Monday, October 27, 2014


சமூக ஆற்றல்களும், போராட்டங்களும், வன்முறைகளும் (2)


'கத்தி' திரைப்படம் தொடர்பாக வெளிவந்துள்ள மூன்று செய்திகளை, முந்தையப் பதிவில் பார்த்தோம். சத்யம் தியேட்டரில் தாக்குதல் நடத்தியவர்கள் (தொடர்பாக கண்காணிப்பு கேமரா பதிவின் படி)பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் என்ற செய்தியும் அதில் அடக்கம். 

’ ராஜபக்சே ஆதரவு பெற்ற நிறுவனம் லைக்கா என்பதற்காக, அந்நிறுவனம் தயாரித்த திரைப்படம் தமிழ்நாட்டில் திரையிடப்படுவதை எதிர்ப்பவர்கள், ஐ.நா உள்ளிட்டு உலக அமைப்புகளில் ராஜபட்சேயின் 'பாதுகாவலராக' செயல்படும் சீனாவை இது வரை கண்டித்ததுண்டா? சீனப் பிரதமர் அண்மையில் இந்தியா வந்தபோது, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நின்றாவது அந்த வருகையை எதிர்த்து கறுப்புக் கொடி காட்டினார்களா? ராஜபட்சேக்கு சீனாவை விட வலிமையான ஆதரவை வழங்கும் நிறுவனமா லைக்கா?’ என்பது பற்றியும், கடந்த 10 வருடங்களில் வரைமுறையில்லாமல் சீனாவில் தயாரான பொருட்கள் தமிழ்நாட்டுச் சந்தையில் நுழைந்து, தமிழ்நாட்டின் சிறுதொழில் உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரங்களைச் சிதைத்துள்ளதால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் பற்றியும், ‘தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (6)   ‘தமிழ்க் கூட்ட அழிவு நோய்’ - (TCCD)'  ‘நோயாளிகள்’ மருத்துவரான விந்தை’ என்ற பதிவில் 
( http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_14.html ) பார்த்தோம். எனவே 'கத்தி' படத்தை எதிர்த்த பெரியார் பெயரில் உள்ள இயக்கங்களில், அறிவுபூர்வமாக சுயவிமர்சனம் செய்து தம்மை வளர்த்துக் கொள்ளும் பண்புள்ளவர்களின் பார்வைக்கு மேற்குறிப்பிட்டப் பதிவு முக்கியமானதாகும்.

அதே போல், மேற்குறிப்பிட்ட சத்யம் தியேட்டரில் நடந்த போராட்டமானது பெரியார் பெயரில் உள்ள எந்த இயக்கமும் மேற்கொண்டிருந்தாலும், அது போன்ற போராட்டங்களை எந்தப் பிரச்சினையிலும் அவர்கள் மேற்கொண்டிருந்தாலும், அத்தகைய போராட்ட முறைகள் பெரியாரால் கண்டிக்கப்பட்டவையா? இல்லையா? என்ற கேள்விகளையும் அவர்கள் ஆராய வேண்டும். கால மாற்றத்தில் போராட்ட முறைகள் பற்றிய பெரியாரின் நிலைப்பாடுகள் இந்த காலத்திற்குப் பொருந்தாது, என்று அந்த இயக்கங்கள் தமக்குள் விவாதித்து, இத்தகைய போராட்ட முறைகளே சரியென்று ஏற்று நடைமுறைப்படுத்தி வருகிறார்களா? என்ற கேள்வியையும் அவர்கள் ஆராய வேண்டும்.

'மனித செயல்பாடுகளின் தூண்டுகோலாக மனிதர்களின் மனங்களில் உள்ள ஈடுபாடுகள் இருக்கின்றன. சம்பந்தப்பட்ட மனிதர்களின் ஈடுபாடுகளில் உள்ள அறிவுபூர்வமான கூறுகளும், உணர்வுபூர்வமான கூறுகளும் அவர்கள் பங்கேற்கும் போராட்டங்களிலும், வன்முறைகளிலும் வெளிப்படும். உணர்வுபூர்வ கூறுகள் போராட்டங்களில் பங்கேற்பதற்கான சமூக ஆற்றலின் வலிமையையும்,அறிவுபூர்வகூறுகள் போராட்டங்களின் வழிமுறைகளையும்  பண்புகளையும் தீர்மானிக்கின்றன.' என்பதை முந்தையப் பதிவில் பார்த்தோம். அதன்படி மேலேக் குறிப்பிட்ட கேள்விகள் பற்றிய ஆய்வுகள், பெரியாருக்கு இந்த சமூகத்தைப் பற்றி இருந்த ஈடுபாடுகளுக்கும், இன்று பெரியார் பெயரில் உள்ள இயக்கங்களின் தலைமைப் பொறுப்புகளில் உள்ளவர்களின் ஈடுபாடுகளுக்கும் இருக்கும் ஒற்றுமைகளையும், வேற்றுமைகளையும் வெளிப்படுத்தும்.

ஒரு சமூகத்தின் கடந்த கால வளர்ச்சிப் போக்குகளில ஒரு இயக்கம் மக்களிடம் நெருக்கமாகி, மக்கள் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் போராட்டங்கள், அந்த இயக்கத்தின் வளர்ச்சிக்கும், அதன்மூலம் அந்த மக்களின் வளர்ச்சிக்கும் வழிவகுக்கும். அதற்கு மாறாக, மக்களுக்குச் சம்பந்தமில்லாமல், அவர்களுக்கு தொந்திரவாக மேற்கொள்ளப்படும் போராட்டங்கள் அந்த இயக்கத்தின் விழ்ச்சிக்கும் வழி வகுக்கும். 

சமூகத்திலுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளுடனும், அவர்களின் தாய்மொழி மற்றும் பாரம்பரியம், பண்பாடுகளுடனும் தொடர்பு கொண்டு, உருவான கொள்கையின் அடிப்படையில் செயல்படும் இயக்கங்கள் வளரும். 

பொது மக்களுக்கு தொந்திரவின்றி, பொதுச் சொத்துக்களுக்குச் சேதமின்றி பெரியார் மேற்கொண்ட போராட்டங்கள் சமூகத்திலுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளுக்குப் பாதிப்பின்றி அமைந்திருந்தன. ஆனால் தமிழ், பாரம்பரியம், பண்பாடு ஆகியவற்றில் இருந்ததை 'வந்தது வளர்த்து வருவது ஒற்றி' (அரங்கேற்றுக் காதை 65) ( முந்தையப் பதிவில் விளக்கியுள்ளவாறு) என்ற செயல்நுட்பத்திற்கு உட்படுத்தாமல், அவற்றைத் தமிழர்க்குக் கேடானவையாகக் கருதி, உருவாக்கிய கொள்கைகள் வழியில் பெரியார் பயணித்தார். அதாவது ஒரு சமூகத்தின் ஆணி வேரையே நோயாகக் கருதி அவர் பயணித்ததால், அவரது இயக்கத்திற்கான சமூக ஆற்றல்களின் ஊற்றுக்கண்களிலிருந்து அவர் அந்நியமானார். எனவே ஏற்கனவே கையிருப்பில் இருந்த சமூக ஆற்றலில் இயக்கம் பயணித்து , வலுவிழக்க நேரிட்டது. மிகுந்த தியாகங்களுடன் தோன்றி வளர்ந்த அவரது இயக்கம் சந்தித்த இந்த முரண்பாடுகள் காரணமாகவே, 'குறுக்கு வழி செல்வம் சேர்க்கும்' நோயாளிகள் பொது வாழ்வில் 'அதி வேகமாக' வளர்ந்து, விமர்சனப் பார்வையற்ற உணர்வுபூர்வ 'தமிழுணர்வாளர்கள்' அவர்களிடம் சிக்கியதால்,  பெரியாரையும் மீறி தமிழையும், தமிழர்களிடம் இருந்த பண்பாடுகளையும் சீரழித்து, தமிழ்நாட்டை வீழ்ச்சிப் பாதையில் பயணிக்க அம்முரண்பாடுகள் வழி வகுத்ததா? அந்த நோயில் தமிழ்நாட்டில் கணிசமானோர் சிக்கியதால், அறிவு உழைப்பிலும், உடல் உழைப்பிலும் பிற மாநிலத்தவரும், வெளிநாட்டினரும் தமிழ்நாட்டில் வளர வழி வகுத்ததா? என்பது போன்ற கேள்விகளை ஆராயாமல், தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் தப்பித்து மீள முடியுமா? 

தமிழ்நாட்டில் உள்ள சாதாரணத் தமிழர்கள் தத்தம் அடிப்படைப் பிரச்சினைகளுக்கு தாமே போராடி வருவது என்பதானது, தமிழ்நாட்டில் உள்ள கட்சிகள் மற்றும் இயக்கங்கள் ஆனவை, சமூக ஆற்றலுக்கான ஊற்றுக் கண்களில் இருந்து தொடர்பற்று பயணிப்பதை உணர்த்தாதா? அதிலும் பொதுமக்களுக்கு தொந்திரவாகவும், பொதுச் சொத்துக்களைச் சேதப்படுத்தியும் மேற்கொள்ளப்படும் போராட்டங்களானது, சம்பந்தப்பட்ட இயக்கங்களை பொதுமக்களின் வெறுப்புக்குள்ளாக்காதா? 

மக்களின் வெறுப்புக்குள்ளான கட்சிகளை, மத்திய அரசு நினைத்தால் என்ன பாடு படுத்தலாம் என்பதற்கு நெருக்கடி காலத்தில் ஆட்சியை இழந்து, மீண்டும் ஆட்சிக்கு வரமுடியாமல் தவித்த தி.மு.க சாட்சியாக இருக்கிறது. தமிழின் மரணப் பயணத்தைப் பற்றி கவலைப் படாமல்,  'தமிழ் உணர்வு,தமிழ் ஈழம், இந்தி எதிர்ப்பு' போன்றவையோடு அடையாளப்படுத்திக் கொண்டு, மக்களிடமிருந்து விலகி, மக்களுக்குத் தொந்திரவான போராட்டங்களுடன் பயணிக்கும் இயக்கங்கள் மக்களின் வெறுப்புக்குள்ளாவது ஒரு பாதிப்பு.அதைவிட மோசமாக, அவர்கள் 'உயர்த்தி'ப் பிடித்த 'தமிழ் உணர்வு,தமிழ் ஈழம், இந்தி எதிர்ப்பு' போன்றவையும், ஆங்கில வழிக் கல்வி போதையில் சிக்கிய‌ தமிழர்களின் வெறுப்புக்குள்ளாகும் ஆபத்தும் உண்டு. ஏற்கனவே தமிழின் மரணப்பயணம் தொடங்கியுள்ள சூழலில், தமிழர்களை 'தமிழ், பாரம்பரியம், பண்பாடு' போன்ற வேர்களற்ற மனிதர்களாக, தமிழ்நாட்டில் வாழும் ஆங்கிலோ இந்தியரைப் போன்று வாழ வைப்பதில் தான் அது முடியும். 
  
தமிழ், தமிழ் உணர்வு' கட்சிகளுக்கும், சாதாரணத் தமிழர்களுக்கும் இடையே உள்ள சமுகப் பிளவானது(Social Disjoint) , தமிழ்நாட்டில் ஒரு திருப்பு முனைப் போக்கு தொடங்கியிருப்பதன் அறிகுறியா? சுயலாப நோக்கின்றி, தமிழ், தமிழ்ப் பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றின் வளர்ச்சிக்கும் ஆங்காங்கே சில தமிழர்கள் தாமாகவே பங்களிப்பு வழங்கி, செயல்பட்டு வருவது உண்மையா? இது போன்ற கேள்விகளுக்கான விடைகள் தமிழின் மரணப் பயணத்தைத் தடுத்து நிறுத்தி, தமிழர்களையும், தமிழ்நாட்டையும் காப்பாற்றுமா? என்பதே இன்றைய தமிழ்நாட்டின் நிலைமையாக இருக்கிறதா?  இத்தகைய ஆய்வுகளுக்கு 'தமிழ், தமிழுணர்வு' கட்சிகள் தயாரா? 

குறிப்பு: 'சமூக ஆற்றல்களும், போராட்டங்களும், வன்முறைகளும் (1)' ; https://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_23.html

No comments:

Post a Comment