Wednesday, October 1, 2014



தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (4)

 

தமிழின் மரணப் பயணத்தைத் தடுத்து நிறுத்தும்         சமூக ஆற்றலுக்கு தமிழ்நாட்டில் வழியுண்டா?



சமூகத்தில் அழிவைத் தடுக்க வேண்டுமானாலும் சரி, ஆக்கபூர்வமாக ஏதும் செய்ய வேண்டுமானாலும் சரி, அதற்கான சமூக ஆற்றலுக்கு வழி இருக்க வேண்டும். தமிழின் மரணப் பயணத்தைத் தடுத்து நிறுத்தும் சமூக ஆற்றலுக்கு தமிழ்நாட்டில் வழியுண்டா? என்ற கேள்வியைச் சந்திக்க, கீழ்வரும் கேள்விகள் பற்றிய விளக்கம் முக்கியமாகும்.

சமூக ஆற்றல் என்றால் என்ன? தனி மனிதரின் ஆற்றல்கள் அமைப்பின் மூலமாக எவ்வாறு சமூக ஆற்றலாக வடிவெடுக்கின்றன என்பது போன்ற கேள்விகளுக்கான விளக்கம் ஏற்கனவே பதிவிடப்பட்டுள்ளது. ( ‘சமூக இழைகளும் , சமூகப் பிணைப்புகளும்’   (Social Fibers & Social Bonds); chttp://tamilsdirection.blogspot.sg/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html )

'தமிழ், தமிழ் உணர்வு' போன்றவற்றில் சாதாரணத் தமிழர்களுக்கு எந்த அளவுக்கு ஈடுபாடுகள்(Interests) இருக்கின்றனவோ, அந்த அளவுக்கே  அவை தொடர்பான முயற்சிகளுக்கான சமூக ஆற்றலுக்கு வழி இருக்கும்.

தமிழ்நாட்டில் இன்று பத்து வயதுக்குட்பட்ட  'இந்து' குடும்பப்பிள்ளைகளின் பெயர்கள் பெரும்பாலும் 'மேற்கத்திய போக்கில் திரிந்த' சமஸ்கிருத பெயர்களாகவும்,'கிறித்துவ' குடும்பங்களில் தமிழ் கிறித்துவப் பெயர்கள் இருந்த நிலை மாறி,  'மேற்கத்திய கிறித்துவ'ப் பெயர்களாகவும் உள்ளன. முஸ்லிம் குடும்பங்கள் மட்டும் அந்த 'நோயில்' இதுவரை சிக்கியதாகத் தெரியவில்லை.

மத்திய அரசு 'இந்தி மட்டுமே மத்திய அரசின் ஆட்சி மொழி' என்று அறிவித்தாலும், தமிழ்நாட்டில் எந்த அமைப்பும் இந்தி எதிர்ப்பு போராட்டம் நடத்த முடியுமா? நடத்தினால் பொதுமக்களின் கோபத்திற்கும் வெறுப்புக்கும் உள்ளாக நேரிடுமா? என்ற கேள்விகள் எழும் நிலையில் தமிழ்நாடு உள்ளது. அப்படி போராட்டம் நடத்தினாலும், " உங்கள் பிள்ளைகள் மட்டும் ஆங்கில வழியில் இந்தியும் படித்து உருப்பட வேண்டும். எங்க பிள்ளைகள் மட்டும் வீணாகப் போகணுமா?" என்ற கேள்விகளைச் சந்திக்க நேரிடதா?

இன்று தமிழ்நாட்டில் 'தமிழ், தமிழ் உணர்வு, இந்தி எதிர்ப்பு, தனி நாடு' என்று பேசுபவர்கள் அந்நியமாகியுள்ள‌ போக்கும், தமிழ்நாட்டு மக்கள் அது போன்ற பிரச்சினைகளிடமிருந்து அந்நியமாகியுள்ள போக்கும் வளர்ந்துள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.. அது போன்ற பிரச்சினைகளுக்கு தாமாக கூடிய மக்கள் கூட்டம் குறைவதும்,பல வகையான 'தூண்டில் மீன்களை'ப் பயன்படுத்தி ஆள் சேர்த்து பொதுக் கூட்டங்களும், அறைக் கூட்டங்களும் நடத்துவதும் அதிகரித்துள்ளதா? இதில் வியப்பென்னவென்றால், அந்த போக்கில், தமிழ் அமைப்புகளின் எண்ணிக்கையும்  அதிகரித்தது ஏன் என்பது ஆய்விற்குரியது.

தமிழ்நாட்டில் திராவிடர் கழகம் தோன்றுவதற்கு முன்னேயே 'தமிழ் உணர்வு, சமூக நீதி' போன்ற திசைகளில் பல முயற்சிகள் நடந்து,மக்கள் மனங்களில் அவை தொடர்பான ஈடுபாடுகளும்(Interests)  தோன்றி வளர்ந்ததற்கு சான்றுகள் உண்டு. சமூகத்தில் எந்த ஒரு பொதுப் பிரச்சினைக்கும் மக்கள் மனங்களில் தோன்றும் ‘ஈடுபாடுகள்'(interests) காரணமாக, அம்மனிதர்களின் ( மூளை உழைப்பு + உடலுழைப்பு + அவர் வசம் உள்ள பொருள் மூலம்) செயல்பாடுகளுக்கான  ஆற்றலை (Energy)  உருவாக்குகின்றன, 

இவ்வாறு 'தமிழ் உணர்வு, சமூக நீதி' போன்றவைகளுக்கு உருவான சமூக ஆற்றலானது, திராவிட இயக்க வரலாற்றில் என்னென்ன மாற்றங்களுக்கு உள்ளாகி, இன்று பொதுமக்களிடையே வற்றியுள்ளதா? அதன் காரணமாகவே மேலேக் குறிப்பிட்ட கேள்விகளின் தேவைகள் எழுந்துள்ளனவா? இதற்கும் தமிழ்நாட்டில் கட்சிகள், இயக்கங்கள், குடும்பங்கள் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளில் உள்ள பிணைப்புகளும்(Bonds) , அப்பிணைப்புகளின் அடியோட்டமாக அமைப்பிலுள்ள மனிதர்களுக்கிடையிலான சமூக இழைகளும் (social Threads)  என்ன பண்பு மாற்றத்திற்குள்ளாகியுள்ளன ? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

முள்ளி வாய்க்கால் போர் தொடங்குவதற்கு முன்னும், போர் நடந்த போதும், அதற்குப் பின்னும் இன்று வரையிலும் சாதாரண பொது மக்கள் தத்தம் பிரச்சினைகளில் 'மூழ்கி' வாழ்கிறார்கள். 1983 சூலை இனப்படுகொலைக்குப்பின் கிராமம், நகரம் என்ற வேறுபாடின்றி, கொந்தளித்து, நீண்ட காலம் நீடித்த தமிழ்நாட்டு மக்கள் ஆதரவாகப் பெருகிய 'சமூக ஆற்றலானது’, எந்தெந்த வழிகளில் விரயமானது என்று ஆராய்ந்தால் தான், தமிழ் நாட்டு  சராசரித் தமிழ‌ர்கள் இன்று,  'தமிழ் ஈழம்' மட்டுமல்ல, 'தமிழ் உணர்வு, இந்தி எதிர்ப்பு' போன்றவற்றிலிருந்தும் அந்நியப்பட்டு வாழ்வது ஏன் என்பது தெளிவாகும். 

மனிதர்களின் மனங்களில் உள்ள 'தேவைகள்' (needs) , அத்தேவைகளின் அடிப்படைகளில் மனங்களில் தோன்றும் ‘ஈடுபாடுகள்'(interests)  ஆகியவை, அம்மனிதர்களின் ( மூளை உழைப்பு + உடலுழைப்பு + அவர் வசம் உள்ள பொருள் மூலம்) செயல்பாடுகளுக்கான  ஆற்றலை (Energy)  உருவாக்குகின்றன என்பதை முன்னர் பார்த்தோம். தனி மனிதர்களின் ஆற்றல்களே அவர்கள் சம்பந்தப்பட்ட சமூக அமைப்புகளின் (குடும்பம், இயக்கம், etc ) சம்ப‌ந்தப்பட்ட சமூக அமைப்பாற்றல் ஆகும். அவையே சமூக அமைப்பின் அமைப்பாற்றலின் (socio-structural energy) மூலங்களாகும் (sources).

இத்தகைய சமூக ஆற்றலினைப் பயன்படுத்தி, சமூகத்தில் உள்ள ஒரு அமைப்பானது, (குடும்பம், நிறுவனம், அரசு, etc ), அதன் நோக்கங்களை நிறைவேற்ற,  தரஏணி  நிலையிலான ( hierarchical status) செயல்பாடுகளைக் கொண்டிருக்கும்.அதன் காரணமாக அச்செயல்பாடுகளுக்கு பொறுப்பான மனிதர்களின் நிலையும்  தரஏணிநிலையில் மேலும் கீழுமாக இருக்கும்.

தவறான நபர்கள் அமைப்பின் தர ஏணி நிலையில் முக்கிய பொறுப்புகளில் இடம் பெறும்போது, அமைப்பின் நோக்கங்களை தமது சுயநலத்திற்கு திசை திருப்பும் ஆபத்து நேரிட வாய்ப்புண்டு. அதில் அவர்கள் வெற்றி பெற, மற்ற முக்கிய பொறுப்பில் உள்ள நபர்களையும் படிப்படியாக, அமைப்பின் செயல்பாட்டின் ஊடே, தம்மைப் போன்றே சுயநலவாதிகளாக மாற்றும் தொத்து நோய்க் கிருமி மூலங்களாக செயல்படுவதும் நேரிடலாம்.அந்த போக்கில் அமைப்பில் உள்ள மனிதர்களின் ஆற்றல்கள் எல்லாம் அந்த அமைப்பை சீரழிவுப் பாதையில் பய‌ணிக்கவே செலவாகும்.

அமைப்பின் நோக்கங்களும்,செயல்பாடுகளும் தவறாக அமையும் போது,அமைப்பில் உள்ள சமூக பிணைப்புகளும், அமைப்பிலுள்ள மனிதர்களுக்கிடையிலான சமுக இழைகளும் அந்த தவறானப் போக்கிற்கு பொருத்தமாக பண்பு மாற்றங்கள் பெறும்.பண்புமாற்றத்திற்குட்பட முடியாதவர்கள் அமைப்பினுள் இருந்து வெளியேற்றப்படல் அல்லது உள்ளிருந்து பலகீனமாகி மறைதல் ஆகிய விளைவுகளையேச் சந்திக்க நேரிடும். குடும்பம், நிறுவனம், அரசு, உள்ளிட்டு அந்த சமூகத்தில் உள்ள அமைப்புகளில் இது தான் நிகழும்.

சமூகத்தில் வாழும்  மனிதர்களுக்கிடையிலான தொடர்புகளாகிய சமூக இழைகள் எதிர்த் திசையில்  ( negative - குடும்பம், நட்பு உள்ளிட்ட அனைத்திலும் லாப நட்டம் பார்க்கும் 'கள்வர்' பண்புடைய - திருக்குறள் 813) பண்பு மாற்றத்திற்குள்ளாகும் போது, அப்படிப்பட்ட இழைகள் தொடர்புடைய அமைப்பின் பலவேறு பாகங்களின் தொடர்புடைய பிணைப்புகளும்(Bonds)  பண்பு மாற்றத்திற்குள்ளாகும். அதில் பாதிக்கப்பட்ட மனிதர்களின் மனங்களில் உருவாகும் தேவைகளும், ஈடுபாடுகளும் லாப நட்டம் பார்க்கும் பண்பு மாற்றத்திற்குள்ளாகும்.  எனவே  அப்படிப்பட்ட அமைப்புகளுக்கு ஏற்கனவே கிடைத்து வந்த சமூக ஆற்றலும் லாப நட்ட கணக்கிலான பண்பு மாற்றத்திற்குள்ளாகும். ஆக தமிழ்நாட்டில் குடும்பம், கட்சி, இயக்கம் உள்ளிட்டு அனைத்திலும் உள்ள சமூக ஆற்றல் லாப நட்ட கணக்கிலான பண்பு மாற்றத்திற்குள்ளான பின், தமிழின் மரணப் பயணத்தைத் தடுத்து நிறுத்தும் சமூக ஆற்றலுக்கு வழியுண்டா?

லாப நட்ட கணக்கிலான பண்பு மாற்றத்திற்குள்ளானவர்களிடம் கீழ்வரும் போக்கு வெளிப்படுவதில் வியப்பில்லை.அத்தகைய நபர்களுடன் நாம் இயல்பாக உரையாடுவது பெரும்பாலும் முடியாத காரியமாகி வருகிறது. தம்மை விட செல்வம் செல்வாக்கில் மேலான நபர் எனில், அவரிடம் குழைந்து, வாலாட்டி காரியம் சாதிக்கும் நோக்கில் பழகுவது; கீழான நபர் எனில் ஒதுக்குவது: சம அளவில் உள்ள நபர் எனில் இயன்ற அளவுக்கு தம்மை விட கீழ் என மட்டம் தட்டுவதிலேயே குறியாக இருப்பது; என்பதே அத்தகைய நபர்களின் தனித்துவ வெளிப்பாடாக இருக்கிறது.

இதில் முக்கியமாக கவனிக்க வேண்டியது என்னவென்றால்,நமக்கு இயல்பாக நாட்டமுள்ள துறைகள் (Passions) மற்றும் ஆய்வுகள் (Research) பற்றி பேசினாலும், அதைத் தெரிந்து கொள்வதில் ஆர்வமின்றி, அத்துறைகள் மூலம் ஏதும் செல்வம், செல்வாக்கு பெருக வாய்ப்புண்டா என்பதிலேயே அத்தகைய நபரின் கவனம் இருக்கும். நாயைப் போல குழைந்தவர், அறிவு பூர்வமான, கலை பூர்வமான எந்த துறைகள் பற்றியும் (செல்வம், செல்வாக்கைத்தவிர வேறு )எதையும் தெரிந்து கொள்ள விரும்பாத  - கற்பூர வாசனை தெரியாத கழுதையாகவும்-  தம்மை வெளிப்படுத்திக் கொள்வார். இப்படிப்பட்ட நபர்கள் தமது வாழ்க்கையில் செல்வம், செல்வாக்கு சம்பாதிக்கும் வெற்றியின் இரகசியம் ஏற்கனவே பதிவிடப்பட்டுள்ளது. (‘தமிழ்நாடு வீழ்ச்சியும் மீட்சியும்- வெற்றிக்கான எலும்புத் துண்டு இரகசியம்’;http://tamilsdirection.blogspot.sg/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_27.html) தமிழ்நாட்டின் சமூக வரலாற்றில் இப்படிப்பட்ட 'வாழ்வியல் நிபுணர்கள்' தோன்றி வளர்ந்ததற்கும், திராவிட இயக்க வளர்ச்சி-வீழ்ச்சிப் போக்கிற்கும் இடையிலான தொடர்புகளும் ஆய்விற்குரியதாகும்.

'தமிழ், தமிழ் உணர்வு' அமைப்புகளில் அத்தகையோரை அடையாளம் கண்டு, அகற்றாத வரையில், தமிழின் மரணப் பயணத்தைத் தடுக்க முடியுமா?

தமிழ்நாட்டில் சமூக இழைகளும், பிணைப்புகளும் லாப நட்டம் பார்க்கும் 'கள்வர்' பண்புமாற்றத்திற்குள்ளான பின், ஒரு சமூகப் பிளவு(Social Disjoint)  ஏற்பட்டுள்ளதை அடுத்து பார்ப்போம்.

தமிழ்நாட்டில் தினமும் எங்காவது மக்கள், குறிப்பாக பெண்கள், வீதியில் இறங்கி, குடிநீர் பிரச்சினை, சாலை வசதியின்மை, நிதி நிறுவன மோசடி என்று அவர்களை நேரடியாகப் பாதிக்கும் பிரச்சினைகளுக்கு தாமாகவே போராடிவரும் செய்திகள் ஊடகங்களில் வெளிப்படுகின்றன. தமிழ்நாட்டில் 'தமிழ் உணர்வு' என்ற அடிப்படையில் எண்ணிக்கையில் அதிகமாக வளர்ந்துவரும் அமைப்புகள் , இப்படி சாதாரணத்தமிழர்களை நேரடியாக பாதிக்கும் அடிப்படைப் பிரச்சினைகள் பற்றி கவலைப்பட்டு என்ன பங்காற்றினார்கள்? அவர்கள் சம்பந்தமில்லாமல் பாதிக்கப்பட்ட சாதாரணத் தமிழர்கள் தாமாகவே போராடுகிறர்களா? அந்த 'தமிழ் உணர்வு' அமைப்புகளுக்கும் சாதாரணத்தமிழர்களுக்கும் சமூகப்பிளவு (Social Disjoint)  ஏற்பட்டுள்ளதா? அப்படிப்பட்ட அமைப்புகளுக்கு நிதி உள்ளிட்டு செயல்பாட்டிற்கான ஆற்றல் மூலங்கள் என்ன? ஏதாவது ஒரு வகை ஆதாயமின்றி செயல்படும் தொண்டர்கள் எவ்வளவு பேர் அந்த அமைப்புகளில் உள்ளார்கள்? அறிவுபூர்வ போக்குகள் வலிவிழந்து, உணர்வுபூர்வ போக்கில் தமிழ்நாடு சிக்கியது இதற்குக் காரணமா?
திராவிட இயக்க வரலாற்றில் உணர்வுபூர்வக் கூறுகள் வளரத்தொடங்கியது 1944‍க்கு பின்னர் தானா? என்ற கேள்விக்கு விடை காண, 1944‍க்கு முன்னும் பின்னும் வெளிவந்த 'குடி அரசு' இதழ்களை ஆராய்வது பலனளிக்கும். அந்த உணர்வுபூர்வ வளர்ச்சியின் முக்கிய கட்டத்தில் 1949-இல் தி.மு.க உருவானதா? என்பதும் ஆய்விற்குரியது. திராவிட இயக்க வரலாற்றில் 'பண பலம் அதிகரித்து பலரின் வசதி வாய்ப்புகள் வளர்ந்து, சராசரி வாழ்க்கையிலிருந்து 'மேல்த் தட்டு' வாழ்க்கைக்குத் தாவிய போக்கில் , மேலேக்குறிப்பிட்ட சமூகப் பிளவு தோன்றி வளர்ந்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும். சுயமாக முன்னேறக்கூடிய அறிவாற்றலோ, தொழில் வியாபாரத் திறமைகளோ இல்லாமல், உட‌லுழைப்பைத் தவிர்த்து 'முன்னேற' , தமக்கு இயல்பாக அமைந்த பல வகை 'தரகுத் தொண்டு புலமையின்' மூலம் 'அதிவேகப் பணக்காரர்கள்' உருவாக, அந்த போக்கு வழி வகுத்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும். தமிழின் மரணப் பயணத்துடன் இந்த போக்கு எந்த அளவுக்கு தொடர்புடையது என்பதும் ஆய்விற்குரியதாகும்.

சாதாரணத் தமிழர்கள் அடிப்படை வசதிகளுக்கு தாமே போராடும் அளவுக்கு, 'தமிழ் உணர்வு' அமைப்புகளுக்கும், சாதாரணத் தமிழர்களுக்கும் இடையே சமூகப் பிளவு இருப்பது உண்மையா? இல்லையா? என்பதும் ஆய்விற்குரியது. தமிழின் மரணப் பயணத்தைத் தடுத்து நிறுத்தும் சமூக ஆற்றலுக்கு தமிழ்நாட்டில் வழியேற்பட வேண்டுமானால், இந்த சமூகப்பிளவு நீக்கப்பட வேண்டுமா? இல்லையா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அந்த சமூகப் பிளவு நீக்கப்படவேண்டுமானால்,  சமூக இழைகளும், சமூக பிணைப்புகளும் லாப நட்டம் பார்க்கும் பண்பிலிருந்து மாற வேண்டாமா? அம்மாற்றத்திற்குத் தடையாக, குடும்பம், நட்பு உள்ளிட்டு, நமது சமூக வட்டத்தில்  இருப்பவர்களை அடையாளம் கண்டு திருத்த வேண்டாமா? திருந்த மறுப்பவர்களை நமது சமூக வட்டத்திலிருந்து வெளியேற்ற வேண்டாமா? இதையெல்லாம் செய்யாமல், செய்யத் துணிவில்லாமல் நாம் இருந்தால், தமிழின் மரணப் பயணத்தைப் பற்றி கவலைப்படக் கூட நமக்கு அருகதை உண்டா? தமிழின் மரணப் பயணத்தைத் தடுத்து நிறுத்தும் சமூக ஆற்றலுக்கு, தமிழ்நாட்டில் வழியுண்டாவதற்கு நாமே தடையாக இருப்பதா?

இது போன்ற கேள்விகளுக்கு செயலில் என்ன வகையான பதில்கள் இனி தமிழ்நாட்டில் வெளிப்படுமோ, அவற்றைப் பொறுத்தே, தமிழின் மரணப்பயணம் தடுத்து நிறுத்தப்படுமா? இல்லையா? என்ற கேள்விக்கும் பதில் கிடைக்கும்.


No comments:

Post a Comment