Sunday, January 7, 2018



நடிகர் ரஜினியின் அரசியல் பிரவேசத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம் ; சரியான வாதத்தை முன் வைத்துள்ளார்களா ? (7)

 

தமிழ்நாட்டில் தனக்கான ஆதரவு பற்றிய கணிப்பில், பிரபாகரன் ஏமாந்ததை போல, தினகரனும் ஏமாறுகிறாரா?


'இரட்டை இலையை' தோற்கடித்து, 'உதயசூரியனை' டெபாசீட் இழக்க வைத்து, சுயேட்சை வேட்பாளர் தினகரன் பெற்ற வெற்றிக்காக,  ஆர்.கே.நகர் மக்களை குறை சொல்வதில் அர்த்தமில்லை என்பதை ஏற்கனவே கீழ்வருமாறு விளக்கியுள்ளேன்.

அறிவுஜீவிகள், பத்திரிக்கை அதிபர்கள் போன்றவர்கள் எல்லாம் ஊழல் திமிங்கலங்களுடன் 'நெருக்கமாகி', அவரவர் 'யோக்கியதைக்கு' ஏற்ற பலன்கள் அனுபவித்து வரும் சூழலில், அத்தகைய வாய்ப்புகள் சாதாரண மக்களுக்கு இல்லாத நிலையில்;

அரசியல் கொள்ளையர்களின் பணத்தை எல்லாம், கட்சிக் கூட்டங்களில் பங்கேற்க கட்டணம், வாக்குகள் விற்பனை, உள்ளிட்டு, தம்மால் முடிந்த வழிகளில் மக்கள் வசூலிப்பதை, தேர்தல் ஆணையமும், நீதி மன்றங்களும் தடுக்க முடியாது, என்பதையே ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு உணர்த்துகிறதா? என்பதும் விவாதத்திற்கு உரியதாகும்
(http://tamilsdirection.blogspot.com/2017/12/normal-0-false-false-false-en-us-x-none_31.html   )

தமிழ்நாட்டில் எந்த வழியிலாவது வெற்றி பெற்று, செல்வம், செல்வாக்குடன் வலம் வரும் நபரை, தத்தம் 'தகுதி, திறமை'கள் மூலம், அந்த நபருடன் ஒட்டி, பயணிக்கத் துடிக்கும் கூட்டத்தில்;

சமூகத்தின் அடிமட்டத்தில் நேர்மையான முறையில் சம்பாதிக்க திறமையும், மனமும் இன்றி, வாழும் 'குறுக்கு வழி' திறமைசாலிகள் இருக்கிறார்கள்;

மேல்த்தட்டு பிரிவினரில், அவர்களோடு போட்டி போட்டு, எளிதில் வெற்றி பெறக் கூடிய, செல்வம் அல்லது செல்வாக்கும் அல்லது இரண்டும், 'இன்னும் அதிகமாக ஈட்டும்' வெறியுள்ளவரும் இருக்கிறார்கள்.

இலங்கையில் 1983 சூலை இனப்படுகொலைக்குப் பின், அன்றைய பிரதமர் இந்திராவின் சூழ்ச்சி வலையில் சிக்கி, பணத்திலும், ஆயுத பலத்திலும், எண்ணிக்கையிலும் 'அதிவேகமாக' ஊதிப் பெருத்த ஈழ விடுதலைக் குழுக்களில்;

அந்த காலக்கட்டத்தில், தமிழ்நாட்டில் தமக்கான பத்திரிக்கைகளுடனும், ஆதரவாளர்களுடனும் முதல் இடத்தில் இருந்த 'புளோட்' இயக்க தலைவர் உமா மகேசுவரனை, மேலே குறிப்பிட்ட போக்கில்;

'ஒட்டி' துதி பாடி  பயணித்தவர்களும் இருந்தார்கள்

அவருக்கு அடுத்த நிலையில் செல்வாக்குடன் வலம் வந்த 'டெலோ' தலைவருடன் அவ்வாறு 'ஒட்டி'ப் பயணித்தவர்கள் எல்லாம் பெரும்பாலும் தி.மு.கவினராக இருந்தார்கள்;

தி. வில் உரத்தநாடு பகுதியில் இருந்தவர்கள் மேலே குறுப்பிட்ட புளோட் ஆதரவாளர்களாகவும்;

கும்பகோணம் ஸ்டாலின் தலைமையிலான 'பெரியார்' ஆதரவாளர்கள் எல்லாம் .பி.ஆர்.எல்.எஃப் குழுவை ஆதரித்தும்;

கொளத்தூர் மணி, கோவை.இராமகிருட்டிணன் தலைமையிலான 'பெரியார்' ஆதரவாளர்கள் விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனை ஆதரித்தும்;

ஒவ்வொரு குழுவும் தம்மையே 'சரியானவர்கள்'என்றும், பிற குழுக்கள் எல்லாம் 'தெளிவான கொள்கையற்றவர்கள் அல்லது துரோகிகள்' என்று ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டியும், பயணித்து வந்த போக்கில்;

பல்வேறு காரணங்களின் தொகுவிளைவாக, விடுதலைப் புலிகள் இயக்கமானது வலிமையாகி, மற்ற குழுக்களின் தலைவர்களையும், தனி ஈழ விடுதலைக்காக ஆயுதப் பயிற்சி பெற்ற போராளிகளையும், ஈவிரக்கமின்றி 'துரோக முத்திரை' குத்தி ஒழித்து, தமிழ்நாட்டில் ஈழ விடுதலைக்கான 'ஏகபோக பிரதிநிதியாக' வெளிப்பட்டார்கள். , (‘தமிழ்நாட்டு மக்களின் ஆதரவு: 'தமிழ் ஈழம்'  - நேற்று, இன்று, நாளை; கேள்விக்குறியாகி வரும் தமிழரின் தர அடையாளம் (benchmark);  http://tamilsdirection.blogspot.sg/2014/12/normal-0-false-false-false-en-us-x-none_6.html )

அதற்குப் பின் மேலே குறிப்பிட்ட மற்ற குழுக்களின் ஆதரவாளர்களாக இருந்தவர்களில் பெரும்பாலோர் பிரபாகரன் ஆதரவாளர்களாக மாறிய யோக்கியதைக்கும், இன்று ஆர்.கே.நகர் வெற்றிக்குப்பின், தினகரனுக்கு அதிகரித்து வரும் ஆதரவாளர்களின் யோக்கியதைக்கும், நிறைய ஒற்றுமைகள் இருப்பதும் எனது ஆய்வில் வெளிப்பட்டுள்ளது.

ஆர்.கே.நகரில் ஏற்கனவே ஜெயலலிதா பெற்ற வெற்றியை விட, மிக மிக அதிகமாக, தி.மு. வேட்பாளரையே டெபாசீட் இழக்க வைத்துள்ள தினகரன் பெற்ற வெற்றியின் அடிப்படையில்;

தமிழ்நாட்டில் ஜெயலலிதாவை விட அதிக செல்வாக்குள்ள தலைவர் தினகரன் என்று சொல்லலாமா?

தி.மு. செயல் தலைவர் ஸ்டாலினை 'இலவு காத்த கிளி'யாக்கி, தினகரன் முதல்வர் ஆக வாய்ப்புண்டா?

யாருக்கும் கப்பம் கட்டாமல், ஆட்சியில் சம்பாதித்து வரும் பணத்தை, ஆளுங்கட்சி அமைச்சர்கள் எல்லாம் கட்சிக்காக செலவு செய்யாமல், தாமே அனுபவித்து வருவதாக, ஊடகங்களில் வெளிவரும் செய்திகள் உண்மை என்றால்;

தினகரன் முதல்வராகும் நோக்கில், தமிழ்நாடு முழுவதும் உள்ள கட்சித் தொண்டர்களை, ஆர்.கே.நகர் பாணியில், மத்திய மாநில அரசுகளை முட்டாளாக்கி, தமது பக்கம் இழுக்கும் முயற்சியில் முழு மூச்சாக ஈடுபட்டால், அது வெற்றியை தராதா?

மேலே குறிப்பிட்ட கேள்விகளை;

கட்சியில், எந்த பதவியிலும் இல்லாமல், கிராமத்தில் ...தி.மு. வில் அடிப்படை உறுப்பினராக‌, ஜெயலலிதாவின் விசுவாசியாக வாழும் சற்று வயதான ஒரு பெண் தொண்டரிடம், கேட்டேன். அவர் மிகவும் தெளிவாகவும் உறுதியாகவும் வியப்பூட்டும் வகையில் தெரிவித்த பதிலின் சாராம்சம் வருமாறு:

"ஜெயலலிதா விசுவாசியான தொண்டர்கள் எல்லாம் .பி.எஸ் பக்கம் தான் இருக்கிறார்கள். ஆர்.கே.நகர் வெற்றியானது கிராமங்களில் நடக்க வாய்ப்பில்லை. நீங்கள் தெரிவித்தது போல ஆளுங்கட்சி அமைச்சர்கள் இருப்பது உண்மையென்றாலும், தினகரனுக்கு வாய்ப்பு கிடையாது; ரஜினி தான் அரசியலுக்கு வந்து விட்டாரே; அவர் தான் வெற்றி பெறுவார்."

மேலே குறிப்பிட்ட பெண் தொண்டர், குறுக்குவழியில் பணம் ஈட்டும் நோக்கமின்றி, தமக்குள்ள வசதி வாய்ப்புகளுடன் நேர்மையான முறையில் பணம் ஈட்டி, நான் பிரமிக்கும் வகையில் தம்மால் இயன்ற அளவுக்கு தமது சமூக வட்டத்தில் துயரப்படுபவர்களுக்கு உதவி வருபவர் ஆவார். தமிழ்நாட்டில் சிறு நகரங்களிலும், கிராமங்களிலும் நடுத்தர, ஏழை மக்களில் கணிசமானோர் அவ்வாறு தான் வாழ்ந்து வருகிறார்கள், என்பதை ;

மேல்தட்டிலும், நானறிந்த 'பெரியார்' ஆதரவாளர்கள் மத்தியிலும், 'சுயநல மனித மிருகங்கள்' புறத்தில் 'யோக்கியராக' காட்சி தந்ததை 'அனுபவித்து', அத்தகையோரை எனது சமூக வட்டதில் இருந்து அகற்றி, இயன்றவரை மேலே குறிப்பிட்ட பிரிவினரோடு தொடர்பு கொண்டு பயணித்து வருவதன் அடிப்படையில், நான் கண்டுபிடித்துள்ளேன்.

கீழ்வரும் ஆய்வுக்கு, இன்று தினகரன் ஆதரவாளர்களாக பயணிப்பவர்களின் யோக்கியதையை  உட்படுத்தினால், அது வெளிச்சத்தை தரலாம்.

கங்கை அமரன், பாலு ஜுவல்லர்ஸ் பாலு, கோத்தாரி, அமிர்தாஞ்சன் அதிபர், ஆ.அர்.ரகுமான், சத்யம், உள்ளிட்ட இன்னும் பல தனியார் சொத்துக்களை கொலை செய்தும்  அச்சுறுத்தியும் அபகரித்திருந்தாலும்; அதில் நாமோ நமது குடும்பமோ பாதிக்கபடவில்லையே; 

அண்ணாமலை பல்கலைக் கழகத்தில் போலீஸ் தடியடியில் இறந்த மாணவரின் தந்தையையே பிறழ்சாட்சியாக்கி, இறந்தது தன் மகன் இல்லை என்று சொல்ல வைத்திருந்தால் என்ன? பாதிக்கப்பட்டது நமது குடும்பமோ உறவினர்களோ இல்லையே; 

அன்று முதல் இன்றுவரை அரசு சாட்சிகள் எல்லாம் பிறழ் சாட்சிகளாகி விடுதலையாகி வரும் செல்வாக்கான குற்றவாளிகளால் பாதிக்கப்பட்டது நமது குடும்பம் இல்லையே;

கிரானைட், தாது மணல், ஏரிகள், ஆறுகள் உள்ளிட்ட கனிவளங்களை ஊழல் சுனாமியில் சூறையாடியிருந்தால் என்ன? நமது சொத்து தான் பாதிக்கப்படவில்லையே.

என்ற அடிப்படையில் திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களுடன், தமது சாதி, மதம், என்ற அடிப்படையிலோ, அல்லது சுயலாப நோக்கிலோ 'நேசமாக' பயணிப்பவர்கள் எல்லாம்;

தமிழ்நாட்டை சீரழித்த 'சமூக குற்றவாளிகள்' ஆக மாட்டார்களா?
முள்ளிவாய்க்கால் போரின் போது,  

தமிழ்நாட்டில் தனக்கான ஆதரவு பற்றிய கணிப்பில் பிரபாகரன் ஏமாந்ததை போல 
(http://tamilsdirection.blogspot.com/2017/02/blog-post_19.html );

தினகரனும் தமக்கு அதிகரித்து வரும் ஆதரவின் 'உண்மையான யோக்கியதை' தெரியாமல் ஏமாந்து போவாரா? ஜெயலலிதாவை 'அம்மா' என்று அழைத்து காலில் விழுந்தவர்களில் பெரும்பாலோர், அதே ஜெயலலிதாவால் 'துரோக' குற்றச்சாட்டிற்கு உள்ளாகி, கட்சியை விட்டு துரத்தப்பட்ட தினகரன் உள்ளிட்ட சசிகலா குடும்பத்தினரின், 'அந்த துரோகிகளுடன் உறவில்லை' என்று மன்னிப்பு கேட்டு போயஸ் கார்டனில் அனுமதிக்கப்பட்ட சசிகலாவின், ஆதரவாளர்களாகவும் வலம் வருகிறார்கள்.
மோடி ஆட்சியில் ஊழல் ஒழிப்பில் வெளிப்பட்டு வரும் குறைகள் நீங்காமல், அடுத்த பாராளுமன்ற தேர்தலில் மோடி வெற்றி பெற வாய்ப்பில்லை;

என்பது தெளிவாகி வருவதன் காரணமாக;

பல்வேறு வழக்குகளிலும், சோதனைகளிலும் சிக்கியுள்ள தினகரனும், சசிகலாவும், மற்ற குடும்ப உறுப்பினர்களும் சிறை செல்ல நேரிட்டால்;
மேலே குறிப்பிட்ட அவர்களின் (சமூகத்தின் கீழ் மட்டத்திலிருந்து படித்த, பணக்கார மேல் மட்டம் வரை உள்ள‌) ஆதரவாளர்கள் எல்லாம், அந்த கட்டத்தில் எந்த கட்சி, எந்த தலைவர் செல்வம் மற்றும் செல்வாக்கோடு வலம் வருகிறாரோ;

அந்த கட்சியுடன், அந்த தலைவருடன் 'ஒட்டி'பயணிப்பதில் தான் தீவிரம் காட்டுவார்கள்.

உமா மகேசுவரன், சிரி சபாரெத்தினம், பத்மநாபா, ஜெயலலிதா போன்றவர்களின் ஆதரவாளர்களாக பயணித்து, அவர்கள் மறைவிற்குப் பின், அந்த 'மறைவுக்கு' காரணமானவர்கள் செல்வம் மற்றும் செல்வாக்குடன் வலம் வந்த போது, அவர்களுடன் ஒட்டிப் பயணித்தவர்களின், தமிழ்நாட்டின் சீரழிவிற்கு காரணமான‌ சமூக செயல்நுட்பத்திலிருந்து,  தமிழ்நாடு விடுதலை ஆகாமல், தமிழ்நாட்டிற்கு மீட்சி உண்டா? ரஜினியாக இருந்தாலும், வேறு யாராக இருந்தாலும், மேலே குறிப்பிட்ட சமூக செயல்நுட்பம் பற்றிய புரிதலுடன் அதில் பலியாகாமல் பயணித்தால் தான், தமிழ்நாட்டில் ஊழலற்ற நேர்மையான ஆட்சிக்கு வழி பிறக்கும்.

No comments:

Post a Comment