Saturday, September 20, 2014

மூட நம்பிக்கையா? பல பரிமாணப் புலமையின் வெளிப்பாடா?

சிற்பம்,ஓவியம்,இசை,புராணங்கள் உள்ளிட்ட இலக்கியங்கள் என்பவை அவற்றை உருவாக்கியவர்களின் திறமைகளைப் பொறுத்து பல பரிமாணங்களை உள்ளடக்கியவையாகக் கொண்டிருக்கும். அவற்றை எந்த அளவுக்கு விளங்கிக் கொள்ள முடியும் என்பது ஒருவரின் அறிவு அனுபவத்தைப் பொறுத்ததாகும். ('புராணங்களில் உள்ள 'சிக்னல்கள்';
http://tamilsdirection.blogspot.com/2013/11/normal-0-false-false-false-en-us-x-none.html)

உதாரணமாக குளத்தில் உள்ள தாமரைப் பூவின் அழகில் மயங்கிய ஒரு ஓவியன், தான் ஏற்கனவே மிகவும் ரசித்த ஒரு நடன மங்கை அந்தத் தாமரைப் பூவின் மேல் நடனமாடுவது போல் - அந்த இரண்டு வகை அழகுகளுக்கிடையில் தான் ரசித்த தொடர்பை அடையாளக்குறியாக (Symbolic)  வெளிப்படுத்தி, - ஒரு ஓவியத்தை வரையலாம். அதில் அந்த நங்கையின் நடனத்திற்கான தாள அளவில் அந்தத் தாமரைப் பூவின் இதழ்களின் எண்ணிக்கை இருக்குமாறு அந்த ஓவியத்தை வரைந்திருக்கலாம்.அவளின் நடனத்திற்கான இசையில் ஆதாரச் சுருதியில் இசை எழுப்பும் வண்டு  ('ப' இசைச் சுரத்தில் ஒலிக்கும் வண்டு பற்றி சங்க இலக்கியம் கார் நாற்பது 15:3  விளக்கியுள்ளது )  அந்த தாமரைப் பூவில் தொட்டும் தொடாமலும் பறப்பதைப் போலவும் அந்த ஓவியத்தை வரைந்திருக்கலாம். அந்த ஓவியர் தத்துவத்திலும் புலமையாளராக இருப்பின், அந்தப் புலமையை அந்த மலரின் இதழ் அடுக்குகளிலோ அல்லது அதன் பின்புலத்திலோ அடையாளக்குறியாக (Symbolic)  வெளிப்படுத்தியிருக்கக் கூடும்.

அந்த ஒவியத்தின் நகலை ஒருவர் விரும்பி, விலைக்கு வாங்கி, தனது இல்ல வரவேற்பறைச் சுவற்றில் மாட்டியிருக்கலாம்.

அவர் விட்டில் உள்ள சுமார் 4 வயதுள்ள குழந்தை அந்த ஓவியத்தைப் பார்த்து, " அங்கேப் பாருங்க. ஒரு பூ மேலே அந்த பொம்பளை டான்ஸ் ஆடிக்க்கிட்டிருக்காங்க. பூ அவங்க எடையைத் தாங்குமா? " என்று கை கொட்டி சிரித்தால், பெரியவர்கள் யாரும் அந்த குழந்தையைத் தவறாக நினைக்க மாட்டார்கள். மாறாக 'நல்ல புத்திசாலி நீ" என்று அதனை ஊக்குவிப்பார்கள்.அந்தக் குழந்தையின் வயதில் மேற்குறிப்பிட்டவற்றை விளங்கிக் கொள்ள முடியாது.

அந்த குழந்தையைப் போல் வயதான எவரும் அந்த ஓவியம் பற்றி குறை சொன்னால், அவருக்கு அந்த ஓவியத்தை ரசிக்கும் அளவுக்கு அறிவில்லை என்று தான் அறிவுள்ளவர்கள் நினைப்பார்கள்.அதை அந்த நபரிடம் சொல்லி அவரைப் புண்படுத்துவதை நாகரிகமானவர்கள் விரும்ப மாட்டார்கள்.

அது தெரியாமல் அந்த நபர் தான் அந்த புகழ்பெற்ற ஓவியத்தில் ஒரு பெரும் குறையைக் கண்டுபிடித்துவிட்டதாக பெருமை பேச ஆரம்பித்தால் என்ன ஆகும்? அதை கைதட்டி பாராட்டும் அளவுக்கு நிறைய மனிதர்கள் அந்த நபரைப் போலவே அறிவில் குறைந்தவர்களாக இருந்தால் என்ன ஆகும்? அந்த நிலையில் தமிழ்நாடு இருக்கிறதா? இல்லையா? என்று ஆராய்வதற்கு இடம் உள்ளது. அந்த ஆராய்ச்சிக்கு உதவும் வகையில் அப்படிப்பட்ட 'முற்போக்கு' நபர்கள் வெளியிட்டுள்ள புத்தகங்களும், அவர்கள் கைதட்டல் வாங்கிய நிகழ்ச்சிகளில் பல இணையத்திலும், தடயங்களாக உள்ளன.

அது போன்ற ஓவியங்களும், சிற்பங்களும், கல்வெட்டுகளும் நிறைந்த வரலாற்று சிறப்பு மிக்க கோவில்கள் பல தமிழ்நாட்டில் உள்ளன.
தருமபுரி மாவட்டம் கம்பைநல்லூர் (12 ஆவது நூற்றாண்டைச் சேர்ந்த‌) சிவன் கோவில் சுவரில் உள்ள கல்வெட்டுகளில் ஒன்று பின்வருமாறு உள்ளது.
வா
சி
சி
வா   
ய    
சி
வா
சி
வா
  ம
 ய
சி
வா    

         

இக்கல்வெட்டு தமிழக தொல்லியல் துறையால் 1975 இல் வெளியிடப்பட்டது.  'ந ம சி வா ய' என்ற ஐந்தெழுத்துக்களும் ஏன் இவ்வாறு ஐந்து கிடைத்தள வரிசைகளில் இடம் பெற்றுள்ளன என்பது பற்றிய விளக்கம் புதிராக இருந்தது. பின்னர் கல்வெட்டு ஆராய்ச்சியாளரான எனது நண்பர் ஒருவருடன் சேர்ந்து,  மேற்கொண்ட ஆய்வில், அந்த ஐந்து எழுத்துக்களும் மோகன ராகத்தில் வரும் 'ச ரி க ப த' என்ற ஐந்து சுரங்களுடன் தொடர்புடையவை என்றும், சிலப்பதிகாரத்தில் உள்ள வட்டப் பாலை முறையில் பண்ணு பெயர்த்தல் மூலம் மேற்குறிப்பிட்ட கல்வெட்டில் உள்ள ஐந்து வரிசைகளையும் பெறலாம் என்று கண்டுபிடித்தோம். அந்த ஐந்து சுரங்களும் ஒன்றுக்கொன்று இசையில் 'கிளை' உறவில் இருப்பது பற்றிய சான்று சிலப்பதிகாரத்தில் உள்ளது. இவ்வாறு 'கிளை' உறவில் உள்ள ஐந்து சுரங்களில் 'ந ம சி வா ய' என்ற ஐந்து எழுத்துக்களையும் இசைக்க வேண்டும் என்பது பற்றிய சான்றானது பெரிய புராணத்தில் வரும் ஆனாயநாயனார் புராண‌த்தில் உள்ளது. 
சுருதி சுத்தமான கர்நாடக இசைக்கு புகழ்பெற்ற எம்.எஸ்.சுப்புலட்சுமி அவர்கள் தாம் சிறுமியாய் இருந்த காலத்தில்,  சுருதி சேர்க்கப்பட்ட தம்பூராவில் ‘ச – ப’  என்று கிளை உறவில் இருந்த சுரங்களில் இசை எழுப்பி, கூடவே பாடும் 'இசை விளையாட்டில்' ஈடுபட்டிருந்த தகவல்,  அவரின் வாழ்க்கை வரலாற்றில் உள்ளது. அதை விட,  கிளை உறவை அடிப்படையாகக் கொண்டு உருவான சுரங்களை  மேலேக் குறிப்பிட்ட கல்வெட்டில் உள்ள ஐந்து வரிசை முறையில் பாடிப் பயிற்சி எடுத்தால்,  சுருதி சுத்தமான குரல் வளத்தைப் பெறலாம்.

'ந ம சி வா ய' மூட நம்பிக்கை என்றும், பெரிய புராணம், சிலப்பதிகாரம்' போன்றவை தமிழர்க்குக் கேடானவை என்றும் கருதி, மேலேக் குறிப்பிட்ட ஆய்வுகளைப் புறக்கணிப்பவர்களுக்கும், மேலேக் குறிப்பிட்ட ஓவியத்தை ரசிக்கும் அறிவில்லாவருக்கும் வேறுபாடு உண்டா? எல்லோருக்கும் எல்லாவற்றிலும் அறிவிருக்க வாய்ப்பில்லை. ஆனால் தாம் விவாதிக்கும் பொருள் பற்றிய அறிவில் குறை இருக்கிறதா என்று அறிந்து, அக்குறையை நீக்கி, அறிவை வளர்த்துக் கொள்வது தானே புத்திசாலித்தனம். அந்த குறைபாட்டை உணர்ச்சிபூர்வ பேச்சுக்களால், எழுத்துக்களால் எத்தனை காலம் தான் மறைத்து ஏமாற்ற முடியும்?இது போன்ற போக்குகளால் தமிழரின் தர அடையாளத்திற்கு (benchmark) என்ன பாதிப்புகள் ஏற்படும் என்பது பற்றி அவர்கள் கவலைப்பட்டதுண்டா? 

அப்படிப்பட்ட புத்திசாலித்தனம் ‘ விரயம் waste’  என்று கருதி, செல்வாக்கான நபர்களுக்கு எந்த 'முறையில்' நெருக்கமாகி, அவர்களின் ஊழல், புலனின்பம் உள்ளிட்ட 'தேவைகளை' பூர்த்தி செய்யும் தரகுத் தொண்டு புலமையை வளர்த்து, செல்வம், செல்வாக்கு பெறுவது என்ற வகையிலான‌, 'வாழ்வியல் புலமையாளர்கள்' அதிகரிப்பது நாட்டிற்கு நல்லதா? (http://tamilsdirection.blogspot.in/2013_10_01_archive.html ) சமூகத்தில்,  அவர்களுக்கு  செல்வாக்கு வளர்வது உண்மையானால், தமிழ்நாட்டில், தமிழரின் புலமை தொடர்பான  தர அடையாளம் (bench mark) வீழ்ந்து வருவதை,  அது குறிக்காதா?

அந்த 'வாழ்வியல் புலமையாளர்கள்' தமது 'முன்னேற்றத்திற்காக’ எந்த வகையான குடும்ப உறவுகளையும், பாரம்பரியப் பண்பாடுகளையும் 'காவு' கொடுப்பது என்பதானது சமூகத்தின் தர அடையாளத்தை (benchmark) கீழிறக்காதா? தமிழ் மொழியையும், தமிழ் பாரம்பரியம், பண்பாடு, இலக்கியம் போன்றவைகளையும் 'தமிழர்க்குக் கேடாக' பிரச்சாரம் செய்ததால் வந்த பலனா இது? என்பதும் ஆய்விற்குரியதாகும்.  எனவே இத்தகைய தமிழரின் தர அடையாள வீழ்ச்சி எப்போது தோன்றி, எப்படி வளர்ந்து, இன்று என்ன நிலையில் உள்ளது என்று ஆராய்ந்து, உரிய தீர்வு முயற்சிகளில் ஈடுபட்டால் தான், தமிழ், தமிழர், தமிழ்நாடு வீழ்ச்சியிலிருந்து மீண்டு முன்னேற முடியும்.

Note: 'The study of the ancient Indian texts:
Probable pitfalls in the western based rationalist approach'; chttp://tamilsdirection.blogspot.sg/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_19.html

No comments:

Post a Comment