Saturday, November 2, 2013

புராணங்களில் உள்ள 'சிக்னல்கள்'

 

தகவல் பரிமாற்றத் தொழில்நுட்பத்தில்(Communication Technology)  பயனுள்ள தகவல்கள் 'சிக்னல்'களாகவும் (signal), மற்றவை இரைச்சலாகவும் (noise) பிரித்து உணரப்படும்.

ஒரு தேவைக்கு சிக்னலாக இருப்பது வேறொரு தேவைக்கு இரைச்சலாக இருப்பதும் உண்டு.

எனவே எது சிக்னல், எது இரைச்சல் என்பது தேவை அடிப்படையிலான அணுகுமுறையைப் பொறுத்தது.

மனிதரின் சிந்தனை மற்றும் திறமைகள் அடைப்படையில் வெளிப்படும் எழுத்து, ஓவியம், இசை,நாட்டியம், சிற்பம் போன்ற அனைத்துமே மனித சமூக வரலாற்றுத் தடயங்களாகும்.

வரலாற்றுத் தடயங்களை ஆய்வுகளுக்கு உட்படுத்துபவர்கள், அவர்களின் ஆய்வு அணுகுமுறையில் வெளிப்படும்  தகவல்களைத் (signal) தவிர்த்து, மற்றவற்றை தேவையற்றவையாக ‍ இரைச்சலாக (noise)‍ தவிர்ப்பதும் இயல்பே.

பக்தி தொடர்பான புராணங்களும்,இலக்கியங்களும் அறிவுபூர்வமான ஆராய்ச்சிக்குப் பயன்படும் புதையல்கள். ('The Religious Literature of India is too vast. It includes the Vedas, the Upanishads, the great epics like the Ramayana and Mahabharata, and the Puranas of the Hindus. These are like mines of information about religious beliefs, social systems, people’s manners and customs, political institutions, and conditions of culture.'; http://www.historydiscussion.net/articles/sources-of-ancient-indian-history-archaeological-and-literary-sources/2336 )

அறிவுபூர்வமான சிக்னல்கள் தேடுபவர்களுக்கு சிக்னலும், 'இரைச்சல் மட்டுமே' தேடுபவர்களுக்கு இரைச்சலும் வழங்கும் அமுதசுரபியாக அவை இருக்கின்றன.('மூட நம்பிக்கையா? பல பரிமாணப் புலமையின் வெளிப்பாடா?';
http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_20.html) அதனை எனது ஆராய்ச்சி கண்டுபிடிப்பின் மூலம் விளக்குவது சரியாக இருக்கும்.

உலகில் இன்று மொழியியல் (Linguistics) என்ற துறை உள்ளது. எனது ஆராய்ச்சி மூலம் இசை மொழியியல்(Musical Linguistics)  என்ற புதிய துறை வெளிப்பட்டுள்ளது மட்டுமின்றி, அதன் விளைவாக 'கணினி இசை மொழியியல்'(Computational Music Linguistics)  என்ற இன்னொரு புதிய துறையும் வெளிப்பட்டு, அவை மூலம் சந்தைப்படுத்தக் கூடிய ( marketable ) பல பயன்பாட்டு மென்பொருட்கள் (Application Software ) உருவாகும் வாய்ப்புகளும் வெளிப்பட்டுள்ளன. (https://tamilsdirection.blogspot.com/2020/08/blog-post.html)

மேலே குறிப்பிட்ட கண்டுபிடிப்புகளுக்கு எனது துணைபுரிந்த முக்கிய மூலங்களாக இருந்தவை சமஸ்கிருதத்தில் வாயு புராணம் (Vayu Puranam), தமிழில் சிலப்பதிகாரம், திருக்குறள், தொல்காப்பியம் உள்ளிட்ட, பல பழந்தமிழ்  நூல்களாகும்.

இவற்றில் உள்ள 'சிக்னல்'களை நான் எவ்வாறு கண்டுபிடித்து பயன்படுத்தி மேலே குறிப்பிட்ட ஆய்வுமுடிவுகளைப்  பெற்றேன் என்பதைச் சுருக்கமாக அடுத்து பார்ப்போம்.

பழந்தமிழ் இலக்கியங்களில் இசை தொடர்பான பகுதிகளில் பல இடங்களில் உரைகள் சரியான விளக்கங்கள் தரவில்லை என்பதை எனது 'தமிழிசையின் இயற்பியல்' (Physics of Tamil Music ) என்ற முனைவர் பட்ட ஆய்வின் போது கண்டறிந்தேன்.( 'தமிழ் இசையியல் புதிய கண்டுபிடிப்புகள் 2009 சேகர் பதிப்பகம், சென்னை78 + http://musicresearchlibrary.net/omeka/items/show/2444).

அதன்பின் திருக்குறள் 821‍இல் வரும் 'பட்டடை' என்ற சொல் இசையில் ‘ ச -  ‍ப ’ சுர உறவைக் குறிக்கும் சொல் என்ற புரிதலின்றி, உரையாசிரியர்கள் அனைவரும் இக்குறளுக்கு தவறாக விளக்கமளித்துள்ளார்கள். அவை எவ்வாறு தவறு என்பதைச் சுட்டிக்காட்டி, சரியான விளக்கத்தை எனது ஆய்வு மூலம் கண்டறிந்தேன்.
(http://musicresearchlibrary.net/omeka/items/show/2512 )

மேற்கண்ட ஆய்வில்,  'சீர்' என்பது வெறும் நேரசை மற்றும் நிரையசை என்ற இரண்டு வகையிலான அசைகளின் கூட்டு என்பது மட்டுமின்றி, அது பாலை நிலை, பண்ணு நிலை, தாளக்கூறுபாடு, வண்ணக்கூறுபாடு ஆகியவற்றை உள்ளடக்கிய ஒரு பாடலின் முக்கிய இசை உட்கூறு ( significant musical sub-structure)  என்பது தெளிவானது.

மேற்சொன்ன புரிதலுடன் திருக்குறள் 118-ஐ ஆய்ந்த போது, அதில் வரும் தூக்கு என்ற சொல் எனது கவனத்தை ஈர்த்தது. ஒன்று முதல் ஏழு சீர்கள் சேர்ந்து பாடலுக்கான தாள இசையில் ஏழு வகை தூக்குகளாக இடம் பெறும் என்பது நானறிவேன். எனவே 'சமன் செய்து சீர் தூக்கும் கோல்', உரையாசிரியர்கள் அனைவரும் தெரிவித்தபடி தராசாக இருக்க முடியுமா என்ற ஐயம் எழுந்தது. 

அப்போது சிலப்பதிகாரத்தில் வரும் தலைக்கோல் எனது கவனத்தை ஈர்த்தது. ஆனால் அது பட்டமாக வழங்கப்படும் ஒரு குறிப்பிட்ட வடிவமைப்பிலாலான கோல் என்ற விளக்கம் மட்டுமே உரையில் இருந்தது. அது என்ன குறிப்பிட்ட வடிவமைப்பு என்ற ஐயம் எழுந்தபோது, அது தொடர்பான ஒரு புராணக்கதை சிலப்பதிகாரத்தில் பல இடங்களில் காணப்பட்டது.
சிலப்பதிகாரம் :

அரங்கேற்றுக் காதை 1 - 3;      அரங்கேற்றுக் காதை 119 -120 ;

கடலாடு காதை       18 - 25;          நடுகற்காதை        100 - 101;

அந்த தலைக் கோல் வடிவம் இந்திரன் மகன் சயந்தனோடு தொடர்பு படுத்தப் பட்டிருந்தது.

எனக்கு தெரிந்த தொல்பொருள் ஆராய்ச்சியாளரிடம் இது தொடர்பாக கேட்ட போது, இந்திரனுக்கு மகனே கிடையாது என்றும், சயந்தன் இந்திரனின் இன்னொரு பெயராக இருக்கக் கூடும் என்றும் உறுதியாகக் கூறினார். 

அந்த குழப்பத்திலிருந்து தெளிவு பெற சென்னை மாநிலக் கல்லூரி சமஸ்கிருதத் துறைத் தலைவர் முனைவர் ஆர்.தியாகராஜனை அணுகினேன். அவர் உடனே அவர் துறை நூலகத்திலிருந்த ‘ Puranic Encyclopaedia என்ற நூலை எடுத்து கொடுத்தார். அந்நூலில் இருந்த செய்திகள் எனது குழப்பத்தைத் தெளிவுபடுத்தியதுடன், மேலேக் குறிப்பிட்ட கண்டுபிடிப்புக்கும் திறவுகோலானது. 
(Puranic  Encyclopaedio -- VETTAM MANI  - Motilal Banarsidoss--1979   Patna)

இந்திரனுக்கும் அவர் மனைவி சசிதேவிக்கும் மகனாகப் பிறந்தவனே சயந்தன். (M.B. Adi Parva chap 112, Stanza 3 and 4).

தலைக்கோல் ஏன் சயந்தன் வடிவில் இருக்க வேண்டும் என்ற கேள்விக்கும் பதில் கிடைத்தது.

ஒரு சமயம் இந்திர தர்பாரில் தலைமை விருந்தினராக அகஸ்தியர் இருக்கிறார். இந்திரன் அவரை கெளரவிக்க ஊர்வசியை நடனமாட ஏற்பாடு செய்கிறார். நடனத்தின் இடையே இந்திரன் மகன் சயந்தன் அரங்கிற்குள் நுழைகிறான்.சயந்தன் கண்களும் ஊர்வசியின் கண்களும் சந்திக்க காதல் அரும்பியது. அதனால் ஊர்வசியின் கால்கள் தாளத்தில் தடுமாறுகிறது. அதன் விளைவாய் நட‌னத்திற்க்கேற்றவாறு நாரதர் யாழில் வாசித்த இசை தடுமாறுகிறது. அகஸ்தியர் முதலில் சயந்தன் மீது கோபப்பட்டு அவனை பூமியில் மூங்கிலில் தலைக் கோலாக சாபமிடுகிறார். அடுத்தபடியாக ஊர்வசியைப் பூமியில் மாதவியாகப் பிறக்குமாறு சாபமிடுகிறார். அதன்பின் நாரதருக்கு சாபமிடாமல், அவர் வாசித்த யாழ் பூமியில் மக்களின் யாழாகச் சாபமிடுகிறார்.

அதாவது சுர இசையையும் தாள இசையையும் சமன் செய்து வழி நடத்தும் தலைக் கோலாக , இந்திர சபையில் அந்த சமனைக் கெடுத்த சயந்தன் சாபமிடப்படுவது தான் இங்கு முக்கியமாகும்.

மேலேக் குறிப்பிட்ட தெளிவிற்குப் பின் மேலும் ஆய்வுகள் செய்து ' சமன் செய்து சீர் தூக்கும் கோல்' ஏன் தராசாக இருக்க முடியாது என்றும், அது சுர இசையையும், தாள இசையையும் சமன் செய்து நடனத்திற்கு வழி காட்டும் தலைக் கோலே என்றும் நிறுவியுள்ளேன். (http://musicresearchlibrary.net/omeka/items/show/2510 )

அதன்பின் தமிழில் எழுத்தின் ஒலிக்கும் இசைக்கும் உள்ள தொடர்பையும் ஆய்வு செய்து வெளியிட்டேன். (http://musicresearchlibrary.net/omeka/items/show/2445)

ஆக வாயு புராணம், எனது 'இசை மொழியியல்' என்ற முக்கிய கண்டுபிடிப்புக்கான சிக்னலை எவ்வாறு வழங்கியது, என்பது தெளிவானது. அதேபோல் பெரிய புராணத்தில் வரும் ஆனாயநாயனார் புராணம் குழலைப் பற்றிய அரிய சிக்னல்களைக் கொண்டுள்ள ஒரு புதையலாகும்.

மேலை நாடுகளில் உள்ள நாத்திகர்கள் இத்தகையப் புரிதலுடனேயே கிறித்துவ மத நூல்களை அணுகினர் என்பதற்கான சான்றும் கீழே உள்லது.

we must remember that the Bible is a collection of many books written centuries apart, and that it in part represents the growth and tells in part the history of a people./ we must remember that the Old Testament is a natural production, that it was written by savages who were slowly crawling toward the light. We must give them credit for the noble things they said, and we must be charitable enough to excuse their faults and even their crimes. 
-Robert G. Ingersoll

Note: 'The study of the ancient Indian texts: Probable pitfalls in the western based rationalist approach'; 

http://tamilsdirection.blogspot.sg/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_19.html

Monday, October 28, 2013



    தமிழ்நாடு வீழ்ச்சியும் மீட்சியும்


   வெற்றிக்கான எலும்புத் துண்டு இரகசியம்


எப்பாடுபட்டாலும் சீக்கிரமாக பணம், செல்வாக்கு சம்பாதிப்பது எப்படி ? என்ற வெற்றியின் இரகசியத்தை அறிந்து செயல்படுத்துவதில் தமிழ்நாட்டில் ஒரு கணிசமான மக்கள்  'புத்திசாலிகள்(?) ஆக‌ முயற்சித்து வருகின்றனர்.

சுமார் 10,20,30 வருடங்களுக்கு முன் கள்ளச்சாராயம் காய்ச்சிப் பிழைத்தவர்களாக, அரசுப் பணியில் லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டு பணி  நீக்கத்திற்குள்ளானவர்களாக, கூலி வேலை செய்தவர்களாக, அடியாளாக இருந்தவர்களெல்லாம் இன்று பலநூறு கோடிகளுக்கு அதிபதிகளாக வலம் வருவது அவர்களின் கண்களை உறுத்துகிறது. அந்த 'புதிய' பணக்காரர்களுக்கு திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளில் வி.ஐ.பி ஆக மதித்து கிடைக்கும் 'சமூக கெளரவம்' , அவர்கள் குடியிருக்கும் பல கோடி ரூபாய்கள் மதிப்புள்ள வீடு, பயன்படுத்தும் அதிக விலையுள்ள கார் போன்றவை எல்லாம்  அவர்களின் கண்களை உறுத்துகிறது. 

அந்த வெற்றியின் இரகசியத்தை சுருக்கமாக கீழ்வரும் கதை தெளிவுபடுத்தும்.
கதையில் வரும் ஊர் தமிழ்நாடு என்பதைப் புரிந்து, நம்மைச் சுற்றி நடப்பவைகளை இந்த கதை மூலம் கிடைக்கும் பார்வையில் பார்த்தால் இன்று தமிழ்நாடு எப்படி இருக்கிறது என்பது புலனாகும்.  அந்த வெற்றியை நாமும் நம் வாழ்வில் பெறுவதா? வேண்டாமா? என்பதும் தெளிவாகும். 

மனிதர்கள் எல்லாம் நாய்களைப் போல 

ஒரு ஊரில் மனிதர்கள் எல்லாம் எலும்புத் துண்டுக்காகவே நாய்களைப்போல (நாய்கள் மன்னிக்கவும்) வாழத் தொடங்கினார்கள். அவ்வாறு வாழத் தொடங்கிய பின், தன்னலமற்ற தலைவர்கள் ஒவ்வொருவராக மறைந்தார்கள். அதிக செல்வாக்குள்ள ஒருசில நாய்களே தலைவர்களாக வலம் வந்தார்கள்.

எலும்புத் துண்டு என்பது பணம், செல்வாக்கு, புலனின்பம் போன்றவையே.

மற்ற நாய்களையெல்லாம் தமக்கு வாலாட்டுமாறு செய்து ஒரு சில நாய்கள் மட்டும் எவ்வாறு தலைவர்களாக வளர முடிந்தது என்பது முதலில் புரியாத இரகசியமாக இருந்தது. சில புத்திசாலியான இளம் நாய்கள் அதை அனுபவரீதியாக கற்று சமூக‌ ஏணியில் வேகமாக முன்னேறினார்கள்.  மற்ற சில நாய்கள் அந்த அளவுக்கு முன்னேற 'திறமையின்றி' கீழ்மட்ட‌ம், நடுமட்டம் என்ற அளவுக்கே உயர முடிந்தது. அந்த இரகசியம் வருமாறு. 

முதல் இரகசியம் 

முதலில் பணம், செல்வாக்கு சம்பாதிப்பதற்கான‌  ஏணியில் ஏறுவதற்கான தகுதிகளை அடையாளம் கண்டு, தத்தம் திறமைகளுக்கு ஏற்ற‌வாறு அவற்றை வளர்த்துக் கொள்ள வேண்டும். அடிதடியில் பங்கேற்று அதிக பாதிப்பில்லாமல் தப்பிக்கும் அளவுக்கு சற்று உடல் வலிமையையும், மனவலிமையையும் பெற்று, மனசாட்சியில்லாமல் சகத் தொண்டர்களை அதிக பாதிப்பைச் சுமக்க வைத்து, ஆனால் வெற்றிக்கு தாமே காரணம் என்று,  மற்றவர்களை நம்ப வைக்க வேண்டும். அதற்கு தனக்கு சாதகமாக பேசும் தம்மை விட கீழான நாய்களை, அதற்கேற்ற எலும்புத் துண்டுகளைப் போட்டு தம்மிடம் வைத்துக் கொள்ள வேண்டும்.

அத்துடன் எல்லா வகையான (விலைமாதரை ஏற்பாடு செய்வது, அல்லது ஏற்பாடு செய்யப்பட்டதைக் கூட்டிப் போவது, காண்டிராக்ட், சொத்து விற்பனை போன்றவற்றில் லஞ்சம் வாங்கித் தருவது போன்ற பல) புரோக்கர் தொழில்நுட்பத்தையும் வளர்த்துக் கொள்வது போன்ற கூடுதல் 'தகுதிகளு'டன் ஏணிப்படியில் கால் வைப்பது; அப்பணிகளுக்கு சகதுணை நாய்களை வைத்துக் கொள்வது;  கவர்ச்சிகரமாக பேசுவது, கதை, கவிதை எழுதுவது போன்றவை ஏணியில் வேகமாக ஏற துணை புரியும் கூடுதல் தகுதிகளாகும்.

தமது கிராமத்தில், ஊரில், தெருவில் பொதுப் பிரச்சினைக்கு குரல் கொடுக்கும் இளைஞர்களில் பலருக்கு அவரவர்களுக்கான எலும்புத்துண்டுகளை (குவார்ட்டர், பிரியாணி, செலவுக்கு பணம்) வினியோகித்து சிறிய நாய்களைப் பெறுவது எளிதே.

அதாவது  பெரிய எலும்புத் துண்டுக்கு அலையும் நாய், சில சிறிய எலும்புத் துண்டுகளைத் தம் வசம் வைத்துக்கோண்டு சிறிய நாய்களை தமக்கு சாதகமாக செயல்பட வைக்கவேண்டும்.

  இரண்டாவது இரகசியம் 

தமக்குக் கிடைத்த பெரிய எலும்புத்துண்டுடன் திருப்தி அடையாமல், அதில் சிலவற்றை தம் சக நாய்களுக்கு வினியோகித்து அவற்றில் சில சரியான நாய்களை தமது இடத்திற்கு தகுதியாக்கி, இன்னும் பெரிய எலும்புத் துண்டைப் பெற ஏணியில் அடுத்தடுத்தப் படிகளில் ஏற வேண்டும். அதற்கு அந்தந்தப் படிகளில் உள்ள தம்மை விட பெரிய நாய்களுக்கு சகதுணை நாயாக மேலேக் குறிப்பிட்ட தகுதிகளைப் பயன்படுத்தி முன்னேற வேண்டும். அதாவது அடிதடி புரோக்கர் வேலைகளிலும் சிறிய மட்டத்திலிருந்து பெரிய மட்டத்திற்கு உயர வேண்டும். 

அதாவது தமக்கு கிடைத்த எலும்புத்துண்டு, தகுதிகளுடன் திருப்தி அடையாமல், பெரிய எலும்புத் துண்டு, உயர்நிலைத் தகுதி நோக்கி தொடர்ந்து முன்னேற வேண்டும்.

மூன்றவது இரகசியம்

ஒரு குறிப்பிட்ட மேல் நிலையை அடைந்த பின், மேலும் முன்னேற,  நன்றி மறக்கும் பண்பையும், திரித்த உண்மைகளையும் பொய்களையும் கலந்து தம்மை பெரிய தியாகியாக, போராளியாக, தமிழ் அறிஞராக, ராஜதந்திர நிபுணராக தொடர்ந்து விளம்பரப் படுத்திக் கொள்ள வேண்டும். தம்மை விட மேல் நிலையில் உள்ள நாயின் இடத்தைப் பிடிக்கும் வரையில், அந்த நாயின் வெறுப்புக்கோ கோபத்துக்கோ உள்ளாகாத வகையில் அந்த நாயை துதிபாடிக்கொண்டே மேலே சொன்னவற்றைச் செய்ய வேண்டும்.

அதாவது தமக்கு மேலுள்ள தலைவர் நாயைத் துதிபாடிக்கொண்டே நன்றி மறப்பது, கூசாமல் துரோகம் செய்வது, சுய விளம்பரம் செய்வது ஆகிய திறமைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும். 

நான்காவது இரகசியம் 

 புதிதாக ஒரு நாயைச் சந்தித்தவுடன் சமூக ரீதியில் அந்த‌ நாய் தமக்கு சமமா?, கீழா? மேலா? என்று சில நொடிகளில் எடை போடும் திறமை வேண்டும். மேலான நாய் எனில், அதற்கு உடனே வாலாட்டி, தம்மிடம் அந்நாய்க்குப் பயன்படும் திறமைகள் இருப்பதை உணர்த்தி நெருக்கமாக வேண்டும். கீழான நாய்களை தமக்குப் பயன்படும் என்றால், தம்மிடம் அந்நாய்களுக்கான எலும்புத் துண்டுகள் இருப்பதை உணர்த்தி வாலாட்ட வைக்க வேண்டும். பயன்படாத நாய்களை உடனே தள்ளி வைக்க வேண்டும்.சமமான நாய் எனில் அதை முடிந்த அளவுக்கு நம்மை விட கீழ் என்று மட்டம் தட்டுவதில் நிபுணராக இருக்க வேண்டும். 

அதாவது புதிதாக சந்திக்கும் நாயை எடை போட்டு தமது நலனுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். 

ஐந்தாவது இரகசியம் 

தாம் சந்திக்கும் எந்த தவறுக்கும், பிழைக்கும் தாம் பொறுப்பல்ல என்ற 'தன்னம்பிக்கை'யும், மனசாட்சியின்றி கூசாமல் தமது கஷ்டங்களுக்கும், தோல்விகளுக்கும் மற்றவர்களே காரணம் என்று அடித்து பேசும் 'மன உறுதியும்' வேண்டும். தமது எஜமான நாய்கள் நம்பும் அளவுக்கு இவற்றில் திறமைசாலிகளாக இருக்க வேண்டும். 

இரண்டும் ஒன்றாக –two in one 

இப்படிப்பட்ட நாய்கள் நம்மிடம் இல்லாத எலும்புத் துண்டு வேறு நாய்களிடம் இருக்கிறதா என்பதிலேயே தமது வாழ்வின் கவனத்தை செலுத்தி, அதைப் பெறுவதற்காக வாழ்வதே 'வாழ்வின் இலட்சியம்' என்பதில் உறுதியுடன் இருக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் எந்த பிரச்சினை வெளிப்பட்டாலும், அதை தமது எலும்புத் துண்டு வெற்றிக்குப் பயன்படுத்திக் கொள்ளும் அளவுக்கு விழிப்புடன் இருப்பதும் அவசியமே. தமது ஊழல் குறுக்குவழி பணத்தின் ஒரு பகுதியை, 'முதலீடாக' 'நன்கொடை' வழங்கி, 'சாதி ஒழிப்பு, தமிழ் உணர்வு, ஆன்மீகம்' போன்ற, அமைப்புகளின் புரவலராக வலம் வருவதும் அந்த செயல்நுட்பத்தில் அடங்கும்.

தமக்குப் பயன்படாதவர்கள் எவ்வளவு பெரிய அறிஞராகவோ, பொதுத்தொண்டராகவோ, தியாகியாகவோ,நேர்மையானவராகவோ இருந்தாலும் அவர்களை 'முட்டாளாகவும், கோமாளியாகவும், ஏமாளியாகவும்' கருதி தமக்குள் எள்ளி நகையாடுவது இந்நாய்களின் விசேடப் பண்பாகும்.

இந்த வெற்றி தொழில்நுட்பத்தில் ஒரே நேரத்தில் எலும்புத் துண்டு தேடும் நாயாகவும், தம்மை விட கீழான நாய்களுக்கு பொருத்தமான எலும்புத் துண்டுகள் விநியோகிக்கும் எஜமானனாகவும் இரண்டும் ஒன்றாக –two in one - ஒரே நேரத்தில் (simultaneous) இருக்கும் திறமை வேண்டும். 

அவரவர் மனசாட்சிக்கே வெளிச்சம் 

நாம் மேலேக் குறிப்பிட்ட நாய்களாக வாழ்கிறோமா? அல்லது உண்மை, நேர்மை, அன்பு, தொண்டு ஆகிய‌ பண்புகள் கொண்ட மனிதர்களாக வாழ்கிறோமா? என்பது அவரவர் மனசாட்சிக்கே வெளிச்சம். 

தமிழ்நாட்டில் கிராமம், நகரம் அனைத்திலும் நாய்க் குடும்பங்கள் போல் வாழும் குடும்பங்களில் உள்ள முதியவர்களின் நிலை கற்பனை செய்ய முடியாத அளவிற்கு மோசமாகி வருகிறது. நாயாக உள்ள பிள்ளைகள் மதிக்கும் அளவுக்கு, புத்திசாலித்தனமாக 'செல்வம்' வைத்துள்ள முதியவர்களைப் அப்பிள்ளைகள் மிகவும் மதித்து தாங்குகிறார்கள். தமது 'லஷ்மண் கோடு' எல்லை தெரியாமல், பிள்ளைகள் விஷயத்தில் மூக்கை நுழைத்து அவமானப்பட்டும், 'நாய்கள்' அவர்கள் என்று 'தெளிவடையாமல்' 'பிரச்சினையாக' வாழும் முதியவர்களும் இருக்கிறார்கள். நகரத்தில் உள்ள இட நெருக்கடியையும், தமது பிள்ளைகளின் 'நுகர்வு கலாச்சாரத்தையும்'(?) புரிந்து கொண்டு, சகல வசதிகளுடைய முதியோர் விடுதியை தேர்ந்தெடுத்து, பணம் கட்டி, அங்கு வாழ்ந்து கொண்டு, தமது பிள்ளைகளுடன் நல்லுறவில் உள்ள முதியவர்களும் இருக்கிறார்கள். திருக்குறள் 813 படி, நட்பு, குடும்பம் உள்ளிட்ட எல்லா உறவுகளுமே 'லாப நட்டம்' பார்த்துப் பழகும் 'கள்வர்களாக' மாறி வரும் காலக்கட்டம் இது. இச்சூழலில் நமது நல்ல பண்புகளை இழக்காமல், சுயமரியாதையோடு வாழ்வது ஒரு சவால் தான். முடியாதவர்கள் தற்கொலையை நாடும் போக்கும் தமிழ்நாட்டில் துவங்கியுள்ளது. நாய்க்குடும்பங்கள் போல் இல்லாமல்,  நல்ல பாரம்பரியத்துடன் அன்பின் அடிப்படையில் இந்த சூழலிலும் வாழும்  குடும்பங்கள் தெய்வக் குடும்பங்கள் ஆகும். 

அன்பின் அடிப்படையில் இருக்க வேண்டிய குடும்ப உறவுகள், மனித உறவுகள் எல்லாம் எலும்புத் துண்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நாய்க் குடும்பங்கள் போல் வாழும் நாடாக தமிழ்நாடு வளரலாமா? அதற்கு 'பெரியார் தந்த புத்தி' பங்களிப்பு வழங்கலாமா?

எப்போது துவங்கி எப்படி வள்ர்ந்தது? 

இந்த போக்கு தமிழ்நாட்டில் எப்போது துவங்கி எப்படி வளர்ந்தது?

இந்த போக்கை வெளிப்படுத்தும் வெற்றிகரமான திரைப்படமாக 'சூது கவ்வும்' வெளிவந்தது. அதைத் தொடர்ந்து " குற்றங்களே குணங்களாகிவிட்டன!" ( தினமணி கட்டுரை) என்ற தலைப்பில் தமிழ் எழுத்தாளர்  திரு. பழ. கருப்பையா மேலேக் குறிப்பிட்ட கேள்விக்கான விடையை எழுதியுள்ளார்.

1967‍இல் ஏற்பட்ட ஆட்சி மாற்றம் தமிழ்நாட்டில் ஒரு சமூக முன்னேற்றத்தை ஏற்படுத்தும் என்று தமிழ் ஆதரவாளர்கள் எதிர்பார்த்தார்கள். முதல்வர் பொறுப்பை ஏற்றது முதல் இறக்கும் வரை தனது கட்சியினரின் சுயநலப் போக்கினால் முதல்வர் அண்ணா எவ்வளவு மன உளைச்சலுகுள்ளானார் என்பது ஆட்சிமாற்றத்தின் தன்மையைக் கேள்விக்குறியாக்கியது.  அதன்பின் மேலேக் குறிப்பிட்ட வெற்றிக்கான தொழில்நுட்பம் விதை கொண்டு வேகமாக வளர்ந்தது. அந்த மாற்றங்கள் திரைப்படம் வழியே எவ்வாறு பிரதிபலித்து என்பதையும், இன்று தமிழ்நாட்டில் வெற்றிப்படமாக வெளிவந்த 'சூது கவ்வும்'படம் இன்றைய நிலையைப் பிரதிபலித்துள்ளது பற்றியும் தமது கட்டுரையில் பழ.கருப்பையா விளக்கியுள்ளார். தனிப்பட்ட முறையில் தனிமனித ஒழுக்கத்தில் குறை சொல்ல முடியாத திராவிட இயக்க தலைவர் பெரியாரில் துவங்கிய திராவிட இயக்கத்தின் திரைப் படங்கள் பற்றி விவாதித்து , "சூது கவ்வும்' படத்திற்கான கதைக்களம் கருணாநிதி உருவாக்கிய தமிழ்நாடு" என்று பழ.கருப்பையா அக்கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார். 

நோய் பிடித்த தாவரத்தின் நோயாக, அதன் ஆணி வேரையே கருதிய வைத்தியம் 

தனிமனித அளவில் பாராட்டுக்குரியவர்களும் எதையும் தவறாகத் தொடங்கினால், அதன் பயணத்தில் தவறான மனிதர்கள் தலையெடுத்து மிகவும் பாதகமாகவே முடியும். தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழியாகவும்,  தமிழ் பாரம்பரியத்தை  தமிழரின் கேடாகவும் கருதிய பெரியாரின் முயற்சியானது, நோய் பிடித்த தாவரத்தின் நோயாக அதன் ஆணி வேரையே கருதி, அகற்றிய‌ வைத்தியமாகிவிட்டது . தாய்மொழி வழிக் கல்வி பற்றிய உலக ஆய்வுகளை, ஓரங்கட்டி, பண்பாட்டு ஒழுக்கம்/ படைப்பாற்றல்/சுய உருவாக்கம் ஆகியவற்றை இழந்து, ஆங்கில் வழிக் கல்வி என்ற சூது, தமிழ்நாட்டைக் கவ்விய விளைவில் அது முடிந்தது.
மேலே சொன்னபடி, தனிமனித ஓழுக்கத்தில் பெரியவர்களான பெரியார், ராஜாஜி (தி.மு.கஆட்சியைப் பிடிப்பதற்கும், கருணாநிதி முதல்வராவதற்கும் துணையானவர்) தொண்டுகளின் விளைவாக, இந்தியாவிலேயே , ஆதிக்க அளவில், பாரம்பரிய பண்பாட்டு ஓழுக்கத்தை அகற்றி, திரிந்த மேற்கத்திய ஒழுக்கத்துடன் அடிப்படைக் கல்வியில் 'ஆங்கில வழி' சூதுக்கு இரையாகி, பிற மாநிலங்களுக்கு 'தவறான முன்னுதாரணமாக' விளங்கி வருவது, தமிழ்நாடு மட்டுமே. உலகிலேயே தாய்மொழிவழிக் கல்வியின் பலன்களை 'அதிவேகமாக‌'  இழக்கத் தொடங்கியிருப்பதும் தமிழ்நாடு மட்டுமே.

அதன் விளைவாக, அறிவு நேர்மை, சமூகப் பொறுப்பு ஆகியவற்றை ஓரங்கட்டி, யாரை ஏணியாகப் பயன்படுத்தி அதிக செல்வம், செல்வாக்கு பெறுவது என்ற ‘வெற்றிக்கான எலும்புத் துண்டு செயல்நுட்ப’ ஆதிக்கத்தில் தமிழ்நாடு சிக்கியுள்ளது. ஆக உடலுழைப்பு, அறிவு உழைப்பு போன்றவற்றில் தமிழரல்லாதாரை நம்பி இயங்க வேண்டிய நிலைக்கு தமிழ்நாடு வந்து விட்டது. திருக்குறளில் ( பொருட்பாலில், காமத்துப் பாலில் அல்ல)  'வரைவில் மகளிர்' ( விலை மாதர்)அதிகாரம் விளக்கும் செயல் நுடபமே இது. 

'இருட்டறையில் பிணம்'(திருக்குறள் 913) தழுவியவர்கள் பெரும்பான்மையார்களாக வாழ்வதை 'சூது கவ்வும்' திரைப் படமாக வெளிப்படுத்திய இளைஞர்களும், அதை " குற்றங்களே குணங்களாகிவிட்டன!" என்று அடையாளம் காட்டிய பழ.கருப்பையா அவர்களும் பாராட்டுக்குரியவர்களே. 

அதாவது மேலேக் குறிப்பிட்ட வெற்றி தொழில்நுட்பத்தில் ஒரே நேரத்தில் எலும்புத் துண்டு தேடும் நாயாகவும்,எலும்புத் துண்டுகள் விநியோகிக்கும் எஜமானனாகவும் இரண்டும் ஒன்றாக –two in one - இருக்கும் திறமை வேண்டும் என்பதைப் பார்த்தோம். கூடுதலாக அவர்கள் ஒரே நேரத்தில் 'வரைவில் மகளிராகவும்'(எலும்புத் துண்டு தேடும் நாயாகவும்,),  'இருட்டறையில் பிணம் தழுவியவர்’களாகவும்(எஜமானனாகவும் )  இரண்டும் ஒன்றாக –two in one - தமிழ்நாட்டில் 'வி.ஐ.பி' க்களாக வாழ்வதும் இதனால் தெளிவாகிறது. 

தமிழ்நாட்டின் நிலைமை 

இத்தகையோர் செல்வாக்கில் உள்ள தமிழ்நாட்டின் நிலைமை கீழ்வருமாறு இருப்பதில் வியப்புண்டோ?

படிக்க மாண‌வரின்றி ஆயிரக்கணக்கான அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. தமிழ் பயிற்று மொழியாக நீடிக்குமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

தமிழரின் வரலாற்று சான்றுகளான பல கல்வெட்டுகள் குவாரிகளில் அழிக்கப்பட்டு வருகின்றன.

தமிழ் பேச்சு வழக்கிழந்து, ஆங்கிலமும் தமிழும் கலந்த தமிங்கிலீஸ் செல்வாக்குடன் வளர்ந்து வருகிறது.

மேலே குறிப்பிட்டவற்றுடன் கூடுதலாக தமிழ் சம்பந்தப்பட்ட குழப்பங்கள் ( பல கருத்து வேறுபடுகளுடன் தனித் தமிழ், திராவிட இயக்கத் தமிழ், பொதுவுடமையாளர் தமிழ், இவை சாராத எழுத்தாளர் தமிழ், பொது மக்கள் தமிழ்) காரணமாக , தமிழ் தனது தகவல் பரிமாற்ற வலிமையை தமிங்கிலீஸிடம் இழந்து வருவதும் ஒரு கொடுமையாகும்.

கணையாழி போன்ற இலக்கிய இதழ்களிலும், சுஜாதா உள்ளிட்ட பிரபல எழுத்தாளர்களின் படைப்புகளிலும் இலக்கணத்தின் செல்வாக்கும் மிகவும் பலகீனமாக இருப்பதை மறைந்த தமிழ் அறிஞர் திரு.முருகன் வெளிப்படுத்தியுள்ளார். (மொழிப் பார்வைகள் பக்கம் 56-57)

'தற்காலத் தமிழ்' புலமையாளர்களே பல்கலைக்கழகங்களில், கல்லூரிகளில் தமிழ்த் துறையை நிரப்பி வருகின்றனர். பழந்தமிழ் இலக்கியங்கள் 'லத்தீன்' வழியில் நூலகக் காட்சிப்பொருட்களாக மாறும் வாய்ப்பும் உள்ளது.

தமக்கு கிடைக்கும் சான்றுகளின் வரைநிலைகள் பற்றி கவலைப் படாமல் உணர்வு பூர்வமாக தமிழ் அராய்ச்சிகள் பெரும்பாலும் நடைபெற்று அபத்தமான முடிவுகள் வெளிவரும் போக்கும் உள்ளது.(‘தமிழாராய்ச்சியில் நடைபெறும் தவறுகளும், தமிழுக்கான விடுதலையும்’- http://tamilsdirection.blogspot.in/2013/06/normal-0-false-false-false-en-us-x-none_3429.html  font in TM TTVALLUVAR) 

 
'ராஜா அம்மணமாக இருக்கிறார்' என்று சின்னப் பிள்ளை கூட சொல்ல பயப்படும் அளவுக்கு, செல்வம் மற்றும் செல்வாக்கின் துணையோடு தமிழ்நாட்டில் தமிழ் உள்ளிட்ட எந்த துறையிலும் யார் வேண்டுமானாலும் என்ன  'சாதனை'யும் புரியலாம், அதற்கு போட்டி போட்டுக் கொண்டு பாராட்டுதல்களும் குவியும் என்பது தான் இன்றைய நிலை. 'திராவிட ஆட்சிகளின்' விளைவாக உருவான புதுப்பணக்காரர்களில், 'நக்சலைட், தனி தமிழ்நாடு, தனி ஈழம், தமிழ் மானம், தலித், பெரியாரியல், இந்துத்வா, முஸ்லீம், ஆன்மீகம்' என்று பல முகமூடிகளுடன் 'வலம்' வரும் பொதுவாழ்வு வியாபாரிகளுக்கு, அவரவர் 'தகுதி, திறமைகளுக்கு' ஏற்ப, 'நன்கொடை' வழங்கி, தமது 'சமூக பாதுகாப்பு கவசத்தை' உருவாக்கி, 'செல்வாக்குடன்' 'வாழ்வியல் புத்திசாலிகளாக' வளர்ந்து வருபவர்கள் யார்? யார்? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

இந்த நிலை மாறுமா? மாற வாய்ப்புண்டா? 

பத்திரிக்கைகளிலும் தொலைக் காட்சிகளிலும் படிக்க பண உதவி கேட்கும் ஏழை மாணவர்களுக்கு விளம்பரமின்றி உத்விகள் கிடைத்து வருவது தமிழ்நாட்டில் ஒரு புதிய போக்காகும்.

படிக்க மாணவரின்றி பல அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வரும் சூழலில், மனித தெய்வங்கள் போன்ற சில அசிரியர்களின் விளம்பரமற்ற உழைப்பால், தனியார்ப் பள்ளிகளையும் விஞ்சி, மாணவர்கள் போட்டி போட்டு சேரும் அரசுப் பள்ளிகளும் தமிழ்நாட்டில் இருப்பதும் ஒரு புதிய போக்காகும்.

உலக அளவில் பல ஆய்வுகள் வெளிப்படுத்தியபடி, விளையாட்டுப் பள்ளி முதல் 5ஆம் வகுப்பு வரையிலான அடிப்படைக் கல்வி தாய்மொழியில் இருந்தால் தான் குழந்தைகளின் புலன் உணர்வு அறிவு வளர்ச்சி நன்றாக இருக்கும் என்ற தெளிவுள்ள புத்திசாலிப் பெற்றோர்கள்,  தாமதமின்றி அவ்வழியில் தமது குடும்பப் பிள்ளைகளைப் படிக்க வைக்க வேண்டும் என்பது தொடர்பான கட்டுரைக்கு சமூகத்தில் படித்த மேல்தட்டினர் காட்டிவரும் ஆர்வம் நல்ல மாற்றத்திற்கான அறிகுறியாகும். 

ஆட்சி மாற்றம் ‍ - நாய்களுக்கு திண்டாட்டம் 

தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின் , கடந்த ஆட்சியில் வரைமுறையில்லாமல் ஆட்டம் போட்ட நாய்கள் வாலை சுருட்டிக்கொண்டு வாழ்வது, பொதுமக்களுக்கு நாய்கள் பற்றிய பயத்தை பெருமளவு குறைத்துள்ளது.

குவார்ட்டர், பிரியாணி, செலவுக்குப் பணம் என்ற முறையில் பெருங்கூட்டம் கூட்டப்பட்டு வந்த தமிழ்நாட்டில், அவையெல்லாம் இல்லாமல், நுழைவுச் சீட்டு பண‌ம் கொடுத்து வாங்கி, அவற்றை விட பெரிய கூட்டம் திருச்சியில் மோடிக்கு கூடியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. அக்கூட்டத்தில் பெருமளவு படித்த இளைஞர்களும், பெண்களும், குடும்பங்களும் இருந்ததும் கவனிக்கத் தக்கது. மோடியைப் பிரதமர் வேட்பாளராக அறிவிப்பதற்கு பா.ஜ.கவிலேயே கணிசமான எதிர்ப்பு வெளிப்பட்ட சூழலில், தமிழ்நாட்டில் வெளிப்பட்ட  இந்த புதிய போக்கு இந்தியாவின் கவனத்தையே ஈர்த்தது. ஆனால் தமிழக பா.ஜ.கவானது, மோடி அலையின் தமிழக வீச்சு பற்றிய புரிதலின்றி, 'திராவிட' பாணி 'உணர்ச்சிபூர்வ' நோயில் சிக்கி, பயணிக்கிறதா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 
(http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html) தமிழ்நாட்டில் நிகழ்ந்துள்ள அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமுமே (depoliticizing) ,கட்சி, கொள்கை தொடர்பின்றி, நடுத்தர, ஏழை மக்களிடையே தமிழக முதல்வர் ஜெயலலிதாவிற்குள்ள செல்வாக்கிற்கும், மாணவர்களிடையே பிரதமர் மோடிக்குள்ள செல்வாக்கிற்கும், காரணங்களாகும். ('மோடி ஒருவராக நாட்டின் போக்கை மாற்ற முடியுமா?';
http://tamilsdirection.blogspot.com/2015/01/normal-0-false-false-false-en-us-x-none_16.html)



இயற்கையில் எல்லாமே சுழற்சி அடிப்படை 

இயற்கையில் எல்லாமே சுழற்சி அடிப்படையில் இயங்குபவையே. உச்சத்திற்கு சென்ற பின் கீழிறங்குவதும், கீழ்மட்டத்திற்கு சென்ற பின் மேலெழுவதும் இயற்கையே. தமிழ்நாட்டில் மனித 'நாய்கள்'உச்ச நிலையை அடைந்து விட்டன. கட்சிகளுக்கும் மக்களுக்கும் சம்பந்தமில்லாமல், தத்தம் பிரச்சினைகளுக்கு மக்களே துணிச்சலுடன் போராடத் தொடங்கி விட்டனர். மேலேக் குறிப்பிட்ட புதிய போக்குகள் தமிழ்நாட்டை அவமானகரமான வீழ்ச்சியிலிருந்து மீட்கும் காலம் அதிக தொலைவில் இல்லை என்பதை உணர்த்துகின்றன. 'நாய்களாக' பெருமிதத்துடன் வாழ்ந்து வருபவர்கள் எல்லாம், மனிதர்களாக வாழ்பவர்களைக் கண்டு வெட்கப்பட்டு ஒதுங்கும் காலமும் அதிக தொலைவில் இல்லை. இன்று 'வெற்றியின் இரகசியமாக' இருப்பதானது, விரைவில் 'இழிவின் இலக்கணமாக', மக்களால் கருதப்படும் காலமும், அதிக தொலைவில் இல்லை.

குறிப்பு:
மாட்டிக் கொள்ளாமல் ஆட்கடத்தல்(kidnapping) மூலம் பணம் சம்பாதிக்கும் தொழில்நுட்பத்தை வெளிப்படுத்திய திரைப்படம் 'சூது கவ்வும்'. அதே போல் ‘வெற்றிக்கான எலும்புத் துண்டு இரகசிய’த்தை வெளிப்படுத்த, அத்திரைப்பட இளைஞர்கள் போன்று யாரும் முயன்றால்,அதன் திரைக்கதை உருவாக்கத்திற்கு ஆலோசகராக (Resource Person) நான் செயல்பட முடியும்.