Monday, June 19, 2017

'துக்ளக்கு'ம், 'வஞ்சிக்கப்படும் தமிழ்நாடும்';


            இரா.செழியன் பயணித்த திசையில் தீர்வு?


திராவிடர் கழகம் சார்பில், சுமார் 25 வருடங்களுக்கு முன் வெளிவந்த, 'வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு' மற்றும் 'வஞ்சிக்கப்படும் விவசாயம்' ஆகிய இரண்டு நூல்களும், எனது மேற்பார்வையில், ஒரு குழுவினர் சேகரித்த தகவல்களை, தொகுத்து எழுதியவையாகும். அதற்காக சென்னை கன்னிமாரா நூலகம் உள்ளிட்டு, பல இடங்களில் ஐந்தாண்டு திட்டங்களில் தமிழ்நாட்டிற்கு ஒதுக்கப்பட்ட நிதிகள் தொடர்பான விபரங்களை சேகரித்தேன். 1967க்குப் பின் தான், தமிழ்நாட்டிற்கான நிதிகள் குறையும் போக்கு தொடங்கியதானது, அதில் வெளிப்பட்டது.

சில பிராமண அதிகாரிகள் 'துவேஷ' நோக்கில், பிராமணரல்லாத அதிகாரிகளின் பதவி உயர்வுகளை கெடுத்ததை (இவை போன்று உயர்கல்வி/அதிகார நிறுவனங்களிலும், இன்றும் நடக்கும் சில நிகழ்ச்சிகள், மரணப்போக்கிலுள்ள 'பெரியார்' கட்சிகளுக்கு இன்றும் 'ஆக்சிஜன்' ஆக) நேரில் சாட்சியாக அனுபவித்த; 

மத்திய அரசில் உயர் அதிகாரியாக பதவி வகித்து, பணி ஓய்வு பெற்ற, 'நல்ல' பிராமண அதிகாரிகளை நண்பர்களாக கொண்டுள்ள‌, எனது 'பிராமணரல்லாத' நண்பர் தெரிவித்த கீழ்வரும் தகவலானது, மேலே குறிப்பிட்ட புதிருக்கு விளக்கமானது.

தமிழ்நாட்டில் பிராமணர்கள் செல்வாக்குடன் இருந்த காலத்தில், மத்திய அரசிலும் அவர்கள் செல்வாக்குடன் இருந்ததால் தான், தமிழ்நாட்டிற்கு பாதகங்கள் இன்றி, சாதகங்கள் நிகழ்ந்தன: காமராசராலும் திருச்சி 'பெல்', தூவாக்குடி 'துப்பாக்கி தொழிற்சாலை', ஆவடி 'டேங்க்' தொழிற்சாலை போன்றவை வந்தன. பிராமண எதிர்ப்பில், தமிழ்நாட்டிலும், மத்திய அரசிலும் தமிழ்நாட்டு பிராமணர்கள் செல்வாக்கு குறைந்ததே,1967க்குப் பின் தமிழ்நாட்டிற்கு வந்திருக்க வேண்டிய‌ வேண்டிய பெரும் திட்டங்கள் எல்லாம்,  காங்கிரஸ் ஆட்சியில் இருந்த‌ பெங்களுருக்கு சென்றன; காவிரி, முல்லை பெரியாறு உள்ளிட்ட பிரச்சினைகள் முளை விட்டு வளர்ந்தன; கச்சத்தீவும் பின்னர் பறி போக‌. 

1967க்கு முன், 'வடக்கு வளர்கிறது, தெற்கு தேய்கிறது' என்று முழக்கமிட்டு, 'பெரியார்' ஈ.வெ.ராவும், அண்ணாவும் 'பிரிவினைக்கான காரணங்களாக' முன் வைத்தவை எல்லாம், 1967க்குப் பின், எந்த அளவுக்கு பொருத்தமற்று (irrelevant) போயின? என்பதும் ஆய்விற்குரியவையாகும்? (‘பணக்கார மாநிலமாகி வரும் தமிழ்நாட்டில்; தமிழர்கள் வளர்ந்து வருகிறார்களா?     வீழ்ந்து வருகிறார்களா?’  ;  http://tamilsdirection.blogspot.sg/2016/09/1967.html    & http://tamilsdirection.blogspot.sg/2014/12/normal-0-false-false-false-en-us-x-none.html )

'சில' பிராமணர்களின்  'துவேஷ' போக்கினால் ஊக்குவிக்கப்படும், 'பிராமண எதிர்ப்பு' சமூக சூழலானது;

பாலியல் தொந்திரவுக்கு உள்ளான பிராமணப் பெண் கொடுத்த புகாரிலிருந்து, அந்த தொந்திரவு கொடுத்த 'பிராமணரல்லாத' உயர் அதிகாரி தப்பிக்கவும், 'பிராமணரல்லாத' 'திராவிட' அரசியல்வாதி, தனிப்பட்ட விரோதத்தை, 'பிராமண எதிர்ப்பு' என்ற முகமூடியில், பிராமண அதிகாரியை, பழிவாங்க முயற்சிக்கவும், பிராமணரல்லாத பேராசியரின் வகுப்பில் 'ஒழுக்கக்கேடான தொந்திரவு' கொடுத்து, 'பெரியார்' படத்தை, பிராமண மாணவர்கள் உடைக்கவும், வழி வகுத்தன, என்பது எனது அனுபவங்களாகும். (குறிப்பு கீழே) 

தமிழில் 'இனம்' என்ற சொல்லானது, காலனிய சூழ்ச்சியில் 'ரேஸ்' (Race) என்ற மேற்கத்திய பொருளில் திரிந்து, அந்த திரிதல் மூலம், ஆரியர் - திராவிடர் மோதல் அரங்கேறி, 'அந்த சில' பிராமணர்களும், 'பெரியார்' கொள்கையாளர்களும், அந்த சூழ்ச்சியில் பலியாகி, பயணிக்கிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

சமூகத்தில் நல்லவைகளும், தீயவைகளும் திடீரென வானத்திலிருந்து வந்து குதித்து விடாது. மேலே குறிப்பிட்ட பாதகமான காலனி சூழ்ச்சி வரலாற்றுப் பின்னணியில் தான், 'பெரியார் சமூக கிருமிகளும்', சிம்புவின் 'பீப்' பாடலும் வெளிப்பட்டதை, ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.sg/2016/08/blog-post.html

‘கடந்த வாரம் சென்னை எல்லையில்,  ஆந்திராவுக்கு ரெயில் மூலம் ரேசன் அரிசியை பெண்கள் கடத்த முய‌ன்றதை, தடுத்த கிராம நிர்வாக அதிகாரியை, அந்த பெண்கள் அடித்த செய்தி, தொலைகாட்சிகளில் ஒளிபரப்பானது. 'ஜிகிர் தண்டா' திரைப்படத்தில் கதாநாயகி, அறிமுக காட்சியில், துணிக்கடையில் சேலை திருடுவது காட்டப்பட்டது. அரசில் உயர் பதவிகளில் இருந்தவர்கள், ஆயிரக்கணக்கான, லட்சக்கணக்கான கோடி திருடியும், அவர்களுக்கு தண்டனையில்லையென்றால், (கூடுதலாக அவர்களிடம் 'பலன்' பெற்று 'புகழ்' பாட, உணர்ச்சிக்கவிஞர்கள்/பேச்சாளர்கள்/எழுத்தாளர்கள் 'மிகுந்துள்ள' தமிழ்நாட்டில்பிழைப்பிற்கு ரேசன் அரிசியை கடத்துவது தவறா? இவை போன்ற கேள்விகளை, சாதாரண மக்களிடம், 1967க்கு முன், கற்பனை கூட செய்திருக்க முடியுமா?’ (http://tamilsdirection.blogspot.sg/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html )

அடுத்து, மேலே குறிப்பிட்ட 'வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு' மற்றும் 'வஞ்சிக்கப்படும் விவசாயம்' ஆகிய இரண்டு நூலகளிலும், நான் பதிவு செய்த கருத்தானது, 'துக்ளக்' ( 21.06.2017) இதழ் 'கேள்வி‍ - பதில்' பகுதியில் வெளிவந்து, என்னை வியப்பில் ஆழ்த்தியது.

கேள்வி: 'கேரள நதிகளிலிருந்து வீணாகக் கடலில் கலக்கும் நீரைக் கூட, தமிழகத்திற்குத் தர மாட்டோம்' என்கிற அம்மாநில அரசின் 'அராஜக' தீர்மானம் பற்றி....?

பதில்: இவையெல்லாம் பேசித் தீர்க்கப்பட வேண்டிய விஷயங்கள். எப்படிப் பேச்சு வார்த்தை நடத்தலாம் என்று பார்ப்போம். கேரளாவுக்கு அரிசி தேவை. நம்மிடம் நிலம் இருக்கிறது. தமிழகம்'இவ்வளவு நிலத்தில் நாங்கள் குத்தகை முறையில் நெல் பயிரிட்டு உங்களுக்குக் கொடுக்கிறோம். நீங்கள் இவ்வளவு தண்ணிரை கொடுங்கள்' என்று பேசினால், ஒப்பந்தம் ஏற்பட வாய்ப்பிருக்கிறது.'உங்களிடம் தண்ணீர் இருக்கிறதே கொடுங்கள்'என்று மட்டும் கேட்டால், எப்படி அவர்கள் கொடுப்பார்கள்? கேரளாவிலும் தண்ணீர் பஞ்சம் ஏற்படத்தான் செய்கிறது. ஏனென்றால், ஒரு இடத்தில் தண்ணீர், இன்னொரு இடத்தில் மக்கள் ‍ அதுதான் காரணம்.

'வஞ்சிக்கப்படும் தமிழ்நாடு' மற்றும் 'வஞ்சிக்கப்படும் விவசாயம்' ஆகிய இரண்டு நூல்களிலும், மேற்குறிப்பிட்ட பிரச்சினை தொடர்பான‌ எனது பதிவானது, தீர்வை குறிப்பிட்டு, நேரு குடும்ப ஆட்சியில் அது சாத்தியமில்லை என்பதையும் குறிப்பிட்டு, பிரிவினை 'உணர்ச்சிபூர்வ' போக்குகளை வளர்க்கவே உதவியது; குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகளில் பலர் படிப்பையும், பிழைப்பையும் கெடுத்து, தீக்குளித்து போராடி, தத்தம் வாழ்வை தொலைக்கவும், அதை 'அரசியல் மூலதனமாக்கி', சுயநல தலைவர்கள் பிழைத்து, தத்தம் குடும்பப் பிள்ளைகள் படித்தாலும், படிக்காவிட்டாலும் நன்கு 'செட்டில்' செய்து வாழும் வகையில்; அதன் 'தொடர் விளைவு' போக்கில், 'திருச்சி பெரியார் மையம்' மூலம் 'பெரியார் சமூக கிருமிகளும்' உருவாகி வளரும் வகையில். (http://tamilsdirection.blogspot.sg/2017/03/blog-post_5.html  )

அதற்கு மாறாக, மோடி பிரதமராக ஆட்சி செய்து வரும் சூழலில்;

'துக்ளக்' ஆசிரியர் குருமூர்த்தி, தனது பதிலில் ஆக்கபூர்வமான சாத்தியமாகும் வகையில், மேலே குறிப்பிட்ட பதிலில், விளக்கம் அளித்துள்ளார்.

தமிழ்நாட்டு அரசியலானது, 'பொதுவாழ்வு வியாபார' போக்கிலிருந்து, 'விடுதலை' ஆவதே, அதற்கான முன் நிபந்தனையாகும், என்பது எனது கருத்தாகும்.

அது போலவே, கீழ்வரும் ஆய்வின் பின்னணியில்;

மேலே குறிப்பிட்ட 'துக்ளக்' இதழில், குருமூர்த்தி 'இரா.செழியன் ‍ சில நினைவுகள்' என்ற தலைப்பில், எழுதியுள்ளதானது;

சுயலாப நோக்கற்ற 'பெரியார்' கொள்கையாளர்களின் பார்வைக்கு உரியதாகும்.

1944இல் 'திராவிடர் கழகம்' துவக்கிய 'பெரியார்' ஈ.வெ.ரா, தனது அண்ணன் மகன் சம்பத்தை தனது வாரிசாக்கும் முயற்சியில் ஈடுபட்டார். தனது செல்வாக்கிலிருந்து விலகி, சம்பத் அண்ணாவின் செல்வாக்கிற்குள் சிக்கியதை, அறிந்து, அம்முயற்சியை கைவிட்டார். 1948 தூத்துக்குடி மாநாட்டில், 'பெரியார்' ஈ.வெ.ரா 'அண்ணாவின் செல்வாக்கிலிருந்த குழுவுக்கு' எதிராக பேசியது முதல் 1949 வரை, அண்ணாவின் வலது கரமாக சம்பத் செயல்பட்டிருக்காவிட்டால், 1949இல் தி.மு.க தோன்றியிருக்குமா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அண்ணா 'திராவிட நாடு பிரிவினையை' கை விட்ட பிறகு, அதே சம்பத், 'இந்திய தேசியத்திற்கு' இணக்கமாக, தமிழ்நாட்டின் நலன்களுக்கு ஏற்ற வகையில் பயணிக்கும் நோக்கில், சென்னையில் கூட்டிய ஆலோசனை கூட்டத்திற்கு, காஞ்சிபுரத்திலிருந்து   வந்து கலந்து கொள்ள மறுத்து, சம்பத்தின் முயற்சியை, அண்ணா சிதைத்தது ஏன்? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

1967இல் தி.மு.க ஆட்சியைப் பிடித்தது முதல், தி.மு.கவில் ஊழல் குற்றச்சாட்டிற்குள்ளாகாமல் பயணித்த வெகு சிலரில் ஒருவராகிய இரா,செழியன், 1970-களில் இந்திரா ஆட்சியில், நெருக்கடி கால கொடுமைகளை எதிர்த்து போராடி, ஜெயபிரகாச நாராயணன் உள்ளிட்ட தேசியத் தலைவர்களின் பாராட்டைப் பெற்றார். பின் ஜனதா கட்சியில் சேர்ந்து, தேசிய நீரோட்டத்தில் பயணித்து, கடந்த 06.06.2017இல் மறைந்துள்ளார். 

நெருக்கடிகால சிறை அனுபவங்கள் தொடர்பான, மறைந்த முன்னாள் சென்னை மேயர் 'சிட்டிபாபு டைரி'யில், 'கிடைக்காமல் போன'(?) பக்கங்களில் இருந்த தகவல்கள் வெளிப்பட்டால், இரா.செழியன் போன்ற நேர்மையான மனிதர்கள் எல்லாம், 'திராவிட' கட்சியிலிருந்து விலகி, தேசிய நீரோட்டத்தில் இணைந்ததற்கான, கூடுதல் விளக்கமானது, கிடைக்கக் கூடும். 

வெறுப்பு அரசியலானது, சமூக குற்றவாளிகளுக்கு 'கேடயமாக' பயன்பட்ட போக்கே, தமிழ்நாட்டின் சீரழிவுக்கு காரணமானது. அந்த 'கேடயமானது', அரசியல் நீக்கத்திற்கும், ஆதாய அரசியலுக்கும் வழி வகுத்து, 'கேவலமாகி' வருகிறது; வெறுப்பு அரசியலுக்கு விடை கொடுத்து, தமிழ்நாட்டை மீட்பதற்கு வழி வகுத்து.

அந்த மீட்சியை துரிதப்படுத்தும் நோக்கில்;

திராவிடர்/திராவிட இயக்கத்திலிருந்து விலகி, தேசிய நீரோட்டத்தில் பயணித்த இரா.செழியன், ஈ.வெ.கி. சம்பத் போன்றோர், அந்த விலகலுக்கான காரணங்கள் பற்றி எழுதி வெளிவந்துள்ளவற்றை, தேடி படிக்க வேண்டும், என்ற உந்துதலை, மேலே குறிப்பிட்ட 'துக்ளக்' கட்டுரை ஏற்படுத்தி உள்ளது.

குறிப்பாக 'இனம்' தொடர்பான காலனிய சூழ்ச்சியில் 'பெரியார்' ஈ.வெ.ரா சிக்கி, 1944இல் திராவிடர் கழகம் தொடங்கி, மேற்கத்திய குறிப்பாய (Western Paradigm) அடிமையாக 'குருட்டு பகுத்தறிவு' போக்கில் பயணித்தது தொடர்பாக, அவர்கள் கருத்து ஏதும் வெளிப்படுத்தி உள்ளார்களா? என்பதும் (‘தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize) (10)- 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளங்களுக்கும், 'இந்தியர்' என்ற அடையாளத்திற்கும் ; உள்ள உறவானது ஆக்கபூர்வ திசையிலா? அழிவுபூர்வ‌ திசையிலா?; http://tamilsdirection.blogspot.sg/2017/02/depoliticize-10.html  );

அந்த உந்துதலுக்கு காரணமாகும்.


குறிப்பு:

1. தாய்மொழிவழிக்கல்வியை ஆதரித்து, சாதி, மத அடிப்படைகளில் புறக்கணிப்பை எதிர்க்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்பானது, உயர்கல்வி/அதிகார மையங்களில், அப்புறக்கணிப்பு தொடர்பான புகார்களை வரவேற்று, விசாரித்து, தகுந்த நிவாரண நடவடிக்கைகளில் ஈடுபட வேண்டும். அதற்கான முயற்சிகளில், எனது வரை எல்லைகளுக்குட்பட்டு, நான் ஈடுபடுவேன்

2. 'திருச்சி பெரியார் மையம்' மூலம் 'பெரியார் சமூக கிருமிகளாக', நான் அடையாளம் கண்டு,  எனது  சமூக வட்டத்திலிருந்து அகற்றியவர்களை போல் இல்லாமல், தனிப்பட்ட வாழ்வில் உண்மையாகவும், நேர்மையாகவும் வாழ்ந்து, என் மீது அன்பு செலுத்திய, 'அதிகம் படித்த' சில பிராமண 'புலமையாளர்கள்'(?), அறிவுபூர்வ பார்வையின்றி, பெரியார்' ஈ.வெ.ராவைப் போலவே, தனது அறிவு வரை எல்லைகள் பற்றிய புரிதலின்றி, தமிழையும், தமிழ் இசையையும் 'கீழாக' கருதும் போக்கை வெளிப்படுத்தியதால், அத்தகையோரையும் எனது சமூக வட்டத்திலிருந்து அகற்றியுள்ளேன்; தனி மனித உறவுகளில் லாப நட்டம் பார்த்து, நெருங்கும்/ஒதுங்கும், 'விபச்சார' தொழில்நுட்ப 'புலமையாளர்களை'(?) ஒதுக்கியது போலவே.

No comments:

Post a Comment