Monday, December 14, 2020

 

தேவநேயப் பாவாணரின் நிலைப்பாடானது தமிழுக்கு வளர்ச்சியா? வீழ்ச்சியா? (3)


'ஆய்வு வழிமுறை' (Research Methodology) பற்றிய அடிப்படை அறிவு இல்லாமலேயே தேவநேயப்பாவாணர் ஆய்வுகள் ?

 

மேனாட்டில் முதன்முதல் இலக்கணம் வரைந்தவர் பிளாற்றோ (Plato, B.C. 427) என்றும், அவர் பெயர்ச்சொல்லும் வினைச்சொல்லுமே கண்டுபிடித்தார் என்றும் அதன்பின் அவர்தம் மாணாக்கரான அரிஸ்ற்றாட்டில் (Aristotle, B.C. 384) இடைச்சொல்லும் எச்சமுங் கண்டுபிடித்தாரென்றும், மேனாட்டிலக்கணங்கட்கெல்லாம் அடிப்படையானதும் விளக்கமானதும் உண்மையில் இலக்கணமென்று சொல்லத் தக்கதும், டையோனிசியஸ் திராக்ஸ் (Dionysius Thrax, B.C. 100) எழுதிய இலக்கணமேயென்றும் மாக்கசு முல்லர் கூறுகிறார்.

வடமொழியில் நிறைவான இலக்கணமாகிய பாணினீயம் கி.மு. 5ஆம் நூற்றாண்டினது. அதற்கு முன்னமே பல இலக்கண நூல்கள் வடமொழியி லிருந்தன. ஆயினும், அவை யாவும் வடமொழி முதற் பாவியமான வான்மீகி யிராமாயணத்திற்குப் பிற்பட்டவையே. வடமொழியிலக்கணங்கள் முதன்முதல் ஆரிய மறைக்கே எழுந்தனவேனும், அவை தொல்காப்பியத்திற்குப் பிற்பட்டவை என்பதற்கு எள்ளளவும் ஐயமில்லை. அவை ஆரியர் தமிழிலக்கணத்தை யறிந்தபின்னரே இயற்றப்பட்டவையென்பது பின்னர் விளக்கப்படும்.

இங்ஙனம், உலகத்திலேயே முதன்முதல் திருந்தியதும் இலக்கணமெழுதப்பெற்றதுமான தமிழ்’ - தேவநேயப் பாவாணர் - பண்டைத் தமிழகம்; :: TVU :: (tamilvu.org)

அறிவியல் அணுகுமுறையில் முடிந்த முடிவாக எதையும் அறிவிக்க முடியாது. ஆய்வுகளின் மூலமாக புதிய சான்றுகள் வெளிப்பட்டு, மொழியியல் தொடர்பான ஆய்வுகளிலும் பழைய முடிவுகள் திருத்தப்பட்டு வருகின்றன. எனவே எதையும் முடிந்த முடிவாக அறிவிப்பதானது, 'ஆய்வு வழிமுறை'க்கு (Research Methodology) எதிரானதாகும்.

மொழியியலில் இலக்கணத்தின் தோற்றம் பற்றி உலக அளவில் வெளிவந்துள்ள ஆய்வுகளைத் தேடாமல், 'மாக்கசு முல்லர்' கருத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, ஆய்வில் முடிவு செய்வதானது அறிவுபூர்வ அணுகுமுறையாகாது.

கிரேக்க மொழி இலக்கணம் தொடர்பாக, தேவநேயப் பாவாணர் சுட்டிக்காட்டிய 'மாக்கசு முல்லர்' கருத்தினை மறு ஆய்வுக்கு உட்படுத்த வைக்கும் சான்று வருமாறு:

The emergence of grammatical learning in Greece is less clearly known than is sometimes implied, and the subject is more complex than is often supposed; (https://www.britannica.com/science/linguistics/Greek-and-Roman-antiquity)

'மாக்கசு முல்லர்' கருத்தை மட்டுமே ஆதாரமாகக் கொண்டு, உலகில் உள்ள மொழிகளைப் பற்றி என்னென்ன ஆய்வுகள் வெளிவந்துள்ளன? என்ற தேடல் இன்றி, 'உலகத்திலேயே முதன்முதல் திருந்தியதும் இலக்கணமெழுதப்பெற்றதுமான தமிழ்என்று தேவநேயப் பாவாணர் அறிவித்ததன் மூலமாக, 'ஆய்வு வழிமுறை' ((Research Methodology) பற்றிய அடிப்படை அறிவு இல்லாமலேயே, தேவநேயப்பாவாணர் ஆய்வுகள் மேற்கொண்டாரா? என்ற கேள்விக்கு அறிவுபூர்வமான மறுப்பினை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். மறுப்பு வரவில்லை என்றால், 'தனித்தமிழ்ப்போதை' அறிவுக்கண்களை மறைக்கும் அளவுக்கு ஆபத்தானதா? என்ற கேள்வி எழ வழி வகுக்கும்.

No comments:

Post a Comment