Friday, November 20, 2020

  

தமிழக பா.ஜ.க செயல்பாடுகள் 2021 தேர்தலில் ‘பூமராங்ஆகுமா? (1)

 

2014இல் மோடி பிரதமரானது முதல், தமிழக பா.ஜ.க எவ்வாறு பயணிக்கிறது? என்பதை கீழ்வரும் உதாரணம் மூலமாக விளங்கிக் கொள்ளலாம். 2014 டிசம்பர் முதல் நான் வெளியிட்டு வரும் அபாய எச்சரிக்கைகளை எல்லாம் பார்க்க முடியாத அளவுக்கு, (‘தமிழ்நாட்டில் மோடி அலை சந்திக்கு ‘திராவிடச் சிக்கல்கள்’’; https://tamilsdirection.blogspot.com/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_30.html  )

தமிழக பா.ஜ.கவின் கண்கள் கட்டப்பட்டு, அது கூட தெரியாமல் உணர்ச்சிபூர்வமாக அரசியல் அரங்கில் கோமாளித்தனமாக போரிட்டு, 2014 பாராளுமன்ற தேர்தலில் பெற்ற வெற்றியை தலை கீழாக்கி, ஆர்.கே. நகர் இடைத்தேர்தலில் நோட்டாவிடம் தோற்று, அதிலும் பாடம் கற்காமல் 2014 தேர்தலில் தி.மு.கவிற்கு அமோக வெற்றியை தானம் செய்த‌து.

கருணாநிதி மீதும் திராவிட ஊழல் மீதும் வெறுப்புடன் உள்ள ஆத்திகத் தமிழர்கள் எல்லாம் ஈ.வெ.ரா மற்றும் அண்ணாவை மிகவும் மதிக்கிறார்கள். 1967 முதல் வாழ்ந்த அண்ணாவும், 1944க்கு முன், குறிப்பாக வைக்கம் போராட்ட ஈ.வெ.ராவும் போற்றப்பட வேண்டிய முன்னுதாரணங்கள் ஆவார்கள். அந்த ஈ.வெ.ராவையும் அண்ணாவையும் முன்னிலைப்படுத்தி கி.வீரமணியையும் கருணாநிதியையும் தனிமைப்படுத்தி எதிர்த்து, 2014 முதல் தமிழக பா.ஜ.க பயணித்திருந்தால் வலிமையாகியிருக்கும். அதற்கு எதிராக பயணித்து, மேற்குறிப்பிட்ட ஆத்திகத் தமிழர்கள் மத்தியில் கி.வீரமணிக்கும் கருணாநித்திக்கும்  முக்கியத்துவம் கூடி, மோடி வெறுப்பு அலை தமிழ்நாட்டில் வளர்ந்து வருகிறது. அதையும் கூட பார்க்கத் தெரியாத வகையில், கண்கள் கட்டப்பட்ட நிலையில் குருட்டுத்தனமான தற்கொலைப் பாதையில் பயணித்து, 2019 தேர்தலில் அவமானகரமான தோல்வியை தமிழக பா.ஜ.க சந்தித்தது.

மிகவும் தாமதமாக, இந்திய விடுதலைக்குப் பின் முதல் முறையாக தமிழ்நாட்டில் உள்ள தனித்துவமான (unique) அடையாளச் சிக்கலைத் தீர்க்கும் வகையில் பா.ஜ.க தலைவர் எல்.முருகன் மற்றும் துணைத்தலைவர் அண்ணாமலை கூட்டணியில் தமிழக பா.ஜ.க பயணிக்கத் தொடங்கியுள்ளது.

அந்த சரியான முயற்சி தாமதமாக தொடங்கியுள்ள நிலையிலும், 2014 முதல் தமிழக பா.ஜ.க தவறான திசையில் பயணித்தன் விளைவாக, நானறிந்த வரையில் 2014 இல் மோடிக்கு ஆதரவான மனநிலையில் இருந்த கல்லூரி மாணவர்களும் படித்த பிராமணரல்லாதோரும் 2019 தேர்தலில் மோடிக்கு எதிரான மனநிலையில் இருந்தார்கள். அந்த தவறான போக்கு தொடர்வதன் காரணமாக, பா.ஜ.க தலைவர் எல்.முருகன் மற்றும் துணைத்தலைவர் அண்ணாமலை கூட்டணியின் முயற்சிகள் சாண் ஏறி முழம் சறுக்கின கதையாகி, வரும் 2021 தேர்தலில் பா.ஜ.க அணி மிகவும் மோசமாக தோற்கப் போவதற்கான சிக்னல்களும் வெளிப்படத் தொடங்கியுள்ளன.

அந்த சிக்னலானது அரசியல் சம்பந்தமற்ற பொதுவான நல்ல கருத்துக்களை மட்டுமே பரிமாறிக்கொள்ளும், பெரும்பாலும் படித்த பிராமணரல்லாத வாட்ஸ் ஆப் குழுவில் அண்மையில் வெளிப்பட்டுள்ளது.

'பெரியாராவது, மயிராவது' என்ற தலைப்பில் 'பெரியார்' ஆதரவாளர்களை இழிவு செய்து ஒரு வாட்ஸ் ஆப் தகவல் வந்தது. அதனால் அந்த நபர், ஆத்திக இந்துக்கள் கொண்ட வாட்ஸ் ஆப் குழுவில் இருந்து நீக்கப்பட்டார்.

நான் சந்திக்கும் கல்லூரி மாணவர்களில் ஒருவர் கூட ஊடகங்களில் முக்கியத்துவம் பெறும் அரசியல் சர்ச்சைகள் எதிலும் ஆர்வம் காட்டவில்லை; நானாக பரிசோதனையாக உரையாடலில் குறிப்பிட்டாலும். அவ்வாறு நான் முயற்சித்தன் விளைவாக, அண்மையில் ஒரு கல்லூரி மாணவர் கீழ்வரும் கேள்வியை கேட்டு என்னை அதிர்ச்சிக்குள்ளாக்கினார். 

" ஏன் சார், கல்லூரி மாணவர்கள் எல்லாம் மோடியை வெறுக்கிறார்கள்?"

தமிழ்நாட்டின் நாடித்துடிப்பினை தெரிந்து கொள்வதில் ஆர்வமுள்ள மோடி ஆதரவாளர்கள் எல்லாம், இயலுமானால் தமது மோடி ஆதரவுப் போக்கினை வெளிப்படுத்தாமல், படித்த கட்சி சார்பற்ற பிராமணரல்லோதாரிடமும், கிராமப்புற பின்னணியுள்ள கல்லூரி மாணவர்களிடமும் உரையாடி, தமிழ்நாட்டில் உள்மறையாக (latent) மோடி வெறுப்பு 'அலை' எந்த அளவுக்கு உள்ளது? என்று கண்டுபிடிக்கலாம். கட்சி சார்பற்ற படித்த பிராமணரல்லோதோர் மத்தியில் உரையாடி, பா.ஜ.கவின் 'பெரியார் எதிர்ப்பு' எந்த அளவுக்கு மோடி எதிர்ப்பினை வளர்த்துள்ளது? என்றும் கண்டுபிடிக்கலாம்.

ஈ.வெ.ரா மணியம்மை திருமணம் தொடர்பான உண்மையை அறிய, ஈ.வெ.ரா தமது அண்ணன் மகன் சம்பத்தை வாரிசாக்க நடந்த முயற்சி, அண்ணா அதனை சீர்குலைத்து சம்பத்தை பிரித்தது, மணியம்மை இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் சிறை சென்றது, தமது தந்தையின் அனுமதியுடன் ஈ.வெ.ராவின் பராமரிப்பாளர் ஆனது, சம்பத்தை வாரிசாக்கும் முயற்சி தோற்றதால், அன்றைய இந்து சட்டப்படி ஒரு பெண்ணை மனைவியாக்கியே வாரிசாக்க முடியும் என்ற ஆலோசனையை ராஜாஜியிடம் பெற்றது, திருமணத்திற்குப் பின் மணியம்மை அச்சுறுத்தலுக்கு இலக்காகி ஈ.வெ.ராவின் நண்பர்கள் வீட்டில் பாதுகாப்பாக இருந்தது, அந்த திருமணத்தை கொச்சைப்படுத்தி அண்ணா எழுதியது, அது தொடர்பாக ஈ.வெ.ரா வெளியிட்ட விளக்கம் ஆகியவற்றை எல்லாம் ஆராய்ந்து திருக்குறள் (423) வழியில் உண்மையை உணராமல், அண்ணா எழுதியதை மட்டுமே உண்மை என்று நம்பி ராஜிவ் மல்கோத்ரா போன்றவர்கள் நடத்திய நேர்க்காணல் எல்லாம் (https://tamilsdirection.blogspot.com/2019/11/rajiv-malhotra-prof.html  )

பா.ஜ.கவுக்கு எந்த அளவுக்கு பின்னடைவானது? என்பது கூட தெரியாமல், அதே போக்கில் பல பா.ஜ.க ஆதரவாளர்கள் பயணித்து வருகிறார்கள்.

பொதுவாக தாம் ஆதரிக்கும் கட்சியை கொள்கையை பாராட்டும் நபர்களோடு உரையாடுவதிலும், பாராட்டும் நூல்களைப் படிப்பதிலும் எவரும் நேரத்தை செலவிடுவார்கள். ஆனால் நான் இசை ஆராய்ச்சிக்கு முன் பெரியாரிஸ்டாகப் பயணித்த காலத்தில், ஈ.வெ.ராவின் கொள்கைக்கு எதிராக வாதங்களை முன் வைக்கும் நபர்களையே தேடிக் கண்டுபிடிப்பதிலும், அவர்களை எதிரியாகக் கருதாமல் நட்புடன் அறிவுபூர்வமாக விவாதத்தினை முன்னெடுப்பதிலும், ஈ.வெ.ராவிற்கு எதிராக வெளிவந்த நூல்களைப் படிப்பதிலும் முக்கிய கவனம் செலுத்தினேன். நான் மார்க்சிய – லெனினிய -  பெரியாரியல் புலமையாளன் ஆனேன். இன்றும் நான் எழுதிய நூல்களையும் கட்டுரைகளையும் 'பெரியார்' ஆதரவாளர்கள் மறுபிரசுரம் செய்து வருகின்றனர்.

எனது நிலைப்பாட்டிற்கு எதிரானவர்களும் மனிதர்களே, எதிரிகள் அல்ல என்ற புரிதலில் நான் பயணிக்கிறேன். விவாதங்களில் எதிர்நிலைப்பாட்டில் உள்ளவர் ஏதாவது ஒரு வலைப்பின்னலில் சிக்கி, உள்மறை வேலைத்திட்டத்துடன் பயணிப்பதை நான் அறிந்திருந்தாலும், உரையாடலை அறிவுபூர்வமாக முன்னெடுத்தேனே தவிர, அவரின் அறிவையோ சமூக நேர்மையையோ (பெரும்பாலான பெரியாரிஸ்டுகள் செய்தது போல) உரையாடலில் கேள்விக்குறியாக்கியதில்லை. ஆனால் எனது சமூக வட்டத்தில் நேர்மையாளர்களை மட்டுமே அனுமதித்து வந்துள்ளேன். அதிலும் நமக்குள்ள கொள்கைப் பற்றின் காரணமாக சமூகக் கிருமிகளிடம் ஏமாற வாய்ப்புள்ளதை, 'திருச்சி பெரியார் மையம்' அனுபவங்கள் உணர்த்தின. அதனால் கூடுதல் எச்சரிக்கையுடன் நான் பயணிக்கிறேன்.

நான் 'பெரியார்' இயக்கத்தில் பயணித்த காலத்தில் என்னை அறிந்தவர்கள் எவரேனும், எனது இன்றைய நிலைப்பாட்டினை அறிவுபூர்வமாக விமர்சிப்பதை வரவேற்று, கீழ்வரும் பதிவையும் வெளியிட்டுள்ளேன்.

'சமரசமற்ற பார்ப்பன எதிர்ப்போடு பிணைந்த தனித்தமிழ்நாடு' (1);  எனது நிலைப்பாடுகளில் ஏற்பட்டு வரும் மாற்றங்கள் ?”

மோடி குஜராத் முதல்வராகி, அடுத்து வந்த சட்டசபை பொதுத்தேர்தலில், விஸ்வ இந்த் பாரிசத் உள்ளிட்ட இந்துத்வா ஆதரவாளர்களில் ஒரு பிரிவினர் மோடியை தேர்தலில் தொற்கடிக்க முயற்சித்தது, எனது கவனத்தினை 2005 முதல் ஈர்த்தது. அன்று முதல்  சாதி, மத பாரபட்சமற்ற, ஊழலற்ற வளர்ச்சி நோக்கிய திசையில் மோடி பயணிப்பதை ஆதரித்தும், அதில் வெளிப்படும் சறுக்கல்களை சுட்டிக்காட்டியும் நான் பயணித்து வருகிறேன்.

பா.ஜ.க உள்ளிட்ட தேசியக்கட்சிகளின் சுயநல அரசியல் போக்குகள் எல்லாம் இந்தியாவில் தேசக்கட்டுமானத்தினை எவ்வாறு சீர்குலைத்து வருகின்றன? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

இந்தியாவில் தமிழ்நாட்டில் தனித்துவமான போக்கில், தேசக்கட்டுமான சீர்குலைவும், தமிழக அரசின்   நிறுவன கட்டமைத்தல்(System Building) சீர்குலைவும் பின்னிப்பிணைந்து வளர்ந்த போக்கின்  உச்சக்கட்டமே, முதல்வர் ஜெயலலிதாவின் மர்ம மரணமானது வெளிப்படுத்திய சிக்னலாகும்.

அந்த சிக்னலை உணராமல், தமிழக பா.ஜ.வையும் அந்த 'மர்ம' மரணத்தின் மெளன சாட்சிகள் வரிசையில் இடம் பெறச் செய்து, இந்திராகாந்திக்கு இருந்த துணிச்சலின்றி, அந்த 'சிக்னலின்' போக்கிலேயே பிரதமர் மோடி பயணித்தார். 'அந்த' பலகீனமே மோடியின்  ஆட்சியில் 'கறுப்பு ஆடுகளை' வலிவுறச் செய்து, மெகா ஊழல் குற்றவாளிகள் விடுதலையாகி, மோடியின் ஊழல் ஒழிப்பானது, வடிவேலு பாணி காமெடியானது.  (https://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_25.html   )

கடந்த மன்மோகன் சிங் - தி.மு.க கூட்டணி ஆட்சியின் போது, தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலையில் இந்தி எழுத்துக்கள் மட்டுமே இருந்த 'மைல் கல்' பல இடங்களில் இருந்தது. எந்த எதிர்ப்புக் குரலும் இல்லை. முதல்வர் ஜெயலலிதாவின் முயற்சியால் அந்த தவறு சரி செய்யப்பட்டது. இன்று அதே தவறு மோடி ஆட்சியில் வெளிப்பட்டால், தமிழ்நாடெங்கும் இந்தி எதிர்ப்புப் போராட்டங்கள் வெடித்திருக்கும்.

தொல்லியல், வரலாறு உள்ளிட்டு மத்திய அரசின் துறைகள் எல்லாம் மன்மோகன் சிங் ஆட்சியில் தமிழுக்கும் தமிழ்நாட்டிற்கும் பாதகமாக செயல்பட்ட போது, யாரும் குரல் எழுப்பவில்லை. மோடி பிரதமரான் பின், அதே போக்கில் பயணிப்பதை 'மோடி எதிர்ப்பு' என்று குரல் எழுப்பினார்கள். மோடி அரசும் அதற்கு செவி மடுத்து, தொல்லியல் அகழாய்வுகள், மாவட்டம் தோறும் மருத்துவ மனைகள், மன்மோகன் சிங் தி.மு.க ஆட்சியை விட, தமிழுக்கு கூடுதல் முக்கியத்துவம், இலவச வீடு, கழிப்பறை, சாமான்யர்களுக்கு நேரடி பணப் பலன்கள் என்று தமிழ்நாடு பலன்கள் பெற்று வருகிறது. இடஒதுக்கீடு என்பதில் மாநிலங்களின் தனித்தன்மையைக் கணக்கில் கொள்ளாமல், இந்தியா முழுவதும் ஒரே அணுகுமுறை என்பதானது இந்தியாவின் பன்முகத்தன்மைக்கு எதிரானதாகும். பிரிவினை சக்திகளை ஊக்குவிப்பதாகும். 1925இல் அந்த பிரச்சினையில் காங்கிரஸ் ஏமாந்ததால், ஈ.வெ.ரா காங்கிரசில் இருந்து வெளியேறினார். அதுவே அவருக்கும் தமிழ்நாட்டிற்கும் கெடுதலானது. அந்த காங்கிரஸ் தவறை மத்திய அரசுக்கு தெளிவுபடுத்தி, தமிழ்நாட்டை பிரிவினை சக்திகளிடமிருந்து மீட்கும் பொறுப்பும் தமிழக பா.ஜ.கவிற்கு இருக்கிறது.

இந்திய விடுதலைக்குப் பின், முதல் முறையாக தமிழ்நாட்டின் அடையாளச் சிக்கலைத் தீர்க்கும் திசையில் பா.ஜ.க தலைவர் என்.முருகனும், துணைத்தலைவர் அண்ணாமலையும் பயணிப்பது பாராட்டுதற்குரியதாகும். தமிழ்நாட்டின் நலன்களை மத்திய அரசு துறைகளில் கண்காணிக்க தமிழக பா.ஜ.க டெல்லியில் ஒரு கண்காணிப்புக்குழுவை நிரந்தரமாக செயல்பட வைப்பது நல்லது. பிரிவினைக்கட்சிகள் குரல் எழுப்பும் முன்னே, தமிழக பா.ஜ.க முந்திக் கொண்டு பிரச்சினைகளை தமிழ்நாட்டிற்கு சாதகமாக தீர்க்க முடியும்.

2014 முதல் அந்த திசையில் தமிழக பா.ஜ.க பயணிக்காததால், எதிர் விளைவுகளை சந்திக்க நேரிட்டது.

பொதுவாக கருணாநிதி மீது கோபமாக இருந்தவர்கள் ஸ்டாலின் மீது அந்த அளவு கோபமாக இல்லை. கருணாநிதியைப் போல கவர்ச்சிகர தமிழில் பேசி ஏமாற்றாமல், கருணாநிதியின் பாணியில் இருந்து தடம் புரண்டு, ஏரிகள் தூர் வாறுதல், பண‌ உதவிகள் செய்தல் போன்றவை அதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் உதயநிதி மூலமாக தி.மு.கவின் வாக்கு சேகரிப்பு வலைப் பின்னலானது அதிவேகமாக சீர் குலைந்து வருகிறது.

பொதுமக்கள் மத்தியிலும் கல்லூரி மாணவர்கள் மத்தியிலும் ஜெயலலிதாவின் மர்ம மரணம் காரணமாக சசிகலா மீதும், சசிகலாவுக்கு ஆதரவாக பா.ஜ.கவினர் வெளிப்படுத்திய கருத்துக்களால் மோடி மீதும் வெறுப்பு நீடிக்கிறது.

மேற்குறிப்பிட்ட சமூக சூழலில், தி.மு.கவையும் ஸ்டாலினையும் மட்டுமே குறி வைத்து தமிழக பா.ஜ.க செயல்படுவதானது, ‘பூமராங் (boomerang: an act or utterance that backfires on its originator) ஆகி, தமிழக பா.ஜ.கவைப் பலகீனமாக்கி வருகிறது.

மு.க.அழகிரி என்றவுடன் மதுரையில் பத்திரிக்கை அலுவலகம் எரிப்பும் பத்திரிக்கையாளர்கள் சாவும் தான் பொதுமக்களுக்கு நினைவு வரும். . மு.க.அழகிரி, சசிகலா போன்றவர்களுக்கு நேசமான கட்சி என்று பெயரெடுத்தால். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் ஏன் தமிழக பா.ஜ.க நோட்டாக்கட்சியானது? என்று ஆராய்ந்து பாடம் கற்று பயணிக்கவில்லை என்றால், 2021 தேர்தலிலும் அது தான் நடக்கும்.

பா.ஜ.க தலைவர் எல்.முருகன் மற்றும் துணைத்தலைவர் அண்ணாமலை மூலம் பெற்று வரும் வளர்ச்சியானது, சாண் ஏறி முழம் சறுக்கி, 2021 தேர்தலில் கூட்டணிக் கட்சிகளையும் தோற்கச் செய்யும் நோட்டாக்கட்சியாகும் விளைவில் முடியும்.


குறிப்பு: உதயநிதி திருச்சியில் கரியமாணிக்கம் கைலாசநாதர் கோவில் சார்பில், பூரண கும்ப பரிவட்டம் கட்ட மறுப்பு தெரிவித்ததோடு, சிவாச்சாரியார்கள், தன் நெற்றியில் திருநீறு மற்றும் குங்குமம் வைக்கவும் அனுமதிக்கவில்லை. திருவாரூரில் பிரசாரத்திற்கு அனுமதி மறுத்த போலீசார், அவரை கைது கைது செய்து, திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். சில மணி நேரத்துக்கு பின், அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.இதற்கிடையில், உதயநிதி கைதை கண்டித்து, தமிழகத்தின் பல பகுதிகளில், தி.மு.க.,வினர் மறியலில் (கொரொனா காலத்தில்?) ஈடுபட்டனர்.  (https://www.dinamalar.com/news_detail.asp?id=2656057

வரும் 2021 தேர்தலில் உதயநிதி தி.மு.கவின் கதையை முடித்து விடுவார். .மு.க.அழகரி, சசிகலா சார்பில் பயணிக்கும் பா.ஜ.க கூட்டணிக்கு அதனால் பலன் கிடைக்காது. 1952 தேர்தலை நோக்கி, தமிழ்நாட்டின் 2021 தேர்தல் பயணிக்கிறது.

No comments:

Post a Comment