Thursday, May 7, 2015



'நல்லினத்தி நூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்’ - திருக்குறள் 460


கடந்த வருடம், தமிழ்நாட்டில் ஒரு கிராமத்தில் நடந்த நிகழ்ச்சி அது,

பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தி, யாருக்கும் அடங்காத 'முரட்டு காளையாக, சுமார் 17 வயது நபர் சுற்றிக் கொண்டிருந்தார். ஒரு உறவினர், இன்னொரு உறவினரை குடும்பப் பகை காரணமாக கொலை செய்ய, அவரைத் தூண்டி, பட்டப்பகலில் பலர் பார்க்க கொலை செய்ய வைத்தார். பின் காவல் துறை அவரை கைது செய்த 'சில நாட்களிலேயே' ஜாமீனில் வந்தார். நாயகன் 'கமலாஹாசன்' அளவுக்கு, ஊரில் இப்போது அவருக்கு மரியாதை. அடுத்து அரசியலில் நுழைந்து, எம்.எல்.ஏ, அமைச்சர் என்று 'உயர' அவருக்கு 'வளமான' எதிர்காலம் காத்திருக்கிறது. 

தமிழ்நாட்டில் 'இப்படிப்பட்ட வளர்ச்சிக்கான' வரலாற்றுப் பின்னணியை சுருக்கமாக பார்ப்போம்.

விருதுநகர் பகுதியில் நீதிக்கட்சியைச் சேர்ந்த W.P.A செளந்திரபாண்டிய நாடார்,  'ஜமீன்' போல செல்வாக்குடன் இருந்த காலம் அது. தந்தையை இழந்து,11வயதில் பள்ளி படிப்பை முடித்துக் கொண்ட, (http://en.wikipedia.org/wiki/K._Kamaraj) , படிக்காமல் ஊர் சுற்றிக் கொண்டிருந்த காமராஜர், காங்கிரஸ் கட்சி வேர் பிடிக்க, 'துணிச்சல் மிகு' தொண்டராக‌ செயல்பட்டார். (‘He regularly practiced ‘silambam’(a typeof martial arts and exercise that is practiced with long sticks and boxing. Page 23, P. Kandaswamy,  The Political Career of K.Kamaraj , (New Delhi: Concept publishing Company, 2001) " ‘பீடி’ புகைப் பிடிக்கும் பழக்கம், அதுவும் அந்த காலத்தில், அவருக்கு ஏற்படும் அளவுக்கு, அவரின் 'நட்பு வட்டம்' (?) இருந்தது. பின் காங்கிரசில் பிரபல தலைவராகி, ஒரு போராட்டத்தில் கைதாகி, ஆந்திராவில் சிறையில் இருந்த போது,  ' சுதேசி' பீடியை வீசி விட்டு, 'விதேசி' சிகிரெட்டை' காமராஜர் புகைக்கத் தொடங்கினார்" என்ற தகவலை, ம.பொ.சி 'எனது போராட்டம்' என்ற சுயசரிதையில் குறிப்பிட்டுள்ளார்.

அதன்பின் காங்கிரஸ் தலைவர்களின், குறிப்பாக சத்தியமூர்த்தியின் வழிகாட்டுதலில், அவர் தன்னை உன்னதமான தலைவராக வளர்த்துக் கொண்டார். Kamaraj  happened  to listen   to   speeches   of   George   Joseph,   Lakshmana   Pillai   and Satyamurthi at Virudunagar. Among all of them Satyamurthi attracted  Kamaraj  and  on  the  same  day  Kamaraj  met  him.  These incidents  of  Jallainwala  Bagh  and  subsequent  meeting  with  Satyamurthi  turned  the life of Kamaraj once for all. Page 24, G. Balan, Kamarajar Vazhkayum Aatchiyum (Life and Administration of Kamaraj), (Chennai: Vanathi Publishers, 2010), ஆனாலும் 1967 காங்கிரஸ் கட்சி ஆட்சியை இழக்கும் வரை, தி.மு.க மற்றும் கம்யூனிஸ்டுகளின் எதிர்ப்பை சமாளிக்க, ஆங்காங்கே 'அடியாட்கள்' காங்கிரஸ் கட்சியில் இருந்தார்கள்.ஆனால் அவர்களெல்லாம், கட்சியிலும், சமூகத்திலும் சற்று கீழாக ‘சிற்றின’மாகவே மதிக்கப்பட்டார்கள்;  தமிழ்நாட்டில் காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது வரை.

சிற்றினம் அஞ்சும் பெருமை சிறுமைதான்
சுற்றமாச் சூழ்ந்து விடும்’ -  திருக்குறள் 451 

(ஆங்கிலேயர் வருகைக்குப்பின், 'ரேஸ்'(Race) என்ற ஆங்கிலச் சொல்லிற்கு, தமிழில் இருந்த 'இனம்' என்ற சொல்லை, யார் முதலில் திரித்து அறிமுகப்படுத்தினார்கள்? என்பது ஆய்விற்குரியது.
 http://tamilsdirection.blogspot.in/2015/06/depoliticize-4.html )

புதுக்கோட்டை சமஸ்தானத்தில் இந்திய விடுதலையின் போது காங்கிரஸ் கட்சி மூன்று பிரிவுகளாக தனித்தனியாக செயல்பட்டு வந்தன. விடுதலைக்கு பின் காமராஜர் சார்பான அணியே நிலை பெற, மற்றவை  சுவடின்றி உதிர்ந்தன. சிங்கப்பூர் லீ குவான் யூ மாதிரி, காங்கிரஸ் கட்சிக்குள் இருந்த தனது அரசியல் எதிரிகளை ஓரங்கட்டி, காமராஜர் காங்கிரஸ் கட்சியை தனது முழுக்கட்டுப்பட்டில் கொண்டு வந்தார். இந்திய விடுதலைக்குப் பின் நடந்த 1952 முதல் பொது தேர்தலில் தோல்வி கண்ட காங்கிரஸ் , அதன்பின்  1957, 1962 பொது தேர்தல்களில் வெற்றி பெற்றது; காமராஜர் , நேருவின் தூண்டுதலினால் டெல்லி அரசியலுக்கு செல்லும் வரை.

1944இல், திராவிடர் கழகம் தோன்றி, பொது அரங்கில் அறிவுபூர்வ விவாதங்கள் கீழிறங்கி, உணர்ச்சிபூர்வ வன்முறை போக்குகள் அரங்கேறத் தொடங்கிய போக்கு,  'இன உணர்வு' என்ற பெயரில், 'சிற்றினம்', 'நல்லினம்' போன்ற வேறுபாடுகள் சிதைந்து, குழம்பி, 'சிற்றினம்' தமிழ்நாட்டில் செல்வாக்கு பெற வழி வகுத்தா? என்பது பற்றிய ஆய்விற்கு தொடர்புள்ள தகவல்கள் வருமாறு; 

1967 இல், தி.மு.க ஆட்சியைப் பிடித்த பின், அந்த காங்கிரஸ் அடியாட்களில் 'புத்திசாலிகள்', தி.மு.க வில் சேர்ந்து, கட்சியிலும், சமூகத்திலும் மிகுந்த செல்வாக்குடன், செல்வந்தர்களாக வளர்ந்தார்கள். குற்றவாளிகளை கண்டுபிடித்த தண்டிக்க வேண்டிய காவல் துறை, அரசு வக்கீல், நீதித் துறை, சிறைத்துறை ஆகியவற்றில் 'கறுப்பு ஆடுகள்' முளை விட்டு, அவர்களோடு 'சேர்ந்து' வளர்ந்தார்கள். அந்த போக்குகளின் ஊடே, 'எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், கவிஞர்கள்' உள்ளிட்ட அறிவுஜீவிகள் ஆகியோரில் பெரும்பாலோர், சமூகத்தில் செல்வாக்கில் வளர்ந்த 'புதிய சிற்றின' துதிபாடிகளாகவும், 'தமிழ், தமிழ் உணர்வு, பகுத்தறிவு' பொது அரங்கு வியாபாரிகளாகவும் வளர்ந்தார்கள்.

இந்திய விடுதலைக்குப் பின் தமிழ்நாட்டில் நடந்த முதல் 1952 பொது தேர்தல் முடிவுகளில், காங்கிரஸ் பெரும்பான்மையின்றி தோற்றது. கம்யூனிஸ்டுகளின் அதரவுடன் முத்துராமலிங்கத்தேவர் ஆட்சி அமைக்க இருந்த வாய்ப்பைக் கெடுத்து, ராஜாஜியின் பங்களிப்பால்,  'கட்சித்தாவல்' (Defection) தமிழ்நாட்டில் அறிமுகமாகி, காங்கிரஸ் ஆட்சியைப்                 பிடித்தது, ( http://thevartrust.blogspot.in/2010/12/history-of-pasumpon-muthuramalinga.html) பின் காமராஜர் எதிர்ப்பு அரசியலில் தி.மு.கவை ஆதரித்து, 1967 பொதுத் தேர்தலில் ஆட்சியை தி.மு.க கைப்பற்ற உதவியது, 1969இல் கலைஞர் மு.கருணாநிதி முதல்வராக உதவியது, போன்றவற்றால், தமிழ்நாட்டின் சீரழிவில், ராஜாஜியின் பங்களிப்பும், விருப்பு வெறுப்பற்ற ஆய்வுக்கு உட்படுத்த வேண்டியதும் அவசியமாகும்.  

பெரியாரின் 'திராவிட நாடு பிரிவினை'யை ராஜாஜி ஆதரித்து, 'இந்தியர்' என்ற அடையாளமானது, தமிழ்நாட்டில் பலகீனமாக பங்களிப்பு வழங்கியுள்ளார்.இந்தியாவில் தமிழர்கள் மட்டுமே, 'தமிழர், திராவிடர், இந்தியர்' குழப்பங்களால், அடையாளச்சிதைவுக்கு உள்ளானார்கள். அதனால், 1944இல் விதைக்கப்பட்ட 'உணர்ச்சிபூர்வ வன்முறை போக்குகளை', (பிற்கால வாரிசு அரசியலுக்கு வழி வகுத்த) 'தனிநபர் விசுவாசமாக' மாற்றி, 1965இல் பெரியாரையே அவமதித்து, ஓரங்கட்டி, 'புதிய சிற்றின' தலைவர்கள் வளர முடிந்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும். இந்த போக்குகள், 'தனித் தமிழ்நாடு' கோரிக்கையை சீரழித்து, கேலிப்பொருளாக்கியது போலவே, 'தனித் தமிழ் ஈழ' முயற்சிகள் முள்ளிவாய்க்கால் மரணத்தில் முடிய காரணமா? இந்த போக்குகள் தமிழ்நாட்டு தமிழர்களை (depoliticize) அரசியல் நீக்கத்திற்குள்ளாக்கியுள்ளதா? கட்சி, கொள்கை சம்பந்தமின்றி,  மாணவர்கள் மத்தியில் மோடிக்குள்ள அபரீதமான செல்வாக்கிற்கும், நடுத்தர, ஏழை,  தமிழர்களில் பெரும்பாலோரின் மத்தியில், மற்ற எவரையும் விட, ஜெயலலிதாவிற்குள்ள அதீதமான‌ செல்வாக்கிற்கும், உள்ள காரணங்கள் யாவை? அந்த செல்வாக்கில், 'சுருதி பேதமாக' , ஜெயலலிதா விசுவாசிகளில் பலர், சசிகலா நடராஜன் குடும்பத்தை சபிப்பது ஏன்? என்பதும் ஆய்விற்குரியதாகும்..

1967இல் முதல்வரானது முதல், மரணம் அடையும் வரை அண்ணாதுரை, நம்பமுடியாத அளவுக்கு எந்த அளவுக்கு உயர்ந்த மனிதராக வெளிப்பட்டார்? என்பதும், அதன் காரணமாகவே தனது கட்சிக்காரர்களால் எந்த அளவுக்கு மன உளைச்சலுக்குள்ளாகி மரணமானார்? என்பது போன்ற கேள்விகளுக்கு, பாரபட்சமற்ற முறையில் விடைகள் காண வேண்டும். காமராஜரின் 'அரசியல் குரு' என்பது,  சத்தியமூர்த்திக்கு பெருமை ஆகும். அது போல அண்ணாவை 'அரசியல் குரு' என்பவர்களால், அண்ணாவுக்கு பெருமையா? அல்லது சிறுமையா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

இயல்பால் 'சிற்றினமாக' இருந்தவர்கள் எல்லாம், சமூகத்தில் மதிக்கப்பட்டவர்களால், 'சமூக விரயம்' (social waste)   என்று ஒதுக்கப்பட்ட நிலை,  1967க்கு முன் தமிழ்நாட்டில் இருந்த நிலையாகும். சமூகத்தில் 'சிற்றினம்' செல்வாக்காக வலம் வரும்போது, இயல்பில் பலகீனமானவர்கள் எல்லாம், தூண்டப்பட்ட(Induced) சிற்றினமாக 'சீரழிவார்கள்'. அத்தகையோர் எண்ணிக்கையிலும், வலிமையிலும் அதிகரிக்கும் போது, அந்த சமூகத்தில் 'சிற்றினமே' தலைவர்களாக வலம் வர முடியும்.

‘நில நலத்தால் நந்திய நெல்லே போல், தம்தம்
குல நலத்தால் ஆகுவர்,சான்றோர்; கல நலத்தைத்
தீ வளி சென்று சிதைத்தாங்கு, சான்றாண்மை
தீ இனம் சேரக்கெடும்’ -   நாலடியார் 18 நல் இனம் சேர்தல் 9

இசை ஆராய்ச்சிக்கு முன் , திருச்சி பெரியார் மையத்தில் பங்களிப்பு வழங்கிய காலத்தில், எனது அறிவு உழைப்பு, உடல் உழைப்பு, பணம் ஆகியவற்றை செலவழித்து, (உண்மையில் 'சிற்றினம்') தமிழைத் தவிர, பிறமொழி அறியாத, தமிழிலும் ஆழ்ந்த புலமையற்ற, 'உணர்ச்சிபூர்வ மேதாவிகள்' போதையாளர்களை,   'பெரியார் கொள்கையாளர்' என்று நானே ஏமாந்து, உழைத்து, அதன் மூலம் ‘வலுவானவர்கள்', மேலே குறிப்பிட்ட‌,  'கறுப்பு ஆடுகள்' கூட்டத்தோடு சேர்ந்து, தமிழ்வழிக்கல்வியின் மரணப்பயணத்தோடு, தமிழ்நாட்டின் கனி வளங்களை சூறையாடியதோடு திருப்தி அடையாமல், உண்மையாகவும் நேர்மையாகவும் வாழ்ந்து வரும் குடும்பங்களையும், தூண்டப்பட்ட(Induced) சிற்றினமாக, சிதைப்பது என்பது, தமிழ்நாட்டின் உச்சக்கட்ட வீழ்ச்சியின் அறிகுறியே ஆகும்.நேர்மையான முறையில் 'செல்வம், செல்வாக்கு' சம்பாதிக்கும் தகுதி, திறமைகளற்ற‌, தீ இன இயல்புள்ள சிற்றினமானது, சான்றாண்மை தீ இனம் சேர்க்கையால், நம்பமுடியாத அளவுக்கு வலிமை பெறுவதால், சமூகத்திற்கு வரும் கேடு பற்றிய ஆய்வுக்குகந்த‌ களமாக, தமிழ்நாடு உள்ளது.  

‘நல்லினத்தி நூங்குந் துணையில்லை தீயினத்தின்
அல்லற் படுப்பதூஉம் இல்’ - திருக்குறள் 460

உச்சக்கட்ட வீழ்ச்சியில் தமிழ்நாடு இருப்பதால், இனி தமிழ்நாட்டின் மீட்சி காலம் தொடங்கும் நேரம் வந்துவிட்டது.

அண்ணாவிற்கு பின், அவர் மன வருத்தத்தில் மரணமடைய காரணமான‌ போக்குகளை திருத்தி, தமிழ்நாட்டை நல்வழியில் திருப்ப என்ன முயற்சிகள் நடந்தன? அல்லது நடக்கவில்லை? இனி எவ்வாறு திருத்த முயற்சிகள் மேற்கொள்வது? அத்தகைய பணியில் ஈடுபடுபவர்கள் எப்படிப்பட்டவர்களாயிருந்தால், அம்முயற்சி வெற்றி பெறும்? என்பது இப்போதுள்ள கேள்விகளாகும்.

அக்கேள்விகளுக்கான‌ விடைகளை திறந்த மனதுடன் ஆய்ந்து, கண்டுபிடித்து, செயல்படுத்த‌ தவறினால், முதலில் குறிப்பிட்ட கிராமத்தில், நாயகன் 'கமலாஹாசன்' அளவுக்கு இப்போது மரியாதை பெற்றுள்ள அந்த நபர், அடுத்து அரசியலில் நுழைந்து, எம்.எல்.ஏ, அமைச்சர் என்று 'உயர', 'தமிழ் உணர்வு, இன உணர்வு' தலைவர்கள் ஆதரவுடன் வலம் வருவதைத் தடுக்க முடியாது. அதற்கான சூழல் தமிழ்நாட்டில் இருப்பதை கீழ்வரும் செய்தியும் உணர்த்துகிறது.

கடந்த வாரம் சென்னை எல்லையில்,  ஆந்திராவுக்கு ரெயில் மூலம் ரேசன் அரிசியை பெண்கள் கடத்த முய‌ன்றதை, தடுத்த கிராம நிர்வாக அதிகாரியை, அந்த பெண்கள் அடித்த செய்தி, தொலைகாட்சிகளில் ஒளிபரப்பானது. 'ஜிகிர் தண்டா' திரைப்படத்தில் கதாநாயகி, அறிமுக காட்சியில், துணிக்கடையில் சேலை திருடுவது காட்டப்பட்டது. அரசில் உயர் பதவிகளில் இருந்தவர்கள், ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான கோடி திருடியும், அவர்களுக்கு தண்டனையில்லையென்றால், பிழைப்பிற்கு ரேசன் அரிசியை கடத்துவது தவறா? இப்போது 'நியுட்ரினோ' திட்டத்தை எதிர்ப்பவர்களில், கடந்த சுமார் 20 வருடங்களாக நடந்து வரும் கிரானைட், தாது மணல் கொள்ளையைக் கண்டு கொள்ளாதவர்கள், 'வாய்க்கரிசி' பெற்று வாயை மூடிக் கொள்ள,  எதிர்க்கும் போது,  துணிக்கடையில் சேலை திருடுவது த‌வறா? என்ற கேள்விகள் சாதாரண மக்களிடம் எழுவதை குறை சொல்ல முடியுமா? இவை போன்ற கேள்விகளை, சாதாரண மக்களிடம், 1967க்கு முன், கற்பனை கூட செய்திருக்க முடியுமா?

1944இல், திராவிடர் கழகம் தோன்றி, பொது அரங்கில் அறிவுபூர்வ விவாதங்கள் கீழிறங்கி, உணர்ச்சிபூர்வ வன்முறை போக்குகள் அரங்கேறத் தொடங்கிய போக்கு,  'இன உணர்வு' என்ற பெயரில் 'சிற்றினம்' தமிழ்நாட்டில் செல்வாக்கு பெற்று மதிக்கத் தக்கவர்களானதால், என்னை போன்றவர்கள் சமூகத்தில் 'வாழத்தெரியாத முட்டாள்களாக' சமூக விரயமாக' ஒதுக்கப்படும் நிலை வந்துள்ளதா? என்ற ஐயம்,  திருச்சி ‘பெரியார் மையம்’ அனுபவங்கள் காரணமாக, எனக்குள் எழுந்தது. அகத்தில் சீரழிந்த சிற்றினமானது, 'இழிவான குறுக்கு வழிகளில்',  செல்வம், செல்வாக்கு ஈட்டி, தீயினமாக வலிமை பெற, பெரியாரின் கொள்கைகளும், நிலைப்பாடுகளும் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன? ஒப்பீட்டளவில், இந்து முஸ்லீம்களை விட, கிறித்துவ குடும்பங்கள், எளிதில் சிற்றினமாக சிதைந்து வருகின்றனவா? மதமாற்ற சமூக செயல்நுட்பத்தில் (Social mechanism of the conversion)  முஸ்லிம்களுக்கும், கிறித்துவர்களுக்கும் இடையில் வேறுபாடு உண்டா? கிறித்துவ  NGOக்களுக்கும், ஆம் ஆத்மி கட்சிக்கும், திராவிடக் கட்சிகளுக்கும் உள்ள தொடர்பு எந்த வகையிலானது? பெரியார் கொள்கையாளர்களில், தமது சொந்த வாழ்வுக்கு 'சுயநலக் கள்வர் நெறி', வெளிவேடத்திற்கு 'சமூக நீதி, ஊழல் எதிர்ப்பு' என்று வாழும், இரட்டை வேடதாரிகள் யார்?, யார்? என்ற ஆய்வுகளில்,  நான் ஈடுபட அந்த அனுபவங்கள் காரணமாகும்.

அதன்பின்,  'தீ இனம்' என்று நான் அடையாளம் கண்டவர்களை விட்டு விலகி, 'நல்லினம் யார்?' என்று ஆராய்ந்து, அத்தகையோரை எனது சமூக வட்டமாகக் கொண்டு வாழத் தொடங்கிய பின் தான், தமிழ்நாட்டில் இருளிலிருந்து வெளியேறி, வெளிச்சத்திற்குள் நுழைந்த உணர்வு ஏற்பட்டது. எனது ஆய்வு முயற்சிகளில், நம்ப முடியாத அளவுக்கு முன்னேற்றங்களும் (http://musictholkappiam.blogspot.in/; & http://drvee.in/) ஏற்பட்டன. வணங்கத்தகும் மனிதர்கள் எனது சமூக வட்டத்தில் இடம் பெறும் போக்குகளும் அதிகரித்தன. ‘உயிருடன் வாழும் பிணங்களின்’ நாற்றத்திலிருந்து விடுபட்டு, சுத்தமான காற்றை சுவாசிக்கும் வாய்ப்பு கிட்டியதே அதற்கு காரணமாகும். ('கொள்கை' பிணம் தின்னும் கழுகுகளாகவா? நாமே 'கொள்கைப் பிணமாக'வா? எப்படி நாம் வாழ்கிறோம்?’;

http://tamilsdirection.blogspot.in/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_17.html )

'சிற்றினம் அஞ்சும் பெருமை' (திருக்குறள் 451);'அஞ்சுவது அஞ்சாமை பேதமை' (திருக்குறள் 428) 'சான்றாண்மை தீ இனம் சேரக்கெடும்’(நாலடியார் 18; நல் இனம் சேர்தல்; 9) பழந்தமிழ் இலக்கியங்களை 'தீதாக'க் கருதும், ‘உயிருடன் வாழும் பிணங்களின்’ நாற்றத்தில், நான் சிக்கியதில் வியப்புண்டோ? பின், தப்பி, சுத்தமான காற்றை சுவாசிப்பதிலும் வியப்புண்டோ? சிகிரெட் புகையை அனுபவிப்பவர்களிடமிருந்து, அந்த புகையை வெறுப்பவர்கள் விலகினால் தானே, சுத்தமான காற்றை சுவாசிக்க முடியும்.

தமிழ்நாட்டில் சிறிய கட்சிகள் முதல், பெரிய கட்சிகள் வரை, ஆதாயத் தொண்டர்கள் பலத்தையே பெருமளவு நம்பி பயணிக்க வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது? என்று ஆராய்ந்தேன். சாதாரணமாக வாழும் தமிழர்கள், என்னை விட புத்திசாலிகளாக, அந்த 'தீ இனம்' மனிதர்கள் எவ்வளவு ' தமிழ், தமிழ் உணர்வு, செல்வ வெளிச்சம்' போட்டாலும், மயங்காமல், அந்த 'ச‌மூக விபச்சாரிகளை' இழிவாகக் கருதி, ஒதுங்கி வாழ்வது, அல்லது பணம் தேவைப்பட்டால் அவர்களிடம் 'ஆதாயத் தொண்டராக' பணியாற்றி, தேவை முடிந்த பின் விலகி வாழ்வது, எனக்கே வியப்பான அனுபவமாகும். எனவே தமிழ்வழியின் மரணப்பயணத்தைத் தடுத்து, 'சுயநல கள்வர்கள் பதர்கள்' ஆதிக்கத்திலிருந்து, தமிழ்நாட்டை விடுவிக்க முடியும் என்ற நம்பிக்கையும் வலிமை பெற்றுள்ளது.

கடந்த பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்கள் பட்டியலில், பா.ஜ.க உள்ளிட்டு, தேசிய, திராவிட உள்ளிட்ட‌ அனைத்து கட்சிகளிலும், 'அடியாளாக' நுழைந்து, அரசியலில் வளர்ந்தவர்கள் யார் யார் இடம் பெற்றிருந்தார்கள்? என்பது ஆய்விற்குரியதாகும்.

எனவே கட்சி வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, 'நல் இனம்' யார், யார் என்று தேடி, ஒன்றிணைக்க வேண்டிய நேரம் வந்து விட்டது.

‘மனந்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
இனந்தூய்மை தூவா வரும்’ - திருக்குறள் 455

தமிழ்நாட்டில் அவ்வாறு 'தெரிந்த இனம்' மூலம், தமிழ் மொழியின் மரணப்பயணத்தையும், சுய‌நலக்களவராகி, தமிழர்கள் பதர்களாகி வரும் போக்கையும் வென்று, தமிழின், தமிழ்நாட்டின் மீட்சி உறுதி என்பதை, கீழ்வரும் திருக்குறள் தெளிவுபடுத்தியுள்ளது.

‘தெரிந்த இனத்தோடு தேர்ந்து எண்ணி செய்வார்க்கு
அரும்பொருள் யாதொன்றும் இல்’ - திருக்குறள் 462

அந்த முயற்சிக்கு தொல்காப்பியமும் வழி காட்டியுள்ளது.

‘மனத்தின் எண்ணி மாசு அறத் தெரிந்து கொண்டு,
இனத்தின் சேர்த்தி உணர்த்தல் வேண்டும்
நுனித்தகு புலவர் கூறிய நூலே’
தொல்காப்பியம்; மரபு இயல் 112

எனது அறிவு, அனுபவ அடிப்படைகளில், நான் 'பெரியார் சமூக கிருமிகளாக' அடையாளம் கண்டவர்களில்;

1944இல் இளைஞர்களாயிருந்து, 1970களின் கடைசியில் நான் பெரியார் இயக்கத்தினுள் நுழைந்து, எனக்கு அறிமுகமானவர்களில் எவரும் கிடையாது. 1947க்குப் பின் வசதியான/வசதி குறைவான குடும்பங்களில் பிறந்து, ஒழுங்குடனும், பொறுப்புடனும் நன்கு படித்து, பெரியார் ஆதரவாளர்களாக, வளர்ந்தவர்களில் எவரும் கிடையாது. வசதி குறைவான குடும்பத்தில் பிறந்து, படிக்கிற காலத்தில் 'காலித்தனமாக' இருந்து கொண்டு, அல்லது 'காலிகளின் வால்கள் நண்பர்களாக' இருந்து கொண்டு, 'பெரியார்'' ஆதரவாளர்களாக, வாழ்வை 'அனுபவித்து', அதன் மூலம் பெற்ற‌ 'அறிவின்' துணையோடு, 'திராவிட அரசியல் கொள்ளைக் கும்பலுடன்' கூட்டு சேர்ந்து, 'குறுக்கு வழிகளில்', 'பெரியார் சமுக கிருமி' செயல்நுட்பத்தில், 'அதிவேக பணக்காரர்களாவதோடு, தமது சமூக வட்டத்தில், அந்த 'தனித்துவமான' கள்வர் நோயையும், அவர்கள் பரப்பி வருகிறார்கள்; சமூகத்தில் உள்ள அறிவுக்கு எதிரான உணர்ச்சிபூர்வ போக்குகளின் துணையோடும், ('ஊழல் எதிர்ப்பு அலையில்' மோடி பிரதமரான பின்னரும்) அரசின் ஊழல் ஒழிப்பில் உள்ள ஓட்டைகளின் துணையோடும்.

ஆக, 'சிற்றினம்', 'தீ இனம்' யார், யார் என்று அடையாளம் கண்டு, அவர்களை விட்டு விலகி, 'துணிச்சலுடன்', அதனால் விளையும் இழப்புகளை விரும்பி ஏற்று,  ‘நல் இனமாக' வாழ்பவர்கள் எல்லாம் ஒன்று சேர்வதன் மூலமே, தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டில் மீட்சிக்கு,  நாம் பங்களிப்பு வழங்க முடியும். அதற்கு முன்னுதாரணமாக வாழ்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதானது, தமிழின்,
தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு நம்பிக்கை தருவதாகும்.
------------------------------------

Wednesday, April 29, 2015



'சமற்கிருத வல்லாண்மை எதிர்ப்பு’ க் கருத்தரங்கம் : 

விபுலானந்தர் படத்திறப்பு சரியா?


சென்னையில் கடந்த 25.04.2015 &  26.04.2015 தேதிகளில், 'சமற்கிருத வல்லாண்மை எதிர்ப்புக் கருத்தரங்கம்' நடந்துள்ளது. அதில் படத்திறப்புகளில் விபுலானந்த அடிகள் படம் இடம் பெற்றது என் கவனத்தை ஈர்த்தது. தமிழிசை தொடர்பான நிகழ்ச்சிகளில் அவர் படம் இடம் பெறுவதை என்னால் விளங்கிக் கொள்ள முடியும். ஏனெனில் இசை தொடர்பான இயற்பியல் விதிகள் அடிப்படையில், நரம்பு கருவிகளில் எழும் இசைச்சுர ஒலி அதிர்வு எண்ணை முதலில் கணக்கிட்டு காண்பித்தவர் அவர்; சிற்சில குறைபாடுகள் அக்கணக்கீட்டில் இருந்தாலும்.

ஆனால் தனது தமிழ் இசை ஆய்வுககுக்கு, பழந்தமிழ் ஆதாரங்களைப் புறக்கணித்து, வடமொழி நூல்கள் அடிப்படையில் தனது ஆய்வுகளை மேற்கொண்டவர் விபுலானந்த அடிகள் ஆவார். அதனை உரிய சான்றுகளுடன் எனது 'தமிழ் இசையின் இயற்பியல்' (Physics of Tamil Music)  என்ற தலைப்பிலான‌ முனைவர் பட்ட ஆய்வில் (1996) வெளிப்படுத்தியுள்ளேன். பின்னர் 'தமிழ் இசையியல் புதிய கண்டுபிடிப்புகள்' (2009; சேகர் பதிப்பகம், சென்னை) என்ற நூலிலும், அது வெளிவந்துள்ளது. 

‘ச, ரி, க, ம, ப , த, நி’ எனும் 7 இசைச்சுர எழுத்துக்கள், சமஸ்கிருதத்தில் 'ஷட்ஜம், ரிஷபம்,காந்தாரம், மத்யமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம்' என்ற சுரப் பெயர்களால் அழைக்கப்படுகின்றன.

‘ச, ரி, க, ம, ப , த, நி’ எனும் 7 இசைச்சுர எழுத்துக்கள், தமிழில் சுரப்பெயர்கள் 'குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம்' என்று அழைக்கப்பட்டதற்கு, பழந்தமிழ் இலக்கியங்களில் பல சான்றுகள் உள்ளன. அதனை, தமிழ் இசை ஆய்வுகளில்  முன்னோடியான ஆபிரகாம் பண்டிதர்,  1917 இல் வெளிவந்த, தனது 'கருணாமிர்த சாகரம்' என்ற நூலில் தெளிவுபடுத்தியுள்ளார். அதில் பிரமிக்க வைக்கும் வகையில்,  'ச, ரி, க, ம, ப, த, நி' தமிழ் இசைக்கே உரியவை என்று நிறுவி, மேலேக்குறிப்பிட்ட சமஸ்கிருத சுரப்பெயர்கள், சமஸ்கிருத இலக்கணப்படி, 7 சுர எழுத்துக்களை குறிக்காது என்பதற்கு, திருவையாறு சமஸ்கிருத பிராமண புலமையாளரிடமே அதற்கான சான்றினை பெற்று, அந்நூலில் வெளியிட்டுள்ளார். (பக்கம் 527, கருணாமிர்த சாகரம், ஆபிரகாம் பண்டிதர், 1917)

இதில் வியப்பென்னவென்றால், தனது தமிழ் இசை ஆய்வுகளை 'சமஸ்கிருத வல்லாண்மை எதிர்ப்பு' என்ற திசையில் அவர் மேற்கொள்ளவில்லை. உரிய சான்றுகளின் அடிப்படையில், ‘உண்மையை நிலைநாட்டல்’ என்ற திசையில் அவர் தமது ஆய்வுகளை மேற்கொண்டார். தமது ஆய்வுகளுக்கு ஆதரவளித்த பிராமணர்களையும், நன்றியுடன், தமது நூலில், அவர் நினைவுகூர்ந்துள்ளார். அந்த 'பாவத்திற்காக' மேலேக்குறிப்பிட்ட நிகழ்ச்சியில் அவர் படம் இடம் பெறவில்லையா? இல்லையா? என்பது நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களின் மனசாட்சிகளுக்கே வெளிச்சம்.

கூடுதல் வியப்பு என்னவென்றால், 'சமற்கிருத வல்லாண்மை எதிர்ப்புக் கருத்தரங்க' படத்திறப்புகளில் விபுலானந்த அடிகள் படம் இடம் பெற்றது தான்.

தமிழ் இசைச்சுர பெயர்கள் தொடர்பாக, விபுலானந்த அடிகள் பழந்தமிழ் இலக்கியங்களில் உள்ள சான்றுகளைப் புறக்கணித்து, 'நாரத சிட்சை', 'சங்கீத ரத்னாகரம்' போன்ற சமஸ்கிருத நூல்களின் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டு, 'ச' என்ற இசைச்சுரம், தமிழ் இசையில் 'இளி' என்று அழைக்கப்பட்டது என்ற தவறான முடிவை, தனது 'யாழ்நூல்' மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இதன் மூலம் (வாதத்திற்காக‌) தமிழ் இசையை 'சமஸ்கிருத வல்லாண்மைக்கு' அடிமைப்படுத்தியவர் விபுலானந்த அடிகள் என்று சொன்னால், அது தவறாகுமா? மேலே குறிப்பிட்ட 'சமற்கிருத வல்லாண்மை எதிர்ப்புக் கருத்தரங்கம்' நிகழ்ச்சிகளில் தமிழ்/தமிழ் இசை புலமையாளர்கள் பலர் பங்கேற்றுள்ளதாக தெரிகிறது. (http://thiru2050.blogspot.in/2015/04/blog-post_82.html) அக்கருத்தரங்கில் விபுலானந்தர் படத்திறப்பு என்பது 'சுருதிபேதம்' என்பதை,  அவர்களில் எவரும் அறிந்தார்களா? அதனை நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களுக்கு தெரிவித்தார்களா? அல்லது 'நமக்கேன் வம்பு?' என்று வாய்மூடிக் கொண்டார்களா? என்பதெல்லாம் அவரவர் மனசாட்சிகளுக்கே வெளிச்சம்.

உணர்ச்சிபூர்வமாக,‌  தவறான திசையில், தமிழ் இசை ஆர்வம் பயணிப்பதால், வரும் கேடுகள் பற்றி, நான் விளக்கியுள்ளதையும், தமிழ்நாட்டில் தமிழிசை புலமையாளர்கள், ஆர்வலர்கள் எவரும் கண்டுகொண்டதாக தெரியவில்லை. ஒருவேளை, வெறுப்பு அரசியலுக்கு அது துணை செய்யாது, என்பதும் கூட காரணமாக இருக்கலாம்.

விபுலானந்த அடிகள் தனது 'யாழ் நூல்' (1947 )  என்ற புத்தகத்தில், சுமார் 30 வருடங்களுக்கு முன் வெளிவந்திருந்த‌, ஆபிரகாம் பண்டிதரின் 'கருணாமிர்த சாகரம்' ( 1917) என்ற நூலைப் பற்றி  ஏன் குறிப்பிடவில்லை? ஆபிரகாம் பண்டிதரின் ஆய்வுகளைக் கணக்கில் கொண்டிருந்தால், விபுலானந்தர் தமது ஆய்வுகளில் வெளிப்படுத்தியுள்ள குறைகளை தவிர்த்திருக்கலாம் என்பதையும் எனது முனைவர் பட்ட ஆய்வில் குறிப்பிட்டுள்ளேன். (பக்கம் 168, 'தமிழ் இசையியல் புதிய கண்டுபிடிப்புகள்' ‍ 2009)

'பிராமண எதிர்ப்பு, சமஸ்கிருத எதிர்ப்பு' போன்ற வெறுப்பு அரசியலில் சிக்காமல், ஆபிரகாம் பண்டிதர் உரிய சான்றுகளின் அடிப்படைகளில் உண்மையை நிலைநாட்டுதல் என்ற திசையில், பிராமணர்களிலும், பிராமணரல்லாதாரிலும் இருந்த புலமையாளர்களை தமது ஆய்வு வட்டமாகக் கொண்டு, தமது ஆய்வுகளை மேற்கொண்டார். அதனால் அறிவுபூர்வமான விமர்சனங்களின் ஊடே, அவரின் புலமையும், ஆய்வும் வளர்ந்தன.

அதற்கு மாறாக, வெறுப்பு அரசியலில், புகழ், பாராட்டு போன்றவைகளுக்கு ஏங்கி, உணர்ச்சிபூர்வமான பேச்சுகள் மற்றும் எழுத்துகள் மூலம் பயணிப்பவர்களின் புலமைக்கும், ஆய்வுக்கும் அதுவே கேடாக அமையும்.  

தமிழ்நாட்டில் உரிய புலமையின்றி, 'அறிவுஜீவி'யாக வெளிச்சம் போடும் நோயானது, பிராமணர்களிடமும், பிராமணரல்லாதாரிடமும் வெளிப்பட்டு வருவதை நான் அறிவேன். உணர்ச்சிபூர்வமாக வெறுப்பு அரசியலில் பயணிக்கும் தமிழ் இசை ஆர்வலர்களையும், தமிழ் இசையை இரண்டாம் தரமாக கருதி, கர்நாடக இசை உயர்வு போதையில் பயணிக்கும் பிராமணர்களையும், எனது சமூக வட்டதில் இருந்து அகற்றியே, நான் வாழ்கிறேன்'; 

'அறிவு ஜீவி' பொதுவாழ்வு விபச்சாரிகளையும் ஒதுக்கி வாழ்வது போலவே.  திராவிட மனநோயாளித்தன செயல்நுட்பத்தில் சிக்கி, பலிகடா ஆனதன் 'பலன்களை',  பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேறுபாடின்றி, அனைத்து சாதி, மதத்தினரும் 'அனுபவித்து வருகின்றனர்." என்பதை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.( ‘திராவிட மனநோயாளித்தனத்தின் பலிகடா:(Social Functional Checks) சமூக செயல்நெறி மதகுகள் (2); பலிகடாவின் 'பலன்கள்' : பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேறுபாடின்றி’; http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_10.html ) தமிழ்நாட்டில் அறிவுப்புலத்திலும் அந்த -'அறிவுஜீவி'யாக வெளிச்சம் போடும் நோயாகிய‌-  பாதிப்பு உள்ளது.

வெறுப்பு அரசியலில் சிக்காமல், உரிய சான்றுகளின் அடிப்படைகளில் உண்மையை நிலைநாட்டுதல், ஆய்வு முடிவுகளின் மீது உடைமையுணர்வு பற்று(possessiveness)  இல்லாமல், அறிவுபூர்வமான விமர்சனத்தில் வெளிப்படும் தவறுகளை, பகிரங்கமாக நன்றியுடன் ஒத்துக்கொண்டு, உரிய திருத்தங்களுடன் நான் பயணிக்கிறேன். நம்மை மிகவும் மதிப்பவர்கள் என்பதற்காக, அவர்களிடம் வெளிப்படும் தவறுகளை 'வாழ்வியல் புத்திசாலித்தனத்துடன்' கண்டுகொள்ளாமல் இருக்கும் தவறுகளை, நான் செய்வதில்லை, என்பதை,  என்னிடம் பழகியவர்களும், பழகுப‌வர்களும் அறிவார்கள்.

ஆபிரகாம் பண்டிதர், விபுலானந்த அடிகள் ஆய்வுகளில் இருந்த குறைபாடுகளை உரிய சான்றுகளுடன் வெளிப்படுத்தி,  “1996இல் 'தமிழிசையின் இயற்பியல்' (Physics of Tamil Music)  பல்துறை (interdisciplinary) முனைவர் பட்டம் பெற்றதும், எனது ஆய்வுமுடிவுகள் 'அதிர்ச்சி அலைகளை' ஏற்படுத்தி , ஒரு பெரிய விவாதத்தை தமிழ்நாட்டில் ஏற்படுத்தும் என எதிர்பார்த்தேன். ஆனால் கடந்த 20 வருடங்களாக அப்படிப்பட்ட விவாதமின்றி 'அமைதியாகத்’ தான் தமிழ்நாடு பயணித்துக் கொண்டிருக்கிறது. அந்த 'அமைதியுடன்' தொடர்புடைய 'செயல்நுட்பத்திலேயே', ஆங்கில வழிப் பள்ளிகளின் புற்றீசல் வளர்ச்சியில் தமிழ்வழிக்கல்வியின்  (எனவே தமிழின்) மரணப்பயணம் தொடங்கியதா? கிரானைட், தாது மணல், ஏரி,குளம், காடுகள் உள்ளிட்ட கனிவளங்கள் சூறையாடப்பட்டதா? அந்த 'அமைதியில்' பங்கு பெற்ற தமிழ், தமிழ் உணர்வு புலமையாளர்களில், யார், யார் 'நமக்கேன் வம்பு?' என்று ஒதுங்கி வாழ்ந்தவர்கள்? அந்த 'கொள்ளைகளில்' 'வாய்க்கரிசி' பெற்று 'வாழ்வியல் புத்திசாலி நடை பிணங்களாக' வாழ்ந்தவர்கள் யார்? அந்த 20 வருடங்களில், தனிநபர்களை 'மிரட்டி, கொலை செய்து' சொத்துக்கள் வாங்கியதையும், அந்த கொள்ளைகளையும்,  அரசியல் செல்வாக்குள்ள கொலையாளிகள், அரசு சாட்சிகளை மிரட்டி, பிறழ்சாட்சிகளாக்கி, விடுதலைகள் பெற்றதையும் 'கண்டுகொள்ளாமல்', தமது செல்வம், செல்வாக்கில் வளர்ந்த 'மனித உரிமை' தலைவர்கள் யார், யார்? என்பது போன்ற 'ஆராய்ச்சிகள்' இனி 'சூடு' பிடிக்கும் என்றும், அந்த போக்கில், தமிழ்வழிக்கல்வியின் மரணப்பயணம் தடுத்து நிறுத்தப்பட்டு, தமிழ்நாடு வீழ்ச்சியிலிருந்து மீளும் என்றும் நம்புகிறேன். அறிவுபூர்வ விவாதங்களுக்கு இடமின்றி, உணர்ச்சிபூர்வ வெறுப்பு அரசியலில்,  தமிழ்நாடு பயணித்ததும், இதற்கு காரணமா? என்பதும் ஆய்விற்குரியது.  தமிழ்நாட்டின் அறிவுப்புலமானது(intellectual field) , 'கட்சி அரசியல்' மூலம், சமூக வண்ணக்குறைபாட்டில்(social colour blindness)  சிக்கி, சீரழிந்து வருவதன் விளைவும், இதற்கு காரணமா? என்பதும் ஆய்விற்குரியது. ('கறுப்பு வெள்ளை (அல்லது சிகப்பு) பாதிப்புகளிலிருந்து விடுபடுவோம்';http://tamilsdirection.blogspot.in/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html ). எனது ஆய்வு முடிவுகளில் பல, 'உணர்ச்சிபூர்வ',  'திராவிட', 'இந்துத்வா' ஆதரவாளர்களுக்கு பிடிக்காமல் இருக்க வாய்ப்புண்டு.

ஆங்கில வழிக் கல்வி மூலம் 'ஆங்கில வல்லாண்மையில்', தமிழ்வழிக்கல்வியின் (எனவே தமிழின்) மரணப்பயணம் தீவிரமடைந்துள்ளது. அந்த போக்கில், தமிழ்நாட்டில் வாழ்ந்து கொண்டு (வெளிநாடுவாழ் தமிழர்களுக்கு வேறு வழியில்லை) ,  தமது குடும்பப்பிள்ளைகளை ஆங்கிலவழியில் படிக்க வைத்துக்கொண்டு, அதற்கு வருத்தம் கூட தெரிவிக்காமல், 'சமற்கிருத வல்லாண்மையை' எதிர்ப்பது சரியா?

தமிழ்நாட்டில் இந்து அறநிலையத் துறை கோவில்களில் பக்தர்கள் விரும்பினால், தமிழில் வழிபட ஏற்பாடுகள் செய்கிறார்கள். ஏன் அதை பெரும்பாலான தமிழர்கள் பயன்படுத்திக் கொள்வதில்லை? அவை தவிர, சைவ மடங்களும், தமிழர்களாக உள்ள தனியார் வசத்திலும் பல கோவில்கள் உள்ளன?.அங்கெல்லாம் தமிழில் வழிபடுவதைத் தடுப்பது யார்? பெரும்பாலான தமிழர்களின் மூளைகளில் 'பக்தி' தொடர்பாக, என்னென்ன கருத்துகள் ஆதிக்கம் செலுத்துகின்றன?  'தமிழில் வழிபட்டால், வேண்டியதெல்லாம் கிடைக்கும்' என்று, ஒரு புரளியை வெற்றிகரமாக கிளப்பி விட்டால், தமிழர்களெல்லாம் தமிழில் வழிபட மாட்டார்களா? அப்படி தமிழில் வழிபட்டாலும், அதற்கு தமிழ் மீது உள்ள பற்று காரணமாகுமா? அல்லது 'அதிர்ஷ்டத்தின்' மீது உள்ள பற்று காரணமாகுமா?


ஆங்கிலத்தின் வல்லாண்மையையும், 'அதிர்ஷ்டத்தின்' வல்லாண்மையையும் தமது வாழ்வில் 'செயல்பூர்வமாக' எதிர்ப்பதே சரி; பேச்சுகளும், எழுத்துகளும் தமிழ்நாட்டில் தகவல் பரிமாற்ற வலிமையை இழந்துவரும் சூழலில். கீழ்வரும் வகையில், தமிழ் இசை வளர்ச்சிக்கு என்னால் இயன்ற பங்களிப்பை 'செயல்பூர்வமாக' பேசி வருகிறேன்.


விருப்பு, வெறுப்புகளைத் தாண்டி, புலமையை மதிக்கும் பிராமணர்கள், தெலுங்கு, கன்னடம், மராத்தி உள்ளிட்டு வட மாநில, வெளிநாட்டினர் பலர் எனது ஆய்வுகளை ஊக்குவித்தும், ஆதரவளித்தும் வந்துள்ளதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.மேற்கத்திய பல்கலைக்கழகங்களில் பணியாற்றும் உலகப்புகழ் பெற்ற அறிஞர்கள் எனது ஆய்வுகளைப் பாராட்டி ஊக்குவித்து எழுதியுள்ள‌ மடல்களில் சிலவற்றை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். ( 'தொல்காப்பியத்தில் இசை மொழியியல்'; http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_16.html

ஆனால் தமிழ்நாட்டு பல்கலைக் கழகங்களில் உள்ள பேராசிரியர்களுக்கு மின்மடல் அனுப்பினாலும், கொரியர் மூலம் அனுப்பினாலும் கிடைத்தது என்று கூட தெரிவிப்பதில்லை. ஒரு பல்கலைக்கழக தமிழ்த் துறைத் தலைவர் மட்டும்  தனக்கு இசை தெரியாது என்று ஆய்வுக் கட்டுரையைத் திருப்பி அனுப்பினார். அந்த கட்டுரையில் யாப்பிலக்கணத்தின் இசைப் பரிமாணம் பற்றிய தகவல்கள் இருந்தன. தற்போது கற்பிக்கப்படும் யாப்பிலக்கணத்தில், தொல்காப்பியத்தில் வரும் ‘இசை’ என்ற சொல்லை,  'ஒலி' எனத் தவறாகப் புரிந்து கற்பிக்கப்படுவது தொடர வேண்டும் என்பது தமிழின், தமிழ்நாட்டின் விதி என்பது எப்போது முடிவுக்கு வரும்?’ (’ உணர்ச்சிபூர்வ‌ 'இரைச்சலில்’ சிக்கிய 'தமிழ் இசை' ஆய்வுகள்’;http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_13.html )

தற்போது ' tholkAppiam & Computational Musical Linguistics ' என்ற நூல் எழுதி வருகிறேன். அது தொடர்பான கணினி ஆய்வுகளை மேற்கொள்வதற்கும், பொறியியல் மாணவர்கள் 'இசை மொழியியல்' அடிப்படையில், ‘Natural Language Processing’ (NLP) related projects செய்வதற்கும், ஏற்ற வகையில், அந்நூலை co-author  ஆக எழுதி, முடிக்க, புகழ்பெற்ற பொறியியல் கல்லூரியில் மூத்த (senior professor)  பிராமண பேராசிரியர் தாமாகவே முன்வந்துள்ளார். எனவே ந்த வருடத்திற்குள் அப்பணி முடிந்து, அந்நூல் வெளிவர வாய்ப்புண்டு. ஒருவேளை, அதன்பின் தமிழ்நாட்டில் தமிழ்/தமிழ் இசை புலமையாளர்கள் முழித்துக் கொண்டு, யாப்பிலக்கண பாடங்களில் 'இசை'யை 'ஒலியாக' புரிந்து, கற்பித்தலில் உள்ள குறைபாடுகளை நீக்குவதற்கும் வாய்ப்பிருக்கிறது. தமிழிசையியல் அறிவின்றி யாப்பிலக்கணம் படிக்க முடியாது என்பதும், தமிழக பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் நடைமுறைக்கு வரவும் வாய்ப்புண்டு.

Saturday, April 25, 2015


உணர்ச்சிபூர்வ ஒற்றுமையில்;

திராவிடக் கட்சிகளும், இந்துத்வா கட்சிகளும்


ஒரு மனிதரின் பேச்சுகளும் எழுத்துகளும் அவரின் 'இயல்பை'  வெளிப்படுத்தும் 'எக்ஸ் ரே' (X Ray) கருவிகள் போன்றவையாகும். அந்த பேச்சுக்களும் எழுத்துக்களும் ஒருவரை பாராட்டுபவையாக இருந்தாலும் சரி; எதிர்ப்பவைகளாக இருந்தாலும் சரி. 

ஒருவரின் கொள்கைகளையும், நிலைப்பாடுகளையும் அறிவுபூர்வமாக எதிர்ப்பது என்பது வேறு;  உணர்ச்சிபூர்வமாக கோபத்தையும் வெறுப்பையும் உமிழ்ந்து எதிர்ப்பது என்பது வேறு; இரண்டும் கலந்து, இரண்டும் கெட்டானாக எதிர்ப்பது என்பது வேறு; பெரியார் ஈ.வெ.ராவின் கொள்கைகளையும், நிலைப்பாடுகளையும் எதிர்ப்பதில்,  பா.ஜ.கவின் எச்.ராஜாவும், மற்றும் அவரைப் போன்று, பெரியார் ஈ.வெ.ராவை இழிவுபடுத்தி பேசுபவர்களும், எழுதுபவர்களும், எந்த வகை? என்ற ஆராய்ச்சியை, மனசாட்சியும், அறிவுநேர்மையும் உள்ள இந்துத்வா ஆதரவாளர்களுக்கு விட்டு விடலாம்.

நானும் பெரியார் ஈ.வெ.ராவின் கொள்கைகளிலும் நிலைப்பாடுகளிலும், இந்துத்வா கட்சிகளிலும்,  எனது பார்வையில் எதிர்க்கப்பட வேண்டியவைகளை எதிர்த்து, இந்த பிளாக்கில்(Blog) பல பதிவுகள் எழுதியுள்ளேன். அது எந்த வகை என்பதை முடிவு செய்ய வேண்டியது படிப்பவர்கள் தான்.

பெரியார் ஈ.வெ.ரா, கோட்சே, வாஞ்சிநாதன், சத்தியமூர்த்தி உள்ளிட்டு  பொதுவாழ்வில் இடம் பெற்ற மனிதர்களைப் பற்றி எதிர்த்து எழுதும்போதும், அறிவுபூர்வமாகவும் எழுதலாம்; உணர்ச்சிபூர்வமாகவும் எழுதலாம். ஆனால் நாம் எதிர்க்கின்ற நபர் பொதுவாழ்வில் சுயநலமின்றி, பல தியாகங்கள் புரிந்து வாழ்ந்திருந்தால், அதை மதிக்கின்ற அறிவை இழந்து, உணர்ச்சிபூர்வமாக அவரை இழிவுபடுத்துவது தவறு.

நாட்டிற்காக புரிந்த தியாகங்களை, தமது சுயநல அரசியலுக்காக மதிக்காத போக்கு, தமிழ்நாட்டு தேசியவாதிகளிடம் இருந்தது என்பதற்கும் சான்றுகள் உள்ளன.

உதாரணமாக,
தமிழ்நாட்டில் தனது சொத்துகளையும், வருமானத்தையும் இழந்து,  சிறைத்தண்டனைகளை அனுபவித்து, நாட்டிற்காக தியாகங்கள் செய்ததில், வ.உ.சிக்கு இணையானவர்கள் எவரும் தமிழ்நாட்டில் இல்லை என்பது எனது கருத்து. அவர் சிறையிலிருந்து வெளிவந்தபோது அவரை வர‌வேற்க வந்திருந்தவர்கள் யார், யார்? அவரை வரவேற்க வராதவர்கள் யார்,யார்? வறுமையில் உழன்ற வ.உ.சிக்கு உதவ தென்னாப்பிரிக்காவில், காந்தியிடம் கொடுத்த நிதியை, வ.உ.சியிடம் உடனே காந்தி கொடுக்காதது எவ்வளவு பெரிய தவறு? என்பது, வறுமையையும், பசியையும் அனுபவித்தவர்களுக்குத்தான் அதிகம் தெரியும். மிகுந்த தாமதத்திற்குப் பிறகு, வ.உ.சி எப்படி காந்திக்கு அதை நினைவூட்டி, அந்த நிதியைப் பெற்றார்? என்பது பற்றிய, வருத்தம் தரும், சான்றுகள் வெளிவந்துள்ளன. அத்தகைய காந்தியின் ஆதரவாளர்களாக இருந்த, தமிழ்நாட்டு தேசியவாதிகளில் யார், யார் அந்த காலக்கட்டத்தில், வ.உ.சியை சிறைக்கு சென்று வரவேற்காதது மட்டுமல்ல; சாகும் வரை அவர் வறுமையில் உழன்றது பற்றிய கவலையற்ற கல்நெஞ்சுடையவராய் இருந்தார்கள்? அந்த காலக்கட்டத்தில் வ.உ.சி,  பெரியார் ஈ.வெ.ராவைப் பாராட்டி மடல் எழுதியதற்கு காரணம் என்ன? என்பது போன்ற, இன்னும் இது போன்ற‌,  கேள்விகளே, இந்திய விடுதலைக்குப்பின் நடந்த  1952 முதல் பொது  தேர்தலில், காங்கிரஸ் 'பெரும்பான்மை' பலமின்றி தோற்றது ஏன்? என்ற கேள்விக்கு பதிலைத் தரும்.

1857 முதல் இந்திய விடுதலை போர் வெற்றி பெற்றிருந்தால், இந்தியா அந்தந்த மன்னர்களின் ஆட்சியில் இருந்து, 'ஐரோப்பிய ஒன்றியம்' போன்ற வகையில் ஒன்று சேர்ந்திருப்பார்களா? அது தோல்வியான பின், 'இந்தியர்' என்ற அடையாளம் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் எவ்வாறு, வெவ்வேறு அளவுகளில் 'வேர் பிடித்தது? அந்த பின்னணியில்,  1947 விடுதலைக்கு முன், ராஜாஜியும், அவர் செல்வாக்கில் இருந்த பிராமணர்களும், பெரியார் ஈ.வெ.ராவின் 'திராவிட நாடு' பிரிவினை கோரிக்கையை ஆதரித்ததோடு நிற்காமல், அக்கோரிக்கை நிறைவேறுவதற்காக‌, என்ன பங்களிப்பு வழங்கினார்கள்? என்பது போன்ற கேள்விகளுக்கும் பதிலைத் தரும்.

தமிழ்நாட்டு தேசியவாதிகளிடம் வெளிப்பட்ட இந்த, - தாம் எதிர்க்கின்ற நபரின் தியாகங்களை மதிக்காத‌ போக்கு- , 1944க்குப் பிறகுதான், திராவிட கட்சிகளிடமும் வெளிப்பட்டது. தாம் எதிர்க்கின்ற நபர் புரிந்த தியாகங்களை மறந்து, உணர்ச்சிகர பேச்சில், எழுத்தில் அவரை, குறிப்பாக பெரியார் ஈ.வெ.ராவை, இழிவுபடுத்துவதில் தேசியவாதிகளை 1967க்கு முந்தைய தி.மு.கவினர் விஞ்சினர்; இப்போது தி.மு.கவினரை, இந்துத்வா கட்சியினரில் சிலர் விஞ்சி வருகின்றனர்.

பொதுவாக தாம் வாழும் இடத்தில், பணியாற்றும் இடத்தில், பொது நீதிக்காக எந்த இழப்பையும் சந்தித்திராமல், செல்வாக்குள்ளவர்கள் தொடர்புடைய தமது சுயநல‌ சமூக வலைப்பின்னலை வலுப்படுத்துவதில், குறியாக வாழ்பவர்கள் தான், தாம் எதிர்க்கின்ற நபர் பொதுவாழ்வில் சுயநலமின்றி, பல தியாகங்கள் புரிந்து வாழ்ந்திருந்தால், அதை மதிக்கின்ற அறிவை இழந்து, உணர்ச்சிபூர்வமாக அவரை எதிர்ப்பார்கள். அவ்வாறு தாம் எதிர்த்த நபரிடமோ, அவரின் ஆதரவாளர்களிடமோ, தமக்கு ஆதாயம் இருந்தால், வெட்கப்படாமல், அவர்களின் உதவியையும் நாடுவார்கள்.

ஒருவரை எதிர்த்து எழுதும் போது, அவரைப்பற்றி பாராட்ட வேண்டியவைகளையும் மறக்காமல் குறிப்பிட்டு, ஆனாலும் ஏன் அவரை எதிர்க்க வேண்டும் என்று எழுதுவது தமிழ்நாட்டில் பொது அரங்கில் இருந்ததா? என்ற கேள்விக்கு, 1944க்கு முன் குடி அரசு இதழில் வெளிவந்த கட்டுரைகள் சான்றுகளாக உள்ளன.

இன்று தனது சுயநலத்திற்காக ஒரு நபரை பாராட்டி எழுதுவதும், எதிர்த்து எழுதுவதும் உள்ளதா? நாம் பாராட்டும் நபரின் குறைகளை மறைத்து எழுதுகிறோமா? நாம் எதிர்க்கும் நபரைப் பற்றிய, பாராட்டப்பட‌ வேண்டியவைகளை மறைத்து, எழுதுகிறோமா? என்பதெல்லாம், அந்தந்த எழுத்தாளரின்/பேச்சாளரின் மனசாட்சிக்கே வெளிச்சம்.
'சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்றழித்துச்
சார்தாரா சார்தரு நோய்' - திருக்குறள் 359

திராவிடக் கட்சிகளிலும், இந்துத்வா கட்சிகளிலும் உணர்ச்சிகரமாக ஒரு சார்பாக பேசுபவர்களும், எழுதுபவர்களும், தமிழ்நாடு 'சார்தரு நோய்' காரணமாக, சீரழிய காரணமாவார்களா?அப்படிப்பட்டவர்களில், யார் யார், சமூகத்தில் ஒற்றுமையை சீர் குலைக்கும், எந்தெந்த, உள்நாட்டு/வெளிநாட்டு சுயநல சக்திகளின் முகவர்கள்? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அப்படி சுயநலநோக்கில், பேசுபவர்களையும், எழுதுபவர்களையும், 'இவர் நம்மாளு' என்று தெரிந்தும்,  அவர்களைக் கண்டிப்பதற்கும், திருந்தவில்லையெனில் வெறுத்து ஒதுக்குவதற்கும்,  அதனால் ஏற்படும் இழப்புகளை, விரும்பி ஏற்று வாழ்வதற்கும்,  துணிச்சல் வேண்டும். மாறாக அவர்களை ஆதரிப்பவர்கள் திராவிட கட்சிகளிலும், இந்துத்வா உள்ளிட்ட தேசியக்கட்சிகளிலும் இருக்கும் வரை, தமிழ்வழிக் கல்வியில் (எனவே தமிழின்) மரணப்பயணத்தையும், தமிழ்நாட்டில் தமிழர்கள் அறிவு உழைப்பிலும், உடல் உழைப்பிலும்,  'பதராகி' (பலவகை தரகர்களாக வளர்ந்து) வரும் போக்கையும், தமிழ்நாட்டில் வாழும் பிற மாநிலத்தவரின் அறிவு உழைப்பும், உடல் உழைப்பும் வளர்ந்து, அவர்களை நம்பியே தமிழ்நாடு 'வளர்ந்து' வரும் போக்கையும் தடுத்து நிறுத்த முடியாது.  
( http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none.html )

தமிழ்நாட்டில் சராசரியாக வாழும் மக்களிடையே, ( கடந்த 20 வருடங்களில் 'வீரியத்துடன் தொத்துநோயாக' வளரும்) 'குறுக்கு வழியில் சீக்கிரம் உயரும்' நோக்கமில்லாதவர்கள், கணிசமானோர் இருக்கிறார்கள் என்பதும், அவர்கள் மேலே குறிப்பிட்ட‌ 'துணிச்சலுடன்' வாழ்பவர்களையே மிகவும் மதிக்கிறார்கள் என்பதும், தமிழின் மீட்சிக்கும், தமிழ்நாட்டின் மீட்சிக்கும் நம்பிக்கையூட்டுவதாக உள்ளன, என்பதும் என் அனுபவமாகும்.