக் கண்டுபிடிக்க வேண்டியுள்ளது என்று பலர் சொல்ல கேட்டிருக்கிறேன். அவ்வாறுள்ள சொற்கள் இடம் பெற்ற பாடல்களை மேற்குறிப்பிட்ட முறையில் ஆராய்ந்தால், அச்சொற்கள் அந்த இரண்டு நிபந்தனைக்ளையும் பூர்த்தி செய்யாமல் இசைப்பது தெளிவாகும்.

இளையராஜா வருகைக்கு முந்தைய திரைப்பாடல்களில் அந்த இரண்டு நிபந்தனைகளும் பூர்த்தியாகாத பாடல்கள் அரிது. இளையராஜாவிற்கும் வைரமுத்துக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளுக்கு,  அந்த இரண்டு நிபந்தனைகள் பூர்த்தியாகாத பாடல்களை வைரமுத்து எழுதி, சுருதி சுத்தமுள்ள எழுத்துக்கள் கொண்ட சொற்களாக‌ திருத்த மறுத்தாரா என்பதும் ஆய்விற்குரியது.

இது தொடர்பாக யாரேனும் முனைவர் பட்டம் உள்ளிட்ட ஆய்வுகளில் ஈடுபட விரும்பினால், அவர்களுக்கு ஆய்வு ஆலோசனை நான் வழங்க இயலும். ( http://tamilsdirection.blogspot.sg/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_13.html ) இது தொடர்பான கட்டுரையானது, சுமார் 15 வருடங்களுக்கு முன், சிங்கப்பூரிலிருந்து வெளிவந்த‌ ‘சிங்கைச் சுடர்’ மாத இதழில் வெளிவந்தும், இன்று வரை அது ஏன் அறிவுபூர்வ விவாதத்திற்குள்ளாகாமல் இருளில் நீடிக்கிறது? என்பதும் முனைவர் பட்ட ஆய்விற்கு உகந்த கேள்வியாகும்.


குறிப்பு: 'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்' தொடர்பாக, நான் மேற்கொண்டு வரும் ஆய்வுகளின் அடிப்படையில், ஒரு பாடலின் ஒலிப்பதிவில் இருந்து, சுருதி சுத்தமற்ற எழுத்துக்கள் கொண்ட சொற்களை அடையாளம்  காண முடியும். (http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_16.htmlஉள்ளீடாக(input) கொடுக்கப்படும் இசைக்கு ஏற்ற பாடல் எழுதும் கவிஞர்களுக்கு துணை புரிய, சுருதி சுத்தமுள்ள எழுத்துக்கள் அடங்கிய சொற்கள் நூலகத்தினையும்(Library) கணினி உருவாக்கித் தரும். (https://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_17.html  )

No comments:

Post a Comment