Tuesday, February 9, 2016


இப்படியெல்லாம் கூட; 

பெரியார் கொள்கையாளர்கள் யோசிப்பார்களா?(1)




எனது பதிவுகளை படித்து வரும் ஒரு 'பெரியார்' கொள்கையாளர், அண்மையில், எனக்கு எழுதிய மடலில் உள்ள கீழ்வரும் கருத்தானது,  'இப்படியெல்லாம் கூட, எனது பதிவுகளை தவறாக புரிந்து கொள்ளும் அளவுக்கு, பெரியார் கொள்கையாளர்கள் யோசிப்பார்களா?' என்ற வியப்பை ஏற்படுத்தியது.

"பிராமணர்  தரப்பு  நியாயங்களை  வெளிப்படுத்துவதுபோல்சிலகாலம்  தாழ்த்தப்பட்டோர் வசிக்கும்  பகுதிகளில்  குடியிருந்தால்  உங்கள்  கருத்து  தீவிர  தலித்வாதமாய்   வெளிப்படலாம்  என்றே  நான்  நினைக்கிறேன்."

அவருக்கு கீழ்வரும் பதிலை அனுப்பினேன்.

"நான் அதிகமாக பிராமணர்களுடன் இருந்த காலத்தில், அவர்களில் பலர் எனக்கு நண்பர்களாயிருந்த காலத்தில் தான், பெரியார் இயக்கத்திற்குள் அடியெடுத்து வைத்தேன். நான் இப்போது வசிக்கும் பகுதியில் பிராமணர்கள் இல்லை. வீடு, பணியிடம் என்று பார்த்தால், தலித்துகளே அதிகமாக உள்ளனர்.

விவாதத்திற்குள் நிற்காமல், விவாதத்திற்குள் ஈடுபடுபவர்களை எடைபோடும் தவறை, நான் செய்ததில்லை ; தெரிந்தால் திருத்திக்கொள்ள தயங்கியதில்லை. ('எனது புரிதலில், விவாதத்தின் நோக்கங்கள்' ; http://tamilsdirection.blogspot.in/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_26.html ) அந்த வியாதியுள்ளவர்களுடன் நான் பழகுவதில்லை. எனவே உங்களை சந்திக்கும் தகுதி எனக்கில்லை, அல்லது என்னை சந்திக்கும் தகுதி உங்களுக்கில்லை; இரண்டுமே சரியாக இருக்கலாம். எனவே அந்த நிலை மாறும் வரை, நாம் சந்திப்பதில் பலன் இல்லை."

எனது பதிவுகளில் எந்தெந்த பகுதிகள், மேலேக்குறிப்பிட்ட கருத்துக்கு அடிப்படைகள் என்பதை அவரோ, அல்லது அவர் போன்ற பிற 'பெரியார்' கொள்கையாளர்களோ எனது பதிவின் கீழ் உள்ள 'வாசகர் கருத்து' (comment) பகுதியில் பதிவு செய்வதை, உண்மையான ஆவலுடன், வரவேற்கிறேன். கீழ்வரும் பதிவுகள் உள்ளிட்டு, எந்த பதிவிலிருந்தும், அவர்களது கருத்திற்கான சான்றுகளை முன்வைக்கலாம்.

'பார்ப்பனர் நலன்': 'மூடநம்பிக்கையா'? 'பகுத்தறிவா'?

"திராவிட இயக்கத்தால் வளர்க்கப்பட்ட 'உணர்ச்சிபூர்வ பார்ப்பன எதிர்ப்பை' உள்ளடக்கிய தமிழுணர்வு என்பதானது, தமிழ்நாட்டை சீரழித்த 'தரகு நோய்' வளர்ச்சிக்கே உதவியுள்ளது என்பதையும், அதனால் தமிழ்நாட்டில் அறிவுப்புலம் வறண்ட பாலைவனம் ஆகும் திசையில் பயணிப்பதையும், அதை  நோக்கி , நான் ஆய்வுக்கவனம் செலுத்த, அந்த அனுபவங்களே முக்கிய காரணமாகும்." என்பதை கிழ்வரும் பதிவில் விளக்கியுள்ளேன்.
' தமிழின் மரணப் பயணம் துவங்கிவிட்டதா? (8)
தமிழ்நாட்டுப் பிராமணர்கள் தமிழைக் காப்பாற்றுவார்கள்'

இதுவரை எந்த வாச‌கர் கருத்தையும் அகற்றவில்லை; இனியும் அகற்றப் போவதில்லை; உரிய சான்றுகளின் அடிப்படைகளில், பகிரங்கமாக எனது கருத்தை திருத்திக்கொள்ள தயங்கியதில்லை. சார்பற்ற (Objective)  பார்வையின்றி, நான் 'வசிக்கும்  பகுதி' காரணமாக, 'அதன் சார்பான' 'நியாயங்களை  வெளிப்படுத்துவ'தாக, அதை அறிவுபூர்வமாக நிரூபிக்காமல், 'நீதிபதி' போல, 'தீர்ப்பு' வழங்கி. என்னை 'அசிங்கப்படுத்தி', 'பெரியார் கொள்கைகளையும், நிலைப்பாடுகளையும் விமர்சிக்கும் 'சமூக கடமையிலிருந்து' விலகச் செய்யலாம்', என்ற நினைப்பும், வெற்றி பெறாது; என்பதையும் தெளிவுபடுத்த விழைகிறேன்.

பெரியார் இயக்கத்தில் இருந்த காலத்தில் தி..தலைவர் கி.வீரமணியின் 'ஒற்றர் நான்' என்று,  மாநில அளவில் பொறுப்பாளர்களாக இருந்தவர்களே, என்னை சந்தேகக்கண்ணுடன் அணுகி, புறத்தில் என்னுடன் 'நண்பர்கள்' போல் பழகியிருக்கிறார்கள் என்பதை, பெரியார் இயக்கத்தை விட்டு விலகி, சில காலம் கழித்தே எனக்கு தெரியவந்ததை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.  ( ' "கி.வீரமணியின் ஒற்றர் நீங்கள்"; &  "தன்னுடைய  கடனுக்காக  பிராமணசார்பு, பாஜக  சார்பாக  மாறிவிட்டார் ";        இரண்டு வதந்திகளும், விளக்கங்களும்';  http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html )

ஒரு இயக்கத்தில் உள்ளவர்கள் மற்றவர் மீது உள்ள ஐயங்களை, வெளிப்படையாக தெரிவித்து, உண்மையை அறிந்து கொள்ள, அந்த இயக்கத்தில் திறந்த மனதுடன், அறிவுபூர்வ வெளிச்சத்தில், வெளிப்படையான (Transparency), தவறுகளுக்கு பொறுப்பேற்கக் கூடிய வகையில்(Accountability), விவாதங்கள், நடைபெற வேண்டும். அதற்கு பதிலாக 'கிசு கிசு' பாணியில் 'சந்தேகங்கள்' 'உண்மைகள்' போல வலம் வந்தால், அது அந்த இயக்கமானது, பொதுநலனிலிருந்து விலகி, 'சுயநலன்களை' ஊக்குவிக்கும் திசையில் பயணிப்பதன் அறிகுறியே ஆகும்.

திறந்த மனதுடன், அறிவுபூர்வ வெளிச்சத்தில், வெளிப்படையான (Transparency), தவறுகளுக்கு பொறுப்பேற்கக் கூடிய வகையில்(Accountability), விவாதங்கள்  நடைபெற்ற ஒரு இயக்கத்தில், மேற்குறிப்பிட்ட நோய் நுழைந்த வரலாற்று பின்னணியையும்,  கீழ்வருமாறு பதிவு செய்துள்ளேன்.


'திருப்பாதிரிப்புலியூர் ஞானியார் சுவாமிகள் ஆசீர்வாதத்துடன், 1925இல் 'குடிஅரசு' இதழை .வெ.ரா தொடங்கினார்.

தன்னை எதிர்த்து ஜீவா, முத்துச்சாமி வல்லத்தரசு உள்ளிட்டு பலர் அனுப்பிய மடல்களை அப்படியே 'குடி அரசு' இதழில் வெளியிட்டு, விளக்கம் கொடுத்து, பயணித்தவர், 1944 முதல் , அப்போக்கிலிருந்து திசை திரும்பி, உணர்ச்சிபூர்வமாக, விவாதிப்பவரின் 'யோக்கியதையை' எடை போட்டு, விவாதத்தில் நுழைத்து,  அண்ணாதுரையை விமர்சித்து பயணித்ததால், அண்ணாதுரை வலுவாகி; பொது அரங்கில் அவ்விவாத நோய் அரங்கேற;

1949இல் தி.மு., தோன்றியதும், அந்த உணர்ச்சிபூர்வ மோதலானது வீரியம் பெற்று, அதில் பாரதிதாசன், இன்றும் பிரசுரிக்க முடியாத அளவுக்கு, அண்ணாதுரை மீதும், ஜீவா மீதும் வசைமாரி 'எழுதி வெளியிட';

அதன் அடுத்த கட்டமாக, 'ஆபாச பேச்சாளர்களும், எழுத்தாளர்களும்' பொது அரங்கில் வலம் வர;

தமிழ்நாட்டின் பொது அரங்கில், அறிவுபூர்வ வெளிச்சத்தில், வெளிப்படையான (Transparency), தவறுகளுக்கு பொறுப்பேற்கக் கூடிய வகையில்(Accountability), விவாதங்கள் மறைய; அந்த போக்கில், அடிப்படைக்கல்வி முதல் பல்கலைக்கழகங்கள்  உள்ளிட்ட  அரசு துறைகளிலும், குற்றவாளிகளை கண்டுபிடித்து தண்டிக்க வேண்டிய அரசு துறைகளிலும், ஊழல் வளர;


மேற்குறிப்பிட்ட வரலாற்று பின்னணியில், அந்த உணர்ச்சிபூர்வ 'கிசுகிசு' இருட்டில், அகத்தில் சீரழிந்து, புறத்தில் 'முற்போக்கு' வேடமிட்ட, சுயலாப கள்வர்கள் வளர்ந்தார்கள்; திருச்சி பெரியார் மையம் அதில் சிக்கி, எனக்கு அதிர்ச்சியையும், நம்பமுடியாத இழப்புகளையும் ஏற்படுத்தி; அந்த 'சுயலாப கள்வர்' உருவான தோற்றம் பற்றிய ஆய்வில், என்னை ஈடுபட தூண்டி; மனித உறவுகளை காவு கொடுத்து பொருள் ஈட்டுவோரை, 'வரைவில் மகளிர்' என்று திருக்குறள் ( பொருட்பாலில், காமத்துப் பாலில் அல்ல)  'வரைவில் மகளிர்' ( விலை மாதர்)அதிகாரம் 187 அடையாளம் காட்டியுள்ளது.  அதே அதிகாரத்தில், அத்தகையோருடன் உறவு கொண்டு, 'பலன் அனுபவிப்பவர்களை', 'இருட்டறையில் பிணம்'(திருக்குறள் 913) தழுவியவர்கள் என்றும், திருக்குறள் அடையாளம் காட்டியுள்ளது. சட்டத்தின் பிடியில் சிக்காமல், சமூகத்திற்கு கேடான ( விழுப்புரம் 3 கல்லூரி மாணவிகளின் மர்ம மரணம், தமிழ்நாட்டில் ஊழல் காரணமான வெள்ள பாதிப்புகள், மவுலிவாக்கம் கட்டிட விபத்து போன்ற இன்னும் பல) ஊழல் வழிகளில் பணம் ஈட்டுவோரை 'வரைவில் மகளிர்' என்றும், 'அந்த' பணத்தின் பலன்களை அனுபவிக்கும், அவர்களின் குடும்பத்தினர், நண்பர்கள், சார்ந்த 'சாதி ஒழிப்பு, பார்ப்பன எதிர்ப்பு, முற்போக்கு', 'பிற்போக்கு' அமைப்புகளில் உள்ளவர்களையெல்லாம் 'இருட்டறையில் பிணம் தழுவியவர்கள்' என்றும், திருக்குறள் 'பொருட்பாலில்' அடையாளம் காட்டியுள்ளது. ஊழல் ஒழிப்பு ஒழுங்காக நடந்தால், அவர்கள் எல்லாம் விசாரணை வளையத்திற்குள்  வந்தாக வேண்டும்."
('தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது  'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா?;'காலதேச வர்த்தமான' மாற்றங்களுக்கு உட்படாமல்; பெரியார் கட்சிகள் மரணமடைந்து வருகின்றனவா?';

அது மட்டுமல்ல,சென்னையில் 'ஊழல்' வெள்ள பாதிப்புகள் உள்ளிட்டு, தமிழ்நாட்டில் உள்ள பாதிப்புகள் எல்லாம் பிராமணர், பிராமணரல்லாதோர் வேறுபாடின்றி, அனைத்து தரப்பு மக்களையும் பாதித்ததையும், நல்லவர்கள் எல்லாம், எந்த சாதி,மதம்,மொழி என்ற வேறுபாடின்றி, (ஏழை மாணவர்கள் உயர்கல்வி பயில்வது உள்ளிட்டு இன்னும் பல) உதவி வருவதையும் நாம் பார்த்து வருகிறோம். இது தொடர்பாக கீழ்வரும் பதிவையும் வெளியிட்டுள்ளேன். 

'1925 முதல் வெளிவந்த 'குடி அரசு' மற்றும் பின் வெளிவந்த திராவிட இயக்க இதழ்கள், புத்தகங்கள், காரல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், மாவோ உள்ளிட்ட மார்க்சிய அறிஞர்களின் நூல்கள், ஜீன் பால் சாத்ரே(http://en.wikipedia.org/wiki/Jean-Paul_Sartre), சாம்ஸ்கி (http://en.wikipedia.org/wiki/Noam_Chomsky )  உள்ளிட்ட பல நவீன சிந்தனையாளர்களின் கட்டுரைகள், எல்லாவற்றையும் விட, பெரியார்  இயக்கங்களில், குறிப்பாக திருச்சி பெரியார் மையத்தில் கிடைத்த, மதிப்பு வாய்ந்த உள்ளிடான (Valuable input), 'அனுபவங்கள்'  போன்றவை துணையுடனே தான், நான் 'திராவிட மன நோயாளித் தனத்தின்' தோற்றத்தையும், வளர்ந்த செயல்நுட்பத்தையும் கண்டுபிடிக்க முடிந்தது.'

'திராவிட மனநோயாளித்தனத்தின் பலிகடா:(Social Functional Checks) சமூகசெயல்நெறி மதகுகள் (2) ; பலிகடாவின் 'பலன்கள்' : பிராமணர், பிராமணரல்லாதார் என்ற வேறுபாடின்றி'

எனக்கு முன்பின் தெரியாதவர்களாக இருந்து, சுயலாப நோக்கற்ற எனது பொது வாழ்வையும், ஆய்வுகளையும் தாமாகவே அறிந்து, எனக்கு 'நம்ப முடியாத' உதவிகள் புரிந்த,  'அனைவருமே' ( நான் பிராமணர் அல்ல, தலித் அல்ல என்பது தெரிந்தும்),  'பிராமணர்கள், தலித்துகள்' ஆவர்.

ஆனால் என்னுடன் பழகி, உதவிகள் பெற்று, 'நன்றி கெட்டவர்களாகவும், இழிவின் இலக்கணமாகவும்' வெளிப்பட்ட 'அனைவருமே' 'பெரியார் கொள்கையாளர்கள்' ஆவர்; வணங்குதற்குரிய அரிய நண்பர்கள் சிலர், பெரியார் இயக்கத்தில் இருந்த போது, எனக்கு கிடைத்ததை ஈடுகட்ட போலும்.( http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html ) 'பெரியார் மையம்' மூலம், புறத்தில் நான் ஏமாந்து , பழகியவர்களை தவிர, மாணவ பருவத்திலிருந்து, இன்று வரை, உண்மை, நேர்மை, உறவில் சுயலாப நோக்கற்றவர்கள் தான், எனது சமூக வட்டத்தில் இருந்தார்கள்/ இருக்கிறார்கள். என்னை போன்று வாழ்ந்து வருபவர்கள், 1967க்கு முன் பெரும்பான்மையாக இருந்து, இன்று சிறுபான்மையாக உள்ளார்கள் என்பது என் கருத்து. எனவே எனது சமூக வட்டத்தில், எவரை அனுமதிப்பது? என்பதில், மிகவும் எச்சரிக்கையுடன் வாழ்கிறேன்.

அறிவுபூர்வ வெளிச்சத்தில், வெளிப்படையான(Transparency) , தவறுகளுக்கு பொறுப்பேற்கக் கூடிய வகையில்(Accountability),  தமிழ்நாட்டின் பொது அரங்கு, 1944க்கு முன் இருந்ததால், காங்கிரசானாலும், நீதிக்கட்சியானாலும், கம்யூனிஸ்டானாலும் நேர்மையான தலைவர்களே பெரும்பாலானவர்களாக இருந்தார்கள். 1944 முதல், உணர்ச்சிபூர்வ இருட்டு வளர்ந்து, அந்த போக்கை சிதைத்ததால், ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகாத தலைவர்கள் அரிதாகி விட்டார்கள். என்னைப் போன்றவர்கள் 'பிழைக்கத் தெரியாதவராகவும்', 'ஒற்றராகவும்', , "தன்னுடைய  கடனுக்காக  பிராமணசார்பு, பாஜக  சார்பாக  மாறிவிட்டார் " என்பதாகவும் , பரப்புரை பரவ; ஊழல் ஒழிப்பு ஒழுங்காக செயல்பட்டால், சிறை செல்ல வேண்டியவர்கள் எல்லாம், சட்டத்தின் பிடியில் சிக்காத, 'வாழ்வியல் புத்திசாலிகளாக', 'முன்மாதிரிகளாக' வலம் வந்து கொண்டிருக்கிறார்கள்.
 (http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html )

பெரியார் இயக்கத்தில் இருந்த காலத்தில், எனது பங்களிப்புடன் நடந்த மாணவர் போராட்டங்களில், அதிக துணிச்சலையும்ஆர்வத்தையும் வெளிப்படுத்தியவர்கள், ஒப்பீட்டளவில் தலித் மாணவர்களே ஆவர். தமிழ்நாட்டின் சமூகவியல் ஆய்வில், கணக்கில் கொள்ள வேண்டிய முக்கிய 'சிக்னல்கள்' (signals) இவை ஆகும்.   

திராவிடர் கழக தலைவர் கி.வீரமணிக்கு நெருக்கமாகி, விடுதலைப்புலி தலைவர்கள் ராகவன், பிரபாகரன், பேபி, ஆண்டன் பாலசிங்கம், மாத்தையா உள்ளிட்ட இன்னும் பலருடன் பழகி, தமிழ்நாட்டில் விடுதலைப்புலிகள் எண்ணிக்கையிலும், பணபலத்திலும், தமிழ் நாட்டு சமூக அங்கீகாரத்திலும், குறைந்த நிலையில் இருந்த போது,  காலூன்றி நடக்க, 'துணை' புரிந்து, தவறான திசையில் பயணிப்பதை முன்கூட்டியே ஆண்டன் பாலசிங்கத்திடம் எச்சரித்து, பின் அவற்றை திருச்சி பெரியார் மையம் மூலம் புத்தகங்களாக வெளியிட்டு,; மார்க்சிய லெனினிய குழுக்களுடன் அறிவுபூர்வ விவாதங்கள்  மேற்கொண்டு, தமிழ்நாட்டு நக்சலைட் தலைவர்களுடன் பழகிய; இளையராஜா, வீ.ப.கா சுந்தரம் உள்ளிட்ட இன்னும் பல இசை மேதைகளுடன் பழகிய; எனது வாழ்க்கை வரலாறு எழுதும் போது, விருப்பு, வெறுப்பற்ற அணுகுமுறையில், மேலே குறிப்பிட்டவை தொடர்பான கூடுதல் வெளிச்சத்தை, வெளிப்படுத்த எண்ணியுள்ளேன்.

பொது அரங்கில் விவாத புலத்தினை, புலமையாளர்கள், 'அசிங்கப்படாமல்' ஒதுங்க விரும்பும், விவாத புலமாக்கியதன் விளைவுகளால், தமிழ்நாட்டில் அறிவுப் புலம் சீர் கெட்டதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.( http://tamilsdirection.blogspot.in/2016/02/style-definitions-table.html )

புழுதிவாரி தூற்றுவார்களே என்று அஞ்சி;
புலமையாளர்கள் பொதுஅரங்கில் விவாதத்தை தவிர்ப்பதானது;

சுயநல கள்வர்கள் ஆதிக்கத்தில் தமிழும், தமிழர்களும் வேரழியும் மரணப்பயண போக்கிற்கு துணை புரிவதாகும். அந்த தவறை நான் செய்யப் போவதில்லை. நம்மையும், நமது சமூக வட்டத்தையும், சுயநலகள்வர்களிடமிருந்து பாதுகாத்தே, நமது சமூக ஆற்றல் ( அறிவு/உடல் உழைப்பு,நேரம், பணம்) தமிழின், தமிழர்களின் மீட்சிக்கு பயன்படுவதை உறுதி செய்ய முடியும்.

குறிப்பு:

மேலே குறிப்பிட்ட 'பெரியார்' கொள்கையாளர் எனது பதிவுகள் குறித்து, தெரிவித்த இன்னொரு கருத்து:


"உங்கள்  கட்டுரைகள்  ஒரு  குறிப்பிட்ட  தலைப்பில்  ஆழமாக  இல்லாமல், ஒரே கட்டுரையில்  பல  செய்திகளை தொடர்ச்சியில்லாமல், முழுமை பெறாமல்  உள்ளது. "

அதற்கு நான் அவருக்கு அனுப்பிய பதில் வருமாறு:

"கட்டுரைகள் சம்பந்தப்பட்ட பொருளின் தன்மையை பொறுத்து, தொடர்ச்சியாக படித்து விளங்கிக் கொள்வது என்பது ஒரு நீளவாக்கு (linear)  படித்தல் முறை. அந்தந்த பக்கங்களில் அடிக்குறியிட்ட தகவல்களையும், குறிப்பு(Referred)  கட்டுரைகளையும், நூல்களையும் தேடி, படித்து, விளங்கிக் கொள்வது அதற்கு அடுத்த கட்ட புரிதல். புத்தகங்களில் பின் பக்கம் ஆங்கில நூல்களில் , (தமிழில் 1967க்கு முன் வந்த பெரும்பாலான நூல்களில்) அகரவரிசையில் உள்ள,  பொருள் பட்டியலில், தாம் விரும்பும் பொருளை, தனது விருப்ப வரிசையில் படிப்பது என்பது நீளவாக்கற்ற(non-linear) முறை. நான் எடுத்துக் கொண்ட பொருளின்  பல்துறை பரிமாணங்கள் காரணமாக, ' Non-Linear & Fractal ' (http://fractalfoundation.org/resources/what-are-fractals/ ) என்ற புதிய முறை எனது பதிவுகளில், சோதனை முயற்சியாக வெளிவருகிறது. (அது பற்றி விளக்கி, ஒரு பதிவில் வெளியிட முயல்கிறேன்; நேரம் கிடைக்கும் போது)  உலக அளவில் பல புலமையாளர்கள், எனது பதிவுகளில் வெளிப்படும் கருத்துக்களை,  வெகுவாக பாராட்டி, எனக்கு எழுதியுள்ளார்கள். எனது 'பதிவுகள் ஆழமாக இல்லாமல்' என்று வந்துள்ள முதல் மடல் தங்களுடையதாகும். அந்த முறையில் தங்களால் படித்து விளங்கிக்கொள்ள முடியவில்லை என்பது, பலருக்கு இருக்குமானால், அவர்களுக்காக மட்டும் தனியே ஒரு நூல் எழுதுவது பற்றி பரீசிலிக்கிறேன்."



எனது பதிவுகளில் வெளிப்படும் கருத்துக்கள் ஆழமானவையா? ஆழமற்றவையா? என்று படிப்பவர்கள் முடிவு செய்யும் உரிமையை நான் மதிக்கிறேன். 'ஆழமற்றவை' என்று எனக்கு தெரிவிப்பவர்கள், எந்த கருத்து ஆழமற்றது? அக்கருத்துக்கு நான் முன் வைத்த சான்றுகளையும், அக்கருத்துக்கு எதிரான சான்றுகளையும் குறிப்பிட்டு, ஒப்பிட்டு, எதன் அடிப்படையில் ஆழமற்றவை? என்று விளக்கினால், நான் எனது கருத்தை திருத்திக் கொள்ளவோ, அல்லது 'ஆழமற்றது' என்ற கருத்தை திருத்திக் கொள்ளவோ, துணை புரியும். இது, நான் இன்றுவரை,  கடைபிடித்து வரும் அணுகுமுறையாகும்.

 

No comments:

Post a Comment