தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize) (7)
தமிழும், தமிழ் உணர்வும், மாணவர்களின் கேலிப்பொருள் வரிசையில் ?
அரசியல்
நீக்கம்(depoliticize) என்பதன்
விளைவாக,
எந்த அளவுக்கு அரசியல் கட்சிகளும், தலைவர்களும்
மாணவர்களிடையே,
கேலிப்பொருளாக
(objects of jokes) ஆகி வருகிறார்கள்? என்பதை,
மாணவர்களின்
'ஸ்மார்ட் ஃபோன்' களில் (smart phone), இணைய வழியில், வலம்
வரும், 'ஆடியோ
(audio), வீடியோ'க்கள் (video) உணர்த்துகின்றன.
அரசியல்
கட்சித் தலைவர்களின்
பேச்சுகளும், எழுத்துகளும், தமது
தகவல் பரிமாற்ற வலிமையை
(Communication Strength) இழந்ததே,
அதற்கு காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
இதில் மிகவும் வேதனை தருவது
என்னவென்றால், அந்த தலைவர்களின் பேச்சுகளும்,
எழுத்துக்களும் மட்டுமின்றி, அவர்களால், 'தமிழும்,
தமிழ் உணர்வும்' அந்த
கேலி வரிசையில்
இடம் பெற்றுள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
'ழ' உள்ளிட்ட தமிழ் எழுத்துக்களை
சரியாக உச்சரிக்க முடியாதவர்கள் கூட, திரைப்பட
நடிகர்களாகவும், அரசியல் கட்சி தலைவர்களாகவும்
வளர முடிந்த
சமூக செயல்நுட்பமானது (social mechanism) ,
தமிழரின் அடையாளச் சிதைவுடன் எந்த அளவுக்கு தொடர்பு
கொண்டுள்ளது? என்பதும்
ஆய்விற்குரியதாகும். அத்தகைய தமிழ் உச்சரிப்பின்
சீர்குலைவும், தமிழ்நாட்டில் தமிழ் இலக்கணத்தின் சீர்
குலைவும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையதா? என்பதும்
ஆய்விற்குரியதாகும்.
அரசியல்
நீக்கத்திற்கு காரணமான, " தமிழர்களின் அடையாளச்
சிதைவு என்பது, தமிழ் இலக்கணத்திற்கும்,
தமிழர்களுக்கும் இடையிலான இடைவெளியை எந்த அளவுக்கு அதிகரிக்க
செய்தது? என்பதும் ஆய்விற்குரியதாகும். ‘இலக்கணத்தில் ஏற்படும் மாற்றங்கள், ஒரு
சமூக அர்த்தத்தைப் பிரதிபலிக்கிறது என்பதைவிட உருவாக்குகிறது. எனவே சமூக மாற்றத்தில்
அது ஒரு விசையாக (force) இருக்கிறது."
என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
(refer post dt. September 27, 2014; ‘தமிழின்
மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (3) சமூகத்தின்
சீரழிவும், இலக்கணத்தின் வீழ்ச்சியும்’
http://tamilsdirection.blogspot.in/2014_09_01_archive.html )
மேலே குறிப்பிட்ட போக்குகளின் தொகுவிளைவாக, தமிழும், தமிழ் உணர்வும் மாணவர்களின் கேலிப்பொருள்
வரிசையில் இடம் பெறுவது என்பது,
மிகவும் ஆபத்தான, தமிழின் மரணப்பயணத்திற்கான அறிகுறியாகும்.
ஆங்கிலவழிக்கல்வி
மூலம், திரிந்த மேற்கத்திய பண்பாட்டுடன்
வளர்ந்துள்ள தமிழர் குடும்ப பிள்ளைகள்,
அந்த
ஆபத்தான போக்கில் சிக்கியுள்ளார்களா? என்ற ஆய்வும் மிக
முக்கியமாகும்.
அத்தகைய ஆய்விற்கு,
தகவல் பரிமாற்ற செயல்நுட்பம்
(Communication Mechanism) பற்றிய அடிப்படை புரிதல்
என்பது, அவசிய தேவையாகி
விட்டது.
தகவல் பரிமாற்றத்தில், தகவல்
மூலம் (source) , தகவல் ஊடகம் (Medium) , தகவல்
ஏற்பி (Receiver) என்ற
மூன்று பகுதிகள் உள்ளன.
பேச்சு,
எழுத்து உள்ளிட்ட
இன்னும் சில ஆனவை, தகவல்
ஊடகமாகும். தகவல் மூலமாக செயல்படும்
நபர்களின் பேச்சு,எழுத்து போன்றவைக்கும்,
அவர்களின் வாழ்க்கைக்கும் தொடர்பில்லாமல் போகுமானால், அத்தகையோரின் பேச்சும், எழுத்தும் தமது தகவல் பரிமாற்ற
வலிமையை இழப்பது முதல் நிலை . அதை
உணராமல், அவர்கள் அதே போக்கில்
பேசுவதும், எழுதுவதும் அவர்களையே கேலிப்பொருளாக மாற்றுவது இரண்டாம் நிலை. அதிலும் அவர்கள்
ஆதாயத் தொண்டர்கள்/ஆதரவாளர்கள் பலத்தில் பேசுவதும், எழுதுவதும், அவர்களை இன்னும் மோசமான
கேலிப் பொருளாக்கி விடும் விளைவிற்கும் வாய்ப்பு
உண்டு.
அத்தகையோர், குறிப்பாக
அரசியலில் பல குட்டிக்கரணங்கள் அடித்தவர்கள், தமது பேச்சுகளிலும், எழுத்துகளிலும்,
உயர்த்திக்
காட்டும் 'தமிழ், தமிழ் உணர்வு'
ஆகியவை, மாணவர்களிடம் எந்த அளவுக்கு கேலிப்பொருளாக
மாறிவருகின்றன? 'தமிழ், தமிழுணர்வு, தமிழ் இசை' போன்றவையெல்லாம், 'சுயநல பொதுவாழ்வு வியாபாரத்தின், முதலில்லா மூலதனமாகி வருவதும்' அப்போக்கிற்கு வலிவு சேர்த்துள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
எனவே தான், தமது குடும்பப்பிள்ளைகளை
ஆங்கில வழியில் படிக்க வைத்துக்
கொண்டு, 'தமிழ்வழிக் கல்வி', 'தமிழ், தமிழ் உணர்வு'
என்று என்று பேசும், எழுதும், திராவிட/தமிழ் கட்சித்தலைவர்கள், தமிழறிஞர்கள்,
தமிழ் ஆதரவாளர்கள் , நடைமுறையில், தமிழ்வழிக் கல்வியையும், தமிழையும், தமிழ் உணர்வையும், மாணவர்களின்
கேலிப்பொருள் வரிசையில், இடம் பெறச்செய்யும் அபாயத்தினை,
ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளது. மேலும், சமூக மனநோயாளிகளாக உள்ளவர்கள், சமூக மருத்துவர்களாக செயல்பட முனைந்ததன் விளைவுகளை, தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் அனுபவிக்கின்றனரா? என்ற கேள்வியும் எழுகிறது.
மேலே குறிப்பிட்ட சீர்கேடுகளுக்கு காரணமான, 'திராவிடர் , திராவிட, தமிழர்' அடையாளச் சிதைவிற்குப்பின், தமிழ்நாட்டின் பொது வாழ்வில், 'அதிவேகமாக', 'இழிவின் இலக்கணமாக' வளர்ந்த, 'சுயநல பேய்களிடம்', தமிழ், தமிழ் உணர்வு ஆகியவை சிறைபட்டதா? 'யார் தமிழர் ?' என்ற குழப்பத்துடன் முன்வைக்கப்பட்ட, 'இனமானம்' அவர்களுக்கு கவசமானதா? அந்த கவசத்தில் மனசாட்சியின்றி, குடும்பம், நட்பு உள்ளிட்ட உறவுகளை 'வியாபாரமாக்கும்', புதிய பாணி விபச்சார, 'சுயநலப் பேய்கள்' தமிழ்நாட்டில் 'புதிதாக', 'அதி வேகமாக' வளர்ந்தார்களா? அத்தகையோரின் செல்வாக்கில், பாரம்பரியம், பண்பாடு, குடும்பம் உள்ளிட்டவற்றில், ஒழுக்கநெறிகள் எந்த அளவுக்கு சீரழிந்துள்ளனவோ, அந்த அளவுக்கு தமிழ் இலக்கண நெறிகளும், உச்சரிப்பு நெறிகளும் சீரழிந்துள்ளனவா ? அவற்றின் தொகுவிளைவாக, ' தமிழும், தமிழுணர்வும்' மாணவர்களின் கேலிப்பொருள் வரிசையில் இடம் பெறும் அபாயம் உண்டா? என்பவையெல்லாம் ஆய்விற்குரியவையாகும்.
"தமிழ்வழிக்
கல்வியை சிதைத்து, ஆங்கிலவழிக் கல்வி மூலம் 'திரிந்த
மேற்கத்திய' பண்பாட்டில் 'அதிக எண்ணிக்கையில் அதிவேகமாக'
வளரும் இது ,போன்ற மாணவர்களில்,
தமிழறிஞர்கள்/பேராசிரியர்கள்/தமிழ் ஆர்வலர்கள் குடும்பப்
பிள்ளைகள் விதி விலக்காக இருப்பதும்
அரிதாகி வருகிறது. மீடியாக்களில் செல்வாக்குடன் வலம் வரும் ஆதாயத்தொண்டர்கள்
கட்சித் தலைவர்களும், இது போன்ற மாணவர்களும்,
தமிழ்நாட்டிலேயே தனி தனித் தீவுகளில்
வாழ்கிறார்கள்." என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
(refer post dt. February 17, 2015; ' 'தமக்கென வாழா மன நோயாளிகள்' ;http://tamilsdirection.blogspot.in/search?updated-max=2015-02-19T20:30:00-08:00&max-results=7&start=28&by-date=false)
இவ்வாறு, தமது தகவல் பரிமாற்ற ஏற்பிகளாக (Receiver) உள்ள, மாணவர்களின்
நாடித்துடிப்புகளுடன் தொடர்பின்றி, அவர்களின் கேலிப்பொருளாக, அரசியல் கட்சித் தலைவர்கள்
பயணிக்கிறார்களா? அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும், வளர்த்த தேர்தல் சுயநல அரசியல்
கூட்டணிகள், அந்த பயணங்களுக்கு காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
சுயநல தேர்தல் அரசியலில், எதிர்நிலையில் உள்ள கட்சியோடு,
எந்த
தேர்தலிலும் கூட்டு சேராத அரசியல்
கட்சிகள், தமிழ்நாட்டில்
யார்? யார்? தி.மு.க எதிர்ப்பில் , இன்று
வரை சமரசமாகாத
ஒரே கட்சி அ.இ.அ.தி.மு.க என்பது உண்மையா?
எம்.ஜி.ஆர் மறைவிற்குப்பின்,
அக்கட்சி
பிளவுபட்டு, உருவான ஜானகி
அணி, சட்டசபையில் தி.மு.கவின்
ஆதரவைப்பெற்ற பின், நடந்த 1989 தேர்தலில்
அந்த அணி முழுவதும் தோற்று,
ஜெயலலிதா எதிர்க்கட்சித் தலைவரானார். அன்றிலிருந்து,
இன்று வரை, தி.மு.கவுடன் கூட்டு சேராமல்
பயணிப்பதால், சாதாரண மக்களிடம் மிக
அதிக செல்வாக்குள்ள தலைவராக அவர் உள்ளாரா? அதிலும் தனிநபர் விசுவாசத்தில், 'பெரியார்' ஈ.வெ.ரா, காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் என்ற கட்டங்களை, அந்தந்த கட்டங்களுக்கான ஆதரவாளர்களுடன் கடந்து, 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாள சிதைவின் காரணமாக விளைந்த, அரசியல் நீக்கத்தில் (Depoliticize), கொள்கைகள் சருகாகி போன நிலையில், இன்று ஜெயலலிதா நடுத்தர, ஏழை மக்களின் ஆதரவுடன் இருப்பதானது, அந்த போக்கின் இறுதிக்கட்டமா? என்ற கேள்விகளுக்கு, அப்போக்குகள்
வளர்ந்தது தொடர்பான கீழ்வரும்
சான்றுகளை ஆராய்வது பலனளிக்கும்.
தமிழ்நாட்டில்
1969இல், கலைஞர் கருணாநிதி முதல்வரானது
முதல், தமிழ்நாட்டு அரசியலானது, தி.மு.க
ஆதரவு மற்றும் எதிர்ப்பு என்ற
இரண்டு முனை அரசியலாக மாற்றம் பெற்றது. அந்த சூழலில், காமராஜரின்
'ஸ்தாபன காங்கிரஸ்' கட்சியானது, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டு, பல
போராட்டங்கள் மூலம், தி.மு.க எதிர்ப்பு 'அரசியலில்
வலிமையுடன் வளர்ந்தது. தி.மு.கவை
விட்டு வெளியேறிய எம்.ஜி.ஆர்,
அக்கட்சியில்
சேர முயற்சித்தததையும், காமராஜர் அதை விரும்பாத காரணத்தால்,
வேறு வழியின்றி, அன்றைய பிரதமர் இந்திராவின்
ஆதரவுடனும், பின்பலத்துடனும், அ.தி.மு.கவைத்
தொடங்கினார்' என்ற தகவலையும், மறைந்த
'நாத்தீகம்' ராமசாமி தனது நினைவுக்
குறிப்புகளில் வெளியிட்டுள்ளார். அதன்பின் நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தலில்,
அ.தி.மு.க
முதலிடத்தையும், ஸ்தாபன காங்கிரஸ் இரண்டாவது
இடத்தையும் பிடிக்க, தி.மு.க
மூன்றாவது இடத்தைப் பிடித்தது. அந்த அளவுக்கு, தமிழக
இருமுனை அரசியலில், 'தி.மு.க
எதிர்ப்பு அரசியலானது', வலிவுடன் இருந்தது.
காமராஜர் மறைவிற்குப்பின், 'தி.மு.க
எதிர்ப்பு அரசியல்' என்பது,
அ.இ.அ.தி.மு.கவின்
'ஏகபோக' பலமானது.
அந்த பொதுமக்கள் கருத்துருவாக்க செயல்நுட்பம் (public opinion formation mechanism) பற்றிய புரிதலின்றி, தி.மு.கவுடன்
அவ்வப்போது , தேர்தலில் கூட்டணி வைத்து, பயணித்த பெரிய, சிறிய
அரசியல் கட்சிகளெல்லாம், தி.மு.கவை
எதிர்த்து நிலைப்பாடுகள் எடுக்கும்போது, மக்களிடம் எடுபடாமல் போகிறார்களா? மாணவர்களின்
கேலிப்பொருள் வரிசையில் இடம் பெறுகிறார்களா?
என்பது ஆய்விற்குரியதாகும்.
அந்த இருமுனை அரசியல் போக்கில்,
அடுத்த கட்ட மாற்றமாக, (சசிகலா நடராஜன்/கலைஞர் கருணாநிதி) குடும்ப
செல்வாக்கு ஊழல் ஆதிக்க ஆட்சி
மீது மக்களுக்கு இருந்த கோபமும் வெறுப்புமே,
1996இல் தி.மு.க ஆட்சிக்கு
வரவும், அடுத்தடுத்த ஆட்சி மாற்றங்கள்
வரவும் காரணமானது. அந்த புதிய போக்கில்,
அரசியல் நீக்கத்தில், கொள்கைகள் சருகான நிலையில், உரிய
பாடங்கள் கற்று, உரிய திருத்தங்களுடன்
ஜெயலலிதா, மக்கள்
மத்தியில், தனிநபர் விசுவாசத்தில்,
அதிக செல்வாக்குள்ள தலைவராக
உள்ளாரா? உரிய பாடங்கள்
கற்காமல், குடும்ப அரசியல் குழப்பத்தில்
மூழ்கி, தி.மு.க
எந்த அளவுக்கு பலகீனமாகியுள்ளது? என்பது ஆய்விற்குரியதாகும்.
ஒரு சமூகத்தில் உள்ள சாதாரண மக்கள்
விசைகளில்(forces) தொடங்கி,
எந்த சமூக செயல்நுட்பத்தில் (Social Mechanism), தொகுவிசைகளாக
(Resultant Forces) அரசியல் கட்சிகளும், தலைவர்களும்
வலம் வருகிறார்கள் என்பதை ஏற்கனவே பார்த்தோம்.
"ஒரு தனி மனிதர்
தமது அறிவு, அனுபவ,சமூகத்தில்
அவருக்கான இடம் உள்ளிட்ட பல
காரணிகளைப் (several
factors) பொறுத்து, தனி மனிதருக்கு, அவர்
வாழும் சமூகத்தில், வெவ்வேறு சமூக
நிலைகளில் உள்ள அமைப்புகளில் இடம்
பெறுவதன் மூலம், வெவ்வேறு அளவில்,
வெவ்வேறு மட்டங்களில் செயல்படும் தொகுவிசைகளோடு அடையாளப்படுத்திக் கொண்டு, அதற்கேற்ற 'செல்வாக்குள்ளவராக',
வாழ முடியும். அவ்வாறு வாழ்பவர்களின் பங்களிப்புக்கும்,
சமூகத்தின் (நல்ல அல்லது தீய
திசைகளில்) போக்கின் இயல்புக்கும், இயக்கத்தன்மைக்கும் ஏற்ப, அடுத்த அடுத்த
உயர் அல்லது கீழ் நிலை
தொகுவிசைகளை நோக்கி இடம் பெயர்வார்கள்."
(refer post dt. January 16, 2015;’ மோடி
ஒருவராக நாட்டின் போக்கை மாற்ற முடியுமா?’ http://tamilsdirection.blogspot.in/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_16.html;)
கொள்கைகள்
அடிப்படையில், மக்கள் ஆதரவுடன் தொகுவிசைகளாக, பயணித்த
கட்சிகளும், தலைவர்களும், ஆதாயத்தொண்டர்கள்/ ஆதரவாளர்கள் பலத்தில் பயணிப்பது என்பது, அரசியல் நீக்க
(depoliticize) காலக்கட்டதின்
அறிகுறியாகும்.
கட்சிகளின்
தொடர்பில்லாமல், சாதாரண மக்கள், குறிப்பாக
பெண்கள், குடிநீர், சாலை வசதி உள்ளிட்ட
தமது அடிப்படை பிரச்சினைகளுக்காக, வீதியில்
இறங்கி போராடுவதும், திருடர்களையும், அச்சுறுத்தும் ரவுடிகளையும் பிடித்து உதைத்து காவல் துறையில் ஒப்படைப்பதும், அனைத்து
அமைதி வழிகளிலும் முயற்சித்தும், அரசு ஏமாற்றிய நிலையில்,
பெண்களே
மதுக்கடைகளில் நுழைந்து, மது பாட்டில்களை உடைத்து
நொறுக்கி, அக்கடைகளை அரசு
வேறு வழியின்றி அகற்ற வைப்பதும், இது
போன்று தினமும் தமிழ்நாட்டில் நடப்பவையெல்லாம்,
தமிழக அரசியலின், நம்பிக்கையுட்டும், திருப்புமுனை திசை அறிகுறிகளாகும். மக்களின் அடிப்படை பிரச்சினைகளுடன் தொடர்புள்ள
வகையிலான, பேச்சுக்கும், எழுத்துக்கும், தமது
சொந்த வாழ்வுக்கும் தொடர்பின்றி, சுயநல அரசியலில் பயணிப்பது முடிவுக்கு வந்து கொண்டிருப்பதை
அந்த அறிகுறிகள் உணர்த்துகின்றனவா? இல்லையா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அடையாளச்சிதைவால் அரசியல் நீக்கத்திற்குள்ளான போக்குகளில் சிறைபட்டுள்ள , தமிழையும், தமிழுணர்வையும் எவ்வாறு 'அடையாளம் சீர் செய்தல்' (Identity Rescue) மூலம் விடுவித்து, மேற்குறிப்பிட்ட திருப்புமுனை திசை அறிகுறிகளுடன் ஒன்ற வைப்பது? என்பதே 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சி தொடர்புடைய கேள்வியாகும்.
அந்த நோக்கில், தமிழ்நாட்டின் அரசியல் போக்குகள் எந்த திசையில் பயணிக்கும்? என்ற கேள்வியானது, தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சி, அல்லது தமிழ் வேரழிந்த தமிங்கிலீசர்கள் நாடாக, தமிழ்நாடு மாறும் வீழ்ச்சி, ஆகியவற்றுடன் தொடர்புடையதாகும். அந்த கேள்விக்கான விடைகளை,, திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும் ஆராய்ந்தே பெற முடியும். தமிழர்களின் அடையாளச் சிதைவிற்கும், அரசியல் நீக்கத்திற்கும் , காந்தி, ராஜாஜி, பெரியார் ஈ.வெ.ரா ஆகியோர் முக்கிய பங்காற்றிய, கடந்த கால முக்கிய நிகழ்வுகள், அந்த ஆராய்ச்சியில் இடம் பெறுவதைத் தவிர்க்க முடியாது.
(வளரும்)