Thursday, December 21, 2017

மரணப்படுக்கையில் இருந்து, 'தமிழ், தமிழர் அடையாள மீட்சி';
                 பாரதியும், பாரதிதாசனும் (1)


தமிழ்நாட்டில் 'வழிபாட்டுப் புழுதிப் புயலில்' சிக்கியவர்கள் வரிசையில் பாரதியைக் குறிப்பிட்டிருந்தேன். (http://tamilsdirection.blogspot.in/2014/10/normal-0-false-false-false-en-us-x-none_5.html   ) அதில் பாரதிதாசன் விடுபட்டுள்ளார்..

பாரதிதாசன் சாகும் வரை பாரதியை விட்டுக் கொடுக்காமல்;

அதே நேரத்தில் 'தமிழர்' என்ற அடையாளத்திற்கு, 'இந்தியர்' என்ற அடையாளமானது இணக்கமான திசையில், முன்னோடியாக‌ பாரதி பயணித்ததை எதிர்க்காமல்;

'இந்தியர்' என்ற அடையாளத்தை எதிர்த்து, 'திராவிட நாடு' பிரிவினை ஆதரவு போக்கில் பாரதிதாசன் பயணித்ததில், நேர்மை இருக்கிறதா? அதன் மூலம் வழிபாட்டு புழுதிப் புயலில் பாரதியை சிக்க வைத்ததில், பாரதிதாசனுக்கும் பங்கு உண்டா?

பணத்திற்கு பாரதிதாசன் கொடுத்த முக்கியத்துவத்தை, பாரதியார் கொடுக்கவில்லை.

'அண்ணதுரையா எனக்கு பொற்கிழி கொடுத்தார்?' என்ற தலைப்பில், 'குயில்' இதழில் பாரதிதாசன் வெளியிட்ட தொடர் கட்டுரைகளை இன்று வெளியிட‌, பாரதிதாசன் பிரியர்களில் எவருக்காவது  துணிச்சல் இருக்கிறதா? அதே போல ஜீவாவைக் கண்டித்து , 'குயில்' இதழில் பாரதிதாசன் வெளியிட்ட கட்டுரையை வெளியிட கம்யூனிஸ்ட் ஆதரவாளர்களில் எவருக்கும் துணிச்சல் இருக்கிறதா? அண்ணாவும், ஜீவாவும் அந்த காலக்கட்டத்தில், பாரதிதாசனைப் பற்றி வெளியிட்ட கருத்துக்களையும், அதில் சேர்த்து வெளியிடுவார்களா?

பாரதிதாசன் தொடர்பாக இன்றுவரை நீடித்து வரும் மேலே குறிப்பிட்ட இருட்டடிப்பானது, பாரதியார் படைப்புகளுக்கு நிகழவில்லை;

அறிவுநேர்மையில் பாரதிதாசன் பிரியர்களை விட, பாரதியின் பிரியர்கள் மேம்பட்டவர்களா? என்ற ஆய்வுக்கு வழி வகுத்து. 

பாரதிதாசன் தொடர்பான 'அந்த' 'இருட்டடிப்பு சமூக செயல்நுட்பமானது' திராவிடர்/திராவிட இயக்க வளர்ச்சிப் போக்கில், நேர்மையான அறிவுபூர்வ விமர்சனங்களை பலகீனமாக்கி, 'வழிபாட்டுப் போதையிலான உணர்ச்சிபூர்வ' போக்கினை ஊக்குவித்ததால் வந்த விளைவு;



என்பதும் எனது ஆய்வு முடிவாகும். அறிவுபூர்வ விவாதங்களைத் தவிர்த்து பயணிக்கும் இயக்கத்தின் சமூக அடித்தளமானது, வெளியில் தெரியாமல் வேகமாகபலகீனமாகி, திருப்புமுனைக்கட்டத்தில், எதிர்பாராத குறுகிய காலத்திலேயே, சமூக மண்ணுக்குள் புதைந்து விடும். அப்படிப்பட்ட ஆபத்தில் 'பெரியார்' கட்சிகள் சிக்கியுள்ளதையும் நான் ஏற்கனவே எச்சரித்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2016/01/normal-0-false-false-false-en-us-x-none_31.html )

'பாரதியின் பிம்பத்தை பாதிக்குமா? பாதிக்காதா? 'என்ற கவலையின்றி, பாரதியின் எழுத்துக்கள் எல்லாம் வெளிவந்துள்ளன.



அவற்றை அடிப்படையாக கொண்டே, பாரதி நூற்றாண்டு விழா தொடக்கத்தில், நான் 'பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே' என்ற தலைப்பில் ஒரு நூலை வெளியிட்டேன். (குறிப்பு கீழே)

'பெரியார்' கொள்கையாளராக நான் பயணித்த காலத்தில், ' பிராமண எதிர்ப்பு செனோபோபியாநோயில் சிக்கியிருந்ததையும், பின்னர் மேற்கொண்ட இசை ஆய்வுகள் மூலம் அந்நோயிலிருந்து விடுதலை ஆனதையும், ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2017/12/1-music-informationtechnologist-inputs.html  ) 

அவ்வாறு அந்த நோயுடன் பயணித்த காலத்தில், அந்நோயின் விளைவான, ‘சமூககருத்து கறுப்பு-  வெள்ளை’ (Social Colour Blindness) குறைபாட்டில் சிக்கி: ( http://tamilsdirection.blogspot.in/2013/12/normal-0-false-false-false-en-us-x-none_4.html  )

பாரதியை கறுப்பாகவும், பாரதிதாசனை வெள்ளையாகவும் அணுகியிருந்தேன்.

மேற்கத்திய சமூக வரலாற்றில் உருவான 'நேஷ்னலிசம்' (Nationalism)  என்ற ஆங்கிலச் சொல்லை, 'தேசியம்' என்று தமிழ் உள்ளிட்ட இந்திய மொழிகளில் இறக்குமதி செய்த குழப்பம் பற்றிய தெளிவின்றி, நான் பயணித்த காலத்தில் உருவானது ' பெரியாரியல் பார்வையில் இந்திய தேசியம்' என்ற நூலாகும்.

அது போலவே, 'பெரியார்' .வெ.ராவின் 'பார்ப்பனீயம்' நிலைப்பாட்டை நான் ஏற்றுக் கொண்டிருந்த காலத்தில், நான் எழுதிய நூல் 'பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே' ஆகும். இன்று எனது இசை ஆய்வுகள் மூலம், 'பெரியார்' .வெ.ராவின் அந்த நிலைப்பாடானது தவறு;

என்று வெளிப்பட்டுள்ளதையும் பதிவு செய்துள்ளேன்

அதே நேரத்தில், இன்று வழிபாட்டு புழுதிப் புயலில், 'பெரியார்' .வெ.ரா, அண்ணா வரிசையில் பாரதியும் சிக்கி இருப்பதையும், நான் பதிவு செய்துள்ளேன்.

வழிபாட்டு புழுதிப் புயலில் இருந்து மீட்டு, பாரபட்சமற்ற அறிவுபூர்வ அணுகுமுறையில், திருக்குறள் (504) வழியில், நிறை, குறைகளை கணக்கில் கொண்டாலும், குறைகளை மீறி, நிறைகள் வெளிப்பட்ட காரணத்தால், திருக்குறள் (573) வழியில் எனது பார்வையில், 'பெரியார்' .வெ.ரா, அண்ணா வரிசையில் பாரதியும் மதிக்கத்தக்கவரே ஆவார்.

ரஷ்யப் புரட்சியை வரவேற்றதிலும் சரி, 'லெனின் வழி சரியான வழியில்லை' ( 28, நவம்பர், 1917 'செல்வம்' கட்டுரையில்) என்று கண்டித்ததிலும் சரி, கடலூர் சிறையிலிருந்து மன்னிப்பு மடல் கொடுத்து விடுதலை ஆனதிலும் சரி, அம்மடலில் தெரிவித்தபடி காலனி அரசை சாகும் வரை எதிர்க்காமல், தான் விரும்பிய பணிகளில் ஈடுப்பட்டதிலும் சரி, தனது மகளுக்கு ஒரு பொறுப்புள்ள பிராமண தந்தையாக திருமண ஏற்பாடுகளை மேற்கொண்டதிலும் சரி, அதை பாரதி பகிரங்கமாக செய்தார். அந்த நேர்மைக்கும் ஒரு துணிச்சல் வேண்டும்.

பாரதி பகிரங்கமாக மேற்கொண்ட மேலே குறிப்பிட்டவற்றை இருட்டில் வைத்து, பாரதிதாசன் பிரியர்களைப் போலவே,  பாரதியை புகழும் பாரதி பிரியர்கள் இன்றும் இருக்கிறார்கள். அவ்வாறு இருட்டில் வைப்பதற்கு, பாரதிதாசனும், பாரதியும் பொறுப்பாக மாட்டார்கள். ஏனெனில் அவற்றை எல்லாம் அவர்கள் வெளிப்படையாக தெரிவித்து வாழ்ந்தவர்கள் ஆவர். இன்று தமிழ்நாட்டில் வலம் வரும் முற்போக்குகளில் நானறிந்த சிலர், தமது சொந்த வாழ்வில் மேற்கொண்ட இழிவான சமரசங்களை, 'இருட்டில்' வைத்து, தமது 'முற்போக்கு பிம்பமானது' சிதையாமல் பாதுகாத்து வரும் தவறினை, பாரதியும் பாரதிதாசனும் செய்யவில்லை.

அப்படிப்பட்ட 'முற்போக்குகள்' இருப்பதால் தான், அரசியலில் பல குட்டிக்கரணங்கள் அடித்த;

அரசியல் கொள்ளையர்களை அடிவருடி பிழைத்த;

'உணர்ச்சிபூர்வ' பேச்சாளர்களும், எழுத்தாளர்களும், கவிஞர்களும் வெட்கமில்லாமல் பொது அரங்கில் இன்னும் வலம் வந்து கொண்டிருக்கிறார்களா? என்பதும் விவாதத்திற்கு உரியதாகும்.

தமிழ்நாட்டில் சுமார் 50 வயதுக்கும் அதிகமானவர்கள் உலகத்தில், காந்தி, நேரு, பாரதிதாசன், போன்ற இன்னும் பல பிரபலங்கள் தொடர்பான 'இருட்டில் பாதுகாக்கப்பட்ட' உண்மைகள் எல்லாம், டிஜிட்டல் யுகத்தில் மாணவர்கள், இளைஞர்கள் கவனத்தை ஈர்க்கத் தொடங்கியுள்ளன.

அவை மேற்கத்திய மோக சீரழிவிற்கு உரமாக பயன்படுவதைத் தடுக்க;

பாரபட்சமற்ற சமூக பொறுப்புடன் கூடிய அறிவுபூர்வ விவாதத்திற்கு தாமதமின்றி, அவற்றை உட்படுத்துவதே சரியான வழி, என்பதும் எனது கருத்தாகும்.

மனித உரிமை, பெண்ணுரிமை போன்றவற்றினை மேற்கத்திய மோகத்தில் அணுகுவதில் உள்ள குறைபாடுகளை ஏற்கனவே விளக்கியுள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2015/02/normal-0-false-false-false-en-us-x-none_8.html   ) அந்த 'மேற்கத்திய முற்போக்கு மோகம்' பாரதிக்கும், பாரதிதாசனுக்கும் இருந்ததா? அதிலும் கூட நமது பாரம்பரியத்தையும், பண்பாட்டையும் விட்டுக் கொடுக்காமல் பாரதி பயணித்தது போலின்றி, 'தமிழ் அடையாள அழிப்பிற்கு' துணை புரியும் வகையில், 'பெரியார்' .வெ.ராவின் பாதிப்பில், பாரதிதாசன் 'விட்டுக் கொடுத்து' பயணித்தாரா? என்ற ஆய்வுக்கு, அவர்களின் படைப்புகளை உட்படுத்த வேண்டிய நேரமும் வந்து விட்டதாக கருதுகிறேன்.

சிறை தொடர்பாகவும், மரணம் தொடர்பாகவும் சிறுபிள்ளைத்தனமான அச்சம் பாரதிக்கு இருந்ததை, அவரின் படைப்புகளில் நான் கண்டேன். ஆனால் கண்ணதாசனைப் போல, அன்றைய முதல்வர் எம்.ஜி.ஆரை எதிர்த்து கூட்டம் போட்டு, பின் எம்.ஜி.ஆர் தமிழக அரசின் 'ஆஸ்தான கவிஞர்' ஆக்கிய பின் அடங்கிப் போனது போன்ற சம்பவங்கள் எதுவும், பாரதியின் வாழ்க்கையில் வெளிப்படவில்லை.

காலனிய சூழ்ச்சியில், 'இனம்' என்ற சொல்லின் பொருள் திரிதலில் சிக்கி.வெ.ரா அவர்கள் 1944இல் 'திராவிடர் கழகம்' தொடங்கி, 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளக் குழப்பங்களை வளர்த்து, தமிழ் மொழியையும், இலக்கியங்களையும் தமிழுக்கு கேடென அறிவித்து, 'தமிழ் அடையாள அழிப்பு' போக்கில் பயணித்ததை ஏற்கனவே விளக்கியுள்ளேன்.

ஈ.வெ.ரா அவர்களுக்கு நெருக்கமாக இருந்த தமிழ் அறிஞர்களும், புலமையாளர்களும், அவரின் ரசிகர்களாக பயணித்ததால், அவர் அறிவுபூர்வ விமர்சனத்தை வரவேற்றிருந்தாலும்;

 ‘இடிப்பாரை இல்லாத ஏமரா மன்னன்
கெடுப்பார் இலானும் கெடும்.’
(அதிகாரம்:பெரியாரைத் துணைக்கோடல் குறள் எண்:448)
ஆக பயணித்தார்.

தனிமனித அளவில் எவ்வளவு மதிக்கத்தக்கவர்களாக இருந்தாலும், ஈ.வெ.ரா அவர்களுக்கு 'இடிப்பார்களாக' இல்லாமல் பயணித்த, ஈ.வெ.ராவிற்கு நெருக்கமான, தமிழ் அறிஞர்களும், புலமையாளர்களும், மேலே குறிப்பிட்ட ' தமிழ் அடையாள அழிப்பிற்கு' பங்களித்த சமூக குற்றவாளிகள், என்பதும் எனது ஆய்வு முடிவாகும்.

'தமிழ் எங்கள் உயிருக்கு நேர்' என்று, தமிழைப் பற்றி உயர்வாக கவிதைகளும், கட்டுரைகளும் எழுதிய பாரதிதாசன், 'தமிழை காட்டுமிராண்டி மொழி' என்று அறிவித்து, மேலே குறிப்பிட்ட 'தமிழ் அடையாள அழிப்பு' போக்கில் பயணித்த .வெ.ராவிற்கு, அவரின் நிலைப்பாடு தவறு என்று அறிவுபூர்வமாக விளக்கி, .வெ.ராவை நல்வழிப்படுத்த பாரதிதாசன் என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டார்? அதில் வெற்றிபெற முடியவில்லையென்றால், .வெ.ராவின் அந்த நிலைப்பாட்டினை பகிரங்கமாக கண்டித்து, 'தமிழ் அடையாள அழிப்பிற்கு' எதிராக என்னென்ன முயற்சிகள் மேற்கொண்டார்? அவ்வாறு தமிழை இழிவுபடுத்தியவருடன் பாரதி நட்பாக இருந்திருப்பாரா? தமிழ்ப் பற்றில் பாரதிக்கு இருந்த நேர்மையானது, பாரதிதாசனிடம் இருந்ததா? பாரதி போற்றிய 'இந்திய தேசியத்தை' எதிர்க்காமல், 'திராவிட நாடு' பிரிவினையை ஆதரித்துக் கொண்டே, பாரதியை பாராட்டியது போலவே;

தமிழை இழிவு செய்த .வெ.ரா அவர்களை எதிர்க்காமல், பாரதிதாசன் .வெ.ரா புகழ் பாடினாரா? இது போன்ற போக்குகள் பாரதியிடம் வெளிப்பட்டதுண்டா? காந்தியின் நிலைப்பாடு தவறு என்று தெரிந்ததும், பாரதி காந்தியை கண்டித்து, துணிச்சலாக கருத்து வெளியிட்டவர் இல்லையா?

என்பது போன்ற அறிவுபூர்வ விவாதங்கள் அரங்கேற வேண்டிய நேரம் வந்து விட்டதாக கருதுகிறேன்.

வைக்கம் போராட்டத்தில் எழுச்சி ஊட்ட, .வெ.ரா அவர்கள் பாரதியாரின் பாடல்களை பாடியதை, கோவை அய்யாமுத்து தனது எழுத்துக்களில் வெளிப்படுத்தியுள்ளார். ஆனால் அவ்வாறு எழுச்சியூட்ட பாரதிதாசன் பாடல்களை .வெ.ரா ஏன் பாடவில்லை? என்பதும் மேலே குறிப்பிட்ட விவாதத்தில் இடம் பெற வேண்டும்.

'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளக் குழப்பத்தில், .வெ.ரா அவர்கள் முன்னெடுத்த 'தமிழ் அடையாள அழிப்பு' என்பதானது தமிழ்நாட்டை அரசியல் நீக்கத்திற்கு (Depoliticize) உள்ளாக்கி, ஆதாய அரசியலில் சீரழிவின் உச்சத்திற்கு கொண்டு சென்று, இன்று திருப்பு முனைக் கட்டத்தில் உள்ளதை;
ஏற்கனவே விளக்கியுள்ளேன். ( http://tamilsdirection.blogspot.in/2017/03/blog-post.html  )

'திராவிட ஊழல் அரசியல் அலையில்' ஆங்கிலவழிக் கல்வியானது குக்கிராமங்கள் வரை ஊடுருவி, தமிழ்வழிக் கல்வியின் (எனவே தமிழின்) மரணப்பயணத்தைத் தூண்டுவித்து, தமிழில்  சரளமாகஎழுதவும்  தெரியாத மாணவர்களின் எண்ணிக்கையை அதிவேகமாக அதிகரித்து வரும் சூழலில்;

வெளிநாடுகளுக்கும், வெளி மாநிலங்களுக்கும் வேலைக்கு செல்வோர் மூலமாகவும்;

குக்கிராமங்கள் வரை ஊடுருவியுள்ள கிரிக்கெட் போதை மூலமாகவும்;

'இந்தியர்' என்ற அடையாளமும், 'இந்தி' பயிலும் வேகமும் அதிகரித்து வரும் போக்கில்;

'தமிழ் அடையாளமானது' மிகவும் பலகீனமாகும் போக்கிலும், கேலி, கிண்டலுக்கு உள்ளாகும் போக்கிலும் சிக்கியுள்ளதையும்;
ஏற்கனவே பதிவு செய்துள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2015/06/   )

எனவே 'தமிழ்வழிக்கல்வி மீட்பிலும்', அதன் மூலம் 'தமிழ் அடையாள மீட்பிலும்' நான் முக்கிய கவனம் செலுத்தி வருகிறேன். இந்துத்வா ஆதரவு, எதிர்ப்பு உள்ளிட்ட  அனைத்து முகாம்களிலும் உள்ளவர்களில், அந்த மீட்பு முயற்சிகளை ஆதரிப்பவர்களை ஓரணியாக்கும் 'சினர்ஜி' (Synergy) முயற்சியிலும் ஈடுபட்டுள்ளேன். (http://tamilsdirection.blogspot.in/2015/03/12_7.html   )
அந்த முயற்சிக்கு, வழிபாட்டுப் புழுதிப் புயலில் இருந்து விடுபட்ட பாரதி, நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை போன்ற தேசிய தமிழ்க் கவிஞர்களின் படைப்புகள் எல்லாம் துணை புரியும், என்பது எனது கணிப்பாகும். எனவே அத்தகையோரின் படைப்புகளை மறுவாசிப்பிற்கு உட்படுத்த எண்ணியுள்ளேன்.

வரலாற்றில் சங்க காலம் முதல், இந்திய விடுதலைக்குப் பின்னும், வல்லபாய் படேல் முயற்சியால் மன்னராட்சிகள் ஒழிக்கப்படும் வரையிலும், தமிழ்நாட்டில் வாழ்ந்த தமிழர்களுக்கு தமிழ்நாடானது ஒரே தாய் நாடாக இருந்ததில்லை. எனவே தமிழர்களின் தாய்மொழி நாடுகள் எல்லாம் பல மன்னர்களின் ஆட்சிகளில்,  தமிழ்நாட்டை கூறு போட்டு பயணித்த பின்னணியில், வரலாற்றில் முதல்முறையாக இந்திய விடுதலைக்குப் பின் தான் தமிழ்நாடு அந்த கூறுகளில் இருந்து விடுபட்டு, தமிழ்நாடானது ஒரே தாய்மொழி நாடாக உள்ளது. இன்று தமிழ்நாட்டில் வாழும் தமிழர்கள் எல்லாம் ஒரே தமிழ்நாட்டில் இருப்பதும், 'இந்திய தேசிய' விடுதலைக்குப் பின் ஏற்பட்ட விளைவே ஆகும். அந்த புரிதல் இன்றி, 'திராவிடர், திராவிட, தமிழர்' அடையாளக் குழப்பத்தின் ஊடே, பிரிவினை முயற்சியானது, தமிழ்நாட்டில் பொதுவாழ்வு வியாபாரமாகி விட்டதையும், ஏற்கனவே விளக்கியுள்ளேன். (  ‘தனித்தமிழ்நாடு கோரிக்கையும், பொதுவாழ்வு வியாபாரமும்’; http://tamilsdirection.blogspot.in/2017/09/blog-post_25.html )

அது தொடர்பாக, 'துக்ளக்' இதழில் வெளிவந்துள்ள கீழ்வரும் கருத்தும் கவனிக்கத்தக்கதாகும்.

‘ “தமிழ்நாடு என் தாய்நாடு. இந்தியா என்பது இடைக்கால ஏற்பாடு’- என்கிறாரே வைகோ? என்று எம்.செல்லையா, சாத்தூர்-3 என்ற வாசகர் கேட்டிருக்கிறார். வைகோ தமிழ்நாட்டைத் நம்முடைய தாய்மொழி நாடு என்று கூறியிருந்தால் நான் மனமுவந்து ஏற்றுக் கொண்டிருப்பேன். ஆனால், அவர் கூறியது பச்சைப் பிரிவினைவாதம்……………. வைகோ பாரதியாரை ஒருமுறை நன்றாகப் படிப்பது நல்லது. அவரைப் போல் தமிழையும் தமிழ்நாட்டையும் நேசிக்கவும், இந்திய தேசியத்தைப் போற்றவும் அவர் தெரிந்துகொள்வார். குழம்பியிருக்கும் வைகோவுக்கு பாரதியார் மூலம் தெளிவு பிறக்கலாம்”-
துக்ளக் 19.09.2017-  'நினைத்துப் பார்க்கிறேன்- எஸ்.குருமூர்த்தி

……………… நேரு குடும்ப ஆட்சியில், இந்திய விடுதலைக்குப்பின் தேச கட்டுமானமானது (Nation Building) சீர்குலைவிற்குள்ளான சவாலை, பிரதமர் மோடி சந்தித்து வருவதை ஏற்கனவே விளக்கியுள்ளேன். ( http://tamilsdirection.blogspot.sg/2016/10/caution-bjps-support-to-strengthen.html )

'பெரியார்' .வெ.ரா ஆதரவாளர்கள் மற்றும் இந்துத்வா ஆதரவாளர்கள் ஆகிய இரு சாராரிடையே, உணர்ச்சிபூர்வ இரைச்சலை தவிர்த்து, அறிவுபூர்வ விவாதங்கள் மூலமாக, பிரிவினை சமூக நோயிலிருந்து 'தமிழர்' என்ற அடையாளம் மீண்டு, 'இந்தியர்' என்ற அடையாளத்துடன் ரிமாற்ற ஆக்கபூர்வ (Mutually beneficial) திசையில் பயணிக்கும் சமூக செயல்நுட்பம் உருவாகும் என்பதும்;

அது பிரதமர் மோடி சந்தித்துள்ள தேசகட்டுமான சிக்கலுக்கு தீர்வாகமேலே துக்ளக் தெரிவித்த தென்னாட்டு பங்களிப்பு வரிசையில், அமையக் கூடும் என்பதும்;

எனது கணிப்பாகும். ( ‘தனது அறிவுக்கு தவறென பட்டவைகளை; பகிரங்கமாக அறிவித்து, திருத்திக் கொண்ட  'பெரியார்.வெ.ரா (1) ; http://tamilsdirection.blogspot.in/2017/09/blog-post_20.html)

தமிழ்நாட்டில் ஏற்கனவே அதிவேகமாக வளர்ந்து வரும் 'இந்தியர்' அடையாளத்துடன், பரிமாற்ற பலன் பெறும் நோக்கில், இணக்கமான முறையில் 'தமிழ் அடையாள மீட்சி' மூலமாக, 'தமிழர் அடையாள மீட்சியானது' வெற்றி பெறுவதானது, மேற்கண்ட முயற்சியின் மூலம் சாத்தியமாகும் என்பதும் எனது கணிப்பாகும்.

குறிப்பு :


சென்னை பெரியார் திடலில் 'பெரியார்' கொள்கைகளை புத்தகமாக வெளியிட்டு விற்பனை செய்து வந்த ஒருவர் (பெயர் ஞாபகமில்லை) , 'பாரதி வளர்த்தது பார்ப்பனீயமே' என்ற அந்நூலை வெளியிட அனுமதிக்குமாறு, என்னிடம் கேட்டார். அவர் பொதுவாழ்வு வியாபாரியாக, 'பெரியார் தொண்டர்' என்ற போர்வையில் பயணிப்பவர் அல்ல, என்று கருதி, ஒப்புதல் தெரிவித்தேன். 'பெரியார் நெறியன் பதிப்பகம், 3, கம்பெனி சத்திரம் தெரு, பழைய வண்ணை, சென்னை 21 என்ற முகவரியுடன் வெளியிட்டார்.  அவர் தொடர்ந்து இன்றுவரை, மீண்டும், மீண்டும் அந்நூலை அச்சிட்டு விற்பனை செய்வதாக அண்மையில் அறிந்தேன். பாரதியின் படைப்புகளை மறு வாசிப்பிற்கு உட்படுத்தி, அந்நூலை விரிவுபடுத்தி எழுதும் எண்ணமும் எனக்குண்டு

1 comment:

  1. உங்கள் வெளிப்ப்படைத்தமையும்,நேர்மையும் கட்டுரையில் பளிச்சிடுகிறது.
    பாரதியை பிறவி அடிப்படையில் பார்ப்பனர் என்பதற்காக அவருடைய பேச்சு, எழுத்தில் பிற்போக்கான பகுதியை மட்டும் வெளிப்படுத்தியும் ,முற்போக்கான பகுதிகளை மறைத்தும் விமர்சிப்பதும்;
    பெரியாரை, பாரதிதாசனை அவர்களின் தவறான பார்வைகளை விமர்சப்படுத்தாமலும் இருப்பதும்;
    இருந்துவரும் சூழலில்,

    பாரபட்சமின்றி சமூகநலன் நோக்கில் நேர்மையாக உள்ள உங்கள் கட்டுரை வரவேற்க, பாராட்டப்பட வேண்டியன ஆகும். இது போன்ற கருத்துகள் விவாதத்திற்கு வரவேண்டியது மிக முக்கியம் என்பதே என் கருத்து.

    கூடுதலாக, பாரதியை பிறப்பு காரணமாக தூக்கிப் பிடிப்பவர்கள் இருக்கவே செய்கிறார்கள், அவர்களே பாரதிதாசனையும் பிறப்பு காரணமாக ஒதுக்கவும் செய்கிறார்கள். இதைக் காரணமாக கூறுபவர்கள் அதே தவறைத்தான் அவர்களும் செய்கிறார்கள்.

    நல்ல சமூகவியல் ஆய்வு.

    ReplyDelete