Saturday, November 23, 2013



தமிழரின் அடையாளச் சிக்கலும், தாழ்வு மனப்பான்மையும் (1)


ஒரு மனிதரின் வாழ்க்கை நல்ல வழியில் பயணிப்பதும், கெட்ட வழியில் பயணிப்பதும் அவரின் வாழ்வியல் அடையாளத்தைப் பொறுத்தது. 

ஒரு மனிதர் எந்த நாட்டில், எந்த மொழி பேசும் எந்த  பகுதியில், எந்த மத/சாதி போன்ற குழுப் பிரிவில், பிறப்பதன் காரணமாக வரும் அடையாளக் கூறுகளுடன் அவரின் வாழ்க்கைப் பயணம் தொடங்குகிறது.

ஒருவரின் தாய்மொழி,நாடு, சாதி, மதம், இலக்கியம், இசை, ஓவியம் போன்ற நாட்டமுள்ள துறைகள்,போன்ற அவர் சம்பந்தப்பட்ட ஒவ்வொன்றும் அவரின் அடையாளக் கூறுகள் ஆகும். பிறந்து வளரத் தொடங்கியது முதல் சாகும் வரை, பிறப்பின் காரணமாக வந்த அடையாளக் கூறுகளுடன், அவரின் வளர்ச்சியில் பெரும் அறிவு, அனுபவ அடிப்படையில் பல கூறுகள் சேரலாம், சில கூறுகள் வலுவிழக்கலாம்.

படித்தவருக்கு அவரின் ஆர்வத்தைப் பொறுத்து அறிவை வளர்த்துக் கொள்ளவும், அதற்கேற்றார்ப்போல் தமது அடையாளக் கூறுகளை தமது நல்வாழ்விற்கு உதவ வளர்த்தெடுக்கவும் முடியும். அதிலும் தமிழ் மொழி மட்டுமே தெரிந்து கிணற்றுத்தவளை போல் வாழ்பவர்களை விட, ஆங்கிலமும் இன்னும் பிறமொழிகளும் தெரிந்தவர்களுக்கு தமது அடையாளக் கூறுகளை நன்கு வளர்த்தெடுக்க வாய்ப்புகள் அதிகம்.

புற செல்வாக்கிற்கு (External influence) அடையாளக்கூறுகள் உள்ளாவதற்கும் வாய்ப்புண்டு.

உதாரணமாக வெள்ளைக்காரர்கள் இந்தியாவை ஆளத் தொடங்கியதும், இந்தியாவின் பாரம்பரியத்தை இந்தியர்களே கீழாக நினைக்கும் வகையில் பல காரியங்களைச் செய்தார்கள்.( அவர்களை விட உயர்ந்த தொழில் நுட்பமும், கல்விமுறையும் இந்தியாவில் இருந்ததை எப்படி சிதைத்தார்கள் என்பதை அரிய சான்றுகளுடன் வெளிப்படுத்திய புத்தகம் DHARAMPAL • COLLECTED WRITINGS Volume I  Claude Alvares முன்னுரையுடன்)

வெள்ளையர்கள் தம்மைவிட நாகரிகத்தில் கீழானவர்களாக இந்தியர்களை நடத்தி, இந்தியர்களிடம் ஒரு தாழ்வு மனப்பான்மையை (Inferiority Complex) வெற்றிகரமாக விதைத்தார்கள். இந்தியரின் அடையாளக் கூறுகளில் இது மிகப் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.

இத்தாழ்வு மனப்பான்மையின் பாதிப்பின் அளவைப் பொறுத்து,பாதிப்புக்குள்ளான நபரின் உள்ளத்தில்,  அதன் தொடர்விளைவாக ஒரு 'உயர்வு' மனப்பான்மை (superiority complex) வெளிப்படும். தமது குடும்பப் பாரம்பரியம், சாதி, மதம், மொழி போன்ற அவரின் அடையாளக் கூறுகள் மற்றவர்களுடையதைவிட உயர்ந்தது என்ற உணர்வு பூர்வமான நிலைப்பாட்டிற்கு அந்த நபர் அடிமையாவார் என்பதைக் கீழ்வரும் ஆய்வு உணர்த்துகிறது.

"We should not be astonished if in the cases where we see an inferiority [feeling] complex we find a superiority complex more or less hidden. On the other hand, if we inquire into a superiority complex and study its continuity, we can always find a more or less hidden inferiority [feeling] complex."- Ansbacher, Heinz L., and Ansbacher, Rowena R., ed. The Individual Psychology of Alfred Adler - A Systematic Presentation in Selections from his Writings. New York: Basic Books Inc., 1956 (page 259).

மறந்த பிரதமர் நேரு உள்ளிட்டு, இந்தியாவில் மன்னர்கள் உள்ளிட்டு பல முக்கிய நபர்கள் வெள்ளைக்கார பெண்களை நண்பர்களாக, மனைவியாக கொண்டதற்கு மேலே குறிப்பிட்டது காரணமாக இருக்கலாம். தமிழ்நாட்டில் பல முற்போக்கு இயக்கங்களில் ஆழ்ந்த அறிவில்லாமல், மேலோட்டமாக தெரிந்தவைகளை சாதாரண மக்களிடம் வெளிப்படுத்தி,  தம்மை உயர்ந்தவராக காட்டிக் கொள்பவர்கள் பலர் இருப்பதற்கும் இதுவே காரணமாக இருக்கலாம்.

மேலே குறிப்பிட்ட பின்னணியில் தான் தமிழருக்குள்ள அடையாளச் சிக்கலை விளங்கிக் கொள்ள முடியும்.

வெள்ளைக்காரன் வருவதற்கு முன் தமிழ்நாடு முழுவதும் ஒரே மன்னரின் ஆட்சியில் இருந்தது கிடையாது. சங்க இலக்கியங்களில் 'தமிழ்' என்ற சொல் இருக்கிறது. 'தமிழன்' என்ற சொல் கிடையாது. பல தமிழறிஞர்கள் பழந்தமிழ் இலக்கியங்களை ஆராய்ந்து உருவாக்கிய தமிழ் லெக்சிகனில் 'தமிழர்' என்ற சொல்லுக்கு 'விளிம்பில்லாத தீர்த்த பாத்திரம்' என்ற பொருள் தான் உள்ளது. ஆன்மீகத் தமிழுக்கு முக்கியத்துவம் தந்த பக்தி இலக்கியமான தேவாரத்தில் 'தமிழன்' என்ற சொல் இடம் பெற்றுள்ளது.மொழி அடிப்படையிலான அச்சொல் நாட்டின் அடிப்படையில் குறிப்பிடப்படவில்லை.

தாம் குடியிருந்த பகுதியின் அரசர் சார்பான ( சேர, சோழ, பாண்டிய மன்னர்கள் போன்ற பல) அரசியல்  அடையாளங்கள் அடிப்படையில் அரசியல் அடையாளம் இருந்தது. தமிழ்நாட்டில் இந்திய விடுதலைக்குப் பின்னும் புதுக்கோட்டை, இராமநாதபுரம் போன்ற சமஸ்தானங்களில் கணிசமான மக்களிடம் தமிழர்/இந்தியர் போன்ற அரசியல் அடையாளங்களை விட, 'இராஜ விசுவாசம்' என்ற அடையாளமே வலுவாக இருந்தது. சமஸ்தானங்கள் இந்தியாவுடன் இணைக்கப்பட்ட பின்னும், அதை எதிர்த்து பொராட்டங்களும் சில காலம் நடந்து ஓய்ந்த.

ஒரு மனிதருக்குள்ள அடையாளக் கூறுகள் இயக்கத்தன்மையில் செயல்படுவதாகும். அவர் பிறந்தது முதல் சாகும் வரை அவரைச் சுற்றி குடும்பத்திற்குள்ளும், சமூக வரலாற்றிலும் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் அந்த இயக்கத் தன்மை மீது செல்வாக்கு செலுத்தும். 'தமிழர்' என்ற அடையாளம் நவீன வரலாற்றில் (Modern history) , அதன் தோற்றத்திலேயே சிக்கலுடன் தொடங்கியதை அடுத்து பார்ப்போம்.

----------------------------------------------

Friday, November 22, 2013

   எரிகின்ற குடிசையில் சிகிரெட்டுக்கு நெருப்பா?

புதிய தகவல்கள் மற்றும் சான்றுகளின் அடிப்படையில் தமது நிலைப்பாடுகளைத் தொடர்ந்து திறனாய்வு செய்து, தவறு என்று பட்டதை, தாமதமின்றி, தனது 'இமேஜ்' (image) என்ன ஆகும் என்பது பற்றி கவலைப்படாமல், தனது தவற்றினைப் பகிரங்கமாக ஒப்புக் கொண்டு, திருத்தி வாழ்ந்த தலைவர் உலகிலேயே பெரியார் ஈ.வெ.ரா அவர்கள் மட்டுமே -  ‍ எனது அறிவுக்கு எட்டியவரை.

கொள்கைகளுக்கு அப்பாற்ப்பட்டு, தேக்க நோய்க்கு (stagnation sickness) உள்ளாகாமல், சாகும் வரை வளர்ந்து கொண்டே வாழ விரும்புபவர்கள், பின்பற்றி பயன்பெரும் வாழ்வியல் அணுகுமுறையும் அதுவே.


பெரியாரின் அந்த பண்பினை பெரியார் பற்றாளர்கள் அகவயப்படுத்தி , அதை தம் வாழ்வில் பின்பற்றுகிறார்களா அல்லது தமது சுயநல வாழ்விற்கு பெரியாரைப் பயன்படுத்திக் கொள்கிறார்களா என்பது அவரவர் மனசாட்சிக்கே வெளிச்சம். பெரியாருக்குப் பின் தமிழ்நாட்டில் வெளிப்பட்டு வரும் பாதகமான போக்குகளை அடையாளம் கண்டு சரி செய்யவில்லையானால், தமிழ்நாட்டின் வருங்காலம் மிகவும் மோசமாகிவிடும்.


திருச்சி ‘பெரியார் மையம்’ செயல்பட்ட காலத்தில், நானறிந்த வரையில், இலங்கைப் பிரச்சினைக்கு  தமிழ்நாட்டில் யாரும் தீக்குளித்தது கிடையாது ‍– இலங்கையில் அவர்கள் பிரச்சினைக்கு இன்றுவரை யாரும் தீக்குளித்தது கிடையாது. அதன்பின், குறிப்பாக கடந்த சில வருடங்களில் அப்பிரச்சினைக்கு தமிழ்நாட்டில் திக்குளித்தல் தொடர்ந்து நடைபெறுவது (எனது ஆராய்ச்சிகளில் குவிந்து கவனம் –focus- செலுத்த முடியாத அளவுக்கு, ) எனது கவனத்தை ஈர்த்தது.


அறிவுக்கு சம்பந்தமில்லாமல், குப்பன் சுப்பன் வீட்டு, முதல் தலைமுறையாகப் படித்த இளைஞர்களை உசுப்பேற்றி தீக்குளித்த வைத்து, அததகைய 'தியாகத்தை' எந்த தமிழ்/திராவிட  இயக்க தலைவர்களோ, தமிழறிஞர்களோ, வசதியான தமிழர்களோ, இலங்கையிலிருந்து அகதிகளாக தமிழ்நாட்டுக்கு வந்து 'ஏழ்மையிலிருந்து மீண்டு வசதியான' இலங்கைத் தமிழர்களோ, அவர்களின் குடும்பப் பிள்ளைகளோ பின்பற்றாமல் 'எச்சரிக்கையாக' வாழும் 'புத்திசாலி'த் தமிழர்கள் உள்ள நாடாக‌ தமிழ்நாடு இருக்கிறது.


1983 இனப் படுகொலைக்குப் பின், தமிழ்நாட்டில் விடுதலைப் புலிகள் மட்டுமின்றி, டெலோ, பிளாட், ஈரோஸ், இ. பி.ஆர்.எல்.ஃப் உள்ளிட்ட பல ஈழ விடுதலைக் குழுக்கள் தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் தத்தமக்கான தமிழ்நாட்டு ஆதரவாளர்களுடன் செயல்பட்டனர். மற்ற குழுக்களின் தலைவர்களையும், பயிற்சி பெற்ற போராளிகளையும் ஈவிரக்கமில்லாமல் ( சரணடைந்தவர்களைக் கூட) சுட்டுக் கொன்று, தமிழ்நாட்டில் ஒரே ஈழ விடுதலை இயக்கமாக விடுதலைப் புலிகள் வெளிப்பட்டார்கள். முன்பு மற்ற குழுக்களின் ஆதரவாளர்களாக செயல்பட்டவர்களில் பலர் பின்னர் விடுதலைப் புலி ஆதரவாளர்களாக மாறினர். மற்ற குழுக்கள் எல்லாம் 'துரோகிகள்' என்று விடுதலைப் புலிகள் முத்திரைக் குத்தி ஒழித்ததை சரி என்று உணர்ந்து மாறினார்களா? அல்லது சுயலாபத்திற்கு மாறினார்களா என்பது அவரவர் மனசாட்சிக்கே வெளிச்சம்.


முள்ளி வாய்க்கால் அழிவிற்குப் பின்னர் இன்று வரை பாடங்கள் கற்று, தவறுகளைத் திருத்தி பயணம் செய்யும் நோக்கில், விடுதலைப் புலிகள் உள்ளிட்ட ஈழ விடுதலைக் குழுக்களின் செயல்பாடுகள் திறந்த மனதுடனான விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டதாக தெரியவில்லை. மாறாக மீண்டும் முள்ளிவாய்க்காலுக்கான உணர்வுபூர்வ திசையிலேயே 'தமிழ் உணர்வாளர்கள்' செயல்படுவதாகத் தான் தெரிகிறது.( குறிப்பு கீழே )


முள்ளிவாய்க்கால் நடந்த மறுவருடம் 'மாவீரன் நாள்' அன்று யாழ்பாணத்தில் 'ரஜினி' திரைப்படம் 'ஹவுஸ் புல்' ஆனது உண்மையா? இன்றும் போரில் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கட்டிட, சாலையிடும் உடலுழைப்புப் பணிகளில் சிங்களவர்கள் தானே பெரும்பாலும் (தமிழ்நாட்டில் உள்ள வடநாட்டினரைப் போல) உழைப்பது உண்மையா?  வெளிநாட்டு வேலைக் கனவு, பணம் தமிழ்நாடு மற்றும் இலங்கையிலுள்ள தமிழ் இளைஞர்களை சோம்பேறியாக்கி வருவது உண்மையா?

உடலுழைப்பு,அறிவு உழைப்பு சோம்பேறி நோயில் சிக்கி, பாரம்பரிய மதிப்பீடுகளிலிருந்து விலகி, திரிந்த மேற்கத்திய ஒழுக்கத்துடன், சினிமா கனவு போன்ற பலவகையிலான கனவுகளுடனும் இளைஞர்களில் கணிசமானோர் பயணிக்கின்றனர். முதல் தலைமுறையாகப் படித்த கிராம ஏழைக் குடும்ப இளைஞர்களில் சிலர் மட்டுமே 'தமிழுணர்வு' போதையில் சிக்கி, தீக்குளித்தல், போராடுதல் போன்றவற்றில் ஈடுபட்டனர். அவர்களின் எண்ணிக்கையும் வேகமாக குறைந்து வருகிறது. நல்ல குடும்பப் பின்னணியில் படித்த இளைஞர்களில் கணிசமானோர் 'இந்திய நாட்டுப் பற்றில்' சிந்திக்கத் தொடங்கியுள்ளனர் என்பதைக் கீழ்வரும் தகவல் உளர்த்துகிறது.

குவார்ட்டர், பிரியாணி, செலவுக்குப் பணம் என்ற முறையில் பெருங்கூட்டம் கூட்டப்பட்டு வந்த தமிழ்நாட்டில், அவையெல்லாம் இல்லாமல், நுழைவுச் சீட்டு பண‌ம் கொடுத்து வாங்கி, அவற்றை விட பெரிய கூட்டம் திருச்சியில் மோடிக்கு கூடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அக்கூட்டத்தில் பெருமளவு படித்த இளைஞர்களும், பெண்களும், குடும்பங்களும் இருந்ததும் கவனிக்கத் தக்கது. மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு பா.ஜ.கவிலேயே கணிசமான எதிர்ப்பு வெளிப்பட்ட சூழலில், தமிழ்நாட்டில் வெளிப்பட்ட  இந்த புதிய போக்கு இந்தியாவின் கவனத்தையே ஈர்த்தது.

இந்த புதிய போக்குகளைப் பற்றி கவலைப் படாமல், தமது நிலைப்பாடுகளைத் தொடர்ந்து திறனாய்வு செய்யும் பெரியார் வழியில் செல்லாமல், தமது கடந்த கால 'உணர்வுபூர்வ' திசையிலேயே பயணிக்கும் தமிழுணர்வாளர்கள் தமிழ்நாட்டு பொதுமக்களிடமிருந்தும், படித்த இளைஞர்களிடமிருந்தும் வேகமாக அந்நியப்பட்டு வருவதாக எனக்குத் தெரிகிறது. 


அடுத்து குழந்தைகளின் அடிப்படைக் கல்வி தாய்மொழியில் இருந்தால் தான், அக்குழந்தைகளின் மூளையில் புலன் உணர்வு வளர்ச்சி நன்றாக இருக்கும் என்றும்,தாய்மொழிக் கல்வி என்பது அக்குழந்தை வளரும் சூழலில் உள்ள தாய்மொழிப் பண்பாட்டுடன் தொடர்புடையது என்றும் உலகில் பல ஆய்வுகள் வெளிப்படுத்தியுள்ளன.(‘ தமிழ்வழி வீழ்ச்சியும் மீட்சியும்’  
From: http://tamilsdirection.blogspot.in/ )


உலக ஆய்வுகள் பற்றி தெரிந்து தாய்மொழி வழிகாட்டிகளாக இருக்க வேண்டிய படித்தவர்கள் மட்டுமின்றி, தமிழ்/திராவிட  அறிஞர்களும் தலைவர்களும் பற்றாளர்களும் , அந்த ஆட்டு மந்தை போக்கிலேயே தமது பிள்ளைகளையும் ஆங்கில வழியில் படிக்க வைத்தது/வைப்பது தவறில்லையா?

இந்தியாவிலேயே , ஆதிக்க அளவில், பாரம்பரிய பண்பாட்டு ஓழுக்கத்தை அகற்றி, திரிந்த மேற்கத்திய ஒழுக்கத்துடன் அடிப்படைக் கல்வியில் 'ஆங்கில வழி' சூதுக்கு இரையானது தமிழ்நாடு மட்டுமே. உலகிலேயே தாய்மொழிவழிக் கல்வியின் பலன்களை இழக்கத் தொடங்கியிருப்பதும் தமிழ்நாடு மட்டுமே.


 அதன் தொடர்விளைவாக, எப்பாடுபட்டாலும் சீக்கிரமாக பணம்,செல்வாக்கு சம்பாதிப்பது எப்படி ? என்ற வெற்றியின் இரகசியத்தை அறிந்து செயல்படுத்துவதில் தமிழ்நாட்டில் ஒரு கணிசமான மக்கள்  'புத்திசாலிகள்(?)ஆக‌ முயற்சித்து வருகின்றனர்.


சுமார் 10,20,30 வருடங்களுக்கு முன் கள்ளச்சாராயம் காய்ச்சிப் பிழைத்தவர்களாக, அரசுப் பணியில் லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டு பணி  நீக்கத்திற்குள்ளானவர்களாக, கூலி வேலை செய்தவர்களாக,  அடியாளாக இருந்தவர்களெல்லாம் இன்று பலநூறு கோடிகளுக்கு அதிபதிகளாக வலம் வருவது அவர்களின் கண்களை உறுத்துகிறது. அந்த 'புதிய' பணக்காரர்களுக்கு திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளில் வி.ஐ.பி ஆக மதித்து கிடைக்கும் 'சமூக கெளரவம்' , அவர்கள் குடியிருக்கும் பல கோடி ரூபாய்கள் மதிப்புள்ள வீடு, பயன்படுத்தும் அதிக விலையுள்ள கார் போன்றவை எல்லாம்  அவர்களின் கண்களை உறுத்துகிறது.


அன்பின் அடிப்படையில் இருக்க வேண்டிய குடும்ப உறவுகள், மனித உறவுகள் எல்லாம் எந்த வழியிலும் வரும் பணம். செல்வாக்கு என்ற‌ எலும்புத் துண்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாய்க் குடும்பங்கள் போல் வாழும் நாடாக தமிழ்நாடு 'வளர்ந்து' வருகிறது.    (‘ தமிழ்நாடு வீழ்ச்சியும் மீட்சியும் ’ From: http://tamilsdirection.blogspot.in/)


அவ்வாறின்றி,  நல்ல பாரம்பரியத்துடன் அன்பின் அடிப்படையில் இந்த சூழலிலும் வாழும்  குடும்பங்கள் வணங்குவத‌ற்குரிய‌ தெய்வக் குடும்பங்கள் ஆகும்.


தமது எளிய வாழ்க்கைக்கு தேவையான பொருளை நாமே ஈட்டிக் கொண்டு, மேலேக் குறிப்பிட்ட தவறான‌ போக்குகளைப் பலகீனப்படுத்தும் வகையில் நாம் வாழ்கிறோமா? அல்லது அப்போக்குகளைப் பய‌ன்படுத்திக் கொண்டு, பணம்,செல்வாக்கினைப் பெருக்கிக் கொண்டு நாமும் நமது குடும்பமும் சுகவாழ்வு வாழ்கிறோமா? என்பது அவரவர் மனசாட்சிக்கே வெளிச்சம்.


எரிகின்ற குடிசையில் சிகிரெட் பற்ற வைத்து, புகை இழுத்து இன்புறுவதற்கும், மேலேக் குறிப்பிட்ட போக்குகளைப் பயன்படுத்தி சுக வாழ்வு வாழ்வதற்கும் வேறுபாடு உண்டா?


குறிப்பு: 'தினமணி' யில் வெளிவந்தவை

  1. சுண்டெலி மிரட்டுகிறது; யானை பதுங்குகிறது! By பழ. நெடுமாறன் கட்டுரை

http://dinamani.com  கருத்துகள்

“ சுண்டெலி மிரட்டுகிறது;யானை பதுங்குகிறது.இலங்கை கொக்கரிக்கிறது;எலி மிரள்கிறது;குற்றாவாளி நிமிர்கிறான்;தமிழன் அழுகிறான்.இலங்கையில் மாநாடு;இந்தியாவில் தலையாட்டு ....மாநாடு நடக்கும் இடத்தை மாற்ற துப்பில்லை.இப்பொழுது தும்பை விட்டு விட்டு வாலைப் பிடிக்கிறார்கள்?”



“சுண்டெலிக்குப் பின்னணி பலமாய் சீனா இருக்கும் போது, இந்திய யானை மட்டுமல்ல, அமெரிக்க சிங்கமுமே நிதானித்து தான் அணுக வேண்டும்.இங்குள்ள விடுதலைப் புலி ஆதரவாளர்களும் ஐ.நா உள்ளிட்ட சர்வதேச அரங்குகளில் ராஜபட்சேயின் பாதுகாவலராக செயல்படும் சீனாவை கண்டிக்காமல் சுண்டெலி போல் பதுங்குவது ஏன்? இலங்கைப் பொருள்கள் விற்பதை எதிர்த்து போராடியவர்கள் சீனப் பொருள்கள் விற்பதை எதிர்த்தால் ரூபாய் மதிப்பாவது உயரும். பெட்ரோல் விலை குறையும். இலங்கையில் தனி ஈழம் 1983க்கு முன் சாண் ஏறியது, பின் முள்ளீ வாய்க்காலில் முழம் சறுக்கியது ஏன் அறிவுபூர்வமான விவாதத்தை ஊக்குவிக்காமல், சுண்டெலி, யானை என்று உசுப்புவது மீண்டும் மீண்டும் முள்ளிவாய்க்காலில் அப்பாவித் தமிழர்களைக் காவு கொடுக்கவே வழி வகுக்கும். “



2.    இலங்கைக்கு எந்த நாடும் கட்டளையிட முடியாது: ராஜபட்ச  - செய்தி


http://dinamani.com  கருத்துகள்

“ஈராக்கில் அமெரிக்க, பிரிட்டன் இராணுவத்தின் மீது சுமத்தப்பட்ட " போர்க் குற்றங்கள் குறித்து சர்வதேச விசாரணை" நடத்தப்பட்டதா? இலங்கையில் இருந்த தமது செல்வாக்கை சீனாவிடம் இழந்துள்ள மேற்கத்திய அரசுகள், மீண்டும் மூக்கை நுழைக்க, நிவாரணப் பணிகளைப் பின்னுக்குத் தள்ளி ( நிதி உதவி பெருமளவில் செய்ய வேண்டியதைத் தவிர்த்து) , 'போர்க் குற்ற விசாரணை' என்ற துருப்பு சீட்டை கையில் எடுத்துள்ளார்கள். 'சோழியன் குடுமி சும்மா ஆடாது' என்பது தான் சர்வதேச அரசியல் செயல் தந்திரம். வினைவலியும் தன்வலியும் மாற்றான் வலியும் துணைவலியும் தூக்கிச் செயல்' (திருக்குறள் 471) படி செயல்படாமல், சர்வதேச அரசியல் பற்றிய புரிதலின்றி, 'உதவி' என்பது தூண்டில் மீன் என்பது தெரியாமல் , மீண்டும் மீண்டும் சிக்கி, 1983 ‍இல் சாண் ஏறிய ''ஈழம்' முள்ளிவாய்க்காலில் முழம் சறுக்கியது ஏன் ? என்பதை அறிவுபூர்வமாக ஆராய்ந்து, பாடங்கள் கற்காமல், உணர்வுபூர்வமாக ' காமன் வெல்த் புறக்கணிப்பில்' ஆற்றலை எந்த பலனுமில்லாமல் விரயப்படுத்தியது தான் மிச்சம். இடையில் தமிழ்நாட்டுக்கான சான்றுகளைப் புறக்கணித்து, மைய அரசின் உ.நீ.மன்ற கச்சத் தீவு துரோகம் காணமல் போனது.



3.   மனித உரிமைகளை இலங்கை பாதுகாக்க வேண்டும்: சீனா திடீர் வலியுறுத்தல் – செய்தி- http://dinamani.com  கருத்துகள்


“சீனாவின் ராஜ தந்திரம் இது. அமெரிக்காவில் நிறைய நிறுவனங்களை கையகப் படுத்தி அமெரிக்காவில் அதிக பணியாட்களைக் கொண்ட அமெரிக்காவின் பெரிய எஜமான‌னாக சீனா உள்ளது. சீனாவைப் பகைத்துக் கொள்ளாமல், இலங்கையில் தாம் இழந்துள்ள செல்வாக்கின் சிறுபகுதியையாவது அமெரிக்காவும் பிரிட்டனும் மீட்க விரும்புகிறது.இலங்கையை இன்னொரு 'திபெத்' ஆக்க, இந்தியாவை இலங்கையின் எதிரியாக்க வேண்டும். தமிழ்நாட்டில் 'நியாயத்திற்காக' சில பிரச்சினைகளுக்கு 'பிரமிக்கும்' வகையில் போராடுபவர்கள், 'உரிய சன்மானத்தைப்' பெற்ற பின் அப்பிரச்சினைகள் பற்றி மூச்சு விடாமல், பிழைப்பிற்கு அடுத்த பிரச்சினைக்கு தாவுவதில்லையா? இந்த 'ராஜ தந்திரம்', இலங்கையில் வாழும் அனைவருக்கும், இந்தியாவிற்கும் பெரும் கேடு விளைவிக்கப் போகும் 'விலையை' இலங்கையிடமிருந்து வாங்கும் ராஜ தந்திரம். ஆக ஐ.நா. மனித உரிமை ஆணையத்தில், 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தற்கு, சீனா எதிர்பார்த்த விலையை ராஜபட்ச இதுவரை தராதது வெளிப்பட்டுள்ளது. 'மனித உரிமை' என்ற பெயரில் சர்வதேச 'நாட்டாமைகளிடம்' சிக்கினால் என்ன ஆகும் என்பது வெளிப்பட்டுள்ளது. ”

Wednesday, November 13, 2013




                         இசையில் ' தீண்டாமை'
        காலனியத்தின் ‘நன்கொடை’யா?



எனது இசை ஆராய்ச்சியில் தேவாரப் பாடல்களில் பறை உடுக்கை போன்ற தாள இசைக் கருவிகள் முக்கிய இடம் பெற்றிருப்பதைக் கண்டறிந்தேன்.ஆனால் இன்று இசைக்கப்படும் தேவாரப் பாடல்களில் தாள இசைக் கருவிகளாக இவை இடம் பெறுவதில்லை.பறை, உடுக்கை போன்ற இசைக் கருவிகளுக்கான இத்தகைய 'தீண்டக்தகாத' நிலை ராஜராஜ சோழன் காலத்தில் இருந்ததற்கான சான்றுகள் இது வரை எனது ஆய்வில் வெளிப்படவில்லை.



செவ்விசை (Classical Music),  நாட்டுப்புற இசை(Folk Music)  போன்ற பிரிவுகள் வெள்ளைக்காரர்கள் இங்கு வருவதற்கு முன் இருந்ததற்கு சான்றுகள் இல்லை. பெரிய புராணத்தில் வரும் ஆனாய நாயனார் காலம் வரை இத்தகைய பிரிவுகள் தமிழிசையில் இருந்ததற்கான சான்றுகள் இல்லை.



சங்க காலத்தில் எவ்வாறு இருந்தது என்ற ஆய்வு பல வியப்பான தகவல்களை வெளிப்படுத்தியது.



இன்று நிலவி வரும் சாதிகள் சங்க கால சமூகத்தில் இருந்ததற்கு சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் விவசாயம்,மீன்பிடித்தல் உள்ளிட்டு அனைத்து பொருளீட்டல் துறைகளில் ஈடுபட்டிருந்த சமூகப் பிரிவுகளைச் சார்ந்தவர்கள் பறைவகை இசைக் கருவிகளை இசைத்தற்கு நிறைய சான்றுகள் சங்க இலக்கியங்களில் உள்ளன. அது மட்டுமல்ல குடிமகனுக்கான(citizen)  வரையறையை கீழ்வரும் சான்று வெளிப்படுத்தியுள்ளது இன்னும் வியப்பைத் தரவல்லதாகும்.



“ துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று

இந்நான்கு அல்லது குடியும் இல்லை; ”

புறநானூறு 335:  7 -  8



துடியன், பாணன், பறையன், கடம்பன் ஆகியோர் இசைப் புலமையுடன் வெவ்வேறு வகையிலான இசைக் கருவிகளை இசைப்பதில் வல்லவர்கள் ஆவர்.துடியன், பாணன், பறையன்,பற்றிய சான்றுகள் சங்க இலக்கியங்களில் பல உள்ளன. கடம்பன் பற்றிய சான்றுகள் குறைவே.பறை என்பது குறிப்பிட்ட வகையிலான பல தாள இசைக்கருவிகளைக் குறிக்கும் சொல்லாகும்.



சங்க காலத்தில் குடிமக்கள் என்போர் ஏதாவது ஒரு வகை இசைக் கருவியை இசைப்பதில் வல்லவர்களாக இருந்தனர் என்பது தெளிவாகிறது. அவ்வாறு இசைத்தவர்கள் சாதி அடிப்படையிலோ, தொழில் அடிப்படையிலோ உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டனர் என்பதற்கு சான்றுகள் இல்லை. செவ்விசை, நாட்டுப்புற இசை என்ற பிரிவுகளோ, அவற்றின் அடிப்படையில் உயர்வு தாழ்வோ இருந்ததற்கான சான்றுகளோ இல்லை.



இசையில் உயர்வு, தாழ்வு, தீண்டாமை போன்றவைகளும், செவ்விசை, நாட்டுப்புற இசை  போன்ற பிரிவுகளும் வெள்ளைக்காரர்கள் வருவதற்கு முன் இங்கு இருந்ததற்கான சான்றுகள் இது வரை எனது ஆய்வில் வெளிப்படவில்லை. அத்தகைய சான்றுகள் இருப்பின், அவற்றை எனது கவனத்திற்கு யாரேனும் கொண்டு வந்தால்,  ந‌ன்றியுடன் அவரைக் குறிப்பிட்டு - acknowledge செய்து-  அதனை திறந்த மனதுடன் ஆராய்வேன்.



மேற்கத்திய இசை வரலாற்றில் செவ்விசை (Classical Music) தோன்றி உருவான காலக்கட்டம் கி.பி 1550 முதல் 1900 வரை உள்ள காலக் கட்டமாகும். (http://en.wikipedia.org/wiki/Classical_music ).பிரஞ்சுப் புரட்சி, தொழில் புரட்சி, அறிவியல் வளர்ச்சி ஆகிய காரணங்களால் கலை, இலக்கியத் துறைகள் அரசர்கள் - ‍ பிரபுக்கள் பிடியிலிருந்து விடுதலை பெற்று, புதிய திசையில் புதிய சிந்தனையில் மேற்கத்திய உலகில் செவ்வியல் காலம் (Classical Period) தோன்றி வளர்ந்தது. இத்தகைய வரலாற்றுப் பின்னணியுடன் உருவான செவ்விசை, நாட்டுப்புற இசை போன்ற பிரிவுகளை இந்திய சமூகத்திற்குள் புகுத்தி அணுகுவது எப்படி சரியாகும்?



செவ்விசை, நாட்டுப்புற இசை போன்ற பிரிவுகள் அதன்பின் இந்தியாவில்  காலனிய செல்வாக்கில் உருவாகியிருக்க வாய்ப்புண்டு. எனவே இசையில் உயர்வு, தாழ்வு, தீண்டாமை போன்றவைகளும், செவ்விசை, நாட்டுப்புற இசை  போன்ற பிரிவுகளும் இந்தியாவில் காலனியத்தின் ‘நன்கொடை’களாக இருக்கவும் வாய்ப்புண்டு.



வெள்ளைக்காரர்கள் வருவதற்கு முன் இசைக் கொள்கை(Theory)  என்ற அளவிலும், செய்முறை இசை (Practical Music)  என்ற அளவிலும் இருந்தவை தொடர்பான சான்றுகளின் அடிப்படையில்,  திறந்த மனதுடன் சார்பற்ற ஆய்வினை மேற்கொண்டால், அந்த மூலங்களிலிருந்து இன்று உள்ள செவ்விசை, நாட்டுப்புற இசை போன்ற பிரிவுகளும், இசையில் உயர்வு தாழ்வு, தீண்டாமை போன்றவையும் எவ்வாறு தோன்றி வளர்ந்தன என்பது பற்றி, வியப்பூட்டும் அரிய தகவல்களும், அவை தொடர்பான சமூக இசை செயல்நுட்பமும் வெளிப்பட வாய்ப்புள்ளது.



காலனியத்தின் பாதிப்புகளில் சிக்கியுள்ள 'கர்நாடக இசை', மற்றும் 'தமிழ் இசை' பற்றிய புரிதலின்றி, அதன் ஆதரவாளர்கள்,  உயர்வு/தாழ்வு 'மோதலில்' ஈடுபட்டு வருவது சரியா? என்பதும் ஆய்வ்ற்குரியதாகும். ( http://musicresearchlibrary.net/omeka/items/show/2446)





Note:
My discovery on ‘Sounds of letters and their relation to music’ (http://musicresearchlibrary.net/omeka/items/show/2439 )  is in consonance (revealing the complimentary dimensions of Tamil & Sanskrit)  with the musical origin of Sanskrit from God Shiva’s Damaru as explained below. In the western inspired classical – folk divisions, Damaru might belong to folk percussion.



“ Shiv sutras are believed to be originated from Shiv's Tandav dance.

नृत्तावसाने नटराजराजो ननाद ढक्कां नवपञ्चवारम्।

उद्धर्त्तुकामः सनकादिसिद्धादिनेतद्विमर्शे शिवसूत्रजालम्॥

At the end of His Cosmic Dance,

Shiva, the Lord of Dance,

with a view to bless the sages Sanaka and so on,

played on His Damaru fourteen times,

from which emerged the following fourteen Sutras,

popularly known as Shiva Sutras or Maheshwara Sutras “