Saturday, September 30, 2017

      மார்க்சியமும் பார்ப்பனீயமும்(1)


நிலபிரபுத்துவ எதிர்ப்பு என்பதானது, நிலபிரபுக்களை எதிர்ப்பதையும்;

முதலாளித்துவ எதிர்ப்பு என்பதானது, முதலாளிகளை எதிர்ப்பதையும்;

ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதானது, ஏகாதிபத்தியர்களை எதிர்ப்பதையும்;
உள்ளடக்கியதாகும்.

'பார்ப்பனீயத்தை எதிர்க்கிறோம்; ஆனால் பார்ப்பனர்களை எதிர்க்கவில்லை' என்ற வாதத்தை, முதலில், தமிழ்நாட்டிற்கு அறிமுகப்படுத்தியது அண்ணாவாகும்; நானறிந்த வரையில்.

'பெரியார் குறுகிய இனவாத அடிப்படையில் பிராமணர்களை எதிர்க்கிறார். நாங்கள் 'திராவிடர்' என்ற இனரீதியிலான சொல்லை விடுத்து, புவியியல் அடிப்படையிலான 'திராவிட' என்ற சொல்லின் அடிப்படையில் 'திராவிட முன்னேற்ற கழகம்' என்று செயல்படுகிறோம்; எனவே பிராமணர்களை எதிர்க்காமல், பிராமணீயத்தை எதிர்க்கிறோம்' என்ற வகையில் அண்ணா விளக்கம் கொடுத்து, பிராமணர்களையும் கட்சியில் சேர்த்து, தி.மு.க தொடங்கினார்.

அந்த பின்னணியில், தி.மு.கவிலிருந்து பிரிந்து, எம்.ஜி.ஆர் அ.தி.மு.க தொடங்கியபோது, எம்.ஜி.ஆரை 'மலையாளி' என்ற வட்டத்தில் நிறுத்தி எதிர்த்ததும்;

பின் அக்கட்சியின் தலைவரான ஜெயலலிதாவை, 'பாப்பாத்தி' என்ற வட்டத்தில் நிறுத்தி எதிர்த்ததும், மக்கள் மன்றத்தில் எடுபடவில்லை. ‘

ஜெயலலிதாவின் மறைவிற்குப் பின், அக்கட்சியை கைப்பற்றும் போக்கில், சசிகலா சார்பில் கீழ்வரும் கருத்தும் வெளியானது.

"இது திராவிடர் கட்சி, ஆரியர்கள் கட்சி அல்ல." என்று சசிகலாவின் தம்பி திவாகரன் கருத்து தெரிவித்து உள்ளார். (‘துணிச்சலுடன் அறிவுபூர்வமாக விவாதிக்கும் நோக்கில்; சசிகலாவின் தம்பி திவாகரனும், கணவர் நடராஜனும், பொது அரங்கு விவாதத்திற்கு முன் வந்துள்ளதை வரவேற்கிறேன்’; http://tamilsdirection.blogspot.sg/2017/01/blog-post_17.html )

அண்ணா பெயரில் உள்ள கட்சியில், அண்ணாவால் கைவிடப்பட்ட 'திராவிடர்' புதிதாக சசிகலா குடும்ப அரசியல் போக்கில் நுழைந்துள்ளதானது பொது நலனுக்கா? குடும்ப அரசியல் சுயநலனுக்கா? என்ற கேள்வியின் விடையானது, 'திராவிட' அரசியலுக்கு முடிவு கட்டினாலும் வியப்பில்லை.

ஒபிஎஸ் - ஈபிஎஸ் என்ற கூட்டு தலைமையானது, திராவிட அரசியலில் புதிதாக அரங்கேறியுள்ளது, அது நடைமுறையில் வெற்றி பெற்றால், புதிய ஆக்கபூர்வமான திசையில், 'திராவிட' அரசியலானது முன்னேறினாலும் வியப்பில்லை.

அவ்வாறு 'பார்ப்பனீயத்தை எதிர்க்கிறோம்; ஆனால் பார்ப்பனர்களை எதிர்க்கவில்லை' என்ற அண்ணாவின் வாதமானது, 'திராவிட' அரசியலில் மேலே குறிப்பிட்ட குழப்பத்தில் சிக்கியிருந்தாலும்;

கம்யூனிஸ்ட் கட்சிகளில் அந்த வாதமானது, முன்வைக்கப்படுகிறது.

நிலபிரபுத்துவ எதிர்ப்பு என்பதானது, நிலபிரபுக்களை எதிர்ப்பதையும்;
முதலாளித்துவ எதிர்ப்பு என்பதானது, முதலாளிகளை எதிர்ப்பதையும்;
ஏகாதிபத்திய எதிர்ப்பு என்பதானது, ஏகாதிபத்தியர்களை எதிர்ப்பதையும்;
உள்ளடக்கியதாகும்.

'பார்ப்பனீயத்தை எதிர்க்கிறோம்; ஆனால் பார்ப்பனர்களை எதிர்க்கவில்லை' என்ற வாதத்தினை மார்க்சிய அடிப்படையில் முன்வைக்க முடியுமா?

மார்க்சிய ஆதரவாளர்கள் 'நிலபிரபுத்துவம், முதலாளித்துவம், ஏகாதிபத்தியம்' போன்ற சொற்களை பயன்படுத்துவதற்கான 'மார்க்சிய நியாயம்' எனக்கு புரிகிறது. ஆனால் அவர்கள் 'பார்ப்பனீயம்' என்ற சொல்லை பயன்படுத்தும் போது, அதற்கான மார்க்சிய நியாயமானது எனக்கு விளங்கவில்லை. அதற்கான விளக்கத்தை நான் பெறும் நோக்கில், இந்த பதிவை எழுதினேன்.

மார்க்சிய அடிப்படையில், சமூகம் தொடர்பான ஒரு சொல்லை பயன்படுத்தும்போது, அச்சொல்லானது;

பொருள் உற்பத்திமுறை (Mode of ProductIon), உற்பத்தி விசைகள்(Production Forces), உற்பத்தி உறவுகள் (Production relations), அவற்றிற்கிடையிலான முரண்பாடுகள் (Contradictions), உபரி உற்பத்தி (Surplus Product), உபரி உற்பத்தி அபகரிப்பு (Appropriation of Surplus Product), உபரி மதிப்பு (Surplus Value), அடித்தளம் (Base), மேற்கட்டுமானம் (Superstructure);

போன்றவை தொடர்பான மார்க்சிய குறிப்பாயத்தில் (Marxian Paradigm), அந்த சொல் எங்கே, எவ்வாறு இடம் பெற்றுள்ளது என்ற தெளிவான புரிதல் இருக்க வேண்டும்.

மார்க்ஸ், ஏங்கல்ஸ் போன்ற மார்க்சிய பிதாக்களின் படைப்புகளிலிருந்தோ, அல்லது அவர்களுக்குப் பிறகு, மார்க்சியத்தை வளர்த்துள்ளவர்களின் படைப்புகளிலிருந்தோ, அதற்கான நியாயங்கள் இருப்பதையும் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இந்தியாவைப் பற்றி எழுதியுள்ள கட்டுரைகளில், காரல் மார்க்ஸ் 'பிராமணர்களை எதிர்க்காத பிராமணியம்' பற்றி ஏதேனும் எழுதியுள்ளதாக, எனது பார்வையில் படவில்லை.

மார்க்சியத்தில் பொருள் உற்பத்தி முறை என்ற கருத்தாக்கமானது, 'ஒருசீரான பொருள் உற்பத்தி முறை' (Homogeneous Mode of Production) என்ற அடிப்படையில் இருப்பதால், அதனை ஒரு சீரற்ற பொருள் உற்பத்தி முறை (Heterogenous Mode of Production) என்ற மாற்றத்திற்கு உட்படுத்தியே, இந்திய சமூக அமைப்பை ஆராய முடியும்;

என்ற வாதத்தினை, 'பெரியார்' இயக்கத்தில் இருந்த காலத்தில், நான் முன் வைத்தேன். மார்க்சியவாதிகள் எவரும் கண்டு கொள்ளவில்லை. பின்னர் இசை ஆராய்ச்சியில் திசை திரும்பிய பின்னும், ஆர்வமுள்ளவர்கள் முனைவர் பட்ட ஆய்வில் ஈடுபட தூண்டும் நோக்கில், அது தொடர்பான பதிவையும் வெளியிட்டேன். (http://tamilsdirection.blogspot.sg/2013/12/normal-0-false-false-false-en-us-x-none.html )

இன்றுள்ள சாதி அமைப்பானது காலனியத்தின் சூழ்ச்சியில் அறிமுகமானது தொடர்பான சான்றுகளையும் பதிவு செய்துள்ளேன். (‘ தமிழர்களில் 'தற்குறிகளை' வளர்த்தது, 'பார்ப்பன சூழ்ச்சியா'? காலனி சூழ்ச்சியா?’ ;  http://tamilsdirection.blogspot.sg/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html ) எனவே 'பார்ப்பான்', ' பிராமணன்' என்ற அடையாளத்தில் இடம் பெற்றுள்ள சாதிகள் எல்லாம், காலனிய ஆட்சியின் விளைவுகளாகும்.

தமிழில் 'பிராமணர்' என்ற சொல்லும், காலனிய நுழைவுக்கு முன் இருந்ததற்கு சான்றுகள், எனக்கு கிடைக்கவில்லை. சங்க இலக்கியங்களில் 'பிராமணன்' என்ற சொல் இல்லை;

'பார்ப்பார்', 'பார்ப்பான்','ஐயர்', ‘ஆரியர்’, என்ற சொற்கள் இருக்கின்றன.

இவை தவிர, 'அந்தணர்',  என்ற சொல்லும் இருக்கிறது. 'பார்ப்பான்', 'பார்ப்பார்' என்ற சொற்களும், மரியாதைக்குரியவர்கள் வரிசையில் இடம் பெற்றிருந்தது,

பிராமணர்களை இழிவுபடுத்தும் சொல்லாக, 'பார்ப்பான்' என்ற சொல்லை, 'பெரியார்' கொள்கையாளர்கள் பயன்படுத்துவதும், அச்சொல்லை இழிவாக கருதி, பிராமணர்கள் அச்சொல்லை தவிர்ப்பதும்ஒரே காலனிய சூழ்ச்சியில் இரு சாராரும், சிக்கியதன் விளைவுகளா? என்பதும் ஆய்விற்குரியதாகும். ( ‘ 'திராவிடர் கழகமும்', 'பிராமணர் சங்கமும்'; ஒரே காலனிய சூழ்ச்சியில் சிக்கிய, நாணயத்தின் இரு பக்கங்களா?’; http://tamilsdirection.blogspot.sg/2016/06/normal-0-false-false-false-en-in-x-none_8.html )

எனவே 'பார்ப்பனீயம்', 'பிராமணீயம்' போன்ற சொற்களை மார்க்சிய ஆதரவாளர்கள், இன்று அந்த சொற்களின் அடையாளத்தின் கீழ் உள்ள சாதிகளை குறிப்பதாக கருதி, பயன்படுத்துவது சரியா? மார்க்சிய குறிப்பாயத்தில் (Marxian Paradigm) அந்த சொற்களின் பயன்பாட்டிற்கு இடம் உண்டா? என்ற விவாதம் அரங்கேற வேண்டிய நேரம் வந்துவிட்டதாக கருதுகிறேன்அந்த விவாதத்தினை தவிர்த்து, 'பார்ப்பனீயம்' என்ற சொல்லை, மார்க்சிஸ்டுகள் பயன்படுத்தினால்;


அது 'பெரியாரிஸ்டுகளின்' தொடர்பால் தூண்டுவிக்கப்பட்ட (Induction), மார்க்சிய நியாயமற்ற‌ 'பிராமண எதிர்ப்பு செனோபோபியா' மன நோயாகாதா? (http://tamilsdirection.blogspot.sg/2017/09/blog-post_20.html )

No comments:

Post a Comment