Saturday, October 4, 2014

தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (5)

தமிழின் மரணத்திற்குப் பின், தமிழ்நாட்டில் தமிழர்கள்?


'2100 ஆம் வருடத்திற்குள் உலக மொழிகளில் 90% மறைந்து விடும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது' என்ற தகவலின் அடிப்படையில்,"  ‘மொழி பலகீனமாதல்’ (Language attrition http://en.wikipedia.org/wiki/Language_attrition) என்ற போக்கு தமிழைப் பொறுத்தமட்டில் அதிவேகமாக உள்ளது,இந்திய மொழிகளில் இந்த போக்கில் தமிழ் முதலிடத்தில் இருந்தால் வியப்பில்லை. அது உண்மையென்றால் , 2100க்கு முன்னேயே இந்திய மொழிகளில் மரணமடைவதில் தமிழ் முதல் இடத்தைப் பிடித்தாலும் வியப்பில்லை." என்பதையும் இந்தத் தொடரின் முதல் பதிவில் பார்த்தோம். 
 
அவ்வாறு தமிழ் மரணமடைந்த பின், தமிழ்நாட்டில் தமிழர்கள் எப்படி இருப்பார்கள்?

இந்த கேள்விக்கான விடையைப் பெற, தமிழ்நாட்டில் வாழும் ஆங்கிலோ இந்தியர்கள் இருக்கிறார்கள்.அவர்களைப் போலவே, தமிழ் வேரற்ற, ‘திரிந்த மேற்கத்தியப் பண்பாட்டு நோயில் சிக்கிய‌'‌  'தமிங்கிலிசர்களாக' தமிழர்கள் தமிழ்நாட்டில்  வாழ வாய்ப்பிருக்கிறது.

அப்படிப்பட்ட வாழ்க்கைப் போக்குக்கான முளைகள் இப்போதே அரும்பத் தொடங்கி விட்டன. கிராமங்களில் கூட விளையாட்டுப்பள்ளி முதலே குழந்தைகளை ஆங்கில வழியில் படிக்க வைக்கும் போக்கு , அதிவேகமாக வளர்வதும், தங்கள் குழந்தைகள் பேசும் ஆங்கிலத்தைக் கேட்டு, அது புரியாவிட்டாலும், அதைப் பெருமையாகக் கருதி பெற்றோர்கள் மகிழ்வதும் தமிழ்நாட்டில் வளர்ந்து வருகிறது.  அது போலின்றி , 'வறுமையின் காரணமாக' அரசுப் பள்ளிகளில் படிக்கும் குழந்தைகளும், அவர்களின் பெற்றோர்களும் தமிழ் வழியில் படிப்பதால் , தாழ்வு மனப்பான்மையில் உழல்வதும் அதிகரித்து வரும் நாடாகத் தமிழ்நாடு இருக்கிறது. 

பேச்சு, நடை,உடை, பாவனைகளில்  ‘திரிந்த மேற்கத்தியப் பண்பாட்டு நோய்' இப்போதே கிராமங்களில் வேகமாக வளரத் தொடங்கியுள்ளது. 'ஆங்கிலத்தில் பேசுவதே என் வாழ்க்கையின் இலட்சியக் குறிக்கோள்' என்று குக்கிராமத்தில் பள்ளி இறுதி வகுப்பு முடித்து, -  சில வருடங்களுக்கு முன், மதுரை அருகே சிவானந்த ஆசிரம சமையல் கூடத்தில் பணியாற்றிய பெண், பேருந்தில் என்னை ஏற்றி விட காத்திருந்த வேளையில்-   தெரிவித்தது,  என்னால் மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது.

தமிழ்நாட்டில் உள்ள இந்த நோயானது, அமெரிக்காவில் தேனீக்கள் அழிவை ஏற்படுத்தி வரும்  ‘கூட்ட அழிவு நோய்’[ “colony collapse disorder” (CCD)] என்பதுடன் ஒப்பிடக்கூடிய அளவில் உள்ளது. அமெரிக்காவில் பல மாகாணங்களில் தேனீக் கூட்டங்களைச் சுவடின்றி அழித்த அந்த நோயைப் பற்றிய காணொளி கீழே:

உலக அளவில் கடந்த 15 வருடங்களாக  விஞ்ஞானிகளுக்குச் சவாலாக விளங்கிய அந்த நோயின் மூலக் காரணம் கண்டுபிடிக்கப்பட்டது பற்றிய தகவல் கீழே:

‘neonics’  என்ற பூச்சிக் கொல்லி மருத்து செடிகளின் வழியாக மலர்களில் உள்ள தேனில் கலந்து, அந்த தேனைப் பருகும் தேனியின் உடலில் நுழைகிறது. அதன் மூலம் நரம்பு நச்சுத் தன்மையால் பாதிக்கப்பட்டு, தேனீக்கள் கூட்டம் கூட்டமாக அழிந்தன.

மனித சமூக அமைப்பில் இரத்த நாளங்களாக சமூக பிணைப்புகளும், நுண்ணிய இரத்த நாளங்களாக சமூக இழைகளும் உள்ளன. சமூக ஆற்றல் செயல்பாடு என்ற இரத்த ஓட்டத்தில் லாப நட்டம் பார்க்கும் 'கள்வர்'என்ற நோய்க்கிருமி நுழைந்த பின், சமூக இரத்தமே அந்த நோயில் பண்புமாற்றம் அடைந்த பின், அந்த சமூகத்தில் மொழியும், மொழி சார்ந்த பாரம்பரியமும், பண்பாடும் அழிவதில் வியப்புண்டோ? அந்த நச்சு நோயின் விளைவாக திரிந்த மேற்கத்திய பண்பாட்டு நோயில் சிக்கி, ஆங்கிலத்தில் திரிந்த தமிழ் பேசும் நோயாளிகளாக தமிழர்கள் மாறுவதில் வியப்புண்டோ? தேனீக்கள் சுவடின்றி அழிந்தது போல, தமிழும், தமிழ்ப் பாரம்பரியமும் பண்பாடும் சுவடின்றி அழிவதில் வியப்புண்டோ? ‘தமிழ்க் கூட்ட அழிவு நோய்’ -  “ Tamil colony collapse disorder” (TCCD)”  என்று இந்த நோயை அடையாளப் படுத்தலாம். ‘கூட்ட அழிவு நோய்’[ “colony collapse disorder” (CCD)]  என்ற நோய் தேனீக்களைக் கூட்டம் கூட்டமாய் சுவடின்றி அழித்தது. ‘தமிழ்க் கூட்ட அழிவு நோய்’ -  “ Tamil colony collapse disorder” (TCCD)” என்ற நோய் தமிழையும், தமிழ்ப் பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் சுவடின்றி அழிக்க உள்ளது.

தமிழின் மரணப் பயணத்தைத் தடுத்து நிறுத்த வேண்டுமானால், ‘தமிழ்க் கூட்ட அழிவு நோய்’ -  “ Tamil colony collapse disorder” (TCCD)” எதிர்ப்பு முயற்சிகளில் தாமதமின்றி ஈடுபட வேண்டும். அத்தகைய முயற்சிகளுக்குத் துணைபுரியக் கூடிய கருத்துக்களை முந்தையப் பதிவில் பார்த்தோம்.நீண்ட நெடிய பாரம்பரியமும், அறிவுச் செல்வங்களும் உள்ள  தமிழின் பலத்தை நம்பி மேற்கொள்ளப்படும் அம்முயற்சிகள் வெற்றி பெறும் என்று நம்புவோம்.

No comments:

Post a Comment