Thursday, October 23, 2014


சமூக ஆற்றல்களும், போராட்டங்களும், வன்முறைகளும் (1)


நான் ‘ON GROWTH AND FORM’ (‘வளர்ச்சி மற்றும் வடிவம் பற்றி’ ) BY D'ARCY WENTWORTH THOMPSON’ என்ற புத்தகத்தைப் படித்து, சமூகவியல் நோக்கில் குறிப்புகள் எடுத்து, ஏற்கனவே தமிழ், தமிழர்கள்,தமிழ்நாடு தொடர்பாக பதிவுகள் செய்துள்ளேன். அதன் தொடர்ச்சியாக தமிழ்நாட்டை உதாரணமாகக் கொண்டு சமூக ஆற்றல்களுக்கும், போராட்டங்கள் மற்றும் வன்முறைகளுக்கும் இடையில் உள்ள தொடர்பு பற்றிய ஆய்வினை இங்கு பார்ப்போம்.

‘மனிதர்களின் மனங்களில் உள்ள 'தேவைகள்' (needs), அத்தேவைகளின் அடிப்படைகளில் மனங்களில் தோன்றும் ‘ஈடுபாடுகள்'(interests) ஆகியவை, அம்மனிதர்களின் ( மூளை உழைப்பு + உடலுழைப்பு + அவர் வசம் உள்ள பொருள் மூலம்) செயல்பாடுகளுக்கான  ஆற்றலை (Energy)  உருவாக்குகின்றன,’ என்பதையும்,

‘தனி மனிதர்களின் ஆற்றல்களே அவர்கள் சம்பந்தப்பட்ட சமூக அமைப்புகளின் (குடும்பம், இயக்கம், etc ) சம்ப‌ந்தப்பட்ட சமூக அமைப்பாற்றல் ஆகும். அவையே சமூக அமைப்பின் அமைப்பாற்றலின் (socio-structural energy) மூலங்களாகும் (sources).’ ’ என்பதையும், மேற்குறிப்பிட்டப் பதிவுகளில் பார்த்தோம்.

ஒரு சமுகத்தின் சமூக ஆற்றல்களில் ஒரு பகுதியே போராட்டங்களாகவும், 'வன்முறைகளாகவும்' வெளிப்படுகின்றன.   தனி மனிதர்கள் மூலமாகவும் , குடும்பம் போன்ற ரத்த உறவுகள் (Blood relations)   அடிப்படைகளிலான அமைப்புகள் மூலமாகவும் , அரசு போன்ற சட்டபூர்வ அமைப்புகள் மூலமாகவும் , அரசியல் கட்சிகள், மதம், சாதி, மொழி,'ஆன்மீகம், பகுத்தறிவு' போன்ற பலவகைப்பட்ட கொள்கைகள் சார்ந்த அமைப்புகள் மூலமாகவும், தமிழ்நாட்டில் வெளிப்படுகின்ற போராட்டங்கள் மற்றும்  வன்முறைகள் பற்றிய ஆய்வுகள், தமிழ்நாட்டின் சமூக ஆற்றல்கள் தமிழ்நாட்டை ஆக்கபூர்வமாக வளர்க்கும் திசையில், அல்லது அழிவுபூர்வ திசையில் பயணிக்கச் செய்கின்றனவா என்பதைத் தெளிவுபடுத்தும்.

ஒரு சமூகத்தில் உள்ள மனிதர்களின் மன‌ங்களில் உள்ள தேவைகளும், அத்தேவைகளின் அடிப்படையில் எழும் ஈடுபாடுகளும், அவற்றின் அடிப்படையில் வெளிப்படும் செயல்பாடுகளும்  சமூக செயல்நுட்பத்தில் அமைதியான சமநிலையில் (peaceful equilibrium)  இருந்தால், அந்த சமூகத்தில் போராட்டங்களுக்கும், வன்முறைகளுக்கும் இடம் இருக்காது. அதற்கு மாறாக, போராட்டங்களும், வன்முறைகளும் வெடித்தால்,  அந்த சமூக செயல்நுட்பத்தில் அமைதியற்ற சமநிலை (turbulent equilibrium)  இருப்பது வெட்ட வெளிச்சமாகிவிடும். அந்த போராட்டங்களின், வன்முறைகளின் பண்புகளை ஆராய்வதன் மூலம், அந்த சமூக செயல்நுட்பத்தில் உள்ள அமைதியற்ற சமநிலையின் பண்புகளை ஆராய முடியும். அதிலிருந்து அந்த சமூகத்தின் தேவைகள், ஈடுபாடுகள் போன்றவற்றிற்கும், சமூக செயல்நுட்பத்திற்கும் இடையிலான‌ முரண்பாடுகள் பற்றி ஆராய இயலும்.

மனித செயல்பாடுகளின் தூண்டுகோலாக மனிதர்களின் மனங்களில் உள்ள ஈடுபாடுகள் இருக்கின்றன. சம்பந்தப்பட்ட மனிதர்களின் ஈடுபாடுகளில் உள்ள அறிவுபூர்வமான கூறுகளும், உணர்வுபூர்வமா கூறுகளும் அவர்கள் பங்கேற்கும் போராட்டங்களிலும், வன்முறைகளிலும் வெளிப்படும். உணர்வுபூர்வ கூறுகள் போராட்டங்களில் பங்கேற்பதற்கான சமூக ஆற்றலின் வலிமையையும்,அறிவுபூர்வ கூறுகள் போராட்டங்களின் வழிமுறைகளையும்  பண்புகளையும் தீர்மானிக்கின்றன.

எனவே போராட்டங்களிள் ஈடுபட்டுள்ளோரின் பங்கேற்பு வலிமையும், வன்முறைகள் உள்ளிட்ட போராட்ட வழிமுறைகளும், அவற்றின் பண்புகளும், அவர்களின் அறிவுபூர்வ கூறுகளையும், உணர்வுபூர்வ கூறுகளையும் கண்டுபிடிக்கத் துணை செய்பவையாகும். இத்தகைய ஆய்விற்கு சம்பந்தப்பட்ட சமூகத்தின் கடந்த காலமும் முக்கியமாகும். அவ்வாறு கடந்து காலத்திற்கும் நிகழ்கால போராட்டங்களுக்கும் இடையிலான தொடர்பு விளங்கினால் தான், அடுத்து நடக்க இருப்பவைகளைச் சரியாகக் கணிக்க இயலும். அதற்கு இசை தொடர்பாக சிலப்பதிகாரம் வெளிப்படுத்தியுள்ள கீழ்வரும் இசைத் தொழில் நுட்பம் வழி காட்டும்.

'வந்தது வளர்த்து வருவது ஒற்றி' (அரங்கேற்றுக் காதை 65) என்பதே அந்த தொழில்நுட்பமாகும்.

ஒரு சமூகத்தின் கடந்த கால வளர்ச்சிப் போக்குகளில ஆக்கபூர்வமான கூறுகளும் அழிவுபூர்வமான கூறுகளும் கலந்திருக்கும். சமூக ஆற்றல் செயல்பாட்டில் இரண்டு வகைக் கூறுகளில் ஒன்றிற்கு ஆற்றல் பங்களிப்பு அதிகரிப்பினால், அவை வளர்ச்சிப் போக்குகளில் இருக்கும். சமூக ஆற்றல் செயல்பாட்டில் இரண்டு வகைக் கூறுகளில் ஒன்றிற்கு ஆற்றல் பங்களிப்பு அதிகரித்து வருமானால், பிறிதொன்றுக்கு  ஆற்றல் பங்களிப்பு வறண்டு வரும். அதனால் பிறிதொன்று கூறுகள்  பலகீனமாகி மடியும் போக்குகளில் இருக்கும். அந்த பலகீனமாகி மடியும் போக்குகளில் பிணைத்துக் கொண்டு 'உற்சாகமாக' ஈடுபடும் மனிதர்களின் போராட்டங்களும் வன்முறைகளும் விட்டில்பூச்சிகளாகவே அமையும். அவ்வாறு அழிவுபூர்வ கூறுகள் மடிந்த பின்பு தான், ஆக்கபூர்வமான கூறுகளின் வளர்ச்சியானது வெளிப்படையாகும்.  இந்த செயல்நுட்ப அடிப்படையிலேயே, தனிமனிதரும்,அமைப்புகளும், சமூகமும் பயணிக்கின்றன.  

ஒரு தனி மனிதரும் சரி, சமூகத்தை வழி நடத்தும் வலிமையுள்ளவர்களும் சரி, அவர்கள் வாழ்வின் பயணத்தில், மேலேக் குறிப்பிட்ட செயல்நுட்ப அடிப்படையில்,  ஒவ்வொரு கட்டத்திலும் ஒன்றுக்கும் மேற்பட்ட திசைகளில் வழிகளானது, அவரவரின் அறிவு அனுபவத்தைப் பொறுத்து, அவர்களின் பார்வைகளில் படும். அவர் எந்த திசையில் உள்ள வழியைத் தேர்ந்தெடுத்துப் பயணிக்கிறார்களோ அந்த பயணத்தின் முடிவில் அதற்கான நன்மை, தீமைகளை அனுபவிப்பதிலிருந்து தப்ப முடியாது. ஒரு சமூகம் நன்மைகளை அனுபவிக்கும் போது, சமூகத்தை வழி நடத்திய தலைவர்கள் பாராட்டு பெறுகிறார்கள். அந்த சமூகம் மிக மோசமான விளைவுகளை அனுபவிக்கும்போது,அந்த தலைவர்களை உணர்வுபூர்வமானவர்கள் கண்டிப்பார்கள்.அந்த தலைவர்களின் பெயரில் பிழைப்பு நடத்துபவர்களும், அவர்களின் உணர்வு போதைத் தொண்டர்களும் அதை 'துரோகம்' என்று கூக்குரல் எழுப்புவதும் உண்டு.அந்த மோசமான விளைவுகளிலிருந்து சமூகத்தைக் காப்பாற்ற நினைப்பவர்கள், அந்த தலைவர்கள் எந்தெந்த கட்டத்தில் என்னென்ன தவறுகள், தமது பயணத்தில், புரிந்தார்கள் என்பதை திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும் ஆராய்வார்கள். 

விருப்பு வெறுப்பற்று ஆய்வது என்பது 'திறந்த மனது'என்றும், தனக்கு தவறு என்றும், பொய்யானது என்றும் தெரிந்தும் அதை வாதத்தில் பயன்படுத்துவது 'அறிவு நேர்மையற்றது' என்றும் நான் விளங்கியுள்ளேன்.

மேலேக் குறிப்பிட்ட பின்னணியில் தமிழ்நாட்டில் நிகழ்காலத்தில் நடந்து வரும் போராட்டங்ளை இத்தகைய ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலம்  தமிழ்நாடு ஆக்கபூர்வமான திசையில் பயணிக்கிறதா? அழிவு பூர்வ திசையில் பயணிக்கிறதா? அழிவுபூர்வ திசையில் பயணித்தால், அதை எவ்வாறு ஆக்கபூர்வமாகப் பயணிக்க வைக்கலாம்? போன்ற கேள்விகளுக்கான விடைகளைப் பெறலாம். முதலில் தீபாவளிக்கு வெளிவந்துள்ள 'கத்தி' திரைப்படம் தொடர்பாக வெளிப்பட்ட போராட்டம், வன்முறைகள் தொடர்பாக வெளிவந்துள்ள கீழ்வரும் செய்திகள் அடிப்படையில் இந்த ஆய்வைத் தொடங்கலாம்.

செய்தி 1:

"கத்தி' படத்தைத் தயாரித்துள்ள லைகா நிறுவனத்துக்கும், இலங்கை அதிபர் ராஜபட்சவுக்கும் தொடர்பு இருப்பதாகக் கூறி, அந்தப் படத்துக்கும் லைகா நிறுவனத்துக்கும் தமிழ் அமைப்புகள், மாணவர் அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்து வந்தன. சில நாள்களாக தமிழ் அமைப்புகள் "கத்தி' திரைப்படத்தைத் தயாரித்த லைகா நிறுவனத்தின் பெயரை விளம்பரங்களில் இருந்து நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்திருந்தன. அவற்றின் வேண்டுகோளை ஏற்று படத்தின் விளம்பரங்களில் லைகா பெயரை நீக்க தயாரிப்பாளர்கள் ஒப்புக்கொண்டனர். எனவே, இந்தப் பிரச்னை சுமுகமாக முடிந்துவிட்டது. http://www.dinamani.com/cinema/2014/10/21

செய்தி 2:

சத்யம் திரையரங்கில் திங்கள்கிழமை இரவு 11.30 மணியளவில் அங்கு வந்த 30-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள், திரையரங்க வாயிலில் வைக்கப்பட்டிருந்த பேனர்களை கிழித்தெறிந்து, திரைப்படத்துக்கு எதிராக கோஷம் எழுப்பினர். மேலும் திரையரங்கின் மீது 3 பெட்ரோல் குண்டுகளை வீசிவிட்டு ஓடினர். http://www.dinamani.com/tamilnadu/2014/10/21

செய்தி 3:

சத்யம் தியேட்டரில் தாக்குதல் நடத்திய கும்பல் யார் என்று அங்குள்ள கண்காணிப்பு கேமரா மூலம் தெரியவந்தது. அவர்களது உருவம் கேமராவில் பதிவாகி உள்ளது. அதன் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தியதில் அவர்கள் பெரியார் திராவிடர் கழகத்தை சேர்ந்தவர்கள் என தெரியவந்தது.



மேலேக் குறிப்பிட்ட செய்திகள் அடிப்படையிலான ஆய்வு பற்றி அடுத்த பதிவில் பார்க்கலாம்.

No comments:

Post a Comment