Saturday, July 23, 2016

'தமிழும், தமிழ் உணர்வும்'  ‘ஜிகிர்தண்டா’ பேர்வழிகளின் கருவிகளாகவா?


2004இல் நான் சிங்கப்பூரில் இருந்து சென்னை வந்திருந்த  போது , சுனாமி பேரழிவு நடந்தது. பின் மீண்டும் நான் சிங்கப்பூர் சென்றேன்.  'பணம் சம்பாதிக்க இப்படியும்  வழிகள் உண்டா?' என்று நான் வியக்கும் அளவுக்கு, .நா உள்ளிட்டு மேற்கத்திய நாடுகளிலிருந்து சுனாமி நிவாரணத்திற்கான உதவி தொகையானது, கோடிக்கணக்கில் வரும் மூலங்களை (Donor sources) ஆராய்ந்து, தொண்டு நிறுவனம் (NGO)  என்ற பேரில் அந்த நிதியை பெறும்  முயற்சிகளில் அங்கு சிலர் ஈடுபட்டிருந்தினர். அதே வழிகளில் தமிழ்நாட்டிலும் 'சுனாமி பணக்காரர்கள்’ வளர்ந்துள்ளார்கள் என்று பின்னர் கேள்விப்பட்டேன். அப்போது பின்வருவது என் நினைவிற்கு வந்தது.

சுமார் 30 வருடங்களுக்கு முன், பொதுப்பணித்துறை அலுவலகத்திற்கு ஒரு நண்பரை பார்க்க சென்றபோது, கீழ்வரும் செய்தியை கேள்விப்பட்டேன். ஒவ்வொரு வருடமும் மழை காலங்களில் வெள்ளம் வராதா? என்று ஏங்கும் 'ஊழல் அதிகாரிகளும்' இருக்கிறார்கள். மாட்டிக்கொள்ளாமல் நிறைய பணம் சுருட்டுவது என்பது, வெள்ள நிவாரண நிதிகளில் எளிது என்பதே அதற்கு காரணமாம்.

இது போன்ற வழிகளில் ஊழல் அரசு அதிகாரிகளும், 'தொண்டு' வியாபாரிகளும் வளர்ந்தது என்பது,  1967க்குப்பின் திராவிட ஆட்சிகளின் காலக்கட்டத்தில் தானா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.  குறிப்பாக மத்திய அரசு, தமிழ்நாட்டிற்கு எந்தெந்த பிரிவுகளில் ஒதுக்கிய நிதிகளில், செலவிடப்படாமல், ஒவ்வொரு வருடமும் எவ்வளவு கோடி, திருப்பி அனுப்பப்படுகிறது? அதனால், தமிழ்நாட்டில் பலன் இழந்த பயனாளிகள் யார்? யார்? 'ஊழல்' வழியில் அதிகம் சுருட்ட வழியில்லாத நிதிகளா அவை? என்பதும் ஆய்விற்குரியதாகும்

அதே போல கட்டப்பஞ்சாயத்து, கூலிக்கு கொலை, வன்முறை  உள்ளிட்ட இது போன்ற இன்னும் பலவழிகளில் பணம் ஈட்டும், 'ஊழல் வலைப்பின்னல்' எப்போது உருவாகி, எப்படி வளர்ந்து, இன்று உச்சக்கட்டதில் உள்ளதா? சமூகத்தில் பெரிய மனிதர்கள் முன் வர வெட்கப்பட்டு ஒதுங்கி வாழ்ந்த காலம் மாறி, ரவுடிகளே பெரிய மனிதர்களாக வலம் வர அந்த போக்கு, வழி வகுத்ததா? அதில் அந்த 'ஊழல் வலைப்பின்னலில்' இடம் பெற்ற அரசு வக்கீல்களும், அவர்களின் எடுபிடி வக்கீல்களும், அரசியல் வாதிகளும், அரசு அதிகாரிகளும் 'அதிவேக' புதுப்பணக்காரர்களாக வளர, அந்த போக்கு, வழி வகுத்ததா? ( http://tamilsdirection.blogspot.in/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html )

அந்த போக்கில், கல்வியானது 'வியாபாரமாக' சிறை பட்டதா? தமிழ்வழிக்கல்வியின் மரணப்பயணமும், தமிழர்களிடையே 'இயல்பான' அன்பும், சுயலாப நோக்கற்ற  உதவி உள்ளிட்ட பண்புகளும் மறைந்து, சுயமரியாதை இழந்து, 'தரகு', அடிவருடி, பணம் ஈட்டல், உள்ளிட்ட 'சுயலாப கள்வர் நோயும்' வளர்ந்தனவா? 'திருச்சி பெரியார் மையம்' மூலம் நான் கண்டு பிடித்த, 'அதிவேக' பணக்காரர் ஆவதற்கான‌ இரகசியங்களை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். ( http://tamilsdirection.blogspot.in/2013_10_01_archive.html ) ஊழலில் ஈடுபடும் துணிச்சலற்ற 'கோழை யோக்கியர்கள்', அந்த 'புதுப் பணக்காரர்களின்' ‘சுயலாப துதி பாடிகளாக' வலம் வரும் சமூக செயல்நுட்பமும் (Social Mechanism), 'அந்த கோழைகளுக்கு' 'துணிச்சலை' கொடுத்துள்ள சமூக சூழலும், எனது ஆய்வு கவனத்தை ஈர்த்துள்ளது. அதாவது சுயமரியாதை உள்ளிட்ட மனிதருக்கான மதிப்பீடுகளை(Values) காவு கொடுத்து, மனித உறவுகளை 'சுயலாப கள்வர்' நோயில் சிக்க வைத்து, எந்த வழியிலும், 'பணம் சம்பாதிப்பதே வாழ்வின் இலட்சியம்' என்று வாழும் மனித மிருகங்களிடமிருந்து, தமிழையும், தமிழரையும், தமிழ்நாட்டையும் எப்படி மீட்பது? என்பதே எனது ஆய்வின் இலக்கு ஆகும். சமூக அக்கறையுள்ள மாணவர்கள்/இளைஞர்கள் மூலம், அந்த மீட்சி நோக்கிலான 'சமூக விசாரணை' தொடங்கி, அதன் விளைவாக சட்டபூர்வ விசாரணை மூலம் அவர்கள் உரிய தண்டனை பெற; இது போன்ற ஆய்வுகள் வழி வகுக்கும், மீட்சியின் தொடக்க அறிகுறியாக. 

'சமூக விசாரணைக்கான' ஓர் உதாரணமாக;
"எனது அறிவு, அனுபவ அடிப்படைகளில், நான் 'பெரியார் சமூக கிருமிகளாக' அடையாளம் கண்டவர்களில்;


1944இல் இளைஞர்களாயிருந்து, 1970களின் கடைசியில் நான் பெரியார் இயக்கத்தினுள் நுழைந்து, எனக்கு அறிமுகமானவர்களில் எவரும் கிடையாது. 1947க்குப் பின் வசதியான/வசதி குறைவான குடும்பங்களில் பிறந்து, ஒழுங்குடனும், பொறுப்புடனும் நன்கு படித்து, பெரியார் ஆதரவாளர்களாக, வளர்ந்தவர்களில் எவரும் கிடையாது. வசதி குறைவான குடும்பத்தில் பிறந்து, படிக்கிற காலத்தில் 'காலித்தனமாக' இருந்து கொண்டு, அல்லது 'காலிகளின் வால்கள் நண்பர்களாக' இருந்து கொண்டு, 'பெரியார்'' ஆதரவாளர்களாக, வாழ்வை 'அனுபவித்து', அதன் மூலம் பெற்ற 'அறிவின்' துணையோடு, 'திராவிட அரசியல் கொள்ளைக் கும்பலுடன்' கூட்டு சேர்ந்து, 'குறுக்கு வழிகளில்', 'பெரியார் சமுக கிருமி' செயல்நுட்பத்தில், 'அதிவேக பணக்காரர்களாவதோடு, தமது சமூக வட்டத்தில், அந்த 'தனித்துவமான' கள்வர் நோயையும், அவர்கள் பரப்பி வருகிறார்கள்; சமூகத்தில் உள்ள அறிவுக்கு எதிரான உணர்ச்சிபூர்வ போக்குகளின் துணையோடும், ('ஊழல் எதிர்ப்பு அலையில்' மோடி பிரதமரான பின்னரும்) அரசின் ஊழல் ஒழிப்பில் உள்ள ஓட்டைகளின் துணையோடும்.


ஆக, 'சிற்றினம்', 'தீ இனம்' யார், யார் என்று அடையாளம் கண்டு, அவர்களை விட்டு விலகி, 'துணிச்சலுடன்', அதனால் விளையும் இழப்புகளை விரும்பி ஏற்று,  ‘நல் இனமாக' வாழ்பவர்கள் எல்லாம் ஒன்று சேர்வதன் மூலமே, தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டில் மீட்சிக்கு,  நாம் பங்களிப்பு வழங்க முடியும். அதற்கு முன்னுதாரணமாக வாழ்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்து வருவதானது, தமிழின், தமிழர்களின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு நம்பிக்கை தருவதாகும்." (http://tamilsdirection.blogspot.in/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html )
 


இப்படிப்பட்ட சமூக கேடான இழிவான வழிகளில் முளைத்த 'அதி வேக' புதுப்பணக்காரர்களுக்கு, எந்தெந்த கட்சிகள், கொள்கைகள் முகமூடிகளாக, அவர்கள் 'பெரிய ம‌னிதர்களாக' வலம் வர உதவுகின்றன? அந்த வரிசையில்  பெரியார், மார்க்சியம், தமிழ் உணர்வு போன்றவை (அந்த 'முகமூடி குற்றவாளிகளின்' பங்களிப்பா?) செல்லாக்காசாகி, சாதி, மதம், சார்ந்த  கட்சிகளும்/கொள்கைகளும் அந்த போக்கில் 'செல்லும் காசாக' வளர்ந்துள்ளனவா?  அது தெரியாமல், அந்தந்த கட்சிகளில். கொள்கைகளில், உண்மையானவர்களில், நேர்மையானவர்களில், யார் யார் எமாந்து வருகிறார்கள்?

அப்படி ஏமாறுபவர்கள் எல்லாம் சுமார் 50 வயதுக்கும் அதிகமானவர்களா? அவ்வாறு அவர்கள் ஏமாந்த போக்குகளே, ஈ.வெ.ரா, ஈ.வெ.ரா வழியில் நீடாமங்கலம் அ. ஆ, உள்ளிட்டு எண்ணற்றோரின் விலை மதிப்பில்லாத தியாகங்களையெல்லாம், 'சமூக நச்சு விவசாயத்திற்கான' உரமாக்கி, 'பெரியார் சமூக கிருமிகள்' வளர காரணமானதா?  ( 'தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize) (6); 'தமிழ், தமிழர், தமிழ்நாடு' மீட்சிக்கான; நல்ல விதைகளும், நச்சு விதைகளும்'; http://tamilsdirection.blogspot.in/2015/06/normal-0-false-false-false-en-us-x-none_23.html )

அந்த போக்கில் ஏமாறாமல், விடுபட்டு, இன்றைய  மாணவர்களும் இளைஞர்களும், தமது கல்வி/வேலை வாய்ப்பு, சினிமா/கிரிக்கெட், உயர்தர வாழ்க்கை (High life style) குவியத்தில் (focus) பயணிக்கிறார்களா? அவர்களில் சமூக அக்கறை உள்ளவர்கள் எல்லாம், விளம்பரமின்றி, மன திருப்திகாக மட்டுமே மலைக்கும்  அளவுக்கு உதவிகளை புரிந்து வருகிறார்களா? அந்த உதவிகளையும் ஏமாந்து வழங்காமல், பயனாளிகளை, சரியான முறையில் தேர்ந்தெடுத்து, உதவிகள் புரிந்து வருகிறார்களா? வெள்ள நிவாரணம் மூலம் மீடியா வெளிச்சத்திற்கு வந்த அந்த உதவிகள், அதற்கு பின்னும் மீடியா வெளிச்சமின்றி அதே போக்கில் தொடர்கின்றனவா? அரசியல் நீக்கத்தில் (depoliticize), ஆதாயத் தொண்டர்களையே நம்பி, அரசியல் கட்சிகள் பயணித்து வரும் சமூக சூழலில், மாணவர்களும்/இளைஞர்களும் தத்தம் சுயபலத்தில், இது போன்ற உதவிகள் புரிந்து வரும் போக்கே, தமிழ்நாட்டின் அடுத்த கட்ட அரசியலை தீர்மானிக்கும்; ஓட்டைகள் இன்றி, ஒழுங்காக ஊழல் ஒழிப்பு செயல்படும் வகையில்; மேலே குறிப்பிட்ட 'சமூக விசாரணையானது' தொடங்கும் திசையில். தமிழ்நாட்டு அரசியலில் சுயசம்பாத்தியம் இல்லாதவர்கள் அரசியலில் நுழைந்து, அரசியல் என்பதை, 'முதலில்லா வியாபாரமாக்கிய' போக்கில், திருப்பு முனையாக, சுயசம்பாத்தியம் உள்ள  மாணவர்களும்/இளைஞர்களும் பொதுவாழ்வில் 'அரங்கேறி' வரும் காலக்கட்டம் இதுவாகும். ("200 இளைஞர்கள் தேர்தலில் நின்று ஜெயித்து சட்டப்பேரவை சென்றால், நாம் நினைத்ததைக் கொண்டுவர முடியும். ஒரே ஒரு ஆள் மட்டும் நின்று ஜெயித்து சட்டப்பேரவைக்குப் போவதில் எனக்கு உடன்பாடில்லை."‍-ஆர்ஜே பாலாஜி நேர்காணல்;தி இந்து  ஜூலை 1, 2016 )

அந்த மாணவர்கள் இளைஞர்கள் வழியில், அவர்களைப் போலவே, நாமும் விளம்பரமின்றி நம்மால் இயன்ற உதவிகள் புரிந்து, அதை அவர்கள் அறிந்தால் மட்டுமே, நம்மை அவர்கள் மதிக்கிறார்களா? அதாவது இன்றைய மாணவர்கள்/இளைஞர்கள் மத்தியில் நாம் தொடர்பு கொண்டு ஏதாவது உருப்படியாக செய்ய வேண்டுமென்றால், நமது பேச்சு/எழுத்து போன்றவற்றை விட, நாம் எப்படி வாழ்கிறோம்? என்பதன் மூலமே அவர்களின் கவனத்தை ஈர்க்க முடியும் என்பதும் எனது அனுபவமாகும்.

சுனாமி பணக்காரர்கள் உள்ளிட்ட இன்னும் பலவகை ஊழல் பணக்காரகள் எல்லாம் சுமார் 50 வயதுக்கும் அதிகமானவர்களிடையே மட்டுமே 'பெரிய மனிதர்களாக' வலம் வர முடியும். இன்றைய மாணவர்கள்/இளைஞர்கள் மத்தியில் அவர்கள் 'ஜிகிர்தண்டா' பேர்வழிகளாகவே வெளிப்பட்டுள்ளார்கள்; 'ஜிகிர் தண்டா', 'சூது கவ்வும்', 'கோலி சோடா', 'சதுரங்க வேட்டை', 'காக்கா முட்டை' போன்ற இன்னும் பல வியாபார ரீதியில் வெற்றி பெற்ற/பெறும் படங்களுக்கு கதைக் களங்களையும், பாத்திரங்களையும்  'அமுத சுரபியாக' வழங்கி, 'சமூக தொண்டு (?)’  புரிந்து வருகிறார்கள். அவர்களில் 'தமிழ் உணர்வு' புரவலர்களாக வலம் வருபவர்களின் 'பங்களிப்பாக', 'தமிழும், தமிழ் உணர்வும்'  ‘ஜிகிர்தண்டா’ பேர்வழிகளின் கருவிகளாக, கருதப்படும் போக்கும் வளர்ந்து வருகிறது. இயற்கையின் போக்கில், மாணவர்கள்/இளைஞர்கள் மூலமாக, அவர்களின் தண்டனை காலம் தொடங்கி விட்டாலும், அவர்களின் 'பிடியிலிருந்து' தமிழை மீட்காமல், தமிழ்வழிக் கல்வியின் (எனவே தமிழின்) மரணப் பயணத்தை தடுக்க முடியுமா?

மேற்குறிப்பிட்ட 'ஜிகிர்தண்டா' பேர்வழிகளை மதிக்கும் போக்கில் சிக்கிய‌, சுமார் 50 வயதுக்கும் அதிகமானவர்களில் பெரும்பாலோர், இன்றைய மாணவர்களிடமும், இளைஞர்களிடமும், நம்பகத்தன்மையை (credibility) இழந்து, அந்நியமாகி உள்ளார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

நமது குடும்ப பிள்ளைகளுக்கு 'ஆங்கில வழிக் கல்வி'; ஊரான் வீட்டுப்பிள்ளைகளுக்கு தமிழ்வழிக்கல்வி; 

என்று உபதேசிக்கும் தமிழ் ஆதரவாளராக‌, நாம் வாழ்ந்தோமானால், நாமும் 'ஜிகிர்தண்டா' பேர்வழியாகவே அவர்களுக்கு தெரியும்.
 
அது மட்டுமல்ல, நமது பங்களிப்பாக, 'தமிழும், தமிழ் உணர்வும்'  ‘ஜிகிர்தண்டா’ பேர்வழிகளின் கருவிகளாக, கருதப்படும் அபாயமும் இருக்கிறது. 

தமிழ் வேரற்று பயணிக்கும், ஆனால் விவரமும் விவேகமும் உள்ள இளைஞர்கள் மூலம், வரும் காலத்தில் 'ஊழல்' அற்ற தமிழ்நாடு உருவாக வாய்ப்புள்ளது. நாம் ஜிகிர்தண்டா பேர்வழிகளை 'ஒதுக்காமல்', சுயலாப நோக்கில் மதித்து,  'இரட்டை வேட யோக்கியர்' போக்கில் தொடர்ந்து வாழ்வோமானால்,  அந்த தமிழ்நாட்டில் தமிழ் வேரற்றதற்கு நாமே குற்றவாளிகளாவோம்.

No comments:

Post a Comment