Saturday, April 1, 2017

 சமூக சீரழிவு போக்கில், பெரிய தலைமுறை படைப்பாளிகளின் 'லக்ஷ்மண் கோடு'ம்;


சமூக மீட்சிப் போக்கில், இளைய‌ தலைமுறையின் 'எதிர் லக்ஷ்மண் கோடு'ம்;

இயக்குநர் மணிரத்னம் வெளிப்படுத்திய திறவுகோல் 

              
"யெஸ். இது க‌ம்பைன் ஆர்ட். ஆக்சுவலா ஒரு டைரக்டர் என்பவர் எதுவும் பண்ணுவதில்லை. மற்றவர்கள் பண்ணுவதை ஒருங்கிணைக்கிறார்....... என்னுடன் பயணிப்பவர்களை அந்தக் குறிப்பிட்ட ஒரு கதைக்கான மனநிலைக்குக் கொண்டு வந்து, அவர்களின் பெஸ்டை வாங்கி, அதைக் கோவையாக சேர்த்து சினிமாவாக்குகிறேன். அவ்வளவு தான்" மணிரத்னம்;   'மணிரத்னம் ரஹ்மான் ஓப்பன் டாக்!’- ‍ ஆனந்த விகடன் 5.4.2017

தன்னுடன் 'பெஸ்ட்' வழங்கி பயணித்தவர்கள் எல்லாம் ஒதுங்க, 'கிடைக்கும்' நபர்கள் திறமைகள் எல்லாம் 'அந்த அளவுக்கு' இல்லையென்றால், மணிரத்னம் இயக்கி வெளிவரும் படங்கள் எல்லாம் எப்படி இருக்கும்? என்ற கேள்விக்கான விடையை, மறைந்த இயக்குநர் சிரிதர்  தந்துள்ளார்.

'கல்யாணப் பரிசு', 'காதலிக்க நேரமில்லை', 'ஊட்டி வரை உறவு' போன்ற இன்னும் பல சிறப்பான படங்களை தந்தவர், தமது கடைசி காலத்தில் இயக்கி வெளிவந்த படங்கள் எல்லாம் ஏன், அந்த அளவுக்கு இல்லை?

பிரிந்து, திரை உலகை விட்டு விலகியிருந்த விஸ்வநாதனையும், ராமமூர்த்தியையும் மீண்டும் சேர்த்து, சத்யராஜ் கதாநாயகனாக நடித்து வெளிவந்த படத்தில், விஸ்வநாதன் - ராமமூர்த்தி இசையானது, ஏன் எடுபடவில்லை?

சிரிதராக இருந்தாலும், விஸ்வநாதன் - ராமமூர்த்தியாக இருந்தாலும், தம்மிடம் 'பெஸ்ட்' வழங்கி பயணித்தவர்கள் எல்லாம் ஒதுங்கிய பின், 'கிடைக்கும்' நபர்கள் திறமைகள் எல்லாம், 'அந்த அளவுக்கு' இல்லையென்பதை பற்றி, கவலைப்படாமல், 'படைப்புகளை' வழங்க முற்பட்டதே, அதற்கு காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

கூட்டுமுயற்சியில் ஒருங்கிணைத்து பயணிப்பவர்களுக்கு, கிடைக்கும் 'ஒளிவட்டத்தை' மட்டுமே நம்பி, அந்த வெற்றியின் கூட்டு முயற்சி செயல்நுட்பம் பற்றிய புரிதலின்றி, அந்த படங்களின் தயாரிப்பாளர்கள் எல்லாம், அது போன்ற படைப்புகளுக்கு முதலீடு செய்தார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அந்த படைப்புகள் எல்லாம் வியாபார ரீதியில் தோல்வியைத் தழுவியிருந்தால், அது அவ்வாறு முதலீடு செய்தவர்களுக்கு மட்டுமே நட்டத்தை விளைவித்திருக்கும்.

மாறாக அது போன்ற தவறை, சமூகத்தில் செல்வாக்குள்ள தலைவர், தெரிந்தோ, தெரியாமலோ, செய்ய நேரிட்டால், அது அந்த சமூகத்தை எவ்வளவு பாதிக்கும்? என்ற ஆய்வுக்கு, ஈ.வெ.ரா அவர்களின் பொதுவாழ்வினை உட்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கருதுகிறேன்.

சிரிதரின், விஸ்வநாதன் - ராமமூர்த்தியின் காலத்தை வென்ற படைப்புகளைப் போலவே, தமிழ்நாட்டின் வரலாற்றில் இடம் பெற்றவை 'வைக்கம் போராட்டமும்', '1938 இந்தி எதிர்ப்பு போராட்டமுமாகும்'.

அந்த இரண்டு போராட்டங்களுமே எப்போது முளை விட்டு, எப்படி வளர்ந்து, யார் யாரெல்லாம் பங்களிப்பு வழங்கி, அந்த வளர்ச்சி கட்டத்தில் எப்போது ஈ.வெ.ரா அவர்கள் சேர்ந்தார்? என்ற ஆய்வே, அந்த இரண்டு போராட்டங்கள் மூலமாக, ஈ.வெ.ரா பெற்ற 'ஒளி வட்டம்' எவ்வாறு உருவாகி, இன்று என்ன நிலையில் உள்ளது? என்ற கேள்விகளுக்கான விடைகளைத் தரும்.

அந்த இரண்டு போராட்டங்களும் ஈ.வெ.ராவிற்கு ஏற்படுத்திய 'ஓளி வட்டத்தில்', தமது அறிவு வரை எல்லைகள் (intellectual limitations) பற்றிய புரிதலின்றி, காலனிய சூழ்ச்சியில் 'திரிந்த இனம்' என்ற புதை குழியில் சிக்கி, 1944இல் 'திராவிடர் கழகம்' தொடங்கினார், என்பதையும்;

அதன்பின் தன்னுடன் பயணித்தவர்களிட‌ம், 'பொதுவாழ்வு வியாபார' கூறுகள் வெளிப்பட்டதை கண்டுபிடித்து, 1948 தூத்துக்குடி மாநாட்டு உரையில் வெளிப்படுத்தினார், என்பதையும்;

பின் அதிலிருந்து 'சறுக்கி', அதனாலும் பலனில்லை என்பதை உணர்ந்து, 1949 முதல் 1967 வரை , 'பொதுவாழ்வு வியாபாரத்திற்கு' எதிராக எழுதியும், பேசியும் பலனில்லை என்பதையும் உணர்ந்து;

1967க்குப் பின் முதல்வர் அண்ணாவிடம், 'முனிவராக 'பொதுவாழ்விலிருந்து ஒதுங்க விரும்பிய எண்ணத்தை தெரிவித்ததையும்;

ஏற்கனவே எனது பதிவுகளில் விளக்கியுள்ளேன்.

அந்த போக்கில், தமிழ்நாட்டில் ஏற்பட்ட புலமை வீழ்ச்சியையும் பதிவு செய்துள்ளேன்.

‘இத்தகைய போக்கு 1944-இல் நீதிக்கட்சி திராவிடர் கழகமாக மாறி, 'உணர்ச்சிபூர்வ எதிர்ப்பு, கோபம், வெறுப்பு" என்ற திசையில் பயணிக்கத் தொடங்கியபின், 'வேகமாக' வளர்ந்ததா? என்ற கேள்விக்கு, 1944-க்கு முன்னும், பின்னும் வெளிவந்த இதழ்களையும், நூல்களையும் ஆராய்வது பயனளிக்கும்.‘ (http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_14.html  )

தமிழ்நாட்டில் புலமை வீழ்ச்சிப் போக்கில் 'வழிபாட்டு புழுதிப் புயல்' உருவாகி, அதில் பாரதி, அண்ணா போன்று இன்னும் பலர் சிக்கியுள்ளதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_5.html )

அந்த 'வழிபாட்டு புழுதிப் புயலில்', அறிவுபூர்வமான வாதங்களை முன்வைத்தால், என்ன பாதகமான விளைவுகளை சந்திக்க நேரிடும்? என்பதற்கு வரலாற்று சாட்சியாக, 'தொல்காப்பிய பூங்காவில் களைகள்' நூல் எழுதி, சாகும் வரை தமது நண்பர்களின் பாதுகாப்புடன், அ.நக்கீரன் அவர்கள் வாழ்ந்து மறைந்துள்ளார். (http://library.tncpim.org/cgi-bin/koha/opac-detail.pl?biblionumber=2000 )

அத்தகைய சமூக சூழலில், "தமிழில் அசோகமித்திரன், பாலு மகேந்திரா போன்ற இன்னும் பல,  'புகழ்' பெற்ற  படைப்பாளிகள் எல்லாம் 'எதற்கு வம்பு?' என, ஒரு 'லக்ஷ்மண் கோடு' தாண்டாமல் தான் 'படைத்து' வந்தார்களா, வருகிறார்களா?" (http://tamilsdirection.blogspot.in/2017/03/blog-post_26.html ) என்ற கேள்வியை நான் எழுப்பியது, அவர்கள் மீது குற்றம் சுமத்துவதற்காக அல்ல.

அரசியல் கொள்ளைக்காரர்களுடன் 'நேசமாகி' 'நேரடியாகவும், மறைமுகமாகவும் பலன்கள்' பெற்று, ஆனால் 'முற்போக்கு, சமூக நீதி' முகமூடிகளுடன் பயணித்தவர்கள்/பயணிப்பவர்கள் வரிசையில் இடம் பெறாமல், தமது வரை எல்லைகள் பற்றிய புரிதலுடன் வாழ்ந்த, மதிக்கத்தக்க படைப்பாளிகளாகவே, அவர்களை நான் கருதுகிறேன்.

மறைந்த அ.நக்கீரன் போல வாழாமல், மேலே குறிப்பிட்ட பதிவில் விளக்கியுள்ளவாறு, தமிழ்நாட்டில் 'புகழ்' பெற்ற பெரும்பாலான படைப்பாளிகள் எல்லாம், தமிழ்நாட்டில் போக்கை தீர்மானித்த களங்களையெல்லாம், பெரும்பாலும் 'வாழ்வியல் புத்திசாலித்தனத்துடன்' தவிர்த்து, ஏன் வாழ்ந்தார்கள்/வாழ்கிறார்கள்? என்று அவர்கள் மீது குற்றம் சுமத்துவதில், எந்த பிரயோசனமும் கிடையாது.

1944க்கு முன் வைக்கம் போராட்டம், 1938 இந்தி எதிர்ப்பு போராட்டம் வெற்றிகளுக்கு பின் பலமாக இருந்து, ' 'பெஸ்ட்' வழங்கி பயணித்தவர்கள் எல்லாம்', ஈ.வெ.ரா அவர்களின்  1944 திசை திருப்பலுக்குப் பின், வற்றி, இன்று 'வறண்ட பாலைவனமாக' தமிழ்நாடு உள்ளதா? அந்த 'வற‌ண்ட பாலைவன' சமூக சூழலே, இழிவுக்கு இலக்கணமான மனிதர்களின் ஆதிக்கத்தில் சிக்கி, பொதுவாழ்வு வியாபாரமானது 'கிடுகிடு'வென தமிழ்நாட்டில் அரங்கேறியதா? என்ற ஆய்வினை இனியும் தாமதப்படுத்தலாகுமா?

'ஒளி வட்டத்தை' ஊதிப் பெருக்கும் வழிபாட்டுப் புழுதிப் புயலும், பொதுவாழ்வு வியாபாரமும், ஒன்றையொன்று வளர்த்து வரும் போக்கிற்கு, மேலே குறிப்பிட்டுள்ள 'லக்ஷ்மண் கோடு', பாதுகாப்பு கேடயமாக பயன்பட்டு வருகிறது.

அப்படிப்பட்ட சமூக சூழலில் வாழ்ந்து வரும், நாம் ஒவ்வொருவரும், அதற்கு பொறுப்பாவோம்.

அந்த சமூக சூழலை மாற்றுவதற்கு, வழிபாட்டு புழுதிப் புயலிலிலிருந்து தமிழ்நாட்டை மீட்க, அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவிக்கவும், 'உணர்ச்சிபூர்வ' போக்குகளை வெறுத்தும், நாம் பயணிக்கவில்லையென்றால், அந்த சீரழிவிற்கு பங்களிக்கும் சமூக குற்றவாளிகளாகவே, நாம் வாழ்வோம். 

மறைந்த முதல்வர் ஜெயலலிதா   74 நாட்கள் அப்போல்லா மருத்துவமனையில் இருந்து, 'மர்மமான முறையில்' அப்பொல்லோவில் இருந்த சிசிடிவி கேமராக்களை அகற்றி, 'சிகிச்சை பலனின்றி'(?) இறந்து, சட்டமும், சமூக நெறிகளும் தமிழ்நாட்டில் கேலிக்கிடமான இழிவைப் பற்றி (http://tamilsdirection.blogspot.in/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_5.html ), தமிழ்நாட்டில் கவலைப்பட்டு, 'துணிச்சலுடன்' அதை வெளிப்படுத்திய, 'மீடியா வெளிச்சத்தில்' உள்ள படைப்பாளிகள் யார்? அந்த துணிச்சலின்றி, தமது சமூக வட்டத்திற்குள் 'கிசுகிசுத்து'க் கொண்ட, 'படைப்பாளி கோழைகள்’ யார்? என்ற ஆய்வானது;

மேலே குறிப்பிட்ட பாதுகாப்பு கேடயத்தின் துணையுடனேயே, அந்த இழிவானது அரங்கேறியதா? என்ற கேள்விக்கான விடையைத் தரும்.

தமிழ்நாட்டை சீரழித்த/சீரழிக்கும் 'பூனை'களுக்கு 'மணிகட்ட பயப்படும்' எலிகளாகவே, ஒரு சமூகத்தின் படைப்பாளிகள் எல்லாம் பயணித்தால், அந்த சமூகத்தில், தாய் மொழி மரணப்பயணத்திலும், இயற்கை வளங்கள் எல்லாம் 'ஊழல் சுனாமி'யிலும், மக்களில் பெரும்பாலோர் பணம் சம்பாதிக்க 'எதையும்' இழந்து 'வாலாட்டும்' நாய்களாகவும், சிக்கி சீரழிவதைத் தடுக்க முடியுமா?

அதே நேரத்தில், பூனைகளுக்கு மணி கட்ட முயற்சித்தாலும், அதையும் கெடுக்கும் அளவுக்கு தமிழ்நாட்டு சமூக சூழல் இருப்பதை, 'திருச்சி பெரியார் மையம்' மூலம் நான் பெற்ற அனுபவங்கள் உணர்த்தின. நேர்மையான சுயசம்பாத்தியம் இல்லாதவர்களுடன் சேர்ந்து, பொது அரங்கில் பயணிப்பதானது, சமூக கேடாகவே முடியும்.

அவ்வாறு பயணிக்கும் போது, தப்பித் தவறி 'பூனைக்கு', நாம் 'மணி கட்டினாலும்', நம்மோடு பயணித்த, அகத்தில் சீரழிந்த,  'அந்த கோழை எலிகள்' எல்லாம், நம்மையே ஓரங்கட்டி, 'அந்த வெற்றியையும்',  'சாண் ஏறி முழம் சறுக்கின கதையாக்கி ' விடுவார்கள், என்பது போன்ற அனுபவ‌ங்களும் எனக்குண்டு. அந்த போக்கில், 'எலிகளாக' இருந்தவர்கள், 'மோசமான பூனைகளாக' வலம் வந்ததும்/ வருவதும், அந்த அனுபவங்களில் அடக்கம். 1944வரை இணையற்ற தியாகம் மூலம் ஈ.வெ.ரா அவர்கள் சேமித்திருந்த சமூக ஆற்றல்கள் எல்லாம், 'கோழை எலிகளுக்கு' தீனியாகி, அவை சமூகத்திற்கு கேடான 'மோசமான பூனைகளாக' ஆதிக்க வலம் வர, வழி வகுத்ததா? என்ற கேள்வியும், அதன் காரணமாக எழுந்துள்ளது.

'தீதும் நன்றும் பிறர் தர வாரா' என்ற புறநானூற்று வரிகளை வாழ்வில் கடைபிடிக்காமல், நான் பயணித்ததே, அதற்கு காரணமாகும்.

'பெரியார்' இயக்கத்தில் நுழையும் முன், எனது சமூக வட்டத்தில், அகத்தில் சுயலாபக் கள்வர் நோயுடன், புறத்தில் 'முற்போக்கு' வேடமணிந்து எவரும் இருந்ததில்லை.

'பெரியார்' கொள்கையிலிருந்து விலகி வாழும், இந்த கட்டத்தில்;

‘தனி மனித உறவுகளில் லாப நட்டம் பார்த்து, நெருங்கும்/ஒதுங்கும், 'விபச்சார' தொழில்நுட்ப புலமையாளர்களை' ஒதுக்கி; என் மீது தாம் காணும் குறைகளையும், என்னுடன் நேர்மையாகவும், சமூக பொறுப்புணர்வுடனும் விவாதிப்பவர்களையே,  எனது சமூக வட்டத்தில் அனுமதித்து வாழ்கிறேன்.’ என்பதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html )

இடையில் நான் ஏமாந்து, அகத்தில் சீரழிந்த, 'புற முற்போக்குகளை', எனது சமூக வட்டத்தில் அனுமதித்தானது; ஈ.வெ.ரா அவர்கள் பயணித்த திசையில், நானும் பயணிக்க முற்பட்டதன் விளைவாகும்; கீழ்வரும் கண்டுபிடிப்புக்கு வழி வகுத்ததானது, அதன் பலனாகும்.

1944இல், தி.க தோற்றத்தில், பொது அரங்கானது திசை மாறி, உணர்ச்சிபூர்வ போக்கில், வழிபாடும் அரங்கேறி, நேர்மையான உழைப்பு, சுய சம்பாத்தியம், ஆகிய திறமைகளும் ஆர்வமும், 'இயல்பிலேயே' இல்லாத சிற்றின மனிதர்கள் எல்லாம், பொதுவாழ்வு வியாபாரிகளாக வளர்ந்த விளைவின் உச்சக்கட்டமே, இன்று 'சசிகலா பினாமி ஆட்சி'யாகும். 

1967-இல் முதல்வரான அண்ணா மனமுடைந்து விரைவில் மரணமடைய விரும்பிய அளவிற்கும்,


ஈ.வெ.ரா அவர்கள் பொதுவாழ்விலிருந்து 'முனிவராக' ஒதுங்க விரும்பிய அளவிற்கும்,

முளை விட்டு வளர்ந்த பொதுவாழ்வு வியாபாரமானது;

1991க்குப்பின் தான், கிரானைட், தாதுமணல் உள்ளிட்ட அனைத்து இயற்கை வளங்களையும் ஊழல் பெரும்பசியின் தீனியாக்கி, தனியார் சொத்துக்களையும் அச்சுறுத்தி அபகரிக்கும் 'விசுவரூபம்' ஆகி, தமிழ்நாட்டை சீரழித்தது;

மேலே குறிப்பிட்ட  'லக்ஷ்மண் கோடு'க்கு பயந்த படைப்பாளிகள் எல்லாம், அதை கண்டு கொள்ளாமல், 'பார்ப்பன எதிர்ப்பு, பகுத்தறிவு, தனி ஈழம், தனித் தமிழ்நாடு' என்று பேச்சுக்கள் மூலமும், கவிதை உள்ளிட்ட எழுத்துக்கள் மூலமும் வெளிப்படுத்தியவையெல்லாம்;

தமிழ்நாட்டில் செல்வாக்கிழந்துவரும் 'குடுகுடுப்பைக்காரன்கள்' வரிசையில், அவர்கள் எல்லாம் இடம் பெற்று, சாதாரண மக்களிடமிருந்து அந்நியமாகி;

இன்று 'சசிகலா பினாமி ஆட்சி' அரங்கேறவும் காரணகர்த்தாக்கள் ஆகியுள்ளனர். அதைத் தொடர்ந்து, இணைய ஊடகத்தில், அத்தகையோர் 'ஜோக்கர்களாகவும்' வலம் வர தொடங்கி விட்டார்கள்.(http://tamil.oneindia.com/memes/memes-on-internet-making-fun-vaiko-278793.html )

எனவே தமிழ்நாட்டில் இந்துத்வா ஆதரவு, எதிர்ப்பு உள்ளிட்டு எந்த கட்சியாக இருந்தாலும்:

நேர்மையான உழைப்பு, சுய சம்பாத்தியம், இன்றி பொதுவாழ்வில் வலம் வருபவர்களை அடையாளம் கண்டு, நாம் ஒவ்வொருவரும், துணிச்சலுடன், இழப்புகளை விரும்பி ஏற்று, அத்தகையோரை, நமது சமூக வட்டத்திலிருந்து அகற்றி, பயணித்தால் மட்டுமே:

தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு நாம் பங்களிப்பு வழங்க இயலும். தவறினால், பொதுவாழ்வு வியாபாரிகளின் 'முதலில்லா - அதீத லாபம் ஈட்டும் - மூலதனமாக' (Capital without investment), தமிழும், தமிழுணர்வும் பயன்படுவதை தடுக்கவும் முடியாது. (http://tamilsdirection.blogspot.in/2017/03/blog-post_17.html )

எனது தலைமுறையின் தோல்வியாக, 'பூதமாக' வளர்ந்துள்ள 'பொதுவாழ்வு வியாபாரமானது', அதன் மரணவாயிலை நெருங்கி விட்டதா? என்ற கேள்வியை எழுப்பி, இன்றைய இளைய தலைமுறையானது, சாதனை படைக்கத் தொடங்கியுள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ளவாறு,  'புகழ்' பெற்ற  படைப்பாளிகள் எல்லாம் 'எதற்கு வம்பு?' என, ஒரு 'லக்ஷ்மண் கோடு' தாண்டாமல் வாழ்ந்து வரும் போக்கில்;

சுயசம்பாத்தியமுள்ள இளைஞர்களும், சுயசம்பாத்தியமுள்ள பெற்றோர்களைக் கொண்ட மாணவர்களும், அந்த 'லக்ஷ்மண் கோடு'க்கு எதிரான‌,  ஒரு 'தனித்துவமான 'லக்ஷ்மண் கோடு' தாண்டாமல் வாழ்ந்து வரும் போக்கினையும், நான் கண்டுபிடித்துள்ளேன்.

சுமார் 50 வயதுக்கும் அதிகமானவர்கள் எவரும் எளிதில் 'இயல்பாக' அவர்களுடன் உரையாடல் உள்ளிட்ட எந்த தொடர்புக்கு முயற்சித்தாலும், 'புத்திசாலித்தனம் மிகுந்த இலாகவத்துடன்' தவிர்க்கும், 'வலிமை மிகுந்த 'லக்ஷ்மண் கோடு' பாதுகாப்புடன், அந்த இளைஞர்களும், மாணவர்களும் பயணித்து வருகிறார்கள்: 

அவர்களில் இளம் படைப்பாளிகள் எல்லாம், 'புத்திசாலித்தனம் மிகுந்த இலாகவத்துடன்' மேலே குறிப்பிட்ட சமூக கேடான 'லக்ஷ்மண் கோடு' தாண்டி, படைப்புகள் வழங்க தொடங்கி விட்டார்கள்.

மீடியா வெளிச்சத்திற்கு வராமல், மேலே குறிப்பிட்ட 'வலிமை மிகுந்த 'லக்ஷ்மண் கோடு' பாதுகாப்புடன், அந்த இளைஞர்களும், மாணவர்களும் பயணித்து, தமிழ்நாட்டில் 'உள்மறையாக' (Latent), மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வெளிப்பட்டு வந்த  போக்குகளின் தொடர்ச்சியே, 2015 டிசம்பர் வெள்ள நிவாரணங்களும், அதன் அடுத்த கட்ட வெளிப்பாடே, 'ஜல்லிக்கட்டு ஆதரவு' போராட்டங்களும் ஆகும். (http://tamilsdirection.blogspot.in/2017/02/blog-post.html )

அவர்களைப் போலவே, செயல் பூர்வமாக 'சாதனைகள்' மூலமாக, நம்மை வெளிப்படுத்தினால் மட்டுமே, அவர்களின் 'வலிமை மிகுந்த 'லக்ஷ்மண் கோடு' தாண்டி, அவர்களுடன் நாம் தொடர்பு கொள்ள முடியும்; என்பதும் எனது அனுபவமாகும்.

‘1938 இந்தி எதிர்ப்பு போராட்டம், அதன் போக்கிற்கு நேர் எதிரான 1965 இந்தி எதிர்ப்பு போராட்டம், அவற்றின் தொடர் விளைவுகளான இந்தியாவிலும், உலகிலும் வேறெங்கும் காண முடியாத,  மேற்குறிப்பிட்ட அமைப்புகள் போன்றவற்றையெல்லாம், கதை களமாக கொண்டு, திரைப்படங்கள், நாவல்கள் என ஏதேனும் உருப்படியான படைப்புகள் வெளிவந்துள்ளனவா?’ (http://tamilsdirection.blogspot.in/2017/03/blog-post_26.html ) என்ற கேள்வியானது, எனது தலைமுறை படைப்பாளிகளுக்கே பொருந்தும். எனவே எனது தலைமுறை 'பொதுவாழ்வு வியாபாரிகளிடமிருந்து', என்னை பாதுகாத்துக் கொள்ள, இளைஞர்களை முன்னுதாரணமாக கொண்டு, அவர்கள் கையாண்டு வரும் 'லக்ஷ்மண் கோடு' பாதுகாப்புடன், நானும் வாழ முயன்று வருகிறேன். எனது ஆய்வுகளுக்காக 'தமிழ்நாட்டில் வெளிச்சம்' எதிர்பார்த்து, மேற்குறிப்பிட்ட பாதுகாப்பு ஏற்பாடின்றி, நான் பயணித்தால்;

எனது ஆய்வு படைப்பாற்றலின் ஊற்றுக்கண்களாகிய, சாதாரண மக்களிடமிருந்தும், இயற்கையிடமிருந்தும் 'அந்நியமாகி', எனது ஆய்வுகள் 'வற‌ண்டு போகும்', 'சுயலாப கள்வர், கோழை, தொத்து நோய்களிலும்' சிக்க நேரிடும், என்ற அபாய எச்சரிக்கை பற்றிய புரிதலும், எனக்கு இருப்பதே, அதற்கு காரணமாகும்.

'சூது கவ்வும்', 'ஜிகிர் தண்டா', 'சதுரங்க வேட்டை', 'காக்கா முட்டை', 'ஜோக்கர்' போன்ற இன்னும் பல, வியாபார ரீதியிலும் வெற்றி பெறும் படைப்புகளின் போக்கில், மேலே குறிப்பிட்ட கேள்விக்கு விடைகள் வெளிவரும் காலம், அதிக தொலைவில் இல்லை, என்பதும் எனது கணிப்பாகும்.

No comments:

Post a Comment