Tuesday, June 13, 2017

நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம்; சரியான வாதத்தை முன்வைத்துள்ளார்களா? (4)


தமிழ்நாட்டில் 'சமூக நியுக்கிலியேசன்' (Social Nucleation);
ரஜினி மூலமாகவா? அல்லது வேறு எதிர்பாராத நபர் மூலமாகவா?


தமிழ்நாடு தற்போது வளர்ச்சி நோக்கிய திருப்பு முனையில் இருப்பதை உணர்த்தும் 'சிக்னல்கள்' (signals) எனக்கு புலப்பட்டதன் காரணமாக, அந்த போக்கிற்கு என்னால் இயன்ற பங்களிப்பை வழங்கவே;

நான் ‘ON GROWTH AND FORM’ (‘வளர்ச்சி மற்றும் வடிவம் பற்றி ) BY D'ARCY WENTWORTH THOMPSON’ என்ற புத்தகத்தைப் படித்து, சமூகவியல் நோக்கில் குறிப்புகள் எடுத்து வருகிறேன் (http://en.wikipedia.org/wiki/D%27Arcy_Wentworth_Thompson );

எனது இசை ஆராய்ச்சிகளின் ஊடே, இயன்ற வரை இதற்கும் நேரம் ஒதுக்கி.

தமிழ்நாட்டில் 'அரசியல் நீக்கம்' (Depoliticize)  மற்றும் 'ஆதாய அரசியல்' போக்கில் கட்சிகள் பயணித்து வரும் சமூக சூழலில்;

ஆங்காங்கே நடக்கும் போராட்டங்கள், குற்றங்கள், குடும்பம் உள்ளிட்ட அமைப்புகளில் ஏற்பட்டு வரும் சீர்குலைவுகள், நம்பகத்தன்மை உள்ள மனிதர்கள் குறைந்து, 'சுயலாப கணக்கு' தரகர்களும், திருடர்களும் 'குடும்பம், நட்பு' உள்ளிட்ட சமூக பிணைப்புகளையும் கெடுத்து, 'சமூக ஆற்றல் ரத்த ஓட்டமே' நஞ்சாகி வருவது உள்ளிட்ட அனைத்து போக்குகளும், தமிழ்நாட்டில் அடுத்த கட்ட மாற்றத்தினை கணிக்க உதவும், சமூக 'சிக்னல்கள்' ஆகும்.

‘சட்டத்தால் கட்டுப்படுத்த முடியாத அளவுக்கு, சமுகத்தில் திருட்டு, கொலை, கொள்ளை, போன்றவை அதிகரிப்பதும், சுமார் 11 வயதிலிருந்தே தற்கொலை செய்து கொள்ளும் போக்குகள் அதிகரிப்பதும், சமூக நெறிமுறைகளின் சீரழிவின் வெளிப்பாடுகள் ஆகும். அதிலும் சட்டத்தை ஏமாற்றி, (பணம் ஈட்ட நாய்களாகவும், புலமை, நேர்மை, மதிக்க தெரியாத கழுதைகளாகவும், 'வாழ்வியல் புத்திசாலிகளாக') குறுக்கு வழிகளில் செல்வம் செல்வாக்கு சம்பாதிப்பவர்களை 'பெரிய மனிதர்களாக' மதிக்கும் போக்கானது,  சமூகத்தின் உச்சக்கட்ட சீரழிவின் வெளிப்பாடாகும்.அது தமிழ்நாட்டில் வாழும்  தமிழர்களுக்கு இடையில் உள்ள, தொடர்புகளாகிய‌, சமூக இழைகள் எதிர்த் திசையில்  ( negative - குடும்பம், நட்பு உள்ளிட்ட அனைத்திலும் லாப நட்டம் பார்க்குக் 'கள்வர்' பண்புடைய - திருக்குறள் 813) உச்சக்கட்ட சீரழிவைச் சந்தித்துள்ளதின் வெளிப்பாடாகும்.’ ( ‘சமூக இழைகளும் , சமூகப் பிணைப்புகளும் (Social Fibers & Social Bonds)’; http://tamilsdirection.blogspot.sg/2014/09/normal-0-false-false-false-en-us-x-none.htmlநீரழிவு நோயாளிகளின் காலானது, 'காங்கிரின்' நோயால் பாதிக்கப்பட்டால், காலை அகற்றியே, உயிர் பிழைக்க முடியும். (Gangrene ; http://www.healthline.com/health/gangrene-diabetes#overview1அது போல, நமது சமூக வட்டத்திலிருந்து அகற்றா விட்டால், நம்மையே சீரழித்து விடும், 'சமூக காங்கிரின்' தொத்து நோய்களாக வாழும் 'சுயலாப கள்வர்கள்', 'அதிவேகமாக' அதிகரித்துள்ள நிலையில், தமிழ்நாடு சிக்கியுள்ளது. 

ஒரு கரைசலில் (Solution) நடைபெறும் மாற்றங்களில், 'படிகம்' (crystal) உருவாவதன் தொடக்க நிகழ்வானது, 'நியுக்கிலியேசன்' (Nucleation)  என்று அழைக்கப்படும். புதிய 'வெப்ப இயக்க கட்டம்' ( new thermodynamic phase ) அல்லது 'கட்டமைப்பை' (new structure), கனிவான சூழலில், சுயமான அமைப்பின் (via self-assembly or self-organization) மூலம் உருவாகி கொள்ளும் செயல்முறை நிகழ்வே, 'நியுக்கிலியேசன்' ஆகும். (https://en.wikipedia.org/wiki/Nucleation)

கனிவான சமூக சூழலில், நடக்கும் சமூக மாற்றங்களை முன்கூட்டியே கணிக்க உதவும் சமூகவியல் கருத்தாக்கமானது, 'சமூக நியுக்கிலியேசன்' (Social Nucleation) ஆகும்.

கனிவான சமூக சூழலில், அதிவிரைவாக நடக்கும் 'சமூக நியுக்கிலியேசனை' கீழ்வரும் உதாரணம் மூலம் விளங்கிக் கொள்ளலாம்.

வீட்டில் சமையலறையில் வெறும் தீக்குச்சி ஒன்றை கொளுத்தி போட்டால், திக்குச்சி தான் விரயமாகும். ஆனால் சமையல் வாயு சிலிண்டர் கசிந்து, வாயு நிரம்பிய நிலையில், தீக்குச்சி ஒன்றை கொளுத்தி போட்டால், வீடே எரிந்து சாம்பலாகும்.

ஒரு சமூகத்தில் எழும் முரண்பாடுகளை, சரியான நேரத்தில் சரியாக தீர்க்க தவறும் போது, அம்முரண்பாடுகளை தவறாக பயன்படுத்தி, சமூக நச்சு சக்திகள், கனிவான சூழலில், அமுரண்பாடுகளை, 'பொருத்தமான தீக்குச்சி' மூலம் பற்ற வைத்து, பண்பாடுகளையும், ஒழுக்க நெறிகளையும் அகற்றி, திருப்பு முனையில், ஊழல் மற்றும் ஒழுக்கக் கேடுகளை வளர்க்கும் திசையில் பயணிக்க கூடும்.

ஒரு சமூகத்தில் நல்ல சமநிலையானது (good equilibrium)  குலைந்து, ஊழலும், ஒழுக்கக்கேடுகளும் வளர்ந்து, செல்வாக்கு பெறும் நிலையில், அடுத்த மாற்றத்திற்கான, 'திருப்பு முனை'யை அடையும். அப்போது 'தகுந்த தீக்குச்சி'யானது வெளிப்பட்டு பற்ற வைக்கும் போது, அந்த 'சமூக நச்சு வாயுக்கள்' எரிந்து, சாம்பலாகி, சமூகமானது,  திருப்புமுனை கட்டத்தினுள் நுழையும்.

சமுகத்தில் அது போன்ற 'தீக்குச்சி' சம்பவங்கள், ஏற்கனவே 'செல்வாக்குடன்' வலம் வரும் தீய அல்லது நல்ல கட்சிகளை ஒழித்து, புதிய கட்சியின் 'திடீர் வேக' செல்வாக்கில், அந்த சமூகமானது, தீய அல்லது நல்ல திசையில் பயணிக்கும்.

அதனை விளங்கிக் கொள்ள, கீழ்வரும் உதாரணம் பயன்படும்.

1982இல் ஹைதராபாத் விமான நிலையத்தில், அன்று காங்கிரஸ் பொதுச் செயலாளராக இருந்த ராஜிவ் காந்தி, கூடியிருந்த எண்ணற்ற மக்களின் முன்னிலையில், ஆந்திர முதல்வர் அஞ்சையாவை 'பபூன்' என்று குறிப்பிட்டு அவமதித்தார்; ஆந்திர அரசியலில் காங்கிரஸ் கட்சியை ஓரங்கட்டி ,நடிகர் என்.டி.ஆர் புதிதாக 'தெலுங்கு தேசம்' கட்சி தொடங்கி, மறுவருடமே முதல்வராகி, இன்று ஆந்திரா, தெலுங்கானா என்று பிரிந்துள்ள இரண்டு மாநிலங்களுமே 'பிராந்திய கட்சிகளின்' ஆட்சிகளில் பயணித்து வரும் போக்குகளுக்கு அடித்தளமாக.

ஒரு சமூகத்தில் 'திருப்பு முனைக் கட்டம்' என்பதானது;

ஏற்கனவே இருந்த 'சமநிலையானது' (Social Equilibrium) சீர்குலைவு போக்கில், பயணம் செய்து, 'சமூக கலங்கலுக்கு' (Social Disequilibrium)   உள்ளாகி, 'சமூக நியுக்கிலியேசன்' (Social Nucleation )  மூலம், மேலே குறிப்பிட்ட 'சமூக தீக்குச்சி' நிகழ்ச்சிகள் மூலம், புதிய சமநிலையை நோக்கி பயணிக்கும்.

இந்திய விடுதலைக்குப்பின், தேச கட்டுமானத்தை (Nation Building) , நேரு குடும்ப ஆட்சியானது, சுயநல குடும்ப அரசியலுக்கு அடிமைப்படுத்தி, பயணித்ததன் விளைவாக, தமிழ்நாடானது, 1967இல் தேசியக்கட்சிகளின் பிடிகளிலிருந்து விடுபட்டது. அதிலும் பாடம் கற்காமல், இந்திரா காந்தியும், ராஜிவ் காந்தியும் பயணித்ததன் விளைவாகவே, ஆந்திராவில் 'புதிய‌ கட்சி' உருவாகி ஆட்சியைப் பிடித்தது. அதன் தொடர்விளைவாகவே, கூடுதல் பிரிவினைக்கு உள்ளாகி, அது மேலும் இரண்டு மாநிலங்களாக பிரிந்துள்ளது.

உலக அளவில், நானறிந்த வரையில், 'சமூக நியுக்கிலியேசன்' கருத்தின் மூலம், சமூகத்தில் நடந்து வரும், மேலே குறிப்பிட்டுள்ளது போன்ற‌  மாற்றங்களை, முதலில் ஆராய்ந்ததை, வெளிப்படுத்திய ஆங்கில நூல் 'வரவிருக்கும் மாற்றங்கள்' (‘The Shape of Things to Come’- Author: H.G. Wells ) . அந்நூலின் கருத்துக்களை, ஐ.நாவில் உயர் அதிகாரியாக பணியாற்றி, எதிர்பாராதவிதமாக மரணமடைந்த பிலிப் ராவன் ( Dr. Philip Raven ; https://en.wikipedia.org/wiki/The_Shape_of_Things_to_Come ) எவ்வாறு உருவாக்கினார்? அவரின் மரணத்திற்குப் பின், அந்த நூலானது எவ்வாறு தொகுக்கப்பட்டு, 2ஆம் உலகப்போர் எப்போது நடக்கும்? என்பதை, முன்கூட்டியே கணித்து, உலகை வியப்பிற்கு உள்ளாகியது, உள்ளிட்டவற்றை, அந்நூலின் முன்னுரையானது, வியப்பூட்டும் வகையில் வெளிப்படுத்தியுள்ளது.

சமூக நியுக்கிலியேசன் தொடர்பாக, ஆராய்ந்த இன்னொரு ஆராய்ச்சியாளர் சார்லஸ் ஆர்ட்டன் கோலி ஆவார். (https://en.wikipedia.org/wiki/Charles_Cooley  )

‘ON GROWTH AND FORM’ (‘வளர்ச்சி மற்றும் வடிவம் பற்றி ) BY D'ARCY WENTWORTH THOMPSON’ என்ற நூலின் அடிப்படையில், 'சமூக வளர்ச்சி மற்றும் வடிவம்'- ‘ON SOCIAL GROWTH AND FORM’ பற்றிய ஆய்வினையும், அந்த ஆய்வில் 'சமூக நியுக்கிலியேசன்' ஆய்வினையும் பிணைத்து, உலக அளவில் நான் மட்டுமே ஆய்வினை மேற்கொண்டு வருகிறேன்.

தமிழ்நாட்டில் ஊழலற்ற ஆட்சி அமையும் போது, எனது ஆய்வுகள் வளர்ந்து, தமிழுக்கும், தமிழர்களுக்கும், தமிழ்நாட்டிற்கும் பலன் தர வாய்ப்பிருக்கும்.

சமூகத்தில் ஆங்காங்கே நடக்கும் போராட்டங்கள், குற்றங்கள் உள்ளிட்ட அனைத்து போக்குகளும், மேலே குறிப்பிட்ட வகையில், ஆராய்ந்து, அடுத்து வருவதை, கணிக்க துணை புரிபவைகளாகும்.

ஆந்திராவில் ராஜிவ் காந்தியின் 'பபூன் தீக்குச்சி' சம்பவம் ஏற்படுத்திய விளைவுகளின், வரலாற்று பின்னணியை ஆராய, இந்திய விடுதலை காலக் கட்டத்தில் நடந்த. 'தெலுங்கானா புரட்சியிலிருந்து, தொடங்க வேண்டும்.

அது போல, தமிழ்நாட்டின் திருப்புமுனையான 1967 ஆட்சி மாற்றத்திற்கு, வழிவகுத்த ராஜாஜியின் முயற்சியால் உருவான 'தி.மு.க கூட்டணி தீக்குச்சி' ஏற்படுத்திய விளைவுகளின், வரலாற்று பின்னணியை ஆராய, காலனி 'இனம்' சூழ்ச்சியில், சிக்கி, 'பெரியார்' ஈ.வெ.ரா 1944-இல் திராவிடர் கழகத்தை தோற்றுவித்ததிலிருந்து  தொடங்க வேண்டும். தமிழரல்லாத மன்னர்கள் ஆட்சியிலும், பின்னர் காலனி ஆட்சியிலும், அதன்பின் இந்தியா விடுதலை அடைந்து, 1967 வரையிலும் புலமையுடன் உயிருடன் இருந்த தமிழ் மொழியானது;

இன்று தமிழ்வழிக் கல்வியின் ( எனவே தமிழின்) மரணப்படுக்கையில் உள்ளதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (http://tamilsdirection.blogspot.sg/2016/06/blog-post.html

1944இல் உருவான தி.கவிலிருந்து, 1949இல் தி.மு.க பிரிந்து உருவாக காரணமான அண்ணா, பயின்ற பச்சையப்பன் கல்லூரியும் (http://timesofindia.indiatimes.com/city/chennai/pachaiyappa-students-go-on-rampage/articleshow/59185425.cms?utm_source=newsletter&utm_medium=referral&utm_campaign=digest_section
  ), தி.மு.க வளர்சசியில் முக்கிய பங்காற்றிய அண்ணாமலைப் பல்கலைக்கழமும், எந்த காலக்கட்டத்தில் ஊழலுக்கும், கட்டுப்பாடு சீர்குலைவிற்கும் உள்ளானது?  

திசை மாற்றத்திற்கு உள்ளான சமூகமானது, தீய திசையில் பயணிக்கத் தொடங்கினால், ஊழலும், ஒழுக்கக் கேடுகளும் வளர்ந்து, சமூக நச்சு வாயுக்களின் பெருக்கத்தால், அந்த சமூகமானது, சமூக மூச்சுத் திணறலுக்கு உள்ளாகி, அடுத்த 'சமூக தீக்குச்சி' மூலம், அந்த சமூக நச்சு வாயுக்களிடமிருந்து, 'விடுதலை' பெற்று, ஆக்கபூர்வமான 'நல்ல சமுக சுவாசத்திற்கு' ஏங்கும் கட்டத்தினை அடையும்.

மேலே குறிப்பிட்ட பின்னணியிலேயே கீழ்வரும் கணிப்பை வெளிப்படுத்தினேன்.

‘முதல்வர் ஒ.பி.எஸ்க்கு கிடைத்த அரிய வாய்ப்பினை சீர்குலைத்த சசிகலா,  'வரலாற்றின் சுயநினைவற்ற கருவி'யாக, திராவிட ஆட்சிகளிலிருந்து தமிழ்நாட்டை விடுவித்து, 1967க்கு முன் இருந்தது போன்ற, தேசிய நீரோட்டத்தில், பயணிக்க செய்வார்; 'பெரியார்' ஈ.வெ.ரா வளர்த்த 'குருட்டு பகுத்தறிவிலிருந்தும்' தமிழ்நாடானது, 'விடுதலை' பெறும் வகையில், என்பதும், சசிகலாவிற்கு துணை புரியும் போக்கிலேயே, ஸ்டாலின் 'தொடர்ந்து' பயணித்து வருகிறார் என்பதும், எனது கணிப்பாகும்.

அந்த மாற்றமானது,  ரஜினி மூலமாக நடப்பதும், அல்லது வேறு எதிர்பாராத நபர் மூலம் நடப்பதும், ரஜினி மேற்கொள்ள இருக்கும் நிலைப்பாடுகளை பொறுத்ததாகும்.’ (http://tamilsdirection.blogspot.sg/2017/06/3-role-ofdifferent-media-in-shaping.html )

'அரசியல் நீக்கத்தில்', ஆதாய அரசியல் போக்கில், 'சிறை பட்டுள்ள' இன்றுள்ள கட்சிகளின், தலைவர்களின், அவர்களை ஆதரிக்கும் 'அறிவுஜீவிகளின்',  நிலை பற்றி கீழ்வரும் பதிவில் பார்த்தோம்.

‘தமிழ்நாட்டில் 'பிரபல' எழுத்தாளர்களாகவும், 'ஆன்மீக சொற்பொழிவு' உள்ளிட்ட பேச்சாளர்களாகவும், கவிஞர்களாகவும் வலம் வரும் 'அறிவுஜீவிகளும்', அரசியல் கட்சித் தலைவர்களைப் போலவே, அதே வகை நெருக்கடியை, மக்கள் மன்றத்தில் சந்தித்து வருகிறார்கள். ( ‘'மாய உடை அணிந்திருப்பதாக மக்களை ஏமாற்றி, 'நிர்வாணமாக' ஊர்வலம் வந்த; 'அரசனைப் பார்த்து,  கைக்கொட்டி அந்தச் சிறுவன் சிரிப்பது',  வாஸந்திக்கு தெரியவில்லையா?’; http://tamilsdirection.blogspot.in/2017/01/blog-post_12.html ) உலக அளவில் அநீதிக்கு எதிரான போராட்டங்க‌ளையும், தியாகங்களையும், தமது 'படைப்புகளின்'(?) 'முதலில்லா மூலதனமாக்கி' (capital without investment), 'உள்ளூர் கொடுங்கோலர்களை உரசாமலும், வாய்ப்பு கிடைத்தால் நேசமாகியும்', தமது வசதி வாய்ப்புகளை பெருக்கும் 'அமாவாசைகளா அவர்கள்?' என்ற கேள்வியையும், அந்த நெருக்கடியானது எழுப்பியுள்ளது.

அது மட்டுமல்ல, தமிழ்நாட்டின் கட்சித் தலைவர்களின் 'அரசியல் அடித்தளத்தையே' கேள்விக்குறியாக்கும் வகையில், ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமானது, தமிழ்நாட்டிற்கு சமூக அதிர்ச்சி வைத்தியமாகிவிட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

தி.மு.கவின் செயல் தலைவர் ஸ்டாலின், பா.ம.க ராமதாஸ், வி.சி திருமா உள்ளிட்டு தமிழ்நாட்டு அரசியலில் வலம் வரும் இன்னும் பல‌ தலைவர்களுக்கு உள்ள செல்வாக்குகளின் வலிமையானது;

எந்த அளவுக்கு 'பலகீனமாக'  உள்ளது ? என்பதானது;

அவர்களின் ஆதரவாளர்களில் உள்ள 'அமாவாசைகளின்' எண்ணிக்கையை பொறுத்தது.

எனவே தமது ஆதரவாளர்களில் 'அமாவாசைகள் யார்?' என்று ஆராய வேண்டிய அவசியத்தை, தமிழ்நாட்டில் கட்சித்தலைவர்களுக்கு ஏற்படுத்தி;

ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமானது, தமிழ்நாட்டிற்கு சமூக அதிர்ச்சி வைத்தியமாகிவிட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

அந்த சந்தேகப் பார்வையில், 'நாமும் சிக்கி விட்டோமா?' என்ற சந்தேகத்துடன், அந்தந்த‌ கட்சித்தலைவர்களை, தொண்டர்கள் அணுக வேண்டிய நெருக்கடியையும் ஏற்படுத்தி;

ஜெயலலிதாவின் 'மர்ம' மரணமானது, தமிழ்நாட்டிற்கு சமூக அதிர்ச்சி வைத்தியமாகிவிட்டதா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.’ (http://tamilsdirection.blogspot.sg/2017/04/1967.html )

இந்திய விடுதலைக்குப்பின் உருவான நேரு அரசே ஊழலில் சிக்கி பயணித்த பின்னணியில், எந்த அமைச்சர் மீதும் ஊழல் குற்றசாட்டு, எதிர்கட்சிகளாலேயே சுமத்தப்படாத அளவுக்கு, முதல் முறையாக, இந்தியாவில் மத்திய‌ அரசில் மோடி அரசானது, ஆட்சி புரிந்து வருகிறது. நாட்டு நலனை முன்னிறுத்தி, தேச கட்டுமானத்தை துவக்கி, 'பிரிவினை' நோக்கில் பயணித்தவர்களை மீட்டு, பா.ஜ.கவில் சேர்த்து, அஸ்ஸாம் உள்ளிட்டு, வடகிழக்கு மாகாணங்களில், அடுத்து, அடுத்து, கூட்டணி ஆட்சியை ஏற்படுத்தி, பயணித்து வருகிறது. தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு போன்ற சமுக ஆணிவேர்களை கேடாக, கருதி, பிரிவினை முயற்சிகள் (தமிழ்நாட்டில் நடந்ததைப் போல) வடகிழக்கு மாநிலங்களில் நடக்கவில்லை. எனவே அந்த ஆணி வேர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பா.ஜ.க, 'பிரிவினை' நோக்கில் பயணித்தவர்களை மீட்டு, பா.ஜ.கவில் சேர்த்து, கூட்டணி அட்சி அமைக்கும் முயற்சி, அங்கெல்லாம் சாத்தியமாகி வருகிறது.

தமிழக பா.ஜ.கவில் அது போன்ற முயற்சிக்கு, வழி விட்டு ஒதுங்கும் மனப்பக்குவம் உள்ள தலைவர்கள் இருக்கிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (http://tamilsdirection.blogspot.sg/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html )

தமிழ்நாட்டில் பிரிவினை கட்சிகள் எல்லாம்;

தமிழ்நாட்டை ஊழல் பேராசையில் சூறையாடிய, 'திராவிட' குடும்ப அரசியலை எதிர்க்காமலும், வெளியில் தெரிந்தும், தெரியாமலும், அந்த 'சூறையாடலில்' பங்கு பெற்று, பயணித்த கட்சிகளே மிகுந்துள்ளனவா? என்பது ஆய்விற்குரியதாகும்.

பா.ஜ.க கூட்டணி அரசில், தமிழ்நாடு பயணிக்க தொடங்கினால், ஊழலுக்கு இடமின்றி, தாய்மொழி வழிக்கல்வி மீட்சி முயற்சிகள் வெற்றி பெறும், என்பது எனது கணிப்பாகும்.

எனவே தமிழ்நாட்டில் 'சமூக நியுக்கிலியேசனுக்கான', அதற்கான‌ சமூக சூழல் கனிந்துள்ளது, என்பது எனது ஆய்வு முடிவாகும்.

ஊழலை ஒழித்து, சாதி, மத பாரபட்சமற்ற வளர்ச்சி நோக்கில் இந்தியாவை மீட்க, மோடி ஆட்சி செய்கிறார்; அதை கெடுக்க, மத வெறி போக்குகளை பயன்படுத்தும் மோடி எதிர்ப்பில், 'இந்துத்வா' போர்வையில் பயணிக்கும், சக்திகளையும் சமாளித்து.

'மத சார்பற்ற' போர்வையில், மோடியை எதிர்ப்பவர்கள் எல்லாம், 'இந்துத்வா' போர்வையில் உள்ள மோடி எதிர்ப்பாளர்களுக்கு மறைமுகமாக உதவி வருகிறார்கள்.

எனது ஆய்வுகள் மூலம், 'பெரியார்' ஈ.வெ.ராவின், தமிழரின் 'ஆணி வேர்கள்' தொடர்பான தவறான நிலைப்பாடுகளை திருத்திக் கொண்டு, எனது வழியில்,  காமராஜரை ஈ.வெ.ரா ஆதரித்தது போல், 2005 முதல், மோடி ஆதரவு போக்கில், எந்த 'பெரியார்' கட்சியாவது பயணித்திருந்தால்;

இன்று 'சமூக நியுக்கிலியேசன்' போக்கில், அஸ்ஸாமைப் போல, தமிழ்நாட்டிலும் அக்கட்சியானது, தாய்மொழிவழிக் கல்வி உள்ளிட்ட பிரச்சினைகள் தொடர்பான நிபந்தனைகளுடன்;

பா.ஜ.கவுடன் சேர்ந்து, தமிழ்நாட்டில் கூட்டணி ஆட்சியை அமைத்திருக்க முடியும்.

அதற்கான வாய்ப்பினை, 'பெரியார்' கட்சிகள் தாமே கெடுத்துக் கொண்ட சூழலில்;

அதற்கான சமூக நியுக்கிலியேசன் நடைபெற, மக்கள் செல்வாக்குள்ள நபர் எவராவது அரசியலில் நுழைந்தாக வேண்டும்.

அது ரஜினி மூலமாக நடப்பதும், அல்லது வேறு எதிர்பாராத நபர் மூலம் நடப்பதும், ரஜினி மேற்கொள்ள இருக்கும் நிலைப்பாடுகளை பொறுத்ததாகும்.


குறிப்பு: முகநூலில் வெளிவந்துள்ள எச்சரிக்கை:

“ரஜினி அரசியலுக்கு வந்த பின்னர்... அவரை ஒன்றுமில்லாமல், புஸ்ஸு என்று ஆக்கி விட அனைத்து மீடியாக்களும் ரவுண்டு கட்டி அடிப்பார்கள். ஏனென்றால், இங்கே மீடியாக்கள் எல்லாம் கட்சிக்காரர்கள் கையில் இருக்கிறது. அவர்கள் எந்த ஒரு நிலையிலும் அரசியல் ரீதியாக தங்களைத் தவிர வேறு ஒரு சக்தி வளர்வதை விரும்ப மாட்டார்கள்... ஒருவரை தூக்கி விடுவது போல் போக்குக் காட்டி, சமாதி கட்டுவதற்கு வரிந்து கட்டி நிற்பார்கள். கேப்டனுக்கு நேர்ந்த கதி தமிழகம் அறியும்....
இவ்வளவே...! இதை மீறி ரஜினி எப்டி ஜொலிக்கிறார்னு பாக்கலாம்!”

Tuesday, June 6, 2017

நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம்; சரியான வாதத்தை முன்வைத்துள்ளார்களா? (3)


தமக்கு தாமே குழி பறித்துக் கொள்ளும் சமூக செயல்நுட்ப போக்கில்;
ரஜினியை முதல்வராக்க போட்டி போடும், சசிகலாவும் ஸ்டாலினும்


‘The Role of Different Media in Shaping Public Opinion’ (‘பொதுமக்கள் கருத்துருவாக்கத்தில் ஊடகங்களின் பங்கு’) என்ற தலைப்பில், 1980களில் திருச்சி   St.Joseph College- இல், 'இதழியல் மற்றும் பொது தகவல் பரிமாற்றம்' (Journalism & Mass Communication) முதுநிலை பட்டய படிப்பிற்கான ஆய்வில் (P.G Diploma Project),  நான் ஈடுபட்டேன்.

கடந்த சட்ட மன்ற தேர்தல் உள்ளிட்டு, தமிழ்நாட்டின் போக்கு தொடர்பான எனது பதிவுகளில் வெளிவந்த‌  கணிப்புகள் எல்லாம், அடுத்து அடுத்து சரியென்று நிரூபணமாக, மேற்குறிப்பிட்ட உழைப்பே முக்கிய காரணமாகும்; 1925 முதல் வெளிவந்த 'குடிஅரசு' இதழ்கள் உள்ளிட்டு, திராவிடர்/திராவிட இயக்கம் பற்றிய எனது புரிதலின் பின்னணியில்.

ஜெயலலிதா மறைவிற்கும், தி.மு.க தலைவரின் உடல்நலக் குறைவிற்கும் பின், தமிழ்நாட்டு திராவிட அரசியலில் எதிரெதிர் குவியங்களாக வெளிப்பட்டுள்ளவர்கள் ஸ்டாலினும் சசிகலாவும் ஆவார்கள்.

பொதுமக்கள் கருத்துருவாக்க சமூக செயல்நுட்பம் பற்றிய புரிதலின்றி மேற்கொள்ளப்படும் நிலைப்பாடுகள் மூலம், தமக்கு தாமே குழி பறித்துக் கொள்ளும் போக்கில், இருவருமே கீழ்வரும் செயல்நுட்பத்தில் பலியாகி உள்ளார்கள், என்பது எனது கணிப்பு ஆகும்.

“ஜப்பானிய 'ஜுஜுட்சு' (Jujutsu;https://en.wikipedia.org/wiki/Jujutsu) சண்டையில், எதிரியின் வலிமையையே, எதிரிக்கு எதிராக பயன்படுத்தி வெற்றி பெறுவர். எதிரியே தனது வலிமையை 'தானம்' செய்து, தானாகவே தோற்கும், 'வித்தியாசமான அரசியல் ஜுஜுட்சு', தமிழ்நாட்டில் அரங்கேறி வருகிறது; ஜெயலலிதாவின் 'மர்மமான' மருத்துவ சிகிச்சை அப்பொல்லோவில் தொடங்கிய நாள் முதல்; அந்த 'மர்மத்தை' எதிர்த்து குரல் கொடுக்காமல், 'சசிகலா குடும்ப சூழ்ச்சிக்கு' நேரடியாகவும், மறைமுகமாகவும் ஒத்துழைத்து, தத்தம் அரசியல் அடித்தளங்களை, தாமே 'நாசமாக்கி' கொண்ட கட்சிகளின், தலைவர்களின் பங்களிப்போடு.” (http://tamilsdirection.blogspot.sg/2017/04/depoliticize12-social-energy.html(குறிப்பு கீழே: மோடி அரசின் 'வித்தியாசமான அரசியல் ஜுஜுட்சு' )

முதலில் மேலே குறிப்பிட்ட சமூக செயல்நுட்பத்தில் சிக்கி, சசிகலா தமக்கு தாமே எவ்வாறு குழி பறித்துக் கொண்டார், என்பதை பார்ப்போம்.

“பொது மக்களிடம், குறிப்பாக மாணவர்கள், இளைஞர்களிடம் நல்ல பேர் எடுக்க வேண்டுமானால், நமது பேச்சுக்கும், எழுத்துக்கும், வாழும் வாழ்வுக்கும் இடையே 'சுருதி பேதம்' இல்லாமல் இருக்க வேண்டும். அவ்வாறு வாழ்ந்து ஈட்டிய நல்ல பேரை, அதன் பின்னர் வெளிப்படும் 'சுருதி பேதம்' மூலம் எளிதில் இழந்து விடலாம்; மீண்டும் நல்ல பேர் எடுக்க வழியே இன்றி. இது தமிழ்நாட்டில் அரசியல் நீக்க போக்கின் காரணமாக, 'ஏக போக வலிமை' பெற்றுள்ள, பொதுமக்களின் கருத்துருவாக்கம் (Public Opinion) தொடர்பான சமூக செயல்நுட்பம் (Social Mechanism) ஆகும்.

பொதுமக்களின் கருத்துருவாக்கம் (Public Opinion) தொடர்பான சமூக செயல்நுட்பம் (Social Mechanism) பற்றிய புரிதலின்றி, அரசியல் அலையில் மேலே போகிறவர்கள் எல்லாம், 'சுதாரிக்காமல்', மக்களை 'ஆட்டு மந்தைகள்' என்று கருதி, துடிப்புடன் பயணித்தால், தாம் எதனால் கீழே விழுந்தோம்? என்பது கூட புரியாமல், மண்ணைக் கவ்வுவார்கள், என்பதற்கு விஜயகாந்த் வரலாற்று சாட்சியாகி விட்டார்: வைகோவைப் போலவே.” என்பதையும்;

“விஜயகாந்த் வழியில், அவர் சந்தித்திருப்பதை விட, இன்னும் மோசமான விளைவை சந்திக்கும் திசையில், சசிகலா பயணிக்க தொடங்கி விட்டாரா? “ என்பதையும்;

ஏற்கனவே பார்த்தோம். (December 18, 2016 ; http://tamilsdirection.blogspot.sg/2016/12/depoliticize.html )

தமிழ்நாட்டில் பொது அரங்கில் வெளிப்பட்டு வரும் போக்குகளை 'கண்காணித்து', அந்த போக்குகளை தமது 'அரசியல் லாபங்களுக்கு' பயன்படும் வகையில் தி.மு.க வின் நிகழ்ச்சிகளை 'நெறிப்படுத்தி' வெற்றி கண்டு வந்த, தி.மு.க தலைவர், அந்த போக்கில் எம்.ஜி.ஆரிடம் தோற்றுப் போனார். பின்னர் ஜெயலலிதாவிடம் இரண்டு முறை தி.மு.க தலைவர் வெற்றி பெற்று ஆட்சி அமைத்ததில், 'சசிகலா குடும்ப ஊழல்' காரணமாக பொதுமக்களிடம் வெளிப்பட்ட வெறுப்பே காரணமானது. அதைக் கண்டுபிடித்து, வெற்றி பெற்று, முதல்வரான ஜெயலலிதா, அதே காரணத்தால், 'மர்மமான' முறையில் மரணமடைந்துள்ளார்.

பொதுமக்கள் பார்வையில் இன்று தமிழ்நாட்டு அரசியலில் முக்கியமானவை, கீழ்வரும் இரண்டே குவியங்கள்  ஆகும்.

1. இப்போதுள்ள அரசு நீடிக்குமா? கவிழுமா? இந்த நிச்சயமற்ற போக்கு எப்போது முடிவுக்கு வரும்?

2. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் 'மர்மமான' மருத்துவ சிகிச்சை, மற்றும் 'மர்மமான மரணம்' தொடர்பாக சி.பி.அய் விசாரணை வருமா?

தி.மு.கவைப் பொறுத்த மட்டில்;

1952 தேர்தலில் காங்கிரசை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்ற கட்சிகளின் எம்.எல்.ஏக்களை காங்கிரஸ் பக்கம் இழுத்து, ராஜாஜி முதல்வரான அதே வழிமுறையில்;

ஜெயலலிதாவின் 'மர்ம மரணம்' தொடர்பான சி.பி.ஐ விசாரணை கோரிக்கையையும், ஊசலாட்டத்திற்கு இடமில்லாத, நிலையான ஆட்சியையும் முன்னிறுத்தி;

தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலின், பிரிந்து கிடக்கும் அ.தி.மு.க அணிக்களின் எம்.எல்.ஏக்களை இழுத்து. முதல்வராகும் வாய்ப்பினை ஸ்டாலின் தவற விட்டு, அரசியல் குழப்பமானது வலிமையாக வழி செய்து விட்டார், என்பது எனது கணிப்பாகும்.

தமிழ்நாட்டு மக்கள் மன்றத்தில் உள்ள, மேலே குறிப்பிட்ட குவியங்களைப் புறக்கணித்து;

'குடியரசு தலைவர் தேர்தல்' என்ற தேசிய குவியத்தில் சிக்கி:

முதல்வராகும் வாய்ப்பினை மேலும் பலகீனமாக்கும் வகையில், தி.மு.க தலைவரின் 'வைர விழா' நிகழ்ச்சியானது, தேசிய அளவில் செல்வாக்கிழந்து வரும் ராகுலுக்கு புத்துயிர் கொடுக்கும் வகையில், முடிந்துள்ளதா? என்ற கேள்வியை, கீழ்வரும் செய்தியானது எழுப்பியுள்ளது.

“தற்போது நான் அறிந்தவரை தமிழகத்தில் அரசியல் குழப்பம் நிலவி வருகிறது. இளைய தலை முறையினரால் எதிர்காலத்தில் என்ன நடக்க இருக்கிறது என்பதை தெளிவாக தெரிந்துகொள்ள முடியவில்லை. இதுதான் காங் கிரஸ் கட்சிக்கு நல்ல வாய்ப்பு. இந்த வாய்ப்பை பயன்படுத்தி அறுவடை செய்ய வேண்டும்.” - ராகுல் காந்தி ( ‘தமிழக அரசியலில் குழப்பம் நிலவி வருகிறது: வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுங்கள்- காங்கிரஸாருக்கு ராகுல் அறிவுரை’; http://tamil.thehindu.com/tamilnadu )

மேலே குறிப்பிட்ட போக்கில், ஸ்டாலினோடு போட்டி, போடும் வகையில்:

ஜெயலலிதா மறைவிற்குப் பின்னர், ஓ.பி.எஸ் முதல்வராகி, குறுகிய காலத்தில், 'ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் வெற்றி', சென்னை வெள்ள நிவாரணம், என்று செயல்பட்டு, 'மக்கள் குறைகளை தீர்க்காத, மாவட்ட அளவிலான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்' என்று எச்சரித்து, மத்திய அரசுடனும் இணக்கமாகி, நிலையான ஆட்சி என்ற திசையில் பயணிக்க தொடங்கிய கட்டத்தில்;

அவரை அவமதித்து, முதல்வர் பதவியிலிருந்து அகற்றி, ஈ.பி.எஸ்ஸை முதல்வராக்கி, தினகரனை துணைப் பொது செயலாளராக்கி:

ஆர்.கே. நகர் சட்ட மன்ற தேர்தல் பிரச்சாரத்தில், சசிகலாவின் படத்தையே தவிர்த்து, தினகரன் பிரச்சாரம் செய்த அளவுக்கு, மக்களின் கோபத்திற்கும், வெறுப்புக்கும் உள்ளான சசிகலா:

ஈ.பி.எஸ் ஆட்சியின் நிலையற்ற போக்கினை மேலும் கூட்டி, அ.தி.மு.க கட்சியையும், விஜயகாந்த் கட்சி அளவுக்கு சீரழிக்காமல், ஓய மாட்டாரா? என்ற கேள்வியை, கீழ்வரும் செய்தியானது, எழுப்பியுள்ளது.

“அ.தி.மு.க.,வில் இருந்து, தன்னை ஒதுக்கிய, முதல்வர் பழனிசாமி அணியினருக்கு, துணை பொதுச் செயலராக தன்னை நியமிக்க வைத்த தினகரன், திடீர் கெடு விதித்துள்ளார்.
சசிகலா அறிவுரையை ஏற்று, 60 நாட்கள் ஒதுங்கியிருந்து, கட்சியை கண்காணிக்கப் போவதாகவும், 'அதற்குள் ஒன்றுபடாவிட்டால், எதை செய்ய வேண்டுமோ, அதை செய்வேன்' என்றும், அவர் பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளார்.” (http://www.dinamalar.com/news_detail.asp?id=1784472 )

சசிகலா குடும்ப அரசியல் ஆதிக்கமானது, கீழே குறிப்பிட்டுள்ளவாறு, சட்டத்திற்கு அப்பாற்பட்ட சசிகலாவின் வலிமையின் வரை எல்லைகள் (limitations) தெரியாமல் பயணித்து, மரணவாயிலை நெருங்கியுள்ளது.

உள்மறை இரகசியத்தடை' -‘Subterranean censorship’- சமூக வலிமையுடன் 'வளரும்' அரசியல் கட்சிகள், தேர்தல் வாக்கு சேகரிப்பில் அந்த பலத்தைப் பயன்படுத்தி, வெற்றி பெற்று, ஆட்சியில் பங்கேற்கும்போது, சட்டத்தின் வரை எல்லைகளை, 'அந்த சமூக வலிமை' பலகீனப்படுத்தியதன் வெளிப்பாடுகளாக;  (http://tamilsdirection.blogspot.sg/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_8.html   )

உச்சநீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்ட குற்றவாளியின் கட்டுப்பாட்டில் இருந்த எம்.எல்.ஏக்களை, மாநில முதல்வர் விரும்பினாலும் சந்திக்க முடியாது, என்பதை 'கூவத்தூர்' மூலம், சட்டத்திற்கு அப்பாற்பட்ட சக்தி தமிழ்நாட்டில் சாத்தியமே என்பதை நிரூபித்தார் சசிகலா; தமிழ்நாட்டு மக்களின் கோபத்திற்கும் வெறுப்புக்கும் உள்ளான‌தைப் பற்றிய கவலையின்றி.

தமிழக பா.ஜ.கவானது, மேலே குறிப்பிட்ட இரண்டு குவியங்களையும் பயன்படுத்தி, தமிழ்நாட்டில் வேர் பிடிக்க வாய்ப்பில்லை, என்பதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.sg/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html )

இந்தியாவில் சாதியை ஒழித்து, சமூக மாற்றத்தினை ஏற்படுத்தும் 'வரலாற்றின் சுயநினைவற்ற கருவி'யாக, இந்தியாவில் காலனி ஆட்சியின் எதிர்காலம் பற்றிய, காரல்மார்க்சின் கணிப்பு பொய்த்துப்போனது, மற்ற கணிப்புகளை போலவே. (“Modern industry, resulting from the railway system, will dissolve the hereditary divisions of labour, upon which rest the Indian castes, those decisive impediments to Indian progress and Indian power.” (On Colonialism, Moscow edition 1974, p. 85) & “whatever may have been the crimes of England she was the unconscious tool of history in bringing about that revolution.” ; Karl Marx in the New-York Herald Tribune 1853- The British Rule in India ; https://www.marxists.org/archive/marx/works/1853/06/25.htmஅந்த கணிப்புக்கு மாறாக, காலனி ஆட்சியை விட மிக மோசமான ஆட்சியானது, தமிழ்நாட்டில் பிற்காலத்தில் அரங்கேறுவதற்கான விதையா, காலனிய சூழ்ச்சியில் 'பெரியார்' ஈ.வெ.ராவை சிக்க வைத்து,  1944இல் திராவிடர் கழகம் உருவானது. அதன் தொடர்ச்சியாக, 1967இல் முளை விட்ட ஊழல் போக்கானது, 1991இல் இன்னும் மோசமாகி, 'ஆம்னஸ்டிக் இன்டர்நேஷ்னல்' (amnesty international) பாராட்டும் 'மனித உரிமை' காவலர்களையும், விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களில் பலரையும், 'மெளன கூட்டாளிகளாக்கி', தனியார் சொத்துக்களை அச்சுறுத்தி அபகரித்தல், கிரானைட், தாது மணல், ஆற்று மணல், காடுகள் உள்ளிட்ட இயற்கை வள‌ங்களை ஊழல் பேராசையில் சூறையாடும் போக்கில், காலனி ஆட்சியை விட மோசமான போக்கில், அடுத்த அடுத்த ஆட்சிகளிலும், தமிழ்நாடு பயணிக்க காரணமான, சசிகலாவும் கீழ்வரும் வகையில், 'வரலாற்றின் சுயநினைவற்ற கருவி'யாக (unconscious tool of history) செயல்பட்டு வருகிறார்.

முதல்வர் ஒ.பி.எஸ்க்கு கிடைத்த அரிய வாய்ப்பினை சீர்குலைத்த சசிகலா,  'வரலாற்றின் சுயநினைவற்ற கருவி'யாக, திராவிட ஆட்சிகளிலிருந்து தமிழ்நாட்டை விடுவித்து, 1967க்கு முன் இருந்தது போன்ற, தேசிய நீரோட்டத்தில், பயணிக்க செய்வார்; 'பெரியார்' ஈ.வெ.ரா வளர்த்த 'குருட்டு பகுத்தறிவிலிருந்தும்' தமிழ்நாடானது, 'விடுதலை' பெறும் வகையில், என்பதும், சசிகலாவிற்கு துணை புரியும் போக்கிலேயே, ஸ்டாலின் 'தொடர்ந்து' பயணித்து வருகிறார் என்பதும், எனது கணிப்பாகும்.

அந்த மாற்றமானது,  ரஜினி மூலமாக நடப்பதும், அல்லது வேறு எதிர்பாராத நபர் மூலம் நடப்பதும், ரஜினி மேற்கொள்ள இருக்கும் நிலைப்பாடுகளை பொறுத்ததாகும்.

அது தொடர்பான, கீழ்வரும் எச்சரிக்கையையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

“அரசியலில் 'வெற்றி வாய்ப்பை மோப்பம் பிடித்து', 'ஒட்டிக்கொள்ளும்' 'சமூக கிருமிகள்' மிகுந்துள்ள சூழலில், 'அந்த சமூக கிருமிகளை', மக்கள் மன்றத்தில், துணிச்சலுடன் அம்பலப்படுத்தும் போக்கு வெற்றி பெறாமல்;

ரஜினி, பா.ஜ.க உள்ளிட்டு எவரும் தமிழ்நாட்டில் ஆட்சியைப் பிடித்தாலும், 'அந்த சமூக கிருமிகளின் பிடியிலிருந்து' விலகி, தமிழ்நாட்டை மீட்பது அரிதாகும்.” (http://tamilsdirection.blogspot.sg/2017/05/blog-post_31.htmlசில விதி விலக்குகளுடன், 'நேர்மையான' சுயசம்பாத்திய முறையில் செல்வமோ, சமூகத்தில் செல்வாக்கோ, பெற இயலாதவர்களுக்கும், 'தேர்தல் அரசியல் சூதாட்டத்தில்' பங்கு பெற்று 'பலன்' பெறும் திறமைகள் இல்லாதவர்களுக்கும்;

'குறுக்கு வழியாக',  'பெரியார் வழியில்' பயணிக்கும் சமூக கிருமிகளும், அதில் அடக்கம். 'பெரியார்' கொள்கையாளர்களில் பலர், 'அறிவுபூர்வ மயக்கத்தில் உணர்ச்சிபூர்வமாக' பயணித்து வருவதே, 'பெரியார் சமூக கிருமிகள்' உருவாக காரணமானதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

“ 'பெரியார்' கொள்கையாளர்கள் உணர்ச்சிபூர்வ போதையில் ஒரு வகையிலான 'அறிவுபூர்வ மயக்கத்தில்' பயணித்து வருவதை, பெங்களூர் குணாவின் நூல்கள் மூலம் நான், 'பெரியார்' கொள்கையாளராக பயணித்தபோதே, கண்டுபிடித்தேன்.

'தனித் தமிழ்நாடு' போதையில், பெங்களூர் குணாவின் நூல்களில் 'ஈ.வெ.ரா எதிர்ப்பு' இருந்தது தெரியாமல், அவரின் நூல்களுக்கு நன்கொடை வழங்கி, ஆதரித்து, அவருடன் நெருக்கமாகி, பல 'பெரியார்' கொள்கையாளர்கள் பயணித்தார்கள்.

நான் 'திருச்சி பெரியார் மையம்' மூலம், குணாவின், 'ஈ.வெ.ரா எதிர்ப்பை', அறிவுபூர்வமாக எதிர்த்த போதும், மேற்குறிப்பிட்ட 'மயக்கத்தில்' பயணித்தவர்களில், யார்? யார்? தெளிவு பெற்றார்கள்? அதே மயக்கத்தில் தொடர்ந்தார்கள்? என்பது எனக்கு தெரியாது..” (http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post.html'அந்த மயக்கத்தில்', 'பெரியார்' கொள்கையாளர்களில் பலர் பயணித்து வந்ததை பற்றிய 'அறிவு' கொடுத்த துணிச்சலும், 'திருச்சி பெரியார் மையம்' மூலம், 'பெரியார் சமூக கிருமிகள்' வளர்ந்ததற்கும், ஒரு காரணமா? என்ற ஐயமும் எனக்கு இருக்கிறது.

'பெரியார்' ஈ.வெ.ரா வளர்த்த 'குருட்டு பகுத்தறிவிலிருந்தும்'  தமிழ்நாடானது, 'விடுதலை' பெறும் வகையில், திராவிட ஆட்சிகளிலிருந்து தமிழ்நாட்டை விடுவித்து, 1967க்கு முன் இருந்தது போன்ற, தேசிய நீரோட்டத்தில், பயணிக்க செய்யும் 'வரலாற்றின் சுயநினைவற்ற கருவி'யாக, சசிகலா வெளிப்பட்டுள்ளதை நான் கண்டுபிடித்து;

அந்த போக்கிற்கு துணை புரியும், 'வரலாற்றின் சுயநினைவுள்ள‌ கருவி'யாக (conscious tool of history), நான் செயல்படும் ஆய்வில், எனது இசைத் தகவல் தொழில்நுட்ப (Music Information Technology) ஆய்வுகளுக்கிடையிலும் நேரம் ஒதுக்கி ஈடுபட;

'திருச்சி பெரியார் மையம்' மூலம் வளர்ந்து, 'சசிகலா குடும்ப ஊழல் வலைப்பின்னலில்' இடம் பெற்ற, தமிழ்நாட்டில் ‘பொது வாழ்வு வியாபாரத்திற்கு’ துணை போகும் 'குருட்டு பகுத்தறிவு பார்வை' நோயில் சிக்கி, உணர்ச்சிபூர்வ போக்குகளை வளர்த்து வரும் நிகழ்கால சாட்சிகளான‌, 'பெரியார் சமூக கிருமிகளும்', அக்கிருமிகளின் எடுபிடிகளும் காரணமாகி;

அவர்களும் சசிகலா வழியில், 'வரலாற்றின் சுயநினைவற்ற கருவி'களாகி விட்டார்கள். (http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post_5.html1967இல் ஊழல் அறிமுகமாகியிருந்தாலும், தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் 'வீரியத்துடன்' சீரழித்த, 'ஊழல் சுனாமி' 1991இல் உருவாகாமல் இருந்திருந்தால், இது போன்ற நபர்கள் உருவாகியிருக்க மாட்டார்கள், என்பதும் எனது ஆய்வு முடிவாகும். அவ்வாறு 'ஊழல் சுனாமி' மூலம் இவர்கள் உருவாக, இவர்கள் மூலம் 'அந்த சுனாமியின்' விதையானது, காலனி சூழ்ச்சியில் 1944இல் உருவானது, என்பதை நான் கண்டுபிடித்து, 'மீட்சிக்கான அறிவுபூர்வ போரை' தொடங்க வேண்டும், என்பது இயற்கையின் விதி போல நடந்து, எனக்கு வியப்பை அளித்துள்ளது.


குறிப்பு: 'பசு வதைத் தடை சட்டம்' யாருக்கு  லாபம்? ; http://tamilsdirection.blogspot.sg/2015/03/12_6.html & https://swarajyamag.com/politics/cow-politics-if-bjp-wants-to-lose-2019-this-is-the-right-way-to-go-about-it

Sunday, June 4, 2017

நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம்;
சரியான வாதத்தை முன்வைத்துள்ளார்களா? (2)


நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பதற்காக;

'தமிழனைத் தமிழன் தான் ஆள வேண்டும்' என்ற வாதத்தை முன்வைத்துள்ளவர்களில் எவராவது;

தமிழின் சீரழிவு எப்போது முளை விட்டு, எப்படி வளர்ந்து, இன்று உச்சக்கட்ட சீரழிவில் - தமிழில் எழுதவும் படிக்கவும் தெரியாத மாணவர்கள் இளைஞர்களின் எண்ணிக்கையானது, தமிழ்நாட்டிலேயே அதிவேகமாக அதிகரித்து வரும் போக்கில்-  உள்ளது? என்பது பற்றி கவலைப்பட்டு, தீர்வு நடவடிக்கைகளில் இறங்கியுள்ளார்களா?

'துக்ளக்'(30.05.2017) இதழ் அட்டையில் நின்று கொண்டிருக்கும் ரஜினியின் 'அரசியல் பயணம்'  பேருந்தின் முன்;

'நம்ம ரோடுலே கார் ஓட்ட, அந்த ஆளுக்கு என்ன உரிமை? வண்டி ஸ்டார்ட் ஆனதும், மறியல் செய்ய ரெடியாய் இருப்போம்' என்று, எறும்புகள் சில பேசும் கார்டூன் வெளிவந்துள்ளது.  (https://www.thuglak.com/thuglak/index_new.php?ver=0.01 )

மேலே குறிப்பிட்ட 'துக்ளக்' இதழில், ' ரஜினியின் 'வருகை'யும், தமிழக அரசியலும்' என்ற தலைப்பிலான தலையங்கம், எனது கவனத்தை ஈர்த்துள்ளது.

அதில் 'யார் தமிழர்கள்?' என்ற உட்தலைப்பில் வெளிவந்துள்ள கருத்துக்கள் மிகவும் முக்கியமானவையாகும்.

அதில்  " '40 ஆண்டுகளாக நான் தமிழை காட்டுமிராண்டி பாஷை' என்றும், 'காட்டுமிராண்டிகள் தான் அதைப் பேசுகிறர்கள்'என்றும் கூறி வருகிறேன்." என்பது உள்ளிட்ட 'பெரியார்' ஈ.வெ.ராவின் மேற்கோள்கள் இடம் பெற்றுள்ளன.

மேலே குறிப்பிட்ட போக்கில், 'பெரியார்' ஈ.வெ.ராவும், அவர் வழியில் எண்ணற்ற தொண்டர்களும் பயணித்தன் விளைவுகளை, தமிழ்நாடு இன்று அனுபவித்துக் கொண்டிருக்கிறது: சாண் ஏறி முழம் சறுக்கின கதையாக.

சில வருடங்களுக்கு முன், கல்லூரி முதல்வர் பொறுப்பிலிருந்து விலகி, நான் விரும்பிய இசைத் தகவல் தொழில்நுட்பத் துறையில் (Music Information Technology) ஆய்வுகள் மேற்கொள்வதற்காக‌, சாஸ்திரா பல்கலைகழகத்தில் பேராசிரியராக சேரும் முன், 'நிர்வாக' மனப் போக்கிலிருந்து,  'ஆய்வுக்கான' மனப்போக்கிற்கு மாறும் நோக்கில், மதுரைக்கு அருகே இருந்த சிவானந்ததா ஆசிரமத்தில் சில நாட்கள் யோகா பயிற்சியில் இருந்தேன். (http://www.path2yoga.net/2016/01/the-sivananda-ashram-in-madurai-most-visit-ashram-india.html ) பயிற்சி முடிந்து, பேருந்தில் என்னை ஏற்றிவிட, அங்கு பணிபுரிந்த ஒரு கிராமப்புற பெண் (+2 முடித்தவர்) துணையாக வந்தார்.

அவரிடம் 'உன் வாழ்வின் இலட்சியம் என்ன?' என்று நான் கேட்டேன். 'ஆங்கிலத்தில் சரளமாக எழுதவும், பேசவும் வேண்டும்' என்றார்.

இன்று தமிழ்நாட்டு குக்கிராமங்களில் கூட, 'விளையாட்டுப் பள்ளிகள்' (Play Schools) புற்றீசல் போல் அதிகரிக்க, 'அம்மா, அப்பா' மறைந்து, 'மம்மி, டாடி' அரங்கேறி ‘வருகிறார்கள்’(?).

இன்று தமிழ்நாடானது, 'பெரியார்' ஈ.வெ.ரா அறிவுறுத்திய கீழ்வரும் போக்கில், 'அதிவேகமாக' பயணிக்கிறது.

“"உங்கள் வீட்டில் மனைவியுடனும் குழந்தைகளுடனும் மட்டுமின்றி வேலைக்காரிகளுடனும் ஆங்கிலத்திலேயே பேசுங்கள்;பேச பழகுங்கள்;பேச முயலுங்கள்;! தமிழ்ப் பைத்தியத்தை விட்டு ஒழியுங்கள்" -- பெரியார் ஈ.வே.ரா சிந்தனைகள் ,இரண்டாம் தொகுதி , பப 988-89

தாய்மொழிவழிக்கல்வி மூலம் அடிப்படைக்கல்வி பயிலும் குழந்தைகள் எல்லாம்,  புலனறி மூளை வளர்ச்சி பெற்று (Cognitive Skills Development) , ஆங்கிலம் உள்ளிட்ட பிறமொழிகளிலும் எளிதில் புலமை அடைந்து, சாதனையாளர்களாக வளர்வார்கள், என்பதை உலக ஆய்வுகள் உணர்த்தியுள்ளன. (http://tamilsdirection.blogspot.sg/2016/06/blog-post.html )

மேலே குறிப்பிட்ட ஆய்வுகளை தேடி, கண்டுபிடித்து படிக்கும் அளவுக்கு, 'பெரியார்' ஈ.வெ.ரா அவர்களுக்கு கல்வி அறிவு இல்லை, என்றாலும், அவருக்கு துணையாக இருந்த பட்டதாரிகளான அண்ணா, குத்தூசி குருசாமி, டார்பிடோ ஜனார்த்தனம் உள்ளிட்ட இன்னும் பலர் ஏன் அதைச் செய்யவில்லை? என்பது ஆய்விற்குரியதாகும்.

அதே போல், 1967 ஆட்சி மாற்றத்தில் ஊழல் அரங்கேறியதற்கும்;

அதன் தொடர்ச்சியாக 1970களின் பிற்பகுதியில், 'கல்வி வியாபாரம்' வளர்ந்த வேகத்தில்,  தமிழ்வழிக்கல்வி சீரழிந்து, ஆங்கிலவழிக்கல்வி 'சுனாமியாக' வளர்ந்த போக்கிற்கும்;

பாரம்பரியம், பண்பாடு அடிப்படைகளிலான‌ ஒழுக்க மதிப்பீடுகள் சீரழிந்ததற்கும்:

அவற்றின் தொகுவிளைவாக தனியார் சொத்துக்களை அச்சுறுத்தி அபகரித்தல், கிரானைட், தாது மணல், ஆற்று மணல், காடுகள் உள்ளிட்ட இயற்கை வள‌ங்களை ஊழல் பேராசையில் சூறையாடியதற்கும்;

இடையிலான தொடர்புகள் எல்லாம் ஆய்விற்குரியவையாகும்.

‘ஆங்கில வழிக் கல்வியின் காரணமாக குழந்தைகள் 10வயது வரை இயல்பாக தமது பாரம்பரிய பண்பாட்டு ஒழுக்கத்துடன் பெற வேண்டிய மூளை வளர்ச்சியைப் பெறுவது சிதைக்கப்பட்டது. அதனால் வாழ்க்கையில் அவர்கள் சாதிக்கக் கூடியவற்றை விட குறைவாகவே சாதிக்க நேரிடுகிறது………… ‘இயல்முறி குழந்தை வளர்ப்பின்காரணமாக, பாரம்பரிய பண்பாட்டு ஒழுக்க மதிப்புகள் முக்கியத்துவம் இழந்த சூழலில், வளர்ந்த குழந்தைகள் பெரியவர்கள் ஆவது கடந்த 40 வருடங்களில் அதிகரித்து வருகிறது. சமூகத்தில் குறுக்கு வழியில் பணம் செல்வாக்கு சம்பாதிக்க, அந்த பாரம்பரிய பண்பாட்டு ஒழுக்க மதிப்புகளைக் காவு கொடுத்து, சமூகத்தில் 'பெரிய மனிதர்கள்' ஆகும் போக்கும் அதிகரித்து வருகிறது. இம்முறையில் 'புத்திசாலித்தனமாக' பணம் சம்பாதிக்க தெரியாத/வழியில்லாத 'முட்டாள்களே', திருட்டு, கொலை, கொள்ளை போன்றவற்றில் ஈடுபடுகிறார்கள். அவர்கள் 'குற்றவாளிகளாக' காவல் துறையில் பிடிபட நேர்ந்தால், அவர்கள் அம்முறைகளில் 'சம்பாதித்த' பணத்தை கூலியாக/லஞ்சமாக பெற்று அவர்களைக் காப்பாற்றும் வழக்கறிஞர்களும்,  காவல் துறையிலும், நீதித் துறையிலும் உள்ள கறுப்பு ஆடுகளும்(black sheep) வளர்ந்து வரும் நிலையும் உள்ளது. இயல்முறி  வாழ்க்கை நோயில், தமிழ்நாடு சிக்கியதன் விளைவுகளே இவையாகும். ‘ (http://tamilsdirection.blogspot.sg/2015_01_01_archive.html )

மேலே குறிப்பிட்ட 'கறுப்பு ஆடுகள்' சமூக செயல்நுட்பத்தில், 'பெரியார்' முகமூடி எவ்வாறு 'அதிவேக பணக்காரராக' பயன்பட்டது? என்பதை 'திருச்சி பெரியார் மையம்' அனுபவங்கள் மூலம் கண்டுபிடித்தேன்.( http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post_5.html ) அதன் தொடர்ச்சியான கண்டுபிடிப்பே, தமிழர்களை பாதித்துள்ள,‌ மேலே குறிப்பிட்ட 'இயல்முறி  வாழ்க்கை நோய்' ஆகும். அந்த 'இயல்முறி  வாழ்க்கை நோய்' கவசமாக,  'தமிழனைத் தமிழன் தான் ஆள வேண்டும்' என்ற வாதம் முன்வைக்கப்படுகிறதா? என்ற ஆய்விற்கு, 'பெரியார்' ஈ.வெ.ராவின் கீழ்வரும் எச்சரிக்கை துணை புரியும்.

ஈ.வெ.ராவின் 'பொதுத் தொண்டனுக்கானஅளவுகோலின்படி, நமது  'யோக்கியதை '  எப்படி? (http://tamilsdirection.blogspot.sg/2016/10/blog-post.html )

எனவே ரஜினியின் அரசியல் பிரவேசத்திற்கு எதிராக, 'தமிழனைத் தமிழன் தான் ஆள வேண்டும்' என்று முன்வைக்கப்பட்டுள்ள வாதமானது;

தமிழின் சீரழிவு எப்போது முளை விட்டு, எப்படி வளர்ந்து, இன்று உச்சக்கட்ட சீரழிவில் - தமிழில் எழுதவும் படிக்கவும் தெரியாத மாணவர்கள் இளைஞர்களின் எண்ணிக்கையானது அதிவேகமாக அதிகரித்து வரும் போக்கில்-  உள்ளது? என்பது பற்றிய அறிவுபூர்வ விவாதத்தை தூண்டி, தீர்வு நடவடிக்கைகளை நோக்கி, திரும்பினால்;

அது தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் நல்லதாகவே முடியும்.