Tuesday, June 21, 2016


'பெரியார்' ஈ.வெ.ராவின் ஆவேசமும், முதல்வர் ஜெயலலிதாவின் ஆவேசமும்




தமிழ்நாடானது 'அரசியல் நீக்கத்தில்' பயணித்து வருவதையும், 2016 தேர்தல் முடிவுகள் உணர்த்திய பாடங்களையும்,  ஏற்கனவே பார்த்தோம். 


“தி.மு.க, அ.இ.அ.தி.மு.க ஆகிய, இரண்டு கட்சிகளிலுமே பெரும்பாலான தொண்டர்களும், தலைவர்களும் கொள்கை அடிப்படையில் தேர்தல்பணி ஆற்றினார்களா? அல்லது 'தலைமைக்கு விசுவாசம்' என்ற அடிப்படையில்,  'உழைப்புக்கு பலன் கிடைக்கும்' என்ற எதிர்பார்ப்பில், பணியாற்றினார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். அரசியல் வெளியில் (political space)  பயணிக்கும் கட்சிகளில், பெரும்பாலான தொண்டர்களும், தலைவர்களும்  கொள்கை அடிப்படையில், தேர்தல் பணியாற்றுவார்கள். 'அரசியல் நீக்கம்' (Depoliticize) போக்கில், அரசியல் வெளியை காலி செய்து பயணிக்கும் கட்சிகளில், அவர்கள் எல்லாம்,  'சுயலாப' நோக்கில், தேர்தல் பணியாற்றுவார்கள்; அதே நோக்கில் 'உள்குத்து' வேலைகளிலும் ஈடுபட்டு; தேர்தலில் செலவழிக்க’ (?) கொடுத்த பணத்திலும் ஆட்டையைப் போட்டு.



2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்குப் பின், வெளிவந்தவைகளில், தமிழக முதல்வர் ஜெயலலிதா, தனது கட்சியின் செயற்குழு  கூட்டத்தில் நிகழ்த்திய உரை தொடர்பான, கீழ்வரும் செய்தியானது, எனது ஆய்வில் முக்கிய இடம் பெற்றுள்ளது.


ஆவேசம்

தேர்தலின் போது நம்பிய பலர் துரோகம் செய்ததாக ஜெயலலிதா...

பணத்தை அமுக்கியவர்கள் மீது நடவடிக்கை பாயும் என எச்சரிக்கை


'பெரியார்' ஈ.வெ.ரா 1948 தூத்துக்குடி மாநாட்டு உரையில் வெளிப்படுத்திய‌ ஆவேசத்திற்கும்,  முதல்வர் ஜெயலலிதாவின் ஆவேசத்திற்கும்,  நிறைய ஒற்றுமைகள் இருப்பதில் வியப்பில்லை, என்பதை கீழ்வருபவை உணர்த்துகின்றன.

“பிற கட்சிகளில் எல்லாம், பணம் வாங்கிக் கொண்டு, 'சீட்' தருகின்றனர். நான் கட்சியின் அடிமட்ட தொண்டர்களுக்கும் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்பதற்காக, அவர்களுக்கு சீட் கொடுத்து, தேர்தல் செலவுக்கு பணமும் கொடுத்தேன். ஆனால், மாவட்ட செயலர்களில் பெரும்பாலானோர், பணத்தை பதுக்கி விட்டனர். வேட்பாளர்களில் சிலரும், பணத்தை செலவு செய்யவில்லை.

சிலர், தங்கள் மாவட்டத்தில், வேறு யாரேனும் வெற்றி பெற்றால், தங்களுக்குஅமைச்சர் பதவி கிடைக்காமல் போகலாம் என்ற எண்ணத்தில், அவர்களை தோற்கடிக்க பாடுபட்டுள்ளனர்.

ஒருவரை மாவட்ட செயலராக்கினால், அவர் தன் உறவினரை மாவட்ட செயலராக்கி விட்டு, தி.மு.க., மாவட்ட செயலருடன் எழுதப்படாத ஒப்பந்தம் போட்டு செயல்பட்டுள்ளார். இவை எல்லாம் எனக்கு தெரியாது என, நினைக்கிறார்.

கட்சி நிதி என்ற பெயரில், அவர் பணம் வசூலித்ததும், அவரது நண்பர் எவ்வளவு சம்பாதித்தார் என்பதும், எனக்கு தெரியும்.

ஒரு மாவட்ட செயலர், தன் மாவட்டத்தில் மற்றவர்களை தோற்கடிக்க, வேலை பார்த்து விட்டு, அவர் மட்டும் எம்.எல்.ஏ.,வாகி உள்ளார்.

 ஒரு மாவட்ட செயலர், மாவட்டத்தில், நம் கட்சியினரை தோற்கடிக்க பணம் கொடுத்துள்ளார்.
   
   லோக்சபா தேர்தலில், 37 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்தோம். அதன்படி, சட்டசபை தேர்தலில், 217 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். இரண்டு ஆண்டுகளில், அதிருப்தி ஏற்படும் வகையில், நாம் எதுவும் செய்யவில்லை; ஆனாலும், அதிக இடங்களை இழந்துள்ளோம். இதற்கு காரணம், நம் கட்சியினர் செய்த உள்ளடி வேலைதான். நான் நம்பிய பலர் துரோகம்செய்து விட்டனர். (இவ்வாறு கூறும் போது கண் கலங்கினார்)

  சிலர் எனக்கு விசுவாசமாக இருக்காமல், மாவட்ட செயலர்களுக்கும், பிறருக்கும் விசுவாசமாக உள்ளனர்.

    தி.மு.க.,வை வளர விடக்கூடாது என, உழைக்கிறோம். சிலர் அக்கட்சியுடன் கைகோர்த்து, நம் வேட்பாளர்களை தோற்கடித்துள்ளனர். அவர்கள் பட்டியல் என்னிடம் உள்ளது. பணத்தை பதுக்கியவர்கள் விவரமும் உள்ளது; அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்.

   பதவி இல்லாமல், சாதாரண தொண்டனாக இருக்கும் போது நல்லவராக இருக்கின்றனர். அவர்கள் கஷ்டத்தை பார்த்து, பதவி கொடுத்தால், தங்களுடைய சுயரூபத்தை காட்டுகின்றனர்.  

 முதல்வர் ஜெயலலிதாவின் ஆவேசத்திற்கு காரணமானவர்கள் எல்லாம், நேர்மையான சுயசம்பாத்தியத்திற்கான,  'தகுதி, திறமைகள்' இல்லாத சிற்றின மனிதர்களே ஆவர். அத்தகையோரை அனுமதிக்கும், கட்சியும் சரி, குடும்பமும் சரி, அவர்களின் 'சுயரூபம்' வெளிப்படும் வாய்ப்பு வரும் போது, அதனால் விளையும் சீர்குலைவிலிருந்து தப்பமுடியாது. 

 அந்த சிற்றின மனிதர்கள் எல்லாம், வசதி குறைவில் இருக்கும் போது நம்மிடம் காண்பிக்கும் விசுவாசம் எல்லாம், நம்மை ஏணியாக்கி வளரும் உள்நோக்கத்திலான நடிப்பு ஆகும். வாய்ப்பு கிடைத்தால், தமது வளர்ச்சிக்காக, எல்லா மனித மதிப்பீடுகளையும் காவு கொடுத்து, மனித மிருகங்களான, தமது சுயரூபத்தை வெளிப்படுத்துவார்கள், என்பதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.
  
“ 1944இல், திராவிடர் கழகம் தோன்றி, பொது அரங்கில் அறிவுபூர்வ விவாதங்கள் கீழிறங்கி, உணர்ச்சிபூர்வ வன்முறை போக்குகள் அரங்கேறத் தொடங்கிய போக்கு,  'இன உணர்வு' என்ற பெயரில் 'சிற்றினம்' தமிழ்நாட்டில் செல்வாக்கு பெற்று மதிக்கத் தக்கவர்களானதால், என்னை போன்றவர்கள் சமூகத்தில் 'வாழத்தெரியாத முட்டாள்களாக', 'சமூக விரயமாக' ஒதுக்கப்படும் நிலை வந்துள்ளதா? என்ற ஐயம் எனக்கு இருந்தது. சுயசம்பாத்தியம் இல்லாதவர்களுடன் சேர்ந்து, பொதுத்தொண்டு  செய்வதில் உள்ள அபாயங்கள் பற்றி, 1948 தூத்துக்குடி மாநாட்டில், 'பெரியார்' ஈ.வெ.ரா அவர்கள் விடுத்த எச்சரிக்கையில் இருந்து, அவரே சறுக்கியது போலவே, அவர் வழியில் நானும் சறுக்கியதாக உணர்கிறேன். 'தீதும் நன்றும் பிறர் தர வாரா' ( புறநானூறு 192) அந்த சறுக்கலில் 'மூழ்காமல்', 'உடுக்கை இழ்ந்தவன் கை' (குறள் 788) நட்புகள், மற்றும் என் உள்ளார்ந்த ஈடுபாடுகள்(Passions)  என்ற இரு துடுப்புகள் மூலம் நான் தப்பித்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_25.html ) ஒரே நேரத்தில் மனசாட்சியுள்ள முதல் மற்றும்  மூன்றாம் மனிதனாக (1st & 3rd person), நமது வாழ்வினை அணுகும்போது, இன்பங்கள் மட்டுமின்றி, அரிய பாடங்களை வழங்கும் துன்பங்களையும், 'அனுபவித்து' வாழ முடியும்; உள்ளார்ந்த ஈடுபாடுகளுடன் வாழும்போது. 
http://tamilsdirection.blogspot.in/2015/11/normal-0-false-false-false-en-us-x-none_16.html 

இத்தகைய மனித மிருகங்கள் எல்லாம், தமிழ்நாட்டின் பொது அரங்கில் வலம் வர அடித்தளம் இட்டு, 1948 தூத்துக்குடி மாநாட்டில் அந்த அபாயத்தை எச்சரித்து, பின் அதிலிருந்து வழுக்கி,  அந்த போக்கிலேயே பலியானவர் ஈ.வெ.ரா. அந்த போக்கிலேயே 1967இல் முதல்வரான அண்ணாவும், அதன் பாதகத்தை அனுபவித்து, மனமுடைந்து மரணத்தை தழுவினார்.

அன்றைய முதல்வர் அண்ணாவிடம், தான் முனிவராக பொதுவாழ்விலிருந்து ஒதுங்க விரும்புவதாக ஈ.வெ.ரா ஏன் தெரிவித்தார்? மருத்துவமனையில் தன்னை சந்தித்த கம்யூனிஸ்ட் தலைவர் பி.ராமமூர்த்தியிடம், தான், விரைவில் மரணமடைய விரும்புவதாக அண்ணா ஏன் தெரிவித்தார்? என்ற கேள்விகள் இந்த ஆய்வில் முக்கிய இடம் பெறுகின்றன.

“தமிழ்நாட்டில் 1969இல், கலைஞர் கருணாநிதி முதல்வரானது முதல், தமிழ்நாட்டு அரசியலானது, தி.மு.க ஆதரவு மற்றும் எதிர்ப்பு என்ற இரண்டு முனை அரசியலாக மாற்றம் பெற்றது. அந்த சூழலில்,  காமராஜரின் 'ஸ்தாபன காங்கிரஸ்' கட்சியானது, விவசாயிகள் போராட்டம் உள்ளிட்டு,  பல போராட்டங்கள் மூலம், தி.மு.க எதிர்ப்பு 'அரசியலில் வலிமையுடன் வளர்ந்தது. தி.மு.கவை விட்டு வெளியேறிய எம்.ஜி.ஆர்,  அக்கட்சியில் சேர முயற்சித்தததையும், காமராஜர் அதை விரும்பாத காரணத்தால், வேறு வழியின்றி, அன்றைய பிரதமர் இந்திராவின் ஆதரவுடனும், பின்பலத்துடனும்,  அ.தி.மு.கவைத் தொடங்கினார்' என்ற தகவலையும், மறைந்த 'நாத்தீகம்' ராமசாமி தனது நினைவுக் குறிப்புகளில் வெளியிட்டுள்ளார். அதன்பின் நடந்த திண்டுக்கல் இடைத்தேர்தலில்,  அ.தி.மு.க முதலிடத்தையும், ஸ்தாபன காங்கிரஸ் இரண்டாவது இடத்தையும் பிடிக்க, தி.மு.க மூன்றாவது இடத்தைப் பிடித்தது. அந்த அளவுக்கு, தமிழக இருமுனை அரசியலில், 'தி.மு.க எதிர்ப்பு அரசியலானது', வலிவுடன் இருந்தது. காமராஜர் மறைவிற்குப்பின், 'தி.மு.க எதிர்ப்பு அரசியல்'  என்பது, அ.இ.அ.தி.மு.கவின் 'ஏகபோக' பலமானது. 
http://tamilsdirection.blogspot.in/2015/06/normal-0-false-false-false-en-us-x-none_28.html 

1977இல் முதல்வரான எம்.ஜி.ஆர் ஊழலற்ற ஆட்சி அமைத்து, அந்த ஊழல் போக்கில் திருப்பு முனையை ஏற்படுத்தினார்.

அதன்பின் 1980இல் சுயநல அரசியல் நோக்கில், அன்றைய பிரதமர் இந்திரா காந்தி, தி,மு,க தலைவர் கலைஞர் கருணாநிதியுடன் கூட்டு சேர்ந்து, எம்.ஜி.ஆர் ஆட்சியை கலைத்தார். பின் நடந்த தேர்தலில், அமோக வெற்றி பெற்று எம்.ஜி.ஆர் ஆட்சி அமைத்தார்.

எதிர்பாராத வகையில், இந்திரா காந்தி, கலைஞர் கருணாநிதி சுயநல அரசியலால் உருவான  தேர்தல் செலவுக்கு தடுமாறிய எம்.ஜி.ஆருக்கு, நிதி உதவி செய்தவர்களுக்கு, கைமாறு செய்யும் நெருக்கடியில், அ.இ.அ.தி.மு.க ஆட்சியிலும் ஊழல் நுழைய நேரிட்டது.  ஆனாலும் மின் வாரியம், ரேசன்,  தமிழ்ப் பல்கலைக்கழகம் உள்ளிட்ட சில குறிப்பிட்டதுறைகளில் ஊழலின்றி, தேர்தல் அரசியலில் பயணிக்க, ஊழலுடன், எதிர்க்கட்சிகளும் அதில் பங்கு பெறும் வகையில் 'எம்.ஜி.ஆர் ஃபார்முலாவுடன், ஊழல் குற்றச்சாட்டிற்கு உள்ளாகாமல்,  எம்.ஜி.ஆர் ஆட்சி செய்தாரா? என்பது ஆய்விற்குரியதாகும்.

எம்.ஜி.ஆருக்குப் பின்  அந்த இருமுனை அரசியல் போக்கில், அடுத்த கட்ட மாற்றமாக, (சசிகலா நடராஜன்/கலைஞர் கருணாநிதி) குடும்ப செல்வாக்கு ஊழல் ஆதிக்கஆட்சி மீது மக்களுக்கு இருந்த கோபமும் வெறுப்புமே,  1996இல் தி.மு.க ஆட்சிக்கு வரவும், அடுத்தடுத்த ஆட்சி மாற்றங்கள் வரவும் காரணமானது. அந்த புதிய போக்கில், அரசியல் நீக்கத்தில்,  கொள்கைகள் சருகான நிலையில்,  உரிய பாடங்கள் கற்று, உரிய திருத்தங்களுடன் ஜெயலலிதா,  மக்கள் மத்தியில், தனிநபர் விசுவாசத்தில்,    அதிக செல்வாக்குள்ள தலைவராக உள்ளாரா?  உரிய பாடங்கள் கற்காமல், குடும்ப அரசியல் குழப்பத்தில் மூழ்கி, தி.மு.க எந்த அளவுக்கு பலகீனமாகியுள்ளது? என்பது ஆய்விற்குரியதாகும்.என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். 

1967இல் அண்ணா முதல்வரான பின், தனது கட்சியினரின் செயல்பாடுகளால் மனமுடைந்து, மரணமடைய விரும்பியது தொடர்பான தகவலை, மேலே பார்த்தோம்.

முதல்வர் ஜெயலலிதாவை பிடிக்காதவர்கள் கூட, அவரின் துணிச்சலை பாராட்டியதை நான் அறிவேன்

கடந்த 2016 சட்ட மன்ற தேர்தலில்,  தமது கட்சியில்,  சுயநல நோக்கில், கட்சி நலனை சீர் குலைத்து, செயல்பட்டவர்கள் தொடர்பாக, அண்ணாவைப் போல மனமுடையாமல்;

1948 தூத்துக்குடி மாநாட்டில் அந்த அபாயம் தொடர்பாக ஆவேசப்பட்டு, எச்சரித்து, பின் அதிலிருந்து 'பெரியார்' ஈ.வெ.ரா, அந்த ஆவேசத்திலிருந்து, வழுக்கியது போல வழுக்காமல், ஜெயலலிதா துணிச்சலுடன் தனது ஆவேசத்திலிருந்து வழுக்காமல்; 

அந்த நோயிலிருந்து, தமது கட்சியை எப்படி காப்பாற்றப் போகிறார்?  என்பது இனி நடக்க இருக்கும் வரலாறு ஆகும்; அதே சிக்கலை சந்தித்துள்ள எதிர் கட்சிகளும் ஆர்வத்துடன் கவனிக்க வேண்டிய நெருக்கடியில் .

'அரசியல் நீக்கம்'(Depoliticize) போக்கில், 'தமக்கென்ன லாபம்?' என்ற எதிர்பார்ப்புள்ளவர்களின் ஆதிக்கத்தில்,  அ.இ.அ.தி.மு.க, தி.மு.க, உள்ளிட்ட எல்லா கட்சிகளும் சிக்கியுள்ள சூழலில், முதல்வர் ஜெயலலிதா தமது முயற்சியில்  வெற்றி பெற்றாலும், தோல்வியடைந்தாலும், அது தமிழ்நாட்டின் அரசியல் போக்கை தீர்மானிக்கும் திருப்பு முனையாக, அமைய வாய்ப்புள்ளது.

அதன் முதல் சிக்னலாக, உள்ளாட்சி தேர்தல் முடிவுகள் இருக்கும்; ஸ்டாலினின் 'சாதனையாக',  வலுவான எதிர்க்கட்சியாக, தி.மு.க புத்துயிர் பெற்றுள்ள நிலையில்; ‘என்னுடைய குடும்பத்தில் இருந்து எவரும் அரசியலுக்கு நிச்சயமாக வர மாட்டார்கள்’ என்று திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின் உறுதிபட அறிவித்துள்ள நிலையில்.
http://www.vikatan.com/news/politics/63817-stalins-reply-to-udhayanidhis-political-entry.art

Sunday, June 19, 2016


“நம் மூதாதையர் யாரும் செய்திராத அசிங்கத்தினை

 


வீட்டில் சமையலறையில் வெறும் தீக்குச்சி ஒன்றை கொளுத்தி போட்டால், திக்குச்சி தான் விரயமாகும். ஆனால் சமையல் வாயு சிலிண்டர் கசிந்து, வாயு நிரம்பிய நிலையில், தீக்குச்சி ஒன்றை கொளுத்தி போட்டால், வீடே எரிந்து சாம்பலாகும். அது போன்ற விபத்துகளும் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகின்றன.

சமூகத்தில் உணர்ச்சிபூர்வ பேச்சுகள் என்பவை மூலம், சமுகத்தில் சமூக எரிவாயுவை நிரப்பலாம். அதன்பின் எந்த பக்கத்திலிருந்தும்,  ‘வன்முறை’ என்ற தீக்குச்சியைக் கொளுத்தி போட்டு, சாதி, மதக்கலவரங்களை உண்டாக்குவது எளிது. அதை வெளிப்படுத்திய 'உறியடி' திரைப்படமானது,  பாராட்டி, ஊக்குவிக்கப்பட வேண்டிய முயற்சியாகும்.

தோட்டக்குறிச்சி, நெற்குப்பை, ராஜபாளையம், போடி கலவரங்களை (திருச்சி பெரியார் மையத்தில் பங்களிப்பு வழங்கிய காலத்தில்) ஆய்வு செய்து, நான் கண்ட உண்மை அது.

அந்த உணர்ச்சிபூர்வ பேச்சாளர்களோ, அவர்களது குடும்பத்தினரோ, சாதி, மத கலவரங்களில் பாதிக்கப்படுவதில்லை. மாறாக அதுவே பொதுவாழ்வு வியாபாரமாகி, அவர்களின் செல்வம் நம்பமுடியாத அளவிற்கு அதிகரிக்க வழி செய்கிறது.  திருச்சி பெரியார் மையத்தில் இருந்தவர்கள்,  திராவிட அரசியல் கொள்ளைக்குடும்பங்களின் வாலாகி, மனிதப்பண்புகளை இழந்த கள்வராகியதற்கு, மேற்கண்ட அனுபவ அறிவு காரணமா? இயல்பில் திரிந்தவர்கள் எல்லாம், சுயநல நோக்கில்,   'தமிழ் உணர்வு, பார்ப்பன எதிர்ப்பு' போன்ற பொதுப்பிரச்சினைகளில் அக்கறை காட்டி, மதிக்க வேண்டிய தனிமனித உறவுகளை சிதைத்து, 'வாழ்வியல் புத்திசாலிகளாக' எப்படி வளர்ந்தார்கள்? (http://tamilsdirection.blogspot.com/2015_01_01_archive.html ) தமிழ்நாட்டில் இத்தகைய சுயநலக்கள்வர்கள் உருவான சமூக செயல்நுட்பமானது(social mechanism), திராவிட ஆட்சிகளின் சாதனையா? என்பதை ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.com/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html ) 

1980 களில் தஞ்சாவூர் வல்லம் அருகே ஆலக்குடி கிராமத்தில், சாதி கலவரத்தில், குடிசைகள் எரிக்கப்பட்ட செய்தி அறிந்து, நானும் அன்றைய நண்பர் ஒருவரும் சைக்கிளில் சென்று எரிக்கப்பட்ட குடிசைகளை பார்த்தோம்.

பின் பக்கத்து கிராமங்கள் எப்படி இருக்கின்றன? என்ற ஆவலில் சுற்றினோம்.

சித்திரக்குடி என்ற கிராமத்தில், அந்த காலத்திலேயே தலித்துகள் நிறைய பேர் படித்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என்று உயர் அதிகாரிகளாக பணியாற்றி வந்தார்கள். அதே கிராமத்தில் இருந்த பிற்படுத்தப்பட்ட சாதியினருடன், சமூக அளவில் சம பலத்தில் இருந்தார்கள்.

சில வாரங்கள் கழித்து, அந்த கிராமம் வழியே சென்ற பேருந்தில், ஒரு உடகாருமிடம் பற்றிய தகராறில், தலித்துகள் தாக்கப்பட்டனர். அதே பேருந்து திரும்பி வந்த போது, , தாக்கிய பிற்படுத்தப்பட்ட சாதியினரை, சித்திரக்குடி தலித்துகள் அடையாளம் கண்டு தாக்கினர். அதற்கடுத்த வாரம், இரு சாதி தலைவர்களும் சந்தித்து பேசி சமரசம், ஆனார்கள்.

இன்று சித்திரக்குடி எப்படி இருக்கிறது? என்று தெரியாது.

1967 வரை ஒழுங்காக படித்து, தலித்துகள்/பிற்டுத்தப்பட்டவர்கள் அய்.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என்று உயர்பதவிகளில் அமர்ந்த போக்கில், அவர்களில் பெரும்பாலோர் சமூக சமத்துவ போக்கில் பயணித்தார்கள்.

1967க்குப்பின் குறுக்கு வழிகளில் மதிப்பெண்களும், பதவிகளும் பெற்ற போக்கில், இரு சாராரிலும், 'சாதி வெறியை'த் தூண்டி, செல்வம், செல்வாக்கு' 'பெரும்பசி'யாளர்கள் அதிகரித்தார்கள்; சாதித் தலைவர்களும் வளர்ந்தார்கள். சாதி மோதல்களும் வளர்ந்தன. அந்த போக்கிலேயே, 'பெரியார் சமூக கிருமிகளும்' வளர்ந்தார்கள், என்பதும் எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ளது. 

இன்றும் கூட, முற்போக்கு/பிற்போக்கு உள்ளிட்ட எந்த கட்சியிலும் இல்லாத‌, ஒழுங்காக படித்து, உயர்பதவிகளில் இருக்கும்  தலித் மற்றும் பிற சாதியினரும், 'தகுதியும், திறமையும்' உள்ளவர்களை அடையாளம் கண்டு, 'சாதி வேறுபாடு' பார்க்காமல் உதவுவதை பார்த்து வருவது, நிகழ்கால அனுபவமாகும்

சாதி தொடர்பாக, நிகழ்காலத்தில் அரிதாய் வரும் அருமையான  பதிவு அடுத்து வருகிறது. இதனை எனக்கு அனுப்பிய திரு.பொன்.முருகானந்தத்திற்கு நன்றி.

“ எலேய்.... சாதி, அசிங்கம்டா.... பேருக்கு பின்னாடி சாதி போடுரது பெரிய அசிங்கம்டான்னு சொன்னேன்...

இல்ல இல்ல... அதுதான் எங்க பாரம்பர்யம்... அதுதான் எங்க குலவழக்கம்... காலம் காலமாய் எங்களுக்கான அடையாளம் பெயரோட சாதி போடுரதுதான்னு உணர்ச்சி வசப்பட்டு பேசுச்சு பயபுள்ள...

அட, இம்புட்டு டென்சன் ஆவுரானே... நெசமாத்தான் இருக்கும் போலுக்கோன்னு நம்பீட்டேன்...

சரிடா தமிழ்க்காரந்தான நீயி? உன் மூதாதையர் யாருன்னு பாப்போம்னு தேடினேன்....

சங்ககாலப்பெயரில் 473 பேர் கிடைத்தது.

ஒரு பய கூட தன் பெயருக்குப் பின்னால் வன்னியர் - தேவர்- கவுண்டர் - நாடார் - ஐயர்- ஐயங்கார் என்று போட்டிருக்கவில்லை.

சங்கம் மருவிய காலப்பெயர்களையும் பார்த்தேன்.

கண்ணங்கூத்தனார்,மதுரை – கார் நாற்பது
கண்ணன் சேந்தனார் – திணைமொழி ஐம்பது
கணிமேதாவியார் - திணைமாலை நூற்றைம்பது
கணிமேதையார் – ஏலாதி
கபிலர் – இன்னா நாற்பது
காரியாசான் – சிறுபஞ்சமூலம்
கூடலூர் கிழார் – முதுமொழிக்காஞ்சி
சமணமுனிவர்கள் – நாலடியார்
திருவள்ளுவர் – திருக்குறள்
நல்லாதனார் – திரிகடுகம்
புல்லங்காடனார், மாறோக்கத்து முள்ளிநாட்டுக் காவிதியார் மகனார் - கைந்நிலை
பூதஞ்சேந்தனார் – இனியவை நாற்பது
பொய்கையார்– களவழி நாற்பது
மாறன் பொறையனார் – ஐந்திணை ஐம்பது
முள்ளியார், பெருவாயில் – ஆசாரக்கோவை
முன்றுறையரையனார் – பழமொழி
மூவாதியார் - ஐந்திணை எழுபது
விளம்பிநாகனார் – நான்மணிக்கடிகை


ஊகூம்.... இங்கும் சாதிப் பெயரைக் காணோம்.

அட பக்தி இலக்கிய காலத்திலாவது தேடுவோம் என்று தேடிப் பார்த்தேன்...

அங்கும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்றும், அப்பர், சம்பந்தர், சுந்தரன் என்றே பெயர்கள் இருக்கின்றனவே ஒழிய பெயரோடு ஜாதி ஒட்டினை இணைத்துக் கொண்டு திரியும் கேவல காரியத்தை யாரும் செய்ததாக எந்தச் சான்றுமே கிடைக்கவில்லை.

ஆக, நம் மூதாதையர் யாரும் செய்திராத அசிங்கத்தினை பாரம்பர்யம் என்றும், கலாச்சாரம், என்றும், குல வழக்கம் என்றும் முன்னோர்கள் மீது பொய்ப்பழி போட்டுக்கொண்டு சாதியைச் சுமந்து திரிகிறார்கள் சம கால வன்முறையாளர்கள் என்பதே தெளிவாய்த்தெரிகிறது. https://www.facebook.com/ilangovan.balakrishnan.1/friends_mutual?pnref=eh 

மேலுள்ள பதிவு தொடர்பாக, கூடுதலாக நான் சேர்ப்பது: 

எலேய்.தமிழ்ல இப்ப இருக்கிற சாதிங்கிறதே, வெள்ளைக்காரன் கொடுத்ததுனு, தெரியுமா, உனக்கு?

தமிழ்ல 'சாதி'ங்கிறது பறவைகளுக்கும், (பெரும்பாணாற்றுப்படை 229),  நீர்வாழ் மிருகங்களுக்கும் ( தொல்காப்பியம் பொருள் 9; 44) தான் இருந்துச்சு.

வெள்ளைக்காரன் அந்த 'சாதியை' மாத்தி,  மனுசன 'சாதி'யில சிக்க வச்ச சதி உனக்கு தெரியுமா?

இப்ப 'உயர்ந்த சாதி'ங்கிற நினைப்புல வாழ்றவனும்,

'தாழ்ந்த சாதி'ங்கிற நினைப்புல வாழ்றவனும்,

அந்த 'சதி'யில சிக்கின

மனநோயாளிங்கன்னு உனக்கு தெரியுமா?
(http://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

Thursday, June 16, 2016

        தமிழ்நாட்டில் இனி ஊர் தோறும் நடக்க வேண்டிய

                                    பட்டி மன்றம்
திராவிட/தமிழ் கவிஞர்கள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், தலைவர்கள் (குறிப்பு 1 கீழே  ) குடும்பப் பிள்ளைகள் எல்லாம்;
தமிழ் வேரழியும் வகையில், அடிப்படைக்கல்வியை ஆங்கிலவழியில் (தமிழ் அழிவு சுனாமியிலிருந்து தமிழை மீட்க முடியுமா?; http://tamilsdirection.blogspot.in/2016/06/blog-post.html )
படித்ததற்கும்/படிப்பதற்குமான காரணங்களில் விஞ்சி நிற்பது;
அவர்களின் வாழ்வில் வெளிப்பட்ட சுயநல போக்கா? அறிவற்ற போக்கா?
                                              -------------------

அத்தகையோரால் ''குற்ற உணர்வின்றி' மன நிறைவுடன் மரணத்தைத்  தழுவ முடியுமா?'; http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none.html 

                                                        ------------------

      தமிழ்நாட்டில் இனி ஊர் தோறும் நடக்க வேண்டிய

                               பாராட்டு நிகழ்ச்சிகள்
ஆங்கிலவழியில் படிக்க வைக்க வசதி இருந்தும், தமது குடும்பப் பிள்ளைகளின் அடிப்படைக்கல்வியை, தமிழ்வழிப் பள்ளிகளில் படிக்க வைத்தவர்கள்/வைப்பவர்கள் எல்லாம், அந்தந்த ஊரில் விழா எடுத்து பாராட்டப்பட வேண்டிய, உண்மையான 'தமிழ் மீட்பர்கள்' ஆவர்.

குறிப்பு:

1.இன்றைய மாணவர்கள் ஒருவரின் 'சொந்த யோக்யதையை'  வைத்தே, அவரை மதிப்பதா?/இகழ்வதா? என்பதையும், அதை வைத்தே, அவரின் பேச்சுக்களையும் / எழுத்துக்களையும் மதிப்பதா?/இகழ்வதா? என்பதையும், முடிவு செய்கிறார்கள்:  'ஆதாய ஆதரவின்' துணையுடன், மீடியாவில் 'புகழுடன்'(?) வலம் வந்தாலும். 

2.தமிழ் பத்திரிக்கைகளை காசு கொடுத்து வாங்கி படிப்பவர்கள் எல்லாம் சுமார் 50 வயதுக்கும் அதிகமானவர்களே. ஆங்கில வழியில் படித்த,  சுமார் 40 வயதுக்கும் குறைவானவர்களில் எவரும் காசு கொடுத்து, வாங்கியதை நான் பார்த்ததில்லை.

'தினத்தந்தி', 'தினமலர்', 'தமிழ் இந்து', 'தினமணி' போன்ற இன்னும் பல, தமிழ் இதழ்கள்; மேலே குறிப்பிட்டுள்ள‌ நிகழ்ச்சிகளை ஊக்குவிக்கலா
ம்; இன்னும் 10 வருடங்களுக்குள், 'வாசகர் வீழ்ச்சி சுனாமி'யை தவிர்க்கும் தொலை நோக்கு பார்வையில். அந்நிகழ்ச்சிகளுக்கு என்னால் இயன்ற நிதி உதவியும் செய்ய இயலும்.

Wednesday, June 8, 2016


                   தமிழில் 'பிராமணரும்', 'திராவிடரும்'

                                காலனிய சூழ்ச்சியா?


'திராவிடர் கழகமும்', 'பிராமணர் சங்கமும்';


ஒரே காலனிய சூழ்ச்சியில் சிக்கிய, நாணயத்தின் இரு பக்கங்களா?


தமிழில் 'திராவிடர்' என்ற சொல்லின் அறிமுகமானது,  காலனிய சூழ்ச்சியா? என்ற ஆய்விற்குதவும் தகவல்களை ஏற்கனவே பார்த்தோம்.

“ஆங்கிலத்தில் உள்ள 'ரேஸ்' (Race) என்ற சொல்லானது, புவியியல் அடிப்படையிலும், உயிரணு அடிப்படையிலும், தெளிவாக வேறுபடுத்தி அடையாளம் காணப்படும் பொருளில் (as largely discrete, geographically distinct, gene pools) பயன்படுத்தப்பட்டது என்பதற்கான சான்றினை முந்தையப் பதிவில் பார்த்தோம்.

ஆனால் பழந்தமிழ் இலக்கியங்களில், 'இனம்' என்ற சொல்லானது, 'நல்லினம்', 'சிற்றினம்', 'தீயினம்' என்று மனிதர்களின் பண்புகள் அடிப்படையில் வகைபடுத்தப்பட்டு, பயன்படுத்தப்பதற்கான சான்றுகளை ஏற்கனவே பார்த்தோம். ('நல்லினத்தி நூங்குந் துணையில்லை தீயினத்தின், அல்லற் படுப்பதூஉம் இல் - திருக்குறள் 460'; https://tamilsdirection.blogspot.com/2015/05/normal-0-false-false-false-en-us-x-none.html)

மேலை நாடுகளில் , ஆங்கிலத்தில் 'ரேஸ்' (Race)  என்ற சொல்லானது, தமிழில் வழக்கில் இருந்த 'இனம்' என்ற மேலே குறிப்பிட்ட‌ பொருளில் பயன்படுத்தப்படவில்லை. அப்படியென்றால், ஆங்கிலேயர் வருகைக்குப்பின், 'ரேஸ்' என்ற ஆங்கிலச் சொல்லிற்கு, தமிழில் இருந்த 'இனம்' என்ற சொல்லை யார் முதலில் திரித்து அறிமுகப்படுத்தினார்கள்? என்பது ஆய்விற்குரியது. 

தமிழில் 'பண்' என்ற சொல்லிற்கும், சமஸ்கிருதத்தில் 'ராகம்' என்ற சொல்லிற்கும் இடையில் உள்ள வேற்றுமைகளைக் கருத்தில் சொள்ளாமல், 'தனித்தமிழ்' பற்றில், தமிழில் 'ராகம்' என்ற சொல்லிற்கு பதிலாக, மொழிபெயர்ப்புகளில்,  'பண்' என்ற சொல்லை அறிமுகப்படுத்திய தவறைவிட, மிக மோசமான தவறு மேற்குறிப்பிட்டதாகும்.” (‘தமிழர்களின் அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும் (depoliticize)  (4);  'இனம்' திரிந்த பொருளில் திராவிடர்?’;  http://tamilsdirection.blogspot.com/2015/06/depoliticize-4.html  )

அதே போல, தமிழில் 'பிராமணர்' என்ற சொல்லும், காலனிய நுழைவுக்கு முன் இருந்ததற்கு சான்றுகள், எனக்கு கிடைக்கவில்லை. சங்க இலக்கியங்களில் 'பிராமணன்' என்ற சொல் இல்லை;

'பார்ப்பார்', 'பார்ப்பான்','ஐயர்', ‘ஆரியர்’, என்ற சொற்கள் இருக்கின்றன.
இவை தவிர, 'அந்தணர்',  என்ற சொல்லும் இருக்கிறது.

தமிழில் 'சாதி' என்ற சொல்லுக்கு இன்றுள்ள பொருளானது, காலனியத்திற்குப் பின், ஏற்கனவே இருந்த பொருளை திரித்து, அறிமுகமானது, என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

“இன்றுள்ள 'சாதி அமைப்பு' என்பதானது,  காலனிய ஆட்சியில் புதிதாக உருவாக்கப்பட்டு, ஆனால் காலங்காலமாக இருந்து வந்த ஒன்றாக, படித்தவர்களும் ஏமாறும் அளவுக்கு பரப்பப்பட்ட சூழ்ச்சியா?”  என்பதையும் ஏற்கனவே பார்த்தோம். (‘தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது; 'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா  'காலதேச வர்த்தமான' மாற்றங்களுக்கு உட்படாமல்;  பெரியார் கட்சிகள் மரணமடைந்து வருகின்றனவா?’;
http://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html)

காலனியத்திற்குப்பின் அறிமுகமான 'பிராமணர்' என்ற சொல்லின் கீழ், அடையாளப்படுத்தப்பட்டுள்ள சாதிகள் எல்லாம், மேற்குறிப்பிட்ட 'பார்ப்பார், பார்ப்பான், ஐயர், அந்தணர், ஆரியர்' ஆகிய சொற்களுடன் தொடர்புடையவர்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

உதாரணமாக, 'ஆரியர்' என்ற சொல்லானது, யானையை பயிற்றுவிக்கும் திறமைசாலிகள் என்பது தொடர்பான  சான்று வருமாறு. 
‘ஆரியர் பிடி பயின்று தரூஉம் பெருங்களிறு போல’‌
அகநானூறு 276: 9 – 10

'பார்ப்பான்', 'பார்ப்பார்' என்ற சொற்களும், மரியாதைக்குரியவர்கள் வரிசையில் இடம் பெற்றிருந்தது, என்பது தொடர்பான சான்றுக‌ள் வருமாறு.
' 'தோழி, தாயே,பார்ப்பான், பாங்கன்,
  பாணன், பாட்டி, இளையர், விருந்தினர்,
  கூத்தர்,விறலியர், அறிவர், கண்டோர்,
  யாத்த சிறப்பின் வாயில்கள்' என்ப‌’ தொல்காப்பியம்: பொருள்: 4; 52

'பார்ப்பார் பசித்தார் தவசிகள் பாலர்கள்
காப்பார் தமையாதும் காப்பிலார் - தூப்பால‌
நிண்டாரால் எண்ணாது நீத்தவர் மண்ணாண்டு
பண்டாரம் பற்ற வாழ்வார்''  -   ஏலாதி 54

பிராமணர்களை இழிவுபடுத்தும் சொல்லாக, 'பார்ப்பான்' என்ற சொல்லை, 'பெரியார்' கொள்கையாளர்கள் பயன்படுத்துவதும், அச்சொல்லை இழிவாக கருதி, பிராமணர்கள் அச்சொல்லை தவிர்ப்பதும்,  ஒரே காலனிய சூழ்ச்சியில் இரு சாராரும், சிக்கியதன் விளைவுகளா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

மேற்குறிப்பிட்ட வரிசையில் இடம் பெற்றுள்ள, 'பார்ப்பார்' மனம் நோகும் வகையில் நடத்தப்பட்டதற்கும், சான்று உள்ளது.
‘ஆர் புனை தெரியல் நின் முன்னோர் எல்லாம்
பார்ப்பார் நோவன செய்யலர்; மற்று இது
நீர்த்தோ நினக்கு?' என வெறுப்பக் கூறி'
புறநானூறு 43: 13 – 15

வேள்வி செய்யாத 'பார்ப்பான்' எல்லாம், 'வேளாப் பார்ப்பான்' (அகநானூறு; 1- 2) என்று இழிவுபடுத்தப்பட்டிருந்தனர்.

'நால் வருணம்' தொடர்பான சான்றுகள் சங்க இலக்கியங்களில் உள்ளன. ஆனால் 'வருணம்' என்ற சொல்லானது,மேலே குறிப்பிட்ட பதிவில் விளக்கியபடி,  காலனியம் அறிமுகப்படுத்திய சாதி அமைப்பில், சிக்கிய சமூக செயல்நுட்பமும் ஆய்விற்குரியதாகும்.

சங்க காலத்தில், வருண அமைப்பானது, எவரும் கல்வி கற்று, சிறப்பிடம் பெறும் வகையில் இருந்தது என்பதற்கான சான்று வருமாறு.

‘வேற்றுமை தெரிந்த நாற்பாலுள்ளும்,
கீழ்ப்பால் ஒருவன் கற்பின்,
மேற்பால் ஒருவனும் அவன்கண் படுமே’
புறநானூறு 183  8  - 10

தமிழில் இருந்த 'இனம்', 'சாதி' போன்ற சொற்களை,  காலனிய சூழ்ச்சியில் திரித்து, அந்த திரிதலின் அடிப்ப‌டையில், 'பிராமணர்', திராவிடர்' என்ற சொற்களை அறிமுகப்படுத்தி, சமூக ஒப்பீடு (Social Comparison) நோயையும் 'வீரியத்துடன்' தூண்டி, எவ்வாறு 'உயர்வு, தாழ்வு, தீண்டாமை' நோய்கள் அரங்கேறின? என்பதையும் ஏற்கனவே பார்த்தோம்.

“மேற்குறிப்பிட்ட முறையில், இன்றுள்ள சாதி முறையை காலனி ஆட்சியாளர்கள் தமது சுயநலனுக்கு உருவாக்கி, இந்தியர்களை கீழாகவும், 'தீண்டத்தகாதவர்களாகவும்' நடத்தி, சமூக ஒப்பீடு நோயில் (Social Comparison Sickness), அந்த புதிதாக உருவாக்கப்பட்ட சாதியினரை சிக்க வைத்தனரா? அந்த சமூக ஒப்பீடு நோயில் சிக்கிய சாதியினர், தமக்கு 'கீழாக' கருதிய சாதியினரை இழிவாக, நடத்த, சாதி மோதல்களுக்கான விதையூன்றப்பட்டு, ஏற்கனவே இருந்து வந்த கல்வி, தொழில் முறைகளை சிதைத்து, புதிதாக அரங்கேறிய கல்வி, வேலை வாய்ப்புகளை 'தூண்டில் மீனாக' பயன்படுத்தி, வளர்க்கப்பட்டதா? இன்று வெளிநாட்டு நிதி உதவியில் என்.ஜி.ஓக்கள் அந்த வளர்ச்சி குன்றாமல், பாதுகாத்து வருகிறார்களா? காலனியத்திற்குப்பின் இன்று வரை நடந்து வரும் சாதிக்கலவரங்கள், காலனியத்திற்கு முன், தமிழ்நாட்டில் நடந்ததற்கு சான்றுகள் உண்டா? சமூக உயர்வு/தாழ்வு, மற்றும் தீண்டாமை ஆகிய நோய்களை, காலனி ஆட்சியாளர்கள், இந்தியர்கள் மனதில் 'செயல்பூர்வமாக' விதைத்து;

அந்த சமூக உளவியல் செயல் நுட்பமானது ( Social Psychological Mechanism), 'இயல்பில்' பலகீனமானவர்களின் பங்களிப்பில், அக சீரழிவை வளர்த்து, தனித்துவமான(Unique)  சமூக சீர்குலைவு பிரிவினை நோயாக வளர்ந்துள்ளதா? ஆக, இன்று தம்மை உயர்வாக கருதிக்கொள்ளும் சாதியினர் எல்லாம், அந்த காலனியம் அறிமுகப்படுத்திய 'சமூக ஒப்பீடு' மனநோயாளிகளா? என்பவையெல்லாம் ஆய்வுக்கு உரிய கேள்விகளாகும்.” . (http://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html

மனசாட்சியற்ற 'சமூக ஒப்பீடு' மனநோயாளிகளே, 'பெரியார் சமூக கிருமிகளாக' வளர்ந்தார்களா? என்று, 'திருச்சி பெரியார் மையம்' அனுபவங்கள் அடிப்படையிலும், ஆய்வுக்கு உட்படுத்தியுள்ளேன். அந்த 'கிருமிகள்' குறுக்கு வழிகளில் ஈட்டிய செல்வத்தில் மயங்கி, அந்த கிருமிகளுடன் 'நல்லுறவில்' வாழ்பவர்களும், அதே வகை மனநோயாளிகளா? விவாதத்தின் போது,  'அறிவுபூர்வ' போக்கிலிருந்து தடம் புரண்டு, விவாதத்தில் எதிர் நிலையில் உள்ளவரையும் விவாதத்திற்குள் கொண்டு வந்து, விவாதத்தை சீர்குலைய செய்யும் போக்கானது, ஆதிக்கமாக வலம் வர, அந்த மனநோயாளித்தனமானது காரணமானதா?(http://tamilsdirection.blogspot.com/2015/10/normal-0-false-false-false-en-us-x-none_26.html) என்பதும் அந்த ஆய்வில் இடம் பெற்றுள்ளது. மேற்குறிப்பிட்ட காலனிய சூழ்ச்சியில் சிக்கி, தனது அறிவு வரைஎல்லைகள்  (intellectual limitations) பற்றிய புரிதலின்றி, கீழ்வரும் நோயிலும் சிக்கி, ஈ.வெ.ரா பயணித்ததே, 'பெரியார் சமூக கிருமிகள்' உற்பத்தியாக வழி வகுத்ததா? என்பதும் அந்த ஆய்வில் இடம் பெற்றுள்ளது.

“காலனி ஆட்சிக்கு அடிமைப்பட்டு, 'அரசியல் விடுதலை' பெற்ற நாடுகளில் உள்ள மக்களில் பெரும்பாலோர், அதிலும் குறிப்பாக படித்தவர்கள், தமது பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் கேவலமாகக் கருதி, தம்மை அடிமைப்படுத்திய மேற்கத்திய நாகரிகத்தை உயர்வாகக் கருதும் தாழ்வு மனப்பான்மையிலான 'மன நோய்க்கு' ஆளாக அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்த வகை மன நோய் ‘cultural cringe’- பண்பாட்டு அடிமைச் சேவக மனப் பாங்கு - என்று அழைக்கப் படுகிறது. அது ‘பண்பாட்டு அந்நியமாதல்’ -  "cultural alienation" - என்பதுடன் நெருக்கமாகத் தொடர்புடையதாகும்.

அத்தகைய மன நோயால் பாதிக்கப்பட்ட மக்கள் தமது சமூக வரலாறு பற்றி அறிவதில் ஆர்வமின்றி, அவை பற்றிய குறைவான அறிவுடன் நடை, உடை, பாவனை, இசை, தொலைக்காட்சி உள்ளிட்டு அனைத்திலும் அமெரிக்காவில் உள்ளதைப் போன்றவைக்காகப் 'பசியுடன்' (an appetite for all things American) வாழ்வார்கள். http://en.wikipedia.org/wiki/Cultural_cringe ) காலனிய ஆதிக்கத்திலிருந்து விடுதலைப் பெற்ற ஆப்பிரிக்க நாடுகளில், மேற்குறிப்பிட்ட சமூக மன நோயிலிருந்து தமது மக்களை மீட்க, அந்தந்த நாட்டு பேராசிரியர்கள் முயன்று வருகிறார்கள்.” (‘'காலனிய' மனநோயாளிகளும், 'திராவிட' மன நோயாளிகளும்’; http://tamilsdirection.blogspot.com/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_8.html  ) அந்நாடுகளில் உள்ள மொழிகளில் இருந்த சொற்களின் பொருளையும், காலனிய சூழ்ச்சியில் திரித்தது தொடர்பான ஆய்வுகளையும், தேடி வருகிறேன்.

'பிராமணர்'என்ற சொல்லும், 'சாதி' என்ற சொல்லும், நேர்க்குத்து (Vertical)  தரவரிசையிலான (hierarchical)  கிறித்துவ அணுகுமுறையில்,  இந்திய மொழிகளில் என்னென்ன வழிகளில் நுழைந்து, சமூக ஒப்பீடு (Social Comparison) நோயில், இந்திய சமூகத்தை சீரழித்த, சமூகசெயல்நுட்பம் (Social Mechanism) பற்றி, எவரேனும், முனைவர் பட்ட ஆய்வுகளில் ஈடுபட விரும்பினால், அவர்களுக்கு என்னால் இயன்ற உதவிகளை புரிய இயலும்

“இன்று நிலவி வரும் சாதிகள் சங்க கால சமூகத்தில் இருந்ததற்கு சான்றுகள் இருப்பதாகத் தெரியவில்லை. ஆனால் விவசாயம்,மீன்பிடித்தல் உள்ளிட்டு அனைத்து பொருளீட்டல் துறைகளில் ஈடுபட்டிருந்த சமூகப் பிரிவுகளைச் சார்ந்தவர்கள் பறைவகை இசைக் கருவிகளை இசைத்தற்கு நிறைய சான்றுகள் சங்க இலக்கியங்களில் உள்ளன. அது மட்டுமல்ல குடிமகனுக்கான(citizen)  வரையறையை கீழ்வரும் சான்று வெளிப்படுத்தியுள்ளது இன்னும் வியப்பைத் தரவல்லதாகும்.

“துடியன், பாணன், பறையன், கடம்பன், என்று
இந்நான்கு அல்லது குடியும் இல்லை; ”
புறநானூறு 335:  7 -  8


துடியன், பாணன், பறையன், கடம்பன் ஆகியோர் இசைப் புலமையுடன் வெவ்வேறு வகையிலான இசைக் கருவிகளை இசைப்பதில் வல்லவர்கள் ஆவர்.துடியன், பாணன், பறையன்,பற்றிய சான்றுகள் சங்க இலக்கியங்களில் பல உள்ளன. கடம்பன் பற்றிய சான்றுகள் குறைவே.பறை என்பது குறிப்பிட்ட வகையிலான பல தாள இசைக்கருவிகளைக் குறிக்கும் சொல்லாகும்.


சங்க காலத்தில் குடிமக்கள் என்போர் ஏதாவது ஒரு வகை இசைக் கருவியை இசைப்பதில் வல்லவர்களாக இருந்தனர் என்பது தெளிவாகிறது. அவ்வாறு இசைத்தவர்கள் சாதி அடிப்படையிலோ, தொழில் அடிப்படையிலோ உயர்வு தாழ்வு கற்பிக்கப்பட்டனர் என்பதற்கு சான்றுகள் இல்லை. செவ்விசை, நாட்டுப்புற இசை என்ற பிரிவுகளோ, அவற்றின் அடிப்படையில் உயர்வு தாழ்வோ இருந்ததற்கான சான்றுகளோ இல்லை. (‘இசையில் ' தீண்டாமை' காலனியத்தின் ‘நன்கொடை’யா?’; http://tamilsdirection.blogspot.com/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_13.html )
 


மேலே குறிப்பிட்ட காலனிய சூழ்ச்சியில் சிக்கியதன் காரணமாகவே, எண்ணற்றோரின் விலைமதிப்பில்லாத தொண்டும்,  தியாகமும்,  தமிழ்நாட்டை கீழ்வரும் விளைவிற்குள்ளாகியது, என்பதும் முக்கியமாகும்.

“தனிமனித அளவில் பாராட்டுக்குரியவர்களும் எதையும் தவறாகத் தொடங்கினால், அதன் பயணத்தில் தவறான மனிதர்கள் தலையெடுத்து மிகவும் பாதகமாகவே முடியும்.தமிழ் மொழியைக் காட்டுமிராண்டி மொழியாகவும்,  தமிழ் பாரம்பரியத்தை  தமிழரின் கேடாகவும் கருதிய பெரியாரின் முயற்சியானது, நோய் பிடித்த தாவரத்தின் நோயாக அதன் ஆணி வேரையே கருதி, அகற்றிய‌ வைத்தியமாகிவிட்டது.” ( http://tamilsdirection.blogspot.in/2013_10_01_archive.html )

தமிழ்நாட்டில் 'திராவிடர் கழகமும்', 'பிராமணர் சங்கமும்', ஒரே காலனிய சூழ்ச்சியில் சிக்கிய, நாணயத்தின் இரு பக்கங்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும். (குறிப்பு கீழே) 'சுயநல கள்வர்களாக' வாழும் 'பெரியார் சமூக கிருமிகளும்', பிராமணர்'களிடையே வாழும் சமூக கிருமிகளும்,  புறத்தில் 'எதிரிகளாக' 'காட்சி' தந்து, அகத்தில் ஒரே வகை சீரழிவுக்குள்ளாகி, ஒருவரையொருவர் 'இரகசியமாக'  காப்பாற்றி, தமிழ்நாட்டை சீரழித்து வருகிறார்களா? 1967க்கு முன்பிருந்தது போலின்றி, இன்று தமிழிலும்  ஆழ்ந்த புலமையின்றி, ஆங்கில நூல்களையும்/இதழ்களையும் படிக்கும் அறிவை வளர்ப்பதில் ஆர்வமும், உழைப்பும் இன்றி, பொது அரங்கில் 'ஆதிக்கத்துடன்' உணர்ச்சிபூர்வமாக‌ வலம் வருகிறார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

அதன் தொகுவிளைவாக (Resultant), இந்தியாவில் தமிழ் மொழியும், பாரம்பரியமும், பண்பாடும், 'தனித்துவமாக' (Unique) வீழ்ச்சிக்குள்ளானதா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

உணர்ச்சிபூர்வ போக்குகளிலிருந்து விடுதலையாகி, அறிவுபூர்வ விமர்சனங்கள் மூலம், தமது கொள்கைகளையும், நிலைப்பாடுகளையும், நெறிப்படுத்திக்கொண்டு, பொதுவாழ்விலும், மனித உறவுகளிலும், 'சுயலாப கள்வர்' நோயில் சிக்காமல் பயணிப்பதன் மூலமே, தமிழும், தமிழரும், தமிழ்நாடும்,  மீட்சி திசையில் பயணிக்க முடியும். தமிழ்நாட்டின் அரசியல் வெளியானது (Political Space) காலியாகி விட்டதை, 2016 சட்டமன்ற தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ள நிலையில்,(http://tamilsdirection.blogspot.com/2016/05/normal-0-false-false-false-en-in-x-none.html) மீட்சிக்கான முயற்சிகள்,  வெற்றி பெறும் காலமும் நெருங்கி விட்டது.

குறிப்பு :

1. இந்திய விடுதலை நாளை, கடந்த 69 வருடங்களாக, ஈ.வெ.ராவைப் போலவே, 'அகில பாரதீய இந்து மகாசபையும்' துக்க தினமாக, கறுப்பு கொடி ஏற்றி அனுசரித்து அனுசரித்து வருகிறார்கள். http://www.coastaldigest.com/index.php/news/90118-indias-independent-day-is-black-day-for-hindu-mahasabhaகாலனி ஆட்சியை ஆதரித்ததாக குற்றம் சாட்டப்படும் ஈ.வெ,ராவும், இந்து மகாசபையும், காலனி ஆட்சியில் அனுபவித்த கொடுமைகள் அளவுக்கு, காங்கிரஸில் காந்தி‍-நேரு ஆதரவாளர்கள் அனுபவித்தார்களா? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

2.சாதி அமைப்பு தொடர்பான ஆய்வு கட்டுரைகளை படிக்க;  https://groups.google.com/forum/#!topic/mintamil/uIhHgnWQ8u0


3. Language is therefore discredited as an ethnological factor. …….. but in any case the linguistic division of the tongues of India into the Sanskritic and the Tamilic counts for nothing in that problem. From: https://www.facebook.com/groups/1633520656906980/1637444939847885/