Monday, September 4, 2017


'நீட்' எதிர்ப்பும், இந்தி எதிர்ப்பும்;


 தமிழ்நாட்டில் அறிவுபூர்வ விவாதத்திற்கு எதிராக பயணிப்பவர்கள் யார்?


காவிரிப்பிரச்சினை, முல்லைப் பெரியாறு பிரச்சினை போன்ற இன்னும் பல பிரச்சினைகள் எல்லாம் தமிழ்நாட்டிற்கான பிரச்சினைகளாகும். ஆனால் 'நீட் தேர்வு' எதிர்ப்பும், இந்தி எதிர்ப்பும் இந்திய அளவில் அனைத்து மாநிலங்களையும் உள்ளடக்கிய பிரச்சினையாகும்.
அதில் தீர்வு காணும் முயற்சிகளுக்கு இரண்டு வழிகள் தான் உள்ளன.

ஒன்று இந்தியாவிலிருந்து தமிழ்நாட்டை பிரிக்கும் கோரிக்கையை துணிச்சலுடனும், அறிவு நேர்மையுடனும் முன்னெடுப்பது.

தம்மையும், தமது குடும்பப்பிள்ளைகள் ஒழுங்காக படித்தாலும், படிக்காவிட்டாலும், நன்கு செட்டில் செய்து கொண்டு;

மத்தியில் ஆளுங்கட்சியுடன் நெருக்கமாக இருந்து பலன்கள் அனுபவித்துக் கொண்டு, உணர்ச்சிகர பேச்சுக்கள், எழுத்துக்கள் மூலம், குப்பன், சுப்பன் வீட்டுப் பிள்ளைகளை உசுப்பி போராட்டங்கள், தீக்குளித்தல் மூலம் அவர்களின் வாழ்வை தொலைக்கச் செய்து, அம்பலமாகாமல், தனித்தமிழ்நாடு என்று முணகிய போக்குகள் எல்லாம், இன்றைய மாணவர்களிடமும், இளைஞர்களிடமும் எடுபடாது.

இன்றைய சர்வதேச அரசியல் பொருளாதார சூழலில், சர்வதேச ஆதிக்க சக்திகளின் பகடைக்காய்களாகவே, தனிநாடு போராட்டங்கள் இரையாகி வருவதையும் நான் எச்சரித்துள்ளேன்.
(http://tamilsdirection.blogspot.com/2013/11/normal-0-false-false-false-en-us-x-none_26.html )

‘மொழிப்பிரச்சினையில், இந்திய அரசியல் நிர்ணய சபையிலேயே, டி.டி.கிருஷ்ணமாச்சாரி விடுத்த அபாய எச்சரிக்கையையும் சுட்டிக்காட்டியுள்ளேன்.(‘Is the Language Policy derailing the nation building process in India?’;
http://tamilsdirection.blogspot.com/2017/06/is-language-policy-derailing-nation.html )

மொழிப் பிரச்சினை என்பதானது, இந்தியாவின் ஒற்றுமையையும், உறுதிப்பாட்டையும் காப்பதில் அக்கறையுள்ளவர்கள் அனைவரும், திறந்த மனதுடனும், அறிவு நேர்மையுடனும், ஆக்கபூர்வமாக ஈடுபட்டு தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினையாகும். அதில் காரியம் சாதிக்கும் நோக்கில் தான், இந்தித் திணிப்பை எதிர்த்து செயல்படுவதே புத்திசாலித் தனமாகும்.
அதற்கு மாறாக, 'இந்தி எதிர்ப்பு' என்ற பெயரில், தமிழ்நாட்டில் ஏழைக் குடும்பங்களின் பிள்ளைகள் படிக்கும் அரசுப் பள்ளிகளில் , விருப்பமுள்ளவர்கள் எல்லாம் இந்தி படிக்கும் வாய்ப்பினை கெடுத்ததே;
(http://tamilsdirection.blogspot.com/2017/08/1965-social-curse-internalize-role-model.html  )

1968–ம் ஆண்டு ஜனவரி 23–ந் தேதி தமிழக சட்டசபையில் நிறைவேறிய இந்தி எதிர்ப்பு தீர்மானமாகும்.’ 
(http://tamilsdirection.blogspot.com/2017/08/blog-post.html )

எனவே 1967க்கு முன் இருந்தவாறு,விருப்பமுள்ளவர்கள் அரசு பள்ளிகளிலும், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளிலும் இந்தி படிக்கும் வாய்ப்பினை உருவாக்கி;

இந்திய அரசின் மொழிக் கொள்கையில் தமிழுக்கு உரிய உரிமை வேண்டி;

இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் அந்தந்த மொழிகளுக்கான உரிமைகளையும் அக்கோரிக்கையுடன் பிணைத்து, முயற்சிப்பதே புத்திசாலித் தனமாகும்.

அது போல 'நீட் தேர்வு' பிரச்சினையையும் உணர்ச்சிபூர்வ 'கருத்து கறுப்பு வெள்ளை நோயின்' பிடியிலிருந்து முதலில் விடுவித்தாக வேண்டும். 
(http://tamilsdirection.blogspot.com/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html )

தனியார் மருத்துவக் கல்லூரிகளின் கல்விக் கொள்ளையை உண்மையில் ' நீட் தேர்வு' முறை தடுத்துள்ளதா?

இந்தியாவில் ஒவ்வொரு மாநிலத்திலும் வெவ்வேறு கல்வி முறைகள் உள்ள நிலையில்;

'நீட் தேர்வு' முறையை நீக்கினால், எளிதில் அதிக மதிப்பெண்கள் எடுக்கும் கல்வி முறையில் பயின்றவர்களுக்கு, அது சாதகமாவது, சமூக நீதியாகுமா?

'நீட் தேர்வு' முறையில், அந்தந்த மாநில மக்கள் தொகை விகிதாச்சாரத்திற்கு ஏற்றவகையில், ஒதுக்கீடு செய்ய முடியாதா?

நகர்ப்புறங்களில் வசதியானவர்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு உள்ள 'உயர்தர நீட் பயிற்சி' பெற வாய்ப்பற்ற ஏழை மாணவர்களுக்கும், கிராமப்புற மாணவர்களுக்கும், சரியீட்டு மதிப்பெண்கள் வழங்கும் வகையில், 'நீட் தேர்வு' முறையில் மாற்றங்கள் செய்ய முடியாதா?

நகர்ப்புறமாக இருந்தாலும், கிராமப்புறமாக இருந்தாலும், வசதியானவர்கள் வீட்டுப்பிள்ளைகள் ஆங்கிலவழியில், தனியார்ப் பள்ளிகளில் படித்து, தமிழ்நாட்டின் மருத்தவ சேர்க்கையில், பெரும்பான்மை இடங்களை பிடித்து வந்தார்களா, நீட் அறிமுகத்திற்கு முன்பு?

என்ற வகையில் அறிவுபூர்வ விவாதங்களையும், தீர்வு முயற்சிகளையும் அகில இந்திய அளவில் முன்னெடுத்துக் கொண்டே;

சரியான தீர்வு கிடைக்கும் வரையில், தமிழ்நாடு அர‌சும், சுயலாப நோக்கற்ற‌ சமூக ஆர்வலர்களும்;

கிராம மாணவர்களில், நகர்ப்புற ஏழை மாணவர்களில் ஆர்வமும், திறமையும் உள்ள மாணவர்களை தேர்ந்தெடுத்து, 'நீட் தேர்வு' பயிற்சி வகுப்புகள் நடத்தும் முயற்சிகளில் ஈடுபடுவதே, சமூக புத்திசாலித் தனமாகும்.

மேலே குறிப்பிட்ட விவாதங்களை முன்னெடுக்காமல், வெறும் போராட்டங்களை ஊதி விடும் மீடியாக்கள் எல்லாம், முடிவில் தங்களின் நம்பகத்தன்மையை இழந்து, இன்னொரு முறை இவ்வாறு ஊதிவிடும் வலிமையை இழந்து விடுவார்கள், என்பது எனது கணிப்பாகும்.

தனியார் கிறித்துவ பள்ளியில் படித்த அனிதாவின் மரணத்தை முன்னிலைப்படுத்தி, 'மோடி எதிர்ப்பில்' உணர்ச்சிபூர்வமாக பயணிப்பவர்களில், சூழ்ச்சிவலையில் சிக்காத நேர்மையாளர்களின் பார்வைக்கு, கீழ்வரும் கேள்விகள் உரியதாகும்.

நீட் தேர்வு முறையை அறிமுகப்படுத்தியது மத்தியில் ஆண்ட காங்கிரஸ் தி.மு.க கூட்டணி அரசா?

அது சமூக நிதிக்கு எதிரானது என்று, இன்று நீட் தேர்வு எதிர்ப்பில் முன்னணியில் உள்ள கட்சிகளும் அமைப்புகளும், அப்போது கண்டித்தார்களா? இன்று நீட் தேர்வை தமிழ்நாட்டில் எதிர்க்கும் காங்கிரஸ் மற்றும் தி.மு.க தலைவர்கள் அதற்கு மன்னிப்பு கேட்காவிட்டாலும், வருத்தமாவது தெரிவித்தார்களா?

உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முன், நீட் தேர்வு தொடர்பான பாராளுமன்ற விவாதத்தின் போது, அ.தி.மு.க எம்.பிக்கள் நீட் தேர்வை எதிர்த்து வெளிநடப்பு செய்தது போல, தி.மு.க எம்.பிக்கள் செய்தார்களா?

காங்கிரஸ் தி.மு.க ஆட்சியில் அரங்கேறிய ஏறு தழுவுதல் தடையை, மோடி ஆட்சியில் நீக்க முயற்சிகள் செய்தது போல, தமிழ்நாட்டிற்கு நீட் தேர்வில் விலக்கு அளிக்க மத்திய அரசும், குறிப்பாக நிர்மலா சீத்தாராமனும் என்னென்ன முயற்சிகள் எடுத்தார்கள்? என்பது வெளிச்சத்திற்கு வந்து, விவாதத்திற்கு உள்ளாக வேண்டாமா?

சுமார் 30 வருடங்களுக்கும் மேலாக ஆசிரியராக இருந்த அறிவு, அனுபவத்தில், கீழ்வரும் முகநூலில் வெளிவந்த கீழ்வரும் கருத்தை படித்து, காணொளியையும் பார்த்தபின்;

“இந்த செல்போன் ஒளிப்பதிவைப் பார்த்துக் கேட்ட போது... மனசுக்குள் அழுதேன்!

சிறு குழந்தையின் அப்பாவித்தனம்..

யாரோ சொல்லிக்கொடுத்து.. அதை திருப்பிச் சொல்லும் போது... அது சரியாக வராததால், வெட்கப்பட்டு தனக்குத்தானே சிரித்து... வாயை மூடியும் மூடாமலுமாய்... ஏதோ ஒரு பாவனையை இந்தச் சிறுமி வெளிக்காட்டுகிறாள்...

இந்தப் பதிவின் பின்னுள்ள முகம் எது?

என்ன சொல்லிக் கொடுத்தது?

உனக்கு நிதி உதவி செய்கிறேன்.. இப்படிச் சொல் என்று கூறி, ஆங்கிலத்தில் ஒரு கிராமத்துச் சிறுமியை வலுக்கட்டாயமாகச் சொல்லச் சொல்வது ஏன்?

எனக்கு உதவுங்கள் நண்பர்களே என்று தமிழில் சொல்லியிருக்கலாமே! ஆனால்... இது சர்வதேச அளவில் வெளிநாட்டு நிதி மோசடிக்கு யாரோ திட்டமிட்டிருக்கிறார்கள் என்றே தோன்றுகிறது!”  https://www.facebook.com/senkottaisriram?hc_ref=ARSnQqgU_yQbSVbIhPHnD5I7JZEy_Xrv5n4fUBsNTbIMxuDC35U6kcIgB91n9lacYy8&fref=nf  & https://www.youtube.com/watch?v=xEWJlqMK79U 

அனிதா என்ற கிராமப்புற மாணவி உச்சநீதிமன்ற தீர்ப்புக்குப்பின்;

ஒரு வகை அழுத்தம் நிறைந்த‌ அச்சுறுத்தலில் சிக்கி, பயணித்திருப்பார் என்று நான் சந்தேகிக்கிறேன்.

எனவே  அனிதா மரணத்தில், சி.பி.ஐ விசாரணை கோரும் கிருஷ்ணசாமியின் கீழ்வரும் காணொளி கோரிக்கையை சரியென, நான் கருதுகிறேன்.

http://www.dhinasari.com/video/16576-dr-krishnasamy-claims-cbi-probe-on-anithas-suicide-case.html 

மடியில் கனம் இல்லையென்றால், அச்சம் தேவையில்லை. கிருஷ்ணசாமியின் கோரிக்கைக்கு வெளிப்படும் கண்மூடித்தனமான எதிர்ப்புகள் எல்லாம், அனிதாவின் மரணம் பற்றிய அதிக சந்தேகங்களை கிளப்பியுள்ளன. அனிதா தற்கொலைக்கும், தற்கொலைக்கு முன் அவர் சந்தித்த 'முக்கிய புள்ளிகளுடன்' நடந்த உரையாடல்களுக்கும், தொடர்புகள் இருந்ததா? அடித்தட்டு குடும்பங்களில் உள்ள பிள்ளைகள் எல்லாம், இப்படிப்பட்ட 'முக்கிய புள்ளிகளை' சந்திப்பது ஆபத்தா? (https://www.patrikai.com/netrikan-magazine-release-false-information-anitas-brother-explanation/) என்பது போன்ற கேள்விகளுக்கும், சி.பி. விசாரணையின் மூலம், விடைகள் கிடைப்பதானது, தமிழ்நாட்டின் மீட்சிக்கும் துணை புரியும்.

குறிப்பு:

'பெரியார்' கொள்கையாளராக பயணித்த காலம் முதல் இன்று வரையிலும், எனது நிலைப்பாடுகளுக்கு எதிராக உணர்ச்சிபூர்வ கலப்புடன் எந்த கருத்து வெளிப்பட்டாலும், வெளிப்படுத்தியவர் பின்னிருந்து இயக்கப்படும் பொம்மையாக அதை வெளிப்படுத்தினாலும்;


அந்த உணர்ச்சிபூர்வ இரைச்சலை நீக்கி, அறிவுபூர்வமாக அவர் ஏதும் வெளிப்படுத்தியுள்ளாரா? என்ற தேடலும், அதற்கு அறிவுபூர்வமாக பதில் தரும் முயற்சியும், நான் பின்பற்றும் வழிமுறையாகும். 

மாறாக, ஆங்கில அறிவின்றி, தமிழிலும் புலமையின்றி, விவாதத்தில் தனக்குப் புரியாதது போலவே, தம்முடன்  உரையாடியவருக்கும் புரியவில்லை என்று முடிவு செய்து அறிவிக்கும், அதை மெளனமாக ஆமோதிக்கும், அல்லது த‌மது நிலைப்பாட்டை எதிர்ப்பவர்களை, 'தமிழ் இனத் துரோகி, பார்ப்பன அடிவருடி' என்று கடவுளால் நியமிக்கப்பட்ட  நீதிபதிகள் போல, நானறிந்த 'பெரியாரிஸ்டுகள்', தமிழிஸ்டுகள், தீர்ப்புகள் வழங்கும் தவறுகளை, நான் செய்ததில்லை.

உணர்ச்சிபூர்வ இரைச்சலை ஊக்குவிப்பதானது, உள்நாட்டு, வெளிநாட்டு சுயநல சக்திகளின் ஆதிக்கத்திற்கே வழி வகுக்கும்.

No comments:

Post a Comment