Tuesday, December 6, 2016


முதல்வர் ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையும் மரணமும்;

சட்டமும், சமூக நெறிகளும் பற்றிய அபாய எச்சரிக்கைகள்



1967இல்நடந்த ஆட்சி மாற்றத்திற்குப் பின், ஊழல் அரசியலில், ஆதாயத்தொண்டர்கள் வலைப்பின்னலில் சிக்கி, அரசியல் நீக்கமானது (Depoliticize)  வளர்ந்த போக்கில்,  அரசியல் நீக்க(Depoliticize)  கட்டத்தில், கட்சி அரசியலுக்கு அப்பாற்பட்டு, மக்கள் வழிபாட்டிற்கு உரிய தலைவராக எம்.ஜி. ஆர் தனித்துவமாக பயணித்தார். அந்த திசையில் எம்.ஜி.ஆரின் சாதனைகளையும் விஞ்சி, ஜெயலலிதா பயணித்ததும், அண்ணா, எம்.ஜி.ஆர் மரணங்களிலிருந்து வித்தியாசப்பட்டு, மரண தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து இன்று வரை,  சட்ட ஒழுங்கு சீர் குலைவின்றி, கண்ணீருடனும் ஒழுங்குடனும், மக்கள் இரங்கலை வெளிப்படுத்திவரும் போக்கானது, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே முதல் முறையாக நடைபெறும் அதிசய இரங்கலாகும். 

தமிழ்நாட்டு அரசியலில் 1967இல் ஏற்பட்ட திருப்பு முனையை விட, 2016இல் முதல்வர் ஜெயலலிதாவின் மரணமானது, அதை விட அதிக முக்கியத்துவம் வாய்ந்த திருப்புமுனையாக,  வரலாற்றில் நிரூபணமாகும் என்பது எனது கணிப்பாகும். 1967 ஆட்சிமாற்றத்திற்கு விதையாக, 1944இல் அரங்கேறிய, 'இந்தியர்' அடையாளத்திற்கு எதிரான திசையில், 'வெறுப்பு' அரசியலில், பயணித்த 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளக் குழப்பங்களையும் மரணத்திற்குள்ளாக்கி, 'தமிழும், தமிழரும், தமிழ்நாடு' மீள்வதற்கு ஒரே வழியாக, 'இந்தியர்' என்ற அடையாளத்துடன் இணக்கமாக, ஆக்கபூர்வ வளர்ச்சி நோக்கிய திசைமாற்றத்தின் துவக்கமாக முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் நிரூபணமானால் வியப்பில்லை. அந்த திசை மாற்றத்திற்கான சமூக செயல்நுட்பத்தில் (Social Mechanism)  எம்.ஜி.ஆரும், ஜெயலலிதாவும் எவ்வாறு பங்களித்துள்ளார்கள்? என்பதும் ஆய்விற்குரியதாக அமையும்.
 


தமிழில் 'இனம்', 'சாதி' ஆகிய சொற்களின் பொருள் திரிந்து, 1944இல் அறிவுபூர்வ போக்குகள் தடம் புரண்டு, உணர்ச்சிபூர்வ போக்குகள் முளை விடும் திருப்புமுனையை கண்டுபிடிக்கும் ஆய்வில், நான் ஈடுபட்டதும், ஜெயலலிதா முதல்வர் ஆனதன் பின் விளைவுகளாகும். 'பெரியார்' ஈ.வெ.ரா அவர்களை போலவே, பிறரின் சூழ்ச்சிகள் காரணமாகவோ, அல்லது 'இயல்பான' வரலாற்று நிகழ்வுகள் காரணமாகவோ, சொந்த பந்த ‘உறவறுந்த’‌ தலைவராகவே, ஜெயலலிதா அவர்களும் மறைந்துள்ளார்.

மறைந்த முதல்வர் ஜெயலலிதா   74 நாட்கள் அப்போல்லா மருத்துவமனையில் இருந்து, சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது இறப்பை அறிவிக்கும் முன், அந்த மருத்துவ மனையிலிருந்த நோயாளிகள் அனைவரும், ஆம்புலன்ஸ்கள் மூலம், பிற மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பபட்டன. இது போன்ற நிகழ்வானது, நானறிந்த வரையில், இந்தியாவிலோ, உலக அளவிலோ, இதற்கு முன் நடந்ததாக தெரியவில்லை.

மேற்குறிப்பிட்ட ஒளிபரப்பை பார்த்த பிற மாநிலத்தவர்களும், உலக மக்களும், தமிழர்களை பற்றியும், தமிழ்நாட்டைப் பற்றியும் என்ன நினைத்திருப்பார்கள்?

மருத்துவமனை நிர்வாகத்திடமும், மருத்துவர்களிடமும், தொலைபேசியில் கேட்டு பெறக்கூடிய தகவல்களை, கவர்னர் உள்ளிட்டு மத்திய அமைச்சர்களும், கட்சித் தலைவர்களும் மருத்துவமனைக்கு சென்று, அத்தகவல்களை பெற்று,  மருத்துவமனை முன் தொலைக்காட்சி பேட்டிகளாக, 74 நாட்களிலும்  ஒளிபரப்பியதானது, பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே எந்த அளவுக்கு கேலிக்குள்ளானது? என்பதை அவர்களின் சமூக வலைதள பரிமாற்றங்கள் வெளிப்படுத்தின.

நேரு, 'பெரியார்' ஈ.வெ.ரா, அண்ணா உள்ளிட்ட தலைவர்கள் போல, உலகில்  பல தலைவர்கள் மருத்துவமனைகளில் சிகிச்சையில் இருந்து, சிகிச்சை பலனின்றி உயிர் விட்டிருக்கின்றனர். ஆனால் அவர்கள் சிகிச்சையில் அவசர கவனிப்பில்(ICU) இருந்த போதும் கூட, அவர்களை கட்சித்தலைவர்கள் உள்ளிட்டு எவரும் பார்க்க கூட முடியாதபடி தடுக்கப்பட‌வில்லை. ஆனால் இந்திய அரசியல் சட்டப்படி, கவர்னரின் கண்காணிப்பில் முதல்வராக பணியாற்றும் தகுதி உள்ள வரையில் மட்டுமே, ஒருவர் முதல்வராக இருக்க முடியும், என்ற நிலையிலும், தமிழக கவர்னர், தமிழ்நாடு முதலமைச்சரைப் பார்க்க, அப்போல்லா மருத்துவமனை சென்று, முதல்வரை பார்க்க முடியாமல் திரும்பியது யார் குற்றம்? ஒன்று, தனது கடமையிலிருந்து கவர்னர் தவறியிருக்க வேண்டும். அல்லது அவரை தடுத்த 'சக்தி'யானது, தமிழ்நாட்டில் இந்திய அரசியல் சட்டத்தை விட, வலிமையான, வெளி அரசியல் சட்ட சக்தியாக (Extra-Constitutional Authority) இருக்க வேண்டும். ((“It is now almost certain that none of Jayalalithaa’s cabinet colleagues had any knowledge of what was going on inside the hospital. Even constitutional functionaries like the Governor could not ascertain the exact health condition of Jayalalithaa.”; http://swarajyamag.com/politics/tamil-nadu-politics-at-the-crossroads-where-does-it-go-from-here & http://www.indiatvnews.com/news/india/was-sasikala-giving-slow-poison-to-jayalalithaa-tehelka-report-says-so-13994.html  ) தமிழ்நாட்டில் தொழில் முதலீடு செய்பவர்கள் எல்லாம்,'அதீத கமிசன்' ஊழலுக்கு பயந்தே, தயங்குவதாக, பிரதமர் மோடி, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவை எச்சரித்த தகவலும், மேலே உள்ள (மாணவர்களின், இளைஞர்களின் சமூக வலை தளங்களில் 'வைரலாக' (viral) பரவி வரும்) 'தெகல்கா' செய்தியில் உள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிக்க, ஊழலே முக்கிய காரணம், என்றும் தெரிகிறது.

இது பற்றி எந்த கட்சித்தலைவரோ, அல்லது பத்திரிக்கைகளோ கவலைப்பட்டு கண்டித்ததாக தெரியவில்லை. தமிழ்நாடு உயர்நிதிமன்ற தலைமை நீதிபதி, இதனை சுயபார்வை (suo motu)  வழக்காக கருதி, விசாரிக்க முனைந்ததாகவும் தெரியவில்லை.

மெரினா கடற்கரையில் புதிதாக சிலை வைக்கக்கூடாது என்ற உயர்நீதிமன்ற தீர்ப்பை புறக்கணித்து, அன்றைய முதல்வர் கருணாநிதி, நடிகர் சிவாஜிக்கு சிலை வைத்தாரா? அதற்காக அந்த முதல்வர் மீது, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடுக்க, 'அஞ்சி' உயர்நீதி மன்றம் பின் வாங்கியதா? என்ற ஆய்வே, மேலே குறிப்பிட்ட கேள்விக்கான விளக்கத்தைத் தரும்.

ஜெயலலிதா அப்போல்லோ மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற காலத்தில், தி.மு.க தலைவர் கருணாநிதி காவேரி மருத்துமனையில் சிகிச்சையில் இருந்த போதும், அவரையும் எவரும் 'பார்க்க கூட முடியாமல்', மருத்துவ மனைக்கு சென்று, திரும்பியதாக வெளிவந்த செய்திகள் உண்மையென்றால், இது 'திராவிட அரசியலில்' புதிதாக அரங்கேறியுள்ள 'பண்பாடா'? என்ற கேள்வி எழும்.

அதே போல, ஜெயலலிதாவின் அண்ணன் மகள், அப்பல்லோ மருத்துவமனை சென்ற போது, ஜெயலலிதாவை பார்க்க விடாமல் தடுத்ததாக, 'சசிகலா' மீது குற்றம் சுமத்திய செய்தியும் ஊடகங்களில் வெளிவந்துள்ளன.இந்த செய்தி வந்தவுடன், அது எவ்வளவு பெரிய சமூக குற்றம்? என்பதை சசிகலாவின் உறவினர்களில், நண்பர்களில் எவராவது உணர்ந்து, அதனை சசிகலாவின் கவனத்திற்கு கொண்டு சென்றார்களா? இல்லையா? அந்த சமூக குற்றத்தை பற்றி, எந்த கட்சித் தலைவர்களோ, பத்திரிக்கைகளோ கவலைப்பட்டு கண்டித்தார்களா? அவ்வாறு கண்டித்திருந்தால், தனது அத்தை முகத்தை உயிரோடு மருத்துவமனையில் ‍‍ 74 நாட்கள் இருந்த‌போதே பார்க்க முடியாத நிலைமை, அந்த பெண்ணுக்கு வந்திருக்குமா? "திங்கட்கிழமை இரவு ஜெயலலிதா மரணமடைந்த பின்னர் நடைபெற்ற இறுதிச்சடங்கிலும் ஜெயலலிதாவின் ரத்த சொந்தங்கள் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை. கடைசி வரை போயஸ்தோட்டத்திற்கு தீபாவை நுழைய விடவில்லை." என்பதும் நடந்திருக்குமா?
(http://tamil.oneindia.com/news/tamilnadu/jayalalitha-s-brother-s-daughter-could-not-pay-last-tribute-269103.html ) 

“ராஜாஜி ஹாலில் முதல்வர் பன்னீர்செல்வம் மற்றும் அதிமுக அமைச்சர்கள், நிர்வாகிகள் அனைவரும் ஜெயலலிதா உடலுக்கு கீழே படிக்கட்டுகளில் அமர்ந்திருக்கிறார்கள். ஆனால் ஜெயலலிதா உடலைச் சுற்றி அவர் யாரையெல்லாம் துரோகிகள் என சுட்டிக்காட்டினாரோ அவர்கள்தான் நிற்கிறார்களே... இது எவ்வளவு பெரிய துரோகம்... கொடுமை என கொந்தளிக்கின்றனர் அதிமுக நிர்வாகிகள்.”( http://tamil.oneindia.com/news/tamilnadu/admk-men-upset-over-sasikala-s-relatives-rajaji-hall-269130.html ) முதல்வர் ஜெயலலிதாவிற்கு எதிராக சதி செய்ததாக, சசிகலாவை போயஸ்கார்டனிலிருந்து துரத்திய செய்தியானது, தொலைக்காட்சி உள்ளிட்ட ஊடகங்களில் வெளிவந்தன.பின அச்சதியில் தனக்கு பங்கில்லை என்றும், அச்சதிகாரர்கள் முகத்தில் இனி முழிப்பத்தில்லை என்றும் சத்தியம் செய்தபின், மீண்டும் சசிகலா போயஸ்கார்டனில் அனுமதிக்கப்பட்டார். அப்பல்லோவில் எப்படி அந்த சதிகாரர்களை மட்டும் சசிகலா அனுமதித்தார்? அமைச்சர்களையும், கவர்னரையும் கூட ஏன் அனுமதிக்கவில்லை? 74 நாட்கள் ஜெயலலிதா முகத்தை புகைப்படம்/வீடியோ மூலமாக கூட காட்டவில்லை? எம்.ஜி.ஆர் அமெரிக்காவில் சிகிச்சை பெற்றபோது கூட, அவர் சிகிச்சை பெறும் வீடியோ வெளிவரவில்லையா? இவை எல்லாம் ஊடகங்களில் வெளிவந்து, குக்கிராமங்கள் வரை ஊடுருவி விட்டன. இப்போது சசிகலாவை கட்சியின் பொதுச்செயலளாராக்க வேண்டும் என்று குரல் கொடுப்பவர்களைப் பற்றியும், அதை ஆதரிக்கும் வைகோ, கி.வீரமணி போன்ற பிறகட்சிகளின் தலைவர்களைப் பற்றியும், மக்கள் என்ன நினைப்பார்கள்? அடுத்த சட்டசபை தேர்தலில் அது எதிரொலிக்காதா?
 

தமிழ்நாட்டில் மக்கள் செல்வாக்குள்ள ஒரே தலைவராக இருந்த ஜெயலலிதாவின் மறைவானது ஏற்படுத்தியுள்ள அரசியல் வெற்றிடத்தில், மேலே குறிப்பிட்ட காரணங்களாலும், ஆட்சியில் பதவி வேண்டுபவர்களாலும் உருவாகி, வளரும் அ.இ.அ.தி.மு.கவினரின் 'கொந்தளிப்பும்', வேலையில்லா திண்டாட்ட அதிகரிப்பில், மேலே குறிப்பிட்ட 'தெகல்கா' செய்தி மூலம் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் வளரும் கொந்தளிப்பும், எப்போது 'குறைந்த அரசியல் காற்றழுத்த தாழ்வு மண்டிலமாகி', 'அரசியல் புயலை உருவாக்கப் போகிறது? அந்த அரசியல் புயலில் எந்தெந்த கட்சிகளும், தலைவர்களும் சுவடின்றி மறைவார்கள்? போன்றவை தொடர்பான 'அறிகுறிகளை' கவனிக்காமல்; 

தமிழ்நாட்டில் பா.ஜ.க உள்ளிட்டு அனைத்து கட்சித் தலைவர்களும் மேலே குறிப்பிட்ட தவறுகளை, கண்டு கொள்ளாமல் இருப்பதன் மூலம், மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் உண்மையான விசுவாசிகள் மட்டுமின்றி, தமிழக மக்களின் அதிகரிக்கும் ‘அரசியல் நீக்க'  (Depoliticize) வெறுப்புக்கும், புறக்கணிப்புக்கும் உள்ளாக போகிறார்களா? சென்னை வெள்ள நிவாரணத்தின் மூலம் வெளிப்பட்ட இளைஞர்/மாணவர் சக்திகள் எல்லாம், அரசியல் வானிலும் வெளிப்படுவதற்கு வழி வகுக்கும் வகையில், அவர்கள் பயணிக்கிறார்களா?

1973இல் எனக்கு திருமணமானபின்,  ஒரு சமயம் எனது மாமனாருடன் காரில், சென்னை தி.நகரிலிருந்து அண்ணா மேம்பாலம் நோக்கி, சென்று கொண்டிருந்தோம். காரை ஓட்டிய நபர், போக்குவரத்து விதிக்கு மாறாக (One Way), அண்ணா மேம்பாலத்தில் காரை ஓட்டியபோது, நான் அதை எச்சரித்தேன். அதை என் மாமனாரும், காரை ஓட்டிய நபரும் கண்டுகொள்ளவில்லை. 

1967 வரை 'வைப்பாட்டி/'துணைவி'(?)யுடன் வாழ்ந்ததால், தனது தந்தையின் கோபத்திற்குள்ளாகி, ஊரை விட்டு ஓடி, தலைமறைவாக பணக் கஷ்டத்துடன் வாழ்ந்த என் மாமானாரின் சமூக நிலையானது(Social Status), அவரின் நண்பர் நாமக்கல்லில் பள்ளி ஆசிரியராக இருந்த‌ முத்துச்சாமி, 1967இல் அண்ணா ஆட்சியில் அமைச்சரான பின், என் மாமனார் பணத்திலும், செல்வாக்கிலும் சமூக நிலையில் வளர்ந்து (தமிழ்நாட்டில் சமூக நிலையானது 'திரிதலுக்கு' உள்ளாகி), பின் தனது தந்தையுடன் நேசமானவர் என்பதை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.( http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html ) அந்த காரை ஓட்டிய நபரோ, அன்றைய போலிஸ் டி.ஐ.ஜியின் மகன். 

போக்குவரத்து விதியை மீறி, காரை ஓட்டுவதை எச்சரித்த என்னை, அவர்கள் இருவரும் கண்டுகொள்ளாத போக்கில், 1967க்குப்பின் தமிழ்நாடு அந்த போக்கில் தொடங்கி பயணித்ததன் தொடர்ச்சியே, சசிகலாவும், தி.மு.க தலைவர் கருணாநிதியும், அவர்களைப் போலவே இன்னும் பலரும், மேலே குறிப்பிட்டது போன்ற தவறுகளில் ஈடுபட காரணம் என்பது என் கருத்தாகும். சமூகநெறிமுறைக்கும், சட்டத்திற்கும் கட்டுப்பாட்டு வாழ்வது முட்டாள்த்தனமோ? என்ற கேள்வி எழும் அளவுக்கும், சமூகசெயல்நெறி மதகுகளின் செயல்பாடுகள் சீர் குலைந்துள்ளன.( http://tamilsdirection.blogspot.in/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_18.html ) சமூகத்தில் படித்தவர்கள், மற்றும் பதவியிலும், வசதியிலும் உயர்ந்தவர்களில் கணிசமானோரின் 'ஒத்துழைப்பின்றி'(?), சில தனிநபர்களின் 'சாதனைகளாக'(?) தமிழும், தமிழர்களும், தமிழ்நாடும் சீரழிய வாய்ப்புண்டா? அண்ணா அமைச்சரவையில் இருந்த நாமக்கல் முத்துச்சாமியின் வைப்பாட்டி/'துணைவியின் மகளை, 'மேலே குறிப்பிட்ட' தனது மகனுக்கு, அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆர் சத்யா ஸ்டுடியோவில் நடத்தி வைத்த  (மரணமடைவதற்கு முன் நடத்தி வைத்த கடைசி திருமணம்) திருமணம் மூலம் 'சம்பந்தியாகி', ஜானகி எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான எனது மாமனாரை அனுசரித்து நான் வாழ்ந்திருந்தால், எந்த பண நெருக்கடியையும், அவமானங்களையும் சந்திக்க நேரிட்டிருக்குமா? அவ்வாறு 'சமூக இழிவான சமரசத்துடன்', 'செல்வம், செல்வாக்குடன்' வாழத் தொடங்கியபின், தமிழ்நாட்டில் சட்டமும், சமூக நெறிகளும், சுயநலத்திற்காக 'காவு' கொடுக்கப்படுவதை, அதன் தொடர்விளைவாக, தமிழ்நாட்டின், தமிழரின், தமிழின் சீரழிவைப் பற்றி எழுதும்,பேசும் அருகதை எனக்கு இருக்குமா? அவ்வாறு 'ஒத்துழைத்து' பலன் பெறும் நோக்கமின்றி, 'விரும்பி' அது போன்ற நெருக்கடிகளையும், அவமானங்களையும் சந்தித்திருக்காவிட்டால், இது போன்ற பதிவுகள் வெளிவந்திருக்க வாய்ப்புண்டா? மேலே குறிப்பிட்ட 'சமூக இழிவான சமரசத்துடன்', 'பார்ப்பன எதிர்ப்பு, தமிழ் உணர்வு, சமூக நீதி' போன்ற முகமூடிகளுடன் தமிழ்நாட்டின் சீரழிவிற்கு துணை போகும் சமூக கிருமிகளை, வேறு யாராவது எதிர்த்து வருகிறார்களா? என்ற கேள்விகளை, மனசாட்சியுள்ள, தமிழின் மீதும், தமிழர்கள் மீதும், தமிழ்நாட்டின் மீதும், சுயலாப‌ நோக்கற்ற அக்கறையுள்ள தமிழர்களின் பார்வைக்கு விட்டு விடுகிறேன். 

அவ்வாறு இழப்புகளையும், அவமானங்களையும் 'விரும்பி' அனுபவித்து, எனது 'உள்ளார்ந்த ஈடுபாடுகளோடு' (Passions)  நான் பயணித்ததாலேயே, உலகின் கவனத்தை ஈர்த்து வரும் ஆய்வுகளோடு நான் வாழ முடிந்தது; (http://tamilsdirection.blogspot.in/2016/11/normal-0-false-false-false-en-in-x-none.html & http://tamilsdirection.blogspot.in/2015/12/normal-0-false-false-false-en-us-x-none_21.html) பணத்திற்கு விலை போகாத, வணங்கத்தக்க மனிதர்களையும், சாதனையாளர்களையும் உள்ளடக்கிய சமூக வட்டத்தின் ஆதரவுடனும், அன்புடனும். அது மட்டுமல்ல,சுமார் 50 வயதுக்கும் அதிகமானவர்களிடமிருந்து 'அந்நியமாகி' பயணிக்கும் மாணவர்களும், இளைஞர்களும்,விதி விலக்காக, என்னை போன்று வாழ்பவர்களிடம் கருத்து பரிமாற்றம் (interact)  செய்யும் அதிசயத்தையும் அனுபவித்து வருகிறேன். எனவே எனது பயணத்தில் சந்தித்து வரும் 'தனித்துவமான' இழப்புகளுக்காக, நான் கவலைப்படுவதில் அர்த்தமுண்டோ? 

எனவே அவர்களை மட்டுமே குறை சொல்லுவது சரியாகாது. நமது சுயநலனுக்காக, அது போன்ற தவறுகளை கண்டு கொள்ளாமல், பயணிக்கும் நாம் ஒவ்வொருவரும், உலக அளவில் தமிழரைப் பற்றியும், தமிழ்நாட்டைப் பற்றியும் இழிவான கருத்து உருவாவதற்கு காரணங்கள் ஆவோம். எனவே பிறரை குறை சொல்லும் முன், நாம் ஒவ்வொருவரும், மனசாட்சியுடனும், அறிவு நேர்மையுடனும், திறந்த மனதுடனும், நம்மை சுயவிமர்சனம் செய்து கொண்டாக வேண்டும். அப்போது தான், சுயலாப நோக்கின்றி, தமிழின், தமிழரின், தமிழ்நாட்டின் மீட்சிக்கு, நாம் பங்களிப்பு வழங்க முடியும்.

Note: I support “'Why secrecy about Jayalalithaa's death?' Gautami asks Modi to probe”
http://www.newindianexpress.com/states/tamil-nadu/2016/dec/09/why-secrecy-about-jayalalithaas-death-gautami-asks-modi-to-probe-1547142.html


Also  visit;  https://groups.yahoo.com/neo/groups/akandabaratam/conversations/messages/70460
 

அவசியம் படிக்க வேண்டிய ஆழமான கட்டுரை: 

‘தமிழ்நாட்டுக்கு ஜெயலலிதா விட்டுச்சென்றது என்ன?’
சமஸ்
http://tamil.thehindu.com/opinion/columns


“திராவிட இயக்கத்தின் முதல் முதல்வரான அண்ணாவும் ஜெயலலிதாவின் முன்னோடி எம்ஜிஆரும் ஆட்சியில் இருக்கும்போதே இறந்தனர். ஆயினும், அன்றைய நெருக்கடிகளுடன் ஒப்பிட முடியாத சூழல் இன்றைக்கு உருவாகியிருப்பதாகவே தோன்றுகிறது.” என்று குறிப்பிட்ட சமஸ்;


"அண்ணா, எம்.ஜி.ஆர் மரணங்களிலிருந்து வித்தியாசப்பட்டு, மரண தகவல் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டதிலிருந்து இன்றுவரை,  சட்ட ஒழுங்கு சீர் குலைவின்றி, கண்ணீருடனும் ஒழுங்குடனும், மக்கள் இரங்கலை வெளிப்படுத்திவரும் போக்கானது, தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவிலேயே முதல் முறையாக நடைபெறும் அதிசய இரங்கலாகும். " என்பது பற்றி சமஸ் கவனிக்காமல் விட்ட, கட்டுரையின் முக்கிய படுகுழிகள்(pitfalls) தொடர்பாக, திறந்த மனதுடன் ஆய்வில் ஈடுபட்டால், தமிழ்நாட்டின் மீட்சிக்கான வெளிச்சம் கிடைக்க வாய்ப்பிருக்கிறது.
 

No comments:

Post a Comment