Friday, November 14, 2014



             1944க்கு முன் எப்படி இருந்த தமிழ்நாடு,  

                  இன்று  எப்படி இருக்கிறது?                           


                                    இந்தி எதிர்ப்புப் போராட்டம்:
                           1938‍க்கும்  1965க்கும்   என்ன வேறுபாடு?

ஓரு போராட்டம் எந்த அளவுக்கு சமூகப் பொறுப்புடனும், திட்டமிடலுடனும் மக்கள் பங்கேற்புடனும் பொதுச் சொத்துக்களுக்கு சேத‌மின்றியும், வன்முறைகளுக்கு பெருமளவில் இடமின்றியும் நடந்து, தனது கோரிக்கையையும் நிறைவேற்றிக் கொள்ள முடியும் என்பதற்கு, பெரியார் தலைமையில் நடந்த 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம் சான்றாக இருக்கிறது. அந்த காலக் கட்டத்தில் இந்தியாவில் இது போன்ற போராட்டம் வேறு எங்கும் நடந்ததாகத் தெரியவில்லை. 'சத்தியாகிரகம்' என்று சொல்லி, போராட்டத்தைத் தொடங்கி, பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்து, வன்முறைகளுக்கு இடம் அளித்து, பள்ளிகளில் கல்லூரிகளில் படித்துக் கொண்டிருந்த மாணவர்களையும் 'வேலை நிறுத்தம்' என்ற 'சமூக நோய்க்கு' உள்ளாக்கியவர் காந்தி என்று 1944க்கு முன்னேயே 'குடி அரசு' கட்டுரைகளில் பெரியார் சுட்டிக் காட்டியிருக்கிறார். காந்தி சத்தியாககிரகம் தொடங்கும் முன், தாகூரும், இது போன்ற விளைவுகள் ஏற்படும் என்று எச்சரித்திருக்கிறார். மக்கள் பங்கேற்புடன் ஒரு போராட்டம் 'காலித்தனங்கள்' இன்றி நடத்த முடியும் என்பதை பெரியார் நிரூபித்தது, தாகூரின் பார்வைக்குப் போனதாகத் தெரியவில்லை. இந்தியாவிலும் சமூக ஆராய்ச்சியாளர்களின் கவனத்தை ஈர்த்ததாகத் தெரியவில்லை.

1944க்கு முன்  பெரியார் தலைமையில் மக்கள் பங்கேற்புடன் நடந்த 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும், 1965இல் அண்ணாதுரையும், ராஜாஜியும் தூண்டி விட்டு, பின் ஒதுங்கி நின்று வேடிக்கைப் பார்த்த, உரிய தலைமையின்றி மாணவர்கள் முன்னெடுத்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தையும் ஒப்பிடுவது, நிகழ்கால தமிழ்நாட்டின் மோசமானப் போக்குகள் எப்போது ‘பலம்’ பெற்றன?சமூகத்தில் பெரியவர்கள் 'பொறுப்பிலாமல்' ஒதுங்கி, 'மாணவர்களை' முன்னிறுத்தி போராடும் இழிவான போக்கு,காந்தி காலத்தில் இந்தியாவின் பிறபகுதிகள் போல தமிழ்நாட்டில் வேர் பிடிக்காத நிலையில், தமிழ்நாட்டில் எப்போது, எப்படி வேர் பிடித்து வளர்ந்தது. என்ற கேள்விகளுக்கான  விடையைத் தரும்.

1944 -இல் திராவிடர் கழகம் உருவானதற்கு முன், பெரியாரின் சமூக வாழ்வில் , அவர் சந்தித்த கருத்து வேறுபாடுகள் பற்றிய விவாதங்கள் அறிவுபூர்வ தளத்தில் நடைபெற்றதையும்,  திராவிடர் கழகம் உருவான பின் அவருக்கும் அண்ணாதுரைக்கும் இடையில் உருவான கருத்து வேறுபாடுகள் பற்றிய விவாதங்கள் உணர்ச்சிபூர்வ தளத்தில் நடைபெற்றதையும், அதன் தொடர்ச்சியாகவே,பிற்காலத்தில் பாரதிதாசனுக்கும் அண்ணாதுரைக்கும், பாரதிதாசனுக்கும் ஜீவானந்தத்திற்கும் இடையே ‘மிகவும் மோசமான’ உணர்ச்சிபூர்வ விவாதங்கள் நடைபெற்றதையும், ‘ஆக சமூகத்தில் 'உச்சத்தில்' இருக்கும் நல்லவைகளும், கெட்டவைகளும் அந்த சமூக வரலாற்றில் ‘விதை கொண்டு, உரமூட்டப்பட்டு’ வளராமல், 'திடீரென' வந்து விடாது’ என்பதையும் முந்தையப் பதிவுகளில் பார்த்தோம்.

1949 முதல் 1967 வரை பெரியார் தி.மு.க தலைவர்களைப் பற்றி தனிப்பட்ட முறையிலும் இழிவாகப் பொதுக்கூட்டங்களில் பேசிய ஒலிநாடாக்களும், இதழ்களில் வந்த எழுத்துக்களும், அதே போல் தி.மு.க தலைவர் 'கலைஞர்' கருணாநிதி பெரியாரைப் பற்றியும், காமராசரைப் பற்றியும் தனிப்பட்ட முறையிலும் இழிவாகப் பொதுக்கூட்டங்களில் பேசிய ஒலிநாடாக்களும்,இதழ்களில் வந்த எழுத்துக்களும், சாட்சிகளாக இருக்கின்றன. இப்படி பேசிக் கொண்டவர்கள் 1967‍க்குப் பின் 'சமரசமாகி' ஒருவரையொருவர் புகழ்ந்து பொதுக்கூட்டங்களில் பேசிய ஒலிநாடாக்களும், இதழ்களில் வந்த எழுத்துக்களும்,சாட்சிகளாக இருக்கின்றன. மேற்குறிப்பிட்ட கால இடைவெளிகளில், அந்த உணர்ச்சி பூர்வ பேச்சுக்களினாலும், எழுத்துக்களினாலும், அந்தந்த கட்சிகளின் அடிமட்ட தொண்டர்கள் ஒருவரையொருவர் (ஒரே குடும்பத்திலும் கூட) எதிரிகளாக பாவித்து, சில சமயங்களில் அவை வன்முறைகளாகவும் வெடிக்கும் அளவுக்கு, உணர்ச்சிபூர்வ வெறுப்பு/எதிர்ப்பு நோயில் தமிழ்நாட்டில் கணிசமானவர்கள் சிக்கியதும், அதில் 'தீவிரமான' குப்பன்களும், சுப்பன்களும் தமது வாழ்வையும், தமது குடும்பங்களின் வாழ்வையும், தொலைத்த சோகங்கள் பற்றியும், முறையான ஆய்வுகளும், வரலாற்றுப் பதிவுகளும் இதுவரை வெளிவந்ததாகத் தெரியவில்லை.

1944‍க்கு முன் கல்வியிலும் வேலைவாய்ப்பிலும் பிராமணர்கள் உள்ளிட்ட உயர்சாதிகளின் ஆதிக்கம் பற்றி சமூகப் பொறுப்புடன் கவலை கொண்டு, பின் தங்கிய மக்களை முன்னேற்ற வேண்டும், என்ற அக்கறையில், நன்கு படித்து, சமூகத்தில் உயர்ந்த நிலையில் இருந்தவர்கள், பிராமணர்கள் உட்பட, ஆக்கபூர்வமான முயற்சிகளில் ஈடுபட்டிருந்தார்கள். எனவே 'பிராமணரல்லாதார் கட்சி' என்று இன்று தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ள நீதிக் கட்சியிலும் பிராமணர்கள் இருந்தார்கள். எந்த சாதி, மீதும், மதத்தின் மீதும் வெறுப்பு, கோபம் போன்ற உணர்ச்சிமயப் போக்குகளுக்கு இடமின்றி, ஆக்கபூர்வ வளர்ச்சிப் போக்கில் தமிழ்நாடு பயணித்தது.  1938இல் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் போது,  கட்டாய இந்தித் திணிப்பை எதிர்த்தவர்களில் சத்தியமூர்த்தி, சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் (பின்னாள் குடியரசு தலைவர்) உள்ளிட்ட‌ பிராமணர்களும் இருந்தார்கள்.( http://en.wikipedia.org/wiki/Anti-Hindi_agitation_of_1937%E2%80%9340 ) 1937-38 ஆம் ஆண்டு நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் போது, இந்தியை ஆதரித்து உரக்க குரல்கொடுத்தவர் சத்தியமூர்த்தி என்ற மாறுபட்ட கருத்தும் உள்ளது.(www.itstamil.com/s-satyamurti.html)

படிக்கின்ற மாணவர்கள் ஒரு போராட்டத்தில் ஈடுபடத் தொடங்குவது என்பது, அந்த சமூகத்தில் உள்ள கட்சிகளும், இயக்கங்களும் சமூக பொறுப்புணர்வற்ற நபர்களிடம் சிக்கியிருக்கிறதா? போராட்டங்களில் படிப்பைத் தொலைத்த மாணவர்கள், அதன் காரணமாக, தமது வாழ்வில் என்னென்ன பாதிப்புகளைச் சந்திக்க நேரிடும்? படித்த பொறுப்பான பெற்றோர்களின்/தமிழ்த் தலைவர்களின் பிள்ளைகள் போராட்டங்களில் ஈடுபட்டிருக்கிறார்களா? அல்லது முதல் தலைமுறையாகப் படித்த குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகள் போராட்டங்களில் ஈடுபடுகிறார்களா? போன்ற கேள்விகளுக்கு இடமில்லாத வகையில் நடந்தது, 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம்.

மாணவர்களைத் தூண்டாமல், கிராமங்கள் வரை, பிரச்சாரம் செய்து, இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு ஆதரவாளர்களையும், பெண்கள் உள்ளிட்டு பங்கேற்பவர்களையும் திரட்டி, தமிழ்நாட்டின் பல மூலைகளிலிருந்து போராட்டப்படை வழிநடைப் பயணம் மேற்கொண்டு, திட்டமிட்டபடி ஒரு இடத்தில் சேர்ந்து, கட்டாய இந்தியை ஒழித்து வெற்றி பெற்றது 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம். கட்டாயமின்றி விருப்பமிருந்தால், இந்தி படிக்க வாய்ப்பிருந்தது அந்த வெற்றியில்.

அந்த 'விருப்ப இந்தி' அரசுப் பள்ளிகளில் இருந்ததை ஒழித்தது தான் 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம், (http://en.wikipedia.org/wiki/Anti-Hindi_agitations_of_Tamil_Nadu)  - 1967‍இல் தி.மு.க ஆட்சிக்கு வந்து, நிறைவேற்றிய சட்டசபைத் தீர்மானம் மூலம். இன்று தமிழ்/திராவிடக் கட்சித் தலைவர்கள், தமிழ்ப் பேராசிரியர்கள் வீட்டுப் பிள்ளைகளெல்லாம் பள்ளிகளில் ஆங்கில வழியில் இந்தியும் கூடுதலாகப் படிக்க, அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழைக் குடும்பப் பிள்ளைகள் விருப்பமிருந்தால்,  இந்தி படிக்கும் வாய்ப்பைக் கெடுத்தது 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம். 1965 முதல் இன்று வரை நடந்து வரும் மாணவர் போராட்டங்களில் பெரும்பாலும் அரசு நடத்தும் கல்லூரிகளில் படிக்கும் சாதாரணத் தமிழர்களின் பிள்ளைகள் பங்கேற்று தமது படிப்பைக் கெடுத்து வந்துள்ளார்கள். ஆனால் வசதியானத் தமிழர்கள்,திராவிட/தமிழ் கட்சிகளின் தலைவர்கள் வீட்டுப் பிள்ளைகள் படிக்கும் தனியார் கல்லூரிகள் பெரும்பாலும் இத்தகைய போராட்டங்களிலிருந்து 'புத்திசாலித்தனமாக' ஒதுங்கி, அங்கு படிக்கும் மாணவர்கள் மட்டும் தமது படிப்பைக் கெடுத்துக் கொள்ளாமல் உருப்பட்டு வருகிறர்கள்.

அரசுக் கல்லூரிகளில் அரசியல் கட்சிகளின் சுயநலன்களுக்காக இப்படிப்பட்ட போராட்டங்களைத் தூண்டி, தலைமை ஏற்கும் மாணவர்களின் படிப்புகள் கெட்டாலும், அவர்களில் 'குறுக்கு புத்தி'சாலிகளே பின்னர் அந்தந்த கட்சிகளின் எம்.எல்.ஏக்களாகவும், அமைச்சர்களாகவும் சமூகத்தில் 'செல்வாக்கு' பெற்றார்கள். ஒழுங்காகப் படிக்காமலேயே குறுக்கு வழிகளில் பட்டங்கள் பெறும் போக்கும் திராவிடக் கட்சி ஆட்சிகளில் தான் அரங்கேறியது. இப்படிப்பட்ட போக்குகளுக்கு பிள்ளையார் சுழி போட்டது தான் 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் சாதனை ஆகும்.

1965இல் திருச்சி தேவர் மன்றத்தில் அண்ணதுரையும், ராஜாஜியும் சேர்ந்து கூட்டம் போட்டு, 'உணர்ச்சிபூர்வ போக்குகளைத் தூண்டியதன் விளைவாகவே, 1938 போராட்டத்தில் இருந்த‌, பொறுப்பான தலைமையும், வழிகாட்டுதலும் 1965இல் இன்றி, மாணவர்களின் இந்தி எதிர்ப்புப் போராட்டம் வெடித்தது. பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்துதல்,வன்முறை, தீக்குளித்தல் போன்றவை திராவிட இயக்க வரலாற்றில் அறிமுகமாகின.(குறிப்பு கீழே) அந்த போராட்டத்தை ஆதரிக்காத 'குற்றத்திற்காக' பெரியாரையும் அவமானப்படுத்திய சம்பவங்களும் நடந்தன. அதாவது 1944இல் அறிவுபூர்வ வாதங்களைப் பலகீனமாக்கி, உணர்வுபூர்வ வாதங்கள் தலை தூக்கிய போக்கு வளர்ந்து, 1965இல் பெரியாரை ஓரங்கட்டி, அவமானப்படுத்தும் விளைவை 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம் ஏற்படுத்தியது. இது ஆழ்ந்த சமூக வரலாற்று ஆராய்ச்சிக்கு உட்படுத்த வேண்டிய ஒரு வரலாற்று 'சிக்னல்' (historical signal) என்பது பற்றி அடுத்து பார்ப்போம்.

1944 க்கு முன் அறிவுபூர்வ போக்கில், சமூகத்தில் உள்ள குறைகளை நீக்க உருவான சமூக ஆற்றலின் பண்பானது, அக்குறைகள் தொடர்பான போராட்டங்களை முன்னெடுத்த தலைவர்களின் சமூகப் பொறுப்புடன் கூடிய தியாகங்களையும், போராட்டங்களில் ஆர்வத்துடனும், சுயலாப நட்ட நோக்கின்றியும் பங்கேற்ற மக்களின் தியாகங்களையும் பிரதிபலித்த‌து. போராட்ட வடிவங்களிலும், விளைவுகளிலும் அது எதிரொலித்ததற்கு, 1938 இந்தி  எதிர்ப்புப் போராட்டம் வரலாற்றுச் சான்றாக உள்ளது. 1944‍இல் அண்ணதுரையின் செல்வாக்கில் 'திராவிடர் கழகம்' தோன்றி, உணர்வுபூர்வ போக்குகள் தலை தூக்கி, அதன் போக்கில் பெரியாரின் 'சமூக பலத்தையும்' வலிவழக்கச் செய்து வளர்ந்த பின் நடந்த, 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் வெளிப்பட்ட சமூக ஆற்றலின் பண்பும், தூண்டிய தலைவர்களின் பண்பும், மக்களைப் பின் தள்ளி மாணவர்கள் முன்னெடுத்த பண்பும்,போராட்ட வடிவங்களும், விளைவுகளும் மேற்சொன்னவைக்கு 'நேர் எதிர்' ஆக இருந்ததற்கு, 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டம் வரலாற்றுச் சான்றாக உள்ளது. இயற்பியல்(Physics)  நோக்கில், இது வரலாற்றுப் போக்கு சுழற்சியில் 'எதிர்க்கட்டம்' (opposite phase) என்று, உணர்ச்சி பூர்வ‌ வளர்ச்சிப் போக்கு உச்சமடைந்து (Maximum point), வீழ்ச்சித் தொடங்கிய  அடையாளம் ஆகும். அதன்பின் தொடங்கிய வீழ்ச்சிக் கட்டத்தில், தமிழ்நாட்டில் தலைவர்களிடமிருந்த லாப நட்டக் கணக்கு பண்பு கட்சிகளின் அடிமட்டத் தொண்டர்கள் வரை வேகமாகப் பரவியது. ( ‘ தமிழ்நாடு 'கள்வர் நாடு' என்ற திசையில் பயணிக்கிறதா?’;
 http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_17.html  ) இன்று கட்சிகளுக்குச் சம்பந்தமில்லாமல், தினமும் ஆங்காங்கே மக்கள், குறிப்பாக பெண்கள், மாணவர்களை, தங்கள் பிள்ளைகளை அனுமதிக்காமல், தாங்களே போராடி வருகிறார்கள். அது அந்த 'உணர்ச்சி பூர்வ' கட்சிகள் மரணத்தை நெருங்கி விட்டதன் அறிகுறியாகும். தமிழ்நாட்டில் ' குறைந்த அரசியல் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்' உருவாகத் தொடங்கியுள்ளதும் அதன் அறிகுறியாகும். இந்த மாற்ற காலக் கட்டத்தில் லாப நட்டக் கணக்கு பண்பில்லாதவர்கள் உணர்ச்சி பூர்வ போக்கிற்கு எதிராக எவ்வளவு வலிமையாக செயல்படுகிறார்களோ, அந்த அளவுக்கு தமிழ்நாட்டில் வீச இருக்கும் 'அரசியல் புயல்' குறைந்த பாதிப்புகளை ஏற்படுத்தி, சமுக வளர்ச்சிக்கான 'சமூக ஆற்றல்' எனும் 'மழை' மொழிந்து, தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் காப்பாற்ற வாய்ப்பிருக்கிறது.

1944‍க்கு முன் கல்வியில், அரசுப் பணிகளிலிருந்த பிராமண ஆதிக்கத்தை எதிர்த்த நீதிக் கட்சியில் பிராமணர்களும் இருந்தார்கள். 'பார்ப்பான்' என்று பேச்சுகளில், எழுத்துகளில் பிராமணர்கள் அனைவரையும் இழிவுபடுத்தும் போக்கு அப்போது இல்லை. அதற்குப் பின் தான் 'பார்ப்பான்', 'துலுக்கன்' என்று சாதி ரீதியிலும், மத ரீதியிலும் அவரவருக்கு பிடிக்காத சாதி, மதத்தினரை இழிவு படுத்தும் போக்கு பொது அரங்கில் அறிமுகமானது. அந்த போக்கில் அடிமட்டத் தொண்டர்கள் சாதி/மத அடிப்படைகளில் தமக்குள் பிரிவினைக்குள்ளாகி, ஒருவரையொருவர் வெறுப்பதும், சில சமயம் அவை வன்முறையாக வெடிப்பதும் அறிமுகமானது. தாம் எதிர்க்கும் சாதியில்/மதத்தில் இருந்த உண்மையானவர்களும், நேர்மையானவர்களும் அந்த உணர்ச்சி போதையில் சிக்கியவர்களின் கண்களுக்கு இன்று வரை தெரியாமல் போய்க் கொண்டிருப்பது ஒரு சமூகக் கொடுமையாகும். பா.ஜ.க அப்துல் கலாமை குடியரசு தலைவராக ஆக்கிய பின்னும், தவறு புரிந்த மூஸ்லீம் பயங்கரவாதிகளைத் தனிமைப்படுத்தி கண்டிக்காமல், உணர்ச்சிபூர்வமாக 'துலுக்கன்கள் ' என்று இந்துத்வா ஆதரவாளர்களில் ‘சிலர்’ இன்றும் பேசுவது, எழுதுவது உண்மையா? பொய்யா?

ஒருவரையொருவர் உணர்ச்சிபூர்வமாக இழிவுபடுத்தி எதிர்த்துக் கொண்டிருந்த பெரியாரும் தி.மு.க தலைவர்களும் 1967 ஆட்சிமாற்றத்திற்குப் பின் சமரசமானார்கள். அந்த சமரசத்தில் பெரியாரும், அண்ணாதுரையும் தத்தம் சுயநலனுக்காகச் சமரசம் செய்து கொண்டார்கள் என்று அவர்களின் அரசியல் எதிரிகள் கூட குற்றம் சாட்ட மாட்டார்கள். ஆனால் அந்த 'சமரசத்தின்' தொடர்ச்சியாக தமிழ்நாட்டில் நடந்து வரும் சமரசங்கள் அந்த வகையைச் சாருமா? உதாரணமாக, கடந்த பாராளுமன்ற தேர்தலுக்கு முன், ம.தி.மு.க தலைவர் வைகோவும், தி.மு.க தலைவர்களில் ஒருவரான மு.க அழகிரியும் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற சமரசமானார்கள். அதே போல் பி.ஜே.பி தலைவர் எச். ராஜாவும் மு.க அழகிரியும் சந்தித்து தேர்தலில் வெற்றி பெற சமரசமானார்கள்.

பட்டுக்கோட்டை அழகிரியின் நினைவாகவே தி.மு.க தலைவர் தனது மூத்த மகனுக்கு அழகிரி என்று பெயரிட்டதாகவும், அது தொடர்பாக அவர் வெளிப்படுத்தும் செய்திகள் உண்மையா என்பது பற்றியும், தா.கிருட்டிணன், மதுரை 'தினகரன்' பணியாளர்கள் கொலை தொடர்பாக அழகிரியைக் கண்டித்து,  'உணர்வு பொங்க' மதுரையில் பிரமாண்டமான கூட்டத்தில் வை.கோ நிகழ்த்திய 'எழுச்சி' உரையையும் கீழவரும் காணோளியில் பார்க்கலாம் என்ற தகவல் இணையத்தில் 'முகப்புத்தகத்தில்' வெளிப்பட்டுள்ளது. http://www.youtube.com/watch?v=wdqbVYKpIHs)
பா.ஜ.க தலைவர் எச்.ராஜா , பெரியார் படத்தை செருப்பால் அடிப்பேன் என்று சொல்லி. தமிழ்நாடு முழுவதும் 'புகழ்' பெற்றவர். அவ்வாறு சொல்லியதற்கு வருத்தம் தெரிவிக்காமலேயே, வை.கோவோடு 'கூட்டணி' சேர்ந்து,  அவருடன்  போட்டி போடும் அளவுக்கு, அவர் மதுரையில் அழகிரியைச் சந்தித்து ஆதரவு கேட்டிருக்கிறார். நேரில் அழகிரியிடம் - பெரியார் பற்றிய கருத்துக்கு ராஜாவும், அழகிரி பற்றிய கருத்துக்கு வை.கோவும்  - வருத்தம் தெரிவித்தார்களா இல்லையா, என்பது அவர்கள் இருவரின் மனசாட்சிகளுக்கு தான் வெளிச்சம். வைகோவும், எச்.ராஜாவும் பாராளுமன்ற தேர்தலில் தேர்தலில் வெற்றி பெறாததால், அழகிரியை நேரில் சந்தித்து நன்றி தெரிவிக்க வேண்டிய தேவையில்லாமல் போய்விட்டது.

பெரியார்,ராஜாஜி, காமராஜர் வாழ்ந்த காலங்களில், எச்.ராஜாவைப் போல் எந்த கட்சியிலும் அடிமட்ட தொண்டன் கூட அப்படி பேசியிருக்க முடியாது. பேசவும் தலைவர்கள் அனுமதிக்க மாட்டார்கள். பிள்ளையார் சிலையை உடைக்கும் போராட்டம் அறிவித்தபோதும், கோவிலில் உள்ள சிலைகளுக்கு ஏதும் சேதம் விளைவிக்கக் கூடாது என்றும், அவரவர் தமது சொந்த காசில் கடையில் பிள்ளையார் 'பொம்மை' களை வாங்கி, பொது மக்களுக்கு 'இடைஞ்சல்' இன்றி உடைக்க வேண்டும் என்றும், அதுவும் அந்நிலைப்பாடு தொடர்பாக தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்த பின் செய்ய வேண்டும் என்றார் பெரியார். 'காந்தி படங்களை எரித்தல்' தொடர்பாகவும் அவ்வாறே செயல்பட்டார், காமராஜரை ஆதரித்து கொண்டே. அதே போல் பா.ஜ.க பெரியார் படத்தை ஏன் எரிக்க வேண்டும் என்று தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரம் செய்து, எதிர்க் கேள்விகளை பெரியாரைப் போலவே சந்தித்து செயல்பட்டார்களா? மாறாக போட்டியாக 'உணர்வுபூர்வமாக', சங்கராச்சாரியரின் படங்களை எரிக்க வேண்டும் என்ற, பெரியார் காலத்தில் வெளிப்படாத உணர்வு , பெரியார் தொண்டர்களிடையே இன்று வெளிப்பட , பா.ஜ.க தலைவர் எச்.ராஜா போன்றோரின் பேச்சுக்கள் காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.. அந்த 'பெரியார் தொண்டர்களுக்கு' நெருக்கமான வை.கோவுடன் எச்.ராஜா கூட்டணி சேர்ந்தார்.வை.கோவும் சேர்ந்தார். இருவருமே பாராளுமன்றத் தேர்தல் வெற்றிக்காக, அழகிரியுடன் சமரசமானார்கள். அதற்காக வை.கோ மீதும் அவருக்கு நெருக்கமான பெரியார் தொண்டர்கள் கோபப்பட்டதாகத் தெரியவில்லை. எச் ராஜா மீதும் இந்துத்வா தொண்டர்கள் கோபப்பட்டதாகத் தெரியவில்லை. எல்லாம் தேர்தலில் 'எப்படியாவது' வெற்றி பெற வேண்டும் என்ற உணர்ச்சிபூர்வ போக்கு தான் காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 1944க்கு முன் இது போன்ற உணர்வுபூர்வ போக்குகள் இருந்ததாகத் தெரியவில்லை. 

தனது பாராளுமன்ற தேர்தல் தோல்விக்குப்பின், வைகோ கூட்டிய மாநாட்டில்,vபங்கேற்ற 'பெரியார்' கட்சிகளின் தலைவர்களில் எவராவது வைகோவைக் கண்டிக்காவிட்டாலும், தமது வருத்ததையாவது தெரிவித்தார்களா?



பெரியார் வாழ்ந்த போது  அவர் மீது செருப்புகளும், முட்டைகளும், கற்களும் வீசப்பட்ட நிகழ்ச்சிக்சள் உண்டு. திருச்சியில் உள்ள அவரின் சிலைக்கு செருப்பு மாலை அணிவித்ததும் உண்டு. அவருக்குப் பின் மணியம்மை சென்னை பெரியார் திடலில் 'இராவண லீலா' நடத்திய போது, கலைஞர் கருணாநிதி ஆட்சியில் 'போலீஸ்' பாதுகாப்போடு பெரியார் திடல் வாயில் முன், தனது ஆதரவாளர்களுடன் பெரியார் படத்தை 'செருப்பால் அடித்து போராட்டம்' நடத்தினார் பிரபல பிராமண எழுத்தாளர் தீபம் நா. பார்த்தசாரதி. இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் நடந்ததற்குப் பின்னும், சங்கராச்சாரியார் உள்ளிட்டு எந்த மதத் தலைவர் மீதும் அது போன்ற நிகழ்ச்சிகள் நடைபெறவில்லை.

 இன்று இந்துத்வா தலைவர்கள் திராவிடர் கழகத்திலிருந்து பிரிந்து வளர்ந்த 'திராவிட உணர்ச்சிபூர்வ' பாணியில், 'பெரியார் படத்தை' செருப்பால் அடிப்பேன்' என்று பேசியும், சில வருடங்களுக்கு முன் சென்னையில் பெரியார் படத்தை செருப்பால் அடித்த நிகழ்ச்சியும் நடந்த பின், சங்கராச்சாரியார் படத்தை எரிக்கும் நிகழ்ச்சியும் நடந்தது. பெரியார், மணியம்மை காலத்திற்குப் பின் தான், தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் அப்பாவி பிராமணர்களின் 'பூணூல் அறுப்பு' நிகழ்ச்சிகளும்,ஒப்பீட்டளவில் அதிகமாக‌, நடந்தன. பிராமணர்கள் மத்தியிலும், பிராமணரல்லதோர் மத்தியிலும் 'அறிவுபூர்வ நேர்மை'ப் போக்குகள் பலகீனமாகி, 'திராவிட உணர்ச்சிபூர்வ' போக்குகள் வலிவடைந்துள்ளதே இத்தகைய நிகழ்வுகளுக்குக் காரணம் என்பது என் கருத்து. 'அறிவுபூர்வ போக்குகள்' தலைதூக்கி வருவதால், இவை விரைவில் 'கடந்த கால' பதிவுகளாகும் நிலை உருவாகி வருகிறது என்பதும் என் கணிப்பாகும்.

1944க்கு முன் இருந்த தமிழ்நாடு எப்படி இருந்தது? இன்று தமிழ்நாடு எப்படி இருக்கிறது? முகப்புத்தகங்களில அவரவருக்கு பிடிக்காத தலைவர்கள் பற்றி எவ்வளவு இழிவாக எழுத்துக்கள் மூலமாகவும், படங்கள் மூலமாகவும் இழிவுபடுத்துகிறார்கள். அவ்வாறு தமக்குப் பிடிக்காத தலைவர்களை இழிவுபடுத்துவதில்  மட்டும் இந்துத்வா ஆதரவாளர்கள்/எதிர்ப்பாளர்கள், பெரியார் ஆதரவாளர்கள்/ எதிர்ப்பாளர்கள் என்று உணர்ச்சிபூர்வ போதையாளர்கள் எல்லோரும் ஒன்றுபட்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட உணர்ச்சிபூர்வ இழிவு போக்குகள் முடிவுக்கு வர வேண்டாமா?

பெரியார் பிராமணர்கள் அமைப்பிலேயே உரையாற்றியிருக்கிறார். அது போல் இந்துத்வா ஆதரவாளர்கள் மத்தியில் பெரியார் கொள்கையாளர்களும், முஸ்லீம் தலைவர்களும் அறிவுபூர்வமாக உரையாற்ற வேண்டும். பெரியார் ஆதரவாளர்கள் மத்தியிலும், முஸ்லீம் ஆதரவாளர்கள் மத்தியிலும் இந்துத்வா தலைவர்கள் அறிவுபூர்வமாக  உரையாற்ற வேண்டும். பிறர் பார்வையில் உணர்தல் (empathy) என்ற போக்கைக் கடைபிடித்து, அறிவுபூர்வ அணுகுமுறையை  ஊக்குவிப்பவர்களுக்கு இது சாத்தியமே.

வட மாநிலங்களில் உணர்ச்சிபூர்வமாக முஸ்லீம்களை இழிவு படுத்தும் போக்கிலிருந்து விலகி, நாட்டுப்பற்றுடைய முஸ்லீம்கள் உள்ளிட்டு அனைவரையும் ஊழலற்ற, பாரபட்சமற்ற வளர்ச்சி நோக்கிய ஆட்சி என்று ஒன்றுபடுத்தும் நோக்கில் மோடி உள்ளிட்ட வடமாநில முதல்வர்கள் ஆட்சி செய்ததன் விளைவாகவே, எம்.ஜே.அக்பர் போன்ற இந்துத்வா எதிர்ப்பு எழுத்தாளர்களும் மோடி  ஆதரவாளர்களாக மாற (http://www.youtube.com/watch?v=8KD8dSioiKU),  பா.ஜ.க அமோக வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. 30 வருட பொது வாழ்வில் ஊழல், வேண்டியவர்களுக்கு சலுகை போன்ற குற்றச்சாட்டுகளுக்கு கூட உள்ளாகாதவர் பிரதமர்  மோடி என்று இந்துத்வா எதிர்ப்பாளராகிய    'OUTLOOK' ஆசிரியர் வினோத் மேத்தா கருத்து தெரிவித்துள்ளார். (“He is dynamic, clean, keen to introduce change and in three decades he has been in public life, corruption or nepotism has not touched him. I could go on singing his praises and risk being expelled by the secular fraternity.”- Vinod Mehta on “Which Way Will He Turn?” http://www.outlookindia.com/) இந்துவாவிற்கு எதிரான புத்தகங்களைத் தடை செய்ய வேண்டும் என்ற போக்கை ஆதரிக்காமல்,அமெரிக்ககாவில் வாழும் ராஜிவ் மல்கோத்ரா (http://rajivmalhotra.com/), மலேசியாவில் வாழும் உலகன் (https://sites.google.com/site/ulagansessays/) போன்றவர்கள் அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவித்து வருகிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள இந்துத்வா, பெரியார், முஸ்லிம் இயக்க ஆதரவாளர்களும் இனி அந்த அறிவுபபூர்வ விவாதப் போக்கில் இடம் பெறுவது தான் தமிழ்நாட்டிற்கும் நல்லதாகும்.

குறிப்பு : 1965 இந்தி எதிர்ப்பு மாணவர்கள் போராட்டம் தொடங்குவதற்கு முன், அண்ணாதுரை,ராஜாஜி, கி.ஆ.பெ.விஸ்வநாதன், இலக்குவனார் போன்ற இன்னும் பல தலைவர்கள் என்னென்ன அறிக்கைகள் விட்டார்கள்? எங்கெங்கு கூட்டங்களில் என்னென்ன உரைகள் நிகழ்த்தினார்கள்? அன்றைய தமிழ்நாட்டில் அவர்களில் யார் யாருக்கு எந்த அளவு மாணவர்களிடம் செல்வாக்கு இருந்தது? அப்போராட்டத்தினால் இலக்குவனார் அளவுக்கு, பேராசிரியர் பணி இழப்பு உள்ளிட்ட துயரங்களை வேறு எந்த தமிழறிஞரும் அனுபவித்திருக்கிறர்களா?
1965 மாணவர்கள் போராட்ட காலத்தில், தி.மு.க தலைவர்கள் என்னென்ன நெருக்கடிகளுக்காளானார்கள்? அதன் காரணமாக யார் யார் என்னென்ன அறிக்கைகள் விட்டார்கள்? அதன்பின் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை முன்னெடுத்த மாணவர் தலைவர்கள் யார் யாருக்கு என்னென்ன அடிப்படைகளில், 1967 தேர்தலில் தி.மு.க சார்பில் போட்டியிட, காமராசர் உள்ளிட்டு யார் யாரை எதிர்த்துப் போட்டியிட, வாய்ப்புகள் வழங்கினார்கள்? போட்டியிட வாய்ப்பு கிட்டாத மற்ற மாணவர் தலைவர்களுக்கு, 1967இல் ஆட்சிக்கு வந்தபின் என்னென்ன முறையில்  பிரதிபலன் -reward-  வழங்கினார்கள்? அந்த மாணவர் தலைவர்கள் அதன்பின் தமிழுக்கும், தமிழ்நாட்டுக்கும் உண்மையாகப் பங்காற்றினார்களா? அல்லது பொது வாழ்வுக் கள்வர்களாக 'வெற்றிகரமான வாழ்வியல் நிபுணர்களாக' வெளிப்பட்டார்களா? யார் யார் குடிப்பழக்கம் உள்ளிட்டு புலனின்பங்களுக்கு அடிமையாகி வீணாகப் போனார்கள்? இந்த கேள்விகளுக்கான விடைகளுக்கும், 1944இல் முளைவிட்டு வளர்ந்து 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் உச்சமான உணர்வுபூர்வ போதைகளுக்கும் தொடர்பு உண்டா? 1965 போரட்டத்தில் உண்மையில் தீக்குளித்தவர்கள் யார்? யார்?  தமது ஊருக்கு 'புகழ்' வேண்டும் என்ற கணக்கில், 'புத்திசாலி' உள்ளூர் தி.மு.க கரர்கள், தமது ஊரில் தீக்குளித்துத் தற்கொலை செய்து கொண்டவர்களை 'இந்தி எதிர்ப்பு தீக்குளித்தவர் பட்டியலில்' இடம் பெறச் செய்த காரியங்களும் நடந்ததா? போன்ற கேள்விகளுக்கான விடைகளை, சான்றுகளின் அடிபட்டையில், பாரபட்சமற்ற, திறந்த மனதுடன் ஆய்வுக்கு உட்படுத்தினால், 1938க்கும், 1965க்கும் இருந்த பண்பு ரீதியிலான வேறுபாடுகள் தெளிவாகும்.
 

No comments:

Post a Comment