Thursday, December 25, 2014



          இந்திய செவ்விசையில் சுருதிச் சிக்கல்கள்

                                (Pitch Problems in Indian Classical Music)


உலகில் எந்த இசைக்கும் அடிப்படைகளாக சுருதியும்(pitch), சுருதி அமைப்பும்(tuning system)  உள்ளன.

இசைக்கச்சேரி தொடங்கும் முன், இசைக்கருவிகளில் ‘சுருதி சேர்த்தல்’ (tuning) எவ்வளவு சரியாக அமைக்கப்படுகிறதோ, அதைப் பொறுத்தே, அந்த இசை நிகழ்ச்சியில் 'சுருதி சுத்தமாக' (pitch accuracy) இசை நிகழ்ச்சி நடைபெறும்.
என்ன ராகத்தில் இசை நடைபெறப் போகிறதோ, அந்த ராகத்தில் இடம் பெறும் இசைச் சுரங்களுக்கான ' இசை இடைவெளிகள்' (music intervals) மற்றும் சுருதித் தீர்மானிப்பு (pitch standard) ஆகியவை,  'சுருதி சேர்த்தலில்' முக்கிய பங்கு வகிக்கின்றன.

சுருதி சேர்த்தபின், இசை நிகழ்த்தும்போது இசைவாணர்கள், அந்த குறிப்பிட்ட இசை இடைவெளிகளோடு நின்றுவிடாமல், நிகழ்த்தப்படும் இசைக்கு தேவைப்படும் நுட்பமான அழகியல் உணர்வுகளை வெளிப்படுத்த, அந்த சுருதிகளுக்கு மேலும் கீழும் உள்ள நுண்ணிய இடைவெளிகளுக்கும் சென்று, இசை எழுப்புவார்கள்.அவ்வாறு ஒரு மெலடிக்கான(melody) சுரங்களை இணைத்து இசை எழுப்பும் நுண்ணிய இசைப்பணிக்கு பயன்படும் இசை இழைகளைப்(Musical threads) பற்றிய அரிய தகவல்கள் பழந்தமிழ் இலக்கியங்களிலிருந்து கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. ( Published in Sangeet Natak Vol XLII, Number 3,2008:’Musical Threads – A New Musicological Concept discovered from the Ancient Indian Music’)

சுருதி(pitch) என்பது, சுருதித் தீர்மானிப்பு(pitch standard) அடிப்படையிலும்,சுருதி அமைப்பின்(Tuning system)  அடிப்படையிலும்,  ஒரு இசைச் சுரத்திற்கான அதிர்வு எண் (frequency) காரணமாக, செவியில் ஏற்பட்டும் ஒரு பண்புரீதியிலான ஓசை உணர்வு (sensory characteristic)  ஆகும்.( Pitch can be defined as a sensory characteristic arising out of the frequency assigned to a note in a musical scale. The frequency assigned to a music note is based on the tuning system and pitch standard.)

தற்போது வழக்கத்தில் உள்ள சுருதிப்பெட்டியும், ஆர்மோனியமும் மேற்கத்திய இசையிலிருந்து, காலனிக் கட்டத்தில் கிறித்துவ பாதிரியார்களால் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டதாகும்.அந்த அறிமுகத்திற்குப்பின் தான், கர்நாடக இசையில், ஆர்மோனிய அடிப்படையில், 'கட்டை' என்ற இசைக்கருத்தும், இந்துஸ்தானி இசையில் 'வெள்ளை -கறுப்பு' (white-Black) என்ற இசைக்கருத்தும் அரங்கேறின.

1939இல் லண்டனில் கூடிய சர்வதேச இசை மாநாடு உலகிற்கான சுருதித் தீர்மானிப்பை முடிவு செய்து அறிவித்தது. அதுவரை மேற்கத்திய நாடுகளில் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு மதிப்பில் சுருதித் தீர்மானிப்பு இருந்தது. எனவே 1939க்கு முன், இந்தியாவிற்குள் நுழைந்த ஆர்மோனியமும், சுருதிப்பெட்டியும், அதை அறிமுகப்படுத்திய கிறித்துவப் பாதிரியார்கள் எந்தெந்த மேற்கத்திய நாடுகளில் இருந்து வந்தார்களோ,  அந்தந்த நாடுகளில் இருந்த சுருதித் தீர்மானிப்பு மதிப்புகளுடன் இந்தியாவிற்குள் நுழைந்தன. இவை பற்றிய சான்றுகளுக்கு: Chapter 1, ‘Ancient Music Treasures – Exploration for New Music’ by Dr.Vee

இந்திய செவ்விசையாக, கர்நாடக இசையும், இந்துஸ்தானி இசையும் உள்ளன.

கர்நாடக இசைக்கும், இந்துஸ்தானி இசைக்கும்  உள்ள சுருதி அமைப்பும்(tuning system), சுருதித் தீர்மானிப்பும்(pitch standard) யாவை?

சுருதிப்பெட்டியின் அறிமுகத்திற்கு முன், கர்நாடக இசையில் இருந்த இசைப்புலமை மிக்க ஆசிரியர்கள், தம்பூராவில் தமது 'பாணிக்கான' சுருதி அமைப்பையும், சுருதித் தீர்மானிப்பையும், அடிப்படைகளாகக் கொண்டு, சுருதி சேர்த்து, இசை கற்பித்தார்கள்;இசை நிகழ்த்தினார்கள்.

அது போலவே சுருதிப்பெட்டியின் அறிமுகத்திற்கு முன், இந்துஸ்தானி இசையில் இருந்த இசைப்புலமைமிக்க ஆசிரியர்கள், தம்பூராவில் தமது 'கரணாவிற்கான‌'(gharana)  சுருதி அமைப்பையும், சுருதித் தீர்மனிப்பையும், அடிப்படைகளாகக் கொண்டு, சுருதி சேர்த்து, இசை கற்பித்தார்கள்;இசை நிகழ்த்தினார்கள். இசைத் தகவல் தொழில் நுட்பம் (Music Information Technology) அடிப்படையில், அந்த இசை ஆசான்களின் ஒலிப்பதிவுகளிலிருந்து, அவர்கள் பின்பற்றிய சுருதித் தீர்மானிப்பையும்,சுருதி அமைப்பையும் கண்டுபிடித்து பாதுகாப்பது சாத்தியமே. அதற்கான முயற்சியில் எவரும் ஈடுபட்டால், எனது ஆய்வு ஆலோசனையை நான் வழங்க இயலும்.

ஆர்மோனியமும், அதன் அடிப்படையில் உருவான சுருதிப் பெட்டியும் மேற்கத்திய இசையில் உள்ள ' சமச் சுருதி இடைவெளி'(Equal Temperament)  என்ற சுருதி அமைப்பின் (Tuning System) அடிப்படையில் உருவானவையாகும்.

மேற்கத்திய இசையில் கிரகபேதம்- Modulation - (ஒரு ராகத்திலிருந்து, இன்னொரு ராகத்திற்கு ஒரே பாடலில்/composition மாறுவது)  சிக்கலை வெற்றிகரமாக தீர்த்த அந்த Equal Temperament ஆனது, அதற்கு விலையாய், இசையில் இருந்த இனிமை தரும் இடைவெளிகளைப் பாதித்தது. எனவே அதைப் பற்றி விஞ்ஞானி  நியூட்டன் கீழ்வரும் கருத்தை வெளியிட்டார்.

“ஒரு நல்ல வியமானது நீரில் சிக்கி,வண்ணங்கள் மங்கி இருப்பதைப் பார்க்கும் உணர்வு போன்றதே, ஒரு நல்ல இசையை   Equal Temperament-இல் கேட்கும் உணர்வு ஆகும்.”

“The alterations of the modernists rob music of its real power. To those who know better, equal temperament's compromised tuning is as ungrateful to the ear as "soiled and faint colors are to the eye." . . .
-pp24-25 - Stuart Isacoff, Temperament, Alfred A. Knopf, New York, 2001.

ஒரு ராகத்திலிருந்து/ஸ்கேலிலிருந்து(scale in western music), இன்னொரு ராகம்/ஸ்கேல் வருவிக்கும் முறை கிரக பேதம்/ modulation ஆகும். ஒரு பாடலை/ இசைக்கும் முன், அந்த பாடலின் ராகத்திற்கான/scale சுரங்களுக்கு, சுருதிசேர்த்தல்/tuning  செய்ய வேண்டும். இன்னொரு ராகத்தில் பாடலை/composition இசைக்கும் முன், அந்த பாடலின் ராகத்திற்கான/scale சுரங்களுக்கு சுருதிசேர்த்தல்/tuning  செய்ய வேண்டும். ஒரே பாடலில்/same composition,      ஒன்றுக்கும் மேற்பட்ட இராகங்கள்/scales இடம் பெறும்போது, அப்பாடலில் முதல் ராகத்திலிருந்து/scale    அடுத்த ராகத்திற்கு/scale மாறும்போது, முதல் ராகத்துக்கான/scale சுருதி சேர்த்தல் நிலையிலிருந்து மாறி, பாடலை இசைத்துக் கொண்டிருக்கும் போதே, அடுத்த ராகத்திற்கான/scale சுரங்களுக்கு சுருதிசேர்த்தல்/  செய்ய வேண்டும். சுரத்தீர்மானிப்பு (pitch standard), சுருதி அமைப்பு(tuning system)  ஆகியவற்றில் துல்லியமாக இசைப்பவர்களுக்கு, அதிலுள்ள சிக்கல் தெரியும்.

திருவையாறு தியாகராஜர் உற்சவத்தில் இறுதி நிகழ்ச்சியாக 'பஞ்ச ரத்தின கீர்த்தனைகள்' இடம் பெறும். அதில் ஒரு ராகத்திலிருந்து அடுத்தடுத்து மேலும் நான்கு ராகங்களுக்கு மாறும், கிரகபேதம்-Modulation- சுருதி சேர்த்தல் மாற்றங்கள்,  நடைபெறுகின்றன‌. அது போல இந்திய செவ்விசையில் இந்துஸ்தானி இசையிலும், கர்நாடக இசையிலும் காலனியத்திற்கு முன், கிரகபேதப் Modulation  பாடல்கள் இசைக்கப்பட்டதற்கு சான்றுகள் இருக்கின்றனவா? இருந்தால், அவற்றில் இசை இடைவெளி சிக்கல்களை (problems in the musical intervals)  எவ்வாறு தீர்த்தார்கள்? இல்லையென்றால், கால‌னியக் கட்டத்தில், இந்திய அரச 'தர்பார்களில்'‍,  மேற்கத்திய இசையில் -கிரகபேத இசை  -compositions with modulation - ஒலித்ததை முன்மாதிரியாகக் கொண்டு, அது போல இந்திய செவ்விசையிலும் அறிமுகப்படுத்தியுள்ளார்களா? (குறிப்பு கீழே) வீணையில் உள்ள அசையா மெட்டுக்கள்(Fixed Frets) , கிதாரைப் போல Equal temperament    முறையில் அமைந்துள்ளனவா? இல்லையென்றால், எந்த சுருதி அமைப்பில் (tuning system)  அந்த அசையா மெட்டுக்கள் அமைந்துள்ளன? சித்தாரில் அசையும் மெட்டுக்கள்(movable frets)  இருப்பதால், கிரகபேத Modulation  இசையை அதில் இசைக்க முடியாது என்பதை மறுக்க முடியுமா?  போன்ற ஆய்வுகளே கால‌னியத்தின் பாதிப்புகளிலிருந்து இந்திய இசையை மீட்கும்.

கர்நாடக இசையில், ஆர்மோனிய அடிப்படையில், 'கட்டை' என்ற இசைக்கருத்தும், இந்துஸ்தானி இசையில் 'வெள்ளை -கறுப்பு' (white-Black) என்ற இசைக்கருத்தும்   இந்திய இசையில் Equal Temperament -இன் மறைமுக ஆதிக்கத்திற்கும், அதன் மூலம் சுருதிச் சிக்கல்களுக்கும்(pitch problems)  வழி வகுத்தன.  (Indirect invasion of Equal temperament into Indian music, leading to the pitch problems)

எலெக்ட்ரானிக் கருவிகளுக்கு முன், மேற்கத்திய இசையில் சுருதி சேர்க்க(tuning)  உதவும் சுருதித்தீர்மானிப்பு கருவியாக(pitch guidance device),  சுருதிக் குழல் (Pitch Pipe)  பயன்படுத்தப்பட்டது. வயலின்,வீணை போன்ற நரம்பிசைக் கருவிகளில், இசைக்கும் முன், சுருதி சேர்க்க வேண்டியது அவசியமாகும். ஆனால் குழல் போன்ற காற்றிசைக் கருவிகளில், அக்கருவிகளை உருவாக்கும் போதே, சரியான சுருதியுடனேயே வடிவமைக்கப்படுகின்றன. எனவே நரம்பிசைக் கருவிகளைப் போல, அவற்றிற்கு சுருதி சேர்க்க வேண்டிய தேவை கிடையாது. அவை சுருதித்தீர்மானிப்பு கருவியாகவும் (pitch guidance device) செயல்படலாம்.

தொன்மை இந்தியாவில்(Ancient India)  சுருதி அமைப்பும்(tuning system),சுருதித் தீர்மானிப்பும்(pitch standard) எவ்வாறு இருந்தன?

தொன்மை இந்தியாவில் காளிதாசர் காலத்தில் சுரத் தீர்மானிப்பு கருவியாக குழல் செயல்பட்டதற்கான சான்று ‘The Music of India: A Scientific Study’ (page 54- Munshiram Manoharlal Publishers Pvt Ltd  NewDelhi 1981) என்ற நூலில் உள்ளது. (“However, the flute seems to have been used as a drone (sthanaka) from at least the time of Kalidasa.” (vide V.Raghavan, Music in Sanskrit Literature, Qly,Jl, Nat. Centre for Perf. Arts, Bombay, VII, no.1, 1979)

அதே போல், சிலப்பதிகாரத்தில் சுரத் தீர்மானிப்பு கருவியாக, குழல் செயல்பட்டதற்கான சான்று உள்ளது. வங்கியம் எனப்படும் ஒரு குழல் வகை இசைக்கருவியில் நீளம், துளைகளின் அளவுகள் பற்றிய சூத்திரம் 'பஞ்ச மரபு ' என்ற நூலிலிருந்து, சிலப்பதிகார உரையில் மேற்கோளிட்டு விளக்கியுள்ளனர். அந்த அளவுகளை அடிப்படையாகக் கொண்டு, வாயுவில் அதிர்வுகள் (vibrations in air columns)  தொடர்பான விதிகளைப் பயன்படுத்தி, விபுலானந்த அடிகள் தனது 'யாழ் நூலில்' கணக்கிட்டு காண்பித்துள்ளார். அந்த கணக்கிட்டில் சமன் தான, மத்திய ஸ்தாயி- Middle Octave  ‘ச’ என்ற இசைச்சுரத்திற்கான சுருதி அதிர்வு எண் மதிப்பை கணக்கிட்டு காண்பித்துள்ளார்.

1939இல் லண்டன் சர்வதேச இசை மாநாட்டில் முடிவு செய்யப்பட்ட சுருதித் தீர்மானிப்பு மதிப்பு(International pitch standard)  தெரியாமல், இயற்பியல் சோதனைகளுக்குப் பயன்படுத்தப்படும் இசைக்கவையின்(Tuning Fork)  அதிர்வு எண் 256Hz ஐ, அவர் தமது கணக்கிட்டில் பயன்படுத்தியுள்ளார்.( கர்நாடக இசை அறிஞர் சாம்ப மூர்த்தியும், 1939 சர்வதேச சுருதித் தீர்மானிப்பு மதிப்பு தெரியாமல், ‘ச’ சுரத்தின் சுருதி அதிர்வு எண் மதிப்பு 240 Hz என்று கற்பனை செய்து, தனது சுருதிக் கணக்கீடுகளில் பயன்படுத்தியுள்ளார்.)

அதே போல, அலைவு நீளம், முனைத் திருத்தம் போன்ற அளவுகளிலும் சிறு பிழைகள் விபுலானந்த அடிகளின் கணக்கீட்டில் உள்ளன. அவற்றை, சான்றுகளுடன் சுட்டிக்காட்டி,  எனது முனைவர் பட்ட ஆய்வேட்டில்(1996) சரியான முறையில் கணக்கிட்டு காண்பித்துள்ளேன். (‘தமிழ் இசையியல்- புதிய கண்டுபிடிப்புகள்’ (2009) சேகர் பதிப்பகம், சென்னை) அம்மதிப்பு இன்றுள்ள சர்வதேச சுருதித் தீர்மானிப்பு மதிப்புக்கு நெருக்கமாக இருப்பது வியப்பூட்டுவதாகும்.

மேற்குறிப்பிட்ட ஆய்வுமுடிவுகளை சென்னை தமிழ் இசைச் சங்க கருத்தரங்கில் சமர்ப்பித்தேன். அப்போது தலைமை தாங்கிய இசை அறிஞர் மீ.ப.சோமு தமது உரையில் 'நாதஸ்வரம்' செய்யும் போது, சுரத் தீர்மானிப்பு கருவியாக ஒரு வகைக் குழல் பயன்பட்டதை தான் பார்த்த தகவலை வெளிப்படுத்தினார். எனது உரையும் அவரின் கருத்தும், அந்த வருட கருத்தரங்க மலரில் வெளியாகியுள்ளது.

அதே போல், 'சுருதி சேர்த்தல்' என்பது பழந்தமிழ் இலக்கியங்களில் 'நல்லிசை நிறுத்தல்' என்று அழைக்கப்பட்டதையும், எவ்வாறு சுருதி சேர்க்கப்பட்டது என்பதையும், குழலை அடிப்படையாகக் கொண்டு நரம்பிசைக் கருவிகள் மட்டுமின்றி, தோலிசைக் கருவிகளும் சுருதி சேர்க்கப்பட்டன என்பதையும், அவ்வாறு சுருதி சேர்த்தல் என்பது, யானைகளின் புணர்தலோடு ஒப்பிடப்பட்டது என்பதையும், உரிய சான்றுகளுடன் ‘தமிழ் இசையியல்-  புதிய கண்டுபிடிப்புகள்’  என்ற நூலில் விளக்கியுள்ளேன்.

தொன்மை இந்தியாவில் இருந்த, அத்தகைய நுணுக்கமான சுருதித் தீர்மனிப்பையும்(pitch standard), சுருதி அமைப்பையும்(Tuning System), சுருதி சேர்த்தல் முறையையும் (Tuning),  எந்த காலக் கட்டத்தில், என்ன காரணங்கள் அடிப்படையில் இழந்தோம் என்பது ஆய்விற்குரியதாகும்.

குறிப்பு: இவை போன்ற ஆய்வுகளைப் பற்றிய கவலையின்றி உணர்ச்சிபூர்வ திசையில் தமிழிசை ஆர்வலர்கள் பயணிக்கிறர்களா? என்பது ஆய்விற்குரியதாகும். " உணர்ச்சி பூர்வ 'இரைச்சலில்’ சிக்கிய 'தமிழ் இசை' ஆய்வுகள் '";
( http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_13.html ) 'களவாடிய இசையே கர்நாடக இசை' என்று 'பிரச்சாரம்' செய்யும் 'உணர்ச்சிபூர்வ' தமிழிசை ஆர்வலர்கள், தமிழிசையிலும் 'பஞ்ச ரத்தின' கீர்த்தனைகளைப் போல கிரக பேத- Modulation-  பாடல்கள் இருப்பதாக, சான்றுகள் மற்றும் செய்முறை விளக்கம், தந்தார்களா? இல்லையா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

Wednesday, December 24, 2014


              தமிழ்நாட்டு சமூக நோயும், தீர்வும்



ஒரு சமூகம் திருப்புமுனைக் கட்டத்தில் இருக்கும்போது வெளிப்படும் 'சிக்னல்களை'ச்(Signals) சரியாக உணர்ந்து செயல்படும் மனிதர்களும், அமைப்புகளுமே, அந்த சமூகத்தின் வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்க முடியும்.


தமிழ்நாட்டில், இளைஞர்கள், குறைந்த 'பட்ஜெட்டில்' 'சூது கவ்வும்', 'கோலி சோடா','ஜிகிர்தண்டா''சதுரங்க வேட்டை' போன்ற பல 'வெற்றிப் படங்களை வெளியிட்டு, திரை 'இமேஜை' அரசியல் முதலீடாக 'வெற்றிகரமாக'ப் பயன்படுத்திவரும் போக்கிற்கு, 'வேட்டு' வைத்து வருகிறார்கள்.


அதாவது 'உணர்ச்சிகரமான பேச்சும், எழுத்தும்' தமிழ்நாட்டில் தமது தகவல் பரிமாற்ற வலிமையை (Communication strength) இழந்து, மேலேக் குறிப்பிட்டது போன்ற திரைப்படங்களுக்கான,‌  'விறுவிறுப்பு'  போக்கிற்கான‌,  திரைக்கதை வசன‌ உள்ளடக்கமாக மாறி வருகின்றன.


இளைஞர்களை மேடைப்பேச்சு மூலம் இனிமேல் யாரால் ஈர்க்க முடியும்?

அதற்கு விடையாய், அண்மையில் தமிழ்நாட்டில் ஒரு பொறியியல் கல்லூரி மாணவர்களிடையே, ஊசி விழுந்தாலும் கேட்கும் அளவுக்கு அமைதியும் (silence), கேட்கும் ஆர்வமும் வெளிப்பட்ட மேடைப்பேச்சாக, முனைவர்.ஆனந்த சங்கர் ஜெயந்த் (http://www.anandashankarjayant.com/)  அவர்களின் உரை இருந்தது, எனக்கு மறக்க முடியாத அனுபவமானது.புற்றுநோய்க்குள்ளாகி,இன்று வரை எவ்வாறு மனஉறுதியுடன் போராடி வருகிறேன் என்பதை ஒளிவு மறைவின்றி,, வாழ்வியல் தொடர்பான நவீன ஆராய்ச்சிகள் பற்றிய தகவல்களுடன் வெளிப்படுத்திய அவர் பேச்சின் வலிமைக்கு‍ -அவ்வாறு அவர் வாழ்ந்து கொண்டிருப்பதே‍-  முக்கிய‌ காரணமாகும்.


அகவாழ்வில் 'கொள்ளையர்களாகவும், கொள்ளையர்களின் எடுபிடிகளாகவும்' வாழ்ந்து கொண்டு, புற வாழ்வில் தமது எழுத்து, பேச்சு திறமைகளைக் கொண்டு, 'தமிழ், தமிழ் உணர்வு, பகுத்தறிவு, ஆன்மீகம்' என்று மாற்றி வந்தவர்கள், 'விவரமான' இளைஞர்களின் 'கேலிப் பொருளாக' - மேற்குறிப்பிட்ட திரைப்படங்களுக்கான உள்ளட்டக்க மூலங்களாக (source materials) ‌- மாறி வருகிறார்கள். தமது அக வாழ்வில் உண்மையாகவும், நேர்மையாகவும், சமூக அக்கறையுடனும் இருப்பதை, விளம்பரமின்றி தமது புற வாழ்வில் வெளிப்படுத்துப‌வர்களின் பேச்சுக்கும், எழுத்துக்கும், அந்த இளைஞர்கள் மத்தியில் கிடைக்கும் வரவேற்பு நம்பமுடியாத அளவுக்கு வளர்ந்து வருவதை, மேற்குறிப்பிட்டது போன்ற அனுபவங்கள் எனக்கு உணர்த்தி வருகின்றன. 


“மனிதரின் அகவாழ்வும் புறவாழ்வும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாகத் தொடர்புடையது. திராவிட மனநோயாளிகளின் அகத்தில் வளர்ந்த சீரழிவும் தான், புறத்தில் விளைந்த சீரழிவுகளுக்கும், அதன் தொடர் விளைவாய் புலமையில் ஏற்பட்ட சீரழிவுக்கும் காரணமாகும்.' என்பதையும்,


“தமிழ்வழியின் மரணப்பயணப் போக்கில் , தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளிடம் தொடர்பற்று, வருடம் தோறும் எண்ணிகையில் அதிகரித்து வரும் மாணவர்களிடமும், இளைஞர்களிடமும் 'இந்தியர்' என்ற அடையாளம் அதிசயிக்கும் அளவுக்கு வேகமாக வளர்ந்து வருவதையும்,'தமிழ், தமிழ் உணர்வு' தொடர்பானவை வருத்தம் தரும் அளவுக்கு வீழ்ந்து வருவதையும் ஏற்கனவே பார்த்தோம். (‘இந்தியாவில் ‘வித்தியாசமான’ தமிழ்நாடு’; 
http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_29.html)” என்பதையும்


முந்தையப் பதிவில் பார்த்தோம்.


“உணர்வு பூர்வ போதையில் பயணிக்கும் தமிழ்/திராவிட அமைப்புகளில் தங்களுக்கான சமூக வெளி(social Space)  குறைந்து வரும் போக்கை பற்றிய அறிவும், விவாதமும் இருப்பதாகத் தெரியவில்லை என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.” (‘தமிழ்நாட்டில் சமூக மூச்சுத் திணறலின் முடிவும், திறந்த காற்றோட்டமும்’ ( The end of the social suffocation in Tamilnadu & Free Ventilation); 
http://tamilsdirection.blogspot.com/2014/09/v-behaviorurldefaultvmlo.html )


தமது தாய்மொழி, பாரம்பரியம்,பண்பாடு போன்ற சமூக ஆணிவேர்களுடன், ஒரு சமுகம் வளர்ச்சிப் பாதையில் பயணிக்க வேண்டுமானால், அச்சமூக மக்களிடம் கீழ்வரும் மூன்று பண்புகள் முக்கிய இடம் பெற்று இருத்தல் வேண்டும்.


1. தனது தவறுகளை ஏற்று, திருத்தவும்,பிறர் தவறுகளை துணிச்சலுடன் தட்டிக் கேட்கவும் கூடிய‌ தனி மனிதருக்கான‌ சமூக முதுகெலும்பு


2.    தனது இயல்பின் அடிப்படையிலான தனி அடையாளம்


3. மனித வாழ்க்கையின் உயிரோட்டமான‌, தனது இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடு (Passion)


இப்பண்புகளில் வலிமை மிக்கோரே சமூகத்தில் மிகவும் மதிக்கப்பட வேண்டும்.


இன்று தமிழ்நாட்டில் எந்த பண்புகளின் அடிப்படையில், யார் மதிக்கப்படுகிறார்கள் என்பதை வைத்தே, தமிழ்நாடு சமூக நோக்கில் வளர்கிறதா? அல்லது வீழ்கிறதா? என்பது தெளிவாகும்.


சுமார் 10, 20, 30 வருடங்களுக்கு முன் கள்ளச்சாராயம் காய்ச்சிப் பிழைத்தவர்களாக, அரசுப் பணியில் லஞ்சம் வாங்கி மாட்டிக் கொண்டு பணி  நீக்கத்திற்குள்ளானவர்களாக, கூலி வேலை செய்தவர்களாக,  அடியாளாக இருந்தவர்களெல்லாம், 'அரசியல்' பலத்துடன், இன்று பலநூறு கோடிகளுக்கு அதிபதிகளாக வலம் வருவது;அந்த  'புதிய' பணக்காரர்களுக்கு திருமணம் உள்ளிட்ட குடும்ப நிகழ்வுகளில் வி.ஐ.பி ஆக மதித்து கிடைக்கும் 'சமூக கெளரவம்' , அவர்கள் குடியிருக்கும் பல கோடி ரூபாய்கள் மதிப்புள்ள வீடு, பயன்படுத்தும் அதிக விலையுள்ள கார் போன்றவை எல்லாம் 'வீரியமான சமூக தொத்து நோய்க் கிருமிகளாக’  சமுகத்தை வேகமாகப் பாதித்து வருகின்றன‌.  இந்த தொத்து நோய் பரப்பு மையங்களாக , திருமணம் உள்ளிட்ட சமூக நிகழ்வுகள் செயல்படுவதால், அந்நிகழ்வுகளில் கலந்து கொள்வோர் அந்நோய்க்கு இலக்காகும் வாய்ப்பு அதிகரிக்கிறது.


அதன் விளைவாக, எப்பாடுபட்டாலும் சீக்கிரமாக பணம்,செல்வாக்கு சம்பாதிப்பது எப்படி ? என்ற வெற்றியின் இரகசியத்தை அறிந்து செயல்படுத்துவதில் தமிழ்நாட்டில் ஒரு கணிசமான மக்கள் 'புத்திசாலிகள்’  (நோயாளிகளாக‌) ஆக முயற்சித்து வருகின்றனர். (‘தமிழ்நாடு வீழ்ச்சியும் மீட்சியும்‍ - வெற்றிக்கான எலும்புத் துண்டு இரகசியம்’; 
http://tamilsdirection.blogspot.com/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_27.html  ) 


அன்பின் அடிப்படையில் இருக்க வேண்டிய குடும்ப உறவுகள், மனித உறவுகள் எல்லாம் எந்த வழியிலும் வரும் பணம். செல்வாக்கு போன்ற ‘நோய்த் தூண்டில் மீன்’களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நோய்க் குடும்பங்கள் போல் வாழும் நாடாக தமிழ்நாடு 'வளர்ந்து' வருகிறது. இவ்வளர்ச்சியின் ஊடே கீழ்வரும் பண்புகள் வேகமாக வளர்ந்து வருகின்றன.


1. தனது தவறுகளை தப்பித் தவறியும் ஒத்துக்கொள்ளாமல்,பிறர் எவ்வளவு தவறுகள் புரிந்திருந்தாலும், அவற்றைப் பற்றி கவலைப்படாமல், அவர்களிடம் தமக்கு கிடைக்கும் ஆதாயத்தின் அளவுக்கேற்ப அவர்களின் காலில் விழுவது உள்ளிட்ட பணிவுகளுடன் கூடிய‌ தனி மனிதருக்கான‌  சமூக முதுகெலும்பற்ற பண்பு;


2. தனது இயல்பின் அடிப்படையிலான தனி அடையாளம் என்ன என்றே தெரியாமல், வாழ்வதே குறுக்கு வழியில் சீக்கிரம் மற்றவர் (?) பொறாமைப் படும் அளவுக்கு சம்பதிப்பதற்காகத் தான் என்ற‌ மன நோயையே அடையாளமாகக் கொண்டு வாழ்தல்;

3. மனித வாழ்க்கையின் உயிரோட்டமான, தனது இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடு(passion) என்ன என்ற தெளிவேயில்லாமல், நமக்கு கிடைத்திராத விலை மதிப்பு உயர்வான வீடு, கார், பொருட்கள், வேறு நபர்களிடம் இருக்கிறதா என்பதிலேயே தமது வாழ்வின் முழு கவனத்தையும் செலுத்தி, அதைப் பெறுவதற்காக வாழ்வதே வாழ்வின் இலட்சியம் என்ற வெளிப்பாடு;

இவ்வாறு தனி மனிதருக்கான  சமூக முதுகெலும்பற்ற பண்புடனும், வாழ்வதே குறுக்கு வழியில் சீக்கிரம் மற்றவர் (?) பொறாமைப் படும் அளவுக்கு சம்பதிப்பதற்காகத் தான் என்ற மன நோயுடனும்,தனது இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடு(passion) என்ன என்பதே தெரியாமலும் வாழ்பவர்கள் அதிகரிக்கும் வேகத்தில், தமிழ்நாட்டிலுள்ள சமூகம் அழிவுப் பாதையில் பயணிக்கும்.

நாட்டில் அதிகரித்து வரும் லஞ்சம், கொலை, கொள்ளை,கற்பழிப்பு உள்ளிட்டவையெல்லாம்- குறிப்பாக மாணவர்களிடையே வெளிப்படுவது,-  சமூகம் அழிவுப் பாதையில் பயணிப்பதை வெளிப்படுத்தும் அறிகுறிகளாகும். அக்குற்றங்களில் ஈடுபடுவோருக்கு நேரடியான பொறுப்பிருந்தாலும்,மேலேக் குறிப்பிட்ட நோயுடன் வாழ்பவர்கள் எல்லாம் அக்குற்றங்களுக்கான மறைமுக பொறுப்பாளிகள் ஆவர்.

நல்ல வழியில் வாழும் போது, தவிர்க்கமுடியாமல் இழப்புகளை சந்தித்தாலும் நல்ல சமூக வளர்ச்சிக்கு பங்களிப்பு வழங்கி, சாகும் போது குற்ற உணர்வின்றி சாக இயலும். மாறாக நேர்மை, உண்மை, உழைப்பு, நன்றி, பிரதிபலன் பாராத சேவை போன்ற நல்ல பண்புகளை தனது செல்வம், செல்வாக்கைப் பெருக்குவதற்காக இழந்து, ஒரு மனிதர் வாழ்வது எவ்வளவு பெரிய சமூகக் கேடு. அத்தகையோரை 'பெரிய மனிதராக' வழிபட்டு, அப்படி வாழவது தான் புத்திசாலித்தனம் என்று பெரும்பான்மையோர் வாழ முற்படுவது சரியா? அதன்பின் சமூகத்தில் கொலை, கொள்ளை, கற்பழிப்பு சாதாரணமாகாமல், வேறு எப்படி இருக்க முடியும்?

தமிழ்நாட்டில் எந்த பிரச்சினை வெளிப்பட்டாலும்  ,அதை மேலேக் குறிப்பிட்ட நோயின் வெற்றிக்குப் பயன்படுத்தி செயல்படும் கட்சிகள், அமைப்புகள் எல்லாம் அந்நோயின் கூடாரங்கள் ஆகும்.

இச்சமூக நோய்க் கூடாரங்களின் சமூக அடித்தளம் ஏறத்தாழ முற்றிலும் அழிந்து வருவதன் காரணமாகவே, தமிழ்நாட்டில் பல்வேறு பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்கள், தமது பிரச்சினைகளுக்கு தாமாகவே போராடுவது அதிகரித்து வருகிறது. போராட்டங்கள் வலுவடைந்து மீடியாக்களின் வெளிச்சம் படும்போது, அரசியல் கட்சித் தலைவர்கள் 'வெளிச்சம்' போடுவதும், மீடியாக்களின் வெளிச்சம் குறைந்தவுடன் அவர்களும் காணாமல் போய்விடுவதுமான நகைச் சுவை காட்சிகளும் தமிழ்நாட்டில் அரங்கேறி, மேலே சொன்ன போக்கை உறுதிப்படுத்துகின்றன. 
  

முதலில் குறிப்பிட்ட, பாராட்டுதலுக்குரிய‌,  மூன்று பண்புகளுடன் வாழ்பவர்களே பணியாற்றும் இடத்தில், வாழுமிடத்தில் மதிக்கப்படுகிறார்கள். பின்னால் குறிப்பிட்ட இழிவான மூன்று பண்புகளுடன் வாழ்பவர்களை நேரில் பார்க்கும்போது மதிப்பதாகக் காட்டிக் கொள்பவர்களே, அவர்கள் முதுகுக்குப் பின்னால், அவர்கள் பணம் சம்பாதிக்க கடைபிடித்த வழிமுறைகள் பற்றி 'விலாவாரியாக' விளக்கி விவாதிக்க, அவை மீடியாக்கள் உதவியின்றியே மக்களிடம் வேகமாக பரவுகின்றன.

எனவே தமிழ்நாடு நல்ல திசையில் பயணிக்க வாய்ப்புள்ளதற்கான அறிகுறிகள் வெளிப்படத் தொடங்கியுள்ளன.

பத்திரிக்கைகளிலும் தொலைக் காட்சிகளிலும் படிக்க பண உதவி கேட்கும் ஏழை மாணவர்களுக்கு, விளம்பரமின்றி உதவிகள் கிடைத்து வருவது தமிழ்நாட்டில் ஒரு புதிய போக்காகும்.

படிக்க மாணவரின்றி பல அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வரும் சூழலில், மனித தெய்வங்கள் போன்ற சில அசிரியர்களின் விளம்பரமற்ற உழைப்பால், தனியார்ப் பள்ளிகளையும் விஞ்சி, மாணவர்கள் போட்டி போட்டு சேரும் அரசுப் பள்ளிகளும் தமிழ்நாட்டில் இருப்பதும் ஒரு புதிய போக்காகும். 
                                                                                            
வாழ்க்கைக்குப் பணம் தேவை தான். ஆனால் வாழ்வதே குறுக்கு வழியில் சீக்கிரம் மற்றவர் (?) பொறாமைப் படும் அளவுக்கு சம்பதிப்பதற்காகத் தான் என்பது ஒருவகை மன‌ நோயே,’ என்பதில் தெளிவுள்ளவர்கள், தமது இயல்புக்கேற்ற நாட்டமுள்ள‌ தாய்மொழி, பல மொழிகள், நாடு, ஆன்மீகம், இலக்கியம், இசை, ஓவியம் போன்ற பல‌ துறைகளில் ஈடுபட்டு, அர்த்தமுள்ள வகையில் வாழ்வதும், அவர்களில் பலர் உலக அளவில் பாராட்டு பெறும் சாதனைகளைப் படைத்து வருவதும் நடந்து வருகிறது.                                                                                       

முதலில் குறிப்பிட்ட, பாராட்டுதலுக்குரிய‌,  மூன்று பண்புகளும் மீண்டும் தமிழ்நாட்டில் வளரத் தொடங்கியுள்ளதன் விளைவே மேலேக் குறிப்பிட்ட போக்குகளுக்கு காரணமாகும். கொள்கை அடிப்படையிலான தொண்டர்கள் மறைந்து, ஆதாயத் தொண்டர்களின் பலத்திலேயே அரசியல் கட்சிகள் இழிவானப் போக்கில், செயல்படுவதற்கும் அதுவே காரணமாகும். வீழ்ச்சி பாதையிலிருந்து திரும்பி, வளர்ச்சி நோக்கிய திருப்புமுனை கட்டத்தில் தமிழ்நாடு இருப்பது,  தெளிவாகி வருகிறது. அந்த திருப்புமுனைக் கட்டத்தில் தமிழ்நாடு இருப்பதையே மேலேக் குறிப்பிட்ட திரைப்படங்களின் வெற்றி உள்ளிட்ட பல 'சிக்னல்கள்' உணர்த்துகின்றன.

Saturday, December 20, 2014



தமிழ்நாட்டில் ஆங்கில வழிக் கல்வியின் புற்றீசல் வளர்ச்சி:


தமிழறிவை விட, ஆங்கில அறிவை அதிகம் சீரழித்ததா? கூடுதலாக சமூக அக்கறையையும் ஒழித்ததா?


தமிழ்நாட்டில் 'தமிழ்வழியின் மரணப்பயணம் தொடங்கிவிட்டதா?' என்ற கேள்வியை எழுப்பிய பதிவுகளை ஏற்கனவே பார்த்தோம்.
( http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_27.html  )

தமிழ்வழியின் மரணப்பயணப் போக்கில் , தமிழ்நாட்டில் அரசியல் கட்சிகளிடம் தொடர்பற்று, வருடம் தோறும் எண்ணிகையில் அதிகரித்து வரும் மாணவர்களிடமும், இளைஞர்களிடமும் 'இந்தியர்' என்ற அடையாளம் அதிசயிக்கும் அளவுக்கு வேகமாக வளர்ந்து வருவதையும், 'தமிழ், தமிழ் உணர்வு' தொடர்பானவை வருத்தம் தரும் அளவுக்கு வீழ்ந்து வருவதையும் ஏற்கனவே பார்த்தோம். 
( http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_29.html )

1970களின் பிற்பகுதியில் தொடங்கிய ஆங்கிலவழிப் பள்ளிகளின் புற்றீசல் வளர்ச்சியானது, தமிழ் அறிவை விட, தமிழ்நாட்டில் ஆங்கில அறிவையே அதிகம் சீரழித்துள்ளது என்பது, பொது அரங்கில், இதுவரை விவாதத்திற்கு உட்படுத்தப்படாத ஒரு விளைவாகும்.

பல வருடங்களுக்கு முன் கல்லூரி முதல்வராகப் பணியாற்றிய ஒருவரின் அனுபவம் பின்வருமாறு;

அவர் முதல்வர் பொறுப்பேற்ற சில நாட்களில், விடுப்பில் இருந்த ஒரு ஆங்கில விரிவுரையாளர் விடுப்பு மடலுடன் பணியில் சேர, முதல்வரைச் சந்தித்தார். ஆங்கிலத்தில் இருந்த அந்த விடுப்பு மடலில் அபத்தமான இலக்கணப் பிழைகள் இருந்தன. விரைவில் தனது ஆங்கில இலக்கண அறிவை வளர்த்துக் கொள்ளுமாறு,M.A (English), M.Phil (English) (High first class) கல்வித்தகுதிகள் கொண்டிருந்த அந்த ஆங்கில விரிவுரையாளருக்கு முதல்வர் அறிவுறுத்தினார். மறுநாள் அந்த விரிவுரையாளார் பதவி விலகல் மடல் கொடுத்து பதவி விலகினார். அதற்குப் பின் தனது கல்லூரிக்கு ஆங்கில விரிவுரையாளரைப் பணியமர்த்த முயற்சித்தபோது, முன்குறிப்பிட்ட அளவுக்கு ஆங்கில அறிவுள்ளவர்கள் தான் அதிக அளவில் M.A (English), M.Phil (English) முடித்தவர்களில் இருக்கிறார்கள் என்பது அந்த முதல்வருக்குத் தெரிந்தது.

தமிழ்நாட்டு கல்லூரிகளில்  M.A (English), M.Phil (English) (High first class)   படித்து, கல்லூரியில் பணிபுரியும் ஆங்கில அசிரியர்களில் 30 வயதுக்கும் குறைவானவர்களில் பெரும்பாலோருக்கு, ஆங்கில இலக்கணம் சரியாக தெரியாதா? தாமாக ஆங்கிலத்தில் ஒரு பக்கம் பிழையின்றி எழுதவும் தெரியாதா? என்பது ஆய்விற்குரியதாகும். தமிழில் முதுநிலைப்பட்டம் பெற்றவர்களுக்கு, தமிழில் இருக்கும் அறிவை விட, ஆங்கிலத்தில் முதுநிலைப்பட்டம் பெற்றவர்களுக்கு, ஆங்கிலத்தில் இருக்கும் அறிவு குறைவானதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

1970 களின் பிற்பகுதியில் புற்றீசல் போல் வளர்ந்த ஆங்கில்வழிக் கல்வியானது, தமிழ்நாட்டில் தமிழ் அறிவை விட, ஆங்கில அறிவையே அதிகம் சீரழித்துள்ளது; மனப்பாட நோயை நம்பமுடியாத அளவுக்கு வளர்த்தவாறே. 

தமிழ்வழியின் வீழ்ச்சிக்குக் காரணமான ஆங்கிலவழிக்கல்வி என்பது ஆங்கில அறிவின் வீழ்ச்சிக்கும் வழிவகுத்துள்ளதை மேலே பார்த்தோம். அது மட்டுமின்றி, தமிழ்நாட்டுத் தமிழர்கள் மத்தியில் பொதுப்பிரச்சினைகளில் ஆர்வமற்று,'தாமும் தமது குடும்பமும் வளர்ந்தால் போதும்' என்ற சமூக அக்கறையின்மையாகிய‌ சமூக நோயும், அந்த போக்கில் எவ்வாறு வளர்ந்தது என்பதை அடுத்து பார்ப்போம்.

ஒரு சமூகத்தில் தாய்மொழியாம் தமிழ்வழிக் கல்வி வீழ்ச்சிக்குள்ளாகி, திரிந்த மேற்கத்திய  பண்பாட்டுடன் கூடிய ஆங்கிலவழிக் கல்வியின் வளர்ச்சியால், குறிப்பாக நடுத்தட்டு, மற்றும் வசதியான தமிழர்களின் சமூக அக்கறைக் குறைந்து, 'எந்த வழியிலும் தாமும், தமது குடும்பமும் வளர்ந்தால் போதும்' என்ற சமூக நோய் தமிழ்நாட்டில் 'வீரியத்துடன்' வளர்ந்துள்ளதா? என்பது ஆய்விற்குரியதாகும்.

உயர்நிலைப்பள்ளி வரை வலுவான ஆங்கில இலக்கண அறிவுடன்  தமிழ்வழியிலும், பின் கல்லூரியில் ஆங்கிலவழியிலும் தமிழ்நாட்டின் கல்விநிலை இருந்தது. 1970களின் பிற்பகுதியில் தமிழ்நாட்டில் புற்றீசல் போல் மெட்ரிகுலேசன் பள்ளிகள் திறக்கப்பட்டன. சுமார் 15 வருடங்களுக்குப்பின் , 1990 துவங்கிய காலத்தில் தமிழ்நாட்டில் நடுத்தர, வசதியான குடும்பங்களின் பிள்ளைகளெல்லாம் ஆங்கில வழி மாணவர்களாக இருக்க, அதன்மூலம் திரிந்த மேற்கத்திய பண்பாட்டின் ஆதிக்கமும், அதனுடன் தொடர்புடைய சமூக ஒப்பீடு நோயும்(social Comparison) அக்குடும்பங்களில் வளர்ந்தது. 
( http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html ) அந்த போக்கில் வளர்ந்த சமூக அக்கறையின்மையுடன் தொடர்புடைய, 'தாமும் தமது குடும்பமும் வளர்ந்தால் போதும்' என்பது, உரிய எதிர்ப்பின்றி கீழ்வரும் விளைவுகள் வளர இடமளித்ததா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

1991 லிருந்து, மலைகள், மணல்கள் உள்ளிட்ட கனிவளங்கள், நிலத்தடி நீரின் ஆதாரங்களாகிய ஏரிகள், குளங்கள் போன்றவையெல்லாம் ஊழலின் கோரப்பசிக்கு இலக்காகத் தொடங்கின. அதுவும் போதாதென்று, தனியார்களின் கட்டிடங்களையும், நிலங்களையும், 'மிரட்டி, கொலை' செய்து அபகரிக்கும் நோயும் சமூகப் புற்று நோயாக வளர்ந்தது.

வசதியான மேல்நடுத்தர தமிழர்களெல்லாம் அந்த 'புதிய' பணக்கரர்களைக் கண்டு பயந்தும், அவர்களில் 'வாழ்வியல் புத்திசாலிகள்' அவர்களுக்கு நெருக்கமாகி, பலன்கள் பெற்றும் வந்தார்கள். 'தமிழ், தமிழ் உணர்வு, பகுத்தறிவு, மனித உரிமை' உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் பெரும்பாலும் அந்த போக்குகளிலேயேப் பயணித்தன. ஆனால் நடுத்தர, ஏழை மக்களின் கோபமே, 1996இல் ஆட்சி மாற்றத்திற்கு முக்கிய காரணமானது.

அதன்பின் “தி.மு.க தலைவர் குடும்ப செல்வாக்கு மேல் மக்கள் கொண்ட அதிருப்திக்கும், அ.இ.அ.தி.மு.கவில் சசிகலா குடும்ப செல்வாக்கு மேல் மக்கள் கொண்ட அதிருப்திக்கும், ஏற்றவாறு இரண்டு கட்சிகளும் மாறி, மாறி ஆட்சிக்கு வந்தன.” என்பதை ஏற்கனவே பார்த்தோம். 
( http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_29.html )

காலனிய மனநோயாளித்தனத்தின் பின்பலத்தில் வளர்ந்த திராவிட மனநோயாளித்தனம், 1990கள் முதல்,  தமிழ்வழிக் கல்வியையும், தமிழ்நாட்டு கனி வளங்களையும் 'வீரியத்துடன்' சீரழித்து வளர்ந்த வேகத்தில், அந்த நோயில், தமிழ்நாட்டு தேசியக் கட்சிகளும், மற்ற கட்சிகளும் எந்த அளவுக்கு சிக்கி சீரழிந்தன? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

தமிழ்நாட்டில் ஆங்கில வழிக் கல்வி மூலம் திரிந்த மேற்கத்தியப் பண்பாட்டு நோயில் சிக்கி, தாமும் தமது குடும்பமும் மட்டும் வளர்ந்தால் போதும்' என்ற சமூக நோய் வளர்ந்து, தமிழ்நாட்டை எந்த அளவுக்கு பாதித்துள்ளது என்பதைக் கீழ்வரும் செய்தி உணர்த்துகிறது.

போலி ஆவணங்கள் மூலம் பல குவாரிகளுக்கு அனுமதி: மாயமான பஞ்சபாண்டவர் மலை- சகாயம் அதிர்ச்சி 

போலி ஆவணங்களை தயாரித்து, கிரானைட் குவாரிகளுக்கு அனுமதி வழங்கியுள்ளது சகாயம் ஆய்வில் அம்பலமானது. விதிகளை மீறி புராதன மலைகளை அறுத்தும், குவாரி கழிவுகளைக் கொட்டி கண்மாய்களை மேடாக்கியவர்கள் மீது அரசுத் துறையினர் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பதை அறிந்த சகாயம் வேதனையை வெளிப்படுத்தினார்.”

“திருவாதவூர் மேலச்சுனைகுளம் அருகே அமைந்துள்ள 3 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை யான ஓவாமலை என்றழைக்கப் படும் சமணர் படுகையை அவர் பார்வையிட்டார். தமிழ் பல்கலைக் கழக முன்னாள் பேராசிரியர் ராமசாமி, தொல்லியல் ஆர்வலர் கபிலன் உட்பட பலர் பாதிப்புகள் குறித்து சகாயத்திடம் தெரிவித்தனர். 2,300 ஆண்டுகளுக்கு முன்பே தமிழர்கள் எழுதி, படித்ததை இங்குள்ள கல்வெட்டுகள் ஆதாரத்துடன் தெரிவிக்கின்றன. மலைக்கு மேல் உள்ள சிவன் கோயிலுக்கு மாணிக்கவாசகர் வந்துசென்றுள்ளார். மலை குகையில் 10 சமணர் படுக்கைகள் உள்ளன. இவை அனைத்தும் குவாரி நடத்தியவர்களால் கடுமையாக சேதமாக்கப்பட்டுவிட்டன. மலையை ஆங்காங்கே வெட்டி சிதைத்திருந்தனர். இங்கு யாரும் நுழைந்துவிடாதபடி பாதையையே அடைத்துவிட்டனர் என்றனர்.

புராதன சின்னங்கள் அமைவிடத்திலிருந்து 300 மீட்டர் தொலைவு பாதுகாக்கப்பட்ட பகுதி என்கிறது சட்டம். ஆனால் இந்த மலையில் 125 முதல் 242 மீட்டருக்கு உட்பட்ட பகுதிகள் சிதைக்கப்பட்டுள்ளன. ஆதாரங்கள் அழிக்கப்பட்டிருந்ததை சகாயம் பதிவு செய்தார்.” http://tamil.thehindu.com/tamilnadu

1990களில் 'வீரியத்துடன்' வளர்ந்த 'ஆங்கிலவழிக் கல்வி,திரிந்த மேற்கத்தியப் பண்பாட்டு நோய், அதன் தொடர் விளைவாய் தாமும் தமது குடும்பமும் மட்டும் வள‌ர்ந்தால் போதும் என்ற நோய்' என்ற சமூக பின்பலத்தில், 'கோரப்பசியுடன்' தமிழ்நாட்டைச் சூறையாடிய 'திராவிட அரசியல்' கொள்ளையர்களை எதிர்த்து, 'தமிழ், தமிழ் உணர்வு, பகுத்தறிவு, மனித உரிமை, ஆன்மீகம், இந்துத்வா, இஸ்லாம், தலித்' உள்ளிட்ட அமைப்புகளில் யார் யார் போராடினார்கள்? யார் யார் அந்த கொள்ளையர்களுடன் உறவாடி, பலன்கள் பெற்றார்கள்? அந்தக் கொள்ளை தொடர்பாக, சகாயம் மேற்கொண்டுவரும் விசாரணைக்கு ஆதரவாகவும், அவர் உயிருக்கு மிரட்டல் விடுப்பதை எதிர்த்தும் 'மூச்சு விடாமல்' மற்ற பிரச்சினைகளில் 'உணர்வுபூர்வமாக' ஈடுபடுவதற்கு அந்த 'அனுபவித்த பலன்கள்' காரணமா? என்பது அவரவர் மனசாட்சிக்கே வெளிச்சம்.அவ்வாறு அந்த கொள்ளையர்களுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் 'உறவாடி, பலன்கள்' அனுபவித்தவர்கள், 'அகத்தில்' எவ்வளவு மோசமான சீரழிவுக்குள்ளானார்கள் என்பதானது, 'திருச்சி பெரியார் மையம்' மூலம் எனக்குக் கிடைத்த, 'திராவிட மனநோயாளித்தனத்தை' நான் கண்டுபிடிக்க உதவிய, அரிய உள்ளீடாகும்(input). மனிதரின் அகவாழ்வும் புறவாழ்வும் ஒன்றுடன் ஒன்று நெருக்கமாகத் தொடர்புடையது. திராவிட மனநோயாளிகளின் அகத்தில் வளர்ந்த சீரழிவும் தான், புறத்தில் விளைந்த சீரழிவுகளுக்கும், அதன் தொடர் விளைவாய் புலமையில் ஏற்பட்ட சீரழிவுக்கும் காரணமாகும். 
( http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_14.html )

காலனிய மனநோயாளித்தனத்தின் பின்பலத்தில், 'தமிழ் மொழி, பாரம்பரியம், பண்பாடு' போன்ற ஆணிவேர்களைச் சிதைத்து, வளர்ந்த திராவிட மனநோயாளித்தனமானது, தமிழ்நாட்டில் ஆங்கில வழி புற்றிசல் மூலம், குடும்பம்,நட்பு உள்ளிட்ட எல்லா தனிமனித உறவுகளையும் லாப நட்டம் பார்க்கும் 'கள்வர்' நோயில் (திருக்குறள் 813) எவ்வாறு சிக்க வைத்தது? 'கோரப்பசியுடன்' தமிழ்நாட்டைச் சூறையாடிய 'திராவிட அரசியல்' கொள்ளையர்கள் உருவாகி, வளர, என்ன பங்கு வகித்தது? என்பது போன்ற ஆய்வுகளை இனியும் தாமதப்படுத்துவது என்பது, தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் மிகவும் கேடாய் முடியும்.

கடந்த சுமார் 40 வருட ஆங்கில வழிக் கல்வியில் சிக்கி, சீரழிந்த, தமிழ்நாட்டில், இன்று என்ன நிலைமை தெரியுமா?

கல்லூரிகளில் ஆங்கிலவழி மாணவர்களும் (தமிழ்வழி மாணவர்களைப் போலவே) பல்கலைக் கழக தேர்வுகளை ஆங்கிலமும் தமிழும் கலந்து 'தமிங்கிலிசில்' எழுதி வருகிறார்கள்.ஆங்கில வழி மாணவர்கள் ஆங்கிலத்திலும், தமிழ்வழி மாணவர்கள் தமிழிலும் பல்கலைக் கழக தேர்வுகள் எழுத வேண்டும் என தமிழக அரசு ஆணையிட்டது. உடனே வை.கோ உள்ளிட்ட அனைத்து தமிழ்த் தலைவர்களும் 'தமிழுக்கு அநீதி'(?) என்று கொதித்தெழுந்தார்கள். உடனே அரசு அந்த ஆணையைத் திரும்பப் பெற்றது. இந்தியாவில் இது போல, வேறு எந்த மாநிலத்திலும், பல்கலைக்கழகத் தேர்வு விடைத்தாள்களில் ஆங்கிலத்தையும், அந்த மாநில மொழியையும், கலந்து எழுதுவதை, அரசும், பல்கலைக்கழகங்களும் அனுமதிக்கும் அளவுக்கு, உயர்க் கல்வியின் தரம் தாழ்ந்துள்ளதா? என்பது ஆய்விற்குரியதாகும். 

தமிழ்நாட்டில் ஆங்கில வழியில் கல்வி பயிலும் மாணவர்களில், ஆங்கிலத்தில் சரியாக எழுத, படிக்க தெரியாமல், ஆங்கிலோ-இந்தியர்களைப் (Anglo-Indians) போல, சரளமாக ஆங்கிலத்தில் பேசுபவர்களை நான் சந்தித்துள்ளேன். ஆங்கிலத்தில் எழுத, படிக்க தெரியாமல், சரளமாக ஆங்கிலம் பேசும்  ஆங்கிலோ-இந்தியர்களை, திருச்சியில் நான் சந்தித்துள்ளேன். எனவே ஆங்கிலவழிக் கல்வி மூலம், 'ஆங்கில அரை-தற்குறிகள்' –semi-illeterates- (கிராமங்களில் தமிழில் எழுத, படிக்க தெரியாமல், தமிழில் பேசும் 'தமிழ் தற்குறிகளைப் போல) தமிழ்நாட்டில் உருவாகி வருகிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அடுத்து சாதாரணத் தமிழர்கள் எப்படி இருக்கிறர்கள்? என்று பார்ப்போம்.

தமது பிரச்சினை, தமது பகுதியின் பொதுப்பிரச்சினை என்ற அளவுக்கு, தமது பலத்தை மட்டுமே நம்பி, சாதாரண கீழ்நடுத்தர, ஏழைத் தமிழர்கள், குறிப்பாக பெண்கள், மாணவர்களாகிய தமது பிள்ளைகளைப் போராட்டத்தில் ஈடுபடுத்தாமல், தாமே போராடி வருகிறார்கள்.அத்தகையோரின் பிள்ளைகளே பெரும்பாலும் தமிழ்நாட்டில் தமிழ்வழி அரசுப்பள்ளிகளில் படித்து வருகிறார்கள். அவர்களிலும் பலர் ஆங்கில வழியை நாடும் வேகத்திற்கு ஏற்ப, படிக்க மாணவரின்றி தமிழ்வழி அரசுப் பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன.

மேலேக் குறிப்பிட்ட போராட்டங்களில் முன்னுக்கு நிற்பவர்களில் 'வாழ்வியல் திறமைசாலிகள்' அரசியல் கட்சிகளின் தூண்டிலுக்கு இரையாகி வருகிறார்கள். அப்படி 'முன்னேறுபவர்கள்' வீட்டுப் பிள்ளைகளெல்லாம் தமிழ்வழியிலிருந்து ஆங்கிலவழிக்கு மாறி வருகிறார்கள். அதாவது ஏற்கனவே பார்த்த, 'தமிழ்நாட்டு வாழ்வியல் வெற்றியின் இரகசியம்'  
( http://tamilsdirection.blogspot.in/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_27.html  ) பெறும் வளர்ச்சிக்கு ஏற்ப,  பொதுப்பிரச்சினைகளுக்கு, 'லாப நட்ட' நோக்கின்றி போராடும் தமிழர்களின் எண்ணிக்கையையும் வெகு வேகமாகக் குறைத்து வருகிறது. 

உடல் ரீதியாகவும்,உளரீதியாகவும் பாதிக்கப்பட்ட மக்களை நாம் அறிவோம். ஆனால் தாய்மொழிக் கல்வியற்ற, ஆங்கில வழிக் கல்வி மூலம் படைப்பாற்றல்(Creativity)/சுய உருவாக்கல் (originality) /நல்லொழுக்க மதிப்பீடுகள் (values) ரீதியில்,  பாதிக்கப்பட்ட மாணவர்கள்,  1970‍களிலிருந்து உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். எனவே, பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே,  தற்கொலை, கொலை, கொள்ளை,வன்முறை உள்ளிட்ட சமூகக் குற்றங்கள் அபரீதமாக அதிகரித்து வருகின்றன..

தமிழ்நாட்டில் குக்கிராமம் வரை 2வயது முடிந்த குழந்தைகளை ஆங்கில வழியில் விளையாட்டுப் பள்ளிகளில் சேர்க்கும் போக்கு புற்றீசல் போல் வளர்ந்து வருகிறது. கடந்த பல வருடங்களாக, படிக்க மாணவரின்றி, ஆயிரக்கணக்கான தமிழ்வழி அரசு பள்ளிகள் மூடப்பட்டு வருகின்றன. இத்தகைய சூழலில், 'தமது குடும்பப் பிள்ளைகளுக்கு 'ஆங்கிலவழிக் கல்வி நீதி', மற்ற தமிழர்களின் குடும்பத்துக்குப் பிள்ளைகளுக்கு 'தமிழ்வழிக் கல்வி நீதி' என்ற வகையில், தமிழ்நாட்டில் 'தமிழ், தமிழ் உணர்வு' தலைவர்கள், 'செல்வாக்குடன்' வலம் வருவது, தமிழின் மரணப்பயணத்தை துரிதப் படுத்தாதா? 

எனவே, திரிந்த மேற்கத்திய பண்பாட்டு நோயில் சிக்காமல், ஆங்கில வழியில் படிக்க வைக்க வசதியிருந்தும், தமது குடும்பப் பிள்ளைகளைத் தமிழ் வழியில் படிக்க வைப்பவர்களே, தமிழின், தமிழ்நாட்டின் மீட்சிக்கான நம்பிக்கை நட்சத்திரங்கள் ஆவார்கள். அத்தகையோர் தமிழ்நாட்டின் பொதுப் பிரச்சினைகளுக்கான போராட்டத்தை முன்னெடுக்கும் போது தான், தமிழுக்கும், தமிழ்நாட்டிற்கும் விடிவு கிட்டும்.