Sunday, January 28, 2018


'தமிழ்த்தாய் வாழ்த்து' சர்ச்சையின் வீச்சிற்கும், ‘ஆண்டாள் சர்ச்சை’யின் வீச்சிற்கும் இடையில் தொடங்கியுள்ள போட்டி?



விரைவில் சுமுகமான முடிவை எட்டவில்லையென்றால் ?


தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களின் மூலத்தைப் (Text) படிக்காமல், உரையாசிரியர்கள், மற்றும் பிற நூல்களை மட்டுமே படித்து விட்டு, அம்மூலங்களைப் படித்தது போல எழுதுபவர்களும், பேசுபவர்களும், ஆங்கிலம் உள்ளிட்ட பிற மொழிகளில் உள்ள நூல்களைப் படித்து விளங்கிக்கொள்ளும் அறிவின்றி, புலமையாளர்களுடன் பழகி, அவர்கள் பேச்சில் வெளிப்படும் தகவல்களில் சிலவற்றை 'இறுக'ப் பிடித்துக் கொண்டு, புலமையாளர் போல, சுயநல நோக்கில் எழுதுபவர்களும், பேசுபவர்களும், ஆபத்தான அறிவு ஒட்டுண்ணி சமூக நோய்க்கிருமிகள் ஆவர்

பொது அரங்கில் அறிவுபூர்வமான விவாதங்கள் உணர்ச்சிபூர்வமாக தடம் புரளும் சூழல் ஆனது,  ஆபத்தான அறிவு ஒட்டுண்ணி சமூக நோய்க்கிருமிகளின் 'அதிவேக' வளர்ச்சிக்கு எவ்வாறு வழி வகுக்கும்? என்பதற்கும், சமூகத்தில் என்னென்ன பாதிப்புகளை அவை ஏற்படுத்தும்? என்பதற்கும், உலக முக்கியத்துவம் வாய்ந்த ஆய்வுக்கான புலமாக தமிழ்நாடு உள்ளது.’ (http://tamilsdirection.blogspot.in/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_5.html )

'கவர்ச்சிகர மொழித் திறமைகள்' (Attractive Language Skills) துணையுடன், புலமையாளர்களை ஓரங்கட்டி, வழிபாட்டுப் புழுதிப் புயலை ஊக்குவித்து, சந்தைப்படுத்தும் திறனுள்ள தமிழ் வியாபாரிகள் எல்லாம்;

திராவிட இயக்கம் வளர்ந்த போக்கின் துணை விளைவுகளாக (Byproducts) வளர்ந்துள்ளார்கள்.

அவ்வாறு தமிழிலும், பாடலுக்கான யாப்பிலும், புலமையின்றி, தமது மொழித்திறமைகளுடன் (Language Skills), சந்தைப்படுத்தும் திறனில் மிகுந்த தேர்ச்சியுடனும் முன்னணியில் வைரமுத்து பயணிக்கிறாரா?

என்ற ஐயமானது வெளிப்பட்டது; 

அவரது திரைப்பட பாடல்களை, எனது இசை ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் ஆய்வுக்கு உட்படுத்தியபோது. ( http://tamilsdirection.blogspot.in/2014/09/normal-0-false-false-false-en-us-x-none_40.html

ஆண்டாள் தொடர்பான சர்ச்சையில், அந்த ஐயத்திற்கான வெளிச்சம் வெளிவரத் தொடங்கியதானது, என்னை வியப்பில் ஆழ்த்தியது. (http://tamilsdirection.blogspot.in/2018/01/httpwww.html  )

 ஆனால் அதைத் தொடர்ந்து, வந்த 'தமிழ்த்தாய் வாழ்த்து' சர்ச்சையும்;
'சோடா பாட்டில் ஜீயர்' என்று பத்திரிக்கை தலைப்பில் இடம் பெறும் அளவுக்கு;

"எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத் தெரியும்' என்று ஜியர் சடகோப ராமானுஜர் வெளிப்படுத்திய சர்ச்சைப் பேச்சும்;

தமிழ்நாட்டில் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்த வாய்ப்புள்ள கவலை தரும் 'சிக்னல்களாக' எனக்குப் பட்டது.

நம்மைச் சுற்றி நடக்கும் நல்லவைகளிலும், தீயவைகளிலும் நம் ஒவ்வொருவருக்கும் பங்கு இருக்கிறது. தீமைகள் புரிந்த குற்றவாளிகளுக்கும் நமக்கும் அளவில் மட்டுமே வேறுபாடு என்பதையும் நாம் மறக்கக் கூடாது.
நிகழ்கால வரலாற்றில் என்னைக் காயப்படுத்திய சம்பவங்களில் ஆப்கானிஸ்தானில் 2001 மார்ச்சில் வெடிகுண்டு மூலம் தகர்க்கப்பட்ட பாமியான் புத்தர் சிலைகள் தகர்க்கப்பட்டதும் ஒன்றாகும். மீடியாக்களில் அதை செய்தவர்கள் தாலிபான் தீவிரவாதிகள் என்று வெளியானது. ரஷ்யாவை எதிர்க்க அமெரிக்கா தாலிபன் இயக்கத்தை வளர்த்தது எனக்கு நினைவுக்கு வந்தது. தனது பொருளாதார நலன்களுக்காகவே அது போன்று அமெரிக்க செயல்பட்டதும், அமெரிக்காவை சொர்க்கபூமியாகக் கருதி அங்கு குடியேறியுள்ள நமது உறவினர்களும், நண்பர்களும் எனது நினைவுக்கு வந்தார்கள். 'உலகம் எக்கெடு கெட்டால் என்ன? நாமும் நமது குடும்பமும் புத்திசாலிகளாகப் பிழைப்போம்' என்று வாழும் நாமும், நமது குடும்பமும், நண்பர்களும் அந்த பாமியான் புத்தர் சிலைகள் தகர்க்கப்பட்டதற்கு மறைமுக குற்றவாளிகள் இல்லையா? என்பது பற்றி நான் ஏற்கனவே பதிவு செய்துள்ளேன்.

சமூகப் பொறுப்பின்றி வைரமுத்து 'ஆண்டாள்' தொடர்பாக வெளியிட்ட ஆதாரமில்லாத பேச்சால் விளைந்த சர்ச்சைக்கு;

புலமையாளர்களை ஓரங்கட்டி, வைரமுத்து போன்றவர்களை ஆண்டாள் பக்தர்கள் நிறைந்த கூட்டத்தில் உரையாற்றும் அளவுக்கு, அவர் 'புகழ் பெற்ற சமூக செயல்நுட்பத்தினை' முளையிலேயே அடையாளம் கண்டு அகற்றியிருந்தால்;

இந்த சர்ச்சை வந்திருக்குமா?  அந்த சர்ச்சை இல்லையென்றால், ஜீயர் வெளிப்படுத்திய 'சோடா பாட்டில்' சர்ச்சை வந்திருக்குமா

தமதளவில் உண்மையாகவும் நேர்மையாகவும், தமக்கான ஆச்சாரங்களுடன் எளிமையாகவும் வாழ்ந்து வந்த ஜீயர் போன்றவர்கள் எல்லாம் வெளியில் வந்து 'உண்ணாவிரதம்' என்று போராட வந்ததும், மேலே குறிப்பிட்ட 'சோடா, பாட்டில்' பேச்சினை வெளிப்படுத்தியதும்;

1965இல் பெரியவர்கள் ஒதுங்கி, மாணவர்களை போராட ஊக்குவித்ததன் மூலம் முளைவிட்டு வளர்ந்து, இன்று உச்சத்த்தில் உள்ள சமூக பொறுப்பற்ற போக்கின் வெளிப்பாடாகவே, எனக்குப் படுகிறது.

நமக்கு, நமது குடும்பத்துக்கு, லாபம் என்று திராவிட ஆளுங்கட்சிகளிடம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ பலன் பெற்ற, நாம் ஒவ்வொருவரும், 'அந்த சமூக செயல்நுட்பம்' மூலமாக, வைரமுத்து போன்றவர்கள் வளர்வதற்கு உதவியிருந்தால், நாமும் குற்றவாளிகள் இல்லையா?

'சமூகம் எக்கேடு கெட்டால் என்ன? நாமும் நமது குடும்பமும் புத்திசாலித்தனமாக பிழைப்போம்' என்று நான் வாழ்ந்திருந்தால்;

எனது வாழ்வின் பல்வேறு கட்டங்களில் எனக்கு கிடைத்த பல வாய்ப்புகளில் ஒன்றில், எனது மனசாட்சியையும், சமூகப் பொறுப்பினையும் அடகு வைத்திருந்தால்;

இன்று தமிழ்நாட்டில் பணத்திலும், செல்வாக்கிலும் முதல் வரிசை நபர்களில் நான் இடம் பெற்றிருப்பேன்; என்பதை அந்தந்த கட்டங்களில் என்னுடன் நெருக்கமாக பயணித்தவர்கள் அறிவார்கள்.

சமூக நடப்புகளிலிருந்து முற்றிலுமாக தடை (Insulation) ஏற்படுத்தி, எனது ஆய்வுகளில் மூழ்கி பயணிப்பதால், நம்பமுடியாத அளவுக்கு பணமும் புகழும் ஈட்டும் வாய்ப்புகள் இருந்தும்; ( http://drvee.in/  )

தமிழ்நாட்டில் வேறு எவருக்கும் கிட்டியிராத பொதுவாழ்வு அனுபவங்களை எல்லாம், (இசை ஆய்வுக்கு முன்) மார்க்சிய - லெனினிய அறிவுடன் கூடிய பெரியாரியல் புலமையாளனாக பயணித்திருந்த அடிப்படையிலும்;

எனது இயல்பை ஒட்டியும்;

தமிழ்வழிக் கல்வியின் (எனவே தமிழின்) மீட்சியை குவிய நோக்கமாகக் கொண்டு, உணர்ச்சிபூர்வ இரைச்சலற்ற அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவிக்க முயன்று வருகிறேன்; சீரழிவின் சிக்னல்களையும் முன்கூட்டியே கணித்து எச்சரித்து.

அந்த அடிப்படையிலேயே கீழ்வரும் அபாய எச்சரிக்கையையும் வெளியிட்டேன்.

வைரமுத்து சுட்டிக்காட்டிய கட்டுரை ஆசிரியரே, 'ஆண்டாள்' தொடர்பாக 'தேவதாசி' என்ற சொல்லுக்கு ஆதாரமே இல்லை என்று தெளிவுபடுத்தியுள்ள பின்னும் (http://www.dinamalar.com/news_detail.asp?id=1941251    );

ஆண்டாள் சந்நிதியில் மன்னிப்பு கோராமல்;

வைரமுத்து 'தான் செய்யாத தவறுக்கு வருத்தம் தெரிவித்துள்ளதாக' தொடர்ந்து சாதித்தால்;

தி.மு.க தலைவரின் மேலே குறிப்பிட்ட களங்கம் போலவே;
வரலாற்றில் வைரமுத்துவின் அந்த தவறான நிலைப்பாடும் அழிக்க முடியாத களங்கமாகி விடும்.

வைரமுத்துவிடம் இருப்பது மொழித் திறமையே (language skills) தவிர, தமிழ்ப் புலமை அல்ல என்று வருங்காலத்தில் ஆய்வுகள் மூலம் வெளிப்பட்டாலும் கூட (http://tamilsdirection.blogspot.in/2018/01/httpwww.html  ) ; 

அதனால் அவருக்கு களங்கம் நேராது.

ஆண்டாள் தொடர்பான சர்ச்சையில் வைத்தியநாதனைப் போலவே, ஆண்டாள் சந்நிதியில் அவர் மன்னிப்பு கோருவதன் மூலம்;

இளம் கவிஞர்களுக்கு நல்ல முன்னுதாரணமாக வரலாற்றில் நிலையான புகழ் பெற முடியும்.
 
ஆண்டாள் சந்நிதியில் வைரமுத்து மன்னிப்பு கேட்க  வேண்டியதும்;

தனிப்பட்ட முறையில் இழிவு செய்ததற்காக, வைரமுத்துவிடம் எச்.ராஜா மன்னிப்பு கேட்க  வேண்டியதும்;

சமுக நலன் நோக்கில் அவசியமாகும்.



சோடா பாட்டில் பேச்சுக்காக, "ஆண்டாள் நாச்சியாரின் காலில் சாஷ்டாங்கமாக விழுந்து மன்னிப்பு கோரினேன்" என்று ஜியர் சடகோப ராமானுஜர் விளக்கம் கொடுத்துள்ள செய்தியானது ஊடகங்களில் வெளிவந்துள்ளது. அதன் மூலம் தமிழ்நாட்டிற்கு ஒரு நல்ல முன்மாதிரியாக (Role Model) அவர் வெளிப்பட்டுள்ளார்.

அதே போல வைரமுத்துவும் ஆண்டாள் சந்நிதியில் தாமதமின்றி மன்னிப்பு கேட்பது நல்லது; வரவாற்றில் வைரமுத்து ஒரு மோசமான முன்மாதிரியாக இடம் பெறுவதை தவிர்ப்பதற்காகவும் கூட.

தள்ளாத
வயதிலும், தமது கொள்கைக்கு எதிரானதென்றாலும், பொது நிகழ்ச்சிகளில் கடவுள் வாழ்த்து பாடும் பொழுது எழுந்து நின்றவர் .வெ.ரா ஆவார்.

ஆளுநர் கலந்து கொண்ட பொதுநிகழ்ச்சியில், மொழிக்கான வாழ்த்துப்பாடலை கடவுள் வாழ்த்தாகவும், நாட்டுக்கான வாழ்த்துப்பாடலை அவ்வாறு கருதாததாகவும் சங்கரமடம் கொடுத்துள்ள விளக்கமானது, நாட்டுக்கான வாழ்த்துப்பாடலையும் அவமதித்ததாகாதா? பொது ஒழுக்க நெறிகளை கடைபிடிப்பதானது தமது ச்சாரத்திற்கு விரோதமென்றால், பொதுநிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதை தவிர்ப்பது தானே சரியாகும். 'தமிழ்நாட்டில் ஒரு நிகழ்ச்சி (programme) இப்படி நடந்தால், பின் விளைவுகள் இப்படித்தான் இருக்கும்' என்பதும் எளிதில் யூகிக்கக் கூடியதே ஆகும். எனவே சங்கரமடமும், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்களும் சமயோசிதமின்றி செயல்பட்டு, விரும்பத்தகாத விளைவுகளுக்கு காரணமாகி விட்டார்கள்; என்பதும் எனது கருத்தாகும். தனிப்பட்ட ஆச்சார நெறிகள் எல்லாம், பொது ஒழுக்க நெறிகளுக்கு முரண்படுமானல், பொது நிகழ்ச்சிகளில் அவை வெளிப்படுவதை தவிர்ப்பதே, பொது ஒழுங்குக்கும், அமைதிக்கும் உகந்ததாகும். மாறாக அந்த முரண்பாட்டை நியாயப்படுத்துவதானது, பொது ஒழுக்கநெறிகளை பலகீனமாக்கி, சமூக சீரழிவை வேகப்படுத்தும் அபாயம் உண்டு.

வன்முறைகள் வெடிக்கும் போது, 'பதவிக்காரர்கள், பணக்காரர்கள், படித்தவர்கள், பிராமணர்கள்' பாதிக்கப்படுவதை விட, அப்பாவி பொது மக்களே அதிகம் பாதிக்கப்படுவார்கள்;

என்பதை சுட்டிக்காட்டி, வன்முறைக்கு இடமளிக்காமலும், பொது மக்களுக்கும், பொதுச்சொத்துக்களுக்கும் சேதமின்றியும், போராட்டங்கள் நடத்தி, கைதாகும் போது போலீசாருடன் சண்டை போடாமல் கைதாகி, எதிர்வழக்காடாமல் நீதிமன்றம் விதிக்கும் தண்டனையை ஏற்று பயணித்த ஒரே தலைவரான ' பெரியார்'  .வெ.ராவும்;

சாகும் வரை எந்த வாகனத்திலும் பயணிக்காமல், நடந்தே இந்தியா முழுவதும் சுற்றி வந்து, எளிமையின் இலக்கணமாக வாழ்ந்து, தமது ஆச்சாரநெறிகளை, எந்த கட்டத்திலும், பொது ஒழுக்க நெறிகளுடன் மோதும் வாய்ப்பிற்கு இடமளிக்காமல், 'கடுமையாக' கடைபிடித்து, கணபதி ஸ்தபதி போன்ற பிராமணரல்லாத புலமையாளர்களை எல்லாம் விளம்பரமின்றி ஊக்குவித்து வாழ்ந்த‌ 'மகா பெரியவர்' சந்திரசேகரரும்;

வாழ்ந்தது வரையில், இது போன்ற சர்ச்சைகளையும், போராட்டங்களையும் காஞ்சி சங்கரமடம் சந்தித்ததில்லை.

சமூக மோதல் அழுத்தங்களிலிருந்து (Social Tensions) விடுபட்டு, தமிழ்நாடு ஆக்கபூர்வமான திசையில் பயணிக்க வேண்டுமானால், விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகளையும், பேச்சுக்களையும், சமுகத்தில் மேல் மட்டத்தில் உள்ளவர்கள் தவிர்த்து;

உணர்ச்சிபூர்வ இரைச்சலற்ற அறிவுபூர்வ விவாதங்களை ஊக்குவிக்க வேண்டும்

ஆண்டாள் சர்ச்சையில், இந்துத்வா எதிர்ப்பு முகாம்களில் அறிவுபூர்வ விவாத வலிமை குறைந்திருப்பதானது;

வெட்ட வெளிச்சமாகி வருகிறது, என்பதும் எனது கருத்தாகும். அதே நேரத்தில் ஆண்டாள் சர்ச்சையில் பலகீன நிலையில் இருந்த 'இந்துத்வா எதிர்ப்பு' கட்சிகளுக்கு, புத்துயிர் கொடுத்துள்ள 'தமிழ்த்தாய் வாழ்த்து' சர்ச்சையின் வீச்சிற்கும், ஆண்டாள் சர்ச்சையின் வீச்சிற்கும் இடையில் தொடங்கியுள்ள போட்டியானது;

விரைவில் சுமுகமான முடிவை எட்டவில்லையென்றால், அது மோசமான விளைவுகளில் முடியும் அபாயமும் இருக்கிறது.’ (http://tamilsdirection.blogspot.in/2018/01/normal-0-false-false-false-en-us-x-none_23.html )

No comments:

Post a Comment