Saturday, April 25, 2015


உணர்ச்சிபூர்வ ஒற்றுமையில்;

திராவிடக் கட்சிகளும், இந்துத்வா கட்சிகளும்


ஒரு மனிதரின் பேச்சுகளும் எழுத்துகளும் அவரின் 'இயல்பை'  வெளிப்படுத்தும் 'எக்ஸ் ரே' (X Ray) கருவிகள் போன்றவையாகும். அந்த பேச்சுக்களும் எழுத்துக்களும் ஒருவரை பாராட்டுபவையாக இருந்தாலும் சரி; எதிர்ப்பவைகளாக இருந்தாலும் சரி. 

ஒருவரின் கொள்கைகளையும், நிலைப்பாடுகளையும் அறிவுபூர்வமாக எதிர்ப்பது என்பது வேறு;  உணர்ச்சிபூர்வமாக கோபத்தையும் வெறுப்பையும் உமிழ்ந்து எதிர்ப்பது என்பது வேறு; இரண்டும் கலந்து, இரண்டும் கெட்டானாக எதிர்ப்பது என்பது வேறு; பெரியார் ஈ.வெ.ராவின் கொள்கைகளையும், நிலைப்பாடுகளையும் எதிர்ப்பதில்,  பா.ஜ.கவின் எச்.ராஜாவும், மற்றும் அவரைப் போன்று, பெரியார் ஈ.வெ.ராவை இழிவுபடுத்தி பேசுபவர்களும், எழுதுபவர்களும், எந்த வகை? என்ற ஆராய்ச்சியை, மனசாட்சியும், அறிவுநேர்மையும் உள்ள இந்துத்வா ஆதரவாளர்களுக்கு விட்டு விடலாம்.

நானும் பெரியார் ஈ.வெ.ராவின் கொள்கைகளிலும் நிலைப்பாடுகளிலும், இந்துத்வா கட்சிகளிலும்,  எனது பார்வையில் எதிர்க்கப்பட வேண்டியவைகளை எதிர்த்து, இந்த பிளாக்கில்(Blog) பல பதிவுகள் எழுதியுள்ளேன். அது எந்த வகை என்பதை முடிவு செய்ய வேண்டியது படிப்பவர்கள் தான்.

பெரியார் ஈ.வெ.ரா, கோட்சே, வாஞ்சிநாதன், சத்தியமூர்த்தி உள்ளிட்டு  பொதுவாழ்வில் இடம் பெற்ற மனிதர்களைப் பற்றி எதிர்த்து எழுதும்போதும், அறிவுபூர்வமாகவும் எழுதலாம்; உணர்ச்சிபூர்வமாகவும் எழுதலாம். ஆனால் நாம் எதிர்க்கின்ற நபர் பொதுவாழ்வில் சுயநலமின்றி, பல தியாகங்கள் புரிந்து வாழ்ந்திருந்தால், அதை மதிக்கின்ற அறிவை இழந்து, உணர்ச்சிபூர்வமாக அவரை இழிவுபடுத்துவது தவறு.

நாட்டிற்காக புரிந்த தியாகங்களை, தமது சுயநல அரசியலுக்காக மதிக்காத போக்கு, தமிழ்நாட்டு தேசியவாதிகளிடம் இருந்தது என்பதற்கும் சான்றுகள் உள்ளன.

உதாரணமாக,
தமிழ்நாட்டில் தனது சொத்துகளையும், வருமானத்தையும் இழந்து,  சிறைத்தண்டனைகளை அனுபவித்து, நாட்டிற்காக தியாகங்கள் செய்ததில், வ.உ.சிக்கு இணையானவர்கள் எவரும் தமிழ்நாட்டில் இல்லை என்பது எனது கருத்து. அவர் சிறையிலிருந்து வெளிவந்தபோது அவரை வர‌வேற்க வந்திருந்தவர்கள் யார், யார்? அவரை வரவேற்க வராதவர்கள் யார்,யார்? வறுமையில் உழன்ற வ.உ.சிக்கு உதவ தென்னாப்பிரிக்காவில், காந்தியிடம் கொடுத்த நிதியை, வ.உ.சியிடம் உடனே காந்தி கொடுக்காதது எவ்வளவு பெரிய தவறு? என்பது, வறுமையையும், பசியையும் அனுபவித்தவர்களுக்குத்தான் அதிகம் தெரியும். மிகுந்த தாமதத்திற்குப் பிறகு, வ.உ.சி எப்படி காந்திக்கு அதை நினைவூட்டி, அந்த நிதியைப் பெற்றார்? என்பது பற்றிய, வருத்தம் தரும், சான்றுகள் வெளிவந்துள்ளன. அத்தகைய காந்தியின் ஆதரவாளர்களாக இருந்த, தமிழ்நாட்டு தேசியவாதிகளில் யார், யார் அந்த காலக்கட்டத்தில், வ.உ.சியை சிறைக்கு சென்று வரவேற்காதது மட்டுமல்ல; சாகும் வரை அவர் வறுமையில் உழன்றது பற்றிய கவலையற்ற கல்நெஞ்சுடையவராய் இருந்தார்கள்? அந்த காலக்கட்டத்தில் வ.உ.சி,  பெரியார் ஈ.வெ.ராவைப் பாராட்டி மடல் எழுதியதற்கு காரணம் என்ன? என்பது போன்ற, இன்னும் இது போன்ற‌,  கேள்விகளே, இந்திய விடுதலைக்குப்பின் நடந்த  1952 முதல் பொது  தேர்தலில், காங்கிரஸ் 'பெரும்பான்மை' பலமின்றி தோற்றது ஏன்? என்ற கேள்விக்கு பதிலைத் தரும்.

1857 முதல் இந்திய விடுதலை போர் வெற்றி பெற்றிருந்தால், இந்தியா அந்தந்த மன்னர்களின் ஆட்சியில் இருந்து, 'ஐரோப்பிய ஒன்றியம்' போன்ற வகையில் ஒன்று சேர்ந்திருப்பார்களா? அது தோல்வியான பின், 'இந்தியர்' என்ற அடையாளம் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் எவ்வாறு, வெவ்வேறு அளவுகளில் 'வேர் பிடித்தது? அந்த பின்னணியில்,  1947 விடுதலைக்கு முன், ராஜாஜியும், அவர் செல்வாக்கில் இருந்த பிராமணர்களும், பெரியார் ஈ.வெ.ராவின் 'திராவிட நாடு' பிரிவினை கோரிக்கையை ஆதரித்ததோடு நிற்காமல், அக்கோரிக்கை நிறைவேறுவதற்காக‌, என்ன பங்களிப்பு வழங்கினார்கள்? என்பது போன்ற கேள்விகளுக்கும் பதிலைத் தரும்.

தமிழ்நாட்டு தேசியவாதிகளிடம் வெளிப்பட்ட இந்த, - தாம் எதிர்க்கின்ற நபரின் தியாகங்களை மதிக்காத‌ போக்கு- , 1944க்குப் பிறகுதான், திராவிட கட்சிகளிடமும் வெளிப்பட்டது. தாம் எதிர்க்கின்ற நபர் புரிந்த தியாகங்களை மறந்து, உணர்ச்சிகர பேச்சில், எழுத்தில் அவரை, குறிப்பாக பெரியார் ஈ.வெ.ராவை, இழிவுபடுத்துவதில் தேசியவாதிகளை 1967க்கு முந்தைய தி.மு.கவினர் விஞ்சினர்; இப்போது தி.மு.கவினரை, இந்துத்வா கட்சியினரில் சிலர் விஞ்சி வருகின்றனர்.

பொதுவாக தாம் வாழும் இடத்தில், பணியாற்றும் இடத்தில், பொது நீதிக்காக எந்த இழப்பையும் சந்தித்திராமல், செல்வாக்குள்ளவர்கள் தொடர்புடைய தமது சுயநல‌ சமூக வலைப்பின்னலை வலுப்படுத்துவதில், குறியாக வாழ்பவர்கள் தான், தாம் எதிர்க்கின்ற நபர் பொதுவாழ்வில் சுயநலமின்றி, பல தியாகங்கள் புரிந்து வாழ்ந்திருந்தால், அதை மதிக்கின்ற அறிவை இழந்து, உணர்ச்சிபூர்வமாக அவரை எதிர்ப்பார்கள். அவ்வாறு தாம் எதிர்த்த நபரிடமோ, அவரின் ஆதரவாளர்களிடமோ, தமக்கு ஆதாயம் இருந்தால், வெட்கப்படாமல், அவர்களின் உதவியையும் நாடுவார்கள்.

ஒருவரை எதிர்த்து எழுதும் போது, அவரைப்பற்றி பாராட்ட வேண்டியவைகளையும் மறக்காமல் குறிப்பிட்டு, ஆனாலும் ஏன் அவரை எதிர்க்க வேண்டும் என்று எழுதுவது தமிழ்நாட்டில் பொது அரங்கில் இருந்ததா? என்ற கேள்விக்கு, 1944க்கு முன் குடி அரசு இதழில் வெளிவந்த கட்டுரைகள் சான்றுகளாக உள்ளன.

இன்று தனது சுயநலத்திற்காக ஒரு நபரை பாராட்டி எழுதுவதும், எதிர்த்து எழுதுவதும் உள்ளதா? நாம் பாராட்டும் நபரின் குறைகளை மறைத்து எழுதுகிறோமா? நாம் எதிர்க்கும் நபரைப் பற்றிய, பாராட்டப்பட‌ வேண்டியவைகளை மறைத்து, எழுதுகிறோமா? என்பதெல்லாம், அந்தந்த எழுத்தாளரின்/பேச்சாளரின் மனசாட்சிக்கே வெளிச்சம்.
'சார்புணர்ந்து சார்பு கெட ஒழுகின் மற்றழித்துச்
சார்தாரா சார்தரு நோய்' - திருக்குறள் 359

திராவிடக் கட்சிகளிலும், இந்துத்வா கட்சிகளிலும் உணர்ச்சிகரமாக ஒரு சார்பாக பேசுபவர்களும், எழுதுபவர்களும், தமிழ்நாடு 'சார்தரு நோய்' காரணமாக, சீரழிய காரணமாவார்களா?அப்படிப்பட்டவர்களில், யார் யார், சமூகத்தில் ஒற்றுமையை சீர் குலைக்கும், எந்தெந்த, உள்நாட்டு/வெளிநாட்டு சுயநல சக்திகளின் முகவர்கள்? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அப்படி சுயநலநோக்கில், பேசுபவர்களையும், எழுதுபவர்களையும், 'இவர் நம்மாளு' என்று தெரிந்தும்,  அவர்களைக் கண்டிப்பதற்கும், திருந்தவில்லையெனில் வெறுத்து ஒதுக்குவதற்கும்,  அதனால் ஏற்படும் இழப்புகளை, விரும்பி ஏற்று வாழ்வதற்கும்,  துணிச்சல் வேண்டும். மாறாக அவர்களை ஆதரிப்பவர்கள் திராவிட கட்சிகளிலும், இந்துத்வா உள்ளிட்ட தேசியக்கட்சிகளிலும் இருக்கும் வரை, தமிழ்வழிக் கல்வியில் (எனவே தமிழின்) மரணப்பயணத்தையும், தமிழ்நாட்டில் தமிழர்கள் அறிவு உழைப்பிலும், உடல் உழைப்பிலும்,  'பதராகி' (பலவகை தரகர்களாக வளர்ந்து) வரும் போக்கையும், தமிழ்நாட்டில் வாழும் பிற மாநிலத்தவரின் அறிவு உழைப்பும், உடல் உழைப்பும் வளர்ந்து, அவர்களை நம்பியே தமிழ்நாடு 'வளர்ந்து' வரும் போக்கையும் தடுத்து நிறுத்த முடியாது.  
( http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none.html )

தமிழ்நாட்டில் சராசரியாக வாழும் மக்களிடையே, ( கடந்த 20 வருடங்களில் 'வீரியத்துடன் தொத்துநோயாக' வளரும்) 'குறுக்கு வழியில் சீக்கிரம் உயரும்' நோக்கமில்லாதவர்கள், கணிசமானோர் இருக்கிறார்கள் என்பதும், அவர்கள் மேலே குறிப்பிட்ட‌ 'துணிச்சலுடன்' வாழ்பவர்களையே மிகவும் மதிக்கிறார்கள் என்பதும், தமிழின் மீட்சிக்கும், தமிழ்நாட்டின் மீட்சிக்கும் நம்பிக்கையூட்டுவதாக உள்ளன, என்பதும் என் அனுபவமாகும்.

No comments:

Post a Comment