Monday, May 2, 2016

 தமிழக சட்ட மன்ற தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?

 

தமிழக சட்ட மன்ற தேர்தல் போக்குகளை, சிங்கப்பூர் தமிழர்கள் ஆர்வமுடன் கவனித்து வரும் செய்திகள் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. ( ‘Tamils in Singapore keep eye on TN polls’ ; http://newstodaynet.com/chennai/tamils-singapore-keep-eye-tn-polls )

சிங்கப்பூரில் வாழும் எனது மகன், சில வாரங்களுக்கு முன், 'தமிழக தேர்தல் முடிவுகள் எப்படி இருக்கும்?' என்று கேட்டார்.  

அதற்கு நான்;

“நான் 'வாக்கிங்' போகும் இடங்களிலும், கடைகளிலும், தெருவோர உணவு கடைகளிலும், பேருந்துகளிலும், தேர்தல் தொடர்பான ஆர்வமானது, சாதாரண பொது மக்களிடம்  இருப்பதாக தெரியவில்லை. அதுமட்டுமல்ல, தமது மனதில் இருப்பதை இயல்பாக வெளிப்படுத்தும் போக்கு குறைந்து, கேட்பவர்களுக்கு  ஏற்றார் போல் பேசும் பழக்கமும், அதிகரித்து வருகிறது. எனவே தான், கடந்த சட்டமன்ற தேர்தல் கருத்து கணிப்புகளையெல்லாம் ('துக்ளக்' தவிர்த்து)  முட்டாளாக்கும் வகையில், தேர்தல் முடிவுகள் வெளிப்பட்டன" என்று விளக்கினேன்.

இசை ஆய்வுக்கு முன், நான் பெரியார்  கொள்கையில் பயணித்த காலத்தில், அந்த ஆர்வத்தில், திருச்சி செயிண்ட் ஜோசப் (Evening College) மாலைக்  கல்லூரியில், சமூகவியல் கொள்கைகள் தொடர்பான ' Certificate Course on Sociological Theories ' மற்றும்  ' Diploma in Journalism & Mass Communication’  படித்தேன். அதில் 'டிப்ளமா' தொடர்பாக, ' The Role of Media in Shaping Public Opinion ' என்ற தலைப்பில், ஆய்வு (Project)  மேற்கொண்டேன்.
 
மேற்குறிப்பிட்ட எனது அறிவு, அனுபவத்தில், தமிழக அரசியல் தொடர்பாக, கீழ் வருவதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

From:  ‘தமிழும், தமிழ் உணர்வும்,  மாணவர்களின்  கேலிப்பொருள் வரிசையில் ?’;

“தமிழ்நாட்டில் 1969இல், கலைஞர் கருணாநிதி முதல்வரானது முதல், தமிழ்நாட்டு அரசியலானது, தி.மு.க ஆதரவு மற்றும் எதிர்ப்பு என்ற இரண்டு முனை அரசியலாக மாற்றம் பெற்றது. அந்த சூழலில்,  காமராஜரின் 'ஸ்தாபன காங்கிரஸ்' கட்சியானது, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டு, பல போராட்டங்கள் மூலம், தி.மு.க எதிர்ப்பு 'அரசியலில் வலிமையுடன் வளர்ந்தது. தி.மு.கவை விட்டு வெளியேறிய எம்.ஜி.ஆர்,  அக்கட்சியில் சேர முயற்சித்தததையும், காமராஜர் அதை விரும்பாத காரணத்தால், வேறு வழியின்றி, அன்றைய பிரதமர் இந்திராவின் ஆதரவுடனும், பின்பலத்துடனும்,  அ.தி.மு.கவைத் தொடங்கினார்' என்ற தகவலையும், மறைந்த 'நாத்தீகம்' ராமசாமி தனது நினைவுக் குறிப்புகளில் வெளியிட்டுள்ளார். அதன்பின் நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தலில்,  அ.தி.மு.க முதலிடத்தையும், ஸ்தாபன காங்கிரஸ் இரண்டாவது இடத்தையும் பிடிக்க, தி.மு.க மூன்றாவது இடத்தைப் பிடித்தது. அந்த அளவுக்கு, தமிழக இருமுனை அரசியலில், 'தி.மு.க எதிர்ப்பு அரசியலானது', வலிவுடன் இருந்தது. காமராஜர் மறைவிற்குப்பின், 'தி.மு.க எதிர்ப்பு அரசியல்'  என்பது, அ.இ.அ.தி.மு.கவின் 'ஏகபோக' பலமானது.

அந்த பொதுமக்கள் கருத்துருவாக்க செயல்நுட்பம் (public opinion formation mechanism) பற்றிய புரிதலின்றி, தி.மு.கவுடன் அவ்வப்போது, தேர்தலில் கூட்டணி வைத்து,   பயணித்த பெரிய, சிறிய அரசியல் கட்சிகளெல்லாம், தி.மு.கவை எதிர்த்து நிலைப்பாடுகள் எடுக்கும்போது, மக்களிடம் எடுபடாமல் போகிறார்களா? மாணவர்களின் கேலிப்பொருள் வரிசையில் இடம் பெறுகிறார்களா? என்பது ஆய்விற்குரியதாகும்.

அந்த இருமுனை அரசியல் போக்கில், அடுத்த கட்ட மாற்றமாக, 'குடும்ப செல்வாக்கு ஊழல் ஆதிக்க‌' ஆட்சி மீது மக்களுக்கு இருந்த கோபமும் வெறுப்புமே,  1996இல் தி.மு.க ஆட்சிக்கு வரவும், அடுத்தடுத்த ஆட்சி மாற்றங்கள் வரவும் காரணமானது. அந்த புதிய போக்கில், அரசியல் நீக்கத்தில் (Depoliticize),  கொள்கைகள் சருகான நிலையில்,  உரிய பாடங்கள் கற்று, உரிய திருத்தங்களுடன் ஜெயலலிதா,  மக்கள் மத்தியில், தனிநபர் விசுவாசத்தில்,    அதிக செல்வாக்குள்ள தலைவராக உள்ளாரா?  உரிய பாடங்கள் கற்காமல், குடும்ப அரசியல் குழப்பத்தில் மூழ்கி, தி.மு.க எந்த அளவுக்கு பலகீனமாகியுள்ளது? என்பது ஆய்விற்குரியதாகும்…………….. அதிலும் தனிநபர் விசுவாசத்தில், பெரியார் ஈ.வெ.ரா, காமராஜர், அண்ணாதுரை, எம்.ஜி.ஆர் என்ற கட்டங்களை, அந்தந்த கட்டங்களுக்கான ஆதரவாளர்களுடன் கடந்து, 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாள சிதைவின் காரணமாக விளைந்த, அரசியல் நீக்கத்தில் (Depoliticize), கொள்கைகள் சருகாகி போன நிலையில்,  இன்று ஜெயலலிதா நடுத்தர, ஏழை மக்களின்  ஆதரவுடன்  இருப்பதானது, அந்த போக்கின் இறுதிக்கட்டமா? “

கடந்த சில வாரங்களாக, நான் வீதிகளில் நடந்து செல்கையில், சில‌ வீடுகளில் இருந்து வெளிவரும் தொலைக்காட்சி பெட்டி ஒலிகளில், தமிழக முதல்வர் ஜெயலலிதா பேசியது மட்டுமே கேட்க நேர்ந்தது.

எந்தக் கட்சி' ஆட்சியில் இருந்தாலும்,  அடிமட்டத்தில், வார்டு கவுன்சிலர்கள் வரை, 'காண்டிராக்ட்' உள்ளிட்ட 'கூட்டுக் கொள்ளைகளில்', 'பங்கு' பெறாத கட்சியினர் யார்? யார்? என்று கண்டுபிடிப்பது, அந்தந்த கட்சிகளின் தலைமைக்கே சவாலாக இருக்கும் அளவுக்கு, கட்சிகள் எல்லாம், 'ஊழல் அழுகலில் சங்கமமாகி'யுள்ள நிலையில், 'ஊழல் ஒழிப்பு, மது விலக்கு' தொடர்பான தலைவர்களின் பேச்சுக்களுக்கு என்ன விளைவு இருக்கும்? என்பதும் ஆய்விற்குரியதாகும். தி.மு.க எதிர்ப்பு பிரச்சாரங்களில், 'குடும்ப செல்வாக்கு ஊழல் ஆதிக்கம்' பற்றி வெளிப்படுவது போல, அ.இ.அ.தி.மு.க எதிர்ப்பு பிரச்சாரங்களில், 'குடும்ப செல்வாக்கு ஊழல் ஆதிக்கம்' பற்றி வெளிப்படுவதாக தெரியவில்லை. ஊழல் எதிர்ப்பு பிரச்சாரமானது உச்சத்தில் இருப்பதால், அந்தந்த கட்சியில், ஊழல் மூலம் சொத்து சேர்த்தவர்கள்  எல்லாம், அந்தந்த பகுதி வாக்காளர்களிடம், 'தலை குனிந்தே'  தேர்தல் பிரச்சாரம் செய்து வருகிறார்களா? என்பதும், இந்த தேர்தலில் வெளிப்பட்டுள்ள வித்தியாசமான போக்காகும்; திருமணம் போன்ற சமூக‌ நிகழ்ச்சிகளில், அத்தகையோர் பங்கேற்கும் போது, அத்தகையோரின் 'கடந்த காலம்' 'கிசுகிசு'க்கப்படுவது அதிகரித்துவரும் பின்னணியில்; முந்தைய பதிவில் குறிப்பிட்டுள்ளவாறு, 'ஊழல் பூனைகளுக்கு', 'மணி கட்டும்' பணியும் தொடங்கியுள்ள சூழலில்.

1996 தேர்தலில் அ.இ.அ.தி.முகவுக்கு எதிராக வீசிய அலையும், கடந்த சட்டமன்ற தேர்தலில் தி.முகவுக்கு எதிராக வீசிய அலையும், இப்போது இருப்பதாக தெரியவில்லை. ஆனால் டாஸ்மாக் மது, ஊழல் தொடர்பாக, மக்களிடம் 'வெறுப்பு, கோபம்' இருப்பதை உணர முடிகிறது. அது 'அலையாக' இன்னும் மாற வில்லை. மக்களின் கோபமும், வெறுப்பும் 'அலையாக' உருவெடுக்க வேண்டுமானால், தொடர்புள்ள பிரச்சினைகளுக்கு, மக்கள் பார்வையில், 'வில்லனாக', ஒரு குவியம் (Focal Point)  இருக்க வேண்டும். ஒன்றுக்கொன்று எதிரான இரண்டு குவியங்கள் இருப்பதால், 'அலை' உருவாகவில்லையா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 'சர்க்காரியா கமிசன்' ஊழல் விசாரணையில், அன்றைய பிரதமர் இந்திராகாந்தியின் 'கருணையால்' தப்பித்த,  தி.மு.க வும் ஊழல் எதிர்ப்பு பற்றி பேசும் அளவுக்கு, தமிழ்நாடானது 'ஊழல் வெள்ளத்தில்' மூழ்கியுள்ளதா? அப்படி தி.மு.க பேசியதால், அரசுக்கு எதிரான 'அலை' உருவாவது தடை பட்டதா?  கடைசி நேரம் வரை, அ.இ.அ.தி.மு.க மற்றும் தி.மு.கவுடன் கூட்டணி சேர முயன்று, 'பேரம்' படியாமல், அதன்பின் இரண்டு கட்சிகளை எதிர்ப்பதும்,  அலை உருவாவதை கெடுத்ததா? அந்த தடைகளின்றி, அலை உருவாகியிருந்தால், அந்த 'ஊழல் எதிர்ப்பு' வெள்ளத்தில், இரண்டு கட்சிகளுமே 'ஒரே குவியமாக' சிக்கி,  சுவடின்றி அழிந்திருக்குமா? என்பவையும் ஆய்விற்குரியதாகும். சாதாரண பொதுமக்கள் பார்வையில், எந்த அளவுக்கு 'ஒரே குவியமாக', தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய  இரண்டு கட்சிகளும் சிக்கியுள்ளன? அதற்கு மாற்றான நம்பகத்தன்மையில், எந்த அளவுக்கு, 6 கட்சிகளின் ‘மக்கள்நல கூட்டணி’ அமைந்துள்ளது? தனித்து நிற்கும் பா.ஜ.கவும், பா.ம.கவும் அதில், எந்த அளவுக்கு 'போட்டி' போடும்? என்பதானது, அக்கூட்டணியானது, தேர்தல் முடிவுகளில் பெறும், வெற்றி/தோல்விகளில் வெளிப்படும்.   

தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிராக,  கட்சி பாகுபாடின்றி, 'மோடி அரசு', மேற்கொள்ளும்  நடவடிக்கைகளை பொறுத்தே, தமிழ்நாட்டில் அது 'ஒரே குவியமாக', அலையாக மாறுமா? ஆளுயர மாலை, மலர்க் கிரீடம் என்று திராவிடக் கட்சிகள்  அறிமுகப்படுத்திய 'அரசியல் நோய்’களிலிருந்து, தமிழக பா.ஜ.க விடுபடுமா? (‘தமிழ்நாட்டில் மோடி அலை சந்திக்கும் ‘திராவிடச் சிக்கல்கள்’ ‘; 
http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html) என்பது தெளிவாகும்; 'தமிழ், தமிழர், தமிழ்நாட்டின் மீட்சிக்காக', குடும்ப/வாரிசு அரசியலில் சிக்காமல், 'சுயலாப' நோக்கின்றி, 'உணர்ச்சிபூர்வ' போக்கை விடுத்து, 'அறிவுபூர்வமாக' செயல்படும் கட்சிகள் எதுவும் இல்லாத நிலையில். (இருந்தால், தெரிவிக்கவும்;  நன்றியுடன் பரிசீலிக்க உதவும்)

சட்டமன்ற தேர்தலுக்கு முன், 'சொத்துக் குவிப்பு வழக்கின்'  தீர்ப்பு  வெளிவர வாய்ப்பில்லை; உச்சநீதி மன்றம் மே 14 முதல், சூன் 29 வரை விடுமுறையில் இருப்பதால். வாக்காளர்கள்/வாக்குச்சாவடி வரையில், 'தத்தம் திறமைகளை', 'செயல்பூர்வமாக நிருபிப்பவர்களுக்கு' வளர்ச்சியும், இயலாதவர்களுக்கு வீழ்ச்சியும்,  என்ற 'பொறுப்பு கணக்கில்' (Accountability), அ.இ.அ.தி.மு.க மட்டுமே 'தன்னிகரில்லா' சாதனை படைத்து வரும் கட்சியாக இருக்கிறது; எவரையும் ஏற்றவும்/இறக்கவும் முடியும் என்ற வலிமையுள்ள தலைமையில். எனவே  மீண்டும் அவர் முதல்வராகும் வகையிலேயே, சட்டமன்ற தேர்தல் முடிவுகள் இருக்கும்;  கடந்த பாராளுமன்ற தேர்தலில் பெற்ற, சட்டமன்ற தொகுதிகளில் வெற்றி பெற்ற எண்ணிக்கையை விட, வாக்குகள் சேகரிப்பில், 'பொறுப்பு கணக்கில்' (Accountability), எந்த அளவுக்கு பலகீனமாகிறது? என்பதைப் பொறுத்து, குறைவாகவே பெற்றாலும்.  அது வெளிப்படையான ஒன்றாகும். ஆனால் அ.இ.அ.தி.மு.க உள்ளிட்ட அனைத்து கட்சிகளிலும் உள்ள  ஊழல்/சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளுக்கு 'அதிர்ச்சி வைத்தியமாக', 'உள்மறையாக' (Latent), அந்த தேர்தல் முடிவுகள், காலப்போக்கில் நிரூபித்தால், வியப்பில்லை; ஒரே குவியம் இல்லாததன் காரணமாக, 'அலையாக'  உருவெடுக்காத மக்களின் கோபமும், வெறுப்பும் நீடிக்கும் சூழலில் 

அரசியல் நீக்கம் (Depoliticize)  முடிவுக்கு வந்து, (சென்னை வெள்ளத்தில் மீட்பு மூலம் வெளிப்படுத்திய ஆர்வத்தின் தொடர்ச்சியாக‌) 'ஊழல் வெள்ளத்திலிருந்து' தமிழ்நாட்டை மீட்க, இளைஞர்கள், எளிதில் 'ஊழல் தொடர்பான' தகவல்களை தேடி பெற வாய்ப்புள்ள‌ 'டிஜிட்டல்' (Digital) யுகத்தில், 'ஊழல் சொத்துக்களை' பறிமுதல் செய்து, மக்கள் நல திட்டங்களுக்கு பயன்படுத்தும் போக்குகளுக்கான வாய்ப்புகள் ('அரசியல் நீக்கம்' (Depoliticize) காரணமாக கண்ணுக்கு தெரியாமல்,  உள்மறையாக (Latent)) கனிந்து வரும் சூழலில்; (by 2005 Nigeria had recovered $1.2 billion stolen by former President Sani Abacha by requesting assistance from multiple jurisdictions including Switzerland, Jersey, and Liechtenstein;  https://en.wikipedia.org/wiki/International_asset_recovery ) ஊழலுக்கு எதிரான 'செயல்பூர்வ சாதனைகள்' இன்றி, மோடி அடுத்த பாராளுமன்ற தேர்தலை சந்திக்க முடியாது; தமிழ்நாட்டில் பா.ஜ.க 'தலை நிமிர' முடியாது; என்ற சூழலில்; 'அலையாக' உருவெடுப்பதில் தாமதமான, டாஸ்மாக் மது எதிர்ப்பும்,  ஊழல் எதிர்ப்பும், வாய்ப்பு கிடைக்கும்போது, இன்னும் வீரியமான 'அலையாக', உருவாக உள்ள சூழலில்; தேர்தல் பிரச்சாரம் தொடர்பான, ஊடகங்களின் இரைச்சல்களுக்கிடையில், அரசியல் நீக்கத்தில் (Depoliticize), சாதாரண பொதுமக்கள் ஆர்வமின்றி இருப்பதானது, 'புயலுக்கு' முன், வெளிப்படும் 'அரசியல் காற்றழுத்த தாழ்வு மண்டிலமா'? என்பதும் ஆய்விற்குரியதாகும்;

தமிழ்நாட்டில், சமூக இயக்கவியலில் (Social Dynamics), வீழ்ந்து வரும்/வளர்ந்து வரும் சமூக விசைகளை (Social Forces)  கணக்கில் கொண்டால்.

தமிழ்நாட்டை பற்றிய எனது புரிதலும் எந்த அளவுக்கு சரியானது?  என்பதும் சட்டமன்ற‌ தேர்தல் முடிவுகள் மூலம் வெளிப்படும்.

No comments:

Post a Comment