Monday, January 1, 2018


'அந்த'(?)  ஓட்டப்பந்தயத்தில் சிக்கிய 'முட்டாள்த் தமிழர்கள்' (4) ?



'இந்துத்வா' எதிர்ப்பு, ஆதரவு கட்சிகள், 'பணத்துவா'விடம் ஏமாந்த செயல்நுட்பம்?


இலங்கையில் 1983 சூலை இனப்படுகொலைக்கு முன், தமிழ்நாட்டில் 1967இல் முளை விட்டு, 1969 முதல் வெளிப்படையாக பொதுவாழ்வு வியாபாரமானது வளர்ந்து வந்த பின்னணியில்;  

அந்த இனப்படுகொலைக்குப் பின், அன்றைய பிரதமர் இந்திராகாந்தியின் கருணையால், ஈழ விடுதலைக்கு குழுக்கள் எல்லாம், 'பண பலத்தில்' ஊதிப் பெருத்த போக்கில்;

அன்றைய பிரதமர் இந்திராவின் சுயநல அரசியல் காரணமாக, 'சர்க்காரியா' ஊழல் குற்றவாளிகள் எல்லாம் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பித்து, 'சர்க்காரியா' ஊழலானது அடுத்தக்கட்ட வளர்ச்சியாக. 1991 முதல் தனியார் சொத்துக்களை அச்சுறுத்தி பறிக்கும் அளவுக்கும், கிரானைட், தாது மணல், ஏரிகள், ஆறுகள் எல்லாம் ஊழலுக்கு இரையாகும் அளவுக்கும், வளர்ந்து, தமிழ்நாட்டின் பொதுவாழ்வு வியாபாரத்தின் 'பண பலத்தையும்' ஊதிப் பெருக்க வைத்த பின்னணியில்; 

தமிழ்நாட்டில் இயல்பில் பலகீனமானவர்களை எல்லாம் சிக்க வைத்து, 'பணத்துவா' சமூக செயல்நுட்பமானது வீரியத்துடன் வளர்ந்தது.

தமிழ்நாட்டில் சாமான்யர்களைப் போல‌, அரசு போக்குவரத்தில் பயணம் செய்து, நடுத்தர வசதி வாய்ப்புகளுடன் வாழ்ந்து வந்தவர்களில்;

'தமிழ் உணர்வு, பார்ப்பன எதிர்ப்பு' மூலம் 'குறுக்கு வழி பணக்காரர் ஆகும் 'பணத்துவா'  சமூக செயல்நுட்பத்தில்' பயணித்தவர்கள் எல்லாம், அவரவர் 'திறமைக்கு'(?) ஏற்ப, அதிவேக பணக்காரர்களாகவும், பெரும் பணக்காரர்களாகவும்;

அரசு போக்குவரத்தில் பயணம் செய்வதை தமது சமூக நிலைக்கு (Social Status) குறைவாக‌ கருதி தவிர்த்து, தம்மிடம் உள்ள காரை விட இன்னும் அதிக விலையுள்ள காரை அடுத்து எப்போது வாங்குவது? என்பதை முக்கியமாக கருதி,  இன்று வலம் வருகின்றனர்.

திராவிட அரசியல் கொள்ளைக் குடும்பங்களில் ஏதாவது ஒன்றுடன் நேரடியாகவும், மறைமுகமாகவும் 'உறவு'(?) கொண்டு, இன்று 'இந்துத்வா' எதிர்ப்பு' வீரர்களாகவும்;

 அதே நேரத்தில் அவர்களில் அதி புத்திசாலிகள் எல்லாம்;

தமக்கான முக்கியத்துவத்திற்கு 'இந்துத்வாவை' அடிமைப்படுத்தி, 'திராவிட கட்சிகளின்' பாணியில் பயணிக்கும் பா.ஜ.க தலைவர்களுடன் வெளியில் தெரிந்தும், தெரியாமலும், 'பரிமாற்ற பலன்’ தரும் உறவுடனும் ' பயணித்து வருகிறார்கள்;

தமிழ்நாட்டில் வாழும் சாதாரண மக்களை 'முட்டாள் ஆடுகள்' என்று கணித்து. 

அவ்வாறு பயணித்த இந்துத்வா எதிர்ப்பு சக்திகளையும், இந்துத்வா ஆதரவு சக்திகளையும் ஒரே நேரத்தில் முட்டாளாக்கி அவமானப்படுத்தும் வகையில், ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் முடிவானது வெளிப்பட்டுள்ளது.

மோடி அரசின் 'அன்பை' வாய்ப்பு கிட்டும்போது ஈர்க்கும் திசையில், சுப்பிரமணிய சுவாமியின் ஆதரவுடன், தமிழ்நாட்டின் ஒரே சக்தியாக தம்மை நிரூபித்து, சசிகலா தினகரன் முன்னெடுத்த 'பணத்துவா' பெற்ற வெற்றியானது, தங்கள் அரசியல் வாழ்வில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, கருணாநிதி பெற்ற தேர்தல் வெற்றிகளை எல்லாம் விஞ்சி விட்டது.

திராவிட தேர்தல் அரசியலை, 'பண அரசியல்' மூலம் சசிகலாவின் ஆசியோடு தினகரன் முடிவுக்கு கொண்டு வந்துள்ள நிலையில்;

தமிழ்நாட்டில் சசிகலா குடும்ப அரசியலின் 'பணத்துவா' என்பதானது, 'இந்துத்வா ஆதரவு' மற்றும் எதிர்ப்புக் கட்சிகள் எல்லாவற்றையும் ஓரங்கட்டியதானது;

1944இல் தொடங்கப்பட்ட 'திராவிடர் கழகம்' சந்தித்து வரும்  இறுதி முடிவின் சிக்னலாகும்.’ என்று முந்தைய பதிவில் பார்த்தோம்.

காந்தியால் விளைந்த கேடுகளான, 'சண்டித்தனம்' என்று ஈ.வெ.ரா அவர்களால் கண்டிக்கப்பட்ட போராட்ட வடிவங்களுடனும், ஈ.வெ.ரா வலியுறுத்திய‌ அறிவுபூர்வ விமர்சன போக்கினை புறக்கணித்து, உணர்ச்சிபூர்வமாக 'பிராமண எதிர்ப்பு செனோபோபியவுடனும்',  இன்று பயணிக்கும் 'பெரியார்' கட்சிகள் எல்லாம் முன்னெடுத்துள்ள 'இந்துத்வா எதிர்ப்பும்';

இன்றைய மாணவர்களிடமும், படித்த இளைஞர்களிடமும், சாதாரண மக்களிடமும் எடுபடாமல் 'சருகாகி' வருகிறதா?  என்பதும் ஆய்விற்குரியதாகும்.

'இந்துத்வா' ஆதரவு மற்றும் எதிர்ப்பு கொள்கையாளர்களில் யார்? யார்? தமக்கான முக்கியத்துவத்திற்கு தத்தம் கொள்கையை அடிமைப்படுத்தி பயணிக்கிறார்கள்?

என்பதை ஈ.வெ.ராவின் பொதுத் தொண்டருக்கான இலக்கணம் மூலம், ஆர்வமுள்ளவர்கள் எளிதில் அடையாளம் காணலாம்.                                                           ( http://tamilsdirection.blogspot.in/2016/10/blog-post.html   )

அத்தகைய பயணமானது, தமிழ்நாட்டில் அரசியல் நீக்கத்திற்கு எந்த அளவு பங்களித்தது? என்பதும் ஆய்விற்குரியதாகும்.
‘'பணத்துவா' சமூக‌ நோயில் சிக்கி, 'அரசியல் நீக்கத்தில்' (Depoliticize) பயணிக்கும் தமிழ்நாட்டில், ஆர்.கே.நகர் தேர்தல் முடிவுக்கு அரசியல் ரீதியில் முக்கியத்துவம் கிடையாது; ஊடகங்கள் உள்ளிட்ட ஜ‌னநாயகத் தூண்கள் எல்லாம் ஊழல் ஊடுருவலில் சிக்கியுள்ள சூழலில். 

தமிழ்நாட்டில், இந்தியாவுக்கே முன்னுதாரணமாக, அரசு வேடிக்கை பார்க்க, டாஸ்மாக் கடைகளை பெண்களே அடித்து நொறுக்கி, அரசு பயந்து அக்கடைகளை அகற்றுவதும், லஞ்சம் வாங்கும் போலீசாரை இளைஞர்கள், ஃபோனில் வீடியோ எடுத்து, 'வாட்ஸ் ஆஃபில்' பரப்பி, அந்த போலீசார் சஸ்பெண்ட் ஆகி வருவதும், அரசியல் கட்சிகளை ஓரங்கட்டி, தமிழ்நாட்டில் ஆங்காங்கே பெண்களே பொதுப் பிரச்சினைகளுக்காக சாலை மறியல் மூலம் தீர்வு கண்டு வருவதும்;

தமிழ்நாட்டு அரசியல் கொள்ளைக்காரர்களுக்கு நெருங்கி வரும் ஆபத்தின் அறிகுறிகள் ஆகும்.’ என்பதையும் முந்தைய பதிவில் பார்த்தோம்.

சுமார் 10 வருடங்களுக்கு முன், 'திராவிட அரசியல் ஊழல்' காரணமாக, அரசு விவசாயத் துறை விநியோகித்த தரமற்ற விதைகள் காரணமாக, தமது கிராமத்தில் விவசாயத்தில் நட்டமடைந்த விவசாயிகளில் ஒருவராக இருத்து எதிர்ப்பு தெரிவித்த இளைஞரை, தனியாக 'அவருக்கான பலன்களுடன் கவனித்து', அந்த எதிர்ப்பை மலடாக்கியதை, நான் கேள்விப்பட்டிருக்கிறேன். தமிழ்நாட்டு பொதுவாழ்வு வியாபாரத்தில், 'வெற்றிக்கான எலும்புத் துண்டு இரகசியங்களை', 'திருச்சி பெரியார் மையம் சமூகக் கிருமிகள்' மூலம் நான் கண்டுபிடித்து வெளிப்படுத்திய பதிவில் முதல் இரகசியமானது;

தமது கிராமத்தில், ஊரில், தெருவில், பொதுப் பிரச்சினைகளுக்கு குரல் கொடுக்கும் இளைஞர்களை
அடையாளம் கண்டு, 'ஈர்த்து' பொதுவாழ்வு வியாபார 'அடிமட்ட தொண்டர் ஆள் பிடிக்கும் நுட்பமாக' விளக்கியிருந்தேன். ( http://tamilsdirection.blogspot.in/2013/10/normal-0-false-false-false-en-us-x-none_27.html  

அதாவது மேலே குறிப்பிட்ட 'முதல் இரகசிய' முறையில், அரசியல் கட்சிகள் அடிமட்ட தொண்டரை ஈர்க்கும் போக்கானது வற்றி, கட்சிகளுக்கும் மக்களுக்கும் 'விரிசல்' போக்கானது வளர்ந்து வருகிறது. அந்த போக்கில் வளர்ந்த 'அரசியல் நீக்க' (Depoliticize) உச்சக்கட்டமான நிகழ்காலத்தில், 

அரசியல் கட்சிகளை (பொதுப்பிரச்சினைகளுக்கு குரல் கொடுத்து, அதன் மூலம் கட்சிக்கு தொண்டராகி சம்பாத்திப்பவர்களை) ஓரங்கட்டி, தமிழ்நாட்டில் ஆங்காங்கே பெண்களே பொதுப் பிரச்சினைகளுக்காக சாலை மறியல் மூலம் தீர்வு கண்டு வருகிறார்கள். 

அது போன்ற பிரச்சினைகளுக்கு ஆக்கபூர்வமாக தீர்க்கும் வகையில்;
அந்தந்த கிராமத்தில், ஊரில், தெருவில், பொதுப் பிரச்சினைகளில் பங்கேற்காமல், தேர்தல் காலத்தில், மீடியா பலத்தில் வலம் வரும் கட்சிகளிடம், முந்தைய பதிவில் குறிப்பிட்டபடி கீழ்வரும் செயல்நுட்பத்தில் மக்கள் செயல்படுவதை குறை சொல்ல முடியுமா?

தமிழ்நாட்டில் ஊழலுக்கு எதிரான சமூக அழுத்தமானது பாரபட்சமின்றி வெளிப்பட்டால் தான்,

ஊழல் குற்றவாளிகளுக்கு உதவ, ஊழல் வலையில் சிக்கிய நீதிபதிகளும்  அஞ்சுவார்கள். ஊழலில் பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களை எல்லாம், தமிழ்நாட்டில் பள்ளிகளை சீரமைத்தல், சாலைகளை சீரமைத்தல், குடிநீர் பற்றாக்குறையை ஒழித்தல் போன்ற பொது காரியங்களுக்கு செலவிட வேண்டிய நெருக்கடியை மத்திய, மாநில அரசுகளும் உணரும்; ( http://tamilsdirection.blogspot.in/2017/11/cognitiveskills.html ) அந்த விளைவிற்கான 'ஊழல் எதிர்ப்பு கோப அலை'யானது உருவாகும் வரை, அறிவுஜீவிகள், பத்திரிக்கை அதிபர்கள் போன்றவர்கள் எல்லாம் ஊழல் திமிங்கலங்களுடன் 'நெருக்கமாகி', அவரவர் 'யோக்கியதைக்கு' ஏற்ற பலன்கள் அனுபவித்து வரும் சூழலில், அத்தகைய வாய்ப்புகள் சாதாரண மக்களுக்கு இல்லாத நிலையில்;

அரசியல் கொள்ளையர்களின் பணத்தை எல்லாம், கட்சிக் கூட்டங்களில் பங்கேற்க கட்டணம், வாக்குகள் விற்பனை, உள்ளிட்டு, தம்மால் முடிந்த வழிகளில் மக்கள் வசூலிப்பதை, தேர்தல் ஆணையமும், நீதி மன்றங்களும் தடுக்க முடியாது, என்பதையே ஆர்.கே.நகர் தேர்தல் முடிவு உணர்த்துகிறதா? என்பதும் விவாதத்திற்கு உரியதாகும். ‘

சுமார் 7 வருடங்களுக்கு முன் நடந்த சம்பவம்:

வசதி குறைவான கல்லூரி மாணவனிடம் அவன் நண்பன் கீழ்வரும் தகவலை தொலைபேசியில் தெரிவித்தான்.

‘அந்த நகரில் 1 மணிக்குள் குறிப்பிட்ட இடத்திற்கு வந்து, 2 மணி நேரம் நின்றால், ரூ 300 கிடைக்கும்.’

உடனே அந்த மாணவன் அந்த இடத்திற்கு சென்று, அங்கு ஒரு கட்சி நடத்திய 'முழக்க போராட்டத்தில்'(?) ஒரு கும்பலுடன் நின்ற தனது நண்பனை சந்தித்தான். சிறிது நேரத்தில் அதே போராட்ட கும்பலில், வேறொரு இடத்தில் நின்றால், கூடுதலாக ரூ 200 கிடைக்கும் என்று அறிந்து, அங்கு போய் நின்றார்கள். போராட்டம் முடிந்து, பணமும் பிரியாணி பொட்டலமும் வாங்கி (விரும்பியவர்களுக்கு கூடுதலாக 'குவார்ட்டர்')  வெளியேறும் போது தான், அந்த மாணவனுக்கு கீழ்வரும் விபரம் தெரிந்தது.

ஒரு கட்சி நடத்திய போராட்டம் அது. எந்த ஒன்றியம் எவ்வளவு பேரை போராட்டத்தில் பங்கேற்க வைத்தார்கள்? என்பதை, அந்த கட்சியின் தலைமைக் கழகம் கண்காணித்து, அதிகம் பேரை பங்கேற்க வைத்த ஒன்றிய பொறுப்பாளருக்கு, அடுத்து கட்சியில் உயர்பதவியும் அல்லது தேர்தலில் போட்டியிட வாய்ப்பும் கொடுப்பார்களாம்.

மக்களையும் அடிமட்டத் தொண்டர்களையும் முட்டாளாக்கி பயணித்ததன் தொகுவிளைவாக (Resultant);

ஆதாய அரசியலில், தமிழ்நாட்டில் கட்சிகளின் தலைமை பீடங்கள் எல்லாம் முட்டாளாகி வரும் காலக்கட்டமும் இதுவாகும்.

அதன் உச்சக்கட்ட வெளிப்பாடே ஆர்.கே.நகர் தேர்தல் முடிவாகும்;

'இந்துத்வா' எதிர்ப்பு, ஆதரவு கட்சிகள், 'பணத்துவா'விடம் ஏமாந்த செயல்நுட்பத்தினை வெட்ட வெளிச்சமாக்கி; 

மோடியின் ஊழல் ஒழிப்புக்கு, இந்தியாவிலேயே சவாலான போக்கில்.

'பணத்துவா'விடம் இருந்து தமிழ்நாட்டைக் காப்பாற்றாமல், தமிழையும், தமிழர்களையும் வீழ்ச்சிப்பாதையிலிருந்து மீட்க முடியாது.
'நாடு எக்கேடு கெட்டால் என்ன? நாம் மட்டும் புத்திசாலித்தனமாக பிழைப்போம்' என்ற நோக்கில்;
படித்த வசதியான தமிழர்களில், 'பணத்துவா' தூண்டுவித்த‌, 'அந்த' ஓட்டப்பந்தயத்தில் தொடர்வது ‘முட்டாள்த்தனமான வாழ்க்கை’ என்பதை உணர்ந்தவர்கள் எல்லாம்;
அரசியல் கொள்ளையர்களை அடிவருடி பாதுகாத்து வரும் தத்தம் தன்மானக் கேடான‌ 'சொகுசு மண்டிலத்திலிருந்து' (Comfort Zone) வெளியேறி;
'இழப்புகளை' விரும்பி ஏற்று, இயன்ற அளவுக்கு சாமான்யர்களின் வாழ்வை 'அனுபவித்து';
அவர்களோடு ‘ஒட்டி’ பயணிப்பதன் மூலமே; 'பணத்துவா'விடம் வீழ்ந்துள்ள  தமிழையும், தமிழர்களையும், தமிழ்நாட்டையும் மீட்பதில் பங்களிக்க முடியும்.
தமிழ்நாட்டில் மற்ற தலைவர்களைப் போலின்றி, உடலும் மனதும் பிறர் சார்பின்றி (Physically & Mentally independent) வாழ்ந்தது வரையில், 'சாமான்யர்' பயன்படுத்தும் போக்குவரத்து உள்ளிட்ட எளிமையான வாழ்வு மூலமே, ஈ.வெ.ரா அவர்கள் 'பிரமிக்கும்' வகையில் சமூக ஆற்றலை ஈட்ட முடிந்தது. 1944இல் அவரின் தவறான திசை திரும்பலின் விளைவாகவே, இன்று எல்லா கொள்கைகளையும் வீழ்த்தி, 'பணத்துவா' வெற்றி பெற்றுள்ளது. அதை வீழ்த்தி, தமிழ்நாட்டை மீட்கவும், அதே எளிமை வழியில் பயணித்தே வெற்றி பெற முடியும்.
தமிழ்நாட்டின் மீது சுயலாப நோக்கின்றி அக்கறையுள்ளவர்கள் எல்லாம் மனது வைத்தால், தமிழ்நாட்டை 'பணத்துவா' நோயிலிருந்து மீட்பதும் சாத்தியமே.

No comments:

Post a Comment