"ஏன் இந்து
மதத்தை விமர்சிப்பவர்கள் மற்ற மதத்தை விமர்சிக்கத் தயங்குகிறார்கள், பயமா?"
என்ற கேள்விக்கு
நான் அறிந்ததை விட, கூடுதல் தகவல்கள் உள்ள, அறிவுபூர்வமான விளக்கம் கீழே.
இதனை எனக்கு
அனுப்பிய திரு.அரசு.எழிலனுக்கு (arasezhilanpr@gmail.com) நன்றி.
இதனை எனது சமூக
வட்டத்தில் உள்ள இந்துத்வா ஆதரவாளர்கள் பார்வைக்கு கொண்டு செல்ல வேண்டியது எனது சமூக
கடமையாகும்.
இந்துத்வா ஆதரவாளர்கள்
மற்றும் எதிர்ப்பாளர்கள் இடையே அறிவுபூர்வமாகவும், ‘பிறர் பார்வை அறிதல்’
(Empathy) அணுகுமுறையில் ஆரோக்கியமாகவும், விவாதங்களை முன்னெடுப்பதன் மூலமாக;
'உணர்ச்சிபூர்வ'
இரைச்சல் துணையுடன், 'சுயநல கள்வர்களாக', எதிரெதிர் முகாம்களில்
'பிழைப்பவர்களை', ஓரங்கட்டி, ஒதுக்க முடியும்.
அதன்மூலம் 'தமிழ்,
தமிழர், தமிழ்நாடு' மீட்சிப் பாதையில் பயணிக்கும்,
என்பதும், என் கருத்தாகும்.
சாதி, மத, கொள்கை
வேறுபாடுகளை ஒதுக்கி வைத்து, ஒருங்கிணைத்து, தமிழ்நாட்டின் 'மீட்சிக்கான' திசையில்
முயலும் 'சினர்ஜி’ (Synergy) சமூக செயலுக்கான
நேரம் வந்து விட்டது என்பதும், என் கருத்தாகும்.
--------------------------------
ஏன்
இந்து மதத்தை விமர்சிப்பவர்கள் மற்ற மதத்தை விமர்சிக்கத் தயங்குகிறார்கள் பயமா?
இப்படியொரு
வினா தொடர்ந்து ஆர்.எஸ்.எஸ். இந்துத்துவாதிகளால் கேட்கப்பட்டு வருகிறது. அவ்வப்போது
அவர்களுக்கு பதிலளிக்கப்பட்டு வந்தாலும் வேண்டுமென்றே மீண்டும் மீண்டும் இதே கேள்வியைக்
கேட்டுக்கொண்டே வருகின்றனர். இந்துத்துவத்துக்கு ஆட்படாத இந்துமத நம்பிக்கையாளர்களும்கூட
இப்போது இக்கேள்வியைக் கேட்கத் தொடங்கியுள்ளனர்.
அவர்களுக்கான
பதில் இது.
கடவுள் இல்லை என்கிற போதே அது எந்த மதக்கடவுளும் இல்லை (இயேசு, அல்லா உள்பட) என்றுதான் பொருள். நாங்கள் எந்தக் கடவுளுக்கும் விதிவிலக்குக் கொடுக்கவில்லை.
அது மிகச்சிறந்த அறிவாளிகளான உங்களைப்போன்றோருக்குத் தோன்றவில்லை என்றால் அதற்கு நாங்கள் என்ன செய்வது?
இசுலாம் மதத்தை விமர்சித்து குரானை மறுத்து பெரியார் தொண்டர் தோழர் புவனன் எழுதிய “குரானோ குரான்” நூலும் , இசுலாம் மதத்தை விமர்சித்து பெரியார் தொண்டர் தோழர் எஸ். டி. விவேகி எழுதிய ”வேதமும் விஞ்ஞானமும்” நூலும், இசுலாம் மதத்தை விமர்சித்து “பிரபஞ்சமே கடவுள்” என்ற நூலும், தோழர் சாகித் இசுலாம் மதத்தை விமர்சித்து எழுதிய “அடிமை - அல்லாவின் ஆணை” , “ஆத்மாவும் அதுபடும் பாடும்” ஆகிய இரு நூல்களும் தோழர் தஜ்ஜால் இசுலாம் மதத்தை விமர்சித்து எழுதிய “ஆரம்பத்தை நோக்கி” என்ற நூலும் டாக்டர் அலி சினா எழுதிய ”முகமதுவையும் முஸ்லிம்களையும் அறிவோம்” (தமிழில் மொழிபெயர்த்தவர் சிராஜ் அல் ஹக்) என்ற நூலும் இன்னும் பிற நூல்களும் இசுலாத்தை விமர்சித்து தமிழில் வந்த நூல்கள். இபின் வராக் எழுதிய “Why I Am Not A Muslim” போன்று ஆங்கிலத்தில் ஏராளமான நூல்கள் உள்ளன. கிறித்தவ மதத்தை விமர்சித்து எழுதப்பட்ட “கிறித்தவர்கள் சிந்தனைக்கு” (ஜார்ஜ்) ”பாதிரியும் பாவமன்னிப்பும்”, மரண சாசனம் -1, மரண சாசனம் -2, மரண சாசனம் -3 (ஜீன் மெஸ்லியர்), நான் ஏன் கிறித்தவனல்ல? (பெட்ரண்ட் ரசல்) போன்ற தமிழ் நூல்களைத் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ளது. தோழர் புவனன் எழுதிய ”பைபிளோ பைபிள்” உள்ளது. ஏராளமான ஆங்கில நூல்களும் உள்ளன. தோழர் அருணன் எழுதிய “கடவுளின் கதை - ஆதி மனிதக் கடவுள்கள் முதல் அல்லா வரை - 5 தொகுதிகள், ரிச்சர்டு டாக்கின்ஸ் எழுதிய “ கடவுள் ஒரு பொய் நம்பிக்கை” (மொழிபெயர்ப்பு கு.வெ.கி. ஆசான்), தருமி எழுதிய ”மதங்களும் சில விவாதங்களும்” ஆகிய நூல்கள் கிறித்தவ, இசுலாமிய மதங்களை விமர்சிக்கிற நூல்கள். "Rationalist Voice", "The Atheist" போன்ற இதழ்களிலும் நிறையக் கட்டுரைகள் வெளிவந்துள்ளன.
இப்போதைக்கு உடனடியாக நினைவுக்கு வந்தவற்றை மட்டுமே இங்கு குறிப்பிட்டுள்ளேன். தேடினால் ஏராளமாய்க் கிடைக்கும். இசுலாத்தையும் கிறித்தவத்தையும் விமர்சிக்கும் ஏராளமான கட்டுரைகள் பெரியாரிய, மார்க்சிய, முற்போக்கு இதழ்களில் வந்துள்ளன. இசுலாத்தையும் கிறித்தவத்தையும் விமர்சிக்கும் ஏராளமான கட்டுரைகள் www.iraiyillaislam.blogspot.com, www.paraiyosai.wordpress.com, www.pagaduu.wordpress.com, www.senkodi.wordpress.com போன்ற பல இணையதளங்கள் உள்ளன. youtube - லும் ஏராளமான காணொளிகள் (வீடியோ) உள்ளன.
தர்க்க ரீதியாக இன்னொரு செய்தியையும் இங்கு பதிவிடவேண்டும்.
Why i am not a Hindu? - Prof. Ramendra
Why i am not a Christian? - Bedraund Russel
Why i am not a Muslim? - Ibin Warrak
இந்து மதத்தை விமர்சித்து நான் ஏன் இந்துவல்ல? நூலினை எழுதியவர் இந்து.
கிறித்தவ மதத்தை விமர்சித்து நான் ஏன் கிறித்தவனல்ல? நூலினை எழுதியவர் கிறித்தவர்.
இசுலாம் மதத்தை விமர்சித்து நான் ஏன் இசுலாமியனல்ல? நூலினை எழுதியவர் இசுலாமியர்.
இசுலாம் மதத்தை விமர்சித்து தமிழில் வெளிவந்த நூல்கள் என முன்பு குறிப்பிட்ட நூல்களில் “அல்லா - அது அடிமையின் ஆணை” நூலாசிரியரும், ”வேதமும் விஞ்ஞானமும்” நூலாசிரியரும், ”பிரபஞ்சமே கடவுள்” நூலாசிரியரும், "ஆரம்பத்தை நோக்கி” நூலாசிரியரும் இசுலாமியர்கள் என்பதை உங்களின் அறிவான பார்வைக்குக் கொண்டுவர விரும்புகிறேன்.
அமெரிக்காவைச் சேர்ந்த நாத்திகர் இராபர்ட் கிரீன் இங்கர்சாலும், இங்கிலாந்தைச் சேர்ந்த நாத்திகர் பெட்ரண்ட் ரசலும் கிறித்தவ மதத்தைக் கடுமையாக விமர்சித்து எழுதியபோதும், பேசியபோதும் யாரும் அவரிடம் நீங்கள் ஏன் கிறித்தவ மதத்தை மட்டுமே விமர்சிக்கிறீர்கள் என்றோ,
அல்பேனியாவைச் சார்ந்த நாத்திகர் அன்வர் ஓட்சா இசுலாமிய மதத்தை விமர்சித்து எழுதியபோதும், பேசியபோதும் நீங்கள் ஏன் இசுலாமிய மதத்தை மட்டுமே விமர்சிக்கிறீர்கள் என்றோ யாரும் கேட்டதில்லை.
எதை விமர்சிப்பது, எதற்கு முன்னுரிமை கொடுப்பது என்பதை அந்தந்த நாட்டின் சூழல்தான் தீர்மானிக்கும்.
உண்மையான, அறிவார்ந்த தேடல் உள்ளவர்களால் மட்டுமே இவற்றைச் சிந்தித்து ஏற்க முடியும். என்ன செய்வது! உங்களைப் போன்றோர் (இந்து, இசுலாம், கிறித்தவ, மற்ற அனைத்து மதத்தவரும்) மதத்தீவிர வாதத்தால், மதவெறியால், மத அடிப்படைவாதத்தால் போதையேற்றப் பட்டிருக்கிறீர்கள். பல்வேறு மாற்றுச் சிந்தனைகளையும் படித்து சிந்திக்காதவரையில் உங்களைப் போன்றோரை மீட்டெடுப்பது மிகமிகக் கடினம். ஆனாலும் நாங்கள் முயன்றுகொண்டேதான் இருப்போம்.
No comments:
Post a Comment