Friday, January 9, 2015



சுமேரு  மொழியில் தொல் தமிழ் இசையியல் 

(Ancient Tamil Musicology)  கூறுகள்



மலேசியாவில் வாழும் முனைவர் கே.லோகநாதன் ‘சுமேரு மொழி தொல் தமிழே’, என்பதை தொடர்ந்து தமது ஆய்வுகள் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். (https://www.youtube.com/watch?v=JYGWUv5Zhnw )


அதன் பலனாக,2014 பிற்பகுதியில், ஓர் வரலாற்று சிறப்புமிக்க திருப்பமாக, சுமேருத் தமிழ் தொடர்பாக 'மலேசிய நண்பன்' எனும் மலேசியாவின் தினசரி ஒன்றில் பல கட்டுரைகள் வந்து நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.


அவரின் ஆய்வுகள் மூலம் வெளிப்பட்டுள்ள, சுமேரு மொழியிலுள்ள‌ கிழ்வரும் வரிகள் எனக்கு சொற்களால் விளக்க முடியாத இன்ப அதிர்ச்சியை ஏற்படுத்தியது.


" யாழ் கால் சுருதிய ஈனே இயமிடினே. "


இசை தொடர்பாக 'சுருதி' என்ற பெயர்ச் சொல், இசையில் செயல்படுவதை 'சுருதிய' என்ற வினைச் சொல்லாக பயன்படுத்தப்பட்டதற்கு,  எனக்கு கிடைத்த, - நம்ப முடியாத வியப்பை ஏற்படுத்திய-  சான்று இதுவாகும்.

தமிழிசை தொடர்பாக, நமக்கு கிடைத்த பழந்தமிழ் இலக்கியங்களில் இல்லாத, ஆனால் இசையியல்(musicology) முக்கியத்துவம் வாய்ந்த, 'சுருதிய' என்ற சொல் சுமேரு  மொழியில் இருக்கிறது என்பதையும் பதிவு செய்ய விழைகிறேன்.


பழந்தமிழ் இலக்கியங்களில் 'சுரம்' என்ற சொல் பாலை நிலம், வழி, காடு போன்ற பல பொருட்களைக் குறிக்கும். இசை தொடர்பான பகுதிகளில் 'இசை வழி' என்ற பொருளில் அச்சொல் பயன்படுத்தப் பட்டுள்ளது.


வீ.பா.கா.சுந்தரம் உள்ளிட்ட எல்லா தமிழ் இசை அறிஞர்களும், தவறாக‌ 'ஸ்வரம்' என்ற வடமொழி சொல்லிலிருந்தே, தமிழில் இசை தொடர்பான சொல் 'சுரம்' வந்தது என்று கருத்து தெரிவித்து வந்துள்ளனர். 1996‍இல் எனது முனைவர் பட்ட ஆய்விலும், தொடர்ந்து வெளியிட்டு வரும் ஆய்வுக் கட்டுரைகளிலும் உரிய சான்றுகளுடனும், தொடர்புள்ள இசை இயற்பியல் பின்னணியுடனும், சங்க இலக்கியங்களில் இசை தொடர்பான பகுதிகளில் 'இசை வழி' என்ற பொருளிலேயே 'சுரம்' பயன்படுத்தப்பட்டது என்று நிறுவியுள்ளேன். சென்னைப் பல்கலைக் கழகத்தில் முனைவர் என். ராமநாதன் இசைத் துறை தலைவராயிருந்தபோது, என்னை அழைத்து, பேராசிரியர்கள் ஆய்வாளர்கள் முன்னிலையில் இது தொடர்பான செயல் விளக்க உரை நிகழ்த்த ஏற்பாடு செய்தார்.


இன்று வரை, அதை சரி என்றோ, தவறோ என்றோ தமிழிசை அறிஞர்கள் யாரும் சொல்லவில்லை. 'இசை இயற்பியல்'(Physics of Music) பற்றிய அடிப்படை அறிவு தமக்கு இல்லாததால், எனது விளக்கம் விளங்கவில்லை என்றும் யாரும் என்னை அணுகவில்லை. இழப்பு கல்லூரிகளிலும், பல்கலைக்கழகங்களிலும் இசையில் பட்ட/மேல்பட்ட படிப்புகள் படித்த/படிக்கும் மாணவர்களுக்கு தான்.


இன்று இசை படிப்பவர்களுக்கு ச, ரி, க , ம , ப, த, நி என்பவை 7 சுரங்கள் என்றும், ச, ரி1, ரி2, க1, க2, ம1, ம2, ப, த1, த2, நி1, நி2 என்பவை 12 'சுர ஸ்தானங்கள்'என்பதும் தெரியும். அதே போல் கிடார், வீணை, வயலின் போன்ற‌ நரம்பிசைக் கருவிகளில் இசை வாசிக்கும் முன், ஒவ்வொரு நரம்பின் இழுவிசையையும்(Tension)  சரி செய்தால் தான், அந்தந்த நரம்பிலிருந்து 'சரியான' இசை ஒலி வெளிப்படும் என்பதையும் அவர்கள் அறிவார்கள். இவ்வாறு நரம்பின் இழுவிசையை சரியான இசை ஒலிக்கு பொருத்தமாக சரி செய்தலே 'சுருதி சேர்த்தல்' – tuning- என்பதையும் அவர்கள் அறிவார்கள். இது தொடர்பான 'சுரம்' மற்றும் 'சுருதி' ஆகிய சொற்கள் வடமொழியிலிருந்து வந்தவை என்று தமிழிசை ஆய்வாளர்களே நம்பிக் கொண்டிருக்கின்றனர். கீழ் வரும் படம் 'சுரம்' என்பது 'சுருதி சேர்த்தலுக்கு' எவ்வாறு இசை வழியாக செயல்படுகிறது என்பதை விளக்குகிறது.

‘சுரம்’ என்பது இசையில் ‘சுருதி’யில் தான் ‘வரை நிலை’  பெறுகிறது. சுரம் தொடர்பான தொல்காப்பிய சூத்திரம் (பொருள் 5 : 20) வருமாறு: 


 ‘சுரம் என மொழிதலும் வரை நிலை இன்றே’ (குறிப்பு கீழே)


'சுருதி' என்ற பொருளில் பழந்தமிழ் இலக்கியங்களில் 'அத்தம்' என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் உரிய சான்றுகளுடன் ஏற்கனவே நான் நிறுவியுள்ளேன்.


'யாழ் கால் சுருதிய'  என்பது சரியாக சுருதி சேர்க்கப்பட்ட நரம்புகள் கொண்ட யாழைக் குறிப்பிடுகிறது. 'இயமிடினே' என்ற சொல்லில் வரும் ‘இயம்’ சங்க இலக்கியங்களில் இசை தொடர்பான பகுதிகளில் இசைக்கருவி என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது. 


எனவே " யாழ் கால் சுருதிய ஈனே இயமிடினே. " என்பது தமிழிசையியல் தொடர்பான ஆழ்ந்த பொருளை விளக்கும் பகுதியாகும். 'சுரம்' 'சுருதி' தமிழ்ச் சொற்களே - ‍ வட மொழியிலிருந்து வந்தவை அல்ல - என்று நிறுவுவதுடன்,தமிழிசையியலில் சுருதி சேர்த்தல் தொடர்பான வினைச் சொல்லாகவும் பயன்படுத்தலாம் என்பது தமிழிசையியலுக்கு இன்னும் வலிவும் பெருமையும் சேர்ப்பதாகும்.


சுமேருத் தமிழ் ஆனது சங்கத் தமிழோடு நெருக்கமான தொடர்பு கொண்டிருந்ததற்கு,  தமிழ் இசையியல் அடிப்படையில் வலுவான சான்று இது என்பதும் நிறுவப்படுகிறது.


முனைவர் கே.லோகநாதன் ஆய்வுகளின் அடிப்படையில்,  சுமேரு மொழியில் தொல் தமிழ் இசையியல் (ancient Tamil Musicology)  கூறுகள் பற்றிய ஆய்வினை எவரேனும் மேற்கொள்ள விரும்பினால், அவர்களுக்கு நான் உதவ இயலும்.

குறிப்பு:

மேற்குறிப்பிட்ட தொல்காப்பிய சூத்திரம் இசை உள்ளிட்டு 'சுரம்' தொடர்பான பல பொருளையும் வரையறுத்த சூத்திரம் ஆகும்.

தொல்காப்பியம் உள்ளிட்டு தொன்மை இந்திய இலக்கியங்களில் வரும் சூத்திரங்கள் பன்முக
ப் பரிமாணம் கொண்டவையாகும். இசை, கட்டிடக்கலை, ஓவியம்,சிற்பம், நடனம், ஆகிய ஐந்தும் தொழில்நுட்ப அடிப்படையில் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையவை என்றும், அதனை 'ஐந்திற தொழில் நுட்பம்' என்றும் மறைந்த கணபதி ஸ்தபதி ( முன்னாள் முதல்வர்,சென்னை, மகாபலிபுரம் அரசு, கட்டிடவியல் மற்றும் சிற்பக் கல்லூரி) தெளிவுபடுத்தியுள்ளார். சிலப்பதிகாரம் உள்ளிட்ட பல பழந்தமிழ் இலக்கியங்களிலும், சமஸ்கிருத இலக்கியங்களிலும் குறிப்பிட்டுள்ள 'மயன் தொழில் நுட்பம்' அதுவே என்றும் தெளிவு படுத்தியுள்ளார். அதில் இசையில் உள்மறைந்துள்ள(latent) இயக்க     கட்டிடவியலையும்     (Dynamic Architecture) , கட்டிடவியலில் உறைந்துள்ள(Frozen) இசையையும் எவ்வாறு வெளிக் கொணர்வது என்பது பற்றிய 'லாஜிக்கை' (Logic)  அவரின் ஊக்குவிப்பில் நான் கண்டுபிடித்து வெளிப்படுத்தினேன். அதன் காரணமாக அவர் என் மேல் வெளிப்படுத்திய அன்பை விளக்க சொற்கள் கிடையாது.மேலேக் குறிப்பிட்ட 'சூத்திரங்களின் பன்முகப் பரிமாணம்'அடிப்படையிலான ஆய்வே இதற்கு வழி வகுத்தது.  அந்த 'லாஜிக்'கின் அடிப்படையிலேயே தற்போது ஒரு மத்திய அரசின் பொறியியல் கல்லூரியில் துவங்கியுள்ள ஆய்வுத் திட்டத்திற்கு(R & D Project) ஆலோசகராக(Project Consultant)  ஆய்வுப் பங்களிப்பு வழங்கி வருகிறேன்.

4 comments:

  1. ஐயா

    லோகநாதனின் பிதற்றல்களை சீரியசாக எடுத்துக் கொண்டது, ஏமாற்றம் கொண்ட வியப்பை அளிக்கிரது. சுமேரிய மொழி - உண்மையில் அது ஒரு மொழிக் குடும்பம் - சமஸ்கிதுதம் , பண்டைத் தமிழ், மற்ற திராவிட மொழிகள் ஆகியவற்றின் மூலம் என்பது எற்கப்படாத , ஏற்கப்பட முடியாத உளரல் , அதை திருப்பி திர்புப்பி 10000 தடவை எழுதினால் உண்மை ஆகாது. அடிப்படை மொழியியல் முறைகள் உங்களுக்கு சிறிது தெரிந்திருந்தாலும் , தன் கற்பனைகளையே , ஆங்கில எழுத்தில் கொடுக்கப்படும் சுமேரிய - எந்த ஆராய்சி லோகநாதனின் மூலம் என சொல்ல முடியாது - “எழுத்துகள்” என கொடுத்து அதை , தமிழ் என்பது மோசடி . தமிழர்கள் ஏன் இப்படி பைத்தியக்கார obsession களுக்கு அடிடைகின்றனர் என்பது புரியாதது ; அந்த obsession களை நீங்கள் ஒதுக்கினால் , உங்களுக்கும் பயன் ஏற்ப்படும்

    வன்பாக்கம் விஜயராகவன்

    ReplyDelete
    Replies
    1. லோகநாதனின் ஆராய்ச்சி முடிவுகளை மறுத்து எவரேனும் ஆய்வுக் கட்டுரைகள் எழுதி இருந்தால், தெரிவிக்கவும். நன்றியுடன் அவற்றை, திறந்த மனதுடன் படிப்பேன். எனது பதிவில் குறிப்பிட்டுள்ள '" யாழ் கால் சுருதிய ஈனே இயமிடினே." என்பது சுமெரு மொழியில் phonetic ஆக இருந்தாலும், எனது பதிவில், அது தொடர்பாக உள்ளவை, ஆய்வாளர்களின் கவனத்தை ஈர்க்கத் தகுந்ததாகும்

      Delete
  2. ஐயா

    திராவிட மொழிகள் , தமிழ் மொழிகள் பற்றி 200 ஆண்டு காலமாக நூற்றுக்கனக்கான ஆராய்ச்சியாளர்கள் எழுதியுள்ளனர். திராவிட மொழிகள் பற்றி இப்போது authoritative book

    Krishnamurti, Bhadriraju (2003), The Dravidian Languages, Cambridge University Press, ISBN 0-521-77111-0.

    இண்டெர்நெட்டில் ஆயிரக்கணக்கான பிதற்றல்கள் உள்ளன. ஆராய்ச்சியாளர்கள் அதை “முறியடித்து” தங்கள் நேரத்தை விரயம் செய்வதில்லை.

    இதைப்போல் தமிழ்நாட்டில் “லெமூரியா” “லெமூரியத்தமிழ்” என்ற பிதற்றல் பிரபலம் - அரசாளும் வர்கங்கள் கூட அதை நம்புகின்றனர் . தமிழகத்து வெளியில் ஆய்வு உலகத்தில் பைத்தியக்கார தனத்தை யாரும் “முறியடிப்பது” இல்லை., “மறுப்பதும்” இல்லை.

    ஈவேரா வின் போலி பகுத்தறிவு தமிழகத்தை அர்த்தமற்ற போலி விஞ்ஞானத்தில் கொண்டு சேர்த்தது.

    விஜயராகவன்

    ReplyDelete
    Replies
    1. ஐயா,

      தகவலுக்கு நன்றி. இசை ஆராய்ச்சி உள்ளிட்டு எதிலும் எனது நிலைப்பாட்டிற்கு எதிரான சான்றுகளை, திறந்த மனதுடன் பரீசிலித்து, எனது நிலைப்பாடுகளை நெறிப்படுத்தி வாழ்கிறேன்.தமிழ்நாட்டில் எதிரெதிர் நிலைப்பாடுகளில் உள்ளவர்கள், ஒருவரையொருவர் எதிரி போல் பாவித்து, உணர்வுபூர்வ வாதங்களில் ஈடுபடுவதை பலகீனப்படுத்தி, அறிவுபூர்வ விவாதங்களை, என்னால் இயன்ற அளவுக்கு, ஊக்கப்படுத்தி வருகிறேன்.

      செ.அ.வீரபாண்டியன்

      Delete