Thursday, September 7, 2017

    1944க்கு முந்தைய 'குடி அரசுதிசையில் 'துக்ளக்' ?


"ஆர்.எஸ்.எஸ் பிரமுகரும், பிரதமர் உள்பட பா.ஜ.க தலைவர்களிடம் செல்வாக்கு உள்ளவருமான ஆடிட்டர் குருமூர்த்தி வீட்டில், அ.தி.மு.கவின் இரு தரப்பினரும் ஓடோடிச் சென்று ஆலோசனை நடத்தி, பதவி - அதிகாரங்களை உறுதி செய்து கொண்டதில், இணைப்புக்கு முகமூடியாக இருந்த செயல் அம்பலப்பட்டு விட்டது." என்று மு.க.ஸ்டாலின்  கூறியதாக 'முரசொலி' ( 21.8.2017) வெளியிட்டுள்ளது.

மேலே குறிப்பிட்டுள்ளது தொடர்பான, 'துக்ளக்' ஆசிரியர் குருமூர்த்தியின் விளக்கமானது, துக்ளக் (13.9.2017) இதழில் வெளிவந்துள்ளது.

சரியோ, தவறோ, தாம் எடுத்துள்ள நிலைப்பாட்டில் உறுதியாக பயணிப்பவர்கள் யாராக இருந்தாலும், பாராட்டுதலுக்குரியவர்களே ஆவர்.

சாதகமான காற்று எந்தப் பக்கம் (சசிகலா முதல்வராகி விடுவார் என்று நினைத்து) வீசுகிறது? என்று கவனித்து, அந்த திசையில் பயணித்து:

பின் காற்று திசை மாறியதும் (சசிகலா சிறை சென்றதும்) மாறி, அடுத்து காற்று வீசும் திசை நோக்கி பயணிப்பவர்களில், தமிழ்நாட்டில் விதி விலக்காக பயணித்து வருபவர் சுப்பிரமணிய சுவாமி  மட்டுமே.

அது போலவே, ஜெயலலிதா மரணம் அறிவிக்கப்பட்ட நாள் முதல் இன்று வரை, சசிகலா ஒதுங்க வேண்டும், மற்ற அணிகள் ஒன்று சேர வேண்டும் என்ற நிலைப்பாட்டில், ஊசலாட்டமின்றி உறுதியாக பயணித்து வருபவர்கள் குருமூர்த்தியும், துக்ளக்கும் ஆவார்கள்..

ஸ்டாலின் வெளிப்படுத்திய மேலே குறிப்பிட்ட குற்றச்சாட்டிற்கு தகுந்த விளக்கம் கொடுத்துள்ள  குருமூர்த்தி;

த‌ன்னைத் தேடி வந்து ஆலோசனை பெற்றவர்கள் வரிசையில் ஸ்டாலின், டி.டி.வி.தினகரன் உள்ளிட்டோர் இருப்பதையும் வெளிப்படுத்தியுள்ளார். துக்ளக்கின் ஆசிரியராக சோ இருந்த காலத்திலும், தி.மு.க தலைவர் கலைஞர் கருணாநிதி உள்ளிட்டு, சோவால் எதிர்க்கப்பட்டவர்களும், சோவை சந்தித்து ஆலோசனைகள் பெற்றதை, சோவும் வெளிப்படுத்தியிருக்கிறார்.

'துக்ளக்' ஆசிரியர் குருமூர்த்தி தனது விளக்கத்தில், "பா.ஜ.கவுக்கும் எனக்கும் பொருளாதாரக் கொள்கைகளில் ஏராளமான கருத்து வித்தியாசங்கள் உண்டு என்பது உலகமறிந்த விஷ்யம். நான் பலமுறை பா.ஜ.க அரசின் கொள்கைகளை எதிர்த்திருக்கிறேன். ஏன் எதிர்த்துப் போராடியும் இருக்கிறேன்" என்பதையும் அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

பொது அரங்கில் அற்பர்கள் வெளிப்படுத்தும் அபாண்டமான குற்றச்சாட்டுகளை பொருட்படுத்தாமல், ஆனால் அதிகாரத்தில், முக்கிய பொறுப்பில் உள்ளவர்கள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளை மறுத்தும், அவர்களை மன்னிப்பு கேட்க வைத்தும் பயணித்து வரும் குருமூத்தியைப் போல, நிகழ்காலத்தில் வேறு எவரும் செயல்பூர்வமாக பயணித்து வருகிறார்களா? இல்லையென்றே நான் கருதுகிறேன். அது தவறு என்று நிரூபிக்கும் சான்றுகளை வரவேற்கிறேன்.

மேலே குறிப்பிட்ட 'துக்ளக்' (13.9.2017) இதழில், 'சாமியார்களின் பின்னால் அலையும் மூடர்கள்' என்ற தலைப்பில் வெளிவந்துள்ள கட்டுரையை படித்த போது, 1944க்கு முந்தைய, 'பெரியார்' ஈ.வெ.ராவின் ‘குடிஅரசு’  இதழை படித்த உணர்வு எனக்கு ஏற்பட்டது.

1944க்கு முன், 'பெரியார்' ஈ.வெ.ரா  தம் மீது, முத்துச்சாமி வல்லத்தரசு, ஜீவானந்தம் உள்ளிட்டோர் வெளிப்படுத்திய குற்றச்சாட்டுகளை அப்படியே வெளியிட்டு, 'குடிஅரசு' இதழில் எழுதிய விளக்கங்களை நான் படித்திருகிறேன். அது போலவே, 'முரசொலி' இதழில் ஸ்டாலின் வெளிப்படுத்திய குற்றச்சாட்டை, 'துக்ளக்' இதழில் வெளியிட்டு, குருமூத்தி எழுதிய விளக்கத்தை படித்த போது, அதுவும் என் ஞாபகத்திற்கு வந்தது.

'பெரியார்' ஈ.வெ.ராவிற்கு இருந்த புலமை வரைஎல்லைகள் (intellectual limitations) பற்றிய புரிதலின்றி அவர் பயணித்ததாலேயே, 'இனம்' மற்றும் 'சாதி' தொடர்பான காலனிய சூழ்ச்சியில், அவர் சிக்கி (தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது; 'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா?; 
http://tamilsdirection.blogspot.com/2016/01/ );

தமிழ் மொழியையும், இலக்கியங்களையும், புராணங்களையும்  தமிழர்க்கு கேடெனக் கருதி, பயணித்து 
(http://tamilsdirection.blogspot.com/2013/11/normal-0-false-false-false-en-us-x-none.html) ;

இன்றைய தமிழ்நாட்டின் சீரழிவிற்கு, எதிர்த்திசையில் இருந்து ராஜாஜியும் துணை செய்ய, காரணமானார், என்பதை எனது பதிவுகளில் விளக்கியுள்ளேன்.

அந்த போக்கில், 'பெரியார்' கவசத்தில், ஆங்கில அறிவை வளர்த்துக் கொள்ளும் ஆர்வமின்றி, தமிழிலும் ஆழ்ந்த புலமையின்றி, உணர்ச்சிபூர்வ போக்கில் அறிவுக் குருடர்களாகவும் அல்லது பொதுவாழ்வு வியாபாரிகளாகவும் பயணிக்கும், 'குருட்டுப் பகுத்தறிவாளர்கள்' வளர்ந்ததே, தமிழின், தமிழர்களின் தமிழ்நாட்டின் சீரழிவுக்கு முக்கிய காரணமாகும்.

'பெரியார்' ஈ.வெ.ராவிற்கு இருந்த வரைஎல்லைகள் இல்லாத குருமூர்த்தியை ஆசிரியராக கொண்ட துக்ளக் இதழானது, தமிழ்நாட்டை 'பெரியார்' ஈ.வெ.ராவும், ராஜாஜியும் எதிரெதிர் திசைகளில், சுயலாப நோக்கின்றி பயணித்து, ஆனால் தமிழ்நாட்டை சீர‌ழித்த போக்கிலிருந்து மீட்கும் வரலாற்றுப் பணியை ஆற்றத் தொடங்கியுள்ளது, என்பது எனது கருத்தாகும்; உணர்ச்சிபூர்வ இரைச்சலை தவிர்த்து, அறிவுபூர்வமான விவாதங்களை முன்னெடுப்பவர்கள் மூலமே, அந்த பாதிப்புகளிலிருந்து தமிழ்நாடு மீளும், என்ற அடிப்படையில்; 'பெரியார்' இயக்கத்தில் இருந்த காலத்தில்,  துக்ளக் இதழை கடுமையாக எதிர்த்து, எனது ஆய்வுகளின் ஊடே, 'பெரியார்' ஈ.வெ.ரா கொள்கைகளிலுள்ள குறைபாடுகளை கண்டு, அகற்ற முயற்சித்து வருபவன் நான்,  என்பதையும் தெரிவித்துக் கொண்டு.

எனது பதிவுகளில் உள்ள கருத்துக்களை, அறிவுபூர்வமாக எதிர்ப்பதை நான் வரவேற்று பயணிக்கிறேன். அது போலவே, துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தியின் கருத்துக்களை அறிவுபூர்வமாக எதிர்த்து, ஏதேனும் வெளிவந்தால், அதனை எனது பார்வைக்கு அனுப்பி வைப்பவர்களுக்கு நன்றி தெரிவித்து, அவற்றை நான் எனது அறிவுபூர்வ ஆய்விற்கு உட்படுத்தவும் ஆர்வமாயுள்ளேன். 

உணர்ச்சிபூர்வ இரைச்சலை தவிர்த்து, அறிவுபூர்வமாக பயணிப்பவர்கள் எல்லாம், அறிவுபூர்வ விவாதத்தின் ஊடே, வாய்ப்புள்ள பிரச்சினைகளில் ஒன்று சேர்ந்து, தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும், மீட்க முடியும் என்பதும், எனது கணிப்பாகும்.

No comments:

Post a Comment