Wednesday, October 15, 2014



தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (7)


‘தமிழ்க் கூட்ட அழிவு நோயும்’ - (TCCD), தரகு நோயும்


தமிழ்நாடானது,  தமிழ்க் கூட்ட அழிவு நோயில்(Tamil colony collapse disorder- TCCD)
( http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_14.html )
சிக்கியதன் காரணமாக, தமிழும், தமிழ்ப் பாரம்பரியமும் மற்றும் பண்பாடும் எவ்வளவு வேகமாக அழிந்து வருகின்றன‌, என்பதை வெளிப்படுத்தும் நோயின் அறிகுறிகள் யாவை?


'அசையா சொத்து, உடல் உழைப்பு, அறிவு உழைப்பு' போன்றவற்றில் தமிழ்நாட்டில் பிற மாநிலத்தினர், வெளிநாட்டினர் செல்வாக்கு அதிகரித்து வரும் பின்னணியில், தமிழர்கள் எவ்வளவு பலகீனமாகி வருகிறார்கள் என்பதும்,

அதன் காரணமாக தமிழர்கள் எவ்வளவு 'வேகமாக' தரகர்களாகவும்(Brokers), அத்தரகர்கள் உதவியுடன் 'மாட்டிக் கொள்ளாமலும், மாட்டிக் கொண்டாலும் மிகக் குறைவான தண்டனைகளே' அனுபவிக்கும் திறமையுள்ள திருடர்களாகவும், பணத்துக்காக கொலை செய்யும் கொலையாளிகளாகவும், தற்கொலை, போதை, உள்ளிட்டு பலவகை மன நோய்களுக்கு ஆட்பட்டவர்களாகவும் வளர்ந்து வருகிறார்கள் என்பதும்,

 தமிழ்வழி பயிலும்  மாணவர்களின் 'எண்ணிக்கை' 'மேலேக் குறிப்பிட்ட 'அதே வேகங்களில்' குறைந்து வருகிறதா என்பதும், 

தமிழில் ஆங்கிலச் சொற்கள் கலப்பதும், எழுத்தாளர்களின் எழுத்துக்களிலேயே இலக்கணம் 'மேலேக் குறிப்பிட்ட 'அதே வேகங்களில்' பலகீனமாகி வருகிறதா என்பதும்,

தமிழ்க் கூட்ட அழிவு நோயில் தமிழ்நாடு சிக்கியதன் காரணமாக, வெளிப்பட்டு வரும் நோய் அறிகுறிகளாகும்.

தமிழ்நாட்டின் அசையாச் சொத்துக்கள் 1967 முதல் இன்றுவரை என்ன வேகத்தில் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினர் வசமாகிக் கொண்டிருக்கின்றன‌, என்பதை ஒரு வரைபடத்தில் குறித்தால், கடந்த 20 வருடங்களில், திராவிடக் கட்சி ஆட்சிகளில் குடும்ப செல்வாக்குகள் அதிகரித்த வேகத்தில், 'அதிவேகமாக' அதிகரித்துள்ளது வெளிப்பட்டால் வியப்பில்லை. அந்த 'வசமாகும்' போக்கில் 'தரகர்களாக'ச் செயல்பட்டு, குறுகிய காலத்தில் 'பணக்காரர்' ஆகும் நோயில் வீழ்ந்த தமிழர்களின் 'ஆர்வமான' பங்களிப்பும் அந்த 'அதிவேக வளர்ச்சிக்கு'க் காரணமாகும்.  அந்த 'குறுகிய கால'ப் பணக்காரர்களே அவர்களைச் சேர்ந்த குடும்ப, சாதி உறவுகள் மட்டத்தில், மற்ற தமிழர்களுக்கு 'முன்மாதிரியாக' (Role Model)  இருக்கிறார்கள். அந்த முன்மாதிரி சமூக செயல்பாடு(Role model Social Mechanism), மற்ற‌ தமிழர்களை 'தரகர்களாகும்' நோயில் சிக்க வைப்பதும் அதிவேகமாக வளர்ந்து வருகிறது.

‘ஒரு நபர் 'எவ்வளவு சீக்கிரம் பணக்காரராகி, திரிந்த, மேற்கத்தியப் பண்பாட்டிலான 'சுகங்களை' அனுபவிப்பது போன்றவற்றிற்கு அவரின் நேரத்தையும், ஆற்றலையும் செலவ‌ழிப்பதில் அவருக்குள்ள 'சுதந்திரம்' என்பது பயன்பட்டால், அவர் உள்ளார்ந்த ஈடுபாடுகள்(Passions)  உள்ளிட்ட மற்ற பயனுள்ள துறைகளில் ஈடுபட முடியாது' என்ற கருத்தை நோபெல் பரிசு பெற்ற அமர்த்யா சென் தனது ' Development as Freedom ' (prologue) என்ற புத்தகத்தில் விளக்கியுள்ளார்.செல்வாக்குள்ள ந‌பர்களிடம் நாய்போல் குழைந்து காரியம் சாதிக்கும் திறமைகளை வளர்ப்பதில் அறிவு உழைப்பைக் குவியப்படுத்தி(focused) , செயல்பட வைப்பது இந்த 'தரகு' நோயின் சிற‌ப்பம்சமாகும். தமிழ்நாட்டில் இத்தகைய 'வாழ்வியல் புத்திசாலி நாய்களாக' தமிழர்கள் பெருமளவில் வளர்ந்து வருகிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அத்தகையோரில் சிலர் 'தமிழ், தமிழுணர்வு,பகுத்தறிவு, ஆன்மீகம், பொதுவுடமை' உள்ளிட்ட 'முற்போக்கு, பிற்போக்கு' முகமூடிகளுடன் 'அதிவேக' வளர்ச்சியிலுள்ளார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

தமிழ்நாட்டில் தமிழர்களிடம் உள்ள அறிவு உழைப்பு, உடல் உழைப்பு திறமைகளெல்லாம் மேலேக் குறிப்பிட்ட தரகு செயல்நுட்பத்தில் சிக்கியபின், தமிழ்நாட்டில் அறிவு உழைப்பிலும், உடல் உழைப்பிலும் திறமைசாலிகளாக‌ தமிழ்நாட்டில் வாழும், வாழ நுழையும் பிற மாநிலத்தவர்  மாறி வருவதைக் குறை கூற முடியுமா? தமிழ்நாட்டிலுள்ள அசையாச் சொத்துகளும் பிற மாநிலத்தவர், வெளிநாட்டினர் வசம் மாறி வருவதையும் குறை கூற முடியுமா? அவர்கள் மேல் கோபம், வெறுப்பை வளர்ப்பதால் ஏதும் பயனுண்டா? அல்லது நிலைமை இன்னும் மோசமாகுமா?

தமிழ்நாட்டு தரகு நோயில் தமிழர்கள் அதி வேகமாகச் சிக்கும் போக்கிற்கு ‘சமூக ஒப்பிடு நோய் ' (social Comparison) , ‘வினை ஊக்கி’யாகச்  (catalyst) செயல்படுகிறது.

தாம் விழித்திருக்கும் நேரமெல்லாம், தம்மையும் தமது குடும்பத்தையும் பிறருடன் ஒப்பிட்டு, அதன் விளைவாக, மன அழுத்தம், எரிச்சல், கோபம் போன்ற எதிர் உணர்வுகளுக்கு ஆளாகி, இவற்றின் ஒட்டு மொத்த விளைவாக, பல்வேறு உடல்நோய்களுடன் வாழும் நோய்க் குடும்பங்களாக, தமிழர் குடும்பங்கள் தமிழ்நாட்டில் வளர்வதும் ‘தமிழ்க் கூட்ட அழிவு நோயின்’ அறிகுறியே ஆகும். இந்த ‘சமூக ஒப்பீடு நோயை’ப் பற்றிய விரிவான விளக்கமானது  Barry Schwartz   எழுதிய ‘‘The Paradox of Choice why more is less ‘  என்ற நூலில் உள்ளது. 

தமிழ்நாட்டில் பிராமணர், பிராமணரல்லாதோர் வேறுபாடுகளின்றி, பெரும்பாலான, குறிப்பாக வசதி வாய்ப்புகளில் உயர்ந்து வாழும் குடும்பங்களில், ஆங்கில வழி, மற்றும் திரிந்த மேற்கத்திய மோகத்தில், சமூக ஒப்பீடு நோயில் சிக்கியுள்ள‌ பெற்றோர்களின் கனவுகளுக்காக, ஒரு வகையிலான சமூகச் சிறைக் கூண்டுகளில் குழந்தைகள் வளர்வது சகிக்க முடியாத கொடுமையாகும். இயல்போடு சமூகத்துடனும், இயற்கையினுடனும் தொடர்பு கொண்டு, தமது இயல்புக்கு ஒட்டிய திறமைகளுடன் உள்ளார்ந்த ஈடுபாடுகளை வளர்த்து வளர வேண்டிய குழந்தைகள், அந்த 'சமூகச் சிறைக்கூண்டு' வளர்ச்சி முறையில் கல்லூரி மாணவர்களாகும் போது, சமூக முதுகெலும்பற்ற 'அடிமைகளாகவோ, அல்லது வன்முறை, போதைப் பழக்கங்களுக்கு உள்ளான முரடர்களாகவோ வெளிப்படுகிறார்கள். பெற்றோருக்கு 'செல்ல அடிமையாக' நாய்க்குட்டி போல் வளர்ந்தவர்கள்,  திருமணத்திற்குப்பின் தன் துணைவிக்கும்/துணைவருக்கும் 'அடிமைகளாக' வாழ்கிறார்கள். அல்லது பெற்றோருக்கும், துணைவிக்கும்/துணைவருக்கும் இடையே யாருடைய ஆதிக்கத்தில் அடிமையாக வாழ்வது என்ற 'போரில்' சிக்கி வாழ்ந்து மடிகிறார்கள்; தமிழுக்கும், தமிழ் பாரம்பரியப் பண்பாடுகளுக்கும் எந்த தொடர்பும் இல்லாமல்.இந்த சமூகச் சூழலில்,   ‘CCD’ நோயில் தேனீக்க்ள் கூட்டம் கூட்டமாக சுவடின்றி அழிந்தது போல், ‘TCCD’ நோயில் தமிழும், தமிழ் பாரம்பரியப் பண்பாடுகளும் அழியத் தொடங்கியுள்ளன.

தரகுத் திறமைகள் (Broker skills)  முக்கியத்துவம் பெற்று, சமூக ஒப்பீடு நோய் ஆதிக்கம் பெற்றுவரும் சமூக சூழலில், தமிழ்க்குடும்பங்களில் உள்ள குழந்தைகள் ஆங்கில வழியில் பயில்வதன் காரணமாக, தாய்மொழி வழியில் இயல்பாக அடைய வேண்டிய புலன் உணர்வுகள் தொடர்பான மூளை வளர்ச்சியின்றி வளர்ந்து வருகிறார்களா? தமிழ்நாட்டில் தரத்தில் உயர்ந்த பொறியியல் கல்லூரிகளில் சாதனையாளர்களாக வெளிப்படும் மாணவர்களில் பெரும்பாலோர் வெளி மாநிலங்களைச் சார்ந்தவர்களா? போன்ற கேள்விகளை இனியும் புறக்கணிப்பது நல்லதல்ல.

மேலேக் குறிப்பிட்ட நோய் அறிகுறிகள் பற்றி தமிழ்நாட்டில் எவ்வளவு பேர் கவலைப்பட்டு, அந்நோயிலிருந்து தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் மீட்க, சுயலாப நோக்கின்றி தமது நேரத்தையும், ஆற்றலையும், பொருளையும் செலவழிக்கிறர்களோ, அந்த அளவுக்கு அந்நோயிலிருந்து விடுபடுவதற்கான சமூக ஆற்றல் உருவாகும்.அத்தகைய சமூக ஆற்றலை நெறிப்படுத்தி, பலன்கள் விளைய வேண்டுமானால், சுயலாப நோக்கற்ற 'தமிழ், தமிழுணர்வு' அமைப்புகள் தமிழ்நாட்டில் செயல்பட வேண்டும்.

'தமிழ், தமிழுணர்வு' அமைப்புகள் மூலம், மேலேக் குறிப்பிட்ட நோய்களில் சிக்கிய ‘நோயாளிகள்’ மருத்துவரான விந்தை  அரங்கேறுகிறதா? இல்லையா? என்ற ஆய்வின் அவசியம் குறித்து முந்தையப் பதிவில் பார்த்தோம்.

விருப்பு வெறுப்பின்றி, திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும் அந்த ஆய்வை மேற்கொள்வதில் தான் தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சி இருக்கிறது. அதற்கு வாய்ப்பில்லை என்றால், 2100-இல் தமிழ்நாடு இருக்கும. தமிழ் மொழியும், தமிழ்ப் பாரம்பரியமும், பண்பாடும் இழந்த தமிழர்கள், தமிங்கிலீசர்களாகி விதி விலக்குகள் தவிர்த்து, பெரும்பாலும் தரகர்களாகவும், திருடர்களாகவும் வாழ, தமிழ்நாட்டில் குடியேறிய பிற மாநிலத்தவர், வெளிநாட்டினர் வசம் அறிவு உழைப்பும், உடல் உழைப்பும், அசையாச் சொத்துக்களில் பெருமளவும் இருக்கும்.

தமிழின், தமிழர்களின், மீட்சிக்காக எழுதப்பட்ட இது போன்ற பதிவுகள் எல்லாம், தமிழ் மொழியின், பாரம்பரியத்தின், பண்பாட்டின் மரண சாட்சியங்களாகக் கருதப்பப்படும் நிலை வரலாம். 

No comments:

Post a Comment