Saturday, June 20, 2015


தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize)  (5) 

                        மீட்சிக்கான வழி முறைகள் ?


ஒரு குழந்தை பிறந்து, வளரும்போது, அது பிறந்த நாடு, மொழி, சமூகம், குடும்பம் ஒட்டிய அடையாளங்கள், சமூக இயற்கை செயல்முறையாக (socio-natural process), இயல்பாக வளருகின்றன. அந்த வளர்ச்சி போக்கில்,பெற்றோர்கள், ஆசிரியர்கள்,ஊடகங்கள் மூலமாக சமூக தூண்டல் செயல்முறையும் ( socio-induced process) இடம் பெறலாம்.

வயது வந்த பின்னர் (after reaching adulthood),அவரிடம் இருக்கும் அடையாளக் கூறுகள், அவர் பெறும் சுய‌ அறிவு, அனுபவங்களைப் பொறுத்து, மாற்றங்களுக்கும் உள்ளாக வாய்ப்புகள் உண்டு. 

சமூக ஒப்பீடு (social comparison)  நோய் உள்ளிட்ட சமூக மனவியல் (social psychology)  பாதிப்புகளுக்குள்ளானவர்கள் எல்லாம், பொது வாழ்வில் பிரச்சாரங்கள் மூலம் அரங்கேறும் 'அடையாளப் பொறி'களில் ( Identity imprisonment) சிக்கி, தூண்டப்பட்ட‌ அடையாள எந்திரர்களாக (Induced Identity processed human robots)  வாழவும் வாய்ப்புகள் உள்ளன.

செல்வம், செல்வாக்கு, பாராட்டு போன்றவற்றிற்கு ஏங்கும் மனநோயாளிகளாக வாழாமல், மனசாட்சியுடனும், அறிவுநேர்மையுடனும், தொடர்ந்து தமது அறிவை வளர்ப்பதில் ஆர்வமுள்ளவர்கள் எல்லாம்,  அவ்வாறு சிக்குவதற்கு வாய்ப்பு குறைவு; சிக்கினாலும் பின்னர் தப்பித்து, அந்த நோய்களிலிருந்து பிறர் சிக்காமல் காப்பதற்கும் பங்களிப்பு வழங்க முடியும்.

எல்லாவற்றையும் எல்லாராலும் விளங்கிக் கொள்ள முடியாது. எனவே சரியான வழிகாட்டிகளாக,  திருக்குறள் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்கள் குறிப்பிடும் சான்றோர்கள்,  சமுகத்திற்கு தேவைப்படுகிறார்கள். சான்றோர்கள், விஞ்ஞானிகள் போன்ற புலமையாளர்கள் வெளிப்படுத்தும் கருத்துக்களையும்,  எல்லோராலும் விளங்கிக் கொள்ளமுடியாது. தமது வரை எல்லைகள் (limitations)  பற்றிய புரிதலின்றி, தமக்கு விளங்காதவைகளை, தவறாக புரிந்து கொண்டு, இழிவு படுத்துவதும், கண்டிப்பதும் தவறாகும்.

இசையில் கூட, அதற்கென தனிப்பயிற்சி இன்றி, என்னால் விளங்கிக் கொள்ள முடியாதவை நிறைய உண்டு. 1990களில், எனது முனைவர் பட்ட நெறியாளரிடம்(Guide),   தாளம் பற்றிய புத்தகத்தைப் படித்து, ஐயங்கள் கேட்ட போது, 'சார், மிருதங்கம் போல, ஏதாவது ஒரு தாளக்கருவி நீங்கள் வாசிக்க கற்று கொண்டால் தான், உங்கள் ஐயங்களை நான் தெளிவுபடுத்த முடியும்' என்றார். ஏற்கனவே 'கிடார்', 'ஆர்மோனியம்' முறையாக ஆசிரியரிடம் கற்றிருந்த நான், பின் ஒரு வருடம் மிருதங்க ஆசிரியரிடம் மிருதங்கம் வாசிக்கக் கற்றுக் கொண்டேன். அதன்பின் தான், எனது ஐயங்கள் தெளிவாகி, மேற்கொண்டு அரிய கண்டுபிடிப்புகளுக்கு அதுவே வழியானது.

தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் நூல்களைப் படித்து, விளங்கிக் கொள்ளும் அளவுக்கு தமிழில் புலமை பெரியார் ஈ.வெ.ரா அவர்களுக்கு இல்லாததில் வியப்பில்லை. பெரியார் ஈ.வெ.ரா அவர்களுக்கிருந்த " கல்வி வரை எல்லைகள்(limitations)  காரணமாக, அவரால் பழந்தமிழ் இலக்கியங்கள் உள்ளிட்டவற்றையும், இந்திய தொன்மை பற்றி ஆங்கிலத்தில் வெளிவந்த ஆய்வுகளையும் படித்தறிய முடியாத நிலை இருந்தது. தமிழில் அவரால் படித்து விளங்கிக்கொள்ளக் கூடியவையும், ஆங்கிலத்தில் மற்றவர் படித்து, அவருக்கு விளங்கும் வகையில் தெரிவித்தவையுமே, அவருக்கான இரண்டாவது வகை-  நேரடியாக இன்றி மற்றவரைச் சார்ந்திருந்த-  உள்ளீடுகள் ஆகும்." என்பதை ஏற்கனவே பார்த்தோம்.  
( http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_28.html ).  எனவே  'திராவிடர்', 'திராவிட', 'தமிழர்' அடையாளச் சிதைவுகள் காரணமாக, சமூக இயக்கவியலில் (social dynamics)  என்னென்ன பாதிப்புகள் தோன்றி வளரும் என்பதும் அவருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை.

தன்னால் படிக்க இயலும் அளவுக்கு உள்ள தமிழ்ப் புத்தகங்களைப் படித்து, தமிழ் இலக்கியங்கள் தமிழர்க்குக் கேடானவை, ஒதுக்கப்பட வேண்டியவை என பெரியார் முடிவு செய்தார்.

அந்த பின்னணியில், 1944இல் திராவிடர் கழகம்' உருவான பின், ஏற்கனவே இருந்த அறிவுபூர்வ போக்குகள் தடம் புரண்டு, உணர்ச்சிபூர்வ போக்குகளுடன், 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளச் சிதைவுகள் அரங்கேறின‌. அதன் தொடர்விளைவாக,  காலனிய மனநோயாளித்தனம் அறிமுகப்படுத்திய, மேற்கத்திய வழிபாட்டு போக்கிலான, 'சமூக ஒப்பீடு நோயானது'(social comparison) , திராவிட மனநோயாளித்தனமாக வளர்ந்து, இன்று உச்சக்கட்டத்தில் உள்ளது.  தமிழ், தமிழர் பாரம்பரியம், பண்பாடு, கனி வளங்கள் உள்ளிட்டு அனைத்தையும் 'ஊழல் கோரப் பசியுடன்' சூறையாடி, நல்ல வேலையாக தற்போது மரணப் போக்கில் உள்ளது; தப்பிப்பதற்கான வாய்ப்பில். 

சாதாரணத்தமிழர்கள்  அரசியல் நீக்கத்தில் (depoliticize)  வெறுத்து ஒதுங்க, 'ஆதாய'த் தொண்டர்கள், 'ஆதாய' தமிழ்/திராவிட ஆதரவாளர்கள், 'ஆதாய'த் தமிழ் அறிஞர்கள், துணையுடன், அந்த மனநோயாளித்தனமானது,  சாகும் தருவாயில் உள்ளது. அந்த நோயிலிருந்து மீண்டு, தமிழ், தமிழர், தமிழ்நாடு மீள, ஆக்கபூர்வமான வாய்ப்புகள்  உள்ளதாக எனக்குப் படுகிறது.

தாய்மொழி, பாரம்பரிய அடிப்படையிலான பண்பாடு போன்றவற்றிற்கு எதிராக சமூக அளவில் வளர்ந்த‌ அடையாளச் சிதைவையும், அரசியல் நீக்கத்தையும், அவற்றால் ஏற்பட்ட விளைவுகளையும்,  ஆழமாக கூர்ந்து கவனித்து, உரிய பாடங்கள் பெறும் வாய்ப்பு எனக்கு கிடைத்துள்ளது. எனது வாழ்வில் நான் பட்ட , (தப்பிக்க வாய்ப்புகள் இருந்தும், ஆய்வுக்காக விரும்பி அனுபவித்தவை உள்ளிட்ட) துயரங்களும், இழப்புகளும், அவமானங்களும், இந்த அரிய வாய்ப்பை எனக்கு வழங்கிய வாழ்க்கைப் பயணமாகவே எனக்கு படுகிறது. எனது உள்ளார்ந்த ஈடுபாடுகள்(passions)  அகத்திலும், 'உடுக்கை இழந்தவன் கை' (திருக்குறள் 788) போன்ற நட்புகள் புறத்திலும், 'வாழ்க்கையில் மூழ்காமல்' நான் மீண்டு வாழ, (இப்பதிவுகள் வர)  வழி செய்ததையும் இங்கு குறிப்பிடுவது அவசியமாகும். குறிப்பாக, அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும், அகத்தில் சீரழிவைத் தூண்டி, நம்பமுடியாத அளவுக்கு இழிவான மனிதர்களை 'வளரச் செய்த' 'திராவிட செயல்நுட்பத்தை'  நான் கண்டுபிடிக்க முடிந்ததையும்,  குறிப்பிட வேண்டும். இசைத்துறை உள்ளிட்டு, எனது பல கண்டுபிடிப்புகளை விட‌, அது சமூக முக்கியத்துவம் வாய்ந்த மிக முக்கிய‌ கண்டுபிடிப்பாகும். அந்த கண்டுபிடிப்பிற்கு நான் கொடுத்துள்ள விலையானது, தமிழ்நாட்டு நிகழ்கால வரலாற்றில், நானறிந்த வரையில், வேறு எவரும் கொடுத்திராத விலையாகும்.

1944இல் முளைவிட்ட, 'திராவிடர், திராவிட, தமிழர்'  அடையாளச் சிதைவு என்பது, மனித மூளைகளின் செயல்நுட்பத்தில் (processing)  ஏற்படுத்திய‌ மாற்றங்கள் ஆனவை, எந்த அளவுக்கு, அவர்களின் தேவைகளையும் (needs), ஈடுபாடுகளையும் (interests), சமூகத்திற்கு கேடானவையாக மாற்றும்? என்ற சமூக ஆய்விற்கான, சுயநல மனித மிருகங்கள், தமிழ்நாட்டில் கணிசமான அளவில் வளர்ந்துள்ளார்கள்.

அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும், அவற்றால் ஏற்பட்ட விளைவுகளாகிய‌ தமிழ்வழிக்கல்வியின் மரணப்பயணத்தையும், ஆங்கிலவழிக்கல்வி மூலமாக,  தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்ற ஆணிவேர்கள் சிதைந்து, வேரற்ற 'தமிங்கிலீசர்கள்' தமிழ்நாட்டில் 'சமூக புற்று நோய்' போல, 'அதிவேகமாக' வளர்ந்து வருவதையும், தடுத்து நிறுத்தியாக வேண்டும். 'நம்மால் என்ன செய்ய முடியும்?' என்று மனம் தளராமல், அவரவர் தமக்குள்ள வசதி, வாய்ப்புகளையெல்லாம், தத்தம் அறிவு , அனுபவ அடிப்படையில் எப்படி ஆக்கபூர்வமாக பங்களிப்பு வழங்க முடியும்? என்ற கேள்விக்கான திறவுகோல் பற்றி அடுத்து பார்ப்போம்.

“சமூகத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு மனிதருக்கும் ஆற்றல்(energy) இருப்பதையும், அந்தந்த நபரின் மனத்தில் உள்ள தேவைகளையும்(needs), ஈடுபாடுகளையும்(interests) பொறுத்து, தனது தேவைகள், தான் சார்ந்துள்ள குடும்பம், நட்பு, கட்சி, பொது நலன் உள்ளிட்டவைக்கு, அவரின் மனதில் உள்ள முக்கியத்துவ தரஏணி வரிசையில்(hierarchical) , அவருடைய ஆற்றல் விசைகளாக (forces) வெளிப்படும், என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.  
( http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html )

சமுகத்தில் வளர்ந்து வரும்(growing), தேய்ந்து வரும்(decaying) போக்குகள் உள்ளிட்ட, பொது நலன் தொடர்புள்ள அமைப்புகளிலும், பிரச்சினைகளிலும் செயலாற்றும் விசைகளின் ஊற்றுக்கண்கள் மேலேக்குறிப்பிட்ட,  தனி நபரிடமிருந்து வெளிப்படும் விசைகளே(forces)  ஆகும். இயற்பியலில்(physics) எந்திரவியலில் (Mechanics),  எவ்வாறு விசைகள் ஆனவை,  பிணைப்புகள்(Bonds)  உள்ளிட்ட பல வழிகளில் சேர்ந்து, அடுத்த அடுத்த உயர் மட்டங்களில்,  தொகு விசைகளாக (Resultant Forces)  செயல்படுகிறதோ, அதே போல, சமூக எந்திரவியலில் (Social Mechanics)  , மேற்குறிப்பிட்ட விசைகள், அந்த சமூகத்தில் செல்வாக்கில் உள்ள பண்பாடு உள்ளிட்ட கூறுகளின் அடிப்படையில், வெவ்வேறு வகைகளிலான,  வெவ்வேறு, ஆனால் ஒன்றுக்கொன்று தொடர்புள்ள வகையில், அரசியல், கலை, ஆன்மீகம் உள்ளிட்ட புலங்களில், வெவ்வேறு  தொகு விசைகளாக செயல்படுகின்றன.

ஒரு தனி மனிதர் தமது அறிவு, அனுபவ, சமூகத்தில் அவருக்கான இடம் உள்ளிட்ட பல காரணிகளைப் (several factors) பொறுத்து, தனி மனிதருக்கு, அவர் வாழும் சமூகத்தில்,  வெவ்வேறு  சமூக நிலைகளில் உள்ள அமைப்புகளில் இடம் பெறுவதன் மூலம், வெவ்வேறு அளவில், வெவ்வேறு மட்டங்களில் செயல்படும் தொகுவிசைகளோடு அடையாளப்படுத்திக் கொண்டு, அதற்கேற்ற 'செல்வாக்குள்ளவராக', வாழ முடியும். அவ்வாறு வாழ்பவர்களின் பங்களிப்புக்கும், சமூகத்தின் (நல்ல அல்லது தீய திசைகளில்) போக்கின் இயல்புக்கும், இயக்கத்தன்மைக்கும் ஏற்ப, அடுத்த அடுத்த உயர் அல்லது கீழ் நிலை தொகுவிசைகளை நோக்கி இடம் பெயர்வார்கள்.

அதாவது பேருந்தில் ஒட்டுநர் போல, சமூகத்தில் உள்ள பல வகைகளிலான செல்வாக்குள்ள‌ ஓட்டுநர்களாக இடம் பெயர்வார்கள். அது போன்ற நிலையில், இந்தியாவில் அதிக செல்வாக்குள்ள ஓட்டுநர் பணியில் தற்போது மோடி உள்ளார். ஒரு ஓட்டுநர் தனது கட்டுப்பாட்டின் வரை எல்லைகள்(limitations), தான் இயக்கும் அமைப்புகளின்(structures) வரை எல்லைகள் பற்றிய புரிதலுடன், தனது சுய அறிவு, அனுபவத்தைப் பொறுத்து, நல்ல அல்லது கெட்ட திசையில் பயணிக்க முடியும்.” என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
( http://tamilsdirection.blogspot.in/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_16.html )

அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் ஏற்படுத்திய தீய திசைகளில், மனசாட்சியை அடகு வைத்து, தமிழையும், தமிழ்நாட்டையும் சீரழித்து, பயணித்து, 'அதிவேக பணக்காரராகும்' 'திராவிட' மனநோயாளிகள் எல்லாம், சமூகத்திற்கு கெடுதலான தொகுவிசைகளாக செயல்படுபவர்கள் ஆவர். அத்தகையோர் கடைபிடிக்கும் 'வாழ்வியல் வெற்றியின்' இரகசியங்களை ஏற்கனவே பார்த்தோம். (’தமிழ்நாடு வீழ்ச்சியும் மீட்சியும்; வெற்றிக்கான எலும்புத் துண்டு இரகசியம்’; http://tamilsdirection.blogspot.in/2013_10_01_archive.html )

மனசாட்சியுடன் கூடிய சுயவிமர்சனம் மூலம் நமது அகத்தில் உள்ள, அடையாளச் சிதைவு உள்ளிட்ட‌ கழிவுகளை நீக்கிய பின்னரே,  'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்கு நாம் பங்களிப்பு வழங்க முடியும். அவ்வாறு ஆக்கபூர்வமான பங்களிப்பு வழங்க, கீழ்வரும் தற்காப்பு செயல்முறையும் முக்கியமாகும்.

"எபோலா வைரஸ் நோயாளிகளை குணமாக்க முயலும் மருத்துவர்களே மிகுந்த 'தற்காப்பு' எச்சரிக்கையுடன் செயல்பட்டால் தான், அந்த நோய் அவர்களுக்கும் தொற்றும் அபாயத்திலிருந்து தப்பிக்க முடியும். அது போல, 'சமூக எபோலா' அறிவு ஒட்டுண்ணி சமூக நோய்க்கிருமிகளாக உள்ள மனிதர்கள்,   நமக்குப் பிடித்த 'ஆன்மீகம், பகுத்தறிவு, இந்துத்வா, முஸ்லீம், தலித்' உள்ளிட்டு இன்னும் பல முகமூடிகளுடன் நம்முடன் உறவு கொண்டாலும்,   நாம் அவர்களிடம் மிகுந்த 'தற்காப்பு' எச்சரிக்கையுடன் செயல்பட்டால் தான், அந்த நோய் நமக்கும் தொற்றும் அபாயத்திலிருந்து தப்பிக்க முடியும்." என்பதை ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.in/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_5.html ) அத்தகையோரிடம் பழகி, நாம் அந்த சமூக தொற்று நோயிலிருந்து தப்பித்தாலும், நமது நட்பு, குடும்பம் உள்ளிட்ட நமது சமூக வட்டத்தில் உள்ளவர்கள், அந்நோயில் சிக்கும் அபாயமும் உண்டு. எனவே அவர்களை ஒதுக்கி வாழ்வதே, சமூக தற்காப்பு புத்திசாலித்தனமாகும்.

மேலே குறிப்பிட்ட வழிமுறைகளில், நம்மையும், நமது சமூக வட்டத்தையும் சீர் செய்து, பயணிக்கையில், 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்கான தெளிவான அறிகுறிகள் தெரிவதோடு, நமது உள்ளார்ந்த ஈடுபாடுகளோடு(passions) இயைந்த, இயல்பான மகிழ்ச்சியோடு கூடிய‌ வாழ்வு வாழ முடியும். தமிழ், தமிழர், தமிழ்நாடு சீரழிவிற்கு பங்களித்த குற்ற உணர்வின்றி, விளம்பரமற்ற பங்களிப்பினை, மீட்சிக்கு வழங்கி, மனநிறைவுடன், மரணத்தை சந்திக்க முடியும்.

 (வளரும்)

No comments:

Post a Comment