Saturday, September 27, 2014

  தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (3)   


சமூகத்தின் சீரழிவும், இலக்கணத்தின் வீழ்ச்சியும்



ஒரு மொழி மரணத்தை எதிர்நோக்கியுள்ள அபாயம் விளைவதற்குக் காரணமான அக விசைகளாக(Internal forces) , அம்மொழி மீது அம்மொழிபேசும் மக்களுக்குள்ள எதிர்மனப்பாங்கு (community’s negative attitude towards  its own language  ) இருப்பது பற்றிய ஆபத்தை முந்தையப் பதிவில் பார்த்தோம். தமிழ் மொழியின் இலக்கணத்தில் வெளிப்பட்டு வரும் வீழ்ச்சியும் தமிழின் வீழ்ச்சியோடும் தமிழரின் வீழ்ச்சியோடும் எவ்வாறு தொடர்பு கொண்டுள்ளது என்பதை இந்த பதிவில் பார்ப்போம். 

ஒரு மொழியில் உள்ள மொத்த விதிகளின் கூட்டே அம்மொழியின் இலக்கணமாகும்.( The sum of the total rules found in any one language is known as a grammar)  இலக்கணம் என்பதற்கு இரண்டு வகையான பொருள் உண்டு. அம்மொழி பேசும் மக்கள் இயல்பாக பயன்படுத்தும் விதிகள் தொடர்பான இலக்கணம் ஒரு வகையாகும்.இரண்டாவது வகை என்பது மொழியியலாளர் அந்த விதிகளை விதி அமைப்பிற்கு உட்படுத்துவதாகும். (grammar, a term which is often used interchangeably by linguists to mean two different things: first the rules applied subconsciously by the speakers of a language; secondly a linguist’s conscious attempt to codify these rules.) இலக்கணங்களில் மாற்றங்கள் நுற்றாண்டுகளிலும் நடக்கலாம்; ஒரு நபரின் வாழ்நாள் காலத்திற்குள்ளேயும் நடக்கலாம், (Grammars fluctuate and change over the centuries, and even within the lifetime of individuals).  (Page 16, - Language change : progress or decay?  Third edition – JEAN AITCHISON, Professor of Language and Communication, University of Oxford- Cambridge University Press - 2001)

தமிழைப் பொறுத்த மட்டில், சாதாரண மக்கள் மட்டுமின்றி, பிரபல எழுத்தாளர்களில் பெரும்பாலோர் தமிழ் இலக்கண நூல்களில் உள்ள‌ இலக்கண விதிகளைப் பின்பற்றுவதில்லை என்பதை உரிய சான்றுகளுடன் முனைவர் இரா.திருமுருகன் தனது 'மொழிப் பார்வைகள்' என்ற புத்தகத்தில் வெளியிட்டுள்ளார்.

இவ்வாறு இலக்கணத்தில் ஏற்படும் மாற்றங்கள் ஒரு சமூக அர்த்தத்தைப் பிரதிபலிக்கிறது என்பதைவிட உருவாக்குகிறது. எனவே சமூக மாற்றத்தில் அது ஒரு விசையாக (Force) இருக்கிறது. (  variation does not simply reflect,but constructs, social meaning, hence is a force in social change’ - 'Language variation, contact and change in grammar and sociolinguistics' by Tor A. Afrali & Brit Maihlum, Norwegian University of Science & Technology) எனவே தமிழ் மொழியின் இலக்கண விதிகள், தமிழர்களின் தகவல் பரிமாற்றத்தில் பலகீனமாகி வருவது என்பது தமிழர் சமூக வீழ்ச்சியின் விசையாக இருக்கிறது. இந்த பின்னணியில்  ஏற்கனவே பார்த்த, கீழ்வரும் தகவல் முக்கியத்துவம் பெறுகிறது. 

"A letter has both the acoustic dimension matching the vocal characteristics of the people related to the language and the visual dimension matching the writing skills of the people. In accordance with the changes in the mode of writing (& now typing) the shape of the letters would undergo changes unlike the acoustic dimension in which changes will be slow since the vocal characteristics would not change as much as in the mode of writing. Over a period of time depending on the changes in the life style, the vocal characteristics of the people might change. (Failure to the timely accommodation of the changes into the grammar rules might be one of the reasons for the widening gap between the modern Tamil and the language grammar)." ( http://musictholkappiam.blogspot.sg/2013/03/normal-0-false-false-false_29.html )

‘மக்களின் மொழியும் அவர்களின் அடையாளமும் நெருக்கமான தொடர்புள்ள‌வையாகும். தமது மொழி பயனற்றது என்று கருதும் மக்கள், தமது அடையாளமும் பயனற்றது என்றே கருதுவார்கள். அதன் விளைவாக அச்சமூகத்தில் சமூக சீர்குலைவு (social disruption), மனத்தளர்ச்சி (depression), தற்கொலை (suicide) , போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல்(drug use)  போன்றவை அதிகரிக்கும். ‘ (http://news.bbc.co.uk/today/hi/today/newsid_8311000/8311069.stm) 1970களில் தொடங்கிய ஆங்கிலவழிக்கல்வி பள்ளிகளின் புற்றீசல் வளர்ச்சி காரணமாக விளைந்த, தாய்மொழி அடிப்படையிலான அடையாளச் சிதைவே, சாதி அடையாளமானது, வரம்பு மீறிய சாதி வெறியாக, ஒரு வகை போதையாக, பள்ளி/கல்லூரி மாணவர்களிடையே,  வளர்ந்ததற்கு காரணமா? என்பதும் ஆய்விற்குரியதாகும். 

ஒரு மனிதரின் தாய்மொழி, பாரம்பரியம், பண்பாடு மற்றும் நிகழ்கால சமூக தேவைகள் ஆகியவற்றின் அடிப்படைகளிலான அடையாளகூறுகளுக்கு டையிலான சமநிலையானது (equilibrium), சீர்குலைவிற்குள்ளாகும்போது, வலுவிழந்த (தாய்மொழி) அடையாளக் கூறுகளின் 'ஈடுபாடுகள்' (interests), இயல்பாக வாய்ப்புள்ள அடையாள கூறு (சாதி,சாகசம்,etc) நோக்கி, இடப்பெயர்ச்சிக்குள்ளாகி, அந்த அடையாளக்கூறானது, 'அளவுக்கு மிஞ்சிய நஞ்சாக' மாறும் விளைவினை ஏற்படுத்துமா? என்ற ஆய்விற்குதவும் நாடாக, தமிழ்நாடு உள்ளது.

ஒரு மொழியின் இலக்கணம் என்பதும் அம்மொழி பேசும் மக்கள் சமூகத்துடன் நெருக்கமான தொடர்பு கொண்டுள்ளது. சமூகத்தில் ஏற்படும் மாற்றங்கள், மொழியிலும், குறிப்பாக இலக்கணத்திலும் மாற்றங்கள் ஏற்படுத்துவது பற்றி நிறைய ஆய்வுகள் நடந்துள்ளன. அம்மாற்றங்கள் வளர்ச்சியா, வீழ்ச்சியா என்பது அச்சமூகம் பெற்ற மாற்றங்கள் வளர்ச்சியா, வீழ்ச்சியா என்பதைப் பொறுத்ததாகும்.

ஒரு சமூகத்தில் உள்ள மக்கள் தமது தகவல் பரிமாற்றத்திற்கு தமது தாய் மொழியை எந்த அளவுக்கு பயன்படுக்கிறார்கள்? எந்த அளவுக்கு இலக்கண விதிகளைப் பின்பற்றுகிறார்கள்? போன்ற கேள்விகளும்; எந்த அளவுக்கு தமது பாரம்பரியம், பண்பாடு அடிப்படைகளிலான‌ சமூக நெறிமுறைகளை தமது வாழ்வில் பின்பற்றுகிறார்கள் என்ற கேள்வியுடன் தொடர்பு கொண்டுள்ளவையாகும். 

ஒரு சமூகத்தின் பாரம்பரியம், பண்பாடு அடிப்படைகளில் செயலில் உள்ள சமூக நெறிமுறைகளின் வலிமையும், அல்லது குறைபாடுகளும்,  அச்சமூகத்தின் தர அடையாள (benchmark) வலிமையாகவோ அல்லது குறைபாடாகவோ வெளிப்படும். ஒரு சரியான தர அடையாளமுள்ள சமூகத்தில், தொழில், வியாபாரம் உள்ளிட்ட துறைகளில் 'உரிய' தகுதியும் திறமையும் உள்ளவர்களே செல்வம் சம்பாதிக்க முடியும்.கல்வியில் தகுதியும் திறமையும் உள்ளவர்களே அச்சமூகத்தில் 'அறிவு' சம்பந்தப்பட்ட துறைகளிலும், அமைப்புகளிலும் மேல் நோக்கி முன்னேற முடியும். அந்த போக்கில் அவர்கள் தமது தகவல் பரிமாற்றத்திற்கு தமது தாய் மொழியை நல்ல‌ அளவுக்கு பயன்படுத்துவார்கள்; நல்ல‌ அளவுக்கு  இலக்கண விதிகளைப் பின்பற்றுவார்கள்

அதற்கு மாறாக, மேலேக்குறிப்பிட்ட எந்த வகை தகுதி, திறமைகளும் இல்லாமல், மனசாட்சியையும், ஒழுக்க நெறிமுறைகளையும் ஒதுக்கி வைத்து, எல்லா வகையான 'தரகு'(Broker) பணிகளிலும் எந்த அளவுக்கு தகுதி, திறமைகள் உள்ளதோ, அந்த அளவுக்கு செல்வம், செல்வாக்கு சம்பாதிப்பதும், 'அறிவு' சம்பந்தப்பட்ட துறைகளிலும், அமைப்புகளிலும் கூட, மேல் நோக்கி முன்னேறவதும் ஆன போக்கில் தமிழ்நாடு இருந்தால், என்ன விளைவுகள் ஏற்படும்?  அத்தகையோர் தமது தகவல் பரிமாற்றத்திற்கு தமது தாய் மொழியை சிதைத்துப் பயன்படுத்துவதும்,  இலக்கண விதிகளைப் பற்றிய கவலையின்றி விருப்பப்போக்கில் சிதைப்பதுமே அவ்விளைவுகளாகும்.

தமிழ்நாட்டில் அந்த பாதகப் போக்கு எப்போது தோன்றி, எப்படி வளர்ந்தது, இன்று என்ன நிலையில் உள்ளது என்பது ஆராய்ச்சிக்கு உரியதாகும்.

அந்த ஆராய்ச்சியுடன் நெருக்கமாகக் கீழ்வரும் ஆராய்ச்சியையும் மேற்கொண்டால் தான், தமிழ் மொழியின் மரணப்பயணத்தைத் தடுத்து நிறுத்தி, சரியான திசையை நோக்கி திசை திருப்ப முடியும்.

தொல்காப்பியம் தொடங்கி நன்னூல் வரை இலக்கண விதிகளில் நடந்துள்ள மாற்றங்களின் சமூக வரலாற்றுப் பின்னணி என்ன? அந்த விடையின் வெளிச்சத்தில், தமிழ்ச் சமூகத்தில் நடந்து வரும் மாற்றங்களை - குரலொலியிலும் vocal sounding, செவி உணர்விலும் aural perception, காட்சி உணர்விலும் visual perception, எழுத்து முறையிலும் writing methods ஏற்பட்டுள்ள மாற்றங்களையும் - கணக்கில் கொண்டு இலக்கண விதிகளிலும் மாற்றங்கள் செய்ய, உரிய முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதா? அத்தகைய முயற்சிகளுக்கே வழியில்லாதவாறு, 'திராவிட' அரசியலில், அடிவருடி போக்கில், தமிழ் சிறைபட்டுள்ளதா?
(http://tamilsdirection.blogspot.co.uk/2016/07/fetna.html )

மனிதரின் கால் மாற்றத்திற்குட்பட்டு, வளர்ச்சியில் பெரிதாகலாம்; அல்லது வீக்கத்தில் பெரிதாகலாம். எப்படியிருந்தாலும், காலுக்கு ஏற்றவாறு செருப்பைத் தானே பெரிது படுத்த வேண்டும். வீக்கத்தில் பெரிதாகியிருந்தால், விக்கம் வடிந்து, கால் இயல்பு நிலைக்குத் திரும்பியதும், செருப்பையும் பழைய நிலைக்கே திருத்தி அமைக்கலாம். வளர்ச்சியில் பெருகியிருந்தால், அதற்கேற்றார்ப்போல் செருப்பை செம்மையாகப் பெரிதுபடுத்துவது தானே புத்திசாலித்தனம். அதை பற்றிய புரிதலின்றி, இலக்கண விதிகளை 'பீடத்தில்' வைத்து, மாற்றங்களைக் கணக்கில் கொள்ளாமல்,  தமிழ் உயர் பீட  (Ivory Tower) புலமையாளர்கள்,  சாதாரண தமிழர்களை அந்த விதிகளில் சிக்க வைத்த முயற்சிகளும், அவர்களை இலக்கண விதிகளிலிருந்து தப்பி ஓடத் தூண்டியதா? அந்த 'உயர் பீட' புலமையாளர்களில் பலர்,  தமது குடும்பப் பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்து, வெளியில் தமிழ்வழி ஆதரவாளர்களாக 'காட்சி' கொடுத்தால், அவர்களை யார் மதிப்பார்கள்? எவ்வளவு உயர்ந்த செருப்பாயிருந்தாலும், காலுக்குப் பொருந்தவில்லையென்றால், காலை விட்டு விலகத்தானே நேரிடும். இந்த புரிதலின்றி, தனித் தமிழ் இயக்கங்கள் பயணித்து, பெரும்பாலான தமிழர்களிடமிருந்து அந்நியமாகி விட்டார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அந்த பெரும்பாலானவர்கள் 'நோயாளிகள்' என்றாலும், நோயாளிகளின் மேல் கோபப்படுவதா? அல்லது நோயை எவ்வாறு குணமாக்குவது என்று முயற்சிப்பதா? 

திறந்த மனதுடனும் அறிவு நேர்மையுடனும் மேற்குறிப்பிட்ட கேள்விகளுக்கான விடைகளைப் பெறுவதற்குக் கீழ்வரும்  முயற்சி துணை புரியலாம். 

 தமிழ்நாட்டில் வெளிவந்த இதழ்கள், புத்தகங்கள் 1944 வரை, 1944 முதல் 1949 வரை, 1949இலிருந்து 1967 வரை, 1967 இலிருந்து இன்று வரை என்ற காலக்கட்டங்களில், தமிழில் இலக்கண விதிகள் அந்த எழுத்துக்களில் எந்த அளவுக்குப் பின்பற்றப்பட்டன? என்ற ஆராய்ச்சி அவ்விடைகளைத் தரலாம். அந்த விடைகள் தமிழின் மரணப்பயணத்தைத் தடுத்து நிறுத்தி, வளர்ச்சியை நோக்கி திசை திருப்பும் வழிமுறைகளைக் கண்டுபிடிக்க உதவலாம்.

குறிப்பு:
தாய் மொழிப்பற்றை 'தாய்ப்பால் பைத்தியம்' என்று கேலி செய்து. 'தமிழ் காட்டுமிராண்டி மொழி' என அறிவித்து, 'தமிழ்ப் பாரம்பரியமும் பண்பாடும் தமிழர்க்குக் கேடானவை' என்று, தமக்குக் கிடைத்த சான்றுகளைக் கொண்டு, பெரியார் ஈ.வெ.ரா அவர்கள்,   தமது அறிவு அனுபவ அடிப்படையில், பிரச்சாரம் செய்தார். தமது நிலைப்பாட்டிற்கு எதிரான சான்றுகள் வெளிப்பட்டு, தமக்கும் அது சரியெனப்பட்டால், தமது நிலைப்பாடு தவறு என்று பகிரங்மாக அறிவித்து, தனது நிலைப்பாட்டை, அவர் மாற்றிக் கொண்டதற்கு பல சான்றுகள் உண்டு. உலகிலேயே வெட்கப்படாமல் அது போன்று தனது நிலைப்பாட்டை பகிரங்கமாக அறிவித்து மாற்றிக் கொண்டவர் பெரியார் ஈ.வெ.ரா  மட்டுமே, எனக்கு தெரிந்த வரையில்.ஒரு மொழியானது அம்மொழி பேசும் மக்களின் அடையாளத்துடனும், அச்சமூகத்தில் ஏற்படும் மாற்றங்களினுடனும், எவ்வளவு நெருக்கமாகத் தொடர்பு கொண்டுள்ளது, என்பது பற்றி உலக அளவில் வெளிப்பட்டுள்ள‌ சான்றுகளின் அடிப்படையிலும், பழந்தமிழ் இலக்கியங்கள் பற்றி வெளிவந்துள்ள எனது ஆய்வுகளின் அடிப்படையிலும், பெரியார் ஈ.வெ.ரா இன்று உயிரோடு இருந்தால், தமிழைப் பற்றிய மேற்குறிப்பிட்ட  தனது நிலைப்பாடுகள் தவறு என்று அறிவித்து, தனது நிலைப்பாட்டைத் திருத்திக் கொண்டிருப்பார், என்பதை எவராலும் மறுக்க முடியுமா?

No comments:

Post a Comment