Wednesday, May 31, 2017

நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம்;
சரியான வாதத்தை முன்வைத்துள்ளார்களா? (1)


நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம்;

'தமிழனைத் தமிழன் தான் ஆள வேண்டும்' என்ற வாதத்தை முன்வைத்துள்ளார்கள்.

தமிழ்நாட்டை ஜெயலலிதா ஆண்டபோது, இந்த வாதத்தை, அவர்களில் யார்? யார்? முன் வைத்தார்கள்? முன் வைக்காமல், அந்த ஆட்சியில், வெளியில் தெரிந்தும், தெரியாமலும் பலன் பெற்றவர்கள் யார்? யார்? என்று அவரவர்கள் மனசாட்சிக்கு தெரியும்.

ஜெயலலிதாவிற்கு முன், எம்.ஜி.ஆர் முதல்வராக இருந்த போதும், மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்கான விடைகள், அவரவர் மனசாட்சிக்கு தெரியும்.

எம்.ஜி.ஆருக்கு முன் முதல்வராக இருந்த, 'கலைஞர்' மு.கருணாநிதியின் பூர்வீகம் ஆந்திரா என்று முன் வைத்த வாதங்களையும், எதிர்வாதஙகளையும் இன்று வரை, அறிவுபூர்வ விவாதத்திற்கு, மேலே குறிப்பிட்ட நபர்களில் யார்? யார்? உட்படுத்தினார்கள்?

மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்கு இடமில்லாமல், 1967க்கு முன் தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சி நடத்திய முதல்வர்கள் பக்தவச்சலமும், காமராஜரும் ஆவர்.

இந்திய விடுதலைக்குப் பின், நேருவின் ஆட்சியே ஊழலில் சிக்கி பயணித்த காலத்தில், தமிழ்நாட்டில் காமராஜர் முதல்வராகி ஊழலற்ற ஆட்சி நடத்திய போக்கானது, இந்திய விடுதலைக்கு முன், தமிழ்நாட்டில்  நீதிக்கட்சி முதல்வர்கள் ஊழலற்ற ஆட்சி வழங்கிய போக்கின் தொடர்ச்சியா? என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

“நேரு குடும்ப சுயநல அரசியல் ஆதிக்கத்தில் வெளிச்சத்திற்கு வராமல், இருட்டில் இருந்தவையெல்லாம், மோடி பிரதமரான பின், வெளிவரத் தொடங்கியுள்ளதா? என்பது ஆய்விற்குரியதாகும். அந்த போக்கில், இந்திரா காந்தியின் கணவரான பெரோஸ் காந்தியின் வாழ்க்கை வரலாறு பற்றிய நூல் ஒன்று அண்மையில் வெளிவந்துள்ளது.

Feroze The Forgotten Gandhi’ ( by  Bertil Falk ) புத்தகத்தில் இந்தியா விடுதலை அடைந்து, நேரு பிரதமரானவுடனேயே ஊழல் அரங்கேற தொடங்கியது பற்றியும், பாராளுமன்றத்தில் அந்த ஊழல்களை அம்பலப்படுத்தியதில் பெரோஸ் காந்தி முன்னணியில் இருந்தது பற்றியும், நிறைய தகவல்கள் உள்ளன.

அவ்வாறு ஊழல் களங்கத்துட‌ன், நேரு பிரதமராக மத்தியில் ஆட்சி செய்த காலக் கட்டத்தில்;

இந்தியா விடுதலை ஆனது முதல் 1967 வரை, தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சி நடந்தது எவ்வாறு? என்பதானது, எனது கவனத்தை ஈர்த்தது.

அவ்வாறு  இந்திய விடுதலைக்கு முன்னும், இந்திய விடுதலைக்குப் பின்னும், தமிழ்நாட்டில் முதல்வர்களாக இருந்து, ஊழலற்று ஆட்சி செய்த நீதிக் கட்சித் தலைவர்களின் பங்களிப்பின் தொடர்ச்சியாகவே, அதே போக்கில் காமராஜர், பக்தவச்சலம் ஆட்சி காலம் 1967 வரை, தமிழ்நாடு பயணித்ததா?” (http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post_17.html )

தமிழ்நாட்டை ஆண்ட முதல்வர்களில் தமிழைத் தாய்மொழியாக கொண்டவர்களும் இருந்திருக்கிறார்கள்; தமிழைத் தாய்மொழியாக கொள்ளாதவர்களும் இருந்திருக்கிறர்கள். ஆனால், அவர்களில் பாரபட்சமின்றி, ஊழலற்ற ஆட்சி நடத்தியவர்கள் பாராட்டுக்குரியவர்கள் ஆவர். ஊழல் ஆட்சி நடத்தியவர்கள் எல்லாம், கண்டிக்கத்தக்கவர்களே; தமிழைத் தாய்மொழியாக கொண்டிருந்தாலும்.

உலக அளவிலும் அதே போக்கு தான் உள்ளது. இந்திய வம்சாவழி லியோவரத்கர் அயர்லாந்தின் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்; (http://www.newindianexpress.com/world/2017/jun/02/indian-origin-gay-minister-wins-leadership-race-set-to-be-irish-pm-1612230.html ) நல்லாட்சி வழங்குவார் என்ற எதிர்பார்ப்பில்.

1967இல் முதல்வரான அண்ணா, மனமுடைந்து மரணம் அடையாமல், துணிச்சலுடன் கட்சியிலும் ஆட்சியிலும் முளைவிடத் தொடங்கிய களைகளை அகற்றியிருந்தால், அடுத்து 'கலைஞர்' மு.கருணாநிதி முதல்வராகி இருப்பாரா? (http://tamilsdirection.blogspot.sg/2016/11/normal-0-false-false-false-en-us-x-none_87.html  )
முதல்வர் கருணாநிதியும் நேரு பாணி குடும்ப ஊழல் அரசியலில் ஈடுபடாமல், 'அந்த' களைகளை அகற்றியிருந்தால், பின்னர் எம்.ஜி.ஆரும், அதன் பின்னர் ஜெயலலிதாவும் முதல்வர்கள் ஆகி இருப்பார்களா?

மேலே குறிப்பிட்ட வரலாற்றுப் பின்னணியை புறக்கணித்து;

'தமிழனைத் தமிழன் தான் ஆள வேண்டும்' என்ற வாதத்தை முன்வைத்துள்ளவர்களின் மனசாட்சிக்கு கீழ்வரும் கேள்விகள் முன்வைக்கப்படுகின்றன; 

அந்த வாதமானது, சுயநல நோக்கில் முன்வைக்கப்படுகிறதா? அல்லது தமிழ்நாடு சீரழிவதைத் தடுக்கும், பொதுநல நோக்கில் முன்வைக்கப்படுகிறதா? என்ற தெளிவு பெறும் நோக்கில்.

‘‘இன்று 'ஜல்லிக்கட்டு ஆதரவு', 'ஹைட்ரோகார்பன் திட்ட எதிர்ப்பு', நேற்று 'மீத்தேன் திட்ட எதிர்ப்பு' என்று வெளிப்பட்டு, வெற்றியை நோக்கி, பயணிக்கும் போராட்டங்கள் எல்லாம்;

1991இல் தமிழ்நாட்டில் 'புதிதாக', முளைவிட்டு 'அதிவேகமாக' வளர்ந்த 'ஊழல் பேராசை' போக்கில்;

கங்கை அமரன், பாலு ஜுவல்லர்ஸ் பாலு, கோத்தாரி, அமிர்தாஞ்சன் அதிபர் உள்ளிட்ட இன்னும் பல தனியார் சொத்துக்களை அச்சுறுத்தி, கொலை செய்து, தற்கொலைக்கு தூண்டி, 'அபகரித்த' போது:

'ஜல்லிக்கட்டு ஆதரவு' போன்ற போராட்டம் தமிழ்நாட்டில் வெடித்திருந்தால்;

மலைகள், காடுகள், தாது மணல், ஆற்று மணல், ஏரிகள் உள்ளிட்ட இயற்கை கனி வளங்கள் எல்லாம்;

அடுத்து அடுத்து வந்த ஆட்சிகளில் சூறையாடப்பட்டிருக்குமா?

மீத்தேன் எரிவாயு திட்டம், ஹைட்ரோகார்பன் போன்ற திட்டங்களை தொடங்கும் 'துணிச்சல்' வந்திருக்குமா? அந்த அரசியல் கொள்ளையர்களை புரவலராக கொண்டு, தமிழ் அமைப்புகளும், உணர்ச்சிமிகு கவிஞர்களும், பேச்சாளர்களும், எழுத்தாளர்களும் 'பிழைக்கும்' துணிச்சலும் வந்திருக்குமா? மேலே குறிப்பிட்ட அபகரிப்பில் சொத்து, உயிர் இழந்தவர்களில் எவராவது, அவர்களின் குடும்பத்தினராக இருந்திருந்தால், அந்த 'தன்மான கேடான துணிச்சல்', அவர்களுக்கு வந்திருக்குமா? பணம் சம்பாதிக்க, தன்மானம் இழந்து வாலாட்டும் 'நாய்களாகவும்', பணத்தைத் தவிர, அறிவு, நேர்மை, உண்மை உள்ளிட்ட எவற்றையும் மதிக்கத் தெரியாத 'கழுதைகளாகவும்', தமிழ்நாட்டில் 'வாழ்வியல் புத்திசாலிகளின்'(?) எண்ணிக்கையும் வளர்ந்திருக்குமா?” (http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post_17.html )

1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ளாமல், கோவாவில் ஜெயலலிதாவுடன், 'ஆயிரத்தில் ஒருவன்' படப்பிடிப்பில் இருந்தவர் எம்.ஜி.ஆர். எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் முதல்வராக, அது தகுதி குறைவாக, மக்களால் கருதப்படவில்லை. மேலே குறிப்பிட்டுள்ளவாறு ஆண்டவர்களால் சீரழிந்துள்ள தமிழ்நாட்டில், குடும்ப ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வரவேற்க தமிழ்நாட்டு மக்கள் தயாராகி விட்டார்கள். எனவே ரஜினி உள்ளிட்டு எவரும் அரசியல் பயணம் மேற்கொள்வதை தடுப்பது சரியாகாது. அந்த அரசியல் பயணத்தில் மக்கள் விரும்பினால், அந்த நபர் முதல்வர் ஆவதையும் எவரும் தடுக்க முடியாது. அப்படி முதல்வராகி ஊழலற்ற ஆட்சியை அவர்கள் வழங்குவார்களா? அல்லது தமது வெற்றி வாய்ப்பானது ஈர்க்கும் 'ஊழல் பெருச்சாளிகளை' எல்லாம், தமது கட்சியில் சேர்த்து, மீண்டும் 1991 ஆட்சியானது அரங்கேறுமா? என்பது தான், இன்றுள்ள‌ முக்கியமான கேள்விகளாகும்.

அத்தகைய ஆபத்தானது ரஜினியைத் தீண்டக்கூடும், என்ற அபாய எச்சரிக்கையானது கீழ்வரும் தகவலில் வெளிப்பட்டுள்ளது.

“ரஜினியின் நிலைப்பாடு பாஜக பக்கம் போவதாக இருப்பதை விட புதிய கட்சி ஆரம்பிப்பது. பாஜவுக்கு கணிசமான தொகுதிகளை கொடுத்து கூட்டணி ஏற்படுத்துவது. ஆந்திராவில் ராமாராவ் ஏற்படுத்தியது போல் கட்சி ஆரம்பித்தவுடன் ஆட்சியை பிடித்தது போல் தானும் தமிழகத்தில் ஆட்சியை பிடிப்பது போன்ற நடவடிக்கைகளில் இறங்குவதாக கூட இருக்கலாம். அப்படி மட்டும் நடந்தால் அவர் ஆரம்பிக்கும் புதிய கட்சிக்கு அதிமுகவின் முக்கிய தலைகள் முழுவதும் போய் ஒட்டிக் கொள்ளும். இவ்வளவு ஏன் திமுகவில் உள்ள ஒரு பெரிய அணியே கூட அவர் பின்னால் போகக்கூடும். இவையே இப்படி என்றால் தேமுதிக நிர்வாகிகளின் நிலை சொல்லவா வேண்டும்?’ “ (‘தமிழக அரசியல் களம்: ரஜினி தர்பாரில் நடக்கும் மாஸ்டர் பிளான்!’ ; http://tamil.thehindu.com/tamilnadu/)

அரசியலில் 'வெற்றி வாய்ப்பை மோப்பம் பிடித்து', 'ஒட்டிக்கொள்ளும்' 'சமூக கிருமிகள்' மிகுந்துள்ள சூழலில், 'அந்த சமூக கிருமிகளை', மக்கள் மன்றத்தில், துணிச்சலுடன் அம்பலப்படுத்தும் போக்கு வெற்றி பெறாமல்;
ரஜினி, பா.ஜ.க உள்ளிட்டு எவரும் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தாலும், 'அந்த சமூக கிருமிகளின் பிடியிலிருந்து' விலகி, தமிழ்நாட்டை மீட்பது அரிதாகும்.

'தமிழனைத் தமிழன் தான் ஆள வேண்டும்' என்ற வாதத்தை முன்வைத்துள்ள, திரைப்பட இயக்குநர் பாரதிராஜா, முள்ளிவாய்க்கால் அழிவு தொடர்பாக, "லட்சக்கணக்கான தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டார்களே ஏன் என்று தெரியுமா, தமிழர்களில் பலருக்கே தெரியாது. ஏன் அந்த சமயத்தில் அழலாமா வேண்டாமா என்று கூட யாருக்கும் தெரியவில்லை." என்ற கருத்தையும் முன்வைத்துள்ளார். (http://tamil.oneindia.com/news/tamilnadu/bharathiraja-slams-entry-rajini-into-tn-politics-indirectly/articlecontent-pf242245-284356.html ) முள்ளிவாய்க்கால் அழிவு தொடர்பான,  இக்கருத்து சரியா? என்ற ஆய்விற்கு உதவும் தகவல்கள் வருமாறு:
“முள்ளி வாய்க்கால் போர் தொடங்குவதற்கு முன்னும், போர் நடந்த போதும், அதற்குப் பின்னும் இன்று வரையிலும் சாதாரண பொது மக்கள் தத்தம் பிரச்சினைகளில் 'மூழ்கி', அந்தப் பிரச்சினைகளுக்காக 'மட்டுமே' தாமாகவே வீதியில் இறங்கி போராடி, வாழ்ந்து வருகிறார்கள். 1983 சூலை இனப்படுகொலைக்குப்பின் தாமாகவே கொந்தளித்து, நீண்ட காலம் நீடித்த தமிழ்நாட்டு மக்கள் ஆதரவாகப் பெருகிய 'சமூக ஆற்றலானது’, எந்தெந்த வழிகளில் விரயமானது என்று ஆராய்ந்தால் தான், .( ‘சமூக இழைகளும் , சமூகப் பிணைப்புகளும்   (Social Fibers & Social Bonds)’; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.html   ), தமிழ் நாட்டு  சராசரி மக்கள், இன்று 'தமிழ் ஈழம்' மட்டுமல்ல, 'தமிழ் உணர்வு, இந்தி எதிர்ப்பு' போன்றவற்றிலிருந்தும் அந்நியப்பட்டு வாழ்வது ஏன் என்பது தெளிவாகும்.
மேலே குறிப்பிட்ட 'தமிழ் ஈழம்' ஆதரவு சமூக ஆற்றலானது, ஈழ விடுதலைக் குழுக்கள் தமக்குள் கூறு போட்டு 'பயன்படுத்திய' போக்கிலும், அதன்பின் ஒருவரையொருவர் அழித்த போக்கிலும், அதனூடே பணபலம் அதிகரித்த போக்கில், தமிழ்நாட்டு 'தனி ஈழம்' ஆதரவாளர்கள் பலரின் வசதி வாய்ப்புகள் வளர்ந்து, சராசரி வாழ்க்கையிலிருந்து 'மேல் தட்டு' வாழ்க்கைக்குத் தாவிய போக்கிலும், அந்த போக்கின் ஊடேயே, சராசரியாக வாழும் பொதுமக்களிடமிருந்து அந்நியமாகியும், 'திராவிட அரசியல் கொள்ளையர்களான 'புரவலர்களிடம்' நெருக்கமாகி வரும் போக்கிலும், அந்த ஆற்றல் விரயமாகி,  வற்றி வருகிறது.” (http://tamilsdirection.blogspot.sg/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html )
தமிழ்நாட்டில் கடந்த 25 வருடங்களாக தமிழ்நாட்டில் கிரானைட், தாது மணல், ஏரிகள், குளங்கள், காடுகள் உள்ளிட்ட கனிவளங்களை, சூறையாடி வரும் ஊழல் கொள்ளைக்காரர்களை எதிர்க்காமலும், அந்த கொள்ளையர்களுடன் நேசமாகி பலன் பெற்றுக் கொண்டும், இலங்கையில் மனித உரிமை மீறல்களுக்கு குரல் கொடுக்கும் கட்சிகளும், 'உணர்ச்சிபூர்வ' கவிஞர்களும், எழுத்தாளர்களும், பேச்சாளர்களும் இருப்பது போல, இலங்கை உள்ளிட்டு உலகில் எந்த நாட்டிலும், இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இருப்பதாக தெரியவில்லை. அத்தகையோரில் யார்? யார்? சுப்பிரமணியசாமியின் 'பொர்க்கி தமிழர்' (http://tamilsdirection.blogspot.in/2017/02/porki.html) தொடர்பான கருத்தை கண்டு கொள்ளவில்லை? ஏன் கண்டுகொள்ளவில்லை? என்பவை தொடர்பான அறிவுபூர்வ விவாதங்கள் அரங்கேற வேண்டாமா?” (http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post_26.html )
எவ்வளவு சமூகக் கேடான வழியிலும் செல்வம், செல்வாக்கு போன்றவற்றை, எவரும் பெற்று விட்டால், தமது எழுத்து, பேச்சு, கவிதை, 'தரகு'(?) திறமைகள் மூலம், அந்த 'சமூக கிருமிகளை', 'தமிழின், தமிழ் உணர்வின் புரவலர்களாக' பாராட்டி, பிழைக்கும் கும்பல், தமிழ்நாட்டில் ஊடக பின்பலத்துடன் வளர்ந்துள்ளனர்; அதன் மூலம் சாதாரண மக்களிடம் தமது (மற்றும் தாம் ஆதரிக்கும் பிரச்சினைகளில்) செல்வாக்கு வீழ்வது பற்றிய கவலையின்றி.

யாராயிருந்தாலும், தமது நிலைப்பாட்டிற்கு, மக்களின் ஆதரவை வென்றெடுப்பதில் தான் முக்கிய கவ‌னம் செலுத்த வேண்டும்; உண்மையில் சுயலாப நோக்கமின்றி தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் சீரழிவிலிருந்து மீட்க வேண்டுமானால். தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் சீரழிவிற்கு மக்கள் காரணமல்ல; மக்களை வழி நடத்திய கட்சிகளும், தலைவர்களுமே காரணங்கள் ஆவார்கள். அந்த காரணங்களை 'அகற்றாமல்', மீட்சி சாத்தியமா?
அரசியலில் நுழைந்தவர்களும்/நுழைபவர்களும் யாராயிருந்தாலும், ஊழலுக்கும், சீரழிவிற்கும் துணை போனவர்களையும்/ போகின்றவர்களையும், எதிர்த்து, மக்கள் மன்றத்தில் அம்பலப்படுத்தி, அவர்களாகவே அரசியலில் இருந்து ஒதுங்கும் சூழலை உருவாக்குவதே புத்திசாலித்தனமாகும்.
அரசியலில் யார் வர வேண்டும்? யார் வரக் கூடாது? என்று தீர்மானிக்கும் உரிமை தமக்கு இருப்பதாக கற்பனை செய்து கொண்டு, அதை வெளிப்படுத்துபவர்கள் யாராயிருந்தாலும், அவர்கள் எல்லாம், தமது நிலைப்பாட்டிற்கு, மக்களின் ஆதரவை வென்றெடுப்பதில் தோல்வி கண்டவர்கள்/காண்பவர்கள்/ தன்னம்பிக்கை அற்றவர்கள் என்ற ஏதாவது ஒன்றில், இடம் பெற்று விடுவார்கள்; அடுத்து மக்கள் மன்றத்தில் நடக்க இருக்கும் தேர்தல்கள் மூலம்.
குறிப்பு:
'துக்ளக்'(30.05.2017) இதழ் அட்டையில் நின்று கொண்டிருக்கும் ரஜினியின் 'அரசியல் பயணம்'  பேருந்தின் முன்;


'நம்ம ரோடுலே கார் ஓட்ட, அந்த ஆளுக்கு என்ன உரிமை? வண்டி ஸ்டார்ட் ஆனதும், மறியல் செய்ய ரெடியாய் இருப்போம்' என்று, எறும்புகள் சில பேசும் கார்டூன் வெளிவந்துள்ளது.  (https://www.thuglak.com/thuglak/index_new.php?ver=0.01 )

No comments:

Post a Comment