Sunday, December 27, 2015



ஆனைமுத்து வெளிப்படுத்திய அபூர்வ 'சிக்னல்' (2)


அன்றைய 'சென்னை மாகாணம்' ஆனது, தனிநாடு ஆக இருந்த வாய்ப்பு, எப்படி கெட்டது?


புலமையிலும், செல்வத்திலும், ஒழுக்கத்திலும் உயர்ந்திருந்த பிராமண‌ர்களையும், பிராமணரல்லாதோரையும் உள்ளடக்கிய நீதிக்கட்சியில், அவர்கள் எவரும் பொதுவாழ்வில், சாமான்ய மனிதர்கள் வாழ்வு நிலைக்கு இறங்காத  நிலையில், காந்தியே வியந்து மலைக்கும் அளவுக்கு, தனது செல்வ வாழ்வு நிலையில் இருந்து, தமது குடும்பத்தினருடன் கீழிறங்கி, தமிழ்நாட்டில் பொதுவாழ்வில், தனித்துவமாக பயணித்தவர் ஈ.வெ.ரா.  

பிராமணர்களும் அமைச்சர்களாக‌ இருந்து ஆட்சி செய்த‌,  நீதிக்கட்சியின் தலைவர்கள் அனைவரும், அதனை அங்கீகரித்தே, சிறையிலிருந்த ஈ.வெ.ராவை, 'ஏகமனதாக', தமிழ்நாட்டை காப்பாற்ற, நீதிக்கட்சித்தலைவராக்கினார்கள்.

இது தொடர்பாக; 'சிந்தனையாளன்' இதழில் வெளிவந்த கீழ்வரும் பகுதி கவனிக்கத்தக்கதாகும்.

"ஒரு கட்டத்தில் நெல்லூர் மாநாட்டில் பார்ப்பனரையும் பார்ப்பனரல்லாதார் ஆட்சியில் சேர்க்கலாமா என்பது பற்றி யோசிக்க தலைப்பட்டனர். சுமார் 10 ஆண்டு காலம் அந்த போராட்டம் நீடித்தது. இன்னொரு கட்டத்தில் கோவை மாநாட்டில் 1927 சூலையில் ஜஸ்டிஸ் கட்சியார் காங்கிரசிலேயே சேர்ந்து விடலாம் என்று தீர்மானமே போட்டனர். ஈ.வெ.ரா அதை ஆதரித்து பேசினார். இந்த இரண்டுமே திராவிடர் கட்சி சீரழியக் காரணம் ஆகி விடும் என்று ஒவ்வொரு கட்டத்திலும் இளைஞர்கள் கருதினர்."
'சிந்தனையாளன்' (மார்ச் 1988 பக்கம்13)

நெல்லூர் மாநாடு நடந்த வருடம் 1929. கோவை மாநாடு நடந்த வருடம் 1927. நெல்லூர் மாநாட்டிற்குப்பின் கோவை மாநாடு நடந்ததாக பொருள் கொள்ளும் வகையில் மேற்குறிப்பிட்ட கட்டுரையில் வெளிப்பட்ட தவறு பெரிதல்ல. ஆனால், அம்மாநாடுகளில் ஈ.வெ.ராவின் நிலைப்பாடுகளை குறை சொல்லி, 'இந்த இரண்டுமே திராவிடர் கட்சி சீரழியக் காரணம் ஆகிவிடும்' என்று தெரிவித்த கருத்து, ஆய்விற்குரியதாகும். 

இது தொடர்பாக, 'குடி அரசு' 3.7.1927; 10.7.1927; இதழ்களில் வெளிவந்துள்ளவையானது, 'தோழர் பெரியாரைக் கொச்சைப்படுத்திய தோழர் ஆனைமுத்துவுக்கு மறுப்பு' என்ற தலைப்பில், திருச்சி 'பெரியார் மையம்' சிறுநூல் (மார்ச் 1990) வெளிவந்தது.

மேலே 'சிந்தனையாளன்' கட்டுரை விவாதித்துள்ள காலக்கட்டத்தில், த‌மிழ்நாட்டில் 'திராவிடர் கட்சி' இருந்ததா?  1944 இல் 'திராவிடர் கழகம்' தொடங்கும் முன், அன்றைய சென்னை மாகாணத்தில், 'திராவிட மொழிகள்' பேசிய மக்களை உள்ளடக்கி தான்,  'திராவிட' என்ற சொல் பயன்படுத்தப்பட்டதா? 'ஒட்டு மொத்த பிராமணர் எதிர்ப்பை' உள்ளடக்கிய, 'திராவிடர்' என்ற சொல், 1944க்கு பின் தான், அரசியல் புலத்தில் இடம் பெற்றதா? அந்த 1944 திசை திருப்பலானது, தனிநாடாக 'திராவிட நாடு' பிரிய இருந்த வாய்ப்பை கெடுத்ததா? என்ற ஆய்வுக்கு உதவும் தகவல்களை, அடுத்து பார்ப்போம்.

1925இல் காங்கிரசை விட்டு வெளியேறிய ஈ.வெ.ரா, 1926 மற்றும் 1930 பொது தேர்தல்களில் நீதிக்கட்சியை ஆதரித்தவர்,1938இல் தான், அக்கட்சிக்குள் இடம் பெற்ற தலைவரானார்.  

நீதிக்கட்சி துவக்கப்பட்ட வருடம் 1916. அக்கட்சியானது,1920இல் முதலாவதாக நடந்த பொது தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. அதை தொடர்ந்து, அன்றைய‌ சென்னை  மாகாணத்தில் 17 வருடங்கள் ஆட்சி நடத்திய 5 அமைச்சரவைகளில், நான்கு நீதிக்கட்சி அமைச்சரவையாக இருந்தது. 1937 தேர்தலில் நீதிக்கட்சி படு தோல்வி அடைந்தது. 1938 இந்தி எதிர்ப்பு போராட்டத்தில், ஈ.வெ.ராவின் தலைமையில் நடந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தை, நீதிக்கட்சி ஆதரித்தது. ஈ.வெ.ரா, ஏகமன‌தாக, நீதிக்கட்சியின் தலைவராக,  29.12. 1938இல் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1925இல் காங்கிரசை விட்டு வெளியேறிய ஈ.வெ.ரா,1926 மற்றும் 1930 பொது தேர்தல்களில் நீதிக்கட்சியை ஆதரித்தார்.

அவ்வாறு நிதிக்கட்சியை ஆதரித்து,1938இல் அதன் தலைவரான பின்,17.12.1939 இல் நடந்த நீதிக்கட்சி மாநாட்டில், பிரிட்டனில் உள்ள அரசு செயலரின் நேரடிக் கட்டுப்பாட்டில், 'தனி திராவிட நாடு' கோரி, தீர்மானம் நிறைவேறியது; 1939இல் அந்த கோரிக்கைக்காக மட்டுமே ஒரு மாநாடு நடத்தினார்.

அதன்பின் 1942இல், பிரிட்டனிலிருந்து வருகை புரிந்த கிரிப்ஸ் குழுவிடம் (Cripps Mission), அக்கோரிக்கை முன்வைக்கப்பட்டது. சட்டசபை தீர்மானம் மூலமோ, அல்லது பொது வாக்கெடுப்பு மூலமோ, அத்தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்படலாம் என்று வெள்ளையர் அரசின் பிரதிநிதி ஆலோசனை வழங்கினார். 

இம்முயற்சிகளில் முன்னுக்கு நின்ற, நீதிக்கட்சித்தலைவர்கள், காங்கிரஸ் ஆதரவுடன், 1940 மற்றும் 1942இல் நீதிக்கட்சி  ஆட்சிக்கு வர முயன்றதானது, ஈ.வெ.ராவின் எதிர்ப்பால், தோல்வியடைந்தது. பின் 1944இல் தேர்தல் அரசியலில் இருந்து ஒதுக்கி, மேற்குறிப்பிட்ட நீதிக்கட்சித்தலைவர்களையும், நீதிக்கட்சியில் இருந்த பிராமணர்களையும் புண்படுத்தி வெளியேற்றி, 'திராவிடர் கழகமாக' ஈ.வெ.ரா மாற்றியதானது, அன்றைய சென்னை மாகாணம், 'திராவிட மொழிகளை' பேசிய மக்கள், அடிப்படையில் , 'தனி திராவிட நாடாக' மாற இருந்த வாய்ப்பினை, அதனால், எந்த அளவுக்கு கெடுத்த‌து? மேற்கத்திய மொழியில் இருந்த 'ரேஸ்' (Race) என்ற சொல்லின் பொருளில், தமிழில் வேறு பொருளில் வழங்கி வந்த 'இனம்' சொல்லாக, 'பொருள் திரிபு' செய்து, ஒட்டு மொத்த பிராமணர் எதிர்ப்பை முன்னிறுத்தியன் மூலமாக,  (http://tamilsdirection.blogspot.in/2015/06/depoliticize-4.html ), அந்த 'திராவிட நாடு' கோரிக்கைக்கான, சமூக ஆதரவு ஆற்றல்கள் எந்த அளவுக்கு குறைந்தன? என்பவை ஆய்விற்குரியனவாகும்.

பிரிட்டன், அமெரிக்கா, ரஷ்யா, ஜெர்மனி உள்ளிட்ட நாடுகளின் உளவு அமைப்புகள், இந்திய விடுதலைக்கு முன், 'முழு வீச்சில்' செயல்பட்டது தொடர்பான தகவல்கள் ங்கில ஊடகங்களில் கசியத் தொடங்கியுள்ளதை, ஏற்கனவே பார்த்தோம். நீதிக்கட்சியில் இருந்த பிராமண, பிராமணரல்லாத தலைவர்களின் முயற்சியில் வளர்ந்து, பிரிட்டன் அரசின் பிரதிநிதி, 'சட்டசபை தீர்மானம் மூலம் அல்லது பொது கருத்து வாக்கெடுப்பு மூலம் தனிநாடாக ஆலோசனை' கூறியிருந்த நிலையில், அந்த திசையில் பயணிக்காமல், திசை திரும்பி, 'திராவிட நாடு பிரிவினை' கானல் நீரானதில், அந்த உளவு அமைப்புகளின் பங்கு என்ன? என்ற கேள்விக்கு, அந்த அமைப்புகள் வசம் உள்ள கோப்புகள், 'இரகசிய நீக்கத்திற்கு' (Declassify) உள்ளாகும்போது, விடைகள் தெரியும்.

ஈ.வெ.ரா யாருடைய செல்வாக்கில், 'திசை திரும்பி', தனிநாடு கோரிக்கைக்கு ஆக்கபூர்வமாக பங்களிப்பு வழங்கிய நீதிக்கட்சித் தலைவர்களையும், ஒட்டுமொத்த பிராமணர்களையும் எதிரியாகக் கருதி, ஒதுக்கி, 'திராவிடர் கழகம்' தொடங்கி, சுய‌சம்பாத்தியம் அற்ற, நீதிக்கட்சித்தலைவர்கள் அளவுக்கு புலமையிலும், ஒழுக்கத்திலும் ஒப்பிடமுடியாதவர்களை, தமிழ்நாட்டில் பொதுவாழ்வில் வலிமையாக்கினார்? அதனால் தமிழ்நாட்டின் புலமைக்கும், நேர்மையான முறையில் சம்பாதிக்கும் செல்வத்திற்கும், ஒழுக்கத்திற்கும், மனித மாண்புகளுக்கும், ஏற்படப்போகும் ஆபத்துகளை, 'தீர்க்கதரிசி' போல, 1948 தூத்துக்குடி மாநாடு உரையில் வெளிப்படுத்திய ஈ.வெ.ரா;

 அதே ஆபத்து சூழ்ச்சிவலையில் மீண்டும் விழாதிருந்திருந்தால்;

தமிழ்நாட்டில் 'ஊழல் கோரப்பசி'க்கு இரையாகி;
தமிழ்நாட்டின் வெள்ள பாதிப்புகளும்; 
கிரானைட், தாது மணல், ஆற்றுமணல், சந்தன மரக்காடுகள் உள்ளிட்ட இயற்கை வளங்கள் சூறையாடப்படுவதும்;
தமிழ்வழிக்கல்வி ( எனவே தமிழ்) சமூக அவசர சிகிச்சைப் பிரிவில் இருப்பதும் நடந்திருக்குமா?

மேலும், ஈ.வெ.ராவின் மூளை செயல்பாட்டில், மேற்குறிப்பிட்ட 'திசை திருப்பம்' ஏற்படுத்தியதன் தொகுவிளைவாக, அவரின் இயக்கம் மூலம் 'சமூக உளவியலில்'(Social Psychology)  பாதகமான திசை திருப்பம்  ஏற்பட்டதா? 

அந்த திசை திருப்பல் மூலம் அரங்கேறிய, 'திராவிட, திராவிடர், தமிழர்' அடையாள குழப்பங்களால், தமிழர்களிடம் ஏற்பட்ட‌  அடையாளச் சிதைவும், அரசியல் நீக்கமும், (http://tamilsdirection.blogspot.in/2015/06/normal-0-false-false-false-en-us-x-none_7.html ) அதன் தொடர்விளைவாக,  தமிழர்களின் மூளை செயல்பாட்டின், 'தேவைகளில்' (Needs) மற்றும் ஈடுபாடுகளில்' (Interests) என்னென்ன மாற்றங்கள் ஏற்பட்டன? அம்மாற்றங்கள் காரணமாக, குடும்பம், நட்பு உள்ளிட்ட மனித உறவுகளில் என்னென்ன சீர்குலைவுகள் ஏற்பட்டன? பள்ளி, கல்லூரி மாணவர்களிடையே,  தற்கொலை, கொலை, வன்முறை, திருட்டு போன்றவையெல்லாம் 'அதிவேகமாக' அதிகரித்துள்ளதும், கட்சி, கொள்கைகளிடமிருந்து அவர்கள் அந்நியமாகி வருவதும், அதன் தொடர்விளைவுகளா? அதனால் தமிழுக்கும், தமிழருக்கும், தமிழ்நாட்டிற்கும் இன்றுள்ள சீரழிவுகள் ஏற்பட்டதா? போன்ற கேள்விகளுக்கான விடைகளே, 'மீட்சிக்கான' வழிகளை காட்டும்.

(வளரும்)

No comments:

Post a Comment