Saturday, December 31, 2016


திராவிட தேர்தல் அரசியலை தொடங்கி வைத்தவர் அண்ணா;


முடித்து வைப்பவர் சசிகலாவா? 

நாமெல்லாம் உப்பு போட்டுச் சாப்பிடலையா?


1944இல் 'திராவிடர் கழகம்' தொடங்கிய ஈ.வெ.ரா அவர்கள், 'தேர்தல் அரசியலில்' தமது கட்சி பங்கேற்காது;

என்று இருந்த நிலையில் குறை கண்டு, அண்ணாவும், அவரின் ஆதரவாளர்களும், திராவிடர் கழகத்தில் இருந்து பிரிந்து;

'திராவிடர்' என்ற சொல்லில் இருந்த 'ர்' ஐ நீக்கி, அந்த அடிப்படையில் பிராமணர்களையும் 'திராவிட தேர்தல் அரசியலில்' அனுமதித்து, 'திராவிட முன்னேற்ற கழகம்' 1949இல் தொடங்கினர்.

அதன் மூலம் 'திராவிட தேர்தல் அரசியலானது' தமிழ்நாட்டில் அறிமுகமானது. அவ்வாறு தேர்தல் அரசியலில் பயணித்து, ராஜாஜியின் துணையோடு பயணித்து, 1967இல் தி.மு.க ஆட்சியில் அமர்ந்தது. முதல்வர் அண்ணாவால் கட்டுப்படுத்த முடியாத வகையில் ஊழலும் தமிழ்நாட்டு ஆட்சியில் முளை விடத் தொடங்கியது.

“1967 ஆட்சி மாற்றத்தின் போது, அந்த (ஊழல் முளை விடுவதை கிள்ளும்) வலிமை தமக்கில்லை என்பதை அன்றைய முதல்வர் அண்ணா உணர்ந்து, மருத்துவமனையில் தம்மை சந்தித்த, கம்யூனிஸ்ட் கட்சித்தலைவர் பி.ராமமூர்த்தியிடம், தாம் விரைவில் மரணமடைய விரும்புவதாக தெரிவித்த செய்தியை, அவர் தமது நூலில் வெளிப்படுத்தியுள்ளார். அதே காலக்கட்டத்தில், பொதுவாழ்வில் மனம் வெறுத்து, தாம் முனிவராக விரும்புவதாக அண்ணாவிடம், ஈ.வெ.ரா அவர்கள் தெரிவித்து, அதை அண்ணா தடுத்திருக்கிறார். அதாவது அரசமைப்பிலும், பொது வாழ்விலும், தவறுகளை தடுக்கக் கூடிய வெளிப்படையும் (Transparency), பொறுப்பேற்பும் (Accountability) பலகீனமாகிவிட்டதை அந்த இரு தலைவர்களும் அந்த காலக் கட்டத்திலேயே உணர்ந்ததன் விளைவுகளாலேயே, முதல்வர் பொறுப்பில் இருந்தவரும், அவரை உருவாக்கிய கட்சியின் தலைவராக இருந்தவரும் மனம் வெறுத்து, மேற்குறிப்பிட்ட உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தினார்களா? என்பது ஆய்விற்குரியதாகும்.” 
(http://tamilsdirection.blogspot.com/2016/11/normal-0-false-false-false-en-us-x-none_87.html)

அண்ணாவும், ஈ.வெ.ரா அவர்களும் ஏன் பொதுவாழ்வில் மனம் வெறுத்து ஒதுங்க விரும்பினார்கள்? என்ற ஆய்வினை, அவர்களின் விசுவாசிகள் இதுவரை ஆய்வுக்கு உட்படுத்தினார்களா? (‘சசிகலா ஆதரவில் தி.க கி.வீரமணியும் கம்யூனிஸ்ட் தலைவர்களும்;'புதிய ஆரிய - திராவிட நோயில்' வேறுபடுகிறார்களா?’; 
http://tamilsdirection.blogspot.com/2016/12/blog-post.html )

பின் 1969இல் கலைஞர் கருணாநிதி முதல்வராகி, பின் மதுவிலக்கை ஒழித்த போது, ராஜாஜியும் மனமுடைந்தார்.

ஆக 'திராவிட தேர்தல் அரசியலானது' ஆட்சியைப் பிடித்து, ஈ.வெ.ரா அவர்களும், அண்ணாவும், ராஜாஜியும் ஏன் மனமுடைந்தார்கள்? என்ற கேள்வியை பொது அரங்கில் எழுப்பி, சமூக பொறுப்புடன் விவாதித்து, உரிய திருத்தங்களுடன் தமிழ்நாடு பயணித்திருந்தால்;

“நேற்று ஜெயலலிதா காலில் விழுந்தவர்கள, இன்று எதற்காக சசிகலா காலில் விழுகிறார்கள்? நாளை எவர் காலில் விழுவார்கள்? தமது சொந்த, பந்தங்கள் மதிப்பதற்கு, பணம் சம்பாதிக்க‌ இப்படி அவமரியாதையாக வாழ வேண்டுமா? இப்படி வாழ்பவர்களை மதிக்கும், அவர்களின் சொந்த பந்தங்களின் யோக்கியதையும் இப்படித்தானா? நமது யோக்கியதையும், நமது சொந்த பந்தங்களின் யோக்கியதையும் அதே போக்கில் தான் உள்ளதா? என்ற கேள்வியை மனசாட்சியுடன் எழுப்பி, விடைகள் கண்டு, உரிய திருத்தங்களுடன் பயணிக்கவில்லையென்றால், நாமும் அவமரியாதை தமிழர்கள் வரிசையில் இடம் பெறுவதைத் தவிர்க்க முடியுமா?

1925இல் ஈ.வெ.ரா அவர்கள் தொடங்கிய சுயமரியாதை இயக்கத்தின் பலனா, இவையெல்லாம்?” (‘விஜயகாந்த் வழியில் சசிகலா’; 
http://tamilsdirection.blogspot.com/2016/12/depoliticize.html
 
என்பது போன்ற கேள்விகள் எழுந்திருக்காது; 

தமிழ்நாட்டில் அ.இ.அ.தி.மு.கவின் அடிமட்ட பெண் தொண்டர் ஒருவர், நம் எல்லோரின் மனசாட்சியை உலுக்கும் வகையில் கீழ்வரும் கேள்வியை எழுப்பும் சமூக தேவையும் உருவாகி இருக்காது; என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.

“அதிமுக பொதுச் செயலாளராக சசிகலாவை நியமித்ததை எதிர்த்து சென்னை வானகரம் பகுதியில் நடந்த அதிமுகவினரின் போராட்டத்தின்போது பெண் ஒருவர் படு ஆவேசமாக பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது.

வீட்டில் அம்மா செத்தா, 90 நாள் துக்கம் அனுசரிக்க வேண்டாம். பொட்டச்சிங்க நாங்க தலையில் பூ வைக்காம இருக்கோம். அந்த உணர்வு கூட உங்களுக்கு இல்லை. உப்பு போட்டுச் சாப்பிடலை நீங்க. உரைக்கலை உங்களுக்கு. ரத்தம் துடிக்குது எங்களுக்கு

"உப்பு போட்டுச் சாப்பிடலை நீங்க. உரைக்கலை உங்களுக்கு. ரத்தம் துடிக்குது எங்களுக்கு?" என்று ஒரு அடிமட்ட அ.இ.அ.தி.மு.க பெண் தொண்டர் எழுப்பியுள்ள கேள்வியானது;

சசிகலாவை அ.இ.அ.தி.மு.கவின் பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்த, அந்த கட்சியின் பொதுக்குழு உறுப்பினர்களை நோக்கி, கேட்கப்பட்ட கேள்வியாக மட்டுமே நான் கருதவில்லை. நான் உள்ளிட்டு, தமிழ்நாட்டின் மீது அக்கறையுள்ளவர்கள் ஒவ்வொருவரும், தமது மனசாட்சிக்குட்பட்டு பதில் தேட வேண்டிய, சமூக முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியாக கருதுகிறேன்; 'நமக்கேன் வம்பு?' என்று சமூகக்கேடான 'பாதுகாப்பு சிறையில்' வாழ்பவர்கள் மட்டுமே, இக்கேள்வியை புறக்கணிக்க முடியும்.

ஜெயலலிதாவை கொல்ல சதி செய்ததாக, புகழ்பெற்ற 'தெகல்கா' இதழில் வெளிவந்து; (Was Sasikala Giving Slow Poison To Jayalalithaa, Tehelka Report Says So; http://www.indiatvnews.com/news/india/was-sasikala-giving-slow-poison-to-jayalalithaa-tehelka-report-says-so-13994.html  )

ஜெயலலிதாவும் அதை காரணம் காட்டி, போயஸ் கார்டனை விட்டு சசிகலாவை 'மீடியா வெளிச்சத்துடன்' துரத்தி;

'அவ்வாறு சதி நடந்தது உண்மை தான்; ஆனால் எனக்கு தெரியாமல்' என்ற வகையில் சசிகலாவும் 'மீடியா வெளிச்சத்துடன்' ஒப்புதல் வாக்கு மூலம் கொடுத்து:

பின் தனது மரணத்தை தானே வரவழைக்கும் போக்கில், ஜெயலலிதா சசிகலாவை தனது வீட்டுக்குள் அனுமதித்து: 

இன்று சாதாரண மக்களிடையே பேருந்துகள் உள்ளிட்ட பொது இடங்களில், "இளவரசி மகனை ஜெயலலிதா, தனது அரசியல் வாரிசாக அறிவிக்க கோரி, சசிகலாவுக்கும் ஜெயலலிதாவுக்கும் இடையே நடந்த சண்டையில், சசிகலா அடித்து, ஜெயலலிதா கீழே விழுந்து, பேச்சு மூச்சற்ற நிலையில், அப்போல்லோ கொண்டு செல்லப்பட்டார்"

என்று வதந்தி முளைவிட்டு, 'தீயாக' பரவ காரணமாக;

“மறைந்த முதல்வர் ஜெயலலிதா   74 நாட்கள் அப்போல்லா மருத்துவமனையில் இருந்து, சிகிச்சை பலனின்றி இறந்தார். அவரது இறப்பை அறிவிக்கும் முன், அந்த மருத்துவ மனையிலிருந்த நோயாளிகள் அனைவரும், ஆம்புலன்ஸ்கள் மூலம், பிற மருத்துவமனைகளுக்கு கொண்டு செல்லப்பட்ட காட்சிகள் ஒளிபரப்பபட்டன. இது போன்ற நிகழ்வானது, நானறிந்த வரையில், இந்தியாவிலோ, உலக அளவிலோ, இதற்கு முன் நடந்ததாக தெரியவில்லை.

மேற்குறிப்பிட்ட ஒளிபரப்பை பார்த்த பிற மாநிலத்தவர்களும், உலக மக்களும், தமிழர்களை பற்றியும், தமிழ்நாட்டைப் பற்றியும் என்ன நினைத்திருப்பார்கள்?

மருத்துவமனை நிர்வாகத்திடமும், மருத்துவர்களிடமும், தொலைபேசியில் கேட்டு பெறக்கூடிய தகவல்களை, கவர்னர் உள்ளிட்டு மத்திய அமைச்சர்களும், கட்சித் தலைவர்களும் மருத்துவமனைக்கு சென்று, அத்தகவல்களை பெற்று,  மருத்துவமனை முன் தொலைக்காட்சி பேட்டிகளாக, 74 நாட்களிலும்  ஒளிபரப்பியதானது, பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே எந்த அளவுக்கு கேலிக்குள்ளானது?

அதே போல, ஜெயலலிதாவின் அண்ணன் மகள், அப்பல்லோ மருத்துவமனை சென்ற போது, ஜெயலலிதாவை பார்க்க விடாமல் தடுத்ததாக, 'சசிகலா' மீது குற்றம் சுமத்திய செய்தியும் ஊடகங்களில் வெளிவந்துள்ளன. இந்த செய்தி வந்தவுடன், அது எவ்வளவு பெரிய சமூக குற்றம்? என்பதை சசிகலாவின் உறவினர்களில், நண்பர்களில் எவராவது உணர்ந்து, அதனை சசிகலாவின் கவனத்திற்கு கொண்டு சென்றார்களா? இல்லையா? அந்த சமூக குற்றத்தை பற்றி, எந்த கட்சித் தலைவர்களோ, பத்திரிக்கைகளோ கவலைப்பட்டு கண்டித்தார்களா? அவ்வாறு கண்டித்திருந்தால், தனது அத்தை முகத்தை உயிரோடு மருத்துவமனையில் ‍‍ 74 நாட்கள் இருந்த‌போதே பார்க்க முடியாத நிலைமை, அந்த பெண்ணுக்கு வந்திருக்குமா?”
(‘முதல்வர் ஜெயலலிதாவின் மருத்துவ சிகிச்சையும் மரணமும்; சட்டமும், சமூக நெறிகளும் பற்றிய அபாய எச்சரிக்கைகள்’; 
http://tamilsdirection.blogspot.com/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_5.html )

ஒரு மாநில முதல்வர் என்பவர் உடல் அளவிலும், மனதளவிலும் முதல்வருக்கான பொறுப்புகளை நிறைவேற்ற தகுதியானவர் என்று ஆளுநர் திருப்தியில் உள்ளவரை தான் முதல்வர் பதவியில் நீடிக்க முடியும். 

சம்பிரதாயங்களுக்கும், சட்டத்திற்கும், அல்லது ஈ.வெ.ரா அவர்கள் முன்னிறுத்திய 'பகுத்தறிவு'க்கும், அப்பாற்பட்டு, அதிகார வழிபாட்டு போக்கில், சம்பிரதாயங்களும், சட்டமும், 'பகுத்தறிவு'ம் தத்தம் முதுகெலும்பை இழந்த திசையில், தமிழ்நாடு பயணிக்கிறதா? அது திராவிட அரசியலின் சாதனையா?  அது எப்போது முளை விட்டு, எப்படி வளர்ந்தது? என்ற கேள்விகளை, எவ்வளவு காலம் தான் இருட்டில் வைக்க முடியும்? ( ‘- விஜயகாந்த் வழியில் சசிகலா ‍ நாமும் அவமரியாதை தமிழர்கள் வரிசையில் இடம் பெறுவதைத் தவிர்க்க முடியுமா?’; 
http://tamilsdirection.blogspot.com/2016/12/depoliticize.html )

இந்திய அரசியல் சட்டத்தின் செயல்பாட்டை அப்பொல்லோவில் முடக்கிய 'தேச அவமானத்தை', தி.மு.க, பா.ஜ.க உள்ளிட்டு எந்த கட்சியின் தலைவர்களாவது கண்டித்தார்களா? நாமெல்லாம் உப்பு போட்டுச் சாப்பிடலையா? என்ற கேள்வியை;

அந்த கட்சிகளின் தலைவர்கள் மட்டுமல்ல, அவர்களை ஆதரித்து வந்துள்ள (ஈ.வெ.ரா, அண்ணா, ராஜாஜி ஆதரவாளர்கள் உள்ளிட்டு) நாம் ஒவ்வொருவரும், நம் மனசாட்சிக்குட்பட்டு சந்தித்தாக வேண்டும்.

திராவிட தேர்தல் அரசியலை தொடங்கி வைத்தவர் அண்ணா என்பது வரலாற்றில் இடம் பெற்று விட்டது.

1965 இந்தி எதிர்ப்பு போராட்ட 'வீரர்' நடராஜனின் ஆதரவுடன்;

அதை முடித்து வைப்பவர் சசிகலாவா? என்ற கேள்வியும் வரலாற்றில் இடம் பெறத் தொடங்கியுள்ளது.

அதாவது 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் பலனாக ஆட்சியில் அமர்ந்த திராவிட தேர்தல் அரசியலானது, அதே 1965 இந்தி எதிர்ப்பு போராட்ட 'வீரரின்' பங்களிப்புடன் தான்,முடிவுக்கு வர வேண்டும், என்பதானது, இயற்கையின் விதி போல நடைபெறுகிறது.

No comments:

Post a Comment