Tuesday, June 16, 2015


தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize)  (4)

 

'இனம்' திரிந்த பொருளில் திராவிடர்?



தி.மு.க உருவான வருடம் 1949. அதற்கும் முன்னேயே, திராவிடர் கழக  மாநில பொறுப்பாளாராக அண்ணாதுரை இருந்து கொண்டு, 'பிரிவினை' கோரிக்கையை ஏற்றுக்கொண்டு இருந்த நிலையில், 1947 இல், 'இந்திய விடுதலையை' துக்க தினமாக பெரியார் ஈ.வெ.ரா அறிவித்ததை, மறுத்து, அதை 'இன்ப நாளாக' அண்ணாதுரை வரவேற்றது கொள்கைபூர்வமா? அல்லது 'எதிர் நீச்சலுக்கு' அஞ்சிய சமரசமா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அப்போது அவரை கட்சியை விட்டு, பெரியார் ஈ.வெ.ரா நீக்காதது ஏன்? திராவிடர் கழகத்தை விட்டு, அண்ணாதுரை வெளியேறாதது ஏன்? என்பவையெல்லாம் ஆய்விற்குட்பட்டதாகும். 

'திராவிடர் ' என்ற இன ரீதியிலான சொல்லை விடுத்து, நிலப்பரப்பு ரீதியிலான ' திராவிட 'என்ற சொல்லை ஏற்று, திராவிட முன்னேற்ற கழகம் உருவாகி வளர்ந்த வேகத்தில்,' திராவிடர் ' என்ற சொல்லும் வலுவிழந்தது.” என்பதை ஏற்கனவே பார்த்தோம். 

' பெரியார் குறுகிய இன (Race) அடிப்படையில், 'திராவிடர்' என்று பயன்படுத்தினார். ஆனால் நாங்கள் பரந்த புவியியல் (geographic)  அடிப்படையில் 'திராவிட' என்று சொல்கிறோம்' என்ற வகையில் விளக்கம் கொடுத்து, பிராமண‌ர்கள் தி.மு.கவில் சேர்க்கப்பட்டனர். அதற்குப்பின் 'தி.கவும், தி.மு.கவும் இரட்டைக்குழல் துப்பாக்கி போல் ' - 'திராவிட' மற்றும் 'திராவிடர்' அடிப்படைகளில்-  செயல்படும்' என்று அண்ணாதுரை அறிவித்தது சரியா? என்பது ஆய்விற்குரியதாகும். 

அது மட்டுமல்ல, மொழிவாரி மாநிலப் பிரிவினையில், சென்னை மாகாணம் இன்றைய தமிழ்நாடாக சுருங்கிய பின்னும், 'திராவிட நாடு, திராவிடருக்கே' என்று முழங்கியது சரியா? 'திராவிட' என்ற சொல்லின் கவர்ச்சியை இழக்க விரும்பாதது , அதற்கு காரணமா?

'திராவிட கவர்ச்சி அரசியலில்' தமிழர்களின்  தாய்மொழி,பாரம்பரியம்,பண்பாடு போன்ற ஆணிவேர்கள், தி.மு.க வளர்ந்த வேகத்தில், எந்த அளவுக்கு சிதைந்தது? என்பதும் ஆய்விற்குரியாகும்.

பெரியார் ஈ.வெ.ரா அவர்களுக்கிருந்த தவிர்க்க முடியாத வரை எல்லைகள் (limitations) காரணமாக, தமக்கிருந்த அறிவு நேர்மையுடனும், சமூக பொறுப்புடனும் அவர் மேற்குறிப்பிட்ட ஆணிவேர்கள் தமிழர்க்கு கேடானவை என்று அறிவித்தார்.  தி.மு.க, 'இரட்டைக்குழல்' துப்பாக்கியாக, பெரியாரின் அந்த நிலைப்பாடுகளை ஏற்று செயல்பட்டார்களா?  பெரியாருக்கிருந்த‌ வரை எல்லைகள் இல்லாத அண்ணதுரைக்கு, பெரியாரின் அந்த நிலைப்பாடுகள் தவறு என்று தெரியவில்லையா? தெரிந்து பெரியாருக்கு அதை தெளிவுபடுத்த என்ன முயற்சிகள் மேற்கொண்டார்? அதை செய்யாமல், சேர, சோழ, பாண்டிய அரசர்களையும், சிலப்பதிகாரம் உள்ளிட்ட இலக்கியங்களையும் 'கவர்ச்சி தமிழ், கவர்ச்சி தமிழ் உணர்வு' என்று சிறைபிடித்து, தமிழர்களின் ஆணிவேர்களை சிதைத்தில், தி.கவை விஞ்சி, தி.மு.க சாதனை படைத்ததா? அந்த சாதனையின் அடித்தளத்திலேயே, திராவிடக்கட்சி ஆட்சிகளில் தமிழ்வழிக் கல்வி சீரழிந்து, ஆங்கிலவழிக்கல்வி 'சமூக புற்று நோய்' போல் அதிவேகமாக பரவியதா? அந்த புற்றுநோயில் சிக்கி, தமது குடும்பப் பிள்ளைகளை ஆங்கிலவழியில் படிக்க வைத்த/வைக்கும் தமிழ் அறிஞர்கள், பேராசிரியர்கள், தமிழ் ஆர்வலர்கள் எல்லாம், குற்ற உணர்வே இல்லாமல், மேடைப்பேச்சில், எழுத்தில், 'தமிழ்வழிக்கல்வி' ஆதரவாளர்களாகவும், புரவலர்களாகவும் வெளிச்சம் போடும் 'தமிழ்வேர்க்கொல்லிகள்' போல், தமது சுயநல 'தமிழுணர்வு கணக்குகளில்' தமிழைச் சிறைபிடித்து, வளர்ந்தார்களா? என்பவையெல்லாம் ஆய்விற்குரியவையாகும்.
  
காலனிய அறிமுகத்திற்குப் பின், ஆங்கிலத்தில் இருந்த 'ரேஸ்'(Race)  என்ற சொல்லின் பொருளை, தமிழில் ஏற்கனவே வழக்கில் இருந்த‌ 'இனம்' என்ற சொல்லின் பொருளாக 'திரித்ததால்' , அந்த திரித்தலில், 'திராவிடர்', 'திராவிட' அடையாளங்கள், 'இரட்டைக்குழல் துப்பாக்கியாக' இணைந்ததால் , விளைந்த பலன்களா இவை? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

ஆங்கிலத்தில் உள்ள 'ரேஸ்' (Race) என்ற சொல்லானது, புவியியல் அடிப்படையிலும், உயிரணு அடிப்படையிலும் தெளிவாக வேறுபடுத்தி அடையாளம் காணப்படும் பொருளில் (as largely discrete, geographically distinct, gene pools) பயன்படுத்தப்பட்டது என்பதற்கான சான்றினை முந்தையப் பதிவில் பார்த்தோம்.

ஆனால் பழந்தமிழ் இலக்கியங்களில், 'இனம்' என்ற சொல்லானது, 'நல்லினம்', 'சிற்றினம்', 'தீயினம்' என்று மனிதர்களின் பண்புகள் அடிப்படையில் வகைபடுத்தப்பட்டு, பயன்படுத்தப்பதற்கான சான்றுகளை ஏற்கனவே பார்த்தோம். ('நல்லினத்தி நூங்குந் துணையில்லை தீயினத்தின், அல்லற் படுப்பதூஉம் இல்’ - திருக்குறள் 460'; https://tamilsdirection.blogspot.com/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html)

மேலை நாடுகளில் , ஆங்கிலத்தில் 'ரேஸ்' (Race)  என்ற சொல்லானது, தமிழில் வழக்கில் இருந்த 'இனம்' என்ற மேலே குறிப்பிட்ட‌ பொருளில் பயன்படுத்தப்படவில்லை. அப்படியென்றால், ஆங்கிலேயர் வருகைக்குப்பின், 'ரேஸ்' என்ற ஆங்கிலச் சொல்லிற்கு, தமிழில் இருந்த 'இனம்' என்ற சொல்லை யார் முதலில் திரித்து அறிமுகப்படுத்தினார்கள்? என்பது ஆய்விற்குரியது. 

தமிழில் 'பண்' என்ற சொல்லிற்கும், சமஸ்கிருதத்தில் 'ராகம்' என்ற சொல்லிற்கும் இடையில் உள்ள வேற்றுமைகளைக் கருத்தில் சொள்ளாமல், 'தனித்தமிழ்' பற்றில், தமிழில் 'ராகம்' என்ற சொல்லிற்கு பதிலாக, மொழிபெயர்ப்புகளில், 'பண்' என்ற சொல்லை அறிமுகப்படுத்திய தவறைவிட, மிக மோசமான தவறு, மேற்குறிப்பிட்டதாகும்.

தொல்காப்பியத்தில் வரும் 'ஒரீஇ' சூத்திரத்தை தவறாக புரிந்து கொண்டு, பிறமொழிச்சொற்களை ஓசை அடிப்படையில் (Phonetic)  தமிழெழுத்துக்களுடன் பயன்படுத்தாமல், பொருள் மொழிபெயர்ப்புடன் (semantic) பயன்படுத்துவதில் உள்ள அபாயங்களை ஏற்கனவே பார்த்தோம்.

("Also will they refute the evidences in the previous posts confirming that the orIi process in tholkAppiam  was a phonetic adoption with reduced acoustic distortions in the Tamil words imported from the foreign languages, without distorting their meanings?

Also can they deny the distortion in the meaning of the foreign words in the semantic adoption in which the new word is created by combining a semantically relevant word-root or word in the host language- Tamil?

The magnitude of the distortion in the meaning would depend on the inevitable differences in the meaning between the foreign word and the semantically created new word in Tamil.( eg. Tamil 'paN ' for Sanskrit 'Raga')"(

அந்த அபாயம், சமூகத்தில் எவ்வளவு மோசமான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதற்கு, ஆங்கிலத்தில் உள்ள 'ரேஸ்'(Race)  என்ற பொருளில், தமிழில் இருந்த 'இனம்' என்ற சொல்லை தவறாகப் பயன்படுத்தியது சான்றாக உள்ளது.

மனிதர்களின் சமூக அடையாளங்கள் அடிப்படையில், அவர்களின் மனங்களில் தோன்றும் தேவைகளும் (needs), ஈடுபாடுகளும் (interests) , அவர்களின் சமூக செயல்பாடுகளுக்கான சமுக ஆற்றலை எவ்வாறு உருவாக்குகின்றன என்ற சமூக செயல்நுட்பம் பற்றி ஏற்கனவே பார்த்தோம். ( ‘சமூக இழைகளும் , சமூகப் பிணைப்புகளும் (Social Fibers & Social Bonds)’;
https://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html

மனிதர்களின் பண்புகள் அடிப்படையில், தமிழில் வழக்கத்தில் இருந்த 'இனம்' என்ற சொல்லை, தவறாக ஆங்கிலத்தில் இருந்த 'ரேஸ்' (Race)  என்ற பொருளில் திரித்த‌, காலனிய சூழ்ச்சியில், 'திராவிடர் இனம்' என்ற அடையாளமானது, உணர்ச்சிகர போதையில், கவர்ச்சிகரமான பேச்சு, எழுத்து மூலம் தமிழர்களின் சமூக அடையாளமாக திணிக்கப்பட்டதா? அது தமிழர்களின் இயல்பில் , அரசியல் நீக்கம் உள்ளிட்டு என்ன வகைகளிலான திரிதலை ஏற்படுத்தியது?

'இனம்' திரிந்தது ஆனது, தமிழர்களின் இயல்பில் திரிதலைத் தூண்டியதா? (''காலனிய' மன நோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும் (3)  இயல்முறி  வாழ்க்கை நோயில் சிக்கிய தமிழர்கள்';
https://tamilsdirection.blogspot.com/2015_01_01_archive.html

தமிழர்களின் தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்ற ஆணிவேர்கள் தமிழர்க்குக் கேடானவை என்ற நிலைப்பாடு, அத்திரிதலின் 'வினையூக்கி' (catalyst) ஆனதா? தமிழர்களிடம் குடும்பம், நட்பு உள்ளிட்ட‌ சமூக உறவுகளில், இயல்பாக இருந்த அன்பானது, லாபநட்ட கணக்கில் சிறைபட்டு, தமிழர்களிடையே 'சுயலாப கள்வர்கள்' அதிவேகமாக வளர்வதற்கு, 'திராவிடர்' அடையாளம் ஏற்படுத்திய அடையாளச் சிதைவுகளும், அதன் தொடர்விளைவாகிய 'இயல்பில் திரிதலும்' காரணங்களாகினவா? அந்த 'சுயலாப கள்வர்கள்' பங்களிப்பால், அரசியல் கட்சிகள் 'ஆதாயத் தோண்டர்களை' நம்பி, பயணிக்கும் அரசியல் நீக்கமானது (depoliticize) அதிகரித்துள்ளது.

தமிழர்களிடையே தற்போது நிலவிவரும் அரசியல் நீக்கமானது (depoliticize), அரசியல் கட்சிகள் 'ஆதாயத்தொண்டர்கள் பலத்தில்' சருகாகி, உதிர்ந்து, தமிழ்நாடானது அழிவுதிசையிலிருந்து மீண்டு, ஆக்கபூர்வமான அரசியல் திசை நோக்கி, திரும்பிக் கொண்டிருப்பதற்கான 'சிக்னலா' (signal)? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

மனசாட்சியுடனும், திறந்த மனதுடனும், அறிவுபூர்வமாக நேர் (Positive) உணர்வுகளுடனும் வாழ்பவர்கள் தான், இனி 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்கு, பங்களிப்பு வழங்க முடியும் என்பதை உலக ஆய்வுகள் உணர்த்துகின்றன.  “ 'பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்வா எதிர்ப்பு, பெரியார் எதிர்ப்பு, முஸ்லீம் எதிர்ப்பு,வடவர் எதிர்ப்பு, சிங்களர் எதிர்ப்பு' போன்ற பலவித, எதிர் (Negative) உணர்ச்சிபூர்வ(emotions) போக்குகளுக்கு அடிமைப்பட்ட மனிதர்களும், அவர்களின் ஆதரவாளர்களும் பலவித உடல்/மன நோய்களுக்கு உட்பட்டு வாழ்ந்து, சமூக உறவுகளையும் கெடுத்து, தமிழர்களின் உயிரணுக்களிலும் (genes) அதைப் பதிவு செய்து, இனிவரும் பரம்பரையையும் கெடுப்பவர்கள் என்பதையும், திறந்த மனதுடன், அறிவுபூர்வமாக நேர் (Positive) உணர்வுகளுடன் வாழ்பவர்கள் அதற்கு எதிரான ஆக்கபூர்வமீட்பு உணர்வுகளை தமிழர்களின் உயிரணுக்களில் பதிவு செயவதையும், உலக ஆய்வுகள் உணர்த்தியுள்ளன. (உதாரணமாக; “scientists are discovering that positive emotions don’t just make you feel good — they have an impact on our social interactions and health outcomes that may become written in our genes.”; http://www.psychologicalscience.org/index.php/publications/observer/2013/july-august-13/new-research-on-positive-emotions.html “ ( 'காலனிய' மன நோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும் (4 ) 'சமூக எபோலா'  நோய்க்கிருமிகளாக உள்ள மனிதர்கள்’; https://tamilsdirection.blogspot.com/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_5.html  )


(வளரும்)

No comments:

Post a Comment