Tuesday, February 20, 2018


'தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழக' துணை வேந்தர்?

காயத்ரியை நியமித்த போது, வெளிப்படாத சர்ச்சை, இப்போது வெளிப்படுவது சரியா?

 

தமிழ்நாட்டில் துணை வேந்தர் பதவிகள் எல்லாம் ஏலத்தில் விற்கப்பட்ட போக்கிலிருந்து மாறி;

ஆளுநர் தமது சட்டத்திற்குட்பட்ட அதிகாரத்தில் உன்னிப்பாக கவனித்து, துணைவேந்தர், பதிவாளர் பதவிகள் எல்லாம், நீண்ட காலத்திற்குப் பின் ஊழலுக்கு இடமின்றி, தகுதி, திறமையின் அடிப்படையில் நிரப்பப்படுவதாக நான் அறிகிறேன்.

பொது மக்களிடமிருந்து ஆளுநர் பெறும் மனுக்கள் மீதான மேல் நடவடிக்கைகள் எல்லாம், எந்த அளவுக்கு சுறுசுறுப்பாக நடைபெறுகிறதோ, அந்த அளவுக்கு வரும் சட்ட மன்ற தேர்தலில், ஆளுநருக்கு எதிராக கறுப்புக் கொடி ஆர்பாட்டம் நடத்திய தொகுதிகளில், தி.மு.க பெறும் வாக்குகள் எல்லாம் குறிப்பிடத்தக்க அளவுக்கு குறைந்தால் வியப்பில்லை.

இந்தியாவில் புதிதாக ஒரு பல்கலைக்கழகம் தொடங்குவதற்கு சிறப்பான முன்னுதாரணமாக, முதல்வர் எம்.ஜி.ஆர் ஆட்சியில் தொடங்கப்பட்ட தமிழ்ப்பல்கலைக்கழகம் இருக்கிறது; மிக மோசமான முன்னுதாரணமாக முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் தொடங்கப்பட்ட 'தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகம்' இருக்கிறது.

தி.மு. ஆட்சியில் அவமதிக்கப்பட்ட டார்பிடோ ஜெனார்த்தனம், கி..பெ.விஸ்வநாதன் உள்ளிட்ட இன்னும் பல புலமையாளர்களை எல்லாம் தேடி, வரவழைத்து, மிகுந்த மரியாதை செய்து, ஆலோசனைகள் பெற்று முதல்வர் எம்.ஜி.ஆர்  ஆட்சியை நடத்தியதால்;

உலகப்புகழ் பெற்ற தமிழறிஞர் வி.அய்.சுப்பிரமணியத்தை வரவழைத்து, அவர் விதித்த நிபந்தனைகளை ஏற்று, தமிழ்ப்பல்கலைக்கழக துணை வேந்தராக்கினார். துணைவேந்தரான பின், அவர், கணபதி ஸ்தபதியை கட்டிடவியல் ஆலோசகராக கொண்டு உருவாக்கிய தமிழ்ப்பல்கலைக்கழகம் தான் இன்று தஞ்சையில் இருக்கிறது.

துவக்க காலத்தில் தஞ்சை அரண்மனை வளாகத்தில் தற்காலிகமாக செயல்பட்ட போதும், அங்கு சென்று, அமெரிக்க பல்கலைக்கழக பதவியில் இருந்து விலகி, அங்கு மொழியியல் துறைத் தலைவராக இருந்தவரை கண்டு பேசி, செயல்பாடுகளை அறிந்து வியந்திருக்கிறேன். பின் இப்போதுள்ள வளாகத்தில் கட்டிடங்கள் முடிந்து, இடம் பெயர்ந்த பின்னும், அங்கு சென்று பார்த்து வியந்திருக்கிறேன்.

தி.மு. தலைவர் கருணாநிதி ஆட்சியில், காவிரியிலும், கச்சத்தீவிலும் ஏற்பட்ட பாதகங்களிலும்;

எம்.ஜி.ஆர் ஆட்சியில் முல்லைப் பெரியாறு பிரச்சினையில் ஏற்பட்ட பாதகங்களிலும்;

மிகுந்த துணிச்சலுடன் தமிழ்நாட்டின் உரிமைகளை மீட்க பாடுபட்டவர் என்ற வகையில் ஜெயலலிதாவைப் பாராட்டினாலும்;

எம்.ஜி.ஆரைப் போல, புலமையாளர்களை மதித்து ஊக்குவிக்காமல் அத்தகையோரின் வாடையின்றி, சரியான ஆலோசனை பெற வழியின்றி;

முனைவர் பட்டம் பெறாத, பல்கலைகழகத்தில் பேராசிரியராக பணியாற்றிய அனுபவம் இல்லாத,

வீணையிலும் சிட்டிபாபு, பாலச்சந்தர் போன்றவர்களுடன் ஒப்பிடமுடியாத, சிறுவயதில் வீணை வாசித்து புகழ் பெற்றவரான காயத்ரியை;

புதிதாக தொடங்கப்பட்ட‌ 'தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகத்தின்'  துணைவேந்தராக்கியதானது;

என்னால் இன்றுவரை சீரணிக்க முடியாத பெரும் தவறாகும்; காயத்ரி பிராமணராக இருந்தாலும், பிராமணரல்லாதோராக இருந்தாலும்.

அந்த பல்கலைகழகம் துவங்கி, அதன் கீழ் செயல்பட்ட இசைக்கல்லூரிகளில் ஒன்றின் முதல்வரை சில வருடங்களுக்கு முன் சந்திக்க நேர்ந்தது. நான் திருச்சி NIT- இல் 'இசைத்தகவல் தொழில்நுட்பம் ' (Music Information Technology) பாடம் அறிமுகம் செய்தது அறிந்து, தனது கல்லூரி மாணவர்களுக்கு அதை அறிமுகம் செய்ய என்னை அழைத்தார். அப்போது நான் அவரிடம் "இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகத்தோடு எந்த தொடர்பும் கொள்வதை அவமானமாக கருதி  தவிர்த்து வருகிறேன். ஆனால் உங்களின் இசைக்கல்லூரிக்கு, அந்த தொடர்பின்றி உதவ முடியுமானால், உதவுகிறேன்' என்றேன்.

பல்கலைக்கழகம் புதிதாக துவங்கி, முதல் 3 வருடங்களில்;

தஞ்சை தமிழ்ப்பல்கலைகழகம்  உலக அளவில் புலமையாளர்களை ஈர்த்து, எந்த அளவுக்கு  வளர்ந்தது?

'தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகம்'  எந்த அளவுக்கு வளர்ந்துள்ளது?

என்ற விசாரணையை மேற்கொண்டால்;

பல்கலைக்கழக மான்யக் குழுவானது, புதிதாக தொடங்கும் பல்கலைகழகம் தவிர்க்க வேண்டிய குறைபாடுகளின் தொகுப்பான, மிக மோசமான முன்னுதாரணமாக, 'தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகம்' வெளிப்பட்டால் வியப்பில்லை. ஒரு பல்கலைக்கழகம் என்றால் என்ன? அதன் நிர்வாகம் என்றால் என்ன? என்று தெரிந்து கொள்ள குறைந்த பட்சம் 10 வருடங்களாவது ஒரு பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணி புரிந்திராத, துணைவேந்தராக இருந்த காய்த்ரியை குறை சொல்வதிலும் அர்த்தமில்லை


காயத்ரியை துணை வேந்தராகநியமித்த போது, அதனால் விளையும் பாதகங்களைச் சுட்டிக்காட்டும் அறிவுள்ளவர்களை எல்லாம் மீடியா இருளில் தள்ளி, மீடியா வெளிச்சத்தில் வாழும் தலைவர்களும், எழுத்தாளர்களும், பேச்சாளர்களும், கவிஞர்களும் 'நமக்கேன் வம்பு?' என்று முதல்வர் ஜெயலலிதாவின் தவறான முடிவிற்கு 'மெளன ஒப்புதல்' வழங்கி விட்டு, இன்று காயத்ரியை விட, புஷ்பவனம் குப்புசாமியை விட, யு.ஜி.சி விதித்துள்ள தகுதிகளுள்ள நபரை தேர்ந்தெடுத்துள்ள போது, அறிவுபூர்வ பார்வையின்றி, 'சாதி, பிராமணர் - பிராமணரல்லாதோர்' என்பது போன்ற முட்டாள்த்தனமான சர்ச்சைகளை கிளப்புவர்கள் இருக்கும் வரை, தமிழ்நாடு உருப்பட முடியுமா? நான் பிரமிளா குருமூர்த்தியின் இடத்தில் இருந்திருந்தால், வி.அய். சுப்பிரமணியம் எம்.ஜி.ஆரிடம் விதித்த நிபந்தனைகளைப் போல, (தவறாக தொடங்கியதை சரி செய்ய வேண்டியிருப்பதால்) இன்னும் கூடுதல் நிபந்தனைகளுக்கு ஒப்புதல் வாங்கிய பின்னரே, துணை வேந்தர் பொறுப்பினை ஏற்றுக் கொண்டிருப்பேன்.

சென்னைப் பல்கலைக்கழக இசைத்துறைத் தலைவர் என்ற உலக அளவில் புகழ் பெற்ற பதவியில் இருந்த பேரா.முனைவர். பிரமிளா குருமூர்த்திக்கு;

மேற்குறிப்பிட்டவாறு மோசமாக தொடங்கப்பட்ட பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் பதவி என்பது கீழானதாகும்.

காயத்ரியை அடிப்படையாகக் கொண்டு, புஷ்பவனம் குப்புசாமி துணை வேந்தர் பதவிக்கு ஆசைப்பட்டிருந்தால், தப்பில்லை. நானறிந்த வரையில் முனைவர் பட்ட  மாணவராக பாதியில் வெளியேறியிருந்தாலும், காயத்ரியை விட நிச்சயமாக அவருக்கு கூடுதல் தகுதி இருக்கிறது


புஷ்பவனம் குப்புசாமி இசையில் இரண்டு முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளதாக ஊடகத்தில் வெளிப்படுத்தியவர்கள், எந்த வருடம், எந்த பல்கலைக்கழகத்தில் அவர் அப்பட்டங்களை பெற்றார்? என்று தெளிவுபடுத்துவார்களா? யு.ஜி.சியால் அங்கீகரிக்கப்படாத 'பல்கலைக்கழகங்கள்' (?), ஏமாந்தவர்களிடம் காசுக்கு 'முனைவர்' பட்டத்தை விற்கும் காலம் இதுவாகும்.

மாறாக பல்கலைகழக மானியக் குழு விதியின் படி 10 வருடங்களுக்கும் மேலாக சென்னைப் பல்கலைக்கழக இசைத்துறை பேராசிரியராகவும், துறைத்தலைவராகவும் இருந்த பிரமிளா குருமூர்த்தியின் இடத்தில், தான் அமர வேண்டும் என்று அவர் எண்ணினால், அது அபத்தமாகும்.

அது மட்டுமல்ல,  பிரமிளா குருமூர்த்தி பிராமணரல்லாத பேராசிரியராக இருந்து, ' தமிழன் கண்ட இசை' , 'திராவிடர் இசை' நூல்களின் ஆசிரியரான பொறியாளர் தண்டபாணி சென்னையில் 'ஆபிரகாம் பண்டிதர் மன்றம்' தொடங்கிய போது, துணிச்சலுடன் தலைமை தாங்கி, அவருக்கு ஒத்துழைத்தவர். அவர் மூலம் தான் முதன் முதலில் நான் பிரமிளா குருமூர்த்தி பற்றி அறிந்தேன்.

பாண்டிச்சேரி பல்கலைக்கழக நாட்டுப்புறவியல் பேராசிரியராகவும், உலகத்தமிழாராய்ச்சி நிறுவன இயக்குநராகவும் இருந்த குணசேகரனைப் போல, நாட்டுப்புறவியலில் முனைவர் பட்டம் பெற்று, பல்கலைக்கழகத்தில் 10 வருடங்களுக்கும் மேலாக பேராசிரியராக இருந்து, அதன்பின் புஷ்பவனம் குப்புசாமி போன்றவர்கள் துணைவேந்தராக ஆசைப்பட்டால், அதில் நியாயம் இருக்கிறது.


காசு வாங்கி, தேர்வுகளில் 'காப்பி' அடிக்க அனுமதித்தல், கணினியில் மதிப்பெண்களை திருத்துதல், முனைவர் பட்ட ஆய்வறிக்கையை காசுக்காக எழுதி கொடுப்பது, ஆய்வு மாணவரிடம் காசு வாங்கி, 'ஒத்து வரும்' தேர்வாளர்களுக்கு ஆய்வறிக்கையை அனுப்பி ஒப்புதல் பெறுவது, வாய்மொழி தேர்வையும் ஒத்திகை பார்த்த நாடகம் போல நடத்துவது, போன்றவை எல்லாம் யு.ஜி.சியால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகங்களிலேயே அரங்கேறி, தப்பித்தவறி யு.ஜி.சியில் சிக்கும் பல்கலைக்கழகங்கள் எல்லாம், தமது அங்கீகாரத்தை இழந்து வரும் காலமும் இதுவாகும். தவறாக தொடங்கப்படும் பல்கலைக்கழகங்கள் எல்லாம், துவக்கத்திலேயே அந்த நோயில் எளிதில் சிக்கும் ஆபத்தும் இருக்கிறது.

பல்கலைக்கழகமானாலும், கல்லூரியானாலும் முதலில் சரியாக துவங்குவது எளிது. ஆனால் தவறாக தொடங்கப்பட்டதை சரி செய்வது என்பது மிக கடினமே; வி.அய்.சுப்பிரமணியம் போன்ற உலக அளவில் புலமையிலும், நிர்வாகத்திறனிலும் புகழ் பெற்றவர்களுக்கே.

உலக அளவில் புகழ்பெற்ற சென்னைப் பல்கலைக்கழக இசைத்துறை தலைவர் என்ற பதவியிலிருந்து விட்டு, துணைவேந்தராக பொறுப்பேற்றுள்ள பிரமிளா குருமூர்த்தி;

ஒரு பல்கலைக்கழகம் என்பதற்கான இலக்கண மீறல்கள் எந்த அளவுக்கு தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகத்தில் காயத்ரியின் தகுதி மற்றும் அனுபவமின்மை காரணமாக நடந்துள்ளன? என்ற விசாரணையை மேற்கொண்டு, சரி செய்யும் முயற்சியில், வெறுத்துப் போய், அந்த துணைவேந்தர் பதவியிலிருந்து அவர் விலகினால், நான் வியப்படையமாட்டேன்


புதிதாக துவங்கப்பட்ட பல்கலைக்கழகத்திற்கு காயத்ரியை துணை வேந்தராகநியமித்த போது, வெளிப்பட்டிருக்க வேண்டிய சர்ச்சையானது ஏன் வெளிப்படவில்லை?



இப்போது யு.ஜி.சி விதித்துள்ள தகுதிகளுள்ள நபரை தேர்ந்தெடுத்துள்ள போது, அறிவுபூர்வ பார்வையின்றி, 'சாதி, பிராமணர் - பிராமணரல்லாதோர்' என்பது போன்ற முட்டாள்த்தனமான சர்ச்சை ஏன் வெளிப்பட்டுள்ளது?


1969 முதல் தமிழ்நாட்டில் 'சட்டத்தின் ஆட்சி' (Rule of Law) என்பதானது, திராவிடக் கட்சிகளின் ஆட்சியில், மாநில முதல்வரின் விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்ற வகையில் 'வளையும்' ஆட்சியாக மாறியதன் விளைவுகளை ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2018/02/normal-0-false-false-false-en-us-x-none_12.html  )

அந்த போக்கில் எந்த அளவுக்கு சட்டத்தின் ஆட்சியானது தமிழக முதல்வரின் விருப்பு வெறுப்புகளின் அடிப்படையில் சீரழிய முடியும்? என்ற ஆராய்ச்சிக்கு, ஜெயலலிதா விட்டுச் சென்றுள்ள அமைப்பே 'தமிழ்நாடு இசை மற்றும் நுண்கலை பல்கலைக்கழகம்' ஆகும். 



அந்த சீரழிவின் உச்சக்கட்டமாக, 'மர்மமான' முறையில் சுமார் 70 நாட்களுக்கும் அதிகமாக சிகிச்சை பெற்று, 'மர்மமான' முறையில் மரணமடையும் அளவுக்கு, ஒரு மாநில முதல்வர் தொடர்புள்ள அரசு அமைப்புகள் எல்லாம், எவ்வாறு செயல் இழந்தன? என்பதும், அந்த ஆராய்ச்சியில் இடம் பெற வேண்டும்.

அந்த அமைப்பு மட்டுமின்றி, தமிழ்நாட்டில் அரசு சம்பந்தப்பட்ட அமைப்புகள் மட்டுமின்றி, கட்சி அமைப்புகளும், தனியார் அமைப்புகளும் 'கட்டமைத்தல் சீர்குலைவுக்கு' (derailing of system building)) உள்ளாகி; பொது ஒழுக்கச் சீரழிவும் ஊழலும் கை கோர்த்து பயணித்து வருவதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.  ( http://tamilsdirection.blogspot.in/2016/11/normal-0-false-false-false-en-us-x-none_87.html

இவ்வாறு தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள சீரழிவிற்கு நான் உள்ளிட்டு நாம் ஒவ்வொருவரும் பொறுப்பாவோம். எனவே எவரையும் குற்றம் சொல்வதற்கு முன், நமது மனசாட்சிக்குட்பட்டு நமது அகத்தில் சுயபரிசோதனை மேற்கொண்டு, நம்மிடம் உள்ள கழிவுகளை அகற்றி, புறத்தில் பாரபட்சமற்ற முறையில் நாமும் செயல்படுவோம். அத்தகைய பாரபட்சமற்ற முறையில் யார் செயல்பட்டாலும் அவர்களை துணிச்சலுடன் ஆதரிப்போம். அதன் மூலம் தமிழ்நாட்டின் மீட்சிக்கு நாமும் பங்களிப்போம்



குறிப்பு:


கடந்த தி.மு. ஆட்சியின் செல்வாக்கிற்குட்பட்டு, மத்திய அரசின் கீழ் உருவான செம்மொழி நிறுவனமும், உரிய சட்ட திட்டங்கள் இன்றி, அவசர கதியில், ஆளுங்கட்சியான தி.மு. மற்றும் அதன் கூட்டணிக்கட்சிகளும் அதன் செயல்பாட்டில் முக்கியத்துவம் பெற்று, தவறான முறையில் செயல்பட்டதையும், பாரபட்சமற்ற‌ முறையில் விசாரணை மேற்கொண்டு, அந்த குறைபாடுகளை சரி செய்தால் தான், அந்நிறுவனமும் உண்மையான தமிழ் வளர்ச்சிக்கு உதவும் என்பதையும் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். ( http://tamilsdirection.blogspot.in/2014/11/normal-0-false-false-false-en-us-x-none_27.html )
 

No comments:

Post a Comment