Wednesday, September 24, 2014


        தமிழின் மரணப் பயணம் துவங்கி விட்டதா?

உலகில் தற்போது 7000 மொழிகள் பேசப்படும் மொழிகளாகக் கணக்கிடப்பட்டுள்ளன‌. 2100 ஆம் வருடத்திற்குள் உலக மொழிகளில் 90% மறைந்து விடும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளன‌.மக்களின் மொழியும் அவர்களின் அடையாளமும் நெருக்கமான தொடர்புள்ளவையாகும். தமது மொழி பயனற்றது என்று கருதும் மக்கள், தமது அடையாளமும் பயனற்றது என்றே கருதுவார்கள். அதன் விளைவாக அச்சமூகத்தில் சமூக சீர்குலைவு (social disruption), மனத்தளர்ச்சி (depression), தற்கொலை (suicide) , போதைப்பொருட்களைப் பயன்படுத்துதல்(drug use)  போன்றவை அதிகரிக்கும்

தமிழ்நாட்டில் பள்ளி கல்லூரி மாணவர்களிடையே போதைப் பொருட்களைப் பயன்படுத்துதல், தற்கொலை,மனத்தளர்ச்சி போன்றவை கடந்த சில வருடங்களில் அபரீதமாக அதிகரித்து வருவதைப் பத்திரிக்கைச் செய்திகள் உணர்த்துகின்றன. பணத்துக்காக குடும்பத்துக்குள் கொலை, வன்முறை, பிரிவு போன்றவையும் அபரீதமாக அதிகரித்துள்ளதும் செய்திகளாகவும் வெளிவந்துள்ளன.தமிழ்நாட்டில் சமூக சீர்குலைவும் அபரீதமாக அதிகரித்து வருவது வெட்ட வெளிச்சமாகிவிட்டது.

ஒரு மொழி மரணமடைவதற்கு முன் நடைபெறுவதுமொழி பலகீனமாதல்’ (Language attrition http://en.wikipedia.org/wiki/Language_attrition)  என்று குறிப்பிடப்படுகிறது. ஒரு மொழி பேசுபவர்கள் அதில் மற்றொரு மொழியைக் கலந்து பேசுவதும்,எழுதுவதும் எந்த அளவுக்கு அதிகரிக்கிறதோ, அந்த அளவுக்கு அம்மொழியின் பலகீனமாதல் போக்கு அதிகரிக்கும். அந்த பலகீனமாதல் போக்கின் உச்சமே அம்மொழியின் மரணத்தில் முடியும். ஒரு மொழியின் மரணம் என்பது "ஒருவரின் ஆன்மாவின் ஒரு பகுதியை இழப்பதைப் போன்றதாகும்."

தமிழ்நாட்டில் தரத்தில் முன்னணியிலுள்ள பொறியியல், மருத்துவக் கல்லூரிகளில் படிக்கும் தமிழ்க் குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களில் பெரும்பாலோர் ஆங்கிலத்தில் தான் தமக்குள் பேசிக் கொள்கின்றனர். அதில் தகவல் பரிமாற்ற சிக்கல் வரும் சமயங்களில் தமிழ்ச் சொற்களைப் பயன்படுத்துகின்றனர். கிராமங்களில் பேசும் மக்களின் மொழியில் ஆங்கிலச் சொற்கள் இடம் பெறுவது அபரீதமாக அதிகரித்து வருகிறது.தமிழில் கொச்சையாக பேச மட்டும் தெரிந்த, படிக்கத் தெரியாத மாணவர்களின் எண்ணிக்கையும் அதிக வேகத்தில் அதிகரித்து வருகிறது. அதற்குக் காரணம் அவர்களெல்லாம் விளையாட்டுப் பள்ளி முதல் ஆங்கிலவழியிலேயே படித்தவர்கள் ஆவர். விளையாட்டுப் பள்ளி முதல் ஆங்கிலவழியிலேயே குழந்தைகளைப் படிக்க வைக்கும் போக்கு கிராமங்களில் புற்றீசல் போல் வளர்ந்து வருகிறது. வாழ்க்கைக்கு, முன்னேற்றத்திற்கு தமிழ் பலனற்றது என்ற கருத்து குக்கிராமம் வரை பரவி விட்டது. ஒரு மொழியின் மரணத்தை நோக்கிய ஆபத்தை(Language endangerment)  விளைவிக்கும் அக விசைகளாக (Internal forces,) ‌, அம்மொழியினர் தமது மொழி 'பயனற்றது'(not worth retaining)  என்ற எதிர் உணர்வுப் பார்வை(negative attitude)  அமையும். -http://unesdoc.unesco.org/images/0018/001836/183699E.pdf - எனவே படிக்க மாணவர்களின்றி தமிழ்வழி அரசுப் பள்ளிகள் மூடப்படுவது அதிகரித்து வருகிறது. தமிழ்மொழியின் மரணத்திற்கு முதல்படியாக தமிழ்வழிக் கல்வி மரணமடைந்து வருகிறது. (குறிப்பு கீழே)

எனவேமொழி பலகீனமாதல்என்ற போக்கு, தமிழைப் பொறுத்தமட்டில் அதிவேகமாக உள்ளது. இந்திய மொழிகளில் இந்த போக்கில் தமிழ் முதலிடத்தில் இருந்தால் வியப்பில்லை. அது உண்மையென்றால் , 2100-க்கு முன்னேயே, இந்திய மொழிகளில் மரணமடைவதில், தமிழ் முதல் இடத்தைப் பிடித்தாலும் வியப்பில்லை

ஒரு மொழியின் மரணம் பொதுவாக பின்வரும் முறையில் நிகழ்கிறது.ஒரு மொழி பேசும் மக்கள் இன்னொரு மொழி பேசுபவராக மாறி, பின்னர் தமது பற்றை அந்த இன்னொரு மொழிக்கு மாற்றி, தமது மொழியைப் பயன்படுத்துவதைக் குறைத்து, கடைசியில் தவிர்ப்பதில் அம்மொழி மரணமடைகிறது. (The most common process leading to language death is one in which a community of speakers of one language becomes bilingual in another language, and gradually shifts allegiance to the second language until they cease to use their original (or heritage) language. http://en.wikipedia.org/wiki/Language_death )

தமிழில் மேற்சொன்ன நிகழ்வு தொடங்கிவிட்டது என்பதில் ஐயமில்லை. தமிழின் மரணம் எப்போது என்பதில் வேண்டுமானால் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். தமிழின் மரணத்திற்குப்பின் தமிழ்நாட்டில் தமிழர்கள் எப்படி இருப்பார்கள்? என்ற கேள்விக்கு விடையாகதமிழ்நாட்டில் இன்று வாழ்ந்து வரும் ஆங்கிலோ இந்தியர்கள் இருக்கின்றனர்.

குழந்தைகள் வளரும்போது, புலன் உணர்வுகள் தொடர்பான மூளை வளர்ச்சிக்கு, விளையாட்டுப் பள்ளி முதல் ஆர‌ம்பக் கல்வி வரை தாய்மொழியில் இருப்பதே நல்லது என்று உலகில் ஆய்வுகள் உணர்த்தியுள்ளன. (‘தமிழ்வழி வீழ்ச்சியும் மீட்சியும்’; https://tamilsdirection.blogspot.com/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_24.html) எனவே தமிழின் மரணத்தோடு தமிழர்களில் சாதனை புரியும் விஞ்ஞானிகள் உள்ளிட்ட சாதனையாளர்கள் உருவாகும் போக்கும் மரணமடைந்தால் வியப்பில்லை.

பாரம்பரிய பண்பாட்டு நெறிமுறைகளின்படி வாழ்வதை முட்டாள்த்தனமாகக் கருதி, செல்வாக்குள்ள நபர்களிடம் நாய்கள் போல் குழைந்து, தமது 'தரகுத்தொண்டு' திறமை மூலம் நெருக்கமாகி, செல்வம் செல்வாக்கு சம்பாதிக்கும் 'புத்திசாலித் தமிழர்கள்' வளர்ந்து, அவர்களின் ஆதிக்கத்தில் தமிழ்நாடு பயணிக்கையில், தமிழின் மரணப் பயணம் துவங்கி விட்டதில் வியப்புண்டோ?

 

குறிப்பு 1: வெளிவந்த ஒரு செய்தியும் இரண்டு கருத்துக்களும் http://tamil.thehindu.com/tamilnadu

ஒரே ஆண்டில் 2 ஆயிரம் மாணவர்கள் குறைந்தனர்: மூடப்படும் அபாயத்தில் அரசுப் பள்ளிகள் - 15 பள்ளிகளில் ஒற்றை இலக்கம்’ 

புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிகளில் கடந்த ஆண்டைக் காட்டிலும் நடப்பாண்டில் 2 ஆயிரம் பேர் குறைந்துள்ளனர். 15 தொடக்கப் பள்ளிகளில் ஒற்றை இலக்கத்தில் மாணவர்கள் உள்ளது கல்வித் துறை அதிகாரிகள் மற்றும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கருத்து 1 :மக்கள் முடிவே மகேசன் முடிவு ! அரசு பள்ளிகளுக்கு செல்வது TOTAL WASTE'என மக்கள் நினைக்கும் போது விழிப்புணர்வு ஏன்?

கருத்து 2 : தமிழ்வழி அரசுப் பள்ளிகள் படிக்க மாணவரின்றி மூடப்பட்டு வருகின்றன. ஆங்கில வழியில் தமது குடும்பப் பிள்ளைகளை படிக்க வைத்துக் கொண்டு, 'தமிழ் இன உணர்வில்' உணர்ச்சிகரமாக பேசும் தலைவர்கள் பேச்சைக் கேட்கும்போது, பத்திரிக்கைகளில் படிக்கும்போது, 'மாமா டிரவுசர் கழண்டிருச்சு' ('சூது கவ்வும்') திரைப்படப்பாடல் ஞாபகத்திற்கு வருகிறது.தமிழ் வழியைப் பிழைக்க வைக்க, 'தருமம் மறுபடியும் வெல்ல, 'தமிழ்/திராவிடக் கட்சிகளின் தலைவர்கள் முன்னுதாரணமாக தமது குடும்பப் பிள்ளைகளைத் தமிழ் வழியில் படிக்க வைப்பார்களா?



குறிப்பு: 2. ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்களில் பெரும்பாலோர் இந்தி தாய்மொழியிலேயே பள்ளிக்கல்வி கற்று,  இந்தியிலேயே நுழைவுத் தேர்வு எழுதியவர்கள் என்பது உண்மையா? தமிழில் ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வு நடந்தால், அதில் வெற்றி பெறுபவர்கள் தமிழ்வழி அரசுப் பள்ளி மாணவர்களாயிருந்தால் வியப்பில்லை. ஆனால் தமது குழந்தைகளை ஆங்கிலவழியில் படிக்க வைக்கும் தமிழ்/திராவிடத் தலைவர்கள் இக்கோரிக்கை நிறைவேற ('சடங்காக' குரல் கொடுக்காமல்)  பாடுபடுவார்களா?  தமிழ்நாட்டில் விளையாட்டுப் பள்ளி முதல் ஆங்கில வழியில் படித்த மாணவர்கள், 8- ஆவதிலேயே நுழைவுத் தேர்வு பயிற்சியைத் தொடங்கினாலும், ஐ.ஐ.டி நுழைவுத் தேர்வில் வெற்றி பெறுபவர்கள் மிகக்குறைவு என்பதும் உண்மையா? புத்திசாலி பெற்றோர்கள் விழித்து, தமது பிள்ளைகளை தமிழ்வழியில் படிக்க வைப்பார்களா?
 






No comments:

Post a Comment