Friday, April 17, 2015


'கொள்கை' பிணம் தின்னும் கழுகுகளாகவா?                            நாமே 'கொள்கைப் பிணமாக'வா?                     


           எப்படி நாம் வாழ்கிறோம்? 



பிறக்கும் போது எதையும் நாம் கொண்டுவரவில்லை. வாழும்போது மனசாட்சியை அடகு வைத்து, வசதியும் செல்வாக்கும் மிக்கவர்களுக்கு வாலாட்டி சேர்க்கும் செல்வத்தையும் செல்வாக்கையும், நாம் மரணமடையும்போது, நம்மோடு எடுத்துச் செல்லப் போவதுமில்லை. தமது சுயநலத்திற்காக 'வாழ்வியல்(?) புத்திசாலித்தனமான' இழிவான சமரசங்களுடன் வாழ்ந்து கொண்டு, 'தமிழ், தமிழ் உணர்வு, பகுத்தறிவு, ஆன்மீகம், பொதுவுடமை' என்று இன்னும் பல கொள்கையாளர்களாக ( அல்லது அந்தந்த கொள்கை விபச்சாரிகளாக) வாழ்ந்து, சேமித்த செல்வத்தையும் செல்வாக்கையும், நாம் மரணமடையும்போது, நம்மோடு எடுத்துச் செல்லப் போவதுமில்லை. நமது குழந்தைகளுக்கும், வாரிசுகளுக்கும், நாம் இழிவாக வாழ்ந்ததை பாரம்பரிய சுமையாக்கி, அவர்களைத் தண்டிப்பதே நமது வாழ்வின் பலனாக, நமது மரணத்திற்குப்பின் மிஞ்சும். 

நாம் ஏற்றுக்கொண்ட கொள்கை தொடர்பான 'அறிவுபூர்வ' விவாதங்களை தவிர்த்து,  நாம் 'உணர்ச்சி பூர்வ கொள்கைப் பற்றுடன்'  வாழ்வது என்பது; ஒன்று அந்த கொள்கை செத்து, பிணம் தின்னும் கழுகுகளாக நாம் வாழ்வதை உணர்த்தும்; அல்லது நாமே 'கொள்கைப் பிணமாக' உயிருடன் வாழ்வதை உணர்த்தும்.'கொள்கைப் பிணமாக' வாழ்பவர்கள் தான், தாம் ஏற்றுக்கொண்ட கொள்கை தொடர்பான அறிவுபூர்வ விவாதங்களைத் தவிர்த்து வாழ முடியும்.

நாம் ஒவ்வொருவரும் எப்படி வாழ்கிறோம்? என்பது அவரவர் மனசாட்சிக்கே வெளிச்சம்.

எனது வாழ்வின் பெரும்பகுதியை, சுயலாப நோக்கின்றி,  பெரியார் கொள்கையாளனாக கழித்தவன் நான். (அதன் காரணமாகவே நிகழ்காலத்தில் வேறு எவரும் சந்தித்திருக்க வாய்ப்பில்லாத, இழப்புகளுடன், அந்த இழப்புகளையே எனது பதிவுகளுக்கான மதிப்புமிக்க உள்ளீடுகளாக(inputs)  மாற்றி, வாழ்ந்து வருபவன் நான்.) பின் இசை ஆராய்ச்சியில் ஈடுபட்ட போது, பெரியார் ஈ.வெ.ரா அவர்களின் வரைஎல்லைகள் (limitations)  பற்றிய புரிதல் அவருக்கு இல்லாததால், தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு தொடர்பான, 'மிகவும் ஆபத்தான' 'தமிழர்களை 'வேரற்ற'வர்களாக ஆக்கும், அவர் வெளிப்படுத்திய‌ கொள்கைகளை உண்மை என்று நம்பி, எனது வாழ்வின் பெரும்பகுதியை வீணாக்கி விட்டேனோ? என்ற ஐயம் எழுந்தது. அது தொடர்பான அறிவுபூர்வ விவாதத்தைத் தொடங்க, நான் எழுதிய கட்டுரையானது, 'கறுப்பு, வெள்ளை (அல்லது  சிகப்பு) பாதிப்புகளிலிருந்து விடுபடுவோம்' என்ற தலைப்பில், 'தமிழர் கண்ணோட்டம் பொங்கல் மலர் 2006 வெளிவந்தது. (refer 'கறுப்பு வெள்ளை (அல்லது சிகப்பு) பாதிப்புகளிலிருந்து விடுபடுவோம்';
http://tamilsdirection.blogspot.in/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html

இன்று வரை எந்த பெரியார் கொள்கையாளரிடமிருந்து அதை ஆதரித்தோ, எதிர்த்தோ எந்த கருத்தும் எனக்கு வரவில்லை. இடையில் என்னை நேரில் சந்தித்த சில பெரியார் ஆதரவாளர்கள் அது சரி என்பது போல் தலையாட்டிச் சென்றார்கள். அவர்கள் உண்மையாகச் சொன்னார்களா? அல்லது இன்று தமிழ்நாட்டில் செல்வாக்குடன் வளர்ந்து வரும் 'ஆளுக்கேற்றார்ப்போல்' பேசும் வியாதியில் சிக்கி, சொன்னார்களா? என்பது அவரவர் மனசாட்சிக்கே வெளிச்சம். 

உண்மையில் பெரியார் கொள்கை மரணமடைந்து, அந்த மரணத்தில் 'பிணம் தின்னும் கழுகுகள்' போல், பெரியார் கொள்கையாளர்கள், மனிதப் பண்புகளற்ற சுயநல கள்வர்களாக‌ வாழ்கிறார்களா? என்ற கேள்வியை, திருச்சி பெரியார் மையம் தொடர்பான எனது அனுபவங்கள் எழுப்பின.

(‘தேவநேய பாவாணர், பெரியார் ஈ.வெ.ரா போன்றவர்களை 'கேலிக்குள்ளாக்கும்' செயல்நுட்பம்?’;
http://tamilsdirection.blogspot.in/2015/03/normal-0-false-false-false-en-us-x-none_22.html ) “நான் திருச்சி பெரியார் மையத்தில் பங்களிப்பு வழங்கிய காலத்தில், வே.ஆனைமுத்து உள்ளிட்டு பெரியார் கொள்கையாளர்கள் வெளிப்படுத்திய கருத்துக்களில் தவறுகள் வெளிப்பட்டால், அதை சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிவித்து, அச்சிட்டு, விவாதத்திற்கு உட்படுத்தினோம். ( நான் விலகிய பின், திருச்சி பெரியார் மையம் மரணமடைந்து, அந்த மரணத்தில் 'பிணம் தின்னும் கழுகுகள்' போல், அதை வைத்து, திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களுக்கு 'வாலாகி' சுயநலக் கள்வர்கள் பலன் பெற்ற 'பாவத்திற்கு, ' திருச்சி பெரியார் மையத்திற்கும், அதில் பங்களிப்பு வழங்கிய எனக்கும் பங்குண்டு; திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்கள் உருவாக பெரியார் ஈ.வெ.ராவின் தொண்டுக்கு உள்ள பங்கைப் போல; பெரியார் ஈ.வெ.ராவை அவமதித்து நடந்த 1965 இந்தி எதிர்ப்புப் போராட்டத்திற்கு, 1938 இந்தி எதிர்ப்புப் போராட்டம் பங்களித்தது போல. (” 1944க்கு முன் எப்படி இருந்த தமிழ்நாடு,இன்று  எப்படி இருக்கிறது?இந்தி எதிர்ப்புப் போராட்டம்: 1938‍க்கும்  1965க்கும்   என்ன வேறுபாடு?”;
http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html  )

அதாவது, தமிழ்வழியின் மரணப்பயணத்திற்கும், தமிழ்நாட்டின் நிலத்தடி நீர் ஆதாரங்களாகிய ஏரிகள், ஆறுகள், காடுகள், கிரானைட், தாது மணல் உள்ளிட்ட இயற்கை கனிவளங்கள் கொள்ளைகள், திராவிடக்கட்சி ஆட்சிகளில் தமிழ்நாட்டில் அரங்கேறியதற்கும், அந்த கொள்ளைகளுக்கு ஏதுவாக, தமிழ்நாட்டில் கணிசமான தமிழர்களை கொள்ளையில் பங்கு பெறும் சுயநலக் கள்வர்களாக மாற்றும் போக்குகளுக்கும்,  அந்த திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களுக்கு 'நெருக்கமாகி' பிழைப்பதற்கான வழிமுறைகளில் பெரியார் கொள்கையும் இடம்பெற்றிருந்தால், அதற்கும்,  1944இல் தமிழ்நாட்டில் பொது அரங்கில் அறிவுபூர்வமான விவாதங்கள் உணர்ச்சி பூர்வமாக‌ தடம் புரண்டு, தனிமனிதர்களை இழிவுபடுத்தும் போக்கில் பயணித்ததே, தமிழ்நாடு சந்தித்து வரும் தீமைகளுக்கும் மூல காரணமா? என்ற ஆய்வை நான் தொடங்க, மேற்குறிப்பிட்ட அனுபவங்கள் வழி வகுத்தன. தகுதி, திறமை, புலமை, உண்மை, நேர்மை, உழைப்பு போன்றவற்றை தமிழ்நாட்டில் 'வாழத் தெரியாத' முட்டாள்களின் உடைமையாக்கி விட்டு, வாழ்வில் 'விரைவில், குறுக்கு வழியில்' முன்னேற, 'பலவித தரகு, வன்முறை' போன்றவை 'முற்போக்கு இரட்டை வேடத்துடன்'  அரங்கேறியதற்கான மூலமானது, 1944இல் விதைக்கப்பட்டதா? என்ற ஆய்வினைத் தொடங்கவும் அந்த அனுபவங்களே வழி வகுத்தன.

பெரியார் கொள்கைகளை, அவரின் மறைவிற்கு பின் வெளிவந்துள்ள ஆய்வுமுடிவுகளின்படி மறு ஆய்வுக்கு உட்படுத்துவதன் மூலமே, அக்கொள்கைகளில் எவையெவை மரணமடைந்து விட்டன? எவையெவை 'புத்துயிர்' பெற வாய்ப்புள்ளவை என்பது தெளிவாகும். அந்த விவாதத்தை இனியும் தாமதப்படுத்துவது என்பது, புத்துயிர் வாய்ப்புகளைக் கெடுத்து, பெரியார் கொள்கைகளை கல்லறைக்கு அனுப்பவே துணை புரியும்.

ஒரு தனிமனிதனாகட்டும், அல்லது கட்சியாகட்டும்; அவர்களின் செயல்பாடுகளில் ஒரு கூறானது, புறவாழ்வு வெளிப்பாடுகளின் தூண்டுதல்கள் காரணமாக எதிர்வினையாக (Reactive) இருக்கும். எதிர்வினைகள் என்பவை உணர்ச்சிபூர்வ, அல்லது அதே வகையிலான மனதில் படிந்துள்ள மதிப்பீடுகள் – மனப்பாங்குகள் (values – Attitudes) அடிப்படைகளில் செயல்படுபவையாகும். சமூக ஒப்பீடு (Social Comparison) நோயில் சிக்கி வாழ்பவர்களின் வாழ்க்கையே எதிர்வினையாக சீரழிந்து போவதில் வியப்பில்லை.

இன்னொரு கூறானது சுய‌தூண்டுவினையாக (pro-active) இருக்கும். மனதில் அறிவுபூர்வமான சிந்தனைகளின் அடிப்படையிலேயே ஒரு மனிதனின், கட்சியின் தூண்டுவினை உருவாகி செயல்படும்.

பொதுவாக தனிமனிதரின், கட்சிகளின் செயல்பாடுகளில் அவரவர் 'தன்மை'களைப் பொறுத்து, வெவ்வேறு அளவுகளில் இரண்டு கூறுகளும் 'பின்னிப் பிணைந்து' வெளிப்படும்.
வீழ்ந்து உதிரும் திசையில் வாழும் மனிதர்களின், கட்சிகளின் செயல்பாடுகளில் எதிர்வினை(Reactive) செல்வாக்கு செலுத்தி வெளிப்படும். வளரும் திசையில் வாழும் மனிதர்களின், கட்சிகளின் செயல்பாடுகளில் சுய‌தூண்டுவினை(proactive) செல்வாக்கு செலுத்தி வெளிப்படும்.

திராவிடர் கழகம் அறிவித்த 'தாலி அகற்றும்' போராட்டம் என்பது எதிர்வினையா? தூண்டுவினையா? என்பது ஆய்விற்குரியது. 

1938 இந்தி எதிர்ப்பு போராட்டம், வகுப்புரிமை போராட்டம் என்று, அந்தந்த காலக்கட்டங்களில் மக்கள் பிரச்சினைகளை உணர்ந்து, முன்னெடுத்த போராட்டங்களில் பிராமணர் - பிராமணரல்லோதார் வேறுபாடுகளும், ஆத்தீக - நாத்தீக வேறுபாடுகளும் இல்லாமல்,  மக்கள் ஒற்றுமையை முக்கியமாக்கி, பெரியார் ஈ.வெ.ரா போராட்டங்களை முன்னெடுத்தார். அத்தகைய போராட்டங்களுக்கு இடமில்லாத காலக்கட்டங்களில், பிராமணர் - பிராமணரல்லோதார் வேறுபாடுகளையும், ஆத்தீக - நாத்தீக வேறுபாடுகளையும் முன்னிறுத்தி,  பிரச்சாரங்களும், பிள்ளையார் சிலை உடைப்பு போன்ற போராட்டங்களும் நடத்தினார். அவர் காலத்தில் தாலி கழட்டும் நிகழ்ச்சிகள் ஆங்காங்கே விளம்பரமும், முக்கியத்துவமும் இன்றி நடந்ததா? அல்லது அண்மையில் திராவிடர் கழகம் நடத்தியது போல, தனி முக்கியத்துவம் உள்ள நிகழ்ச்சியாக நடந்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

தாலி அகற்றும் போராட்டம் என்பது இன்று தமிழ்நாட்டு மக்களைப் பாதித்துள்ள பிரச்சினைகளோடு தொடர்புடையதா? தொடர்பு அற்றதா? என்ற ஆய்வின் மூலமே, அப்போராட்டம் என்பது எதிர்வினையா? சுய‌தூண்டுவினையா? என்று முடிவு செய்ய முடியும். அந்த முடிவின் மூலமே திராவிடர் கழகம் வளர்ச்சி திசையில் பயணிக்கிறதா? அல்லது பலகீனமாகி உதிரும் திசையில் பயணிக்கிறதா? என்பது தெளிவாகும். இது போன்ற ஆய்வுகளை பெரியார் கட்சிகளுக்கு விரிவுபடுத்தினால், அக்கட்சிகள் வளர்ச்சி திசையில் பயணிக்கிறதா? அல்லது பலகீனமாகி உதிரும் திசையில் பயணிக்கிறதா? என்பதும் தெளிவாகும். 

“ 'இந்துத்வா' அரங்கில் உணர்ச்சி பூர்வமான போக்குகளின் ஊடே, அறிவுபூர்வ விவாதங்கள், (குறிப்பாக புராணங்கள், இலக்கியங்கள் பற்றி பெரியார் ஈ.வெ.ரா வெளிப்படுத்திய கேள்விகள் உள்ளிட்டு,)  நடைபெற்று வருவதைத் தெரிந்து கொள்ள விரும்புபவர்கள், 

ஆர்.எஸ்.எஸ்  அதிகாரபூர்வ இதழ் http://www.organiser.org/
இணையத்தில் ராஜிவ் மல்ஹோத்ரா http://rajivmalhotra.com/

மற்றும் கீழே குறிப்பிட்டுள்ளது போன்ற இந்துத்வா ஆதரவாளர்களின் கட்டுரைகளை படிக்கலாம்.

http://swarajyamag.com/politics/getting-rid-of-the-caste-disease/

மேலே குறிப்பிட்டவை தொடர்பாக, பெரியார் இயக்க ஏடுகளில் ஏதேனும் வெளிவந்திருந்தால், அதை எனது பார்வைக்கு தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். நன்றியுடன் அவற்றை திறந்த மனதுடன் படித்து, எனது கருத்துக்களை நெறிப்படுத்திக் கொள்ள அவை உதவும்.” என்பதை முந்தைய பதிவில் பார்த்தோம்.

இந்துத்வா எதிர்ப்பாளர்களின் 'அறிவுஜீவிகளாக' உலக அளவில் வலம் வரும்  வெண்டி டோனிகர் (Wendy Doniger), ஷெல்டன் பொல்லாக்(Sheldon Pollock)  போன்றோரின் நூல்களை தடை செய்வதை ஆதரிக்காமல், அறிவுபூர்வ விவாதத்தில் இந்துத்வா எதிர்ப்பாளர்கள் ஈடுபட்டு, அந்த அறிவுஜீவிகளின் 'அறிவுக் குறைபாடுகள்' அம்பலமாகத் தொடங்கியுள்ள. உலக அளவில் அத்தகைய முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோர்களில் முதல் இடத்தில் இருப்பவர் ராஜிவ் மல்கோத்ரா ஆவார். தனதளவில் கடும் முயற்சியின் மூலம் தம்மைத் தகுதியாக்கிக் கொண்டவர்களே அப்பணியில் ஈடுபடவேண்டும் என்பதையும் அவர் வலியுறுத்திவருகிறார்.

“ Before public campaigns, start with oneself. Decolonize your own self. This involves a lot of study, introspection and changing. Second go to those in your circle in small settings, to test and learn. Dont try to overnight become a public teacher - bypassing the years of tapas required.” - Rajiv Malhotra

தமிழ்நாட்டில் தமிழ்வழிக் கல்வியின் மரணப்பயணத்தைத் தடுத்து, தமிழ் பாரம்பரியம், பண்பாடு போன்றவற்றை, ஆங்கிலவழிக் கல்வி வழியில், திரிந்த மேற்கத்திய பண்பாட்டு போதை மூலம், சிதைத்து வருவதை, மேற்குறிப்பிட்ட வழியில், எனது அறிவு, அனுபவ அடிப்படையில் எதிர்த்து வருகிறேன். 

அதற்கு இந்துத்வா ஆதரவாளர்களில் தமிழ்ப் பற்றுள்ளோரிடம் வெளிப்பட்டுள்ள ஆதரவு,  என்னை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அது போல, அல்லது அதை விட அதிகமாக, பெரியார் ஆதரவாளர்களிடம் ஆதரவு வெளிப்படுவதை வரவேற்கிறேன். அந்த இரண்டு வகை ஆதரவுகளையும் வெளிப்படையாக 'சினர்ஜி' சமூக செயல் மூலம் நெறிப்படுத்தி, தமிழ்வழியின் மரணப்பயணத்தை தடுத்த நிறுத்த முடியும் என்று நம்புகிறேன். (’ இந்தியாவில் முன்னுதாரணமாக;தமிழ்நாட்டின் மீட்சிக்கான, ‌  'சினர்ஜி’ (Synergy) சமூக செயலுக்கான நேரம் வந்து விட்டது’;
http://tamilsdirection.blogspot.in/2015/03/12_7.html ) அதுவே  மேற்கத்திய பண்பாட்டு போதையில், திரிந்த 'தமிங்கிலிசர்களாக',  தமிழர்கள் மாறிவரும் போக்கைத் தடுக்கும் என்று நம்புகிறேன்.

தமது அளவில் 'அறிவு உழைப்பு'க்கு முயற்சியின்றி, தமது தகுதி, திறமைப் பற்றிய புரிதலின்றி, புரிதலுக்கான தகுதி இல்லையென்றால், அதை அறிவு நாணயத்துடன் ஒத்துக் கொண்டு, தமது புரிதல் அதிகரிப்பிற்கான 'தகுதி, திறமை'யை வளர்த்துக் கொள்ளாமல், 'தகுதி, திறமை மோசடி' என்ற போர்வையில் அதை மறைத்து, சராசரி பொது அறிவின் அடிப்படையில் கேள்விகள் எழுப்பி வருபவர்களின் காலம் தமிழ்நாட்டில் முடிந்து விட்டது என்பது என் கருத்து. 

சுயலாப நட்ட நோக்கமில்லாமல், பாதுகாப்பின்மை(insecurity) நோயில் சிக்கி, இழிவான சமரசங்களுடன் வாழாமல், பிம்ப(image) சிறையில் சிக்காமல், நமது மனசாட்சிக்கும், சமூகத்திற்கும், இயற்கைக்கும், உண்மையாகவும் நேர்மையாகவும் வாழும்போது தான் குற்ற உணர்வின்றி நமது மரணத்தை நாம் சந்திக்க முடியும். ( 'குற்ற உணர்வின்றி' மன நிறைவுடன் மரணத்தைத்  தழுவ முடியுமா?;
http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html ) நாட்டையும், சமூகத்தையும் சீரழிக்கும் உள்நாட்டு/வெளிநாட்டு சதிகளுக்கு துணை போகாத முறையில் வாழ முடியும்.

No comments:

Post a Comment