Thursday, August 24, 2017

'it’s a Mad Mad Mad Tamilnadu'- உலக அளவில் பெரும் வெற்றி பெறக்கூடிய  திரைப்படம்;
சட்டசபையில் இரகசிய வாக்கெடுப்பு நடந்தால், ஆளுங்கட்சி 'அமோகமாக' வெற்றி பெறும்.


தமிழ்நாட்டில் இந்துத்வா எதிர்ப்பு முகாம் ஆதரவாளராக பயணிக்கும் ஒருவர், அண்மையில் பின்வரும் கேள்வியை என்னிடம் எழுப்பினார்.

"இன்றைய அ. இ.அ.தி.மு.க அரசியலையும், ஓ.பி.எஸ்ஸையும், மத்தியில் உள்ள பா.ஜ.க அரசு பின்னிருந்து இயக்குவதாக, பரப்பப்படும் செய்தி(?) பற்றி, உங்களின் கருத்து என்ன? "

அவருக்கு நான், பின்வரும் வகையில், பதில் சொன்னேன்.

"அது உண்மையாயிருந்தால், எனக்கும் மகிழ்ச்சியே. தமிழ்நாட்டில் சாதாரண மக்களிடையே மோடியின் செல்வாக்கு பல மடங்கு உயரும். தமிழ்நாட்டில் அனைத்து கட்சிகளையும் நேரடி, மற்றும் மறைமுக கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு, தமிழ்நாட்டை சூறையாடிய சசிகலா குடும்ப அரசியல் ஓரங்கட்டப்பட்டால், அதன் மூலம் தமிழ்நாட்டை காப்பாற்றிய பெருமைக்காக‌, மத்தியில் ஆளும் பா.ஜ.க அரசை, பெரும்பான்மையான பொது மக்கள், குறிப்பாக ஜெயலலிதாவை உண்மையாக நேசித்த, நடுத்தர, ஏழை மக்கள் பாராட்டுவார்கள்.

பிரிவினைக்காக போராடிய மாணவர் தலைவர் தான், இன்று அஸ்ஸாமில் பா.ஜ.க ஆட்சியில் முதல்வர் ஆவார். வடகிழக்கு மாகாண‌ங்களில், முன்பு பிரிவினைவாத கட்சிகளில் இருந்து, இன்று பா.ஜ.கவில் சேர்ந்தவர்கள் பெற்று வரும் முக்கியத்துவம் காரணமாக, நீண்ட காலமாக பா.ஜ.கவில் இருந்தவர்களிடையே, முணகல் வெளிப்பட்டு வருகிறது. ஆனால் அந்த கவலையில்லாமல், தமிழக பா.ஜ.க வானது, திராவிடக் கட்சிகளின் பாணியில் ஆளுயர மாலை, மலர்க் கிரீடம், குழு அரசியல் என்று தொடர்ந்து பயணிப்பதில், எந்த சிக்கலும் இல்லை."

அது மட்டுமல்ல; சசிகலா குடும்ப எதிர்ப்பு சுனாமியின் குவியமாக கிடைத்த வாய்ப்பை, தீபா தவற விட்டார்; இன்று வரை, ஜெயலலிதாவின் மர்ம மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டி, நீதி மன்றத்தையோ, ஆளுநரையோ நாடாமல்; அரசியல் கோமாளியாக ஓரங்கட்டப்பட்டு.

அந்த சமூக சூழலில், சசிகலா குடும்ப அரசியலை எதிர்த்த ஓ.பி.எஸ் மட்டுமே, இன்று கட்சியில, ஆட்சியிலோ பலன்கள் 'அனுபவிக்காத ' ஜெயலலிதாவின் விசுவாசிகள் அங்கீகரித்துள்ள ஒரே தலைவர் என்பதை, சாதாரண மக்களுடனும், கிராம மக்களுடனும் தொடர்பில் உள்ள நான் அறிவேன்.

அதே போல், அனைத்து கட்சி தலைவர்களையும் ஓரங்கட்டி, இளைஞர்கள் மத்தியில், தமிழ்நாட்டில் நம்பமுடியாத அளவுக்கு செல்வாக்கு உள்ள நபர் சகாயம் ஐ.ஏ.எஸ் ஆவார்; மதுரை கிரானைட் ஊழல் விசாரணையை துணிச்சலுடன் மேற்கொண்டு 'சாதனை' படைத்த காரணமாக; அது தொடர்பான சி.பி.அய் விசாரணை கோரிக்கை பற்றி மூச்சு விடாமல், அல்லது காலம் தாழ்ந்து, தொடர் திட்டமின்றி ( No Follow up Plan) எதிர்ப்பதாக காட்டிக்கொண்டு, மோடி எதிர்ப்பில் பயணிக்கும் கட்சிகள் எல்லாம் கேலிப்பொருளாகி வரும் சூழலில்; 'பேச்சில் எழுத்தில் கவர்ச்சி, முற்போக்கு; சொந்த வாழ்வில் கள்வர் போக்கு', இன்றைய இளைஞர்களிடம் எடுபடாது, என்பதையும் வெட்ட வெளிச்சமாக்கி. ஊழலை எதிர்ப்பதாக காட்டிக் கொண்டு, ஜெயலலிதாவின் மர்மமான மரணத்தைப் பற்றி மூச்சு விடாமல், சசிகலா முதல்வராவார் என்று நினைத்து, அவரை சந்தித்து வாழ்த்தியவர்களையும், ஆதரித்தவர்களையும்,  இளைஞர்கள் ஒரு பொருட்டாக கூட மதிப்பார்களா?

அடுத்து சட்டசபையில் அரசுக்கு எதிரான தீர்மானத்தில், 'இரகசிய வாக்கெடுப்பு' நடந்தால், கீழ்வரும் நகைச்சுவை வெளிப்பட்டால் வியப்பில்லை. சுமார் 180க்கும் மேல், அரசுக்கு ஆதரவாக வாக்குகள் போடப்பட்டு, அத்தீர்மானமானது, பரிதாபகரமாக தோற்கடிக்கப்பட வாய்ப்பிருக்கிறது; கீழ்வரும் காரணங்களால்.

கடந்த சட்ட மன்ற தேர்தலில் தி.மு.க ஆட்சியைப் பிடிக்கும் என்ற ஊடக கணிப்புகளை நம்பி, பெருமளவில் செலவு செய்த தி.மு.க எம்.எல்.ஏக்களில் பலர், மீண்டும் ஒரு சட்டசபை தேர்தலை இப்போது சந்திக்க ஆர்வமின்றி இருந்தால் வியப்பில்லை; மீண்டும் போட்டியிட கட்சியில் வாய்ப்பு கிடைக்குமா? வாய்ப்பு கிடைத்தாலும், மீண்டும் பெருமளவில் செலவு செய்வது சாத்தியமா? புத்திசாலித்தனமா? இடையில் ஆளுநர் ஆட்சியில், தம்மிடம் உள்ள கணக்கில் வராத பணமும், சொத்துகளும் தப்பிக்குமா? தி.மு.க தலைவர் சட்டசபைக்கே வரவேண்டியதில்லை என்ற தீர்மானத்தை, நிறைவேற்ற ஒத்துழைத்த அரசை கவிழ்ப்பது புத்திசாலித்தனமா? அவரவர் தகுதி, திறமைக்கேற்ப, ஆளுங்கட்சியுடன் நெருக்கமாகி, பிழைப்பது புத்திசாலித் தனமா?

கூவத்துரில் 'பலன்கள்' அனுபவித்தவர்களில் பெரும்பான்மையோர் தான், இன்று சசிகலாவை கட்சியிலிருந்து ஓரங்கட்டும் முடிவு எடுத்துள்ளார்கள். அதே போல், புதுச்சேரி விடுதியிலும் தம்மால் முடிந்த அளவுக்கு, 'பலன்களை' அறுவடை செய்தபின், இரகசிய வாக்கெடுப்பில், அரசை கவிழ விடாமல் காப்பாறினால் தானே, அடுத்து, அடுத்து, அதே போல அறுவடை செய்யும் வாய்ப்புகள் கிட்டும், என்று தினகரன் வசம் உள்ள பெரும்பாலான எம்.எல்.ஏக்கள் முடிவு செய்தாலும், வியப்பில்லை.'பணநீக்கம்' (Demonetization) மூலம் கள்ளப்பண நடமாட்டத்தை ஒழிக்க முடியும் என்ற மோடி அரசின் அறிவிப்பானது, கூவத்தூரிலும், புதுச்சேரியிலும் கேலிப்பொருளாகி விட்டது.

மேலே குறிப்பிட்ட பாணியில், அறுவடை பலன்கள் அனுபவிக்க வாய்ப்பு இல்லாத, காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் மட்டுமே, சிந்தாமல், சிதறாமல், சட்டசபையில் அரசுக்கு எதிராக 'இரகசிய' வாக்கெடுப்பில் பங்கேற்பார்கள், என்பது எனது கணிப்பாகும்.

' 'it’s a Mad Mad Mad Tamilnadu'- உலக அளவில் பெரும் வெற்றி பெறக்கூடிய  திரைப்படத்திற்கான காட்சிகள் தான், தமிழ்நாட்டில் அரங்கேறி வருகின்றன. (http://tamilsdirection.blogspot.in/2017/07/its-mad-mad-mad-tamilnadu-its-mad-mad.html )

'‘It's A Mad Mad Mad Mad World (1963)’ (https://www.youtube.com/watch?v=Sla845GW9YM&list=PL8TMV15pFdNENjiYuFIpP1sCSXxRZajiF
ஹாலிவுட் திரைப்படத்தில், கிளைமாக்ஸ் காட்சியில் தான், கொள்ளையைடித்த பணம், காற்றில் பறக்க‌, பணத்தை விரட்டி கண்டவர்களின் கைகளுக்கு போகும்; இந்த திரைப்படத்தில், துவக்கத்திலிருந்து, வெவ்வேறு பாணிகளில், ஊழல்வழி பணம் எல்லாம், 'கிடைத்த வரைக்கும் லாபம்' என்று சாதி. மத, கட்சி வேறுபாடின்றி சுருட்டப்படுகிறது; அடுத்து ஆளுநர் ஆட்சி தொடங்கும் வரை. 

குறிப்பு:

தேவி லால், லல்லு பிரசாத், மாயாவதி, எடியூரப்பா என்று இன்னும் பலர், இந்தியாவில் உள்ள அந்தந்த‌ மாநிலங்களில், ஊழல் கறை படிந்த, தண்டிக்கப்பட்ட அரசியல்வாதிகளாகவும், முதல்வர்களாகவும் இருந்திருக்கின்றனர். ஆனால் தமது மாநில நலன்களுக்கு, துரோகம் செய்து, அவர்கள் வாழவில்லை. அவர்களில் எவரும், 1969க்குப் பின், தமிழக முதல்வராக இருந்திருந்தால்:

சட்டசபையில் துணிச்சலாக, 'காவிரியின் குறுக்கே, கர்நாடக அரசு அணைகள் கட்டிக் கொள்வதில் ஆட்சேபணையில்லை என்று அறிவித்திருக்க மாட்டார்கள்; அன்றைய பிரதமர் இந்திராவுக்கு பயந்து, கச்சத்தீவினை, இலங்கைக்கு கொடுக்க அனுமதித்திருக்க மாட்டார்கள்;
அதே போல, பெரியாறு அணை பலகீனமானகி விட்டது, என்ற கேரள அரசின் கூற்றை ஏற்று, அணையின் நீர் மட்டத்தை குறைக்க, அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரைப் போல‌, சம்மதித்திருக்க மாட்டார்கள்; மாறாக, மத்திய அரசின் நிபுணர் குழுவின் அல்லது உச்ச நீதிமன்றத்தின் பார்வைக்கு, பிரச்சினையை கொண்டு சென்றிருப்பார்கள்;

என்பது எனது கணிப்பாகும். அந்த பிரச்சினைகளின் போது, ஜெயலலிதா முதல்வராக இருந்திருந்தாலும், தமிழ்நாட்டிற்கு மேலே குறிப்பிட்ட பாதகங்கள் நிகழ்ந்திருக்காது, என்பதும் எனது கணிப்பாகும்.

No comments:

Post a Comment