Sunday, June 19, 2016


“நம் மூதாதையர் யாரும் செய்திராத அசிங்கத்தினை

 


வீட்டில் சமையலறையில் வெறும் தீக்குச்சி ஒன்றை கொளுத்தி போட்டால், திக்குச்சி தான் விரயமாகும். ஆனால் சமையல் வாயு சிலிண்டர் கசிந்து, வாயு நிரம்பிய நிலையில், தீக்குச்சி ஒன்றை கொளுத்தி போட்டால், வீடே எரிந்து சாம்பலாகும். அது போன்ற விபத்துகளும் தமிழ்நாட்டில் அதிகரித்து வருகின்றன.

சமூகத்தில் உணர்ச்சிபூர்வ பேச்சுகள் என்பவை மூலம், சமுகத்தில் சமூக எரிவாயுவை நிரப்பலாம். அதன்பின் எந்த பக்கத்திலிருந்தும்,  ‘வன்முறை’ என்ற தீக்குச்சியைக் கொளுத்தி போட்டு, சாதி, மதக்கலவரங்களை உண்டாக்குவது எளிது. அதை வெளிப்படுத்திய 'உறியடி' திரைப்படமானது,  பாராட்டி, ஊக்குவிக்கப்பட வேண்டிய முயற்சியாகும்.

தோட்டக்குறிச்சி, நெற்குப்பை, ராஜபாளையம், போடி கலவரங்களை (திருச்சி பெரியார் மையத்தில் பங்களிப்பு வழங்கிய காலத்தில்) ஆய்வு செய்து, நான் கண்ட உண்மை அது.

அந்த உணர்ச்சிபூர்வ பேச்சாளர்களோ, அவர்களது குடும்பத்தினரோ, சாதி, மத கலவரங்களில் பாதிக்கப்படுவதில்லை. மாறாக அதுவே பொதுவாழ்வு வியாபாரமாகி, அவர்களின் செல்வம் நம்பமுடியாத அளவிற்கு அதிகரிக்க வழி செய்கிறது.  திருச்சி பெரியார் மையத்தில் இருந்தவர்கள்,  திராவிட அரசியல் கொள்ளைக்குடும்பங்களின் வாலாகி, மனிதப்பண்புகளை இழந்த கள்வராகியதற்கு, மேற்கண்ட அனுபவ அறிவு காரணமா? இயல்பில் திரிந்தவர்கள் எல்லாம், சுயநல நோக்கில்,   'தமிழ் உணர்வு, பார்ப்பன எதிர்ப்பு' போன்ற பொதுப்பிரச்சினைகளில் அக்கறை காட்டி, மதிக்க வேண்டிய தனிமனித உறவுகளை சிதைத்து, 'வாழ்வியல் புத்திசாலிகளாக' எப்படி வளர்ந்தார்கள்? (http://tamilsdirection.blogspot.com/2015_01_01_archive.html ) தமிழ்நாட்டில் இத்தகைய சுயநலக்கள்வர்கள் உருவான சமூக செயல்நுட்பமானது(social mechanism), திராவிட ஆட்சிகளின் சாதனையா? என்பதை ஏற்கனவே பார்த்தோம். (http://tamilsdirection.blogspot.com/2015/04/normal-0-false-false-false-en-us-x-none_21.html ) 

1980 களில் தஞ்சாவூர் வல்லம் அருகே ஆலக்குடி கிராமத்தில், சாதி கலவரத்தில், குடிசைகள் எரிக்கப்பட்ட செய்தி அறிந்து, நானும் அன்றைய நண்பர் ஒருவரும் சைக்கிளில் சென்று எரிக்கப்பட்ட குடிசைகளை பார்த்தோம்.

பின் பக்கத்து கிராமங்கள் எப்படி இருக்கின்றன? என்ற ஆவலில் சுற்றினோம்.

சித்திரக்குடி என்ற கிராமத்தில், அந்த காலத்திலேயே தலித்துகள் நிறைய பேர் படித்து ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என்று உயர் அதிகாரிகளாக பணியாற்றி வந்தார்கள். அதே கிராமத்தில் இருந்த பிற்படுத்தப்பட்ட சாதியினருடன், சமூக அளவில் சம பலத்தில் இருந்தார்கள்.

சில வாரங்கள் கழித்து, அந்த கிராமம் வழியே சென்ற பேருந்தில், ஒரு உடகாருமிடம் பற்றிய தகராறில், தலித்துகள் தாக்கப்பட்டனர். அதே பேருந்து திரும்பி வந்த போது, , தாக்கிய பிற்படுத்தப்பட்ட சாதியினரை, சித்திரக்குடி தலித்துகள் அடையாளம் கண்டு தாக்கினர். அதற்கடுத்த வாரம், இரு சாதி தலைவர்களும் சந்தித்து பேசி சமரசம், ஆனார்கள்.

இன்று சித்திரக்குடி எப்படி இருக்கிறது? என்று தெரியாது.

1967 வரை ஒழுங்காக படித்து, தலித்துகள்/பிற்டுத்தப்பட்டவர்கள் அய்.ஏ.எஸ், ஐ.பி.எஸ் என்று உயர்பதவிகளில் அமர்ந்த போக்கில், அவர்களில் பெரும்பாலோர் சமூக சமத்துவ போக்கில் பயணித்தார்கள்.

1967க்குப்பின் குறுக்கு வழிகளில் மதிப்பெண்களும், பதவிகளும் பெற்ற போக்கில், இரு சாராரிலும், 'சாதி வெறியை'த் தூண்டி, செல்வம், செல்வாக்கு' 'பெரும்பசி'யாளர்கள் அதிகரித்தார்கள்; சாதித் தலைவர்களும் வளர்ந்தார்கள். சாதி மோதல்களும் வளர்ந்தன. அந்த போக்கிலேயே, 'பெரியார் சமூக கிருமிகளும்' வளர்ந்தார்கள், என்பதும் எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ளது. 

இன்றும் கூட, முற்போக்கு/பிற்போக்கு உள்ளிட்ட எந்த கட்சியிலும் இல்லாத‌, ஒழுங்காக படித்து, உயர்பதவிகளில் இருக்கும்  தலித் மற்றும் பிற சாதியினரும், 'தகுதியும், திறமையும்' உள்ளவர்களை அடையாளம் கண்டு, 'சாதி வேறுபாடு' பார்க்காமல் உதவுவதை பார்த்து வருவது, நிகழ்கால அனுபவமாகும்

சாதி தொடர்பாக, நிகழ்காலத்தில் அரிதாய் வரும் அருமையான  பதிவு அடுத்து வருகிறது. இதனை எனக்கு அனுப்பிய திரு.பொன்.முருகானந்தத்திற்கு நன்றி.

“ எலேய்.... சாதி, அசிங்கம்டா.... பேருக்கு பின்னாடி சாதி போடுரது பெரிய அசிங்கம்டான்னு சொன்னேன்...

இல்ல இல்ல... அதுதான் எங்க பாரம்பர்யம்... அதுதான் எங்க குலவழக்கம்... காலம் காலமாய் எங்களுக்கான அடையாளம் பெயரோட சாதி போடுரதுதான்னு உணர்ச்சி வசப்பட்டு பேசுச்சு பயபுள்ள...

அட, இம்புட்டு டென்சன் ஆவுரானே... நெசமாத்தான் இருக்கும் போலுக்கோன்னு நம்பீட்டேன்...

சரிடா தமிழ்க்காரந்தான நீயி? உன் மூதாதையர் யாருன்னு பாப்போம்னு தேடினேன்....

சங்ககாலப்பெயரில் 473 பேர் கிடைத்தது.

ஒரு பய கூட தன் பெயருக்குப் பின்னால் வன்னியர் - தேவர்- கவுண்டர் - நாடார் - ஐயர்- ஐயங்கார் என்று போட்டிருக்கவில்லை.

சங்கம் மருவிய காலப்பெயர்களையும் பார்த்தேன்.

கண்ணங்கூத்தனார்,மதுரை – கார் நாற்பது
கண்ணன் சேந்தனார் – திணைமொழி ஐம்பது
கணிமேதாவியார் - திணைமாலை நூற்றைம்பது
கணிமேதையார் – ஏலாதி
கபிலர் – இன்னா நாற்பது
காரியாசான் – சிறுபஞ்சமூலம்
கூடலூர் கிழார் – முதுமொழிக்காஞ்சி
சமணமுனிவர்கள் – நாலடியார்
திருவள்ளுவர் – திருக்குறள்
நல்லாதனார் – திரிகடுகம்
புல்லங்காடனார், மாறோக்கத்து முள்ளிநாட்டுக் காவிதியார் மகனார் - கைந்நிலை
பூதஞ்சேந்தனார் – இனியவை நாற்பது
பொய்கையார்– களவழி நாற்பது
மாறன் பொறையனார் – ஐந்திணை ஐம்பது
முள்ளியார், பெருவாயில் – ஆசாரக்கோவை
முன்றுறையரையனார் – பழமொழி
மூவாதியார் - ஐந்திணை எழுபது
விளம்பிநாகனார் – நான்மணிக்கடிகை


ஊகூம்.... இங்கும் சாதிப் பெயரைக் காணோம்.

அட பக்தி இலக்கிய காலத்திலாவது தேடுவோம் என்று தேடிப் பார்த்தேன்...

அங்கும் பொய்கையாழ்வார், பூதத்தாழ்வார், பேயாழ்வார் என்றும், அப்பர், சம்பந்தர், சுந்தரன் என்றே பெயர்கள் இருக்கின்றனவே ஒழிய பெயரோடு ஜாதி ஒட்டினை இணைத்துக் கொண்டு திரியும் கேவல காரியத்தை யாரும் செய்ததாக எந்தச் சான்றுமே கிடைக்கவில்லை.

ஆக, நம் மூதாதையர் யாரும் செய்திராத அசிங்கத்தினை பாரம்பர்யம் என்றும், கலாச்சாரம், என்றும், குல வழக்கம் என்றும் முன்னோர்கள் மீது பொய்ப்பழி போட்டுக்கொண்டு சாதியைச் சுமந்து திரிகிறார்கள் சம கால வன்முறையாளர்கள் என்பதே தெளிவாய்த்தெரிகிறது. https://www.facebook.com/ilangovan.balakrishnan.1/friends_mutual?pnref=eh 

மேலுள்ள பதிவு தொடர்பாக, கூடுதலாக நான் சேர்ப்பது: 

எலேய்.தமிழ்ல இப்ப இருக்கிற சாதிங்கிறதே, வெள்ளைக்காரன் கொடுத்ததுனு, தெரியுமா, உனக்கு?

தமிழ்ல 'சாதி'ங்கிறது பறவைகளுக்கும், (பெரும்பாணாற்றுப்படை 229),  நீர்வாழ் மிருகங்களுக்கும் ( தொல்காப்பியம் பொருள் 9; 44) தான் இருந்துச்சு.

வெள்ளைக்காரன் அந்த 'சாதியை' மாத்தி,  மனுசன 'சாதி'யில சிக்க வச்ச சதி உனக்கு தெரியுமா?

இப்ப 'உயர்ந்த சாதி'ங்கிற நினைப்புல வாழ்றவனும்,

'தாழ்ந்த சாதி'ங்கிற நினைப்புல வாழ்றவனும்,

அந்த 'சதி'யில சிக்கின

மனநோயாளிங்கன்னு உனக்கு தெரியுமா?
(http://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

No comments:

Post a Comment