Tuesday, July 9, 2019


'ஒரீஇ' தந்த வெளிச்சம் (1);


தனித்தமிழ் அறிவின் 'கறுப்பு - வெள்ளை நோய்'
 


அறிவுபூர்வ அணுகுமுறையில் இருந்து தடம் புரண்டு, 'பெரியார்' ஆதரவாளர்களில் பெரும்பாலோர் 'சமஸ்கிருத மொழி எதிர்ப்பு' திசையில் பயணித்து, 'கருத்து கறுப்பு வெள்ளை நோய்க்கு' உள்ளாகியிருப்பதை ஏற்கனவே தெளிவுபடுத்தியுள்ளேன்.

சமஸ்கிருத மொழி தொடர்பாக வெளிப்படும் எந்த கருத்தினையும் திறந்த மனதுடன் அணுக முடியாமல், 'சமஸ்கிருத ஆதரவு (கறுப்பு) அல்லது எதிர்ப்பு (வெள்ளை)’ என்ற உணர்ச்சிபூர்வ சார்பு அணுகுமுறையில் அணுகுவதே 'அறிவு கறுப்பு வெள்ளை நோய்' அறிகுறியாகும். 'சமஸ்கிருத மொழி எதிர்ப்பு' என்ற மனநோயில் தனித்தமிழ் அறிவானது சிக்கி, 'அறிவு கறுப்பு வெள்ளை நோய்க்கு' உள்ளாகியுள்ளது. எனது ஆய்வின் மூலமாக, 'ஒரீஇ' தந்த வெளிச்சமானது, அதனை எவ்வாறு நிரூபித்துள்ளது? என்பதை இங்கு பார்ப்போம்.

பழந்தமிழ் இலக்கியங்கள் எல்லாம் பல்துறை (inter-diaciplinary) அறிவின் மூலமே விளங்கிக் கொள்ள கூடியவை ஆகும். அதிலும் தொல்காப்பியத்தில் உள்ள யாப்பிலக்கணத்தை விளங்கிக் கொள்ள வேண்டுமானால், மொழியியல் (Linguistics) அறிவும், தமிழ் இசையியல் (Tamil Musicology) அறிவும், 'இசையின் இயற்பியல்’ (Physics of Music) அறிவும், இருந்தால் மட்டுமே அதனை விளங்கிக் கொள்ள முடியும். தமிழறிவுள்ளவர்களில் தமது அறிவு வரைஎல்லைகள் (intellectual limitations) புரிந்து ஆய்வு மேற்கொண்டவர்களும் இருக்கிறார்கள்; புரியாமல் மேற்கொண்டவர்களும் இருக்கிறார்கள். ஆனால், நானறிந்தது வரையில், தனித்தமிழ் அறிவில் இன்று நம்மிடையே வாழ்பவர்களில், விதி விலக்கின்றி,தமது அறிவு வரைஎல்லைகள் புரியாமல் பயணிப்பவர்களே இருக்கிறார்கள். அவர்களில் சிலர் கடவுளால் நியமிக்கப்பட்ட நீதிபதிகள் போல, அறிவுபூர்வ விவாத நாகரீகமின்றி பயணிப்பதை அனுமதிப்பானது, தமிழின் மீட்சியை மிகுந்த தாமதத்திற்கு உள்ளாக்கும் ஆபத்தாகி வருகிறது.

ஆட்சியில் இருந்தவர்களை அடிவருடி வாழாத, எளிமையாக வாழும் மதிக்கத்தக்க தனித்தமிழ் அறிஞர் ஒருவர், ‘திருக்குறளில் தமிழ் இசையியல்’ (Tamil Musicology in thirukkuRaL) தொடர்பான எனது ஆய்வுகளை ஊக்குவித்தார். எனவே தொல்காப்பியத்தில் வரும் 'ஒரீஇ' தொடர்பான எனது ஆய்வு பற்றி, சுமார் 15 வருடங்களுக்கு முன்பு, தொலைபேசியில் தெரிவித்தேன். உடனே அவர் அன்பு கலந்த கண்டிப்புடன், "வீரபாண்டியன், உங்கள் ஆய்வுகளை எல்லாம் இசையோடு நிறுத்திக் கொள்ளுங்கள்" என்று அறிவுரை வழங்கினார்; தொல்காப்பியத்தில் எனது இசை தொடர்பான ஆய்வின் தொடர்ச்சியே 'ஒரீஇ' ஆய்வு என்பதை சொல்வதற்கு வாய்ப்பில்லாமல். அதுவும் எனக்கு நல்லதானது. எனவே எனது ஆய்வினை எந்தெந்த கோணத்தில் மறுக்க முடியும்? என்று எனக்கு நானே 'பேயின்' வழக்கறிஞரானேன்.

'அந்த' பேயின் வழக்கறிஞர் மூலமாக வெளிப்பட்ட ஐயங்களை எல்லாம், களையும் நோக்கில், 'ஒரீஇ' தொடர்பான ஆய்வில் முன்னேறினேன். அப்போது 'ஒரீஇ' தொடர்பான தொல்காப்பிய சூத்திரத்தில் இடம் பெற்ற 'கிளவி' என்ற சொல்லானது எனது கவனத்தினை ஈர்த்தது.

தொல்காப்பியத்தில் வரும் 'கிளவியாக்கம்' என்பதைச் சான்றாகக் கொண்டு, சென்னைப்பல்கலைக்கழகம் வெளியிட்ட 'லெக்சிகன்', 'கிளவி' என்ற சொல்லுக்கு, 'word, term; மொழி' என்று பொருள் தந்துள்ளது.

மேலுள்ள விளக்கம் சரியானால், கீழ்வரும் தொல்காப்பிய சூத்திரத்தில் ஒரே வரியில் அடுத்தடுத்து ஏன் 'சொல் கிளவி' இடம் பெற்றது? என்பது ஆய்விற்குரியதாகும்.

வடசொல் - கிளவி வட எழுத்து ஒரீஇ,
எழுத்தொடு புணர்ந்த சொல் ஆகும்மே.
சிதைந்தன வரினும், இயைந்தன வரையார். ”
-       தொல்காப்பியம் சொல் 9: 5 – 6

அது மட்டுமல்ல, அதே வரியில் 'வடசொல் கிளவி' தொடர்பான 'வட எழுத்து' எதற்காக இடம் பெற்றது? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

ஒரு மொழியில் எழுத்து வடிவம் கண்ணால் பார்க்கக் கூடியதாகும். கையால் எழுதக்கூடியதாகும். எனவே ஒரு சமூகத்தின் வாழ்வியலில், தொழில்நுட்ப வளர்ச்சியில் உண்டாகும் மாற்றங்கள் மூலமாக, 'அந்த' சமுக மொழியில் உள்ள எழுத்துக்களின் வரி வடிவமானது, தொடர்ந்து மாற்றங்களுக்கு உள்ளாக நேரிடும். அது போன்ற மாற்றங்கள் தமிழ் எழுத்துக்களின் வரி வடிவங்களிலும் நிகழ்ந்துள்ளன.

ஒரு மொழியில் எழுத்தானது வாயால் உச்சரிக்கப்படும் போது, வாயிலிருந்து ஒலியாக வெளிப்பட்டு செவியால் ஓசையாக உணரப்படுகிறது. அந்த ஓசையானது, இசை தொடர்புள்ள விதிகளுக்கு உட்படும் போது, செவியால் இசையாக உணரப்படுகிறது.

தொல்காப்பியத்தில் தமிழ் எழுத்தானது வாயினுள் எவ்வாறு பிறக்கிறது? என்பது தொடர்பான சூத்திரங்கள் உள்ளன‌.

தொல்காப்பியத்தில் 'ஒசை, இசை' ஆகிய சொற்களே இடம் பெற்றுள்ளன. திருக்குறள் உள்ளிட்ட சங்க இலக்கியங்களில் இடம் பெற்ற 'ஒலி' என்ற சொல்லானது, ஏன் தொல்காப்பியத்தில் இடம் பெறும் தேவை எழவில்லை? என்பதும் ஆய்விற்குரியதாகும்.

தமிழ் எழுத்துக்களை செவியால் உணர்ந்த ஓசை வடிவம் (Acoustic Format) மட்டும், தொல்காப்பியம் முதல் இன்று வரை மாறவில்லை. கிராமங்களில் எழுதப்படிக்க தெரியாதவர்கள் எல்லாம் தமிழில் பேசும் போது, ஒருமை, பன்மை, கடந்த காலம், நிகழ் காலம், எதிர்காலம் உள்ளிட்ட அடிப்படையான இலக்கண விதிகளுக்குட்பட்டே எவ்வாறு பேச முடிகிறது?

ரு தமிழ் எழுத்தின் ஓசை வடிவம் எப்படி இருக்கும்? என்பதை ஆர்வமுள்ளவர்கள் கண்களால் கீழ்வரும் முறையில் பார்க்கவும் முடியும்.

'Praat' (https://en.wikipedia.org/wiki/Praat ) போன்ற மொழியியல் ஆய்வுகளுக்கான இலவசமான மென்பொருள் .( free computer software package for speech analysis ) கொண்ட கணினியில், தாம் விரும்பும் தமிழ் எழுத்தை தமது வாயால் உச்சரித்து, கணினியில் ஒலிப்பதிவு செய்தல் வேண்டும். பின் கணினியின் திரையில், 'அந்த' எழுத்தை நாம் உச்சரித்த நேரம், அந்த நேரத்தில், அந்த எழுத்தொலியில் இருந்த அதிர்வெண்கள் (Frequencies), முழக்க அளவுகள் (Loudness) உள்ளிட்ட செவி மூலமாக உணரும் ஒலியின் பண்பு தொடர்பான அளவுகளை (aural parameters) எல்லாம் பெற முடியும். அதே எழுத்தை, சில ஆண்கள், சில பெண்கள், சில ஆரம்பப்பள்ளி மாணவர்கள் எல்லாம் உச்சரிக்கச் செய்து பதிவு செய்யலாம். அந்த ஒலிப்பதிவுகளின் அடிப்படையில் உள்ள வேறுபாடுகளைத் தாண்டி, அந்த எழுத்தொலியின் பொதுவானதனித்துவமான (unique) மேற்குறிப்பிட்ட பண்பு அளவுகளின் தொகுப்பே, அந்த எழுத்துக்கான 'ஓசை வடிவம்' (Acoustic Format) ஆகும். அந்த ஓசை வடிவமானது மூளையில் பதிவாவதால், அந்த எழுத்தின் ஒலியானது, செவியால் ஓசையாக உணரப்படும் போது, மூளையின் உதவியால், அந்த எழுத்தை செவி மூலமாக அடையாளம் காண முடிகிறது.

அகரக் கிளவி’ (தொல்காப்பியம்- 1 எழுத்து; 3. பிறப்பு இயல் 13) '' என்ற எழுத்தின் ஓசை வடிவத்தைக் குறிக்கிறது. எனவே எழுத்தின் கிளவி என்பதானது, எழுத்தின் ஓசை வடிவத்தினையும், 'சொற்கிளவி' என்பதானது சொல்லின் ஓசை வடிவத்தினையும் குறிக்கின்றன. தொல்காப்பிய விதிகளில் 'கிளவி' என்ற சொல் இடம் பெறும் இடங்களை எல்லாம் ஆராய்ந்தால்;

தொடர்புள்ள ஓசை மாற்றங்களின் மூலமாக, என்னென்ன வேறுபாடுகள் வெளிப்படுகின்றன? என்பவை எல்லாம் விளக்கப்பட்டுள்ளன.

தொல்காப்பியத்தில் 'எழுத்து' என்ற சொல் இடம் பெறும் இடங்களையும், எழுத்து தொடர்பான 'கிளவி' என்ற சொல் இடம் பெறும் இடங்களையும், 'சொல்' இடம் பெறும் இடங்களையும், 'சொல்' தொடர்பான 'கிளவி' இடம் பெறும் இடங்களையும் ஆராய்ந்தால்;

ஓசை வேறுபாடுகளின் அடிப்படையில் விளக்கும் போது, 'கிளவி' என்ற சொல் பயன்படுத்தப்படுவது தெளிவாகும்.

அதாவது 'செமாண்டிக்- Semantic' தேவைப்படும் இடங்களில் 'எழுத்து, சொல்' போன்றவையும், ‘அகூஸ்டிக் -Acoustic’ – (Acoustic Format-ஓசை வடிவம்) தேவைப்படும் இடங்களில் எல்லாம் 'கிளவி' என்ற சொல்லானது, பயன்படுத்தப்பட்டிருப்பது தெளிவாகும்.

எனவே தொல்காப்பியத்தில் 'எழுத்து', 'சொல்' போன்றவைக்கெல்லாம் பொருள் தொடர்பான அணுகுமுறையும், ஓசை தொடர்பான அணுகுமுறையும், ஆகிய இரண்டு பரிமாணங்கள் உள்ளன. உலகில் உள்ள மொழிகளின் தகவல் பரிமாற்றமானது, குறிப்பிட்ட ஓசை வடிவங்களுக்கு குறிப்பிட்ட எழுத்தை அடையாளப்படுத்தி, அதன் பின்னர் அந்த எழுத்துக்கள் சேர்ந்து உருவாக்கும் சொல் தொடர்பானஉச்சரிப்பினை, செவி மூலமாக உணர்வதற்கான ஓசை வடிவமும், அந்த சொல்லிற்கான ஓசை வடிவத்தினை அந்த சொல்லிற்கான பொருளோடு அடையாளப்படுத்தி,, அந்த இரண்டு பரிமாணங்களின் அடிப்படையில் இலக்கண விதிகள் உருவாக்கப்படுகின்றன
(‘The Origins of Tamil Classical Music’; https://www.youtube.com/watch?v=7lGtWcwS7Ww&t=1220s )

இலக்கண விதிகள் எல்லாம் சமூகத்தோடு உயிரோட்டமுள்ள மாற்றங்களுக்குட்படுத்துவதன் முக்கியத்துவம் தெரியாமல், தனித்தமிழ் ஆர்வலர்களும், அமைப்புகளும் தமிழுக்கு எவ்வாறு கேடு செய்கிறார்கள்? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

மேலே சுட்டிக்காட்டிய 'ஒரீஇ' தொடர்பான தொல்காப்பிய சூத்திரத்தில்:

'ஒரீஇ' என்ற சொல்லை 'நீக்கி, தவிர்த்து' என்று பொருள் கொண்டு, அத்துடன் நிற்காமல், வேற்று மொழிச் சொற்களை தமிழில் அனுமதிப்பதை எதிர்க்கும் நியாயமும் அதில் இருப்பதாக புரிந்து கொண்டதானது எவ்வாறு தவறானது? என்பதையும்;

ஜப்பானிய மொழியில் பிறமொழிச் சொற்களை இறக்குமதி செய்ய உருவாக்கப்பட்ட 'கடகானா' (katakana syllabary) முறையானது, எவ்வாறு தொல்காப்பிய 'ஒரீஇ' முறையில் அமைந்துள்ளது? தொல்காப்பிய  'ஒரீஇ' முறையானது, எவ்வாறு உலக மொழிகளுக்கான பிறமொழிச்சொற்கள் இறக்குமதிக்கான இலக்கணம் ஆகும்? என்பதையும்;

ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

தொல்காப்பியத்தில் 'நீக்கி, நீங்கி, வேண்டா, ஒழித்துகொள்ளா, விலக்கலும்' ஆகிய சொற்கள் இடம் பெற்றுள்ளன. தொல்காப்பியம் உள்ளிட்ட பழந்தமிழ் இலக்கியங்களில் இடம் பெற்ற சொல் ஒவ்வொன்றும் மிகவும் துல்லியமான பொருளில் தான் பயன்படுத்தப்பட்டுள்ளன.

தமிழ் எழுத்துக்களின் ஓசை வடிவத்தில் இருந்து வேறுபட்ட ஓசை வடிவம் கொண்ட எழுத்துக்கள் சமஸ்கிருதம் உள்ளிட்ட வடமொழிகளிலும், பிற மொழிகளிலும் உள்ளன.

அவ்வாறு ஓசை வடிவமானது தமிழ் எழுத்துக்களில் இருந்து வேறுபட்ட எழுத்துக்களும், வேறுபடாத எழுத்துக்களும் கொண்ட ஒரு வட சொல்லினைத் தமிழில் இறக்குமதி செய்யும் போது, அந்த வேறுபட்ட சொல்லின் ஓசை வடிவம் சிதையும் வகையில் தமிழ் எழுத்தை உருவாக்கும் செயல் முறையே ஒரீஇ ஆகும்.( orIi referred to the acoustic-phonetic-  distortion of the letters of the non-Tamil words,) அந்த செயல்முறை மூலமாக உருவாக்கிய எழுத்தோடு, ஓசை வடிவம் வேறுபடாத தமிழ் எழுத்துக்கள் புணர்ந்தே தமிழில் வடசொல் இறக்குமதியை தொல்காப்பியம் அனுமதித்துள்ளது. 'ஸூத்ரா' என்ற சமஸ்கிருதச் சொல்லினை 'சூத்திரம்' என்று இறக்குமதி செய்த சான்றானது தொல்காப்பியத்திலேயே உள்ளது.

இறக்குமதிக்குள்ளாகும் சொல்லில் உள்ள எழுத்துக்களில், எந்த எழுத்தின் ஓசைக்கு இணையான ஓசை உள்ள தமிழ் எழுத்து இல்லையோ, 'அந்த' எழுத்தின் ஓசையை அப்படியே இறக்குமதி செய்ய முடியாது. எனவே ஒலிப்பியல் இறக்குமதிக்கு (Phonetic Import) தகுதியற்ற 'அந்த' எழுத்தின் ஓசைக்குப் பதிலாக, 'அந்த' ஓசைக்கு நெருக்கமான தமிழ் எழுத்தினைப் பயன்படுத்தி, வட சொல்லினை, தமிழ் எழுத்துக்கள் மூலமாக இறக்குமதி செய்தலே, 'ஒரீஇ' முறையாகும்

தொல்காப்பியம் செய்யுள் இயற்ற அனுமதித்துள்ள நான்கு வகைச் சொற்களில் வட சொல்லும் இடம் பெற்றுள்ளது.

எனவே ஒரீஇ தொடர்பான தொல்காப்பிய சூத்திரமானது ஒலிப்பியல் இறக்குமதிக்கான (Phonetic import) சூத்திரம் ஆகும். அது மட்டுமல்ல, பொருள் மொழிபெயர்ப்பு இறக்குமதிக்கான (Semantic Import) சூத்திரம் தொல்காப்பியத்தில் இல்லைபொருள் சிதைவு அபாயமும் பொருள் மொழிபெயர்ப்பு (semantic import) முறையில் இருப்பது தெரிந்ததே, அதற்குக் காரணமாக இருக்கலாம்

கிரந்த எழுத்துக்களுடன் வட சொற்கள் ஏன் வைணவ இலக்கியமான நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் இடம் பெற்றுள்ளன? சைவ இலக்கியமான தேவாரத்தில் இடம் பெறவில்லை

சங்க காலம் முதல் காலனியத்திற்கு முன் வரையில், தமிழ் இலக்கியங்களில்,, சமஸ்கிருதம் உள்ளிட்ட வேறு எந்த மொழியும் திணிக்கப்பட்டதற்கோ, எதிர்க்கப்பட்டதற்கோ சான்றுகள் உண்டா? காலனிய காலக்கட்டத்தில் அறிமுகமான சாதிச்சிக்கல்களை எல்லாம், தமிழ்நாட்டில் காலனியத்திற்கு முன் இருந்ததாக கருதுவது எவ்வாறு தவறாகும்? என்பதையும் ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.com/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

காலனியத்திற்கு முன்னும், பின்னும் தமிழில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை ஆராய்ந்தால் தான், அந்த மாற்றங்களினால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு தீர்வாக, வரலாற்றுக் கட்டாயமாக உருவான தனித்தமிழ் இயக்கமானது, எந்த காலக்கட்டத்தில் அறிவுபூர்வ அணுகுமுறையில் இருந்து தடம் புரண்டு, உணர்ச்சிபூர்வ சமஸ்கிருத எதிர்ப்பு நோயில் சிக்கியது? அதன் தொடர்விளைவாக தமிழுக்கு என்ன கேடு எவ்வாறு நிகழ்ந்தது? என்பதற்கான விடைகளைக் கண்டுபிடிக்க முடியும்.

லத்தீனின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்ட ஐரோப்பிய மொழிகளை எல்லாம், தாய்மொழியாகக் கொண்டவர்கள் லத்தீன் வெறுப்பு நோயில் இன்று பயணிக்கிறார்களா? அல்லது இன்றும் லத்தீனில் உள்ள அறிவு தொடர்பான செல்வத்தினை பாராட்டுகிறார்களா? என்ற கேள்விகளுக்கான விடைகள் மூலமாக, சமஸ்கிருத மொழி வெறுப்பு நோய் பற்றிய தெளிவு பெறலாம்.

ஒருவர் எழுதும் தமிழில் உள்ள இலக்கணப்பிழைகளைச் சுட்டிக் காட்டி திருத்தும் மென்பொருளும்(software), தொல்காப்பியம் தொடங்கி, தமிழில் உள்ள இலக்கியங்களில் விரும்பும் பகுதிகளையும், அவற்றிற்கான உரைகளையும், ஆய்வு விளக்கங்களையும் சில நொடிகளில் தேடித்தரும் மென்பொருளும் (software), தமிழில் பரவலாகப் பயன்படுத்தப்படும் காலம் அதிக தொலைவில் இல்லை. அதன் காரணமாக அத்தகைய 'புலமை'யானது இனி அவசியமற்றதாகிவிடும். உலக அளவில் தமிழ் உள்ளிட்டு கணினிமயத்திற்குள்ளான மொழிகளின் அடுத்த கட்ட புலமையானது, அந்தந்த மொழிகளின் தனித்தன்மைகளுக்கு ஏற்ற வகையில் பயணிக்கத் தொடங்கியுள்ளது தொடர்பான 'சிக்னல்'களும் (signals) வெளிப்படத் தொடங்கியுள்ளன

செயற்கை அறிவாற்றல் துறையில் (Artificial Intelligence) உருவாகும் 'தமிழ்ப்புலமை எந்திரருடன்' போட்டி போட்டால், 'மண்ணைக் கவ்வும்' அளவுக்கு வாழ்ந்து வரும், அரைகுறை தமிழ்ப்புலமை யாளர்கள் எல்லாம் சமூகத்தில் சருகாகி உதிரும் காலமும் நெருங்கி வருகிறது. அந்த போக்கில் தமிழ் தொடர்பான சுயலாப வலைப்பின்னல்கள் எல்லாம் ஓரங்கட்டப்பட்டு, பாரபட்சமற்ற அறிவுபூர்வமான விவாதங்களின் மூலமாக, தமிழ்/தமிழ் இசை ஆய்வுகள் முன்னேறும் காலமும் நெருங்கி வருகிறது.

அந்த'  போக்கின் காரணமாகவே, மேலே குறிப்பிட்ட 'தமிழ்ப்புலமை எந்திரரை' விட, கீழான புலமையுடன் வலம் வரும் 'செல்வாக்கான'(?) தமிழ்ப்புலமையாளர்களும் இருக்கிறார்களா?

தமிழ்ப்புலமையானது, 'எந்திரர்'(Human Robot) திசையில் இனி பயணிக்க முடியாது

தமிழ் இசையியல் (Tamil Musicology) அறிவின்றி, யாப்பிலக்கணத்தை விளங்கிக் கொள்ளவும் முடியாது; அவ்வாறு விளங்கிக் கொள்ளாமல், மாணவர்களுக்கு யாப்பிலக்கணம் கற்பிக்க முயல்வதானது, கேலிக்கூத்தாகும் காலமும் நெருங்கி வருகிறது



குறிப்பு: 

தமிழ்நாட்டில் சமஸ்கிருத வெறுப்பு நோயின் காரணமாக, தமிழுக்கு விளைந்துள்ள பாதிப்புகளை எல்லாம் புரிந்து கொள்ள:

குடுமியான்மலை இசைக்கல்வெட்டில் இசைச்சுரங்கள் தொடர்பான எழுத்துக்களும், வாசகங்களும் சமஸ்கிருதத்தில் இருக்கின்றன. அவற்றை 'தமிழ் இசையியல்' (Tamil Musicology) மற்றும் தொல்காப்பியத்தில் கண்டுபிடித்துள்ள 'இசை மொழியியல்' ஆகியவற்றுடன் எவ்வாறு தொடர்பு படுத்த முடியும்?

மேலே குறிப்பிட்ட கேள்விகளுக்கான விடைகள் பெற, குடுமியான் மலை இசைக்கல்வெட்டு, திருமயம், அதனருகே உள்ள மலையக் கோவில் இசைக்கல்வெட்டுகள் தொடர்பான சான்றுகளை தேடி எடுத்து, விடைகள் எழுதும் முயற்சியில் தற்போது ஈடுபட்டுள்ளேன்.  

சமஸ்கிருதத்தின் துணையுடன் உலக 'மொழியியல்' (Linguistics) துறையில், தொல்காப்பியத்தில் எனது கண்டுபிடிப்புகளின் அடிப்படையில் 'இசை மொழியியல்' (Musical Linguistics) என்ற புதிய துறை உருவாகும் நோக்கில், அதற்கான ஆய்வுத்திட்டத்தினையும் தொடங்கியுள்ளேன். 
(http://tamilsdirection.blogspot.com/2018/10/normal-0-false-false-false-en-in-x-none_21.html) 

Tamil scholarship, in the digital age, is becoming inter-disciplinary, with the scope for developing new marketable products. With the introduction of spell check, grammar check, and search options of Lexicon and the commentaries, Tamil literate scholars in science and technology, bypassing the duration to acquire the traditional Tamil scholarship, could subject the ancient Tamil texts to inter-disciplinary research.

'DECODING ANCIENT TAMIL TEXTS – THE PITFALLS IN THE STUDY & TRANSLATION'

https://www.amazon.com/DECODING-ANCIENT-TAMIL-TEXTS-TRANSLATION/dp/9811419264

1 comment:

  1. மிகச்சரி யான ஆய்வு
    நுண்ணிய அறிவு காய்தல் உவத்தலை கடந்து
    வெளிப்படும் அறிவு நன்று

    ReplyDelete