Sunday, January 1, 2017

திராவிடர் இயக்க நூற்றாண்டு: மொழி அடையாள அடிப்படையிலா? மேற்கத்திய 'ரேஸ்'(Race) அடையாள அடிப்படையிலா?

தமிழ், தமிழர், தமிழ்நாடு மீட்சிக்கான ஆய்வுகள் தொடங்கப்படுமா?


நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இக்காலமானது, மொழி அடையாளத்தில் 'திராவிடர் இயக்க நூற்றாண்டு விழாவா? அல்லது மேற்கத்திய பார்வையில் 'ரேஸ்' (Race)  என்ற பொருளில் திரிந்த தமிழ்ச் சொல்லான 'இனம்' என்ற அடையாளத்தில், 'திராவிடர் இய‌க்க நூற்றாண்டு விழாவா?' என்பது ஆய்விற்குரியதாகும்.

இது போன்ற கேள்விகளுக்கு இடமில்லாமல், 2044இல்  'திராவிடர் இய‌க்க நூற்றாண்டு விழா’வைக் கொண்டாடலாம்.

20 நவம்பர் 1916 இல், தியாக‌ராயரும், டி.எ. நாயரும் மேற்கொண்ட‌ தலைமை முயற்சிகள் மூலம், 'தென்னிந்திய மக்கள் கூட்டமைப்பு' (South Indian Peoples Association) உருவானது. 26 பிப்ரவரி 17இல், அந்த அமைப்பின் சார்பில் டி.எம்.நாயரை ஆசிரியராகவும், பி.என்.ராமலிங்கம் பிள்ளை, மற்றும் எம்.எஸ்.பூர்ணலிங்கம் பிள்ளை ஆகியோரை துணை ஆசிரியர்களாகவும் கொண்டு,'ஜஸ்டிஸ்' (Justice) என்ற ஆங்கில இதழ் வெளிவரத் தொடங்கியது. பின் சூன் 1917இல் பக்தவத்சலம் பிள்ளையை ஆசிரியராகக் கொண்டு,'திராவிடன்' என்ற இதழும் வெளிவந்தது. (https://en.wikipedia.org/wiki/Justice_Party_(India) )

அந்த 'திராவிடன்' என்ற சொல், மொழி அடிப்படையிலான அடையாளமாக வெளிவந்ததா? அந்த திராவிட மொழிகள் பேசிய தென்னிந்திய மக்களை குறிப்பிட்டே, அந்த பெயரில், அந்த இதழ் வெளிவந்ததா? என்பது ஆய்விற்குரியதாகும்.

'ஜஸ்டிஸ்' (Justice) என்ற ஆங்கில இதழின் பெயரில், அந்த ஆங்கிலச் சொல்லை தமிழில் 'நீதி' என மொழி பெயர்த்து, அந்த கட்சியானது, 'நீதிக்கட்சி' என்ற பெயரிலேயே ஏன் அழைக்கப்பட்டது? தமது தமிழ் இதழின் பெயரில், 'திராவிடன் கட்சி' என்று ஏன் அழைக்கப்படவில்லை? சமூக மொழியியல் (Social Linguistics) அடிப்படையில், அதற்கான காரணங்களை தேடி, இது வரை ஆய்வுகள் நடைபெறவில்லையென்றால், ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள், ஜே.என்.யூ(J.N.U), ஐ.ஐ.டி(I.I.T)  போன்ற தரம் உயர்ந்த பல்கலைக்கழகங்களில், 'முனைவர்' பட்ட ஆய்வினை முயற்சிக்கலாம். அது போன்ற ஆய்வினை தொடங்கியவர்கள், என்னை அணுகினால், என்னால் இயன்ற உதவிகளை, அவர்களுக்கு வழங்க இயலும்.

நீதிக்கட்சியின் சமூக நீதியை ஏற்றுக் கொண்ட பிராமணர்களையும் அமைச்சர்களாகக் கொண்டு, ஊழலற்ற தேர்தல் அரசியலில் 1944 வரை, நீதிக்கட்சி பயணித்தது. நீதிக்கட்சியின் தலைவராக ஏகமனதாக தேர்வான ஈ.வெ.ரா அவர்கள் அதே போக்கில் பயணித்திருந்தால், அன்றைய சென்னை மாகாணமானது, தனி நாடு ஆகியிருக்க வாய்ப்பு இருந்ததா? அந்த‌ போக்கிலிருந்து திசை மாறி, காலனிய சூழ்ச்சியில் மேற்கத்திய 'ரேஸ்' (Race) என்ற பொருளில், 'இனம்' என்ற தமிழ்ச்சொல் திரிந்து, அந்த திரிதலில், 'திராவிடர் கழகம்' தொடங்கி, ஈ.வெ.ரா பயணித்தால், அந்த வாய்ப்பு கெட்டதா? என்ற ஆய்வுக்கு உதவும் தகவல்களை ஏற்கனவே பார்த்தோம். (ஆனைமுத்து வெளிப்படுத்திய அபூர்வ 'சிக்னல்' (2); அன்றைய 'சென்னை மாகாணம்' ஆனது, தனிநாடு ஆக இருந்த வாய்ப்பு, எப்படி கெட்டது?; http://tamilsdirection.blogspot.in/2015/12/normal-0-false-false-false-en-us-x-none_27.html )

'திராவிடர் கழகம்' என்று தொடங்கி, 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளக் குழப்பங்களின் ஊடே, 'திராவிட நாடு, திராவிடருக்கே', 'தமிழ்நாடு தமிழருக்கே' என்று பயணித்த போதும், தனது 'பிராமண எதிர்ப்பை' தனது நிலைப்பாட்டிற்கு, பிராமணர்களின் ஆதரவை பெறும் நோக்கிலேயே, ஈ.வெ.ரா பயன்படுத்தினார். அதன் விளைவாக, ராஜாஜி உள்ளிட்ட பிராமணர்களின் ஆதரவையும் 'திராவிட நாடு' பிரிவினை கோரிக்கைக்கு சாதகமாக, அவரால் பெற முடிந்தது.

“திராவிட நாடு பிரிவினை நடக்காததற்கு காரணங்கள் யாவை? ராஜாஜிக்கும், நேருவுக்கும் இடையில் நிலவிய பனிப்போர் காரணமா? அல்லது திராவிடநாடு பிரிவினைக்காக விமானப்பயணம் மேற்கொண்ட (குடிஅரசு இதழ்களில் புகைப்படங்களுடன், அவரை வழியனுப்பும் செய்திகள் வெளிவந்துள்ளன) சர்.ஏ.டி.பன்னீர்செல்வம் விமான விபத்தில் - 'நேதாஜி சுபாஸ் சந்திர போஸ் போல‌' - இறந்தது காரணமா? அது விபத்தா? அல்லது சதியா? என்பது போன்ற கேள்விகளுக்கு , பிரிட்டனின் உளவு அமைப்பு MI5   கோப்புகள்  declassify-இரகசிய நீக்கமாகும்போது-   தெரியும். அவ்வாறு விடைகள் தெரியும் காலம் அதிக தொலைவில் இல்லை என்பது என் கருத்து.” (http://tamilsdirection.blogspot.in/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html )

இந்திய விடுதலைக்குப் பின்,  1948 துத்துக்குடி மாநாட்டில் வெளிப்படுத்திய அபாய எச்சரிக்கையிலிருந்து தாமே சறுக்கி, பின் 1949இல் தி.மு.க உருவான பின், அந்த சறுக்கலில் இருந்து மீண்டு, தி.மு.க.வின் 'ஆதாய தேர்தல் அரசியல்' போக்கினை கடுமையாக எதிர்த்து பயணித்தாலும், ஈ.வெ.ரா அவர்கள், உடல் அளவிலும், மனதளவிலும்  தனது சுயசார்பை (Physically & mentally Independent) இழக்கத் தொடங்கிய போக்கில், அதில் வீழ்ச்சி கண்டு, 1965 இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் பாதக கூறுகளை அடையாளம் கண்டு எச்சரிப்பதிலும் தோற்று, அவமானப்படுத்தப்பட்டார். 1967 இல் தி.மு.க ஆட்சியைப் பிடித்த பின், முதல்வர் அண்ணாவும், ஈ.வெ.ரா அவர்களும் பொதுவாழ்வில் மனம் வெறுத்து ஒதுங்க நினைத்த அளவுக்கு, 'ஆதாய தேர்தல் அரசியலானது', இருவரையும் காவு வாங்கியது. அண்ணா, ஈ.வெ.ரா அவர்களின் மறைவுகளுக்குப்பின், அந்த 'ஆதாய தேர்தல் அரசியல்' சமூக செயல்நுட்பமானது, இரண்டு போக்குகளை அறிமுகப்படுத்தியது.

நேரு குடும்ப வாரிசு அரசியல் நோயில், தி.மு.கவை சிக்க வைத்தது.

'பெரியார்'முகமூடியில், 'பார்ப்பன எதிர்ப்பு, பகுத்தறிவு' போர்வையில், ஊழல் கொள்ளையர்களின் வாலாகி, அரசியல் கட்சியினருக்கு வாய்க்காத 'குறுக்கு வழியில்' (By-Pass) பணம் சம்பாதிக்க‌, 'பெரியார் சமூக கிருமிகள்' உருவாகி, தமிழ், தமிழர், தமிழ்நாடு சீரழிவிற்கு, 'வினை ஊக்கி'(Catalyst) ஆனது; ('திருச்சி பெரியார் மையம்' மூலம் வெளிப்பட்ட,எனது கண்டுபிடிப்பாகும்)

தி.மு.கவின் குடும்ப அரசியலுக்கு எதிராக இயல்பாக வெளிப்பட்ட சமூக ஆற்றலின் மூலம், காமராஜரின் 'ஸ்தாபன காங்கிரஸ்' புத்துயிர் பெற்று வளரத் தொடங்கிய போக்கானது, தி.மு.கவில் இருந்து எம்.ஜி.ஆர் பிரிந்து அ.தி.மு.கவை துவக்கி, வளர்ந்த போக்கில், வீழ்ந்தது. தமிழ்நாட்டில் குடும்ப அரசியலுக்கே எதிரான, அந்த சமூக ஆற்றலே, எம்.ஜி.ஆர் உயிரோடு இருந்தது வரை, தி.மு.கவை ஆட்சிக்கு வர விடாமல், தடுத்து வந்தது. பின் ஜெயலலிதா ஆட்சியில், சசிகலா நடராஜன் குடும்ப ஆதிக்கத்திற்கு எதிராக வெளிப்பட்ட சமூக ஆற்றலே, மீண்டும் மீண்டும் தி.மு.கவை ஆட்சியில் அமர்த்தியது. அதன்பின் கடந்த‌ ஆட்சியில், குடும்ப ஆதிக்கத்திற்கு எதிராக வெளிப்பட்ட சமூக ஆற்றலே, மீண்டும் அ.இ. தி.மு.கவை ஆட்சியில் அமர்த்தியது; அ.இ.அ.தி.முகவில் சசிகலா குடும்பத்தினர் ஜெயலலிதாவை வீழ்த்தும் சதியில் ஈடுபட்டு, அதை முதல்வர் ஜெயலலிதா கண்டுபிடித்து, நடவடிக்கை எடுக்கும் அளவுக்கு.

அப்பொல்லோவில்,  ஜெயலலிதா அனுமதிக்கப்பட்டு ,இந்திய அரசியல் சட்டத்தையும், சமூக சம்பிரதாயங்களையும்  செல்லாக்காசாக்கி அரங்கேறிய‌, மர்மமான மருத்துவ சிகிச்சையையும், மரணத்தையும் எதிர்த்து குரல் கொடுக்காத 'அரசியல் தவறின்' காரணமாக, தி.மு.கவிற்கு ஆட்சியில் அமர துணை புரிந்து வந்த, சசிகலா நடராஜன் குடும்ப ஆதிக்க எதிர்ப்பு ஆற்றலை, தி.மு.க இழந்து நிற்கிறதா? தி.மு.கவில் ஸ்டாலின் 'நிரந்தர இலவு காத்த கிளியா? அதே காரணங்களால், 'பெரியார்' கட்சிகளின் மரணங்களும் விரைவாக்கப்படுமா? (http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html )
 என்ற கேள்விகளுக்கான விடையானது, வரும் மாதங்களில் தெளிவாகும்.

“1967இல் தி.மு.க ஆட்சியைப் பிடித்து, பின் 1969இல் கலைஞர் கருணாநிதி முதல்வராகி, பயணித்த போக்கிற்கு எதிராக வெளிப்பட்ட எம்.ஜி.ஆரின் அ.இ.அ.தி.மு.க பயணித்த சமூக போக்கில்;

'இந்தியர்' என்ற அடையாளமானது எந்த அளவுக்கு வலிமை பெற்றது?

அடையாளக் குழப்பங்களுடன், சுயநல ஊழல் அரசியலுக்கு பயன்பட்டு, 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளமானது, எந்த அள‌வுக்கு, குறிப்பாக, இளைஞர்கள், மாணவர்களிடம், பலகீனமாகியுள்ளது? அவ்வாறு பலகீனமாக, 'பெரியார்' கொள்கையாளர்கள் எவ்வளவு பங்களிப்பு வழங்கியுள்ளார்கள்?
என்பதைப் பொறுத்தே, தமிழ்நாட்டின் அடுத்த கட்ட அரசியல் போக்கானது முடிவாகும். " (‘இன்று ஈ.வெ.ரா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால்; ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துடன் சேர்ந்து செயல்பட்டிருப்பாரா?; http://tamilsdirection.blogspot.in/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_29.html )

சென்னை 'சர்ச்பார்க் கான்வெண்டில்' படித்த ஜெயலலிதா கல்வியில் சிறந்து விளங்கினார் என்பதும், 'இந்தியர்' என்ற அடையாளத்தில் அவருக்குள்ள பற்றும் ஒன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டிருந்தால், வியப்பில்லை."என்பதையும்:

"தமிழ்நாட்டில் 'இந்தியர்' என்ற அடையாளம் வலுப்பெற்று வந்தாலும், 'தமிழ், தமிழ் உணர்வு' போன்றவை படித்த இளைஞர்களிடமும், சாதாரணத் தமிழர்களிடமும் வலுவிழந்து வருகிறதா? ஆதாயத் தொண்டர்கள் மற்றும் முதல் தலைமுறையாகப் படித்த, எண்ணிக்கையில் 'வேகமாக' குறைந்து வரும் ‍- தீக்குளித்தும் போராடியும் தமது வாழ்வைத் தொலைக்கும் திறமையுள்ள‌-  குப்பன் சுப்பன் வீட்டுப் பிள்ளைகள் பலத்தில் மட்டுமே, 'தமிழ், தமிழுணர்வு' அமைப்புகள் பயணிக்கின்றனவா?" என்பதையும்:
ஏற்கனவே பார்த்தோம். (‘இந்தியாவில் ‘வித்தியாசமான தமிழ்நாடு’;  http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_29.html )

உணர்ச்சிபூர்வ போதையில் சுயலாப நோக்கிலான முயற்சிகள் மூலமாக, 'தமிழர்'என்ற அடையாளம் பலகீனமாகி வருவதும், 'அதிவேகமாக' அதிகரித்து வரும் ஆங்கில வழியில் படித்த/படிக்கும் பெரும்பாலானவர்களின் பார்வையில், 'தமிழும், தமிழ் உணர்வும்'கேலிப்பொருளாகி வரும் நிலையில், தமிழ்நாட்டிலேயே தமிழ் வேரழிந்த 'தமிங்கிலிசர்களாக', பெரும்பாலும் தரகர்களாகவும், திருடர்களாகவுமே தமிழர்களில் பெரும்பாலோர், வாழப்போகும் திசையில் தமிழ்நாடு பயணிக்கிறதா? என்பதற்கான 'சமூக சிக்னல்களும்' வெளிப்பட தொடங்கியுள்ளன.

‘தமிழ்நாட்டில் வசதியில், வாய்ப்புகளில், சொத்துகளை வாங்கி குவிப்பதில், யார் முன்னணியில் இருக்கிறார்கள்? என்ற ஆய்வின் மூலமே, தமிழர்கள் தமிழ்நாட்டில் 'வளர்ந்து' வருகிறர்களா? 'வீழ்ந்து' வருகிறார்களா? தமிழ்நாடு 'பணக்கார'(?) நாடாகி வருவதற்கு காரணமான 'சமூக செயல்நுட்பத்தில்'(?), தமிழர்கள் சீரழிந்து, தமிழ்வழிக் கல்வியும் (என‌வே தமிழும்) மரணப்படுக்கையில் உள்ளனவா? என்பது தெளிவாகும்.’
( ‘பணக்கார மாநிலமாகி வரும் தமிழ்நாட்டில்; தமிழர்கள் வளர்ந்து வருகிறார்களா?  வீழ்ந்து வருகிறார்களா? ‘;http://tamilsdirection.blogspot.in/2016/09/1967.html  ) தமிழ்நாட்டில் வெளிவரும் இலக்கிய இதழ்களில், திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களிடம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ 'உதவி'(?) பெறாமல், சுயபலத்தில் தொடர்ந்து வெளிவரும் இதழ் 'கணையாழி' மட்டுமா? சுயவிளம்பரமின்றி, அதை வெளியிட்டு வருபவர், தமிழ்நாட்டில் குடியேறிய வடவரா? அது உண்மையென்றால், சுயலாப நோக்கின்றி, தமிழை இனி வளர்ப்பவர்கள் எல்லாம், தமிழ்நாட்டில் குடியேறியுள்ள பிற மாநிலத்தவராக இருப்பார்களா?

தமிழ்நாட்டில் 'தமிழர்'என்ற அடையாளமானது பலகீனமாகி, தமிழர்களும் அறிவு உழைப்பிலும், உடல் உழைப்பிலும் பதர்களான 'தரகர்களாக',பணம் சம்பாதிக்க எவர் காலிலும் விழ போட்டி போடும் அளவுக்கு, வளர்ந்து வரும் போக்கில், 'இந்தியர்'என்ற அடையாளம் வலிமை பெற்று வருவதானது, ஆழ்ந்த ஆய்வுக்கும், விவாதத்திற்கும் உட்படுத்த வேண்டிய ஒன்றாகும்.

அந்த நோக்கில், 'துக்ளக்' இதழின் ஆசிரியர் பொறுப்பில் திரு.குருமூர்த்தி அவர்கள் அமர்ந்தபின், வெளிவந்த தலையங்கத்தில் இடம் பெற்ற, கீழ்வரும் கருத்தும்,  துவக்கத்தில் குறிப்பிட்டது போன்ற‌ முனைவர் பட்ட ஆய்விற்கு உகந்ததாகும்.

‘தமிழக அரசியலில் அதிமுக பெரும் திருப்பத்தைக் கொண்டு வந்த கட்சி. நாத்திகத்தை நாகரீகமாகக்கிய,தேசியத்தை எள்ளி நகையாடிய, நாட்டு ஒற்றுமையை குலைத்த தேச விரோத திராவிட அரசியலைத் தகர்த்த கட்சி அதிமுக. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகிய இருவரும் இந்த அரசியல் மாற்றத்தைக் கொண்டு வந்தனர்.’ ; 'துக்ளக்' ஆசிரியராக எஸ். குருமூர்த்தி பொறுப்பேற்ற பின்னர் வெளிவந்துள்ள துக்ளக் தலையங்கத்தில்;”
(இன்று ஈ.வெ.ரா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால்;’ஆர்.எஸ்.எஸ் இயக்கத்துடன் சேர்ந்து செயல்பட்டிருப்பாரா?; http://tamilsdirection.blogspot.in/2016/12/normal-0-false-false-false-en-us-x-none_29.html )

மொழி அடையாள அடிப்படையிலான, திராவிட இயக்க நூற்றாண்டு விழாக்கான இந்த காலக்கட்டத்தில், அந்த ஆய்வினை தாமதமின்றி மேற்கொண்டால் தான், சமூக நீதியில் அக்கறையுடன் 'நிதிக்கட்சியில்' பிராமணர‌ல்லாதோரும், பிராமணரும் இணைந்து மேற்கொண்ட முயற்சியை, 1944இல் 'அழிவு பூர்வ மடை மாற்றத்தில் சிக்கியதிலிருந்து, மீட்டு, 'ஆக்கபூர்வ மடை மாற்றம்' மூலம் தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் மீட்க முடியும், என்பதும் எனது ஆய்வு முடிவாகும்; அறிவு நேர்மையும், திறந்த மனதும் உள்ள விமர்சனங்களை எதிர்நோக்கி.

No comments:

Post a Comment