Sunday, July 5, 2015


தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize) (8)



காங்கிரசிலிருந்து திராவிட இயக்கம் நோக்கி, இடம் பெயர்ந்ததா, அரசியல் நீக்க‌ உணர்ச்சிபூர்வ தனிநபர் விசுவாசம் ?


Note: Due to blogger tech problems, replace ‘.in’  in the web address by ‘.com’, if the link does not open in the new window.


'திராவிடர் , திராவிட, தமிழர்' அடையாளச் சிதைவிற்குப்பின், தமிழ்நாட்டின் பொது வாழ்வில், 'அதிவேகமாக', 'இழிவின் இலக்கணமாக' வளர்ந்த, 'சுயநல பேய்களிடம்', தமிழ், தமிழ் உணர்வு ஆகியவை சிறைபட்டதா? 'யார் தமிழர்?' என்ற குழப்பத்துடன் முன்வைக்கப்பட்ட,  'இனமானம்' அவர்களுக்கு கவசமானதா?  அந்த கவசத்தில் மனசாட்சியின்றி, குடும்பம், நட்பு உள்ளிட்ட உறவுகளை 'வியாபாரமாக்கும்', புதிய பாணி விபச்சார, 'சுயநலப் பேய்கள்' தமிழ்நாட்டில் 'புதிதாக', 'அதி வேகமாக' வளர்ந்தார்களா? அத்தகையோரின் செல்வாக்கில், பாரம்பரியம், பண்பாடு, குடும்பம் உள்ளிட்டவற்றில், ஒழுக்கநெறிகள்  எந்த அளவுக்கு சீரழிந்துள்ளன‌வோ, அந்த அளவுக்கு தமிழ் இலக்கண நெறிகளும், உச்சரிப்பு நெறிகளும் சீரழிந்துள்ளனவா?' என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம். தமிழ்நாட்டில், பாரம்பரியம், பண்பாடு, குடும்பம் உள்ளிட்டவற்றில், ஒழுக்கநெறிகள் சீரழிந்ததே, 'சூது கவ்வும்', 'ஜிகிர்தண்டா', 'சதுரங்க வேட்டை', 'காக்கா முட்டை' போன்ற திரைப்படங்களுக்கான, கதைக்களங்கள் உருவானதற்கு காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

1857 முதல் இந்திய விடுதலைப் போர் வெற்றி பெற்றிருந்தால், அதன்பின், தமிழ்நாடு பல மன்னர்கள் ஆட்சியில் இருந்திருக்கும் என்பதையும், 'தமிழர்' என்ற அரசியல் அடையாளத்திற்கான தேவைக்கு, வாய்ப்பு இருந்திருக்காது என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். ('தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize) (3); 'திராவிடர்'  'இன‌' அடையாளம் , 'அழிவுபூர்வ' சமூக தளவிளைவினை  (Destructive Social Polarization)  அடித்தளமாகக் கொண்டதா?; https://tamilsdirection.blogspot.com/2015/06/normal-0-false-false-false-en-us-x-none_11.html )   

தமிழ்நாட்டில் இன்று, சமூகத்தில் வெளிப்படும் -அடையாளச்சிதைவு, அரசியல் நீக்கம் (depoliticizing)  போன்ற, இன்னும் பல‌-  சீரழிவுகள் வளர்ச்சிக் கட்டத்தில் உள்ளனவா? உச்சத்தில் உள்ளனவா? உச்சத்தில் இருந்தால், அவற்றின் வீழ்ச்சிக்கு வித்தாக, முளைவிட்ட‌ போக்குகள் யாவை? என்ற கேள்விகளுக்கான தெளிவான விடைகளை பெற, அந்த சீரழிவுகள் எப்போது, எந்த சமூக சூழலில் முளை விட்டது? என்ற ஆய்வை, விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி வைத்து, திறந்த மனதுடனும், அறிவுநேர்மையுடனும், முயற்சி செய்ய வேண்டும். அம்முயற்சியில் ஈடுபடும் முன், ' கருத்து கறுப்பு - வெள்ளை பார்வை குறைபாடு நோயில்' (Social Colour Blindness)  நாம் சிக்கியுள்ளோமா? இல்லையா? என்ற சுயவிமரிசனத்திற்கு நம்மை உட்படுத்திக் கொள்வது அவசியமாகும் ('கறுப்பு வெள்ளை (அல்லது சிகப்பு) பாதிப்புகளிலிருந்து விடுபடுவோம்' ; https://tamilsdirection.blogspot.com/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html)

1857 விடுதலைப் போர் தோல்வியடைந்த பின், வெள்ளைக்காரர்கள் ஆதரவுடன், காங்கிரஸ் கட்சி துவங்கப்பட்டது. பல வருடங்கள் வரை, 'இந்திய தேசிய' அரசியல் அடையாளத்தோடு தொடர்புடைய காங்கிரஸ் மாநாட்டில்,  முதலாவதாக, 'ராஜ விசுவாச' தீர்மானங்கள் நிறைவேற, 'இந்தியர்' என்ற அரசியல் அடையாளம் தோன்றி வளர்ந்தது. தமிழ்நாட்டு 'இந்துத்வா' கட்சிகளில், எச்.ராஜா போன்றவர்கள், பெரியார் ஈ.வெ.ராவை 'தேச துரோகி' என்று அழைத்த அளவுகோலின்படி, 'இந்தியர்' என்ற அரசியல் அடையாளமானது, 'தேச துரோக'மாக முளைவிட்டு வளர்ந்து, பின் எப்போது,  அந்த  பலகீனப் போக்கிலிருந்து விடுபட்டு, 'தேசப் பற்றாக' மாறியது?  என்ற கேள்வி எழுகிறது. அந்த போக்கில், தமிழ்நாட்டில் காந்தி, ராஜாஜி போன்றோர் ஊக்குவித்த, அரசியல் நீக்க‌ (depoliticize) உணர்ச்சிபூர்வ  தனிநபர் விசுவாச போதையானது, எந்த அளவுக்கு தமிழ்நாட்டில் 'இந்தியர்' என்ற அடையாளத்தை பலகீனப்படுத்தி, வ.உ.சி போன்ற இணையற்ற தியாகிகள், மனம் வெதும்பி, 'இந்திய' விடுதலைப் போராட்டத்திலிருந்து ஒதுங்கி, பெரியார் ஈ.வெ.ராவை பகிரங்கமாக பாராட்டும் போக்கில் வெளிப்பட்டது? வ.உ.சி மறைவிற்குப்பின்,  பெரியார் ஈ.வெ.ரா 1944இல், அண்ணதுரையின் செல்வாக்கில், 'திராவிடர் கழகம்' தொடங்கி, அதன்பின் முளை விட்ட , 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளக் குழப்பங்களுக்கும், அதன் ஊடே, உணர்ச்சிபூர்வ 'தனிநபர் விசுவாச' போக்குகள் முளை விட்டு, வளர்ந்ததற்கும், காந்தியும் ராஜாஜியும் தமிழக அரசியலில் , ஏற்படுத்திய பாதகங்கள் காரணமா? என்பவையெல்லாம் ஆய்விற்குரியனவாகும்.

அந்தமான் பகுதியில் உருவாகும் எண்ணற்ற 'டென்சன்' (Tension) சலனங்களில், சில மட்டுமே, குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டிலங்களாக உருவாகும். அவற்றிலும் சில மட்டுமே, இடம் பெயர்ந்த பின், சந்திக்கும் வளிமண்டில போக்குகளுக்கு ஏற்ப, தமிழ்நாடு, ஆந்திரா, ஒடிசா, மேற்கு வங்கம் போன்ற மாநிலங்களைத் தாக்கும்,  புயலாக வடிவெடுக்கும்.

சமூக அரங்கில் முளைவிடும் புதிய கருத்துக்களும், அமைப்புகளும் , அது போலவே, சமூக சூழலில் குறைந்த அரசியல் காற்றழுத்த தாழ்வு மண்டிலங்களாகவும், அவற்றிலும் சில மட்டுமே,  சமூகத்தில்  இடம் பெயர்ந்த பின், சந்திக்கும் சமூக வளி மண்டில போக்குகளுக்கு ஏற்ப,  அரசியல் புயலாக வடிவெடுக்கும்.

இசை உள்ளிட்ட எந்த படைப்புகளிலும் சலனம் (movement) மூலம்,  ஒரு 'டென்சன்' (tension) தோற்றமாகி, அந்த 'டென்சன்'  தீர்வில் முடிவதும் (resolution), அது வெவ்வேறு கட்டங்களில் (phases)  தொடர்ந்து,  இறுதியில் கடைசி  தீர்வில் முடிவதும் (final resolution)  பொதுவான செயல்நுட்பம் ஆகும்.

அந்த படைப்பின் இலக்கு நேயர்களைக் (Target Audience) கருத்தில் கொண்டு, எதிர்பார்ப்பு, மற்றும் எதிர்பாரா திருப்பம் ஆகியவற்றை,  எந்த அளவுக்கு நேர்த்தியாக கையாளுகிறர்களோ, அந்த அளவுக்கு, அந்த நேயர்களிடம் அது வெற்றி பெறும்.

அண்மையில் வெளிவந்து, பெரும் வெற்றி பெற்றுள்ள 'காக்கா முட்டை' திரைப்படம்,  அதற்கு நல்ல உதாரணமா? என்ற ஆய்வு செய்யும் எண்ணம் எனக்குள்ளது.

சமூக இசையில் இலக்கு நேயர்களானவர்கள்,  அதே நேரத்தில் (simultaneous)   சமூக அரங்கில் (Social auditorium) , தத்தமக்குள்ள சமூக இடத்தையும், தத்தம் மனங்களில் உள்ள தேவைகளையும்(needs), ஈடுபாடுகளையும் (interests) பொறுத்து, சமூக‌இசைக் கலைஞர்களாகவும், சமூக இசை ரசிகர்களாகவும், இரண்டிலுமாக (two-in-one) இருக்கிறார்கள்.

இந்திய விடுதலைக்கு முன், தமிழ்நாட்டில், காங்கிரஸ் தலைவர்களின் 'யோக்கியதை' எவ்வாறு இருந்தது? என்ற ஆய்வுக்கு உதவும் சான்று வருமாறு.

"தலைவர்கள் வழி இனி நாட்டார் நடத்தலாகாது. அக்காலம் போய் விட்டது.  தலைவர்கள் உட்பகைமை விளைப்பதில் கண்ணுங் கருத்துமாயிருக்கிறார்கள். இனி நாட்டார், தலைவர்களை நடாத்த புறப்படுதல் வேண்டும்" திரு.வி.க 18 4 1928; தமிழ்ச்சோலை


1890 முதல் 1936 வரை , வ.உ.சியை மையமாகக் கொண்டு, தமிழ்நாட்டில் காங்கிரசில் காந்தி, ராஜாஜி போன்ற தனிநபர்களின் 'சுயநல அரசியல்' சலனம் தோற்றுவித்த, வ.உ.சி போன்றவர்களின் துயர வாழ்விற்கு காரணமான‌, 'தவறான' 'டென்சன்கள்'  ஆனவை, 1944இல் 'திராவிடர் கழகம்' தோன்றிய பின்,  புதிதாக அரங்கேறியிருந்த திராவிட இயக்கம் நோக்கி, சமூக‌ தொத்து நோய் செயல்நுட்பத்தில்,  பகுதியாக (partly)  இடம்பெயர்ந்து, உரம் பெற்று வளர்ந்து, அதில் விதை கொண்டிருந்த 'தனிநபர் விசுவாசம்' ஊக்கம் பெற்று, 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளச்சிதைவுடன், காங்கிரசில் 'சிற்றினமாக' கருதப்பட்டவர்கள், திராவிட கட்டத்தில் (Phase)  தீயினமாக வலிமை பெற்று வளர்ந்தார்களா? என்பதை ஏற்கனவே பார்த்தோம். ('நல்லினத்தி நூங்குந் துணையில்லை தீயினத்தின், அல்லற் படுப்பதூஉம் இல்’ - திருக்குறள் 460'; https://tamilsdirection.blogspot.com/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html  ) வ.உ.சி மறைவிற்கு, தமிழ்நாட்டு காங்கிரசில், இரங்கல் தீர்மானம் கூட நிறைவேற்றவில்லை, என்ற தக‌வலை ம.பொ.சி, தனது சுயசரிதையில் வெளிப்படுத்தியுள்ளார். அந்த அளவுக்கு, காந்தியின் தனிநபர் 'உணர்ச்சிபூர்வ' செல்வாக்கானது, பொதுவாழ்வு சீர்கேட்டிற்கு துணையாக‌ இருந்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அந்த 'பகுதி இடப்பெயர்ச்சியின்' காரணமாக, காங்கிரசில் தீய சக்திகள் பலகீனமாக, 1952க்குப்பின், காமராஜர் 'சமூகத்திற்கு வளர்ச்சியாக' வளர்ந்தாரா? தமிழ், பாரம்பரியம், பண்பாடுஆகிய ஆணிவேர்கள்  தமிழர்க்கு கேடேன்று ஒதுக்கியது காரணமாக‌ , சமூக ஆற்றல் ஊற்றுக்கண்களிலிருந்து பெரியார் அந்நியமாகி, ஏற்கனவே கையிருப்பில் இருந்த சமூக‌ நிலை ஆற்றலில் (social potential Energy)  அவரை பயணிக்க செய்ததா? அதன் விளைவாக, திராவிட போர்வையில் 'அந்த இடம் பெயர்ந்த' தீய சக்திகள் 'அதிவேகமாக' வளர்ந்து, 1967இல் ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுத்தார்களா? அந்த தீய சக்திகளின் 'தொகுவிசை' தலைவராக, தாம் வளர்ந்துள்ளதை அறிந்து, மனம் நொந்து அண்ணா மறைந்தாரா?

'தொகுவிசை' தலைவர்கள் முற்றிய கட்டத்தில் , 'திருந்தினாலும்' சிறைக்கைதி போலவே வாழ முடியும் என்பதற்கு, அண்ணா வரலாற்று சான்றாக மாறினாரா?

பெரியாரும், காமராஜரும் மக்களிடமிருந்து 'அந்நியமாகி' மறைந்தார்களா?

இன்றைய கட்டத்தில், திராவிட, தேசிய, கம்யூனிஸ்ட் உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் 'ஆதாயத் தொண்டர்கள்/ஆதரவாளர்கள்' பலத்தில், அந்த   கடைசி  தீர்வில் முடியும் (final resolution) போக்கில், பயணிக்கிறர்களா? என்பவையெல்லாம் ஆய்விற்குரியனவாகும்.

தமது சொகுசு வாழ்விற்காக, அவர்களை அண்டி பிழைப்பதில் மேல்நடுத்தட்டு, பணக்கார தமிழர்களில் பெரும்பாலோர் கவனம் செலுத்த, அரசியல் நீக்க (depoliticizing)  போக்கில், கட்சிகளின் தொடர்பில்லாமல், சாதாரண மக்கள்,  குறிப்பாக பெண்கள், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட தமது அடிப்படை பிரச்சினைகளுக்காக, வீதியில் இறங்கி போராடுவதும், திருடர்களையும், அச்சுறுத்தும் ரவுடிகளையும், 'போலீசையும்'  பிடித்து உதைத்து,  காவல் துறையில் ஒப்படைப்பதும்,  அனைத்து அமைதி வழிகளிலும் முயற்சித்தும், அரசு ஏமாற்றிய நிலையில்,  பெண்களே மதுக்கடைகளில் நுழைந்து, மது பாட்டில்களை உடைத்து நொறுக்கி, அக்கடைகளை  அரசு வேறு வழியின்றி அகற்ற வைப்பதும், இது போன்று தினமும் தமிழ்நாட்டில் நடப்பவையெல்லாம், தமிழக அரசியலின், நம்பிக்கையுட்டும், புதிய டென்சன்களின் அறிகுறிகளா?

'காக்கா முட்டை' வெற்றியும் அந்த அறிகுறிகளில் ஒன்றா? உலகில் பல இடங்களில் இன்று நடப்பது போல,  உள்ளுர் தொடங்கி, மாவட்ட அளவில் 'அரசியல் கொள்ளைக்காரர்களின்' சொத்துக்களை, மக்கள் பறிமுதல் செய்து, பொது காரியங்களுக்கு பயன்படுத்தும் காட்சிகள் அரங்கேறுமா? இன்று பெண்களே மதுக்கடைகளில் நுழைந்து, மது பாட்டில்களை உடைத்து நொறுக்கி, அக்கடைகளை  அரசு வேறு வழியின்றி அகற்ற வைப்பது,  அதற்கான ஒத்திகையா?

என்ற கேள்விகளுக்கான விடைகள், தமிழ்நாட்டில் அடுத்து அரங்கேற உள்ள 'சமுக இசையை' (social Music)  தீர்மானிக்கும் என்பது என் கருத்து.

சமூக ஒப்பீடு (social comparison)  நோயில் சிக்கி , திராவிட மனநோயாளிகளாக, 'எந்திரர்களாக' (robots) வாழ்பவர்களால், எந்த அளவுக்கு, சமூக இலக்கு நேயர்களாக (target audience) , சமூக இசையை ரசிக்க முடியும்? எந்த அளவுக்கு, சமூக இசைக் கலைஞராக, அந்த இசையில் ஆக்கபூர்வமான பங்களிப்பு வழங்க முடியும்? என்பது ஆய்விற்குரியது. 'காக்கா முட்டை' போன்ற படைப்புகளையும், குற்ற உணர்வின்றி, அவர்களால், எந்த அளவுக்கு உள்ளார்ந்து ரசிக்க முடியும்? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

இது தொடர்பாக, ஆதரவாகவும், எதிர்ப்பாகவும், அல்லது வேறு புதிதாகவும் உள்ள சான்றுகளை,  வாய்ப்புள்ளவர்கள் எனக்கு அனுப்புவதை வரவேற்கிறேன்.

(வளரும்)

No comments:

Post a Comment