Saturday, March 3, 2018


தமிழ்வழிக்கல்வி மீட்சி: சரியான விவாதம் தமிழகத்தில் நடத்தப்பட வேண்டும்;

'துக்ளக்' துவக்கி வைத்தது. 'விடுதலை' முன்னெடுக்குமா (1)?


இப்போது இது கற்பனை. ஆனால் விரைவில் நிஜமாகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது.

                                    தமிழ்வழிக்கல்வி மீட்சி

          திராவிடர் கழகம் - ஆர்.எஸ்.எஸ் இணைந்து நடத்தும் கருத்தரங்கம்

தமிழ்வழியில் தங்கள் பிள்ளைகளை படிக்க வைத்த ..எஸ், .பி.எஸ், மருத்துவர்கள், பொறியாளர்கள், பேராசிரியர்கள், எழுத்தாளர்கள்  கியோரை கெளரவித்தல்:

தாய்மொழிவழிக்கல்வி பலன்கள் பற்றிய உலக ஆய்வுகளை தொகுத்து புத்தகமாக  திராவிடர்கழகம் - ஆர்.எஸ்.எஸ் இணைந்ததமிழ்வழிக்கல்வி மீட்சி அமைப்பு’  சார்பாக வெளியிடல்;

முதலில் சென்னையிலும், பின்னர் மாவட்ட தலைநகரங்களிலும் இந்நிகழ்ச்சிகளை நடத்துதல்;
                                              ------------
கீழ்வருவதை படித்தபின், மேலே குறிப்பிட்ட கற்பனையானது நிஜமானால் வியப்பில்லை, என்பது தெளிவாகும். 

முதலில் தமிழ்வழிக் கல்வியானது இன்று மரணப்பயணத்தில் எவ்வாறு சிக்கியது? திராவிட கட்சி அரசியலானது மரணித்து வருவதன் விளைவாக, தமிழ்வழிக்கல்வி மீட்சி சாத்தியமாகி வருகிறதா? என்பதை சுருக்கமாக பார்ப்போம்.

ஈ.வெ.ரா அவர்களின் 'திராவிடநாடு பிரிவினை' கோரிக்கையை ராஜாஜியும், அவர் சார்பு பிராமணர்களும் ஆதரித்திருந்த சூழலில், இந்திய விடுதலைக்குப் பின் ஈ.வெ.ராவும், ராஜாஜியும் எதிரெதிர் திசைகளில் பயணித்ததாலேயே தி.மு.க வளர்ந்து, 1967-இல் ராஜாஜியுடன் துணையுடன் ஆட்சியைப் பிடித்து, பின் முதல்வர் அண்ணாவுக்கும் ஆர்.எஸ்.எஸ் பிரமுகர் ஏக்நாத் ரானடேக்கும் இடையில் வளர்ந்து வந்த நல்லுறவானது இருளில் சிக்க (http://tamilsdirection.blogspot.in/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_22.html   ) ;

அண்ணாவின் மறைவுக்குப் பின், அதே ராஜாஜி ஆதரவுடன் 1969இல் கருணாநிதி முதல்வராகி, நேரு பாணி குடும்ப அரசியலை முன்னெடுக்க, அதன் எதிர்விளைவாக எம்.ஜி.ஆர் அ.தி.மு.க துவங்கி ஆட்சியைப் பிடிக்க, எம்.ஜி.ஆருக்கு நெருக்கமான ஜெயலலிதா அதன் தொடர்ச்சியாக ஆட்சியைப் பிடிக்க, 1991 முதல் ஜெயலலிதாவை குடும்ப அரசியலில் சிறை பிடித்ததன் மூலமாக‌, 1969இல் நேரு பாணியில் துவங்கியதானது, பின்னர் அந்த பாணியிலிருந்து மாறுபட்ட சசிகலாவிடம்  சிக்கி, பயணித்த தமிழ்நாட்டில்;

1969இல் தொடங்கிய‌ ஊழல் சுனாமியில், 1970களில் தொடங்கிய‌ ஆங்கிலவழிப் பள்ளிகளின் புற்றீசல் வளர்ச்சி மூலமாக‌ தமிழ்வழிக் கல்வியின் மரணப்பயணம் தொடங்கியது. இன்று தமிழ்நாட்டில் தமிழில் சரளமாக‌  எழுதவும் படிக்கவும் தெரியாத, (ஆங்கில வழியில் படித்த) மாணவர்களின் எண்ணிக்கையானது அதிவேகமாக அதிகரித்து வருகிறது.


தமிழ்வழிக்கல்வியின் மரணப்பயணத்திற்கு காரணமான திராவிட கட்சி அரசியலானது மரணித்து விட்டதை ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுகள் உணர்த்தி விட்டன; 

திராவிட அரசியலின் வீழ்ச்சியானது நேரு பாணி குடும்ப அரசியலில் தடம் புரண்டு துவங்கியதானது, அந்த போக்கிலேயே சசிகலா பாணி பினாமி குடும்ப அரசியல் வளர்ச்சியின் மூலம் முடிவை எட்டி விட்டது; இனி ஆதாயத்திற்கு வாலாட்டும், காலை வாறும், முதுகில் குத்தும் தமிழர்களே 'திராவிட அரசியலின்' ஆதரவாளர்கள்  என்பதும் வெட்ட வெளிச்சமாகி விட்டது; தன்மானமுள்ள தமிழர்கள் எல்லாம் அப்போக்கிலிருந்து வெட்கப்பட்டு ஒதுங்கும் போக்கும் தொடங்கி விட்டது; தமிழ்வழிக்கல்வியின் மீட்சியானது சாத்தியமாகும் வகையில்.

"ஆங்கிலப் படிப்பு ஒன்றில்தான் பெரியாரும், பிராமணர்களும் ஒருமித்த கருத்து கொண்டிருந்தார்கள்" என்ற உண்மையை 'துக்ளக்'  வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளதன் மூலம்;

தமிழ்வழிக்கல்வி மீட்சியில் 'பெரியார்' ஆதரவாளர்களும், பிராமணர்களும் ஒன்று சேர வேண்டிய வரலாற்றுக் கட்டாயத்தை சுட்டிக்காட்டியுள்ளது

தாய்மொழியில் ஒரு குழந்தை நல்ல பயிற்சி பெற்றால், மற்ற மொழிகளில் அது கற்றுக் கொள்வது சுலபம் என்று எல்லா ஆய்வுகளும் கூறுகின்றன. ஆங்கில வழியில் கற்பதால் இயற்கையாக தமிழிலும் தேர்ச்சி பெறுவதில்லை. ஆங்கிலத்திலும் தேர்ச்சி வரவில்லை. இதுதான் யதார்த்த நிலை.” என்பதையும் 'துக்ளக்' சுட்டிக்காட்டி;

"ஆரம்பப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பாடம் கற்க வேண்டியதன் அவசியத்தை தமிழக மக்கள் உணர வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகிறோம். இதுபற்றி சரியான விவாதம் தமிழகத்தில் நடத்தப்பட வேண்டும்."  என்று 'துக்ளக்' 'தமிழ்வழிக்கல்வி மீட்சிக்கு' தமது பங்களிப்பை துவங்கி விட்டது. (துக்ளக்கில் வெளிவந்த முழு பகுதியும் கீழே)

ஒன்று .வெ.ராவின் ஆங்கிலவழிக் கல்வி ஆதரவு போக்கினை நியாயப்படுத்தி, தமிழ்வழிக்கல்வியை மீட்க முயலும் ஆர்.எஸ்.எஸையும், துக்ளக்கையும், 'பெரியார்' கட்சிகள் எதிர்க்க வேண்டும். இல்லையென்றால், தாய்மொழிவழிக்கல்வி, தமிழ் மொழி, தமிழ் இலக்கியங்கள் தொடர்பான .வெ.ராவின் கொள்கை தவறு என்று, .வெ.ரா வழியிலேயே துணிச்சலுடன் அறிவித்து, தமிழ்வழிக்கல்வி மீட்சிக்கு பகிரங்கமாக பங்களிக்க வேண்டும்.

எனது ஆய்வுகளின் அடிப்படையில், கடந்த சுமார் 20 வருடங்களாக நான் முன்வைத்துள்ள எச்சரிக்கைகளை எல்லாம் புறக்கணித்து, இன்று இந்துத்வா ஆதரவு முகாமில் சுட்டிக்காட்டப்படும்  .வெ.ராவின் தாய்மொழி விரோத, தமிழ் விரோத மற்றும் ஆங்கிலவழிக் கல்வி ஆதரவு தொடர்பான ஆதாரங்களை எல்லாம் அறிவுபூர்வமாக சந்திக்க முடியாமல் தடுமாறி, இரண்டும் கெட்டானாக இனியும் பயணிக்க முடியாத சூழல் உருவாகி வருவதை அக்கட்சிகளால் உணர முடியவில்லையென்றால், மரணித்து அடக்கம் செய்ய வேண்டிய கட்டத்தினை அக்கட்சிகள் எட்டி விட்டன, என்று பொருளாகி விடாதா?

இசை ஆராய்ச்சியில் ஈடுபடுவதற்கு முன், சுயலாப நோக்கற்ற 'பெரியார்' தொண்டராக, மார்க்சிய - லெனினிய புலமையுடன் பங்களித்தவன் என்ற அடிப்படையிலும்;

அவ்வாறு பங்களித்த காலக்கட்டத்தில், 'கி.வீரமணியின் ஒற்றரோ?'  என்று திராவிடர் கழக மேல் மட்டத்தில் விவாதம் நடந்த அளவுக்கும் (http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html), நானே வெட்கப்படும் அளவுக்கும், என்னை மிகவும் மதித்தவர் கி.வீரமணி என்ற அடிப்படையிலும்;

'இசை இயற்பியல்' (Physics of Music) அணுகுமுறையில், பழந்தமிழ் இலக்கியங்களில் நான் மேற்கொண்ட ஆய்வுகள் மூலம் வெளிவந்துள்ள கண்டுபிடிப்புகளின் அடிப்படையில், இன்று .வெ.ரா அவர்கள் உயிரோடு இருந்திருந்தால் என்னை பாராட்டி, தமிழ் இலக்கியங்கள் பற்றிய தமது நிலைப்பாடு தவறு என்று துணிச்சலுடன் அறிவித்து, திருத்திய நிலைப்பாடு எடுத்து, தமிழ்வழிக்கல்வி மீட்சியை முன்னெடுத்திருப்பார்;

என்று உண்மையில் நான் நம்புவதாலும்;


காலம் தாழ்த்தாமல், இன்று திராவிடர் கழக தலைவராக இருக்கும் கி.வீரமணி அவர்களை, .வெ.ரா வழியில் துணிச்சலுடன், என்னை பாராட்ட மனமில்லையானாலும், தமிழ் இலக்கியங்கள் பற்றிய நிலைப்பாட்டினை .வெ.ரா வழியிலேயே மாற்றிக் கொண்டு, தமிழ்வழிக்கல்வி மீட்சியை முன்னெடுக்குமாறு நான் கோருகிறேன்.

'திராவிட நாடு பிரிவினை' கோரிக்கையானது, இந்திய விடுதலைக்கு முன்,  ஈ.வெ.ரா அவர்களும், ராஜாஜி மற்றும் அவர் சார்பு பிராமணர்களும் ஒன்று சேர்ந்து முன்னெடுக்கப்பட்டு, நிறைவேறவில்லை

ஆனால் தமிழ்வழிக்கல்வி மீட்சியில். அது போல 'பெரியார்' ஆதரவாளர்களும்;

ஆர்.எஸ்.எஸின் தாய்மொழிவழிக்கொள்கையில் நம்பிக்கையுள்ள பிராமணர்களும், பிராமணரல்லாத ஆர்.எஸ்.எஸ் ஆதரவாளர்களும்;
( http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_10.html )

ஒன்று சேர்ந்து 'தமிழ்வழிக்கல்வி மீட்சி' கோரிக்கையை இப்போது முன்னெடுத்தால்;


வரும் 2018 சூன் கல்வியாண்டு தொடக்கத்தில், தமிழ்வழிக்கல்வி மாணவர் சேர்க்கை அதிகரிப்பில் அதன் வெற்றியானது வெளிப்படத் தொடங்கும்; ( ‘‘தமிழ் அழிவு சுனாமியிலிருந்து தமிழை மீட்க முடியுமா?’; http://tamilsdirection.blogspot.in/2016/06/blog-post.html );

என்று நான் நம்புகிறேன்

எதிரெதிர் முகாம்களில் ஒருவரையொருவர் உணர்ச்சிபூர்வமாக இழிவுபடுத்தும் போக்குகள் எல்லாம் முடிவுக்கு வந்து, 'பிறர் பார்வை அறிதல்' (Empathy) அடிப்படையில் அறிவுபூர்வ விவாதங்கள் மூலம் தமிழும், தமிழ்நாடும் மீளும் துவக்கமாகவும், அது அமையும். கடந்த 27-02-2018  அன்று  ஆர்.எஸ்.எஸ் பிரதிநிதிகள் சென்னை பெரியார் திடலுக்கு சென்று தி. தலைவர் கி.வீரமணியை சந்தித்து புத்தகங்கள் கொடுத்ததும், தி. சார்பில் வெளிவந்த சில புத்தகங்களை, கி.வீரமணி அவர்களுக்கு கொடுதததும், தமிழ்நாட்டில் அறிவுபூர்வ விவாத சூழலுக்கு வழிவகுக்கும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த சந்திப்பாகும்.



குறிப்பு: உலகில், குறிப்பாக தாய்மொழிவழிக்கல்வியைப் பின்பற்றும் எந்த நாட்டிலும், பொது இடங்களில் தத்தம் மொழிகளை ('தமிழ் வாழ்க' என்பது போல) வாழ்த்தும் அறிவிப்பு பதாகைகள் (Banners) இருப்பதாக தெரியவில்லை; 'நாட்டு வாழ்த்து', 'கடவுள் வாழ்த்து' வரிசையில் 'தாய்மொழி வாழ்த்து' ('தமிழ்த்தாய் வாழ்த்து' போல) பாடப்படுவதாகவும் தெரியவில்லை. தமது பிள்ளைகளை ஆங்கில வழியில் படிக்க வைத்தவர்கள் எல்லாம், 'தமிழ் வாழ்க' என்று முழக்கமிடுவதும், 'தமிழ்த்தாய் வாழ்த்து' பிரியர்களாக காட்சி தருவதும், 'தமிழ் வேர்க்கொல்லி'களாக பயணித்து வருவதன் அறிகுறிகளா? பொது இடங்களில் 'தமிழ் வாழ்க' பதாகைகளும், 'தமிழ்த்தாய் வாழ்த்தும்', 'திராவிட மனநோயாளி'  போக்கில் (http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html) வளர்ந்தவைகளா? என்பதும் எனது ஆய்வில் இடம் பெற்றுள்ளது.

                            -------                             துக்ளக் 01.03.2018                          -----

சமீபத்தில் சென்னை மயிலாப்பூர் ராமகிருஷ்ணா ஹோம் அமைப்பின் ஆண்டு விழாவில், 1936-ல் துவக்கப்பட்ட ராமகிருஷ்ணா நூற்றாண்டு ஆரம்பப் பள்ளியில் படிக்கும், குழந்தைகள் நடத்திய கலை நிகழ்ச்சிகளின் தரத்தைப் பார்த்து ஆச்சரியப்பட்டுப் போனேன். ஏறக்குறைய 500 பேர் அமர்ந்திருந்த அந்த அரங்கின் முன், அந்தச் சின்ன குழந்தைகள் ஒரு தயக்கமோ, பயமோ இல்லாமல் சீதையாகவும், கண்ணகியாகவும், ஜான்ஸி ராணியாகவும், பக்த மீராவாகவும், சாரதா தேவியாகவும், சகோதரி நிவேதிதையாகவும் தட்டுத் தடங்கல் இன்றி வசனம் பேசி நடித்தும், தாய்மையைப் போற்றும் ஒரு மௌன நாடகத்தை நடத்தியதும் எல்லோரையும் அசத்தியது. அப்போது உடன் அமர்ந்திருந்த ராமகிருஷ்ணா மடத்தின் ஸ்வாமி சத்யஞானந்தாவிடம், அந்த சிறுவர் சிறுமியர்களுக்கு எப்படி அவ்வளவு நன்றாக பயிற்சி கொடுக்க முடிந்தது என்று கேட்டேன்.

அப்போது அவர், மிகவும் பிற்படுத்தப்பட்ட குடும்பங்களில் இருந்து வந்த அந்தக் குழந்தைகளுக்கு தூய பண்பு பயிற்சி அளித்தது மட்டுமல்லாமல், இலவச புத்தகங்கள் தவிர, மற்ற சாதனங்கள், சத்தான உணவு, பால் எல்லாம் கொடுக்கிறோம். ஆனால், துரதிர்ஷ்டவசமாக 6 ஆண்டுகளுக்கு முன் 600 சிறுவர்கள் படித்து வந்த இந்தப் பள்ளியில், இப்போது 100 மாணவர்களே படிக்கிறார்கள். காரணம் இங்கு தமிழ் மொழியில் கல்வி கற்பிக்கப்படுகிறது. ஆங்கிலப் பள்ளிகளில் சேர்க்கப்படும் குழந்தைகளுக்கு ஆங்கிலமும் சரியாக வருவதில்லை. தமிழிலும் தேர்ச்சி பெறுவதில்லை. அதனால் அவர்களது கல்வி அறிவும், பொது அறிவு வளர்ச்சியும் பாதிக்கப்படுகிறது. ஆனால், இங்கு நன்கு தேர்ச்சி பெற்ற சிறுவர்களாக இவர்களை உருவாக்குகிறோம்" என்று கூறினார். அவர் கூறியது சரி என்றால், தமிழகம் போகும் திசை சரியா என்கிற கேள்வி என் மனதில் எழுந்தது. அதன் விளைவுதான் இந்தக் கட்டுரை

                        நலிந்து வரும் தமிழ் வழிக் கல்வி

82 ஆண்டுகளாக நடந்து வரும் அந்த ஆரம்பப் பள்ளியில், நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு 600 குழந்தைகள் படித்து வந்தனர். ஆனால், தற்போது 100 குழந்தைகள் மட்டுமே படிக்கிறார்கள் என்று அந்த ஸ்வாமிஜி கூறினார். மயிலாப்பூரின் மத்தியில் அமைந்திருக்கும் ஒரு ஆரம்பப் பள்ளிக்குக் குழந்தைகளின் எண்ணிக்கை குறையக் காரணம் என்ன? இங்கு பாடங்கள் தமிழில் நடத்தப்படுகின்றன. ஆனால் பெற்றோர்கள் ஆங்கில வழிப் பள்ளிகளில்தான் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க விரும்புகிறார்கள். எனவேதான் இந்தப் பள்ளியில் குழந்தைகளின் எண்ணிக்கை மளமளவென்று குறைந்து வருகிறது" என்று கூறினார் அவர்.

இங்கிருந்துதான் என்னுடைய சிந்தனை துவங்கியது. மூன்றாவது மொழியாக ஹிந்தியைப் படித்தால், தமிழ் அழிந்து விடும் என்று ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தி, 1967 - ல் தமிழகத் தில் தி.மு.. ஆட்சியைப் பிடித்தது. அதற்கு முன்பு 99 சதவிகித மாணவ - மாணவிகள் தமிழ் மொழியில்தான் கல்வி கற்றனர். இங்கொன்றும் அங்கொன்றுமாக இருந்த கான்வென்டுகளில், உயர் மேல்தட்டுக் குடும்பக் குழந்தைகள் ஆங்கில வழிக் கல்வி படிப்பார்கள். மற்ற மேல்தட்டு, நடுத்தர வர்க்க குடும்பங்கள் முதல் சாதாரண குடும்பங்களின் மாணவர்கள் வரை அரசாங்கமும், நகராட்சிகளும், அரசாங்க உதவியுடன் தனியார்களும் நடத்தி வந்த தமிழ் வழி பள்ளிகளில்தான் படித்து வந்தார்கள். ஆங்கில மொழி பயிற்சி உட்பட, பொதுவாக கல்வித் தரமும் நன்றாகவே இருந்தது. ஆனால், கழகங்களின் 50 ஆண்டு கால ஆட்சியில் கல்வி முற்றிலும் மாறி விட்டது. தரமும் குறைந்து விட்டது.

இப்போது தமிழகத்தில் சுமார் 35,000 ஆரம்பப் பள்ளிகள் இருக்கின்றன. இதில் அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் 82 சதவிகிதம். மொத்தமுள்ள 55,667 பள்ளிகளை எடுத்துக் கொண்டால், அதில் அரசு, அரசு உதவியுடன் நடக்கும் பள்ளிகள் 80.5 சதவிகிதம். இப்படி 80 சதவிகிதத்துக்கும் மேல் பள்ளிகள் அரசின் பிடியில் இருந்தாலும், தமிழ் வழிக் கல்வி முறையில் கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை 60 சதவிகிதம் மட்டுமே. அதுவும் மளமளவென்று குறைந்து கொண்டு வருகிறது. ஆங்கில வழியில் கற்பவர்களின் எண்ணிக்கை 39 சதவிகிதமாக உயர்ந்திருக்கிறது. அது மேலும் உயர்ந்து கொண்டே போகிறது. மேல்தட்டு, மத்திய, நடுத்தர, கீழ்த்தட்டு குடும்பங்கள் மட்டும் ஆங்கில வழிக் கல்வியை நாடவில்லை.
ஆதிதிராவிடர்களுக்காக தமிழக அரசு நடத்தும் தமிழ் வழிக் கல்வி முறை பள்ளிகளிலிருந்தும், அவர்களே விலகி ஆங்கில வழியில் கற்பிக்கும் தனியார் பள்ளிகளில் சேர்கிறார்கள். 2010 - 17 முடிய 7 ஆண்டுகளில் ஆதிதிராவிடர் ஆரம்பப் பள்ளிகள் 780 - லிருந்து, 836 - ஆக உயர்ந்தபோதும், அதில் படிக்கும் ஆதிதிராவிடக் குழந்தைகள் 82 ஆயிரத்திலிருந்து பாதியாகக் குறைந்திருக்கிறது. மொத்த ஆதிதிராவிடர் பள்ளிகள் அந்த 7 ஆண்டுகளில் 1073 - லிருந்து, 1134 - ஆக உயர்ந்தாலும், அதில் படிக்கும் மாணவர்கள் 2.1 லட்சத்திலிருந்து பாதியாகக் குறைந்திருக்கிறார்கள். ஆனால், கன்னியாகுமரி மாவட்டத்தில் பதுக்குனியில் இருக்கும் ஆங்கில வழி ஆதிதிராவிடர் பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறையவில்லை. தமிழ் வழிக் கல்வி கற்பிக்கும் ஆதிதிராவிடர் பள்ளிகளில் மட்டுமே எண்ணிக்கை சரிந்திருக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களிடம் ஆங்கிலக் கல்வி வழி மோகம் வலுவாக இருக்கிறது" என்று கூறுகிறார் அம்பேத்கர் நூற்றாண்டு கல்வி இயக்கத்தின் தலைவர் எம்.பரதன். எனவே, எழுச்சித் தமிழர் திருமாவளவன் தமிழ், தமிழ் என்று தொண்டை வறள கத்தினாலும், ஆதிதிராவிட மக்கள் தமிழை விட்டு விலகி ஆங்கிலத்தை நோக்கித் தான் செல்கிறார்கள். ஆனால், அகில இந்திய அளவில் 17 சதவிகித மாணவ - மாணவிகள் தான் ஆங்கில வழியில் கல்வி பயில்கிறார்கள். 49 சதவிகிதம் பேர் ஹிந்தியில் கல்வி பயில்கிறார்கள். மீதம் 34 சதவிகிதம் அவரவர் களின் மொழியில் கல்வி கற்கிறார்கள் என்று சமீபத்தில் மத்திய அரசு நாடாளுமன்றத்தில் அறிவித்திருக்கிறது.

                       தமிழ் தமிழ் என்று ஏமாற்றிய கழகங்கள்

தமிழகத்தில், 1960 - களில் மூன்றாவது மொழியாக ஹிந்தியைப் படித்தால் தமிழ் அழிந்து விடும் என்று தமிழக மக்களை பயமுறுத்தி, மாபெரும் ஹிந்தி எதிர்ப்புப் போராட்டம் நடத்தி, ‘தமிழ் எங்கள் உயிர், தமிழ் எங்கள் தாய்என்றெல்லாம் அடுக்குமொழியில் பேசி, மக்களை திசை திருப்பி தி.மு.. ஆட்சியைப் பிடித்தது. விளைவு என்ன? தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடி நம்மை குதூகலப்படுத்தி, முதலில் தி.மு..வும் பிறகு .தி.மு.. வும் 50 ஆண்டுகளாக தமிழின் பெயரால் ஆட்சி செய்து வருகிற தமிழகத்தில், தமிழ் பயிற்றுமொழியாக இருக்கும் தகுதியை இழந்து வருகிறது. தமிழ் வழிக் கல்வியிலிருந்து, ஆதிதிராவிடர்கள் என்று கூறப்படுபவர்கள் உட்பட தமிழக மக்கள் விலகுகிறார்கள். தமிழின் பெயரிலேயே அரசியல் நடத்தும் கழகத்தினர், தங்கள் குழந்தைகளைக் கூட தமிழ் வழிப் பள்ளிகளில் சேர்க்க விரும்புவதில்லை. ஏன் இந்த நிலை ஏற்பட்டிருக்கிறது, அது சரிதானா, அதற்கு என்ன நிவாரணம் என்பதை விருப்பு வெறுப்பு இல்லாமல் நிதானமாகச் சிந்திக்க வேண்டும்.

     ‘தாய்மொழி வழிக் கல்வியே தரமானது’ - உலகளவிலான ஆய்வுகள்

(காட்டுமிராண்டி) தமிழ் வழிக் கல்வி காலத்துக்கு ஒவ்வாதது, ஆங்கிலம் மூலமாகத்தான் முன்னேற முடியும் என்கிற பெரியார் சிந்தனை தமிழகத்தில் பரவி, மக்கள் மனதில் அது ஆழமாக பதிந்து விட்டது. (ஆங்கிலப் படிப்பு ஒன்றில்தான் பெரியாரும், பிராமணர்களும் ஒருமித்த கருத்து கொண்டிருந்தார்கள்). அதனால் எல்லா நிலையிலும் உள்ள தமிழக மக்களும், தமிழ் வழிக் கல்வியை கைவிட்டு விட்டு, ஆங்கில வழிக் கல்வியை நாடுகிறார்கள். ஆனால், அந்தக் கருத்து முற்றிலும் தவறு என்று, சமீப காலத்தில் உலகளவில் நடத்தப்பட்ட ஆய்வுகள் உறுதிப்படுத்தியிருக்கின்றன. கடந்த 15 - 20 ஆண்டுகளில் குறிப்பாக கல்வி வளர்ச்சிக்கும், அறிவு வளர்ச்சிக்கும் தாய் மொழி வழிக் கல்வி அவசியம் என்பதை உலகளவில் பல ஆய்வுகள் அடித்துக் கூறுகின்றன. 2004 - ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பு, ‘கல்வித் தரத்துக்கு தாய் மொழி வழிக் கல்வியின் முக்கியத்துவம்என்கிற தலைப்பில் செய்த ஆய்வு, ‘தாங்கள் பேசாத ஒரு வெளிநாட்டு மொழியில் கற்கும் கல்வியின் தரம், நீச்சல் கற்றுக் கொடுக்காமல் மாணவர்களை நீரில் தள்ளி மூழ்கடிப்பது போலத் தான் இருக்கும்என்று உதாரணம் கூறி, அது அறிவு வளர்ச்சி இல்லாத கல்வியாகத்தான் அமையும் என்று கண்டித்துக் கூறியிருக்கிறது. http://unesdoc.unesco. org/images/0014/001466/146632e.pdf).
2008 - ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பின் ஆய்வு, ‘ஆரம்பப் பள்ளியில் ஒரு குழந்தையின் அறிவு வளர்ச்சிக்கு உகந்தது தாய் மொழிக் கல்வியேஎன்று கூறிய பிறகும், அதிகமாக பல நாடுகள் கல்வித் திட்டங்களில் சிலபுகழ் பெற்றமொழிகளில் கற்கும் கல்வியைப் புகுத்துகிறார்கள். அதற்கு பெற்றோர்களும் ஒரு காரணம். தாய் மொழியைத் தவிர வேறு மொழியில் கல்வி கற்பவர்கள், தாய் மொழியில் கற்பவர்களை விட, ஒரு பாடத்தைப் புரிந்து கொள்ள 7 ஆண்டுகள் கூட ஆகும்என்று கூறுகிறது 2010 - ஆம் ஆண்டு நார்வே நாட்டின் காசஸ்பார்க் சர்வதேசப் பள்ளியின் ஆய்வு. (http://www.ibo.org/contentassets/4ccc99665bc04f3686957 ee197c13855/thompson execsum 8-29-12.pdf ). தாய்மொழியில் ஒரு குழந்தை நல்ல பயிற்சி பெற்றால், மற்ற மொழிகளில் அது கற்றுக் கொள்வது சுலபம் என்று எல்லா ஆய்வுகளும் கூறுகின்றன. ஆங்கில வழியில் கற்பதால் இயற்கையாக தமிழிலும் தேர்ச்சி பெறுவதில்லை. ஆங்கிலத்திலும் தேர்ச்சி வரவில்லை. இதுதான் யதார்த்த நிலை.

இருந்தும், இப்படியெல்லாம் உலகில் ஆய்வுகள் நடந்து, உலகம் மாறி வருவதைப் பற்றி தமிழக மக்களுக்கு தமிழக அரசு எடுத்துக் கூறியதா? பிறந்த நாட்களுக்கு ஆயிரம் விளம்பரங்கள் கொடுக்கும் அரசு, இதுபற்றி ஏதாவது விளம்பரம் கொடுத்ததா? இத்தனை திராவிடக் கழகங்கள் இருக்கின்றனவே, ஏதாவது ஒரு கழகம் இதுபற்றி கருத்தரங்கங்கள், பொதுக்கூட்டங்கள் நடத்தி, விளம்பரங்கள் செய்து மக்களுக்கு விழிப்புணர்ச்சி ஊட்டியதா? மக்களுக்கு விபரம் தெரியவில்லை என்றால், ஆங்கிலத்தால் மட்டுமே அறிவு வளர்ச்சி ஏற்படும் என்று அதன் மீதுள்ள மோகத்தால் உருவான தவறான சிந்தனை அவர்களுக்கு தொடர்ந்து இருப்பதிலும், பரவுவதிலும் ஆச்சர்யம் என்ன இருக்க முடியும்? எனவே, கழகங்கள் தமிழ்த்தாய் வாழ்த்து பாடியதே தவிர, தாய்மொழி வழிக் கல்வி எவ்வளவு அவசியம் என்பதை தாங்கள் உணரவும், மக்களுக்கு உணர்த்தவும் தவறி விட்டன. ஆனால், ஆரம்பப் பள்ளிகளில் தமிழ் மொழியில் பாடம் கற்க வேண்டியதன் அவசியத்தை தமிழக மக்கள் உணர வேண்டும் என்பதை நாம் வலியுறுத்துகிறோம். இதுபற்றி சரியான விவாதம் தமிழகத்தில் நடத்தப்பட வேண்டும்.

No comments:

Post a Comment