Thursday, March 12, 2015


 வித்தியாசமான விறுவிறுப்பான (interesting)  அனுபவங்கள் (1)



சில வருடங்களுக்கு முன் ஒரு பல்கலைக்கழக அரங்கு நிரம்பி வழிய நடந்த கூட்டம் அது. இன்றைய பிரதமர் மோடிக்கும் நெருக்கமான , இந்திய அளவில் மிகவும் மதிக்கப்படும், புலமையாளர் சிறப்புப் பேச்சாளர்.நாட்டின் முக்கிய பிரச்சினைகளில் ஒன்று அந்த கூட்ட உரைக்கான தலைப்பு.பார்வையாளர்களில் ஒருவராக நான் அமர்ந்திருந்தேன்.

உரையாற்றத் தொடங்கிய அந்த சிறப்புப் பேச்சாளர், உரையின் துவக்கத்திலேயே தான் பேசும் பொருள் தொடர்பாக எனது பெயரைக் குறிப்பிட்டு, என்னைப் புகழ்ந்து உரையைத் தொடர்ந்தார். கூட்டம் முடிந்ததும்,  அவரும் துணை வேந்தரும் என்னை உடன் வருமாறு அழைத்தனர். அவர்கள் காரில் துணைவேந்தர் அறை சென்று உரையாடி விட்டு, பின் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறி, பேருந்து மூலம் எனது இல்லம் வந்தடைந்தேன்.

பின் சில நிமிடங்களில் ஒரு தொலைபேசி அழைப்பு. நீண்டகாலமாக தொடர்பில் இல்லாத ஒருவர் பேசினார். அந்த கூட்டத்தில் தான் இருந்ததாகவும், சிறப்புப் பேச்சாளர் எனது பெயரைக் குறிப்பிட்டு பேசியது குறித்த தனது மகிழ்ச்சியைத் தெரிவித்து, என்னை தனது காரில் வந்து 'உடனே' பார்க்கவிரும்புவதாகத் தெரிவித்தார். அது போன்ற நபர்களைத் தவிர்த்து, வாழும் நான் அவரைப் புண்படுத்த விரும்பாமல் வாருங்கள் என்று பதில் சொன்னேன். அவர் போன்ற, ஏற்கனவே பழகிய நபர்களைத் தவிர்த்து நான் வாழ்வது ஏன் என்பது பற்றி சுருக்கமாக அறிவதானது, அவர் என்னை வந்து சந்தித்த போது பேசியது பற்றி புரிந்து கொள்ள உதவும்.

தினமும் காலையில் விழித்தது முதல், இரவு தூங்கத் தொடங்கும் வரை, தமது குடும்பம், நட்பு உள்ளிட்டு அனைத்து மனித உறவுகளிலும், யார் யார் வசதியில் செல்வாக்கில் வளர்கிறார்கள் என்பதைக் கண்காணித்து, ஒரு குறிப்பிட்ட அளவுக்கு மேல் வசதியானவர்களுக்கு 'எப்படி வாலாட்டி' நெருக்கமாகி 'தாமும் வளர்வது' என்பதையே வாழ்வின் 'இலட்சியமாக' கருதி வாழ்பவர்களில்,- பெரியார் கொள்கைப் பற்றில் நான் 'ஏமாந்து' எனது சமூக வட்டத்தில் அனுமதித்த‌தால் -  எனது சமூக வட்டத்தில் இருந்தவர்களும், இருப்பவர்களில் சிலரும் என்னை 'வாழத் தெரியாத முட்டாளாக'க் கருதி, தமக்குள் எள்ளி நகையாடியதை நான் அறிவேன்.என்னிடம் அதை நேரில் வெளிப்படுத்தியவர்களும் அதில் அடக்கம். (பெரியார் இயக்க தொடர்புக்கு முன்னும், விலகிய பின்னும் அத்தகையோர் எனது சமூக வட்டத்தில் இடம் பெற்றதில்லை. அதே நேரத்தில், பெரியார் இயக்க தொடர்பு காலத்தில் மிகவும் மதித்துப் போற்றத்தக்கவர்களும் எனக்கு நண்பர்களாகக் கிடைத்து, இன்றுவரை தொடர்வதையும் குறிப்பிட்டாக வேண்டும்.)

அப்படி என்னை முட்டாளாகக் கருதி வாழ்ந்தவர்களில் ஒருவரான மேலேக் குறிப்பிட்ட நபருக்கு, இந்திய அளவில் 'மிக முக்கியமானவர் என் நண்பர்' என்று தெரிந்ததும், என்னுடன் இருந்து, தொடர்பற்ற நட்பைப் புதுப்பித்துக் கொள்ளும் 'வெறி' மேலேக் குறிப்பிட்ட தொலைபேசி உரையாடலில் வெளிப்பட்டது.

எனது இல்லத்திற்குள் இன்னொரு நபருடன் அவர் வந்தார். அந்த நபர் ஏதோ பெரிய அளவில் சந்தைப் படுத்தக்கூடிய கண்டுபிடிப்பு வைத்துள்ளதாகவும், அந்த வியாபார ஆலோசகராக தான் இணைந்துள்ளதாகவும் 'பெருமையுடன்'  அவரை அறிமுகப்படுத்தினார். பின் 'நாசுக்காக' எனது உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் நான் ஒதுங்கி வாழ்வதை உணர்த்தி, அந்த போக்கில் வாழும்போது எனக்கு உருவான சமுகவட்டத்தில் அந்த சிறப்புப் பேச்சாளர் எனக்கு எப்படி நண்பரானார் ? என்ற அவரின் அடங்காத ஆவலுக்கு, சிறு தீனி போட்டு, அவர்களை அனுப்பி வைத்தேன்.

என்னை வாழத் தெரியாத முட்டாளாகவும், தமக்கு 'லாபமற்ற'வராகவும் கருதி, என்னைக் கீழாக மதித்து, ஒதுக்கி வாழ்பவர்களில் சிலர், எனக்குள்ள சமூகத் தொடர்புகளில் 'மிகுந்த செல்வாக்குள்ளவர்கள்' இருப்பதாக அறிந்தவுடன், என்னிடம் 'குழைந்து, வாலாட்டி' நெருக்கமாக முனைந்தது பற்றிய எனது அனுபவங்களில் மேலேக் குறிப்பிட்டது, முதலுமல்ல; கடைசியுமல்ல. இந்தியாவிலேயே, சமூக ஒப்பீடு நோயில் ‘தனித்துவமாக’‌ சிக்கி, 'வித்தியாசமாக' தாய்மொழியில் பேசுவதை விட, ஆங்கிலத்தில் பேசுவதே உயர்வு' என்ற 'தனித்துவமான' மேலேக் குறிப்பிட்ட‌ திராவிட மனநோயாளிகளை சாதி. மத, கட்சி வேறுபாடுகளைக் கடந்து 'புற்றீசல்' போல, தமிழ்நாட்டில் வளர்த்து வரும் நோய் இதுவாகும். ('காலனிய' மனநோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும்’; http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html) பெரியார் ஈ.வெ.ரா, அவர் வழியில் என் போன்ற எண்ணற்றோர், தமது அறிவு, உழைப்பு, பணம், செலவழித்து, உணர்வுபூர்வ போக்குகளை உரமிட்டு வளர்த்ததன் விளைவே இந்நோய் ஆகும். 'ஆதரவு' என்று எண்ணி, 'தனி ஈழ முயற்சி' தமிழ்நாட்டில் 'நுழைந்து' அந்நோயில் சிக்கியதற்கும், முள்ளிவாய்க்கால் 'முடிவு'க்கும் தொடர்பு உண்டு என்பதும் என் ஆய்வாகும். ('தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு;'தமிழ் ஈழம்'‍  - நேற்று, இன்று, நாளை; கேள்விக்குறியாகி வரும் தமிழரின் தர அடையாளம் (benchmark)‘; http://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html) உணர்வுபூர்வ பேச்சில், எழுத்தில், கவிதையில் ஊரான் வீட்டுப்பிள்ளைகளைக் காவு கொடுத்து தமது குடும்பத்தையும்,பிள்ளைகளையும் 'பாதுகாப்பாக, நன்கு செட்டில்' செய்யும் நோயில் தமிழ்நாட்டைப் போலவே, ஈழமும் சிக்கியதும் அந்த ஆய்வில் அடங்கும். 

தமிழ்நாட்டில் திருட்டு, கொலை, கொள்ளை,கற்பழிப்பு ஆகியவற்றின் , 'அதிவேக' அதிகரிப்பிற்குக் காரணமான காவல்துறை, அரசு வக்கீல், நீதித்துறை 'கறுப்பு ஆடுகளுக்கும்', அந்த கறுப்பு ஆடுகளை தமது சுயநலத்திற்காக வளர்த்து வரும் அரசியல் கொள்ளைக் குடும்பங்களுக்கும், 'வாலாட்டி' சம்பாதித்து, அத்துடன் ஒதுங்காமல், 'தமிழ் உணர்வு, பார்ப்பன எதிர்ப்பு, பகுத்தறிவு' என்று 'வெளிச்சம்' போட ஒரு 'அசாத்திய துணிச்சல்' வேண்டும். 'சூது கவ்வும்' திரைப்படம் போல, ஒரு அபார வெற்றி நகைச்சுவை திரைப்படத்திற்கான 'சம்பவங்களை', அவர்களின் 'வாலாட்டல்', 'அசாத்திய துணிச்சல்' தொடர்பு அனுபவங்கள் மூலம் உருவாக்குவது சாத்தியமே.


அதாவது 'எந்த வழியிலாவது போட்டி போட்டு, மற்றவர்கள் பொறாமைப்படும் அளவுக்கு செல்வம், செல்வாக்கு சம்பாதிக்க, தமிழ்நாட்டில் 'அதிவேகமாக' வளர்ந்து வரும், 'சமுக ஓட்டப்பந்தயத்திலிருந்து' முட்டாள் பட்டம் பற்றி, கவலைப்படாமல், ஒதுங்கி, தமது இயல்பை ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளோடு வாழ்பவர்களுக்கு மட்டுமே இது போன்ற அனுபவங்கள் கிடைக்கும். சுயலாப நோக்கமற்ற அன்பு, உண்மை, நேர்மை போன்றவற்றை மனித உறவுகளில் காவு கொடுத்து, 'வாழ்வியல் புத்திசாலிகளாக'ப் பயணிப்பவர்களின் 'முகத்தில் முழிப்பதும் பாவம்; மனதில் நினைப்பதும் பாவம்' என்ற வகையில், இயன்றவரை புண்படுத்தாமல் ஒதுங்கி வாழ்ந்தால் தான், உள்ளர்ந்த ஈடுபாடுகளுடன்(Passions) எளிமையாக வாழ்ந்து, மேற்குறிப்பிட்டது போன்ற அனுபவங்களை பெற முடியும்.

என்னைப் போன்று வாழும் எனது நண்பர்களுக்கும் இது போன்ற அனுபவங்கள் உண்டு. வரும் காலத்தில் வாய்ப்பு கிடைத்தால், 'பாமா விஜயம்' திரைப்படம் போல, 'சமூக ஒப்பீடு நோய்' பற்றிய நகைச்சுவை திரைக்கதை அமைக்கும் உள்ளீடுகளாக, இது போன்ற விறுவிறுப்பான அனுபவங்கள் எனக்கும், எனது நண்பர்களுக்கும் கிடைத்து வருகின்றன.

உதாரணமாக, திரைக்கதைக்கான‌, ஒரு கற்பனைக் காட்சி;

சமூக ஒப்பீடு நோயில் சிக்கியவர்கள் வாழ்வில் கடைபிடிக்கும் 'வெற்றியின் இரகசியத்தை ஏற்கனவே பார்த்தோம்.

“நான்காவது இரகசியம்:  புதிதாக ஒரு நாயைச் சந்தித்தவுடன் சமூக ரீதியில் அந்த‌ நாய் தமக்கு சமமா?, கீழா? மேலா? என்று சில நொடிகளில் எடை போடும் திறமை வேண்டும்.மேலான நாய் எனில், அதற்கு உடனே வாலாட்டி, தம்மிடம் அந்நாய்க்குப் பயன்படும் திறமைகள் இருப்பதை உணர்த்தி நெருக்கமாக வேண்டும். கீழான நாய்களை தமக்குப் பயன்படும் என்றால், தம்மிடம் அந்நாய்களுக்கான எலும்புத் துண்டுகள் இருப்பதை உணர்த்தி வாலாட்ட வைக்க வேண்டும். பயன்படாத நாய்களை உடனே தள்ளி வைக்க வேண்டும்.சமமான நாய் எனில் அதை முடிந்த அளவுக்கு நம்மை விட கீழ் என்று மட்டம் தட்டுவதில் நிபுணராக இருக்க வேண்டும். அதாவது புதிதாக சந்திக்கும் நாயை எடை போட்டு தமது நலனுக்குப் பயன்படுத்திக் கொள்ளும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்.” (‘தமிழ்நாடு வீழ்ச்சியும் மீட்சியும்‍ - வெற்றிக்கான எலும்புத் துண்டு இரகசியம்’; http://tamilsdirection.blogspot.com/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_27.html )'எழுத்து, பேச்சு, கவிதை, பலவகைத் தரகு, வன்முறை அனுபவம்' போன்றவை மேற்குறிப்பிட்ட வாலாட்டலுக்குப் பயன்படுபவை ஆகும்.  

மேற்குறிப்பிட்டவற்றில், 'பயன்படாத நாயாகவோ' 'மட்டம் தட்டுவதற்குரிய' நாயாகவோ, நம்மைக் கருதும்  ஒரு 'வாழ்வியல் வெற்றியாளர்' ஒருவரை,  பொது இடத்தில் நாம் எதிர்பாராமல் அவரைச் சந்திக்க நேர்ந்த போது, அவ்வாறு அவர் நம்மை 'நடத்திக் கொண்டிருக்கையில்', அங்கு மிகவும் விலைமதிப்புள்ள ஒரு காரிலிருந்து 'செல்வாக்கு மிக்க' நபர் காரிலிருந்து இறங்கியவுடன், ,அவரிடம் மிகவும் பணிந்து,குழைந்து அந்த 'வெற்றியாளர்' பேசுகிறார். அவரைப் புழு போல் நடத்தும் அந்த நபர், நம்மைப் பார்த்ததும் மிகவும் அன்புடன் அவருக்கு முன்பு நாம் செய்த உதவியை நன்றியுடன் நினைவுகூர்ந்து, வணக்கம் தெரிவித்து விடைபெற்று செல்கிறார்.உடனே அந்த 'வெற்றியாளர்' நம்மிடம் குழைந்து, வாலாட்டத் தொடங்கியதும், அவர் பார்வையில் 'முட்டாளாக' வாழும் நாம்,  தர்ம சங்கடத்துடன் அவரை விட்டு விலக நேரிடுகிறது. அத்துடன் அந்த திரைக்காட்சி முடிகிறது.

அப்படி 'முட்டாளாக' வாழ்வதில் கிடைக்கும் 'அபூர்வமான' இன்பங்களை நான் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

“சமூக ஒப்பீடு நோயில் சிக்கி, செல்வம், செல்வாக்கு, பாராட்டு, புகழ்' போன்ற‌வற்றிற்கு ஏங்கி வாழ்வதைத் தவிர்த்து, தமது இயல்போடு ஒட்டிய உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் வாழ்பவர்களுக்கு கிடைக்கும் இன்பங்கள் தனித்துவம் (Unique)  வாய்ந்தவையாகும்.”

…………..   தமிழ்நாட்டில் அவரவர் சமூக நிலைக் ( Social Status)  என்று கற்பனை செய்து கொண்டு) கூண்டுகளில் சிக்கி, தம்மை விட மேலானவர்களுக்கு வாலாட்டி குழைந்தும், தம்மை விட கீழானவர்கள், அவர்கள் செல்லும் சாதாரண கடைகள், டீக்கடைகள் போன்றவற்றிற்கு செல்வதைத் தவிர்த்தும்,   சமூக மனித விலங்கு காப்பகத்தில்  (Social Human Zoo) சமூகக்  கூண்டுக்குள் வாழும் மனித விலங்காக‌ வாழாமல், டீக்கடையிலிருந்து  ஸ்டார் ஓட்டல் வரை தமது தேவை/பணிகள் நிமித்தம் அந்தந்த தேவைக்கான வாகனத்தில் பயணிக்கும், அதிகபட்ச சமூக நெடுக்கத்தில் (maximum Social Range)   ‘சுதந்திர’  மனிதராக - பிறர் நம்மை முட்டாளாக நினைத்தாலும் கவலைப் படாமல் - வாழ்வதும் ஒரு வகை இன்பமே ஆகும்.” ( இன்பத்தைத் திருடும் ஒப்பீடு’; http://tamilsdirection.blogspot.com/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_22.html ) மனதில் எந்த அளவுக்கு சுயலாப நோக்கு கணக்குகள் 'புராசசிங்'(processing) ஆகிறதோ, அந்த அளவுக்கு அந்த மனிதர்கள் எதிர் அதிர்வு மூல‌ங்களாவார்கள் (Sources of Negative vibrations) (https://veepandi.blogspot.com/2013/07/normal-0-false-false-false-en-us-x-none.html). அத்தகைய எதிர் அதிர்வு மூலங்கள், ஒப்பீட்டளவில், ஸ்டார் ஒட்டல் சூழலில் அதிகமாகவும், சமசீரற்ற வாட்டத்தில் (heterogeneous gradient)  படிப்படியாகக் குறைந்து, சாலையோர டீக்கடை சூழலில் சிறுமமாக(minimum)  இருப்பதையும் 'உணர்ந்து', 'அந்த ஆய்வினையும்'  'போனசாக'(Bonus)  அனுபவித்து வாழ்கிறேன்.

தமிழில் புலமையாளர்களும் இந்த நோயில் சிக்கி, 'செல்வாக்கு' இல்லாதவர்களின் ஆராய்ச்சிகளை 'அற்பமாக' மதிக்கும் தவறைச் செய்கிறார்கள்.சுமார் 20 வருடங்களுக்கு முன், அது போல தனது பார்வைக்கு வந்த திருக்குறள் தொடர்பான எனது ஆய்வுக்கட்டுரையை, 'அற்பமாக'கருதி, அதை மேலோட்டமாகப் பார்த்து, தான் படிக்கத் தகுதியற்றதாகக் கருதி, அக்கட்டுரையை கொடுத்தவரிடமே திருப்பிக் கொடுத்துவிட்டார் உலக அளவில் மதிப்பு மிக்க புலமையாளர் ஒருவர். பின் கடந்த சில வருடங்களுக்கு முன்,'செல்வாக்குள்ள' வெளிநாட்டு தமிழ்ப் பற்றாளர்களிடம் எனது திருக்குறள் ஆய்வைப் பற்றி அறிந்திருக்கிறார். அந்த வெளிநாட்டு நண்பர்களின் வற்புறுத்தலுக்காக, அதே திருக்குறள் ஆய்வுக் கட்டுரைகளை 'கொரியரில்' அவருக்கு அனுப்பினேன். அதைப் படித்து விட்டு, என்னைப் புகழ்ந்து எனக்கு அவர் மடல் அனுப்பினார். அவர் சுமார் 20 வருடங்களுக்கு முன் 'அற்பமாக'க் கருதி ஒதுக்கிய கட்டுரை தான் அது என்பதை அவருக்கு தெரிவித்து நான் அவரைப் புண்படுத்தவில்லை. அதுவும் ஒரு விறுவிறுப்பான அனுபவமே. 

அடுத்து கீழ்வரும் தகவலின் அடிப்படையில் ஒரு கற்பனை அனுபவம்.

ஆட்சியில் இருந்த போது, ஊழல் மூலம் சம்பாதித்தவற்றை, கைப்பற்றி நாட்டின் நலனுக்கு பயன்படுத்தும் போக்கு உலகில் வளர்ந்து வருகிறது. உதாரணமாக, பிலிப்பைன்ஸ் அதிபராக நீண்ட காலம் மார்கோஸ் குடும்பம் அடித்த கொள்ளையில்,ஒரு பகுதி ஸ்விஸ் வங்கியில் இருந்தது. அவர்களை ஆட்சியிலிருந்து அகற்றி, பொறுப்பேற்ற புதிய அரசு முயற்சி செய்து, அதை மீட்டுள்ளது.

(The Swiss government, initially reluctant to respond to allegations that stolen funds were held in Swiss accounts, has returned US$684 million of Marcos' wealth. http://en.wikipedia.org/wiki/Ferdinand_Marcos#cite_note-83 )

தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும், அந்தந்த மாவட்டத்தில் உள்ள அரசியல்வாதிகள், தமது மனசாட்சிக்குட்பட்டு,  தாம் 'அரசியலில் குறுக்கு வழிகளில்' சம்பாதித்த பணத்தில் பாதியையாவது, தாமாகவே அந்தந்த மாவட்ட அரசு பள்ளிகளின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தவும்,மற்ற மாவட்ட வளர்ச்சிப் பணிகளுக்கும் செலவு செய்தால்,எவ்வளவு நன்றாக இருக்கும்?

அதெப்படி அவர்கள் தாமாகவே செலவு செய்வார்கள்? என்ற கேள்விக்கு, கீழ்வரும் செய்தி விடையைத் தரலாம்.

செய்தியில் உள்ளபடி, உருகுவே அதிபர் ஜோஸ் முஜிகாவைப் போல, தமது மாத சம்பளத்தின் பெரும்பகுதியை ஏழைகளுக்கு நமது அரசியல்வாதிகள் வழங்க வேண்டாம். தமது மனசாட்சிக்குட்பட்டு, கொள்ளை அடித்த சொத்துகளில் குறைந்தது 50% பங்கை,  தத்தம் மாவட்டங்களின் வளர்ச்சிக்கு செலவு செய்யலாமே. அந்த 'சமூகப் பாவம்' காரணமாக, அவர்கள் குடும்பம் தற்போது வெளியில் தெரியாமல் (சில மாதங்களுக்கு முன் வெளிவந்த ஜீனியர் விகடன் கேள்வி-பதில் பகுதி தெரிவித்துள்ளதுபடி)  அனுபவித்து வரும்  'தண்டனைகளிலும்', அவர்களின் பரம்பரையும் அனுபவிக்க இருக்கும் ‘தண்டனைகளிலும்’  பாதியாவது அதனால் குறையாதா?

செய்தி:


உலகின் மிகவும் ஏழையான உருகுவே அதிபர் ஓய்வு

மொண்டிவிடேயோ: உலகின் மிகவும் ஏழை அதிபரான ஜோஸ் முஜிகா, 77, உருகுவே நாட்டு அதிபர் பதவியில் இருந்து ஓய்வு பெற்றார்.

மிகவும் எளிமையான, அனைவருடனும் இயல்பாக பழகக்கூடிய முஜிகா, தன்னுடைய ஐந்தாண்டு பதவிக் காலத்தில், நாட்டை பொருளாதார வளர்ச்சியடைய செய்து, சொந்த வாழ்வில் மிகவும் ஏழையானார்.

அதிபர் பதவிக்கான அனைத்து வசதிகளும் வழங்கப்பட்டபோதும், அவற்றை ஏற்க மறுத்து, அதிபர் மாளிகையில் வசிக்காமல், இரண்டு அறைகள் கொண்ட, தன் வீட்டில் மனைவி மற்றும் வளர்ப்பு நாயுடன் வசித்து வந்தார். பாதுகாப்புக்காக இரண்டு போலீசார் மட்டும் இருந்தனர். மாத சம்பளமாக வழங்கப்பட்ட, 13,300 டாலரில், 12 ஆயிரம் டாலரை ஏழை மக்களுக்கும், மீதமுள்ள 1,300 டாலரில், 775 டாலரை சிறுதொழில் செய்வோருக்கும் வழங்கி வந்தார்.தன்னுடைய வேலைகளை தானே செய்து கொள்ளும் முஜிகா, குடும்ப செலவிற்காக, மனைவியுடன் இணைந்து மலர் சாகுபடி செய்தார்.

அலுவலகத்திற்கு செல்லும்போது மட்டும் அதிபருக்கான உடையை அணிந்து, தன்னுடைய காரை தானே ஓட்டிச் செல்வார். மற்ற நேரங்களில் சாதாரண உடையில் காணப்படுவார். கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிபர் பதவியில் இருந்து முஜிகா ஓய்வு பெற்றதையடுத்து, ஆளும் பிராட் கட்சியை சேர்ந்த, தபாரே வாஜக்வேஜ், 75, அதிபர் மாளிகையில் பதவியேற்றுக் கொண்டார். இந்த விழாவில், பிரேசில் அதிபர் தில்மா ரோசெப், கியூபா அதிபர் ராவுல் காஸ்ரோ உள்ளிட்ட பல தலைவர்கள் பங்கேற்றனர்

No comments:

Post a Comment